தமிழகத்தின் மிகப்பெரிய ஆறும், ஜீவநதியும் காவிரி தான். இதற்குப் பொன்னி நதி என்றொரு பெய ரும் உண்டு. கர்நாடக மாநிலத்தின் குடகுமலையில் பிரம்மகிரி என்ற இடத்தில் உருவாகிறது. அங்கிருந்து நீர் பிராவக மெடுத்து ஓடும் போது திப்பூர் என்ற இடத்தில் ஹேமாவதி என்ற சிறிய ஆறும், மைரபூர் என்ற இடத்தில் இலட்சுமண தீர்த்தம் என்ற சிற்றாறும் இணைந்து பெருகி ஓடிவரும் நீர் கிருஷ்ணராஜசாகரை அடைகிறது.

கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணைதான் கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே கட்டியுள்ள 12 அணைகளில் மிகப் பெரியது. இந்த அணை நிரம்பிய பின் தான் அடுத்த அணைக்குத் தண்ணீர் திறந்து விடப்படும்.

தெற்கில் இருந்து மேற்காக மைசூர் பீட பூமியைக் கடந்துவரும் காவிரி, சிவசமுத்திரம் என்ற நீர்வீழ்ச்சிக் குச் சற்று கீழே தமிழகத்தில் நுழைகிறது. சிறிது தொலைவில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியாக விழுகிறது. அதைக் கடந்த பின் காவிரி பல திருப்பங்களில் திசை மாறி ஓடுகிறது. காவிரியின் போக்கில் பார்த்தால் ஆற்றின் இரு பக்கத்திலும் 2 மலைத்தொடர்கள் தொடர்ந்து வரு கின்றன.

கிழக்கே கீதமலைத் தொடரும், மேற்கே பால மலைத் தொடரும் தொடர்கின்றன.

இந்த 2 மலைகளும் காவிரிக்கு வெகு அருகில் நெருங்கி வரும் இடத்தில்தான் மேட்டூர் அணை கட்டப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளி யேறும் காவிரி திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகளில் எல்லை யாக அமைந்து பவானி, ஈரோடு மாவட்டங்களில் பாய்ந்து தென்கிழக்கில் திசைமாறி திருச்சி மாவட் டத்தில் கிழக்கே ஓடுகிறது.

காவிரி ஆற்றின் இடையே 3 தீவுகள் உள்ளன. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிக்கு அருகே தலையரங்கம் என்ற தீவும், மைசூர் நகருக்கு 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணம் என்ற தீவும் உள்ளன. திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிகிறது.,

இதில் தென்கிளை ஆற்றைக் காவிரி என்றும், வட கிளை ஆற்றைக் கொள்ளிடம் என்றும் அழைக்கிறார் கள். இந்த 2 கிளை ஆறுகளும், சிறிது தொலைவில் ஓடி மீண்டும் ஒன்றுகூடுகின்றன. இதற்கு இடைப்பட்ட தீவு தான் ஸ்ரீரங்கம். இப்படியாக 3 தீவுகளைக் காவிரி ஆறு கொண்டுள்ளது.

அமராவதி, உள்ளாறு என்ற 2 சிற்றாறுகளும் காவிரியுடன் இணைகின்றன. காவிரியில் இருந்து வெண்ணாறு, குடமுருட்டி, அரிசலாறு, கொட்டாறு, வீரசோழ னாறு, திருமலை வடலாறு, பாமணியாறு, திருமலைராயன் ஆறு என்று சிற்றாறுகளாகப் பிரி கின்றன. சுமாரி 760 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆறு இறுதியில் தரங்கம்பாடிக்கு 16 கிலோ மீட்டருக்கு வடக்கே காவிரிப் பூம்பட்டினத்தில் வங்கக் கடலில் சங்கமமாகிறது.

- ‘தினத்தந்தி’ நாளிதழ், 15.5.2014

Pin It