கோவாவின் தலைநகர் பனாஜியில் 2013 சூன் 8, 9 ஆகிய நாள்களில் நடைபெற்ற பாரதிய சனதாக் கட்சியின் தேசிய செயற்குழுவின் கூட்டத்தின் முடிவில், நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014ஆம் ஆண்டு ஏப்பிரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க.வின் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார் என்று பா.ச.க தலைவர் இராஜ்நாத் சிங் அறிவித்தார். இதன்மூலம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்று, மோடி தலைமை அமைச்சராக முடிசூட்டிக் கொள்வது உறுதியாகிவிட்டது போன்றதோர் நம்பிக்கையை மக்கள் மனதில் பதியவைக்க பா.ச.க. முயல்கிறது.

ஆனால் அடுத்தநாளே பா.ச.க.வின் மூத்த தலைவர் அத்வானி, கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 85 அகவையினரான அத்வானிக்குத் தலை மையமைச்சராக வேண்டுமென்ற பெருவிருப்பம் இன்னும் தணியவில்லை. தலைமையமைச்சராகாமல் செத்தால் அத்வானியின் ‘நெஞ்சு’ வேகாது; ‘ஆன்மா’ சாந்தியடையாது.

ஏனெனில் 1984இல் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் கொண்டிருந்த பா.ச.க.வை, தில்லியில் ஆளும் கட்சியாக அமர்த்தியதில் உண்மையில் அத்வானிக்கே பெரும் பங்கு உண்டு. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இராமன் பிறந்த இடம்; எனவே பாபர் மசூதியை இடித்து, இராமனுக்கு மாபெரும் கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துமதவெறி முழக்கத்தை முன்வைத்து, இராம இரதம் ஓட்டியும் மற்றும் பலவகைகளிலும் இந்தியா முழுவதும் பரப்புரை செய்தவர் அத்வானி.

1980க்குப்பின் இந்துக்களில் சாதாரண மக்களிடமும் முசுலீம் பகை உணர்ச்சி உருவாவதற்கு வித்திட்டவர் அத்வானி. பாபர் மசூதியைச் சங்பரிவாரங்கள் தகர்ப்பதற்குத் தலைமை தாங்கியவர். இந்துப் பாசிசக் கோட்பாடு, பா.ச.க.வை ஆளும் கட்சி நிலைக் குக் கொண்டு சென்றது. ஆனால் இந்துத்துவ அரிதாரத்தைப் பூசிக் கொண்டதாலேயே, தலைமை அமைச்சர் பதவியை அத்வானியே தங்கத்தட்டில் வைத்து வாஜ்பாய்க்குத் தர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அந்த ஏமாற்றம் - மனப்புண் இன்னும் அத்வானிக்கு ஆறவில்லை!

ஆயினும் இந்துத்துவத்தின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கட்டளையின் படி, அத்வானி பா.ச.க. பொறுப்புகளிலிருந்து விலகுவதான அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். இந்நிகழ்வு இரண்டு செய்திகளை உணர்த்துகிறது.

பா.ச.க., மன்மோகன் சிங்கை வலிமையற்ற, உறுதி யற்ற, தானாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் துணிவற்ற பிரதமர் என்றும், வெளியிலிருந்து கொண்டு சோனியா காந்திதான் முதன்மையான முடிவுகளை எடுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டி வந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைமையின் முடிவின்படியே மோடி தேர்தல் பரப்புரைத் தலைவராக அமர்த்தப்பட்டார் என்பதும், அத்வானி தன் விலகலைத் திரும்பப் பெற்றார் என்பதும் அம்பலமாகிவிட்டது.

காங்கிரசை நேரு குடும்பம் ஆட்டிப்படைக்கிறது ; பா.ச.க. வை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். ‘தான் ஒரு கலாச்சார அமைப்பு; அரசியலில் தலையிடுவதில்லை’ என்று கூறுவதெல்லாம் பித்தலாட்டப் பேச்சு! மன்மோகனைச் சோனியா இயக்குவதுபோல , ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் இயக்கப்படும் நரேந்திர மோடி மட்டும் பிரதமர் என்ற நிலையில், சுயேச்சை யாகத் துணிவுடன் முடிவுகளை எடுத்துச் செயல்பட முடியுமா?

அத்வானி தன் விலகல் மடலில், “பாரதிய சனதாக் கட்சி யின் நடப்புச் செயல்பாடோ, அது சென்று கொண்டிருக்கும் திசைவழியோ உவப்பாக இல்லை என்ற எண்ணமே சிறிதுகாலமாக எனக்கு இருந்து வருகிறது. இன்று நம் தலைவர்களில் பெரும்பாலோர் தத்தமது சொந்தத் திட்டங் களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்வானி பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், இம்மடலில் உள்ள கருத்தை அழிக்க முடியாது. பா.ச.க. தன்னலத் தலைவைர்களின் கூடாரமாகிவிட்டது என்பதற்கு அத்வானியே சான்றளித்திருக் கிறார். எனவே காங்கிரசும், பா.ச.க.வும் எல்லாவகையிலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபட்ட கட்சி பா.ச.க.; (a party with a difference) உயர்ந்த நெறிகளைக் கொண் டொழுகுவது என்று பா.ச.க. பெருமிதத்துடன் முன்பு கூறி வந்தது. ஆனால் மாநிலங்களிலும், நடுவண் அரசிலும் ஆட்சியில் அமர்ந்த பிறகு, காங்கிரசைப் போலவே, பா.ச.க. விலும் உள்கட்சி மோதல்களும் ஊழல்களும் இருப்பது அம்பலமாகிவிட்டது. வாஜ்பாய் ஆட்சியில் கார்கில் போரில் சவப்பெட்டி ஊழல் முதல், இறுதியாக 2011-2013காலத்தில் கர்நாட கத்தில் நடந்த ஊழல்கள் வரை இதைப் பறைசாற்றுகின்றன.

1995 முதல் குசராத்தில் பா.ச.க. ஆட்சியில் இருந்து வருகிறது. 1998இல் கேசுபாய் பட்டேல் முதலமைச்சரானார். அவருடைய ஆட்சியில் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2001ஆம் ஆண்டு பூஞ்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பேரழிவு ஏற்பட்டது. அங்கு துயர் துடைப் புப் பணிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு உண்டாயிற்று. 2002 சட்டமன்றத் தேர்தலின் போது கேசுபாய் பட்டேல் முதலமைச்சராக இருந்தால், பா.ச.க. தோற்றுவிடும் என்று கட்சி கருதியது. அதனால் 2001 அக்டோபரில் கேசுபாய் பட்டேலைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நரேந்திர மோடியை ஓர் இடைக்கால ஏற்பாடாக முதல்வர் பதவியில் அமர்த்தியது பா.ச.க.

மோடி பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்.இல் ‘பிரச்சாரகராக’ வேலை செய்தவர். அதற்கு முன் அமைச்சராகக் கூட இல்லாத மோடி ஆர்.எஸ்.எஸ். இன் ஆணைப்படி முதலமைச்சரானார்.

முதலமைச்சரான பின், மோடி, இந்துத்துவக் கொள்கை யைத் தீவிரமாகச் செயல்படுத்தினார். 2002 பிப்பிரவரி 27 அன்று கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில், சபர்மதி தொடர் வண்டியின் பெட்டி எரிக்கப்பட்டது. இதில் அயோத்தியில் கரசேவைக்குச் சென்று திரும்பிய சங்பரிவாரத் தொண்டர்கள் உட்பட 59 பேர் இறந்தனர். இன்றுவரையில், தொடர் வண்டியின் பெட்டி தீப்பற்றியதற்கான காரணம் திட்டவட்ட மாகத் தெரியவில்லை. ஆனால் சங்பரிவார ஆட்கள் இறந்த தைக் காரணமாகக் காட்டி - இதற்கு இசுலாமியர்களே பொறுப்பு என்ற பொய்யைப் பரப்பி - ‘முசுலீம்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்’ என்று முசுலீம்கள் மீது கொடுமை யான தாக்குதல்களை இந்துத்துவ வெறியர்கள் நடத்தினர்.

இந்துக்களின் சினம் தணிவதற்காக மூன்று நாள்களுக்கு ஆட்சி நிர்வாகமும், காவல் துறையும் இத்தாக்குதல்களைக் கண்டுங்காணாமல் இருக்க வேண்டும் என்று மோடி வாய்மொழியாக உயர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பெண்கள், குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்துக்கு மேற் பட்ட முசுலீம்கள் கொடூரமான முறைகளில் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், கடைகளும், சொத்துகளும் சூறை யாடப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டனர். அமைச்சர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டு அறைகளில் அமர்ந்து கொண்டு இத்தாக்குதலை முன்னின்று நடத்தினர்.

முசுலீம்கள் மீதான கொடிய தாக்குதல்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நரேந்திர மோடியின் முதல்வர் பதவி பறிபோகாமல் அப்போது அத்வானிதான் காப்பாற்றினார்.

பெரும்பாலான குற்றவாளி கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்தது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் பலவற்றை உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குப்பைத் தொட்டியில் போட்டது மோடி அரசு. சாட்சியம் கூறிய முசுலீம்களைப் பலவகையிலும் மிரட்டிப் பணிய வைத்து, ‘முன்பு கூறியது பொய்’ என்று பிறழ்சாட்சியம் கூற வைத்தது. ஆயினும் முசுலீம்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட பெஸ்ட் பேக்கரி வழக்கில் மனிதஉரிமைப் போராளிகள் அயராது பாடுபட்டு குசராத் அரசின் மோசடிகளை அம்பலப்படுத்தினார்கள்.

‘தெகல்கா’ இதழுக்காக இளம் புலனாய்வுச் செய்தியாளர் அசீஷ் கேத்தன், தன்னை முனைவர் பட்ட ஆய்வாளர் என்று கூறிக்கொண்டு, முசுலீம்கள் மீது தாக்குதல்களை நடத்திய விசுவஇந்து பரிஷத், பஜ்ரங்தள் குண்டர்களிடம் பேட்டி கண்டார். அவர்களுக்குத் தெரியாமல் இரகசிய கேமராவில் பதிவு செய்தார். அவர்கள் மகிழ்ச்சி பொங்க, எவ்வாறெல்லாம் கொடுமையான முறைகளில் கொன்றனர் என்று விளக்கிக் கூறினர். அவை இந்துத்துவ-பாசிச குண்டர்களின் குற்றங் களுக்கு மறுக்க முடியாத சான்றுகளாக இருக்கின்றன.

200 முசுலீம்களுக்கு மேல் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் பஜ்ரங்தள் தலைவன் பாபி பஜ்ரங்கிக்கும், பா.ச.க. சட்டப் பேரவை உறுப்பினர் மாயாபென் கொத்னானி என்ற பெண்ணுக்கும் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அண் மையில் வழங்கப்பட்டது. முசோலினி, இட்லர் ஆகியோரின் மீது படிந்த இரத்தக்கறை வரலாற்றில் நிலைத்துவிட்டது போல், நரேந்திரமோடியின் உடல் முழுவதும் படிந்துள்ள இசுலாமியரின் இரத்தக் கறையை, பிரதமர் பதவியால் கூடக் கழுவிவிட முடியாது.

குசராத்தில் இந்துத்துவ வெறி தாண்டவமாடிக் கொண்டி ருந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொள்வதற்காக, 2012 திசம்பரில் நடைபெறுவதாக இருந்த சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் மோடி கோரினார். தேர்தல் ஆணையம் இதை ஏற்க மறுத்து விட்டது. கோத்ரா இரயில் பெட்டி எரிப்பின் எதிர்வினை என்ற பெயரில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் முறியடிக்க மோடி ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்தார். அதுதான் ‘சுயமரியாதை’ (குசராத்தி மொழியில் asmita) என்ற சொல். காந்தியார் தான், இந்திய அரசியலில் ‘சுயமரியாதை’ என்ற சொல்லை ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கருத்தில் முதன்முதலில் பயன்படுத்தினார்.

பெரியாரும் மேதை அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான கருத்தியல் ஆயுதமாக ‘சுயமரியாதை’த்தத்துவத்தைப் பயன்படுத்தினர். ஆனால் மோடியோ இந்துத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்திட - இசுலாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட ‘சுய மரியாதை’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். குசராத்தில் முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிப்பது என்பது ஆறு கோடி குசராத்தியரின் சுயமரியாதையை - சுயகவுரவத்தை - பெருமையை இழிவுபடுத்துவதாகும்; இதைக் குசராத்தியர் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று உரத்து முழங்கினார். 2002 திசம்பர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

அதன்பிறகு, ஒருபுறம் இந்துத்துவத்தை நடைமுறைப் படுத்திக் கொண்டே, மறுபுறம் குசராத்தின் பொருளாதார வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத் சட்டமன்றத் தேர்தலில் ‘பொருளாதார வளர்ச்சி’(Development) என்பதை மட்டுமே முதன் மைப்படுத்தி வெற்றி பெற்றார். தன்னை தன்னேரிலாத் தனிப்பெருந்தலைவராகக் காட்டிக் கொள்வதில் மோடி கைதேர்ந்தவர்.

அதனால் குசராத் மாநிலத்தில் மற்ற பா.ச.க. தலைவர்களை ஓரங்கட்டினார். கட்சியிலும் ஆட்சியிலும் அவர் வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் செயலலிதா அருகில் யாரும் நிற்கவும் மறுத்துப் பேசவும் முடியாதோ, அதேபோல் மோடியின் ‘ஆளுமையும்’ கட்சியிலும் ஆட்சியிலும் சனநாயக நெறிமுறைகளைத் தன் காலின் கீழ்ப் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மோடியும் செயலலிதாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடிகிறது.

2007 தேர்தல் வெற்றிக்குப்பின், மோடிக்கு இந்திய அளவில் பா.ச.க.வில் வாஜ்பாய், அத்வானி போல் மாபெரும் தலைவராக வேண்டும்; தலைமையமைச்சராக வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதற்கேற்ப செயல்படத் தொடங்கினார். இந்தியப் பெருமுதலாளிகளின் நம்பிக்கையையும் ஆதரவை யும் பணத்தையும் பெறாமல், இந்தியளவில் அரசியலில் தலைவராக எவரும் உருவெடுக்க முடியாது; தில்லி ஆட்சி அதிகாரத்தில் அமரவும் முடியாது என்பது இந்திய அரசியலை அறிந்தவர்க்குப் ‘பாலபாடம்’. எனவே மோடி இந்தியப் பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழில் வளர்ச்சிக்காக- முதலீடுகளை ஈர்ப்பது என்ற பெயரால், குசராத்தில் நிலம், நீர், காடுகள், மின்சாரம் முதலானவற்றை அடிமாட்டு விலைக்குக் கொடுத்தார்.

மேற்கு வங்காளத்தில் சிங்கூரில், டாடா நிறுவனம் ‘மக்களுக்கான மகிழுந்து’ ஒரு இலட்சம் உருபாய் விலையில் என்ற பெயரில் நானோ மகிழுந்து தயாரிப்புத் தொழிற்சாலைக்கான வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், தங்கள் நிலத்தை இழந்த மக்களின் கடும் எதிர்ப்பால் திக்குமுக்காடி நின்றபோது, மோடி குசராத்தில் நானோ மகிழுந்து தொழிற்சாலையை அமைக்க ஒரே நாளில் டாடாவுக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கொடுத்தார்.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கிடவும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காகவும் என, 1980களில் குசராத் தொழில் வளர்ச்சிக்கழகம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தியிருந்தது. இந்த நிலங்களை மோடி அரசு டாடா, அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ் முதலான முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. மனை வணிகச் சூதாடிகளும் ஏராளமான நிலங்களைப் பெற்றனர்.

அதானி குழுமத்திற்கு முந்தரா துறைமுகம் கட்டுவதற்காக 2005-2007 காலத்தில் மோடி அரசு 5.47 கோடி சதுர மீட்டர் நிலத்தைக் கொடுத்தது. இதில் 2011 திசம்பர் முடிய 98.60 இலட்சம் சதுர மீட்டர் இடம் மட்டுமே பயன்படுத் தப்பட்டது. அரசிடம் ஒரு சதுர மீட்டர் நிலத்தை ஒரு உருபா முதல் 32 உருபா விலையில் வாங்கிய அதானி குழுமம், மீதி 4 கோடி சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ.600 முதல் 737 வரையிலான விலையில் மற்ற நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ளையடித்துள்ளது. அதானி குழுமம் அமைக் கும் முந்தரா துறைமுகத்தால் பல மீனவர் குடியிருப்புகளும், வேளாண் நிலங்களும் சிற்றூர்களும் அங்கிருந்து அகற்றப் படுகின்றன. மேலும் கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கு இத் துறைமுகத்தால் பல கேடுகள் உண்டாகும். அதனால் தில்லி அறிவியல் மய்யத்தின் தலைவர் சுனில் நாராயண் 2013 ஏப்பிரல் 18 அன்று நடுவண் அரசின் சுற்றுச்சூழல் அமைச் சகத்திடம் அளித்த அறிக்கையில் முந்தரா துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் சான்றினை உடனே இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்துக்கு 8,53,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை சதுர மீட்டர் ரூ.700 விலையில் மோடி அரசு அளித்தது. ஆனால் மாநில நில மதிப்புக் குழுவின் அறிக்கையின்படி இதன் சந்தை மதிப்பு ஒரு சதுர மீட்டர் ரூ.2020 ஆகும். இதனால் குசராத் அரசுக்கு ரூ.128.71 கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் பெருமுதலாளிகள் கொள்ளையடிப்பதன் மூலம் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியை, மோடி மாபெரும் சாதனை யாகக் கூறிவருகிறார். 1980களில் குசராத்தை ‘இந்துத்துவத் திற்கான ஒரு ஆய்வுக் கூடம்’(Labortory for Hindutva) என்று இந்துத்துவ வெறியர்கள் கூறிவந்தனர். அதுபோல், குசராத்தை மோடி வளர்ச்சியடையச் செய்துள்ளது மாதிரியில் (Gujarat Model) இந்தியா முழுவதையும் வளர்ச்சி பெறச் செய்வதற்காக மோடி தலைமையமைச்சராக வரவேண்டும் என்று தீவிரமாகப் பரப்புரை செய்யப்படுகிறது. 

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியும் பா.ச.க. தோற்றது. காங்கிரசுக் கட்சி 2004, 2009 ஆகிய இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் - 2009 முதலே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்சு வீட்டுமனை ஊழல், 2-ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் என்று இலக்கக்கணக்கான கோடி உருபாய் ஊழல்களில் - புதை மணலில் சிக்கிய யானைபோல் காங் கிரசுக் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பதாலும், 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கி ரசுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று பா.ச.க. திடமாக நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைமையோ இன்னும் ஒருபடி தாண்டிச் சிந்திக்கிறது.

1998இல் பா.ச.க. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமை தரும் அரசியல் சட்ட விதி 370-யை நீக்குதல், பொதுவான உரிமை இயல் (Civil) சட்டம் கொண்டுவருவது ஆகிய இந்துத்துவத் தின் முதன்மையான மூன்று கொள்கைகளை மூட்டைகட்டி வைப்பதாக வாக்குறுதி அளித்த பிறகுதான், 23 அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை வாஜ்பாய் தலை மையில் அமைக்க முடிந்தது. வாஜ்பாய் ஆட்சியில் இருந்த ஆறு ஆண்டு காலத்திலும் ஆர்.எஸ்.எஸ்., கூட்டணி ஆட்சி முறை நீடிக்கும் வரையில் இந்துத்துவக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த முடியாது என்ற நிலையால் எரிச்ச லடைந்தது. அதனால் 2014 தேர்தலில் மோடி தலைமையில் பா.ச.க. தனித்தே நடுவண் அரசில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறது.

இந்துமதப் புராண, இதிகாசங்களில், இந்துக் கடவுள்கள் மனிதனாக அவதாரமெடுத்து, மக்களை மட்டுமின்றித் தேவர் களையும் காப்பாற்றியதாகப் பல கதைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட மோடியை இந்திய மக்களைக் காக்க வந்துள்ள ‘அவதார புருஷராகவே’ முதலாளிய ஊடகங்கள் சித்திரிக்க முயல்கின்றன. தன்னை வானுயர் தோற்றங் கொண்டவ ராகக் காட்டிட, மோடி குசராத்தில் ‘ந.மோ.’ (NaMo) என்று அவருடைய பெயரிலேயே தொலைக்காட்சி அலைவரிசை யைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ‘மோடியை விட்டால், வேறு வழியில்லை’ என்ற கருத்தை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக, ஏபிகோ வோர்ல்டு வைடு (APCO World Wide) என்ற அமெரிக்காவின் நிறுவனத்தை 2007 ஆகத்து முதல் பயன்படுத்தி வருகிறார்.

‘ஏபிகோ’ நிறுவனம் உயர்ந்த தொழில்நுட்பமும் நவீன ஏமாற்று உத்திகளும் கொண்ட பொதுமக்கள் தொடர்பு முகமை (Public Relations Agency) ஆகும். பெருந்தொகை கொடுத்து மோடி இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார். 

 2012 திசம்பரில் நடைபெற்ற குசராத் சட்டமன்றத் தேர்தலின் போது, ஒரே நேரத்தில் பல இடங்களில் முப்பரிமாண (3னு)த் தோற்றத்தில் திரையில் தோன்றி உரையாற்றினார் மோடி! இந்த ஏபிகோ நிறுவனம் அமெரிக்காவின் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அய்க்கிய நாடுகள் அவை, உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கும், இசுரேல், கசகஸ்தான் போன்ற நாடு களுக்கும் மக்கள் தொடர்பு முகமையாக வேலை செய்கிறது. 

உண்மைகளைத் திரித்தும் மறைத்தும் கூறுவது, மக்கள் நலனுக்கு ஏற்றது என்பது போன்ற மாயத் தோற் றத்தை உருவாக்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நலம் சேர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்த உதவுவது, பொய்யை உண்மையென நம்பச் செய்வது முதலான வேலைகளை ஏபிகோ நிறுவனம் திறம்படச் செய்கிறது.

இந்தியாவில் இத்தகைய நவீன தகவல் தொழில்நுட்ப ஏந்துகள் மோடியிடம் மட்டுமே இருக்கின்றன. இட்லரின் பொய்களை உண்மை யென நம்ப வைத்த கோயபெல்சு போன்று, மோடி தன் னுடைய தவறுகளை மறைக்கவும், தன்னை மாபெரும் தலைவராகக் காட்டவும் ஏபிகோ முகமையையும், ‘ந.மோ.’ தொலைக்காட்சியையும் பயன்படுத்தி வருகிறார்.

இத்தன்மையில், மோடிக்கு நெருக்கமான ஒரு பெரிய முதலாளியக் குழுமம், தேசிய அளவில் ‘மோடி பிரதமர் வேட்பாளர்’ என்பதை முன்னிறுத்தி ஒரு ஆய்வைச் செய்தது. அதன்படி பா.ச.க.வுக்கு 190 இடங்கள் கிடைக்கும். மோடி யைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிடில், 160 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. இதன் நோக்கம் பா.ச.க.விலும் பிற சங்பரிவார அமைப்புகளிலும் ‘மோடியை விட்டால் வேறுவழியில்லை’ என்ற கருத்தை நிலைக்கச் செய்வதேயாகும்.

24.6.2013 அன்று பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் பா.ச.க.வின் தாய் அமைப்பான ஜனசங்கத்தை நிறுவியவர் களில் ஒருவரான சியாம் பிரசாத் முகர்சியின் 60ஆவது ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “வளர்ச்சிப் பாதையில் குசராத் புதிய சிகரங் களைத் தொட்டிருக்கிறது.

இது குறித்து எங்கும் பேசப்படு கிறது. குசராத்தின் வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி இந்தியாவும் பீடுநடை போடமுடியும்” என்று கூறியுள்ளார். ஆனால் மோடியின் ஆட்சியில் குசராத் பெற்றுள்ள வளர்ச்சி என்பது வெகுமக்களாக உள்ள பழங்குடியினர், முசுலீம்கள், பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்க்குக் கிட்டவில்லை. மாறாக அவர்களின் வாழ்வு மேலும் தாழ்ந்துவிட்டது.

உலக அளவில் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மொத்த உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் அளவிடப்படுவதில்லை. மக்களின் கல்வி, மருத்துவ வசதி, சராசரி ஆயுள், ஊட்டச்சத்து, தூய்மையான சுற்றுப்புறம், மின்சாரம், குழந்தைகள் இறப்பு விகிதம் ஆண், பெண் பிறப்பு விகிதம் முதலானவற்றால் மதிப்பிடப்படுகிறது.

2000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அய்க்கிய நாடுகள் மன்றம் ‘மனிதவள மேம்பாட்டு அறிக்கையை’(Human Development Report - HDR) வெளியிட்டு வருகிறது. அதன்படி உலகில் 187 நாடுகளில் இந்தியா 134 ஆவது இடத்தில் இருக்கிறது. வறுமைமிகுந்த 88 நாடுகளில் 66 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பெருந்தொழில்களை, வணிகத்தை, நிதி நிறுவனங்களை ஆட்டிப் படைக்கும் பனியாக்களின் தாயகம் குசராத். ஆனால் அந்த குசராத்தில் மற்ற மாநிலங்களைவிட வெகுமக்களின் வாழ்க் கைத்தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது.

2011ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மனிதவள மேம் பாட்டு அறிக்கையின்படி, 1996இல் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) 5 ஆவது இடத்தில் இருந்த குசராத், 2006 இல் 9ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அய்ந்து அகவைக்கு உட்பட்ட சிறுவர்களில் 69.7 விழுக்காடு குழந்தைகள் இரத்தச்சோகையுடன் இருக்கின்றனர். 44.6 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுடன் உள்ளனர். எழுத்தறிவு அளிப்பதில், போதிய அக்கறை காட்டாத, மிகவும் பின்தங்கியுள்ள அய்ந்து மாநிலங்களில் குசராத்தும் ஒன்று. குசராத்தின் எழுத்தறிவு இந்தியாவின் சராசரிக்குச் சற்றே அதிகம்.

மின்மிகை மாநிலம் என்று மோடி விளம்பரப்படுத்துகிறார். ஆனால் கிராமப்புறங்களில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளைக்குப் பத்து மணிநேரம் மின்சாரம் கிடைத்தது; இப்போது ஆறு மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது. நருமதை அணையிலிருந்து கிடைக்கும் நீரை வறண்ட பகுதிகளான சவுராட்டிரா, கட்சு பகுதி மக்களுக்கு அளிப்பேன் என்றார் மோடி. ஆனால் அந்த நீரை அகமதாபாத்தில் உள்ள முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சவுராட்டிரா, கட்சு பகுதி மக்கள் நீரின்றித் தவித்துக் கொண்டிருப்பது பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குசராத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.

முசுலீம்கள் உயிரச்சத்துடன் வாழ்வதுடன், எல்லா வகையிலும் புறக் கணிக்கப்பட்டுள்ளனர். பணக்கார மாநிலமான குசராத், இந்தியாவில் அதிகக் கடன் சுமை உள்ள மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் நலவாழ்வுக்காக (சுகாதாரம்) 1990-95இல் அரசின் வருவாயில் 4.25 விழுக்காடு செலவிடப்பட்டது. 2005-2010இல் இது வெறும் 0.77 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

ஆகவே மோடி தம்பட்டம் அடிக்கின்ற குசராத்தின் வளர்ச்சி என்பது, வெகுமக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படையான தேவைகளை மறுத்து, முதலாளிகள், பணக்காரர்கள், நகர்ப்புற மேல்சாதிப் படித்தவர்கள், உயர் பதவிகளில் இருப்ப வர்கள் ஆகியோரின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும். நடுவண் அரசும் பிற மாநில அரசுகளும் தாராளமய, தனியார்மய, உலக மயக் கொள்கை யின் பெயரால், மோடியைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அரசுகளும் ஆட்சியாளர்களும் எல்லா வகையிலும் உழைக்கும் மக்களுக்கு எதிரான பகைவர்களேயாவர்.

மற்ற மாநிலங்களைப் போல வலிமையான எதிர்க்கட்சி குசராத்தில் இல்லை. மேலும் வலிமையான முற்போக்கான மக்கள் இயக்கம் குசராத்தில் இல்லை. தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நூறு ஆண்டு களாக வலிமையான சாதி எதிர்ப்பு இயக்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதிக்கட்சி அன்று அங்கு உருவாக்கிய மக்கள் நலத் திட்டங்கள், திறமையான நிர்வாகம் ஓரளவு அப்படியே தொடர்கிறது. ஆனால் குசராத்தில் இத்தகைய நிலைகள் இல்லாததால் மோடி ‘காட்டுத் தர்பார்’ நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் பல்வேறு தேசிய மொழிகளும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் கொண்ட இந்தியாவுக்கு மோடியின் ‘சூத்திரம்’ பொருந்தாது. இந்தியாவில், இந்துக்கள் 85 விழுக்காட்டினராக இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலோர் கொலைகார இந்துத்துவத்தை ஏற்பதில்லை. ‘இராம பாணம்’ (இராமனுக்குக் கோயில் கட்டுதல்) பா.ச.க.வுக்கு ஒருமுறைதான் கைகொடுத்தது. அதோடு அது காலாவதி யாகிவிட்டது. எனவே ‘மோடி பாணம்’, ‘புஸ்வாணமாகி’விடும் என்பது உறுதி!

காங்கிரசோ, பா.ச.க.வோ நடுவண் அரசில் இனி தனித்து ஆட்சி அமைக்க முடியாது. மாநிலக் கட்சிகளின் துணையில்லாமல் ஆட்சிக்கு வர முடியாது. தி.மு.க., அ.தி.மு.க., தெலுங்குதேசம், மதச்சார்பற்ற சனாதளம், பிஜு சனதாதளம், அய்க்கிய சனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரசு, சிவசேனை, அகாலிதளம், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி முதலாள பெரிய மாநிலக் கட்சிகள் இனியேனும் நடுவண் அரசில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் சேவகம் செய்வதை நிறுத்திவிட்டு, தில்லியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை உடைத்தெறிந்து, அவற்றை ஒவ்வொரு மொழி மாநில அரசும் பெற்று, அந்தந்த மாநிலத்தின் தேசிய மொழியும், அம்மக்களின் சமூகம், பொருளியல் வாழ்வும் சிறந்தோங்கிட வழிகாண வேண்டும்.

 இத்திசையில்,வழக்கமான பொதுவுடைமைக்கட்சிகளும் நேர்மையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்துத்துவ, பார்ப்பன-பனியா, முதலாளிகள் ஆதிக்கத்தில் உள்ள காங்கிரசுக் கட்சியையும், பாரதிய சனதாக் கட்சியையும் வீழ்த்த முடியும். இவ்விருகட்சிகளை வீழ்த்துவதன் மூலமே பல்வேறு தேசிய மொழிகளையும், இனங்களையும் பன்முகக் கலாச்சாரத்தையும் காக்க முடியும். உண்மையான மதச்சார்பற்ற கூட்டாட்சியை இங்கு அமைக்க முடியும். மெய்யான மக்களாட்சி அப்போதுதான் மலரும்.

Pin It