1982ஆம் ஆண்டில் புதுடெல்லியிலிருந்து அய்தராபாத் புறப்பட்ட விமானத்தில் ஆந்திர முதல்வர் ஆஞ்சையா, திரைப்பட நடிகர் என்.டி. ராமராவ், நேருவின் பேரப்பிள்ளை ராஜீவ் ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர். ஆந்தி ரத்தின் தலைநகர் அய்தராபாத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரசார் கூடி ராஜீவை வரவேற்றனர். அநாதை போன்று ஆந்திர முதல்வர் தனியே செல்கிறார். ராஜீவும் ஆஞ்சையாவைக் கண்டுகொள்ளவில்லை.

ஆந்திரத் தலைநகரில் ஆஞ்சையாவிற்கு ஏற்பட்ட அவமதிப்பைக் கண்டு நடிகர் என்.டி. ராமராவ் கொதித்தார். ஆந்திர மக்களின் சுயமரியாதையை ராஜீவ் அவமதித்துவிட்டார் என்று முழங்கினார். ஆந்திர மக்களின் மான உணர்ச்சியைக் காப்பதற்காகத் தெலுங்கு தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் காங்கிரசுக்கு எதிராகக் களம் இறங்கியது. ‘இந்திரா அம்மாவா’, ‘என்.டி.ஆர். அண்ணாவா’ என்று ஊடகங்கள் வேறுபட்ட, மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டன. அண்ணா வென்றார். அம்மா தோற்றார். என்.டி. ராமராவ் முதலமைச்சர் பொறுப் பேற்றார். காங்கிரசுக் கட்சிக்கு எதிரான கட்சிகள் எல்லாம் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டன. டெல்லியில் தேசிய முன்னணி தொடங்குவதற்கும், செல்வாக்குப் பெறுவதற்கும் இந்நிகழ்வு ஊக்கமளித்தது. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக 1990ஆம் ஆண்டு பதவி ஏற்பதற்கும் இந்த நிகழ்வு அடித்தளம் அமைத்தது.

1983ஆம் ஆண்டு நடுவண் அரசின் திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழு இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி தலைமை வகித்தார். தமிழ்நாட்டின் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு உட்பட மற்ற மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு மாநில அரசிற்கு நடுவண் அரசு ஒதுக்க வேண்டிய, ஒப்புதல் அளிக்கக்கூடிய நிதிபற்றிய விவாதங்கள் நடைபெற்றன. சாதாரண பாமர மக்கள் நினைப்பது போன்று நடுவண் அரசின் திட்டக்குழு பல ஆயிரம் கோடிகளை ஆண்டுதோறும் வழங்குகிறது என்ற உணர்வில் முதல்வர் என்.டி. ராமராவ் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். மாநில அரசின் வரி வருவாய் பெருக்கத்திற்கு ஏற்பத்தான் மத்திய அரசு 10 அல்லது 20 விழுக்காட்டு நிதி ஒதுக்கீட்டை மாநில அரசிற்கு வழங்குகிறது என்று நிதித்துறை உயர் அலுவலர்கள் விளக்கினார்கள்.

இதற்காகவா அதிகார வர்க்கப் பெரும் படையுடன், பல கோடி செலவில் டெல்லிக்கு முதலமைச்சர்கள் வர வேண்டும் என்று என்.டி. ராமராவ் கேள்விக் கணையைத் தொடுத்தார். மாநில அரசுகளின் திட்ட நிதி ஒதுக்கீட்டை, தங்கள் மாநிலங்களின் வருவாய் பெருக்கத்திற்கு ஏற்ப முதல்வர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

திட்டங்களையும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மாநில அரசுகள்தான் நடைமுறையில் முடிவு செய்கின்றன. இச்சூழலில் தில்லியில் நடைபெறும் கூட்டமும் விவாதமும் ஒருவித சடங்காக அமை கிறது. 1950-1983 வரை 33 ஆண்டுகளாக ஏழ்மையைக் குறைப்பதில், மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கு வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்று என்.டி. ராமராவ் குறிப்பிட்டார். அப்போது ‘கொம்பும் முறியவில்லை, பாம்பும் சாகவில்லை’ என்ற முதுமொழியைச் சுட்டிக் காட்டி திட்டக்குழுவின் பயனளிக்காத அணுகுமுறையை என்.டி. ராமராவ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்.

பிரதமர் இந்திரா இக்காலக்கட்டத்தில்தான், என்.டி. ராமராவ் மீது பெரும் அச்சம் கொண்டிருந்தார் என்பதைத் திருமதி. இந்திராவின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை விளக்கி நூல் எழுதிய ஜெயகர் பாப்பர் குறிப்பிட்டுள்ளார்.

“இரவு நேரங்களில் தனக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை என்றும், இரவு நேரத்தில் பேய் உருவத்தில் தனது கழுத்தை நெறிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், சுடுகாட்டில் என்.டி. ராமராவ் செய்த யாகத்தின் பலனாக அப்படி இருக்குமோ என்று அச்சப்படு வதாகவும்” தன்னிடம் பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்த தாகவும் ஜெயகர் பாப்பர் சுட்டியுள்ளார். இவ்விதம் பிரதமர் இந்திராவின் உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கிய என்.டி. ஆரைச் சும்மா விட்டுவிடுவார்களா? அதிகாரக்குவிப்பின் உச்சத்தில் அமர்ந்து கோலோச்சும் தில்லி அரசியல் தரகர்கள் இதை வேடிக்கை பார்ப்பார்களா? அதுவும் புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல்வர் தில்லியின் அதிகாரப் பீடத்திற்கு எதிராக நேருக்குநேர் அறைகூவல் விடுவதைப் பொறுத்துக் கொள்வார்களா?

தேசிய வளர்ச்சிக்குழு முடிந்த சில நாட்களில், ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அந்நேரத்தில், ஏழு தெலுங்கு தேசச் சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியைவிட்டு, பிரித்து, அவர்களின் ஆதரவோடு பாஸ்கர ராவ் என்பவரை ஆந்திர முதல்வராக ஆக்கும்படி தில்லி மேலிடம் ஆந்திர ஆளுநர் ராம் லால் அவர்கட்குக் கட்டளையிட்டது.

 ஏழு சட்டமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையைப் பெரும்பான்மை உறுப்பினர் களின் ஆதரவு என்று புதிய ‘கணக்கு இலக்கணம்’ வகுத்தார் ஆளுநர் ராம்லால். சில நாட்களில் இந்தியாவில் அரங்கேறிய இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டு எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களும் அணிதிரண்டனர். என்.டி. ராமரா விற்கு ஆதரவான பெரும்பான்மையான தெலுங்கு தேச உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் அணி வகுத்தனர். குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிடம் என்.டி.ஆர். ஒரு மனுவினை அளித்தார்.

அரசமைப்புச் சட்ட வல்லுநரும், சென்னைப் பல்கலைக்கழகச் சட்ட இயல் துறையின் பேரா சிரியருமான கிருஷ்ணா ஷெட்டிதான் இம்மனுவில் உள்ள கருத்தாக்கத்தை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மனுவை ஆய்வு செய்த மத்திய அரசின் சட்ட வல்லு நர்களும், அரசமைப்புச் சட்ட விதிகள்படி ஆளுநர் செய்தது மிகப் பெரிய பிழை என்று சுட்டினர். குடியரசுத் தலைவர் ஆளுநர் ராம்லாலை நீக்கினார். ஆந்திராவின் முதல்வராக என்.டி. ராமராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.

ஒரு முதல்வர் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சனம் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதைச் சுட்டுவதற்காகத் திட்டமிட்டு நடுவண் அரசால் அரங்கேற்றப்பட்ட மக்கள் விரோத, சமூக விரோதச் செயலாகும் அது. தில்லியில் குவிந்திருக்கும் அதிகாரக் குவியலால், குடிக்காமலேயே ஏற்படும் ஆணவப் போதை-மக்களாட்சி, கூட்டாட்சி இயல்களை எவ்வாறு குழிதோண்டிப் புதைத்தது என்பதற்கு இந்நிகழ்வு அழியாத அடையாளமாக உள்ளது.

காலம் மாறிவிட்டது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரசுக் கட்சியினால் தனியாக நடுவண் அரசில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை மக்கள் பறித்துவிட்டார்கள். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா, அண்மையில் முடிவுற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி கலந்துகொண்டார். முதல்வர் செயலலிதாவின் உரையைப் படித்தார். அவ்வுரையில் தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டம் ஒரு சடங்காக மாறிவிட்டது என்று என்.டி. ராமராவ் 1983ஆம் ஆண்டில் குறிப்பிட்டதை மீண்டும் புதுப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக 2006 ஆம் ஆண்டில் கலைஞர் இருந்தபோது, தமிழ்நாடு அரசு 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் 5 ஆண்டுகளுக்கும் சேர்ந்து 84000 கோடி ரூபாய் அளவில் திட்ட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இதற்கு நடுவண் அரசின் திட்டக்குழு 80,000 கோடி ரூபாய்தான் திட்ட ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மாநிலத் திட்டக்குழு இதற்கு இணங்கவில்லை. தில்லியில் கூட்டணி ஆட்சி அமைந்ததால் முதல்வர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலால், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டை 84,000 கோடி ரூபாய்க்கு ஒத்துக்கொண்டது.

தமிழ்நாட்டின் வரி வருவாய் பெருகியதாலும், நிதி நிலைமை போதிய அளவிற்கு இருந்த தாலும் 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் திட்ட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்ட இலக்கிற்கு மேலாக உயர்ந்தது. எனவே 11 வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் மாநில அரசு நடுவண் அரசு சுட்டிக்காட்டிய நிதி அளவைக் கடந்து 92,332 கோடி அளவில் திட்டச் செலவினை மேற் கொண்டது. இதை நடுவண் அரசு திட்டக்குழுவும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாடு அரசு தற்போது 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்திற்கு (2012-2017) மொத்தத் திட்ட நிதி ஒதுக்கீடாக ரூபாய் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 250 கோடியை உறுதி செய்துள்ளது. இதனை ஒட்டியே மாநிலத் திட்டக்குழு தமிழ் நாட்டின் திட்ட ஒதுக்கீடாக (2012-13). இந்த ஆண்டிற்கு 37,000 கோடி ரூபாயை மதிப்பீடு செய்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு நிதி ரூ.3000 கோடியாகும். தமிழ்நாடு அரசு உறுதி செய்த இந்த ஆண்டின் நிதி ஒதுக் கீட்டிற்கு ஏற்ப வரி வருவாயைப் பெருக்கினால், முழு அளவில் ஒதுக்கிய செலவினை மேற்கொள்ள முடியும். நடுவண் அரசும் ஒப்புக் கொண்ட நிதியை அளிக்கும். மேலும் நடுவண் அரசு 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் 9.56 விழுக் காட்டு வளர்ச்சியை அடைய இலக்குகளை உறுதி செய்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு 4.46 விழுக்காட்டு அளவிற்குத்தான் வளர்ச்சியை அடைந்து நடுவண் அரசு உறுதி செய்த இலக் கினை எட்டாமல் பொருளாதாரம் சரிவு நிலையை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகத் தேய்ந்து கொண்டே வருகிறது. எனவே மாநில அரசுக்கு அளிக்கக்கூடிய திட்ட நிதியையும் நடுவண் அரசு குறைத்து வருகிறது. இவற்றை யெல்லாம் நுட்பத்தோடு ஆய்வு செய்யாமல் தினமணி ஏடு உட்பட ஒளி, அச்சு ஊடகங்கள் தவறான கருத்துகளைத் தலையங்கங்களாகவும், செய்தி அலசலாகவும் வெளியிட்டு அறியாமை என்னும் கற்பனை சொர்க்கத்தில் மூழ்கிப் பேருவகை அடைகின்றன.

தேசிய வளர்ச்சிக்குழு, நடுவண் அரசின் திட்டக்குழு ஆகிய அமைப்புகளின் பங்கு என்ன? இந்த அமைப்புகள் அரசமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டவையா? கூட்டாட்சி இயல் படி இந்த அமைப்புகள் செயல்படுகின்றனவா? என்பன போன்ற வினாக்கள் எழுவது இயற்கை.

1930ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடல் கொள்கையைப் பற்றிய விவாதங்கள் காங்கிரசு மாநாடுகளில் மேற்கொள்ளப் பட்டன. காங்கிரசின் ஆளுமைமிக்க தலைவராக இருந்த ஜவகர்லால் நேரு, இக்கொள்கையில் மிக்க ஈடுபாடு கொண்ட வராக இருந்தார்.

1930ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத் தில் திட்டமிடல் கொள்கை பெரும் வெற்றியினை ஈட்டியதே இதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. எனவே நேரு, நேதாஜி போன்ற தலைவர்கள் விடுதலை பெற்ற இந்தியா வில் திட்டமிடல் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று விரும்பினர். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்ட அவையில் திட்டக்குழு அமைப்பது பற்றியோ அல்லது திட்டமிடல் கொள்கைப் பற்றியே விவாதங்கள் இடம்பெறவில்லை. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ‘இந்தியா விடுதலை’ தொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சரவை தூதுக்குழு திட்டமிடல் கொள்கையை நடுவண் அரசின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற காங்கிரசுக் கட்சியின் கோரிக்கையை மூன்று முறை ஏற்க மறுத்துவிட்டது. இறுதியாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக-பொருளாதாரத் திட்டமிடல் (Economic and Social Planning) பொதுப் பட்டியலின் 20ஆம் இனத்தில் தான் இணைக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படுகிற சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாநிலங்களின் குழுவையும் (Inter-State Council) , நிதிப் பகிர்வை மேற்கொள்வதற்கு நிதிக்குழுவையும் (Finance Commission) இந்திய அரச மைப்புச் சட்டத்தின் 263,280 பிரிவுகள் குறிப்பிடுகின்றன.

 1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த பிறகு, நாடாளுமன்றச் சட்டங்கள் வழியாக, கூட்டாட்சி இயலுக்கு எதிராகத் திட்டக்குழுவும், தேசிய வளர்ச்சிக் குழுவும் நடுவண் அரசால் உருவாக்கப்பட்டன. எனவே இக்குழுக்களை அரசமைப்புச் சட்டம் சாராத அமைப்புகள் (Non-Statutory Bodies) என்று பல வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

திட்டக்குழு நிதி ஆதாரங்களை மாநில அரசுகளுக்குப் பிரித்து கொடுப்பதற்காக உருவாக்கப்படவில்லை. அரச மைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின்படி அய்ந்தாண்டு களுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படும் நிதிக்குழுதான் (Finance Commission) நடுவண் அரசின் வரி வருவாய்த் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. தான்தோன்றித் தனமாக நடுவண் அரசின் திட்டக்குழு, நிதிக்குழுவின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டது.

பொருளாதாரக் கொள்கையை வகுப்பதில், மாநில அரசுகளுக்கு நிதிப்பகிர்வை மேற்கொள்வதில் நடுவண் அரசின் திட்டக்குழு பல முரண்பாடுகளை, இடப்பாடுகளை உருவாக்கி வருகின்றது. முதல் மூன்று அய்ந்தாண்டுத் திட்டக்காலத்தில் எவ்வித வரைய றையும் இல்லாமலேயே திட்டக்குழு மாநிலங்களுக்குத் தன்னிச்சையாக ஒதுக்கீட்டினை மேற்கொண்டது. பின்புதான் ‘காட்கில் வரையறை’ (Gadgil Formula) என்ற அணுகுமுறையை நடுவண் அரசு மேற்கொண்டது. இந்த காட்கில் அணுகுமுறையில் பல காலக்கட்டங்களில் மாற்றங்களை நடுவண் அரசு மாநிலங்களைக் கலக்காமல் மேற்கொண்டு வருகிறது. நடுவண் அரசு தற்போது நடைமுறையில் உள்ள காட்கில் வரையறைப்படி மாநிலங்களுக்குத் திட்ட நிதியை ஒதுக்கி வருகிறது.

1.            மக்கள் தொகை (1971 நிலைப்படி)                            60%

2.            தலாவாரி வருமானம் (Percapita Income)                 25%

3.            நிதி மேலாண்மை                 7.5%

4.            தேசிய அளவில் சமூகப் பொருளாதார இலக்குகளை அடைய                      7.5%

இந்த அணுகுமுறையை உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு அதிக திட்ட நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருகிறது. தமிழ்நாடு போன்று வளர்ச்சி பெற்றுவரும் மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்து அளிப்பதில் சில வரையறைகளைப் பின்பற்றுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் போது எவ்வித வரையறையைப் பின்பற்றுகிறது? நாட்டின் வளங்களைத் தனியார் துறைக்குத் தாரை வார்க்கும் போது எவ்வித அளவுகோல்கள் பின்பற்றப்படுகின்றன? போன்ற கேள்விகளை யாரும் இந்தியத் துணை கண்டத்தில் எழுப்பு வதில்லை.

1990ஆம் ஆண்டிற்குப் பிறகு, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நடுவண் அரசும் அதன் திட்டக்குழுவும் தரகர்களாக மாறிவிட்டன. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதிலும், வள ஆதாரங்களைப் பன்னாட்டு முதலாளித்துவக் குழுமங்களுக்குக் குத்தகைக்கு விடுவதிலும், அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுப் பதிலும்தான் இந்த இரண்டு அமைப்புகளும் அக்கறை காட்டி வருகின்றன. திட்டக்குழுத் தொடங்கப்பட்ட காலத்தில் நேரு முன்மொழிந்த, தொடங்கிய பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் துறைக்கு விற்பதில் அக்கறை காட்டி வருகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாநில அரசு பட்டியலில் இடம்பெற்றுள்ள பல பிரிவுகளைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் அமைப்புகளாகத் திட்டக் குழுவும், பல்வேறு நடுவண் அரசுத் துறைகளும் உரு வெடுத்து வருகின்றன. மாநில அரசின் வளர்ச்சித் திட்டங் களில் குறுக்கிடும் செயல்களைத்தான் இவ்வமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

எனவேதான் பல முதலமைச்சர்கள் இந்த அமைப்புகளின் குழுக் கூட்டங்களில் பங்கேற்க மறுக்கின்றனர். நடுவண் அரசால் அமைக்கப்பட்ட பல வல்லுநர் குழுக்களின் அறிக்கைகளில், மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களில் தலையிட்டு, நடுவண் அரசு அறிவிக்கும் திட்டங்கள் பல குழப்பங்களை விளைவிக்கின்றன; தேவையற்ற பொதுச் செலவை மேற் கொள்வதற்குத் துணை போகின்றன. இவ்வகை இரட்டைத் திட்டங்களால் நிதி ஆதாரங்கள் வீணடிக்கப்படுகின்றன. மேலும், மக்களுக்கு இத்திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் சென்றடைவதில்லை.

மேலும், மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிதியும் குறைந்துகொண்டே வருகிறது. திட்டக்குழு கடைப் பிடிக்கும் அணுகுமுறை மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவே அமைந்து வருகின்றது. எனவே தான், பீகார், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சிறப்பு நிதிச் சலுகைக் கோரிக்கைகளை முன் வைக்கின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இது போன்ற முதன்மையான அரசியல், பொருளாதாரக் கொள் கைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கு, மாநிலக் கட்சிகள் முதன்மைப்படுத்த வேண்டும்.

17.6.2013 அன்றைய தினமலர் ஏட்டில் (பக்.10) ‘ராஜநாகம் - சிங்கம் இடையே கூண்டுக்குள் நடந்த சண்டை’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளி யிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில், டாடா ஸ்டீல் உயிரியல் பூங்காவில் நான்கு ஆண் சிங்கங் களும், ஒரு பெண் சிங்கமும் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. சூன் 14ஆம் நாள் கொடிய நச்சுத்தன்மை கொண்ட ராஜநாகம் பெண் சிங்கத்தைக் கடித்தது. நச்சுத் தாக்குதலால் பெண் சிங்கமும் மயக்கமுற்றது. போராட முடியவில்லை. இதை கண்ட ஆண் சிங்கம் ஒன்று பாம்புடன் சண்டையிட்டது. தன் கூர்மையான பற்களால் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்ததில் பாம்பு இரண்டு துண்டுகளாகி இறந்தது. மற்ற மூன்று சிங்கங்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பாம்பால் பாதிக்கப்பட்ட ஆண்-பெண் சிங்கங்கள் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்தச் செய்தி இன்றைய மத்திய-மாநில அரசியலுக்குப் பாடமாக அமையுமா? சிங்கத்தின் சிலிர்ப்பை, வீரத்தைத் தன்னாட்சி கோரும் மாநில முதல்வர்கள் சிலராவது பெறுவார்களா? கொம்பால் அடித்துச் சாகாத தில்லி ராஜ நாகத்தை மக்களின் செல்வாக்கைப் பெற்ற சில மாநிலக் கட்சிகளாவது ஆண் சிங்கம் போலச் செயல்பட்டுக் கிழித் தெறியுமா? அல்லது கொம்பும் முறியவில்லை, பாம்பும் சாகவில்லை என்ற நிலை அரசியலில் தொடருமா?

Pin It