“சமஸ்கிருத சனியன்

1930 களில் உலக அளவில், பொருளாதாரப் பெருமந்தம் ஒன்று ஏற்பட்டது. அரசு தன் செலவு களைக் குறைக்க வேண்டி வந்தது. சென்னை மாகாண அரசு அமைத்த சிக்கனக் கமிட்டியினர் அரசுக்கு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கச் சில பரிந்துரைகளைச் செய்திருந்தனர். அதில் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதை வரவேற்று 17.01.1932 குடிஅரசு ஏட்டில் ‘சமஸ்கிருத சனியன்’ என்ற தலைப்பில் தேசியத் துரோகி என்ற புனை பெயரில் ஒரு சிறப்பான கட்டுரையும் தமிழ் மக்களுக்கு வேண்டுகோளும் வெளியிடப்பட்டது.

அந்தக் கட்டுரை இப்படி தொடங்குகிறது :“தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத பழைய காரியங்களில் ஆசையுடைய வர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் நாம் கவலைப்படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசியத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக்கொண்டு முன்வந்தோம்...

உண்மையில் “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெறவேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்புகின்றவர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்துவிடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ, வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும், இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த சாதிக் கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள்தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி, அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்குக் காரணம் சமஸ்கிருதமேயாகும். இன்று வருணாச்சிரம தருமக்காரர்கள், சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும், சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும் வருணாசிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும், சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.

தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக்கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று சொல்லுவதற்குக் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும்.

சாரதா சட்டம் போன்ற சீர் திருத்த சட்டங்களைச் செய்யக் கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் (மக்கள் தொகைப் பெருக்கத்தைக்) கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறி தடுப்பதற்கும், திரு. என்.சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத் தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே ஆகும்.

சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து, குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல்லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத வேத, புராண, இதிகாச ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லுகின்றனவென்று கவனிக்கிறார்களே ஒழிய, தங்கள் அறிவு என்ன சொல்கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங் கூடக் கவனிக்கிறார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளான சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சிவிட்டன. ஆகையால் இனி வருங்காலத்தில் இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படா மலிருக்க வேண்டுமானால், அவர்களிடம் மூடநம்பிக்கைகளும் சுயநலமும் உண்டாகாமல், பகுத்தறிவும் சமதர்ம நோக்கும் உண்டாக வேண்டுமானால், சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச் செய்த தமிழ்ப் புராணக் கூளங்களாலும் குடிகொண் டிருக்கும் மூடநம்பிக்கைகள் போதாதென, தேசிய ஆடைகளைப் புனைந்து “ஹிந்தி” என்னும் பாஷையையும் கொண்டுவந்து நுழைத்துக் கொண்டு பார்ப் பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காக பார்ப்பனர் பிரயாசைப்படுவ தற்குக் காரணம் அதன்மூலம் மீண்டும் வருணாசிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே, என்பது சுயமரியாதைக்காரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலியவைகளுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருகாலும் சம்மதிக்கமாட்டார்கள்.

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி, சென்னை அரசாங்கச் சிக்கன கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபாரிசு செய்ததைக் கண்டிக் கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றி அவர் களுக்குக் கவலையில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமாக இருப்பவை களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பி கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடா மலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங் கூச்சலுக்குப் பயந்துகொண்டு அரசாங்கத்தார் சிக்கனக் கமிட்டியின் சிபாரிசைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும், சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட் டியும் இன்னும் சமஸ்கிருதக் கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும் படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத் தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது தான் சமஸ்கிருதச் “சனியன் ஒழியும்” என்று ‘குடிஅரசு ஏடு’ எழுதியது.

இந்த அறிக்கையால், சென்னை மாகாணத்தை அன்று ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சி அரசுக்கும் ஒரு துணிச்சல் ஏற்பட்டது. மாநிலக் கல்லூரியில் இருந்த சமஸ்கிருதத் துறையையும், மத பாடங்களையே தத்துவம் என்று சொல்லி போதித்துவந்த தத்துவத் துறையையும் அடியோடு மூடிவிட்டார்கள் (1930களில் தமிழகம், பொருளாதாரம் பெருமந்தம் - ஓர் ஆய்வு-கா.அ. மணிக்குமார், பக்கம் 132, அலைகள் வெளியீட்டகம்).

சுயமரியாதை இயக்கத்தினரின் சமஸ்கிருத எதிர்ப்பும், அரசின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவுப் போக் கும் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதத்தை ஒழித்துக் கட்டியது. பார்ப்பனர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கு எப்போதும் சமஸ்கிருத மொழியின் மீதும் இந்தி மொழியின் மீதும் காதல் இருந்துகொண்டேதான் இருக்கும். பாரதியார் முதல் உ.வே.சா. வரை இதற்கு விதிவிலக்கில்லை.

இந்தியாவுக்குப் பொதுமொழியாக இந்திதான் வர வேண்டும் என்று முதன்முதலில் எழுதியவர் சி.சுப்பிரமணிய பாரதியாரே ஆவார். 15.12.1906 இந்தியா ஏட்டில் இந்தி பாஷை பக்கம் என்ற தலைப்பில் எழுதிய போது, “இந்தியா பலவித பிரிவுக்குடையதாய் இருந்த போதிலும், உண்மையில் ஒன்றாய் இருப்பதற்கு இணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும், முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் இந்தியும், தெலுங்கர்கள் தெலுங்கும் இந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப் பாஷை ஒன்றிருக்கும். தமிழர்களாகிய நாம் இந்தி பாஷையில் பயிற்சி பெறுதல் மிகவும் அவசியம்” என்று எழுதினார். பிறகு அவரே 1920இல் சமஸ்கிருதம் இந்தியாவுக்குப் பொதுமொழியாக வரவேண்டும் என்று எழுதினார். 11.1.1920 சுதேசமித்திரன் இதழில் ஒளிர்மணிக்கோவை என்ற தலைப்பில் எழுதிய பாரதியார், காந்தி முதலானவர்கள் இந்தியாவுக்குப் பொது பாஷையாக இந்தியை வழங்கலாமென்று அபிப்பிராயப் படுகிறார்கள்; அரவிந்தர் முதலியவர்கள் சமஸ்கிருத பாஷையையே இந்தியாவுக்குப் பொது பாஷை என்றும்; நாம் அதைப் புதிதாக அங்கனம் சமைக்க வேண்டிய தில்லை என்றும், ஏற்கெனவே ஆதிகாலந்தொட்டு அதுவே பொது பாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்கிறார். இப்போது சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது மிகவும் எளிது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய் பண்டிதர் உபாத்தியாயர் இல்லாமலே சமஸ்கிருத பாஷையை ஏழெட்டு மாதங்களில் கற்றுக்கொள்ளும் படியான நூல்கள் எழுதியுள்ளார். தமிழர்கள் இதைப் படித்தால் விரைந்து சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் பாரதியார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று, மதுரை தமிழ்ச்சங்கப் போட்டிக்கு, 1915இல் கவிதை எழுதிய அதே பாரதியார், அடுத்த ஆண்டே தமிழ்த்தாய் கூறு வதாக என்ன எழுதியுள்ளார் தெரியுமா?

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத் தான். மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் அன்பொடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளினுள்ளே - உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (பாரதியார் கவிதைகள், நியு செஞ்சுரி புத்தக நிலையம், பக்.113). பார்ப்பனர்கள் தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தாகவும், ஆரியம் உயர்ந்த மொழி, தமிழ் அதற்குத் இணையான மொழி என்று தான் எழுதியுள்ளார்.

1938 முதல் இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் சமஸ்கிருதக் கல்லூரியில் பேசிய எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், “கொஞ்சம் முயற்சி செய்தால் சமஸ்கிருதத்தை இந்தியாவின் பொது மொழியாக ஆக்கிவிட முடியும்” என்று பேசினார் (கு.நம்பி ஆரூரன், தமிழ் மறு மலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்கம் 331).

வரலாற்றுப் பேராசிரியரான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி என்னும் பார்ப்பனர் 1953இல் மலேசியா சென்றிருந்த போது, அந்த நாட்டு அரசு இந்திய மொழி களில் ஏதாவது ஒன்றை மலேயாப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்க இவரிடம் கருத்துக் கேட்டனர். அவர் சமஸ்கிருத மொழியைப் பாடமாக வைக்கலாம்; தமிழைத் துணைப் பாடமாக வைக்கலாம் என்று பரிந் துரை செய்தார். மலேயா பல்கலைக்கழகமும், அந்த நாட்டு அரசும் அவர் கருத்தை ஏற்க மறுத்துவிட்டு, தமிழைப் பாட மொழியாகச் செய்தனர். ‘நீலகண்ட சாஸ்திரியின் சமஸ்கிருத வெறி, மலேயாவில் மூக்கறுக் கப்பட்டது’ என்று ‘நம் நாடு’ ஏட்டில் 4.5.1953 அன்று எழுதியுள்ளனர்.

இந்திய அரசு 1955இல், சமஸ்கிருதத்தை எப்படி யெல்லாம் வளர்க்கலாம் என்பதற்காக ஒரு குழுவை அமைத்தது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி வரலாற்றுப் பேராசிரியர்தான் மொழியியல் பேராசிரியர் அல்ல. இருந்தபோதிலும் இந்திய அரசு அமைத்த ‘சமஸ்கிருதக் குழு’வின் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார் (1955இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட சமஸ்கிருத குழு அறிக்கை, பக்கம் 3). இக்குழு இந்தியா முழுவதி லும் உள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் சமஸ் கிருதத் துறை தொடங்கப்பட வேண்டும் என்று பரிந் துரை செய்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக முதலமைச்சர் இராசாசியால் நியமிக்கப்பட்ட சர். சி.பி. இராமசாமி அய்யர், அப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை வளர்க்க முனைந்தார். இதை நாவலர் சோமசுந்தர பாரதியார், “இறந்த மொழியாம் வட மொழிக்கு ஏன் இந்த வாழ்வு” என்று வன்மையாகக் கண்டித்தார் (நம் நாடு, 5.12.1953).

இராசாசி, சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டும்; என எழுத்து மூலம் இந்தி ஆட்சி மொழிக் குழுவிடம் அளித்தார். 1955இல் இந்திய அரசு ‘ஆட்சி மொழிக் குழு‘ ஒன்றை அமைத்து இந்தியை எப்படி யெல்லாம் வளர்க்கலாம் என்று இந்தியா முழுவதும் ஆய்வு செய்ய அக்குழுவை அனுப்பியது. சென்னை வந்த அக்குழுவிடம் சாட்சியமளித்த இராசாசி “உங்களால் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்க முடியு மானால், ஏன் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்கக்கூடாது. சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்கு வதில் வெற்றி பெற்றால் தான் நமது உண்மையான கௌரவம் காப்பாற்றப்படும்” என்று எழுதிக் கொடுத் தார் (நம்; நாடு, 11.1.1956). இராசாசிக்கு எவ்வளவு சமஸ்கிருத வெறி இருந்தது என்பது இதன்மூலம் புலப்படும்.

தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும், போற்றப்படும் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் 27.3.1937 அன்று சென்னையில் காந்தியின் தலைமையில் நடைபெற்ற ‘பாரதிய சாகித்திய பரிஷத்’ என்ற அமைப் பின் கூட்டத்திற்கு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சா. தமிழில் பேசினாலும், “நம்மு டைய பொது பாஷையாக இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார் (அ. இராமசாமி, தமிழ் நாட்டில் காந்தி, பக்கம் 328, காந்தி நூல் வெளியீட்டு கழகம், மதுரை, முதற் பதிப்பு 1969).

தமிழ்த் தாத்தா என்று கூறப்படும் உ.வே.சா. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்தி ஆதரவாளராகவே இருந்தார். அந்தக் கூட்டத்தில் காந்தி தம் தலைமை உரையை முழுவதுமாக இந்தியிலே பேசினார். இந்தியாவிலுள்ள தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளின் எழுத்துகளின் வரி வடிவத்தை யும் தேவநாகரியாக மாற்ற வேண்டும் என்றும் பேசினார். அதற்கும் உ.வே.சா. மறுப்பு எதுவும் பேசவில்லை. இவரைத்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கிறார்கள்.

தமிழ்மொழியை “செம்மொழி” என்று சொல்லி விட்டார் என்பதற்காக, வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியை நாம் புகழ்ந்து போற்றுகிறோம். அவர் பரிதிமாற் கலைஞர் என்று பெயர் மாற்றம் செய்து கொள்ளவில்லை. அவருடைய ஒரு நூலில் அதைப் புனைப்பெயராகக் குறிப்பிட்டிருந்தார்.

“தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் யாவரும் இந் நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்ல. மத்திய ஆசியாவில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக வட இந்தியா வந்து, பின்பு தென்இந்தியா வந்தவர்கள்” (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி, தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 14, பூம்புகார் பதிப்பகம், சென்னை) என்று வரலாற்றைத் திரித்து எழுதியுள்ளார். நாமெல்லாம் ஆரியர்கள்தான்; கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றுதான் வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழ்நாட்டுத் தமிழர்களை வந்தேறிகள் என்று எழுதியவருக்குத் தான் பாராட்டுச் செய்கின்றோம்.

- தொடரும்

Pin It