உண்மையான சமதர்ம மதச்சார்பற்ற சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசாக இந்தியாவை மறுகட்டமைப்புச் செய்வோம்

(restructure india as a real socialist, secular democratic federal republic)

1801ஆம் ஆண்டிற்குமுன் நிலவியல் அடிப்படை யிலோ அல்லது அரசமைப்பு என்கிற தன்மையிலோ “இந்தியா” என்கிற ஒரு நாடு இருந்ததில்லை.

அலெக்சாண்டர் (கி.மு.356-323) படையெடுத்த காலம் முதல், கி.பி.1310இல் தமிழ் அரசர்களின் ஆட்சி முடிவுற்ற காலம் வரை, மற்றும் 1757இல் முகலாயப் பேரரசு சிதைந்த காலம் வரையில், கன்னியாகுமரி முதல் இமயமலை வரையிலான பெருநிலப்பரப்பில் ஒரே சமயத்தில் பல மன்னராட்சிப் பகுதிகள் இருந்தன.

1640 முதல் 1801க்குள்ளாக இந்தியாவில் பெரும் நிலப்பரப்பை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி கைப் பற்றிக் கொண்டது. நிலவியல் மற்றும் அரசியல் அடிப் படையில் இந்தியா என்பதைக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவியது. 1801ஆம் ஆண்டிற்கும் 1861ஆம் ஆண்டிற் கும் இடைப்பட்டக் காலத்தில், பிரித்தானியப் பேரரசின் கீழ், இந்தியாவில் ஒருங்கமைக்கப்பட்ட வருவாய்த் துறை, நீதித்துறை, காலாள்படை மற்றும் கப்பல் படைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

முகலாயர் ஆட்சியில் பாரசிகம் ஆட்சிமொழியாக இருந்தது. பிற பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சார்ந்த மொழிகள் ஆட்சி மொழிகளாக இருந்தன.

ஆனால் 1835ஆம் ஆண்டு இம்மொழிகள் அகற்றப்பட்டு, ஆங்கிலம் ஆட்சிமொழியாக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி என்ற நிலை உருவாக்கப்பட்டது. எழுத்தறிவற்ற அல்லது அரை குறையாகப் படிக்கத் தெரிந்த - உழவர், நெசவாளர், இடையர், மீனவர் முதலான கீழ்ச்சாதி உடலுழைப் பாளர் குடும்பங்களின் பிள்ளைகள் அயல்மொழியான ஆங்கிலத்தில் படிக்க முடியாததால் உயர் பள்ளிக் கல்வியைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டது.

 மேலும் அக்காலத்தில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. பெரிய நகரங்களில் மட்டுமே பள்ளிகள் இருந்தன. 1900 வரையில், மேல்சாதி வீட்டுப் பிள்ளைகள், பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தொடக்கக் கல்வியையும், உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

1947 ஆகசுட்டு 15ஆம் நாள் வெள்ளையர் ஆட்சி முடிவுற்ற போது, இந்தியர்களில் நூற்றுக்கு 16 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர்.

எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்த இந்த 16 பேரில் 10 பேர், எல்லா மதங்களையும் சேர்ந்த மேல்சாதியினராகவே இருந்தனர்.

எடுத்துக்காட்டாக, இந்துக்களில் பார்ப்பனர்-சத்திரியர்; இசுலாமியர்களில் சய்யத், ஷேக்; மற்றும் பார்சிகள் முதலானோராக இவர்கள் இருந்தனர். 1947ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த மொத்த மக்கள் தொகை 33 கோடி. இதில் நான்கில் ஒரு பகுதியினராக இருந்த மேல்சாதியினர் எழுத்தறிவு பெற்றிருந்த 16 பேரில் 10 பேராக இருந்தனர். மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினராக இருந்த - எல்லா மதங்களையும் சேர்ந்த, கீழ்த்தட்டு உழைப்புச் சாதியினருள் 2 முதல் 5 விழுக்காட்டுப் பேரே எழுத்தறிவு பெற்றிருந்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அது 1950இல் நடைமுறைக்கு வந்த பிறகும், வேண்டுமென்றே வெகுமக்களுக்குக் கல்வி தரக் கூடாது என்கிற கொள்கையை இந்திய ஆளும்வர்க்கம் தொடர்ந்து கடைப்பிடித்தது. இவர்கள் பிரித்தானிய ஆட்சியாளர்கள் முன்பு கையாண்ட கேடான நடை முறைகளையும் மனப்போக்குகளையும் பின்பற்றினர். அதனால் வெகுமக்களிடமிருந்து தங்களை அந்நியப் படுத்திக் கொண்டனர்.

இப்படி அமைக்கப்பட்டுள்ள இந்தியாவில் :

1. எல்லாத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்

இந்திய அரசமைப்புச் சட்டம் நிருவாகம், நீதித் துறை, கல்வி, இராணுவம் முதலானவை பற்றிய இன்றியமையாத எல்லா அதிகாரங்களையும் நடுவண் அரசு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற் றிடம் அளித்துள்ளது. இந்திய அரசின் ஆட்சிமொழியாக- இருந்த ஆங்கிலம் அகற்றப்பட்டு, தேவநாகரி வரிவடி விலான இந்தி இந்திய அரசின் ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது. ஆங்கிலம் தற் போது துணை ஆட்சிமொழியாக நீடித்து வருகிறது. ஆயினும் விரைவிலோ அல்லது இன்னும் சில காலம் கழித்தோ ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்ற நிலை நீக்கப்படும்.

இந்திய அரசின் உறுப்புகளாக உள்ள நாடாளு மன்றம் முதல், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள தொடர்வண்டி, வானூர்தி, அஞ்சல், தொலைப் பேசி, வருமான வரி, உற்பத்தி வரி, வங்கிகள், காப்பீடு முதலான துறைகளின் அன்றாட அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடுவண் அரசு அலுவல கங்களில் எழுத்தர் முதல் உயர் அதிகாரி வரை பணி புரியும் ஒரு தமிழரோ, கன்னடியரோ, மலையாளியோ, தெலுங்கரோ, பஞ்சாபியோ, வங்காளியோ, ஒடிசியரோ, அசாமியரோ, காஷ்மீரியோ இந்தி மொழியைக் கற்று, இந்தியை மட்டுமே அலுவல் மொழியாகப் பின்பற்ற வேண்டும்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, ஒடிசா, அசாமி, வங்கம், காஷ்மிரி, உருது போன்ற எல்லாத் தேசிய மொழிகளும்-பெரும் நிலப் பரப்பில் வழங்கப்படும். எல்லா மொழிகளும் எவ்வளவு தான் செழுமையான இலக்கிய வளங்களையும், தொன்மையான வரலாறுகளையும் பெற்றுள்ள போதி லும், நடுவண் அரசு அலுவலகங்களில், அம்மொழி களை அலுவல் மொழியாகப் பயன்படுத்த முடியாது. இம்மொழிகளின் தாயகப் பகுதிகளில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் கூட இவற்றுக்கு இடமில்லை.

தங்கள் தாய்மொழியைத் தங்கள் தாயகப் பகுதியில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த முடியாதெனில், நாம் சுதந்தரம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுவதில் என்ன பொருள் இருக்கிறது? இந்தி பேசாத பகுதியில் பிறந்த ஒவ்வொரு இந்தியனும் எதிர்கொள்ளும் முதன் மையான வினாவாக இது இருக்கிறது. அதனால் நடுவண் அரசு வேலைகளில் பணிபுரிவதற்கான வாய்ப்பு இந்தி பேசும் மாநிலங் களில் பிறந்தவர்களின் தனிச்சிறப்புரிமை - பிறப் புரிமை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில், 343 முதல் 351 வரையிலான விதிகளின் கீழ் நடுவண் அரசின் எந்தவொரு அலுவலகத்திலும், நிறுவனத்திலும் இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக இருப்பதற்கான முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத பிற தேசிய இனமக்களின் இனம், மொழி உரிமைகளையும் தனித்த அடையாளங்களையும் இது பறிக்கிறது. எனவே, சனநாயகத்துக்கு எதிரான இவ்வரசமைப்புச் சட்ட விதிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இந்தி மட்டுமே இந்திய அரசின் ஆட்சிமொழி என்பதற்குப் பதிலாக, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் விதிகள் 344(1), 351 ஆகியவற்றின்கீழ் உள்ள எல்லா மொழிகளையும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும். பல தேசிய மொழிகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சியாக இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வதற்கான முதல் நடவடிக்கை இதுவேயாகும்.

மொழி அடிப்படையில் அமைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநிலத்தின் ஆட்சிமொழியே அம்மாநிலத்தின் எல்லைக்குள் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களிலும் ஆட்சிமொழியாகக் கட்டாயம் இருக்க வேண்டும்.

2. நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை அகற்றவேண்டும்

நடுவண் மற்றும் மாநில அரசுகளின் எல்லாத் துறைகளுக்கும் முதல்நிலை (Class I) அலுவலர் முதல் நான்காம் நிலை அலுவலர் வரையிலான பணி களுக்கு ஆண்களையும் பெண்களையும் தேர்வு செய்தல் என்பது மற்றொரு முதன்மையான சிக்கலாக இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்துறைப் பணி, இந்திய அயல் உறவுப் பணி முதலான உயர் பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (u.p.s.c.) உள்ளது. நடுவண் அரசின் முகமையாகச் செயல்படும் இந்த ஆணையம் சிறப்பு அதிகாரங்கள் கொண்டதாகும்.

1947ஆம் ஆண்டு அக்டோபரில், இந்தியாவின் “இரும்பு மனிதர்” என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல், அப்போதிருந்த மாகாணங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தைத் தில்லியில் கூட்டி னார். அக்கூட்டத்தில் இந்திய நிர்வாகப் பணி (ஐ.ஊ.ளு.) என்று இருப்பதை, “இந்திய ஆட்சிப்பணி” (ஐ.ஹ.ளு.) என்று மாற்றியமைக்கப் போவதாக அறிவித்தார். பட்டேலின் இக்கருத்தை, சென்னை மாகாண முதல மைச்சராக இருந்த ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார் கடுமையாக எதிர்த்தார். ஆனால் பட்டேல், ஓமந்தூர் இராமசாமியின் எதிர்ப்பைப் புறக்கணித்து, மற்ற முதலமைச்சர்களைப் போல் இக்கருத்தை ஏற்குமாறு அவரிடம் கூறினார். இப்போது, இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ‘மாவட்ட ஆளுநர்கள்’ போல் செயல்படு கின்றனர். “மாவட்ட ஆளுநர்” (Governor of the District) என்ற சொற்கோவை பிரித்தானிய ஆட்சியில் வருவாய் வாரியக்குழு ஆணை யால் (Board’s Standing Order - B.S.O.) உருவாக் கப்பட்டதாகும்.

இந்தியாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட மாவட் டங்களை ஆட்சி செய்வதற்கான ஆண்களையும் பெண்களையும் நடுவண் அரசுப் பணியாளர் தேர் வாணையம் தெரிந்தெடுப்பது சனநாயகத்திற்கும், கூட் டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும். இத்தேர் வாணையம் தேவையற்ற ஒன்றாகும். இது வெள்ளை யானை போன்ற -ஊதாரித்தனச் செலவுள்ள நிறுவனம் ஆகும்.

எனவே நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும். மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களுக்கு அந்தந்த மாநி லத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமான எல்லா நிலை அலுவலர்களையும் தேர்வு செய்யும் முற்றதி காரம் (Sovereign Power) அளிக்கப்பட வேண்டும்.

3. தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களுக்குத் தனித் தனி அரசமைப்புச் சட்டங்கள் வேண்டும்.

ஒரு சுதந்தர நாட்டில், அதன் ஒவ்வொரு அலகும் எல்லா வகையிலும் முழுமையான தன்னாட்சி பெற் றதாக இலங்க வேண்டும். மொழி வழியில் அமைந் துள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கென்று ஒரு தனியான அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்திற்கு இது உட்பட்டதாக இருக்கும். கூட்டாட்சி அரசு அல்லது நடுவண் அரசிடம் பொதுப் பாதுகாப்பு, பொது நாணயம், செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகளின் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். கல்வி, மக்கள் நலவாழ்வு, தொழில், எரி ஆற்றல், வேளாண்மை, காடுகள், அஞ்சல், தொடர்வண்டித் துறை, வருமான வரி, உற்பத்தி வரி உள்ளிட்ட பிற அனைத்துத் துறைகளின் அதிகாரங்களும்; எஞ்சிய அதிகாரங்கள் எனப்படுபவையும் முற்றாக மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும்.

4. இரட்டைக் குடியுரிமை

ஒவ்வொரு குடிமகனும் முதற்கண் தன் மாநிலத் தின் குடியுரிமையைப் பெற்றிருப்பார். அத்துடன் இந்தியக் கூட்டாட்சியின் குடியுரிமையையும் பெற்றிருப்பார்.

5. தனித் தேசியக் கொடி

ஒவ்வொரு மாநிலமும் அதற்கென ஒரு தேசியக் கொடியைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாநிலமும் தனக்கான பிரதேசத் தனிப்படையைக் (Territorial Army) கொண்டிருப்ப தற்கான உரிமையைப் பெற்றிருக்கும்.

6. மாநிலங்களும் கூட்டாட்சியும்

இவ்வாறாக முழுமையான தன்னாட்சி அதிகாரங் களைக் கொண்ட - இந்தியாவில் உள்ள -ஒவ்வொரு மொழித் தேசிய இன அடிப்படையிலான மாநிலமும் இந்தியக் கூட்டாட்சி அரசுக்கு, மேலே குறிப்பிட்ட மூன்று அதிகாரங்களைத் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும்.

இதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு, தற்போதுள்ள இந்தியாவை உண்மையான கூட்டாட்சி இந்தியாவாக மாற்றி அமைத்திட நம்மால் இயன்ற அளவில் நாம் பாடுபடுவோம்.

7. உண்மையான சமதர்ம, மதச்சார்பற்ற, சனநாயக இந்தியக் கூட்டாட்சிக் குடியரசு காண்போம்

இந்தியாவை ஓர் உண்மையான சமதர்ம மதச் சார்பற்ற, சனநாயகக் குடியரசுகளைக் கொண்ட கூட்டாட்சி நாடாக நாம் வாழும் காலத்திலேயே மாற்றியமைத்திட அயராது உழைப்போம். இந்த அரசியல் குறிக் கோளை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை அடைவதற்காக அணிதிரள்வோம்.

- உண்மையான கூட்டாட்சி அரசமைப்புக்கான கலந்தாய்வுக் குழு (Real Federal Constitution Discussion Group)

ஒருங்கிணைப்பாளர் : வே.ஆனைமுத்து

Pin It