‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். மேலும் ‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்று மழையின் சிறப்பையும், மழை நீரின் இன்றி யமையாத் தன்மை பற்றியும் உணர்த்தினார். வள்ளு வர் காலத்தில் அன்றைக்கு இருந்த தமிழகத்தில் மக்கள் தொகை சில இலட்சங்களே இருந்திருக்கக்கூடும்.

நீர் வளமும், நில வளமும் நிறைந்து, மக்களின் தேவைக்கு மேல் குடிநீரும், பாசன நீரும் இருந்தன. தமிழ் நாட்டின் முதுபெரும் பொருளாதார அறிஞரும், தமிழறிஞ ருமான டாக்டர் பி. நடராசன், சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1950களில் சொர்ணம்மாள் அறக்கட்டளை சொற்பொழிவின் போது, வள்ளுவரின் நீர் சார்ந்த பொருளாதாரத் தொலைநோக்கைப் பற்றி விளக்கி யுள்ளார்.

உலகில் பொதுவாகப் பொருளாதார அறிஞர்கள் ஒப்புக்கொண்ட நிலம், உழைப்பு, மூலதனம், நிறுவன அமைப்புகள் ஆகிய காரணிகள்தான் உற்பத்தியையும், பொருளாதாரத்தையும் வளர்த்தெடுக்கின்றன என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால், வள்ளுவர் ஒருவர்தான் நீரை ஒரு பொருளாதாரக் காரணியாகக் கண்டறிந்து அதனுடைய தேவையையும் பாதுகாப்பையும் வலியு றுத்தினார் என்று ஒரு புதிய விளக்கத்தை அறிஞர் பி. நடராசன் சுட்டினார்.

இதன் காரணமாகத்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், பிற்காலத்தில் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களும், விஜய நகர மன்னர்கள் ஆட்சியிலும் பெரிய ஏரிகள், குளங்கள், கிணறுகள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த நீர்நிலைகளும் பாதுகாக்கப்பட்டன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் தஞ்சை, திருச்சி மாவட்ட வேளாண் குடிகளுக்குப் பெரும் பாசனத் திட்டமாகவும், மக்களுக்குக் குடிநீர் வழங்கும் அணையாகவும் விளங்கி வருகிறது.

முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி.907-953) வீரநாராயண ஏரியை உருவாக்கினான். இன்றைக்கு வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிற அந்த ஏரியி லிருந்துதான் சென்னைப் பெருநகருக்குக் குடிநீரை எடுத்துப் பயன்படுத்துகிறோம் என்பதிலிருந்தே தமிழ் மன்னர்களின் நீர் மேலாண்மையையும், தொலை நோக்குப் பார்வையையும் காணமுடிகிறது.

1923ஆம் ஆண்டு வீராணம் ஏரியின் கொள்ளளவு 41 மில்லியன் கன மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது 25 மில்லி யன் கனமீட்டராகக் குறைந்துள்ளது.

கடந்த 91 ஆண்டுகளில் நாம் நீர் வள ஆதாரத்தை எவ்வாறு சூறையாடி யிருக்கிறோம் என்பதற்கு இது ஒன்றே அடையாள மாகும். தமிழ்நாட்டின் பதிவேடுகளில் 39,202 ஏரிகள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

காவேரி, தென் பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை நதி எனப் பல நதிகள் தமிழ்நாட்டின் வளத்தினைப் பெருக்கி - திருமேனி செழித்த தமிழ்நாடு - என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

‘கண்ணாடிப் போன்ற நீர் ஊற்றுக்கள் உண்டு’ என்று தமிழகத்தின் தூய்மையான நீர் பற்றி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது கவிதையில் சுட்டியுள்ளார்.

இக்கட்டுரை ஆசிரியர் 1964ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது, கல்லூரி நிறுவனர் நாளில் பல அறிஞர்கள் கலந்துகொண்டு வள்ளல் பச்சையப்பரின் பெருமை குறித்து உரையாற்றியிருக்கிறார்கள்.

19ஆம் நூற்றாண் டின் தொடக்கக் காலத்தில் பச்சையப்பர் காலை நேரங்களில் கூவம் ஆற்றில்தான் குளிப்பார் என்றும் இதற் கான சான்றுகள் பல உள்ளன என்றும் குறிப்பிடுவர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின் ஆட்சி, சென்னையில் 1820களில் நிலைபெற்ற போது, சின்னத் தறிப்பேட்டை என்று அழைக்கப்பட்ட இன்றையச் சிந்தா திரிப்பேட்டையில் மக்களைக் குடியேற்றம் செய்யும் பொறுப்பைக் கிழக்கிந்தியக் குழுமத்தோடு வணிகம் செய்த, சென்னையைச் சார்ந்த சிலர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து நெசவுத் தொழிலை மேற்கொள்வதற்கு இப்பகுதிக்கு நெசவாளர் குடும்பங்களை அழைத்து வந்தனர்.

அப்போது கூவம் ஆற்றி லிருந்து குடிநீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வாக்குறுதியும் தரப்பட்டது. இவ்வாறு தமிழ் நாட்டில் நீர் மேலாண்மையைப் போற்றி வந்தனர்.

கிழக்கிந்தியக் குழும ஆட்சியில்தான் நீர்பிடிப்புப் பகுதிகளும், பெரிய ஏரிகளும், வாய்க்கால்களும் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

பொது மக்கள் பாதுகாத்து வந்த இந்த நீர்நிலைகள் அரசின் கட்டுப்பாட்டிற்கு மாறின.

இதைப்பற்றி விளக்கமளித்த அறிஞர் காரல் மார்க்சு, (இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி-British Rule in India, New York Daily Tribune, June 25, 1853 - ‘On the National and Colonial Questions - Selected Writings’ (ed.) by Aijaz Ahmed, P.62-63)) எவ்வாறு தொன்மை நாகரிகத் தொட்டில்களாக விளங்கிய எகிப்து, ஆசிய நாடுகளின் நீர்நிலைகளை இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் குழும ஆட்சி சிதைத் ததைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

வாய்க்கால் கட்டியும், வறண்ட பகுதிகளுக்கு நீர் எடுத்துச் சென்று வள மாக்கியதையும் தொன்மைக்காலத் தொழில் நுட்பங்களையும் குறிப்பிடுகிறார். ‘நிதி (Finance) போர் (War) பொதுப்பணித்துறைகள் (Department of Public Works) வரலாற்றுக் காலம்தொட்டு ஆசிய நாடுகளில் இயங்கி வந்தன.

தற்போது இத்துறைகளை ஆங்கிலேய கிழக்கந்தியக் குழும ஆட்சி, முந்தைய ஆட்சியாளர்களிட மிருந்து பெற்றுக்கொண்டது.

ஆனால், பொதுப்பணித் துறையை முழுமையாக கைவிட்டுவிட்டது’ என்று மார்க்சு மேலும் குறிப்பிடுகிறார்.

விதிவிலக்காக இங்கி லாந்திலிருந்து வந்த பென்னி குக், ஆர்தர் காட்டன் போன்ற உயர் அலுவலர்கள் முல்லைப் பெரியாறு, கொள்ளிடம், மேட்டூர் அணைகள் போன்ற நீர்த் தேக்கங்களை உருவாக்கினார்கள்.

ஆர்தர் காட்டன், கல்லணைத் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தென் இந்தியாவில் பல அணைகளைக் கட்டினோம் என்று தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தமிழர் போற்றிய நீரியில் உயர் தொழில்நுட்பத்தை விடுதலைப் பெற்ற இந்தியாவில் பேணிக்காப்பதற்குப் பதிலாக நடுவண், மாநில அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் சிதைத்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நீர்நிலைகளில் கோடைக் காலங்களில் தூர் வாரி, ஆழப்படுத்தி, மழைக்காலங்களில் நீரைச் சேமிப்பதற்குப் பதிலாக மணல் கொள் ளையடித்துப் பணம் சேர்க்கிறார்கள். நீர் வளத்தைச் சின்னாபின்னாமாக்குகிறார்கள்.

இன்றைக்கு வான் அறிவியலும், தொலையுணர்வு அறிவியலும் வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில், நீர் மேலாண்மைத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பிருந்தும், மக்களுக்குத் தேவையான நீர் வழங்குகிற நீர்நிலைகளைச் சிதைக்கின்ற போக்குப் பெருகி வருகிறது.

வள்ளுவர் காலத்திலும் தமிழ்நாட் டை ஆண்ட மன்னர்கள் ஆட்சிகளிலும் போற்றிப் பாதுகாத்த நீராதாரங்கள் சிதைந்து வருகின்றன என்பதை 2014இல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் நமக்குப் பறைச்சாற்றுகின்றன. தமிழ்நாட்டில் 22 மாவட் டங்களில் நிலத்தடி நீர்மட்டம் முன்பு இருந்ததைவிட இரண்டு மீட்டருக்கு மேல் நீர் மட்டம் இறங்கி வருகிறது என்றும், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட் டங்களில் 6 முதல் 7 மீட்டர் வரை குறைந்து வருகிறது என்று தமிழ்நாடு குடிநீர் வாரியப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஓராண்டில் ஒருவருக்குத் தேவை யான தண்ணீரின் அளவு ஆயிரம் கன மீட்டர் களாகும். தமிழகத்தில் கிடைப்பதோ சராசரியாக 750 கன மீட்டர்களே ஆகும்.

உலகில் 79 விழுக்காடு கடல் நீராகும். 21 விழுக் காடு அளவிற்குதான் உப்பற்ற நீர் கிடைக்கிறது. இவற்றில் 3 விழுக்காடுதான் நன்னீர் என்றும் அதில் ஒரு விழுக்காடுதான் மனிதகுலத்திற்குக் கிடைக்கிறது.

உலகின் பல தொன்மை நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, சிந்து சமவெளி நாகரிகங்கள் ஆற்றங்கரை களில்தான் தோன்றின என்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது.

இன்றைக்கு இந்த ஆறுகளின் நிலை எவ் வாறு உள்ளது என்பதைப் பற்றிப் பல புள்ளிவிவரங் கள் சுட்டுகின்றன.

உலகில் முதன்மையான 10 ஆறுகளைக் குறிப் பிட்டு, அந்த ஆறுகளில் காணப்படும் அளவற்ற மாசு அளவினைச் சுட்டும் பல புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

1.    சிட்டரம் ஆறு - இந்தோனேசியாவில் உள்ள இந்த ஆற்றில் பாதரசம் அதிக அளவில் கலப்பதால் கோடிக்கணக்கான மீன்கள் தினமும் இறக்கின்றன.

2.    கங்கை - உலகிலேயே நீர்வரத்தில் இரண்டாவது பெரிய ஆறாகவும், அதிக அளவிற்குப் பாசனத்திற்கு பயன்படும் ஆறாகவும் உள்ளது. இந்த நதியைப் புனித நதி என்று இந்துமத அமைப்புகளும், அதனு டைய துணை அமைப்புகளும் வெறித்தனமாகக் கூறி வருகின்றன. இந்தக் கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதம் பெறலாம் என்ற மூடநம்பிக்கை இன்றும் பல கோடிக்கணக்கான மக்களிடம் உள்ளது.

பல கோடி லிட்டர் அளவில் கழிவு நீர் தினமும் கங்கையில் கலக்கிறது. கங்கை நீரை நாளும் மாசுப்படுத்துவது பெருமளவில் மனிதக் கழிவுகள் ஆகும் எனப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

3.    மன்தான்சா ரியாச்னலோ ஆறு - அர்ஜென்டினா நாட்டில் பாயும் இந்த ஆற்றில் கொடிய நச்சுத்தன்மை உடைய அமிலங்கள் கலக்கின்றன. அதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

4.    பரிகங்கை-வங்கதேசத்தில் பாயும் இந்த ஆற்றில், டாக்கா நகரைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 4500 டன்கள் அளவிற்குத் திடக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இருப்பினும் இந்த ஆற்று நீரைத்தான் இங்கு வாழும் மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள் என்பது கொடுமையான தாகும்.

5.    யமுனை ஆறு-இந்தியாவின் பல வடமாநிலங்கள் வழியாகப் பாயும் இந்த ஆறு 5 கோடியே 70 இலட்சம் மக்களின் நீர்த் தேவையை நிறைவு செய்கிறது.

தலைநகர் தில்லியின் 70 விழுக்காடு குடிநீர் இவ்வாற்றில் இருந்துதான் எடுக்கப்படு கிறது. கங்கை நதியை அடுத்து அதிக அளவில் மாசுபடிந்த ஆறு இதுவே ஆகும்.

6.    ஜோர்டான் நதி (இசுரேல்)-இந்த ஆறு மேற்காசியப் பகுதியில் தொடங்கி இறந்த கடல் (Dead Sea) பகுதி யைச் சென்றடைகிறது. ஏசுநாதருக்கு புனிதநீரா டல் இந்த ஆற்றில்தான் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் உலகிலேயே அதிகளவில் மாசு படிந்த ஆறுகளில் இதுவும் ஒன்று என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

7.    மஞ்சள் ஆறு - மக்கள் சீனத்தில் பாயும் இந்த ஆறு உலகின் ஆறாவது பெரிய ஆறாகும். சீன நாகரி கத்தின் நாகரிகத் தொட்டில் என்றழைக்கப்படுகிற இந்த ஆற்று நீரின் மூன்றில் ஒரு பகுதி பயன் படுத்த முடியாத அளவில் உள்ளது.

8.    மரிலா ஆறு-பிலிப்பைன்சு தலைநகர் மணிலாவில் பாயும் இந்த ஆறு உலகிலேயே அழுக்குப்படிந்த ஆறுகளில் ஒன்றாகும்.

9.    சர்னோ ஆறு-இத்தாலியில் பாயும் சர்னோ ஆறு அய்ரோப்பிய நதிகளிலேயே அதிகளவில் மாசு படிந்த ஆறாகக் கருதப்படுகிறது. வேளாண், தொழில் கழிவுகள் இந்த ஆற்றில் கொட்டப்படுகின்றன.

10.   மிசிசிபி ஆறு-அமெரிக்காவில் பாயும் இந்த ஆற்றில் 1 கோடியே 27 லட்சம் பவுண்ட் அளவிற்கு நச்சுப் பொருட்களும், வேதிப்பொருட்களும் கொட்டப்படுகின்றன என்று 2010இல் நடத்தப்பட்ட ஆய்வு தெரி விக்கிறது.

இவ்வாறாக, தொழில்கள், நகரங்கள், நாகரிகங்கள் வளர்ந்து வருகின்றன என்ற போர்வையில் உலகின் அனைத்து நீர்நிலைகளும் முதலாளித்துவத்தின் கொள்ளைப் இலாபத்திற்காக மாசுபடுத்தப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாகும்.

இதன் காரணமாக, நாள் தோறும் உலகில் 14000 பேர் இறக்கிறார்கள். இந்தி யாவில் 580 பேர் நாள்தோறும் இறக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

உலக வங்கி பல நதிகளை மேம்படுத்துவதற்காக நிதியை வழங்கும் போது குறிப்பிடுகின்ற ஒரே விதி என்னவென்றால், நீர் வளத்தைத் தனியார் மயமாக்குங்கள் என்பதே ஆகும்.

இந்தியாவில் இன்றைக்கு ஏறக்குறைய உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் நீரைக் கலனில் அடைத்தும், புட்டியில் அளித்தும் பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை இலாபமாகப் பெற்ற வருகின்றன.

தமிழ் நாட்டில் பசுமைத் தீர்ப்பாயத்தால் இனங்காணப்பட்ட குடிநீர் விற்கும் நிறுவனங்கள் 300க்கு மேற்பட்ட தாகும். பெரும்பாலான நிறுவனங்கள் தரமற்றக் குடிநீரை மக்களுக்கு அதிக விலைக்கு விற்று ஏமாற்றுகின்றன. அரசு உரிய சட்டங்களை இயற்றி இந்த நீர் வணி கர்களின்-மேல் கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று தீர்ப்பாயங்கள், உயர்நீதி, உச்சநீதிமன்றங்கள் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளன.

அமெரிக்க நாட்டின் கொக்கோ கோலா நிறு வனத்தால் நடத்தப்படும் கின்லே, அக்வாபினா போன்ற நிறுவனங்கள் நாள்தோறும் பல நூறு கோடி ரூபாய் களைத் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் எடுத்துச் செல்கின்றன.

இப்போது டாட்டா நிறுவனமும் குடிநீர் விற் பனைச் சந்தையில் இறங்கியுள்ளது. நடுவண் அரசின் இரயில் குடிநீரும், தமிழ்நாட்டின் அம்மா குடிநீரும் இந்தத் தண்ணீர் சந்தையில் போட்டியிடுகின்றன.

மானுடத்தின் அடிப்படை உரிமையான நீர் வழங்கலை வணிகமாக மாற்றுவதை நடுவண், மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு தடையற்ற முறையில், வகையில் நிலத்தடி நீரைச் சுரண்டி வணிகம் செய்வதை எந்தச் சட்டமும் இன் னும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை.

இச்சூழலில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் சரியான முறையில் புதிய தொழில் நுட்பங்களோடு நடைமுறைப்படுத்தினால் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதைப் பல வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இறந்து வருகிற நீர் நிலைகளையும், ஊருணிகளையும் பாதுகாத்து அவற்றில் மழைநீரைப் பெருமளவில் சேகரிக்கலாம் என்றும், கடலில் வீணாகக் கலப்பதையும் தடுக்கலாம் என்றும் இவ்வறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் நீர் தொடர்பான மேலாண்மையைச் செய்வதற்குப் பல துறைகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. பொதுப்பணித்துறை, நீர்வள அமைப்பு, வேளாண் பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் எனப் பல அமைப்புகள் இருப்ப தால் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைக் கொள்கையை வடிவமைப்பதற்குப் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

 மழை நீர் சேகரிப்புத் திட்டம் சென்னை மாநகரில் பல இடங்களில் உறுதியான முறையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தொடர் முயற்சிகளும் கண்காணிப்பு முறை யும் பின்பற்றப்படாத காரணத்தினால் இத்திட்டமும் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நகர்ப் புறத்தில் வீடுகட்டுவதற்குரிய நிலம் தொடர்பான விதி களையும், வழிகாட்டு நெறிகளையும் வழங்கினாலும் சென்னையைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உரிய நடவடிக்கை ளை மேற்கொள்வதில்லை.

சில ஆண்டுகளில் பருவ மழை விதிவிலக்காக அதிக அளவில் பெய்யும் போது, பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஏழை கள் வாழும் குடிசைப் பகுதிகளிலும், தாழ்வான பகுதி களிலும் புகுந்து பல நாள்கள் நீர் வடியாமல் இருப்ப தை அடிக்கடி காண்கிறோம்.

இதைப்பற்றிய ஒரு தெளிவான நீர்க்கொள்கையைப் பின்பற்றுகிற நிலை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இன்றளவும் உரு வாகவில்லை என்பதுதான் உண்மையாகும்.

மேலும், வீணாகின்ற நதி நீரையும், மழை நீரை யும் தேக்கி வைக்கும் புதிய திட்டங்களை நிறை வேற்றுவதில் நடுவண் அரசும், மாநில அரசுகளும் அக்கறை செலுத்தவில்லை. மாநிலங்களுக்கிடையே பாயும் நதிநீர் பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன.

மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நடுவண் அரசால் 1983இல் நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழு, மாநிலங்களுக்கிடையே பாயும் ஆற்று நீர் தொடர்பாகப் பல கருத்துகளை முன்மொழிந்துள்ளது.

குறிப்பாக, இக்குழுவின் நதிநீர் தொடர்பான சில பரிந்துரைகளில், மாநிலங்களுக்கு இடையேயானக் குழு (Inter-State Council) ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. இதன் பிறகுதான் நதிநீர்ச் சச்சரவு (W ater Dispute) என்பதற்குப் பதிலாக நதிகளிடையே நீர் சச்சரவு (Inter- River Water Dispute) என்று 1997ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு விரைந்து ஓராண் டிற்குள் தீர்வு காண வேண்டும் என்றும் சர்க்காரியா குழு பரிந்துரை செய்ததை, நடுவண் அரசு மூன் றாண்டுகள் என்று மாற்றியது.

இதுபோன்ற மிக மிகச் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே நடுவண் அரசு மேற்கொண்டதே ஒழிய மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் எந்தத் திட்டத்தையும் கடந்த பத்தாண்டுகளில் நடுவண் அரசு மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகுதான் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பினை 2013இல் அரசு ஆணையாக வெளியிட்டது. இது நதிநீர் பிரச்சினையில் நடுவண் அரசு கடைபிடிக்கும் மெத்தனப் போக்கிற்கு எடுத்துக் காட்டாகும்.

18, 19-ஆம் நூற்றாண்டுகளில் பெருமளவில் பஞ் சங்கள் தோன்றி இந்தியாவில் பல இலட்சக்கணக்கான மக்கள் இறந்தது நமக்கு இயற்கை அறிவிக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இயற் கையின் போக்குகள் மாறிவருகின்ற நேரத்தில் குறிப் பாக, பருவ மழை தவறுகிற நிலை தொடர்கிற இக்காலக் கட்டத்தில், நீர் வளத்தை மேலாண்மை செய்வதற்கு மாநில அரசுகள் தனித்துறையை உருவாக்க வேண்டும்.

மேலும், நடுவண் அரசு தென்னக நதிகளையாவது இணைக்கும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பாசனத் தேவைக்கான நீரும், மின் உற்பத்தித் திட்டத் தேவைக்கான நீரும், குடிநீர் தேவைக்கான நீரும், பெருகி வருகிற மக்களின் நீர்த் தேவைகளுக்காகத் திட்டமிட்டுச் சரிசெய்ய முடியும் என்று பல வல்லுநர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

செவிடன் காதில் ஊதிய சங்கு போல நடுவண் அரசும், நடுவண் அரசின் திட்டக்குழுவும், மாநில அரசு களும் இயங்கி வருவது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்; கொடுமையாகும். நீர் வழங்குவது மானுட உரிமையாகும்.

13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுபி கவிஞர் முகமது ஸாபிஸ்டரி, ‘ஒரு துளி நீரின் இதயத் தில் ஊடுருவினால் நூற்றுக்கணக்கான கடல்கள் வெள்ளமாகப் பொங்கி எழும் (Penetrate the heart of just one drop of water, and you will be flooded by a hundred oceans - Sufi Poet Mahmud Shabistari)’ என்று நீர் மேலாண்மையைப் பற்றிக் குறித்துள்ளார். இதே கருத்தைத்தான் வள்ளுவர் அன்றே,விசும்பின் துளிவீழினல்லால் மற்றுஆங்கேபசும்புல் தலைகாண்பு அரிது – குறள்என்று அழகுற குறித்தார்.

எனவே நீர்ப் பற்றாக்குறையால் மூன்றாம் உலகப் போர் நடந்தால் அது நீருக் காகத்தான் நிகழும் என்று சில எழுத்தாளர்கள் குறிப் பிடுகின்றனர். இது நடக்குமோ, நடக்காதோ என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது.

ஆனால் நீருக் கென்று போர் மூளாமலிருக்க ஆக்கப்பூர்வமான நீர் மேலாண்மைத் திட்டங்கள் வழியாக நீர்வளத்தையும், நிலவளத்தையும் குடிநீர் வளத்தையும் பெருக்கலாம்; பெருக்க முடியும் என்பதே உண்மை.

(தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினையும், நீர் சேகரிப்பு முறையும் என்ற கருத்தரங்கில் கட்டுரையாளர் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Pin It