இந்தியா வளமான ஒரு துணைக் கண்டம்; ஆனால் மக்கள் வளமாக இல்லை.

தமிழ்நாடு இயற்கைவளம் மிகுந்த நாடு; இன்று இயற்கை அழகை இழந்த நாடு.

நெல்லும் வாழையும் கரும்பும், கமுகும் தென்னை யும்; தினையும் சாமையும், வரகும், சோளமும், எள்ளும், கொத்துமல்லியும், நிலக்கடலையும் பருவத் துக்கு ஏற்ப விளைந்த நாடு, தமிழ்நாடு.

ஆனாலும் அன்றும் பெரும்பரப்பு நிலம் வானம் பார்த்த நிலங்களே.

தென்மேற்குப் பருவமழை நிரம்பவும் பெய்த காலம் 50, 60 ஆண்டுகளுக்கு முன் இருந்தது; இப்போது இல்லை. வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் எப்போமே கிடைத்ததில்லை.

தாமிரபரணி, வைகை, பொருநை, காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் மக்களும் மாடுகளும் நீந்தும் காட்சி எப்போதோ மறைந்துவிட்டது.

இவற்றை ஊகித்து அறிந்த நம் தமிழரசர்களும், குறுநில மன்னர்களும், தனியாரும் எல்லாப் பகுதி களிலும் சிறிய, பெரிய ஏரிகளைத் தோண்டினர்; கற் களை அடுக்கிக் கரைகளை அமைத்தனர்; கரைகள் கரையாமல் இருக்க, இலுப்பை, பனை, புளி முதலான மரங்களை கரைகளின் வெளிச்சரிவில் வளர்த்தனர்.

ஊர் மாடுகளும் ஆடுகளும் வெயிலுக்கு அண்ட வும், அசைபோடவும் ஊருக்கு மேற்கிலும் தெற்கிலும் அடர்த்தியான தோப்புகளை வளர்த்தனர். இவையெல் லாம் பிற்காலத்தில், மக்களாலும் மக்கள் தலைவர்கள் என்பவர்களாலும் திருடப்பட்டு - அழிக்கப்பட்டுவிட்டன.

ஆனி, ஆடியில் பருவ மழை வருவதற்கு முன்னரே ஏரிகளுக்கு நீர்வரும் வரத்து வாய்க்கால்களை சித்திரை, வைகாசியில் ஊரார் கூடி விளம்பிவிடுவார்கள்,

சிறிய, பெரிய ஏரிகள் அரசுப் பொதுப்பணித் துறை யினரால், தனியார் ஒப்பந்த முறையில் அவ்வப்போது தூர் வாரப்படும். எத்தனை அடி ஆழம் வெட்ட வேண் டுமோ அத்தனை அடி ஆழம் வெட்டி, மண்ணைச் சுமந்து கரையின் சரிவில் கொட்டுவார்கள்; பெரிதும், நிலத்துக்கு வண்டல் மண் உரமாக ஊரார் எடுத்துச் செல்வர்,

இப்படி ஏரிகள் இருப்பினும், பல ஊர்களில் குடிநீர்க் கிணறுகள், பாசனக் கிணறுகள் தோண்டப்பட்டன. ஆள் ஏற்றம், கமலை இறைப்பு - பிறகு எண்ணெயில் இயங்கும் நீர் இறைக்கும் பொறி, மின் இயங்கிப் பொறி என, 1960-70கள் வரை செழிப்பாகவே இருந்தன. போதிய மின்வசதி பல ஆண்டுகளாக இல்லை; இரண்டுங்கெட்டான் நேரத்தில் மின்சாரம் வரும்.

இன்று இவையெல்லாம் பழங்கதைகள் ஆகிவிட்டன.

ஏன்? ஏன்?

வெள்ளையன் காலத்திலும் அரசுக் கணக்கர்கள் இருந்தார்கள்; ஊராள்வோர் இருந்தார்கள். இவர்கள் கையெழுத்துப் போடவும் கணக்குப்பதியவும், நிலம் அளக்கவும் தெரிந்திருந்தால் போதும்.

பொதுத்துறைக் கண்காணிப்பாளர்கள், பொறியா ளர்கள் எல்லோரும் - அன்று பார்ப்பனர்களே. ஒரு தடவையாவது ஆண்டுதோறும் அவர்கள் ஏரிகளைப் பார்வையிடுவார்கள். இளநீர், நெய்யுடன் சோறு; காய் கறி, பச்சைக் கடலை கையூட்டுப் போல் பெறுவார்கள். நெடுஞ்சாலையிலிருந்து சவாரி மாட்டுவண்டியில் ஊருக்குள் அழைத்து வந்தால் போதும்.

பிறகு மிதிவண்டி வந்தது, பேருந்து, சீருந்து - மேலதிகாரிகளுக்குத் தனித்தனி மகிழுந்து இவை யெல்லாம் வந்து, இன்று மக்கள் வரிப்பணத்தில் இவை தரப்பட்டாலும்; ஒப்பந்தக்காரர் - கீழ் அதிகாரிகள் - தலைமை அதிகாரி - துறை அமைச்சர் - தலைமை அமைச்சர் என எல்லோருக்கும் பங்கு கிடைக்கிற தன் மையில், தூர் வார - வாய்க்கால் விளம்ப - மரம் நட ஒதுக்கப்பட்ட திட்டப் பணத்தில் சரிபாதிப்பங்கு கைக் கூலியாகப் போய்விடும் பழக்கம், தமிழ்நாட்டில் 1969 க்குப் பிறகு தங்குதடையின்றி நுழைந்துவிட்டது. அதி காரிகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும் இதில் மட்டும் பெரிய வேறுபாடு இல்லை.

திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆண்டாலும் இதில் மட்டும் கூட்டாகவும், தனித்தனியாகவும் ஒப்பந்த வேலையைச் செய்யாமலே மக்கள் பணத்தைச் சூறை யாடுவது இன்று நன்றாகக் தொடருகிறது.

போதாக்குறைக்கு, மண்ணில் போட்டால் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள்; இருஉருளை வண்டிகள், பேருந்து கள், மகிழுந்துகள், சரக்கு உந்துகள் வெளிவிடும் அளவு கடந்த கரிக்காற்று (கார்பன்-டை-ஆக்சைடு) முதலானவை சுற்றுச்சூழலையும், காற்று மண்டலத்தையும் கெடுத்து விட்டன. கரிக்காற்றை வடிகட்டப் போதிய மரங்கள் இல்லை; தோப்புகள் இல்லை, காற்றுமண்டலம் வெப்ப மாகிவிட்டது.

கரிக்காற்றை வெளிவிடும் மகிழுந்துகள், பேருந்துகள், சுமை உந்துகள் செய்வதற்கான -இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ (Detroit) என்கிற பேருடன் அயல்நாட்டு உந்து உருவாக்கத் தொழிற்சாலைகள் எண்ணற்ற வை தமிழகத்தில் தொடங்கப்படத் தமிழக அரசு பெரும் பரப்பான வேளாண் இடங்களைத் தந்துள்ளது.

இத்தொழிற்சாலைகளில் சுமை உந்து, சரக்கு உந்து, மகிழுந்து ஓட்டுகிற - கழுவுகிற - துடைக்கிற - வேலைகளில்தான் தமிழர்கள் அதிக எண்ணிக்கை யில் வேலை பெற்றுள்ளனர்.

பொறிகளின் பகுதிகளைப் பூட்டுகிற (Assembling) பணிகளில் மிகச் சில தமிழர்களே பணிபுரிகின்றனர். நிற்க.

ஓரளவு படித்தவர்கள் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, வேளாண்மை இவற்றைச் செய்வதை இழிதொழில் களாகக் கருதுகிறார்கள். கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலம் இல்லை.

இருந்த சிறு சிறு வேளாண் நிலங்களையும் மழை யின்றி விளையாததாலும், விளைவிக்கிற பண்டத் துக்கு உரிய விலை கிடைக்காததாலும், பயிர்த் தொழில் பாழாகிவிட்டது.

சிறு, குறு நிலஉடைமைக்காரர்களில் பலர், கடந்த 40 ஆண்டுகளில் நல்ல மதுக்குடியர்களாக மாறிக் குடும்பத்தையும் சீரழித்து, உழைக்கவும் உடம்பில் தெம்பின்றி ஊதாரிகளாக எண்ணற்ற தமிழர்கள் மாறிவிட்டனர்.

வடமாநிலங்களில் பஞ்சாபைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் சாராயத் தொழிற்சாலைகள் குறைவு; ஆனால் தென்னாட்டில் இவை அதிகம்; தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவையெல்லாம் ஆளுங்கட்சி, எதிர்க் கட்சிக்காரர்களுக்குச் சொந்தம்.

இவ்வளவும் வெறும் ஒப்பாரியா? இல்லை.

உலக அளவில் எங்கெல்லாம் தண்ணீர்த் தட்டுப் பாடு வரும் - எப்போது வரும் என்பதை ஆராய்ச்சி செய்கிற நிறுவனத்தினர், மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தனர்.

உலக அளவில், இன்னும் 50 ஆண்டுகளில் - குடிக்கவும் குளிக்கவும் தண்ணீரின்றித் தவிக்கப் போகிற முதலாவது பகுதி பெரம்பலூர் மாவட்டம்; இரண்டாவது பகுதி நாமக்கல் மாவட்டம்; மூன் றாவது பகுதி அரியலூர் மாவட்டம் எனத் துலாம் பரமாக அறிவித்துவிட்டனர்.

“மகனே பொறு; மணவாளன் வருவான்” என்று கூறுவதுபோல, நீரியல்-பொறியியல் பேரறிஞர்களைக் கொண்ட குழுவினரை வைத்து, “கங்கை-காவிரி இணைப்புத் திட்டம்” ஒன்றை இந்திய அரசினரும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், ஏ.சி. காமராசு போன்ற பொறியாளர்களும் 1970க்குப் பின்னர் பரபரப்பாக அறிவித்தனர்.

3000 கிலோ மீட்டருக்கு வடக்கே தொடங்கி - பல மேடுகள், பள்ளத்தாக்குகள், மலைகள், பல மாநிலங் கள் இவற்றைக் கடந்து, கால்வாய் தோண்டித் தண்ணீர் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு வரமுடியா தது; கற்பனைக்கும் எட்டாதது; ஊரையும் உலகத்தையும் ஏமாற்றுவது; 40 ஆண்டுகள் காலம் ஆகக் கூடியது.

இந்நிலையில் அய்க்கிய நாடுகள் அவையின் வெப்ப அளவு குறித்த ஆய்வுக் குழுவினர் ((U.N. Climate Panel)) கடந்த 30.3.2014 திங்கள்கிழமை அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

“இன்று உள்ள சராசரி தரை வெப்ப அளவு 1.8 டிகிரி செல்சியஸ் உயர நேரிட்டால், கி.பி.2100இல், இமாலய மலையில் படிந்துள்ள பனிப்பாறைகளில் 45 விழுக்காடு உருகி, நீராக மாறி கங்கையிலும் யமுனை யிலும் ஓடிவிடும்” என அறுதியிட்டுக் கூறியிருக் கிறார்கள்.

இப்படிப்பட்ட திசைநோக்கிய வெப்ப அளவு உயருவது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. “இது இந்தியாவுக் கான உணவுப் பொருள்களான நெல், சோளம் விளைச் சலை மிகவும் பாதிக்கும், அமெரிக்காவில் சோயா பீன்ஸ் விளைச்சலை மிகவும் பாதிக்கும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் (New Indian Express, 1.4.2014)

 “மேலும் தெற்கு ஆசியாவில் 70 விழுக்காடு நிலம் வறட்சிப் பகுதியாக ((prone to drought) மாறும்; சத்துக் குறைவானவர்களாக தெற்கு ஆசியாவில் 30 கோடிப் பேரும்; இந்தியாவில் 25 கோடிப் பேரும் பாதிப்புக்கு உள்ளாவர்” என்றும் மேலே கண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்பத்தாக்கத்தால், உலக உருண்டையின் தென் முனையிலும் (Antarctic), வடமுனையிலும் (Arctic) பனிப்பாறைகள் உருகி, நீராகக் கடல்களில் கலந்து வருகிறது என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். (“தினத் தந்தி”, 19.4.2014).

இப்போதே, 30 மாவட்டங்கள் உள்ள தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 7 அடிக்கும் கீழே போய்விட்டது; சேலம், கோவை, திண்டுக்கல் மாவட் டங்களில் 22 அடிக்கும் கீழே போய்விட்டது.

சேலம், ஆத்தூர், கோவில்பட்டி, வேலூர் முதலான நகரங்களில் வாரம் ஒருநாள் - 10 நாளில் ஒருநாள் நகராட்சிகள் குடிதண்ணீர் தருகின்றன.

இந்தியாவில் 2004-2005க்கும் 2011-2012க்கும் இடையில் 3.7 கோடிப் பேர் வேளாண் வேலைகளை விட்டுவிட்டு, வேறு வேலைகளுக்கு நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட்டார்கள்.

இந்தியாவில் இப்படி வேளாண்மை வேலையில் வீழ்ச்சி ஏற்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

1. எனவே, தமிழகத்தில் இருக்கிற நீர்ப்பிடிப்பு ஏரி களைப் போர்க்கால விசையில், மண்வாரும் பொறிகளை மட்டுமே வைத்து, ஓர் அய்ந்து ஆண்டுகளில் தூர் வார வேண்டும்; முழுக் கொள்ளளவில் நீரைத் தேக்கிட ஆவன செய்ய வேண்டும்.

2. ஏரிகள், குளங்களுக்கான நீர்வரத்து வழிகளை, மூன்றாண்டுக்கு ஒருமுறை ஊர் மராமத்துமற்று முறை, மற்றும் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் தூர்வாரித் தூய்மைப்படுத்த வேண்டும்.

3. தமிழ்நாட்டு ஆறுகளின் நீர் ஓட்டப்பாதைகள் மணல் திட்டுகளாகவும், மரக்காடுகளாகவும் உருவாகி விட்டன. மழையால் காட்டுவெள்ளம் வரும் போது நீரோட்டத்துக்கு வழியே இல்லை.

இவைகளைப் பெரிய இயந்திரங்களைக் கொண்டு உடனே அகற்ற வேண்டும். ஆறுகளில் 10 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் சிறிய சிறிய தடுப்பு அணைகளைக் கட்ட வேண்டும்.

வேளாண்மையையும், கால்நடைகள் வளர்ப்பையும், மரங்கள் வளர்ப்பையும் காப்பாற்றாத தமிழ்நாட்டு அரசு, உண்மையில் மக்களுக்கு எதி ரான அரசே ஆகும்.

தமிழகம் இந்த ஈன நிலையிருப்பதைத் தமிழ்ப் பெருமக்களுக்கும் - வருங்கால இளைய தலைமுறை யினர்க்கும் புரிய வைப்போம், வாருங்கள்!

எல்லாத் தமிழரும் கட்சி - பகுதி - கருத்து வேறு பாடின்றித் தண்ணீருக்குத் தமிழரெல்லாம் தவிப்பதை எப்படியேனும் தவிர்ப்போம்; வாருங்கள்! வாருங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It