ஆங்கில நாளேடுகள் என்ன சொல்கின்றன?

டெக்கான் கிரானிக்கல் (11-10-2019)

கோவில் குருக்களுக்கு ஏமாற்றம்

சென்னை மீனம்பாக்கம் பழைய வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய சீனக் குடியரசின் தலைவர் சிங்பிங் அவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கே அவருக்குப் பூர்ணகும்ப மரியாதை அளித்து வரவேற்கக் காத்திருந்த கோவில் குருக்கள் சங்கடமான நிலைமையை எதிர்கொள்ள நேரிட்டதைப் பற்றி கட்டுரையில் ஒருவர் கருத்துக் கூறியுள்ளார்.

அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவான பெரும் வரவேற்பில் இசை, நாட்டியம் முதலான கலை நிகழ்வுகளுடன் இந்தச் சடங்கும் (பூர்ணகும்ப மரியாதை) சேர்க்கப்பட்டிருந்தது. வானூர்தியிலிருந்து இறங்கியதும் அவர் அருகே கிண்டியில் உள்ள ஐசிசி கிராண்ட் சோழா விடுதிக்குச் செல்ல வேண்டும். அவருக்கான சிறப்பு மகிழுந்தில் அவர் ஏறுவதற்கு முன்னதாக வரவேற்கக் காத்திருக்கும் கலைக் குழுவினரைப் பாராட்டும் விதமாக அவர்கள் முன்பு நின்று சென்றார். குருக்கள் நின்றிருந்த பகுதியில் அவர் நிற்காமல் மகிழுந்தை நோக்கி நடந்து, அதில் ஏறிச் சென்றுவிட்டார்.

சீன அதிபருக்கு வரவேற்பு நிகழ்வுகளை விவரித்துக் கூறிய சீன அதிகாரிகள் குருக்களின் பூர்ண கும்ப மரியாதையை மறந்திருக்கலாம். அல்லது அதை விளக்கிச் சொல்வது கடினமானதாகத் தோன்றியிருக்கலாம்.

அர்ச்சகர்களின் முகத்தில் பெரும் ஏமாற்றம் காணப்பட்டது. மரியாதையை அளிக்க முடியாமல் அவற்றைத் திரும்ப எடுத்துச் சென்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பு (12-10-2019)

வானூர்தி நிலையத்தில் சீன அதிபர் சிங்பிங் அவர்களை வரவேற்க கபாலீசுவரர் கோவிலின் தலைமைக் குருக்கள் உள்ளிட்ட 5 குருக்கள் காத்திருந்தனர். சீன அதிபருக்குப் பூர்ணகும்ப மரியாதை அளிப்பது அவர்களின் திட்டம். வானூர்தியிலிருந்து இறங்கி சிவப்புக் கம்பள விரிப்பில் நடந்து வந்த சீன அதிபர் அவரை வரவேற்க அங்கே நின்று கொண்டிருந்த ஒவ்வொரு கலைக் குழுவினரையும் நின்று பார்த்துச் சென்றார். மந்திரம் ஓதி, பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட ஏதுவாக சீன அதிபர் அங்கே நிற்கவில்லை. அவர் அந்த மரியாதையை ஏற்கவில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்; பூர்ணகும்ப மரியாதையை ஏற்றுக் கொள்வது பற்றி சீன அதிபருக்குச் சீன அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றும் குறை கூறுகிறார்கள்.

தி இந்து சென்னைப் பதிப்பு (12.10.2019)

அங்கே கபாலீசுவரர் கோவில் குருக்கள் பூர்ண கும்ப மரியாதை அளிக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீன அதிபரின் மெய்க்காவலர்கள் அவரை அவருடைய மகிழுந்தை நோக்கி விரைந்து நடத்திச் சென்று விட்டார்கள். குருக்கள்களுக்கு ஏமாற்றம் நேரிட்டது.

தமிழாக்கம்: கலசம்

Pin It