கர்மபலன் என்றால் மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் காரியங் களுக்கும் பேசும் விஷயங்களுக்கும் நினைக்கும் எண்ணங்களுக்கும் தக்க பலனை அவரவர் இறந்த பிறகு ‘மேல் லோகத்தில்’ கடவுள் முன்னிலையில் அனுபவிப்பதென்றும், அந்த அனுபவம் மோக்ஷம் நரகம் என்கிற இடங்களில் என்றும், சில சமயங்களில் அதற்கு மீறி அடுத்த ஜென்மம் எடுத்து அதில் அனுபவிக்க வேண்டும் என்றும், மனிதன் அதற்குத் தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குப் பணம் கொடுத்து அவர்கள் சொல்லுகிறபடி கேட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்றும், நமது பார்ப்ப னர்கள் அனேக ஆதாரங்கள் எழுதி வைத்துக்கொண்டு தங்கள் பிழைப்புக்கு அதையும் ஒரு வழியாக உபயோகித்து வருகிறார்கள்.

PEERIYAR 350ஆனால், நாம் கர்மபலன் என்பதை அவ்விதத்தில் பொருள் கொள்வ தில்லை. கர்மபலன் என்றால் வேலையின் கூலியென்று தான் நினைக்கி றோம். கர்மம் என்றால் வேலை, பலன் என்றால் அதனால் நாமடையும் பிரதிப் பிரயோஜனம்; இதை நாம் கூலியென்று சொல்லுகிறோம். அந்தக் கூலியை மேல் லோகத்தில் பெறுவதென்பதும், அங்கு பட்டு மெத்தை, கட்டில், நாற்காலி, பங்கா, அழகிய பெண்கள் முதலிய சுகானந்தமடையத் தக்கதான ஒரு இடம் மோக்ஷம் என்று இருக்கிறதாகவோ அல்லது கல், முள், தேள், பாம்பு, மலம், புழு முதலிய கஷ்டமனுபவிக்கத்தக்க சாதனங்களோடு நரகம் என்று ஒரு ஸ்தானமிருக்கிறதாகவோ புத்தியிருக்கிறவர்களும் பார்ப்பனர் மாய்கையில் சிக்காதவர்களும் கொஞ்சமும் நினைக்க மாட்டார் கள். ஆனால் கர்மபலன் என்பதற்கு நாம் எப்படிப் பொருள் கொள்ளு கிறோமென்றால் நாம் எண்ணிய-பேசிய - செய்த நமது எண்ணம் - பேச்சு - காரியம் ஆகிய இவற்றின் பலன்களை நாமே நேரில் இந்த உலகத்தி லேயே நேருக்கு நேராய் அனுபவிக்கிறோம் என்பதுதான். இந்த முடிவைக் கொண்டே இன்று “சென்னையில் கர்மபலன்” என்கிற தலையங்கம் கொண்டு எழுதத் தொடங்கினோம்.

சென்னையில் நமது பார்ப்பனர் மகாத்மாவின் பெயரைக் கொண்டும், தேசத்திற்காக உண்மையில் தியாகம் செய்தும் ஜெயிலுக்கு போயும் கஷ்டப் பட்டவர்களின் பெயரைக் கொண்டும், காங்கிரஸ் என்கிற பொய்மான் பெயரைக் கொண்டும் சுயராஜ்யம் என்கிற மாய்கையைக் கொண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி தாங்கள் ஆதிக்கம் பெற பலவித சூழ்ச்சிகள் செய்து வந்தார்கள் - வருகிறார்கள் - வரப்போகிறார்கள் என்பது நாடறிந்த விஷ யம். இதற்காக அவர்கள் இந்த இரண்டு மூன்று வருஷங்களாய் எண்ணிய கெட்ட எண்ணங்களும், பேசிய பொய் வார்த்தைகளும், புன்மொழிகளும், செய்த அக்கிரமங்களும் ஒரு அளவுக்கடங்கியதல்ல. உதாரணமாக தாங் கள் காந்தி சீடர்களென்றும், தங்களுக்குக் கொடுக்கும் ஓட்டு மகாத்மா காந்திக்கு கொடுப்பதென்றும், பார்ப்பனரல்லாத கக்ஷிக்காரரான ஜஸ்டிஸ் கக்ஷியாருக்குக் கொடுக்கும் ஓட்டுகள் தேசத் துரோகிகளுக்கும் சுயநலக் காரர்களுக்கும் கொடுக்கும் ஓட்டென்றும் சொன்ன தோடல்லாமல், பார்ப் பனரல்லாத கக்ஷியார் கூட்டும் கூட்டங்களில் காலிகளை விட்டு கல்லெறியச் சொல்லு வதும் கூட்டத்தைக் கலைக்கச் செய்வதும், பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர்களை அவர்கள் வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டு யோக்கியப் பொறுப்பில்லாமல் துர்பாஷையால் திட்டச் சொல்வதும் பார்ப் பனரல்லாத தேச பக்தர்களான ஆரியா முதலியவர்களை ஆட்களை விட்டு அடிக்கச் சொல்வதும், தேர்தல் சமயங்களில் தேர்தல் ஸ்தானங்களில் பெரிய மனிதர்களையும் ஸ்திரீகளையும் துர்பாஷையாகப் பேசியும் காலித்தனமாய் நடத்தும் பல காரியங்களைச் செய்த விஷயம் சென்ற சென்னை முனிசிபல் தேர்தல் சம்பந்தமாய் நியாய ஸ்தலத்திற்கு சென்ற பல வியவகாரங்களி லிருந்தும் அவை உண்மைதானா அல்லவா என்பதை கடைசி வியவகார மாகிய ஸ்ரீமான் ஆரியா அவர்களை அடித்ததாக ஏற்பட்ட வியவகாரம் முடிந்த விதத்திலிருந்தும் அறிந்திருக்கலாம்.

தேர்தல்கள்தான் இப்படி என்றால் தேர்தல்களுக்கு முன்பாக ஒத்து ழையாமை இருந்த காலத்திலும் சக்ரவர்த்தித் திருமகனார் சென்னைக்கு வந்த காலத்தில் அவரைப் பார்க்கச் சென்ற பார்ப்பனரல்லாத தலைவர்களைத் திட்டியும் அடித்தும் துன்புறுத்திய தோடல்லாமல் அவர்கள் ஏறிச் சென்ற மோட்டார் வண்டி முதலிய வாகனங்களின் மேல் கல் எறிந்து காயப் படுத்தியும் சேதப்படுத்தியும் அவர்களை ஓடி ஒளியும்படி செய்ததையும் பார்ப்பனரல்லாதாரின் மாபெருந்தலைவரான சர்.பி. தியாகராய பெருமானின் வீட்டுக்குக் கூட சில காலிகளை விட்டு அவர் வீட்டு ஜன்னல் கதவு கண்ணாடி முதலியவைகளை உடைத்தும் அவரைக் கொல்ல ஏற்பாடு செய்தும் அவர் பத்தினியார் வந்து இக்காலிகளின் காலில் விழுந்து தனக்கு மாங்கல்லியப் பிச்சை கொடுக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டும் அப் பாவிகளுக்கு மனமிளகாமல் துர்பாஷையால் அவ்வம்மையாரைத் திட்டி உள்ளே நுழையப் பிரயத்தனப்பட்டும் அங்குள்ளவர்கள் அப் பெரியாரை ஒளியச் செய்யும்படியான அவ்வளவு அக்கிரமங்கள் செய்யச் செய்ததையும், சென்ற வாரத்திலும் பார்ப்பனரல்லாத தலைவரான காலஞ் சென்ற டாக்டர் நாயர் பெருமான் ஞாபக தினத்தைக் கொண்டாடும் முக்கிய சம்பவமான ஒரு பெரிய கூட்டத்தில் கலகம் செய்யச் செய்தும் பார்ப்பனரல்லாத தேசபக்தர்கள் தலைமீது கல் போட்டு காயப்படுத்தியும் கூட்டத்தைக் கலைக்கச் சூழ்ச்சி செய்தும் மற்றும் எவ்வளவோ கொடுமைகள் செய்ததை யும் உலகமறிந்திருக்கும். இப் பார்ப்பனர்கள் செய்வித்த இவ்வித அக்கிரமங் களைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் மகாத்மா காந்தியும் முறையே தீர்மான மூலமாகவும் ‘எங் இந்தியா’ பத்திரிகை மூலமாகவும் கண்டித்திருப் பதும் உலகமறிந்த விஷயம். இவைகள் மாத்திரமல்லாமல் வெளியூர் களிலும் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களையும் பெரிய மனிதர்களையும் திட்டுவதற்கு ஏவி விடுவதும் அவர்கள் பேரில் பொய்யும் புளுகும் சொல்லச் செய்து கலக முண்டாக் குவதுமான பல கொடுமைகளைச் செய்து வருவதும், தங்கள் கைவசம் உள்ள பத்திரிகைகளைக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கும் அவர்களு டைய கட்சிக்கும் அக்கட்சித் தலைவர்களுக்கும் நமது பார்ப்பனர் செய்து வரும் கொடுமைகளும் அளவிடக் கூடியதல்ல.

இவ்வளவு கஷ்டங்களையும் கொடுமைகளையும் அபாயங்களையும் சகித்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் சும்மாயிருப்பதாயிருந்தாலும் வேலை செய்தவன் கூலி பெறாமல் போக இயற்கைதேவி சம்மதிப்பாளா? ஒரு சமயம் இயற்கைதேவி சம்மதித்தாலும் உலகம் பொறுக்குமா?   ஒருக்காலும் பொறுக் காது. ஆகையால் உண்மையான கூலி அடையாவிட்டாலும் அடையக்கூடிய நிலைமையிலாவது இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது. அதுவுமில்லாமல் வேலை செய்தவர்களே கூலி அடைகிறோம் என்றாவது சொல்லிக் கொள்ளத்தக்க சம்பவம் ஏற்படுகிறது. உதாரணமாக ‘சுதேச மித்திரன்’ என்னும் பார்ப்பன மித்திரன் பத்திராதிபரான ஸ்ரீமான் எ. ரெங்க சாமி அய்யங்கார் ஒரு கூட்டத்தில் பேசும் போது அவர் பேசிய பொய்க் கூற்றை வெளிப்படுத்த சிலர் அவரைக் கேள்வி கேட்டதாகவும், அதற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பதில் சொல்லாமல் போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கூப் பிட்டு “இதோ கேள்வி கேழ்க்கிறானே, அவனை அரஸ்ட் செய்” என்று கட்டளை இட்டதாகவும், அந்த இன்ஸ்பெக்டர் “அவர்கள் கலகம் செய்தால் அரஸ்ட் செய்யலாம், நீர் பேசியதிலிருக்கும் புரட்டுகளை வெளியாக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணங்கொண்டும் பொதுஜன நன்மையை உத்தேசித்தும் கேள்வி கேட்டால் அதற்காக எப்படி அரஸ்ட் செய்வது?’’ என்று கேட்டதாகவும், அதன் பேரில் ஸ்ரீமான் அய்யங்கார் வெட்கித் தலை குனிந்ததாகவும், பிறகு தங்களது வஜ்ஜிராயுதமாகிய பத்திரிகையில் போலீஸாரைப் பற்றி தூஷித்தெழுதி வருவதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் ஒரு கூட்டத்தில் பேசும்போது “காங்கிரசில் இப்போது காந்தியிருக்கிறாரா?” வென்று ஒருவர் கேட்க, அவரைக் (கேட்ட வரை) காலியென்று சொல்லிப் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைத் தூஷித்த தாகவும் அது சமயம் பக்கத்திலிருந்த ஒருவர் காலியென்று சொன்னதையும் தூஷித்த கெட்ட வார்த்தையையும் வாபீசு வாங்கிக்கொள்ளும்படி கேட்ட தாகவும், அதற்கு ஸ்ரீமான் ஆச்சாரியார் சம்மதிக்காமல் மேலும் மேலும் அப்படியே பேசினதாகவும், இந்த வார்த்தைகளைப் பின்வாங்கிக் கொள்ளும் படி தன் பக்கத்தில் வந்து சொல்லச் சொன்ன ஆளைப் பிடித்து ஸ்ரீமான் ஆச்சாரியார் தள்ளியதாகவும் அந்த ஆள் ஆச்சாரியாரின் தாடி யைப் பிடித்து ஆட்டினதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச் சாரியாருக்கும் எ.ரெங்கசாமி அய்யங்காருக்கும் ஏற்பட்ட இச் சம்பவத்தைக் குறித்து நாம் வருந்துகிறோம். கூட்டங்களில் இம்மாதிரி நடந்து கொண்டவர்களையும் நாம் அழுத்தமாகக் கண்டிக்கிறோம். ஆனால் நமது வருத்தமும் நமது கண்டிப்பும் ஒரு மனிதன் தான் செய்த கருமத்திற்காக அனுபவிக்கும் பலனைத் தடுக்க முடியுமாவென்பது நமக்குச் சந்தேகமாகத்தானிருக்கிறது.

ஆனாலும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் பார்ப்பன ரல்லாதார் உள்ள பொதுக் கூட்டங்களில் நின்று பேசுவது கொஞ்சமும் சரி யல்ல வென்பதுதான் நமது அபிப்பிராயம் . அப்படிப் பேசுகிற கூட்டங்களில் கலகம் நடப்பது நியாய விரோதமானாலும் சுபாவத்திற்கு விரோதமென்று சொல்ல வழியில்லை. ஏனெனில் “ஒரு பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பார்ப்பனரல்லாத குழந்தை ஒருவேளை பார்த்து விட்டால் நான் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன்” என்று சொன்னவரும், “பிறப்பில் பார்ப்பனனும் சூத்திரனும் சமம் என்று சொன்னால் நான் காங்கிர சிலேயே இருக்க மாட்டேன்” என்று சொல்லிக் காங்கிரசை விட்டு வெளி யில் போனவரும், கல்பாத்தி ரோட்டில் பார்ப்பனரல்லாதாரை நடக்க விடும் படிக் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவருமான நமது எம்.கே. ஆச்சாரியார் எந்த முகத்தைக் கொண்டு பார்ப்பனரல்லாதார் கூடி யுள்ள கூட்டங்களில் பேசத் துணிகிறார் என்பதும் எந்த முறையில் பார்ப் பனரல்லாதார் ஓட்டுக்களை தனக்குப் போடும்படி கேட்கிறாரென்பதும் நமக்கு விளங்கவில்லை. அதோடுகூட பார்ப்பனரல்லாதாரில் பலர் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் பின் சென்று ஆச்சாரியாருக்கு ஓட்டுவாங்கிக் கொடுக்க எப்படிச் சம்மதிக்கிறார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல் லாதார் பார்த்த ஆகாரம் சாப்பிடுவது மாத்திரம் பெரிய தோஷமானால் அவர்கள் ஓட்டுக்களை வாங்கிப் பதவி பெற்றுப் பணம் சம்பாதித்து வயிறு வளர்ப்பது மாத்திரம் நமது பார்ப்பனர்களுக்கு மோக்ஷம் போலும்.

இம்மாதிரியான அக்கிரமங்களின் பலனையும் சூழ்ச்சிகளின் பலனையும் ஒரு மனிதன் அனுபவிக்க முடியாமல் செய்ய வேண்டுமென்று ஒருவன் எண்ணுவானேயானால் அது சூரியன் உதிக்கக் கூடாது என்று சொல்லுவது போல்தான் முடியும். ஆனாலும் பொதுவாய் பார்ப்பனரல்லா தாருக்கும் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குப் பாடுபடுவதாய்ச் சொல்லும் அன்பர்களுக்கும் நாம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம். அதா வது, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு கோபமூட்டப்பட்டாலும், கூட்டங்களில் ஒருவரை ஒருவர் திட்டுவதோ கலவரம் செய்வதோ அடி தடி ஏற்படும்படி நடந்து கொள்வதோ பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே கஷ்டமும் அவமானமும் கெட்ட பெயரைத் தரத்தக்கது என்றே சொல்லுவோம்.

முதலாவது, இம்மாதிரி செய்யும் காரியமே மிகவும் இழிவானது. அல்லாமலும் “முள்ளு வாழையிலையின் மேல் பட்டாலும் வாழையிலை முள்ளின் மேல் பட்டாலும் இலைக்குத்தான் கெடுதியே தவிர, முள்ளுக்கு ஒரு கெடுதியுமில்லை” என்று ஒரு பழமொழியுண்டு. அது போல் பார்ப்பனக் கட்சிக்காரர் பார்ப்பனரல்லாத கட்சிக்காரரை அடித்தாலும் திட்டினாலும், பார்ப் பனரல்லாதாருக்குத்தான் கஷ்டமும் அவமானமும் ஏற்படுகிறது. எப்படியென்றால் இரண்டு கட்சியிலும் சண்டை பிடித்துக்கொள்ளும் போதும், அடிதடி செய்து கொள்ளும் போதும் பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கிறார்கள். உதாரணமாகப் பார்ப்பனக் கட்சிக்காரர்களின் சார்பாய் பார்ப்பனரல்லாதாரைத் திட்டுவதற்கு நமது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதா ராகப் பார்த்தே ஏவி விடுகிறார்கள். உதாரணமாக, இப்போது பார்ப்பனரல்லா தார்களைத் திட்டுபவர்கள் யாரென்று பார்த்தால் ஸ்ரீமான்கள் பாவலர், மயிலை ஜயவேலர், மயிலை ரெத்தினசபாபதி முதலியார், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பிரமணிய நாயக்கர், ஜனாப்கள் ஷாபி மகமது, அப்துல் ஹமீத்கான் என்கிற கனவான்களாகவே இருக்கிறார்களேயொழிய வேறில்லை. இவர்கள் பார்ப்பனரல்லாதாராயிருந்தும் இவர்கள் திட்டுவதும் அடிப்பதும் பார்ப்பனரல்லாதாரையேதான். இதற்குத் திருப்பி திட்டுவ தாயிருந்தாலும், அடிப்பதாயிருந்தாலும் இவர்களைத்தான் திட்டவும் அடிக்கவும் நேருமேயல்லாமல் பார்ப்பனர்கள் சுலபத்தில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். எப்படியாவது நமது கையைக் கொண்டே நமது கண்ணைக் குத்துவார்கள். ஆதலால் எந்த வகையிலும் நமக்குத்தான் கஷ்டம். நியாய மும் சத்தியமும் நம்முடைய பங்கில் இருப்பதனால் நமக்குத் திட்டும் வேலையும் அடிக்கும் வேலையும் கண்டிப்பாய்க் கூடாதென்றே சொல்லு வோம். தவிரவும் நமது காரியங்கள் ஒவ்வொன்றிலும் பாமர பொது ஜனங் களைக் கொண்டே செய்ய வேண்டியதாகையால் நாம் பொது ஜனங்களின் அன்பையும் ஆதரவையும் பெற வேண்டியது முக்கியமான காரியம். அடிதடி சம்பவம் யாரால் ஏற்பட்டாலும் நமக்குத்தான் கெட்ட பெயரென் பதையும் நமக்குத்தான் நஷ்டமென்பதையும் வற்புறுத்திக் கூறுகிறோம்.           

(குடி அரசு - தலையங்கம் - 01.08.1926)

Pin It