பிரசிய நாட்டில் செருமன் மொழி பேசும் ரைன் மாகாணத்தில் திரையர் எனும் ஊரில் 1818 மே 5ஆம் நாள் யூதரும் வழக்கறிஞருமான ஹென்றிக் மார்க்சின் எளிய குடும்பத்தில் கார்ல் மார்க்ஸ்  பிறந்த போது, வானில் விண்மீன்கள் தோன்றி தேவகுமாரனின் தோற்றத்தை அறிவித்தது போல் எதுவும் நிகழவில்லை. அன்னை ஹென்றியத் பிரெஸ் பர்க் அவரைப் பெற்றுப்போட்ட போது, உலகைக் குலுக்கப் போகும் புரட்சிகளின் அறிவாசான் உதித்து விட்டார் என்று மலைகள் அதிரவில்லை. அலைகள் எழுந்து அப்படியே நிற்கவில்லை.

karl marx 450மார்க்ஸ்  திரையரில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு முதலில் பான் நகரிலும் பிறகு பெர்லின் நகரிலும் உயர் கல்வி பயின்றார். சட்டமும் வரலாறும் மெய்யியலும் பயின்றார். 1841ஆம் ஆண்டு எபிக்கூரசின் மெய்யியல் பற்றிய ஆய்வுரைக்காக முனைவர் பட்டம் பெற்று பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்தார்.

அந்த நேரத்தில் மார்க்ஸ் , ஹெகலியக் கருத்துமுதல் கொள்கை உடையவராக இருந்தார். பெர்லினில் இயங்கி வந்த இடது ஹெகலியர்களின் வட்டத்தில் புருனோ, போயர் முதாலனவர்களோடு மார்க்சும் ஒருவர். இவர்கள் ஹெகலின் மெய்யியலிலிருந்து இறைமறுப்பு உள்ளிட்ட புரட்சிகர முடிவுகளுக்கு சென்றனர்.

பட்டம் பெற்ற பின் பான் நகருக்குச் சென்ற மார்க்ஸ்  கல்லூரிப் பேராசிரியராக ஆசைப்பட்டார். ஆனால் அரசின் பிற்போக்குக் கொள்கை அவரைப் பல்கலைக் கழகத்துக்குத் திரும்ப விடாமல் தடுத்து விட்டது. அத்தோடு மார்க்சும் கல்வித் துறையில் வாழ்க்கையைச் செலவிடும் எண்ணம் துறந்தார்.

ஹெகலியக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்த மார்க்சுக்கும் மற்றவர்களுக்கும் இறையியலைக் குற்றாய்வு செய்த பாயர்பாக்கின் சிந்தனைகள் ஊக்க மளித்தன. பாயர்பாக்கின் நூல்களால் கருத்தளவில் விடுதலை பெற்றவர்களில் பிரெடெரிக் எங்கெல்சும் ஒருவர். இடது ஹெகலியர்கள் இப்போது பாயர்பாக் கியர்கள் ஆகி விட்டதாக எங்கெல்ஸ்  சொல்வார். ஹெக லிடமிருந்து இயங்கியலையும் பாயர்பாக்கிடமிருந்து பொருள்முதல் கொள்கையையும் மார்க்ஸ் -எங்கெல்ஸ்  உள்வாங்கி ஒன்றிணைத்துச் செழுமைப்படுத்திக் கொண்டனர்.

கல்வித் துறைக்குள் நுழைய வாய்ப்பு மறுக்கப்பட்ட மார்க்சுக்கு இதழியல் துறையின் கதவு திறந்தது. கொலோன் நகரிலிருந்து வெளிவரும் ரைனிஷ் சைட்டங் இதழில் எழுத மார்க்ஸ்  அழைக்கப்பட்டார். விரைவில் அவர் அவ்விதழின் ஆசிரியர் ஆனார். அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த போது அரசு அவ்விதழைக் கடும் தணிக்கைக்கு உட்படுத்தியது. விரைவில் தடையே செய்தது. ரைனிஷ் சைட்டங் இதழில் மார்க்ஸ்  எழுதிய முக்கியக் கட்டுரைகளில் ஒன்று மொசேல் பள்ளத்தாக்கில் திராட்சை சாகுபடியாளர்கள் பற்றியது. இது போன்ற கட்டுரைகள் எழுதும் போது, மார்க்ஸ்  பொருளியலில் தமக்குப் போதிய பழக்கம்  இல்லாதிருப்பதை உணர்ந்தார்.

1843ஆம் ஆண்டு மார்க்ஸ்  ஜென்னியை மணந்தார். அதே ஆண்டில் முற்போக்கு ஏடு ஒன்றின் வெளியீட்டுக் காக பாரிஸ்  சென்றார். மார்க்சின் கருத்துகள் விரைந்து புரட்சிகரமாக மலர்ந்தன. அவர் நடப்பில் இருக்கும் ஒவ் வொன்றையும் கடுமையாகக் குற்றாய்வு செய்தார். மக்கள் பெருந்திரளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் அழைப்பு விடுத்தார்.

1844 செப்டம்பரில் பிரெடெரிக் எங்கெல்ஸ்  பாரிஸ்  வந்த போது மார்க்சைச் சந்தித்தார். அது முதல் அவர்கள் நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். அவர்களது வாழ்நாள் தோழமைதான் மாந்தக் குலத்தின் முன்னேற்றப் பாதையில் ஒரு புதிய ஒளிவிளக்கம் ஏற்றியது. எங்கெல்ஸ்  எப்போதும் மார்க்சுக்குத் தம்மைக் கீழடக்கிக் கொண் டாலும்,  மார்க்சியம் என்பது மார்க்சின் பெயரால் அறியப் பட்டாலும், அது அவர்கள் இருவரின் கூட்டுப் படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரிஸ்  நகரத்தில் அப்போது வகைவகையான புரட்சியாளர்கள் நிறைந்திருந்தார்கள். பலவிதமான குமுகியக் (சோசலிச) கொள்கைகள் அலசப்பட்டன. அவற்றுள் முக்கியமானது புரூதானின் கொள்கை. குமுகியத்தை வறுமைக் கோட்பாடு என்று புரூதான் கூறி வந்ததை மறுத்து “கோட்பாட்டு வறுமை” என்ற நூலை மார்க்ஸ்  எழுதினார். புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் குமுகியத்தை மார்க்சும் எங்கெல்சும் தெளிந்துரைத்தனர். அதுவே பிறவகைக் குமுகியங்களுக்கு மாறாகப் பொதுவியம் (கம்யூனிசம்) எனப் பெயர் பெற்றது.

பிரசிய அரசாங்கத்தின் வலியுறுத்தலால் 1845இல் மார்க்ஸ்  பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பிரசல்ஸ்  போய்ச் சேர்ந்தார். 1847இல் மார்க்சும் எங்கெல்சும் பொதுவியக் கழகம் (கம்யூனிஸ் டு லீக்) என்னும் கமுக்கப் பரப்புரை அமைப்பில் இணைந்தனர். அவர்கள் எழுதிய புகழார்ந்த சிறுநூல் பொதுவிய அறிக்கை (கம்யூனிஸ் டு அறிக்கை) 1848 பிப்ரவரியில் வெளிவந்தது. பொருள் முதற்கொள்கையின் அடிப்படையிலான புதிய உலகக் கண்ணோட்டத்தின் உருவரை என்றும், புதிய பொது வியக் குமுகத்தின் (பொதுவுடைமைச் சமூகத்தின்) படைப்பாளி என்றும் இந்த அறிக்கையை லெனின் போற்றினார். முதலியப் பெருமலையை உடைக்கப் பிறந்த சிற்றுளி என்று வரலாறு இந்நூலைக் குறித்து வைக்கும்.

1848 பிப்ரவரிப் புரட்சி வெடித்த போது  மார்க்ஸ்  பெல்ஜியத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அவர் முதலில் பாரிஸ்  திரும்பி அங்கிருந்து கொலோன் சென்று நியூ ரைனிஷ் சைட்டங் இதழின் முதன்மை ஆசிரியராக இருந்து மீண்டும் அதனை வெளியிட்டார். 1848-49 காலத்திய புரட்சிகர நிகழ்வுகள் மார்க்ஸ் -எங்கெல்சின் புதிய கண்ணோட்டத்தை உறுதி செய்தன. மார்க்சுக்கு எதிராகப் பிற்போக்கு ஆட்சியாளர்கள் தொடர்ந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அடுத்து அவர் ஜெர்மனி யிலிருந்து நாடுகடத்தப்பட்டார். முதலில் பாரிஸ்  சென்று, 1849 சூன் ஆர்ப்பட்டத்துக்குப் பின் அங்கிருந்தும் வெளி யேற்றப்பட்டு இலண்டன் சென்று அங்கேயே இறுதி வரை வாழ்ந்து மறைந்தார். இலண்டனில் தமது வாழ்நாள் பெரும்படைப்பாகிய தஸ்  கபிடல் (மூலமுதல்) நூலை அரிதின் முயன்று ஆக்கி முடித்தார்.

அரசியல் ஏதிலியாக மார்க்சும் அவர் குடும்பமும் அல்லலுற்று அலைக்கழிந்த துயரம் பெரிது. ஓயாமல் தன்னலம் கருதாமல் எங்கெல்ஸ்  செய்த உதவிகளால் தான் மார்க்சால் மூலமுதலைப் படைக்க முடிந்தது. எங்கெல்ஸ்  மட்டும் இல்லையென்றால் மார்க்ஸ்  வறுமையின் சுமையால் அழிந்தே போயிருப்பார் என்பார் லெனின்.

கோட்பாட்டு ஆராய்ச்சியோடு நில்லாமல் நடைமுறைப் பணிகளிலும் மார்க்ஸ்  ஈடுபட்டு வந்தார். 1864ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பன்னாட்டுத் தொழிலாளர் சங்கத் தின் (முதல் அகிலம் என்று சொல்லப்படுவது) மூளை யையும் இதயமுமாகத் திகழ்ந்தவர் கார்ல் மார்க்ஸ் . 1871ஆம் ஆண்டு உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சியாகிய பாரிஸ்  கொம்யூன் நிகழ்ந்தது. இதையடுத்து பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலை மார்க்ஸ்  எழுதினார். பல நாடுகளில் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் அமைக்கப்படுவதற்கு அவரும் எங்கெல்சும் உதவி னார்கள்.

ஓயாத கோட்பாட்டு ஆய்வும் பன்னாட்டுத் தொழிலாளர் சங்க நடைமுறைப் பணிகளும் சேர்ந்து கொள்ள, மார்க்ஸ்  உடல்நலிவுற்றார். எவ்வளவு முயன்றும் மார்க்சால் மூலமுதலை நிறைவு செய்ய முடியவில்லை. மூலமுதல், இயல் ஒன்று (முதல் பாகம்) மட்டுமே செருமன் மொழியில் வெளிவந்தது. அவரது சீராண்மையுடன் பிரெஞ்சுப் பதிப்பும் உருசியப் பதிப்பும் வெளிவந்தன.

ஜென்னி மார்க்ஸ்  1881 திசம்பர் 2ஆம் நாள் மறைந்தார், கார்ல் மார்க்ஸ்  1883 மார்ச்சு 14ஆம் நாள் மறைந்தார்  எங்கெல்ஸ்  கூறியது போல், சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். மார்க்ஸ்  இணையர் இலண்டன் ஹைகேட் கல்லறையில் மீளாத்துயில் கொண்டுள்ளனர். அவர்கள் பெற்ற மக்கள் செல்வத்தில் இலண்டன் வாழ்க் கையின் வறுமையாலும் நோயாலும் மாண்டவர்கள் போக எஞ்சிய மூன்று புதல்வியரும் ஆங்கிலேய, பிரெஞ்சு குமுகியர்களை (சோசலிஸ்டுகள்) மணந்தனர். எலினார் அவெலிங் மூலமுதல் இயல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவினார்.

மனித குல வரலாறு எத்தனையோ மாமனிதர் களைக் கண்டுள்ளது. அவர்கள் வரலாற்று மனிதர் களாகப் போற்றப்படுகின்றார்கள். வரலாறு படைத்தவர் கள் என்றும் கூட புகழப்படுகிறார்கள். ஆனால் இவர்களும் கூட வரலாற்றின்  கருவிகளே என்று நமக்குச் சொன்னவர் கார்ல் மார்க்ஸ். வரலாறு தனக்கென்று வார்த்துக் கொண்ட தலைசிறந்த கருவிகள் என்று சில மனிதர்களை இனங்கண்டு பட்டியலிட்டால், இயற்கை அறிவியலில் டார்வின் போல், இயற்பியலில் கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ் டைன் போல், குமுக அறிவியலில் (எங்கெல்சும் உள்ளடங்கிய) கார்ல் மார்க்ஸ்  முதலிடம் பெறுவார் என்று நம்புகிறேன். மார்க்சும் கூட காலம் கண்டெடுத்த கவின்மிகு கருவிதான்! நம்மைச் சூழ்ந்துள்ள குமுகத்தை ஆய்வு செய்து அறிந்து கொள்ளும் கருவி மட்டுமல்ல, மாற்றியமைக்கும் கருவியும்தான்!

மார்க்ஸ்  போற்றிய மாமனிதர்கள்  அடிமைமுறைக்கு எதிராகப் போராடிய ஸ்பார்டகஸ்  போன்றவர்கள்! அவர்களை முன்னொரு காலத்தில் வாழ்ந்து மறைந்தவர்களாகக் கருதாமல் உயிரோடு தன்னில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வித்தவர் மார்க்ஸ். நாமும் கூட கார்ல் மார்க்சை பீடத்தில் நிறுத்தி வணங்கத் தேவையில்லை. அவரை நம் உணர்விலும் அறிவிலும் உள்வாங்கி ஒரு தோழனாகத் தோளில் கைபோட்டு நடக்கலாம். பாயர்பாக் பற்றி எழுதும் போது, மார்க்ஸ்  சொன்னார்: அறிஞர்கள் உலகை விளக்க மட்டுமே செய்துள்ளனர். உலகை மாற்றுவதே முகமையானது

மார்க்சியம் - மார்க்சும் எங்கெல்சும் வார்த்தளித்த படைக்கலன்!  மாற்றத்தின் படைக்கலன்! மாற்றத்துக்கான போராட்டங்கள் உள்ள வரை மார்க்ஸ்  வாழ்வார்! நமக்கிடையே உயிரோட்டமாக வாழ்வார்! மாந்தக் குல முன்னேற்றத்துக்கான அணிவகுப்பில் உடன்வரும் தோழன் கார்ல் மார்க்ஸ்!

(மே 5, மார்க்சு பிறந்தநாள்)

Pin It