18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பெருமளவில் பணப் பொருளாதாரம் இந்தியத் துணைக்கண்டத்தில் வளரத் தொடங்கியது. பெருந்தொழில்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில்தான் தொடங்கப்பட்டன. பணப் பொருளாதாரத்தின் நடவடிக்கைகள் தொடங்கிய உடனே வணிகர்கள், பணத்தரகர்கள் தோன்றினர். மும்பையில் இயங்கி வரும் பங்குச் சந்தை இருக்குமிடம் ஷதலால் தெரு என்று அழைக்கப்படுகிறது. தலால் என்றால் தரகர் என்று பொருள். பொருளாதார பண மாற்ற நடவடிக் கைகளாலும் இந்தத் தலால்கள் வணிகத்தில் மட்டு மின்றி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். சான்றாக நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்(1991-96) பெரும் பங்குச் சந்தை ஊழலில் பேரளவு வங்கிப் பண மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷத் மேத்தா என்பவரும், நிதி-பங்குச்சந்தைத் தரகரே ஆவார். நரசிம்மராவ் ஆட்சியில் இணை அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் முறை கேடாக பரிவர்த்தனை நடத்திய ஹர்ஷத் மேத்தா குழுமத்தில் (Fair Growth Company) பங்குகள் வாங்கினார்-வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலக நேரிட்டது. ஊழலில் ஈடுபட்டவர்களை மீண்டும் மீண்டும் பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பது தேசியக் கட்சிகளின் திருட்டான திருவிளையாடல் ஆகும்.

கிழக்கிந்தியக் குழுமத்தில் 24 வயதில் இந்தியாவிற்கு வந்து இராணுவ வீரராகவும் வணிகராகவும் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கிழக்கிந்தியக் குழும ஆட்சியை நிறுவியவர்களில் ஒருவரான இராபர்ட் கிளைவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இன்றைய பண மதிப்பில் பல இலட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்த தற்காக இங்கிலாந்து அரசு இவர் மீது வழக்கினைப் பதிவு செய்தது. இறுதியில் ராபர்ட்கிளைவ் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். ஒருவேளை அவர் மானம் இழுக்குப் பற்றிக் கவலைப்பட்டிருக்கலாம்.

அதுபோல, பிரித்தானிய ஆட்சி இந்தியாவில் நிலை பெறுவதற்கு அடித்தளம் அமைத்த வாரன் ஹேஸ்டிங்சு இந்தியாவில் கொள்ளையடித்து இங்கிலாந்தில் ஏராள மான சொத்துகளை வாங்கினார் எனக் குற்றம் சுமத்தப் பட்டது. புகழ்மிக்க அரசியல் அறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எட்மன்ட் பர்க் 1789இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஹேஸ்டிங்சு மீது குற்றம் சுமத்தி (Impeachment) அவரை நீக்குவதற்கு ஒரு தீர்மானத் தை முன்மொழிந்தார். அவ்வுரையில் இந்திய மக்களின் சுதந்தர உரிமைகள் சட்டங்களைப் பாழாக்கியதற் காகவும் அவர்களது சொத்துக்களை அழித்ததற்காகவும் வீணாக்கியதற்காகவும் இந்திய மக்கள் சார்பில் அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். நிலைத்து நிற்கின்ற நீதி, சட்ட நெறிகளை மீறியதற்காக அவர் மீது குற்றம் சுமத்து கிறேன். எல்லாத் தன்மைகளிலும் மிகமிகக் கொடுஞ் செயல்களை நிறைவேற்றி வடுக்களை ஏற்படுத்தி அடக்குமுறைகளை ஏவி மக்களைத் துன்புறுத்தியதற் காக மானுட நீதியின் பெயரால் அவர் மீது குற்றம் சாட்டுகிறேன் என்று பெர்க் குறிப்பிட்டுள்ளார். அவ்வறி ஞரின் கணிப்பு காலம் கடந்து இன்றும் நமது நடை முறையில் இருக்கிறதே என்று வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிர்களை யும் உடைமைகளையும் இழந்தனர். பல ஆண்டுகள் சிறையில் கழித்தனர். பல நூறு பேர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இவர்களின் தியாகங்கள் வீணாகி ஊழல் செய்தோர்கள் உத்தமர்கள் போல் சிறை செல்கிறார்கள்.

இதே காலகட்டத்தில் சென்னையில் கோட்டையில் இயங்கி வந்த கிழக்கிந்தியக் குழுத்தில் பணியாளராகப் பணியாற்றிய லார்ட் பீகார்ட் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கோட்டையிலேயே சிறை வைக்கப்பட்டார் என்பதையும் வரலாறு சுட்டுகிறது. வெள்ளைக்காரன் கொடுமைகளைவிட இன்று அரசியல் கொள்ளைக் காரர்கள் செய்யும் ஊழலும் சுரண்டலும் மக்கள் மீது ஆறாத வடுக்களை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு ஊழலின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி னால் ஒரு தனிக் கட்டுரை போதாது ஒரு நூலையே எழுத வேண்டி வரும். இந்தியா விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் கடந்தும், தொடக்கக்கல்வியை அனைவருக்கும் அளிக்க முடியாத கொடுமையான சூழலே உள்ளது. இந்தத் தொடக்கக்கல்வியின் நிதியிலும் ஊழல் செய்யும் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் போது, இந்தக் கொடும் அரசியல் குற்ற வாளிகளைத் தண்டிக்க தற்போதுள்ள தண்டனைச் சட்டங்கள் போதாது என்றே தோன்றுகிறது.

அனைத்து நல்ல, கெட்ட செயல்களுக்கெல்லாம் ஒன்றிய அரசில் 1947 முதல் ஆண்ட காங்கிரசு ஆட்சியே முதன்காரணமாக அமைகின்றது. ஊழல்களிலும் காங்கிரசு செய்த ஊழல்களே முதலிடம் பெறுகின்றன.

1948இல் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இங்கிலாந்தின் தூதுவராகப் பணியாற்றினார். அப்போது இங்கிலாந்திலிருந்து ரூ.80 இலட்சத்திற்கான 200 இராணுவ ஜீப்கள் வாங்கப்பட்டன. வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்கும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வி.கே. கிருஷ்ண மேனன் மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் 1955 செப்டம்பர் 30ஆம் தேதி காங்கிரசு கட்சியால் அமைக்கப்பட்ட அனந்தசயனம் அய்யங்கார் தலைமையிலான விசாரணைக்குழு-இந்த வழக்கில் ஒன்றுமில்லை என்று அறிவித்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் மனநிறைவு பெறாத எதிர்க்கட்சிகளைப் பார்த்து, “தேர்தலில் இதை ஒரு பிரச்சினையாக முன்வைத்து எதிர்க்கட்சிகள் காங்கிரசைத் தோற்கடிக்கலாம்” என்ற விசித்திரமான வாதத்தை வைத்தார் அனந்தசயனம். பின்பு 1956இல் நேருவின் அமைச்சரவையில் கிருஷ்ண மேனன் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த கல் யாணம் (இன்றும் உயிரோடு சென்னையில் வசிக் கிறார்) கிருஷ்ண மேனன் போன்ற ஊழல் செய்பவர் களைப் பாதுகாப்பு அமைச்சராகப் பிரதமர் நேரு நிய மிப்பது சரிதானா? என்ற விமர்சனத்தை அன்றே வைத்தார்.

1950இல் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச் சாரி நிதியமைச்சராக இருந்த போது ‘முந்தரா ஊழல்’ வெளிவந்தது. அரிதாஸ் முந்தரா, ஹர்ஷத் மேத்தா போல பங்குச் சந்தைத் தரகராவார். அரசு காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை வாங்கியதில் 4 கோடி ஊழல் நடை பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டுக் குழுவின் பரிந்துரைகளை மீறி, அரசின் அழுத்தத்தின் காரணமாக இந்தப் பங்குகள் முந்தராவிற்கு விற்கப்பட்டன என்று கூறப்பட்டது.

1958இல் இந்திய தேசியக் காங்கிரசின் ரேபரலி தொகுதி உறுப்பினரும் இந்திராகாந்தியின் கணவருமான பெரோஸ் காந்தி இது ஒரு பெரும் ஊழல்; இதனை விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சக்தி வாய்ந்த பெரும் நிதியமைப்பான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதைப் பற்றி நாடாளுமன்றம் விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அன்று நிதியமைச்ச ராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி இதில் ஆதாரம் இல்லை என மறுத்தார்.

பிறகு நாடாளுமன்றத்தின் வலியுறுத்தலின் காரண மாக மும்பை நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சி.சாக்ளா தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. தனது விசாரணை நேர்மை யாகவும் நடுநிலைமையாகவும் இருக்கவேண்டும் என்பதால் இந்த விசாரணையைப் பொது விசாரணை யாக நீதிபதி சாக்ளா நடத்தினார். மக்கள், செய்தியாளர்கள் இந்த விசாரணையைப் பார்ப்பதற்கு ஒலிபெருக்கி வசதி கூடச் செய்யப்பட்டது. 24 நாட்களில் விசாரணையை முடித்து நீதிபதி சாக்ளா பெரும் சாதனையைப் படைத்தார்.

பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த பங்குத் தரகர்கள் ஒரு தனிநபர் நிறுவனத்திற்குச் சந்தையில் அதிக மதிப்பையும் பொருளையும் ஈட்டுவதற்கு அரசு ஒத்துழைத்திருக்கிறது என்று நீதிபதி சாக்ளா குற்றம் சாட்டினர். அப்போது நிதிச்செயலராக இருந்த எச்.எம். பட்டேலும், வைத்தியநாதன் என்கிற ஆயுள் காப்பீட்டு அதிகாரியும் கூட்டுச் சேர்ந்து இந்தப் பணத்தை மாற்றியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டது தனக்குத் தெரியாது என்று நிதியமைச்சர் பொய்யுரைத்ததாக நீதிபதி சாக்ளா கண்டித்தார். இதன் காரணமாக, கிருஷ்ணமாச்சாரி பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில்தான் முந்தராவிற்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தியாவினுடைய முதல் நிதி மோசடிக்கு ஒத்துழைத்த வர் நம்ம ஊர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்பது குறிப் பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, நேரு அமைச்சர வையில் டி.டி.கே. சேர்க்கப்பட்டாலும் நேரு நிதி அமைச் சர் பொறுப்பைத் தர மறுத்து விட்டார். நேருவின் மறை விற்குப் பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மீண்டும் டி.டி.கே. மீது அளித்த புதிய ஊழல் புகார்களை விசாரிப் பதற்கு உச்ச நீதிமன்றத்திற்குக் கோப்புகளை அனுப்பி னார். டி.டி.கே. விசாரணைக்குப் பயந்து பதவி விலகல் மடலை அளித்தார்.

பின்னர் சென்னையில் தங்கியிருந்தபோது டி.டி.கே. கவிஞர் கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். கவிஞருக்கு அதிர்ச்சி; எதற்காக டி.டி.கே. அழைக்கிறார் என்ற வியப்புடன் அவர் இல்லத்திற்கு பழ.நெடுமாறனுடன் சென்றுள்ளார். டி.டி.கே. கவிஞர் கண்ணதாசனை வரவேற்று, “போனால் போகட்டும் போடா” என்ற பாடல் தான் சந்தித்த அவமானங்களுக்கு இதமளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வை திருவாளர் பழ. நெடுமாறன் கவியரசர் என் காவலர் என்ற நூலில் குறித்துள்ளார். “போனால் போகட்டும் போடா! சுருட்டியவரை மிச்சம்தானடா” என்று டெல்லியிலிருந்து ஓடி வந்த டி.டி.கேக்கு சென்னையில் எத்தனை நினைவுச் சின்னங்கள்! இந்த ஊழல் பேர் வழியின் பெயரில்தான் டி.டி.கே. சாலை ஆண்டுதோறும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் சங்கீத வித்வத் சபை என சமஸ்கிருத மொழியில்தான் இசை மன்றமும் டி.டி.கே. பெயரில்தான் இன்று வரை உள்ளது.

அண்மையில் மருத்துவர் இராமதாசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட பிறகு, அவரது படத்தைப் பொது இடங்களிலும் அரசு அலுவல கங்களிலும் வைக்கக்கூடாது என்றும், அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது என்றும் குறிப்பிட் டுள்ளார். ஆனால் நமது மயிலை ‘பெரியவாள்கள்’ டி.டி.கே. அரங்கில் ஊழல் குழைத்த இசையைக் கேட்பதில் தனி இன்பம் காண்கின்றனர். ஊழல்களில் கூட சனாதன தர்மம் ஓங்கி நிற்கிறதே!

1962இல் ஜெயந்தி தர்மதேஜா ரூ.200 முதலீட்டில் ஒரு கப்பல் குழுமத்தை ஆரம்பித்தார். நேரு ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களில் இது ஒரு பெரும் முன்னோடி ஊழலாகக் கருதப்பட்டது. வெறும் 200 ரூபாயில் தொடங்கப்பட்ட குழுமத்திற்கு 22 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டது. கடனில் பெரும் பங்கினை ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு இலண்டன் மாநகரில் ஓடி ஒளிந்து கொண்டார். அவரைக் கைது செய்து சட்டப்படி அவருக்கு 6 ஆண்டுகாலச் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரும் நிலையில் தலைமறைவானார். இன்றுவரை தர்மதேஜா எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

அரசு வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளைக் கடனாகப் பெற்று திருப்பித்தராமல் இலண்டனுக்கு ஓடிச்சென்ற விஜய் மல்லையா, ஒன்றிய அரசின் அமைச்சரான சுஷ்மா சுவராஜ் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரான கிரிக்கெட் லலித் மோடி இன்றும் இலண்டனில் அரசை ஏமாற்றி உல்லாசமாக உலா வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் ஊழல் செய்து வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும் வழியை அமைத்ததில் தர்மதேஜா முன்னோடியாகத் திகழ்கிறார்.

1964இல் பிரதாப் சிங் கைரோன் பஞ்சாப் மாநிலத் தின் முதல்வராக 1956 முதல் 1964 வரை இருந்தவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனைப் பெற்றவர். விடுதலைக்குப் பிறகு பஞ்சாப் மாநிலக் காங்கிரசுத் தலைவராக விளங்கியவர். பஞ்சாபில் வேளாண்துறை வளர்ச்சிக்கு முதன்மையான பங்களிப்பைத் தந்தவர். இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இவரது மகன்கள் தந்தையின் அதிகாரத்தைப் பயன் படுத்திப் பாலியல் அத்துமீறல்கள் செய்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இதனடிப்படையில் ‘தாஸ் விசாரணைக் குழு’ அமைக்கப்பட்டது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று கூறப் பட்டது. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு தில்லி சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். காங்கிரசு முதலமைச்சர் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டாலும் குற்றம் உண்மை என்றவுடன் விலகல் கடிதமும் பெறப்பட்டது.

1965இல் ஒரிசாவின் காங்கிரசு முதலமைச்சர் பிஜூ பட்நாயக் தனது சொந்த நிறுவனமான கலிங்கா குழாய் நிறுவனத்திற்கு அரசு ஆதரவினை நல்கினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனடிப்படையில் தானே முன்வந்து முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். இவரும் விடுதலைப் போராட்டக் காலத்தில் பல அரிய செயல்களை நேருவின் வேண்டுகோளை ஏற்றுச் செய்தவர். இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேருவின் வேண்டுகோளை ஏற்று விமானத் தைப் பட்நாயக்கே ஓட்டிச் சென்று அங்கு கொடுமைக் குள்ளாக்கப்பட்டவர்களை மீட்டெடுத்தார். இவர் தற் போதைய ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையாவார்.

1971இல் பிரதமர் இந்திரா காந்தி மீது ஓர் ஊழல் புகார் அளிக்கப்பட்டது. 1971இல் மே 24 நாடாளுமன்ற வளாக பாரத ஸ்டேட் வங்கிக் கிளையிலிருந்து ரூ.60 இலட்சம் பணம் கேப்டன் நாகர்வாலாவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்லி, அப்போது தலைமைக் காசாளராக இருந்த பிரகா` மல்கோத்ராவிற்கு இந்திரா காந்தியின் குரலில் சொல்லப்பட்டது. ஆனால் இந்தக் குரலைப் பயன்படுத்தியவர் நாகர்வாலா என்று அறிந்து அவரைக் கைது செய்தனர். வழக்கு விசாரனைக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இவர் மரணம் அடைந்ததால் பல சந்தேகங்கள் இவரது மறைவிற்குப் பிறகு எழுப்பப்பட்டன. இந்திரா காந்தியின் குரலில் ஒருவர் துணிச்சலாகப் பேச முடியுமா? அதுவும் நாடாளுமன்றத்தில் இயங்கி வந்த வங்கிக் காசாளரிடம் பணம் கேட்க முடியுமா? அப்படிப் பணம் கேட்டாலும் கொடுக்க முடியுமா? என்ற கேள்விக்கணைகள் தொடர்ந்து கேட்கப்பட்டன.

1973இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மாருதி கார் தொழிற்சாலைக்கு எந்தத் தொழில்நுட்பத் தகுதியும் இல்லாத அனுபவமற்ற சோனியா காந்தி மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அரசால் வரிச்சலுகைகள், நிலம், நிதியுதவி ஆகியன அளிக்கப்பட்டன. ஆனால் இக்காலக்கட்டத்தில் மாருதி நிறுவனம் ஒரு காரைக்கூட உற்பத்தி செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் மாருதி ஊழல் தொடர்பாக எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து விவாதங்கள் செய்து பல ஆவணங்களை வெளியிட்டன. அன்றைய ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர் வாஜ்பாயும் சோஷலிஸ்ட் கட்சி ஜார்ஜ் பெர்ணான்டசும் நிகழ்த்திய நீண்ட நேர உரையை இக்கட்டுரையாளர் நாடாளுமன்றத்தில் பார்வையளாராக இருந்து கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது ஜார்ஜ் பெர்ணான்டசு இந்திரா காந்தியை நேருக்கு நேர் பார்த்து ஊழல் கங்கை (Gangothri of corruption) என்று குறிப்பிட்டார். இதன் காரணமாகத்தான் நெருக்கடி காலத்தில் ஜார்ஜ் பெர்ணான்டசு கைது செய்யப்பட்ட போது விலங்கிடப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார்-என்று மூத்த செய்தியாளர்கள் அக்காலக்கட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

(தொடரும்)