dravida iyyakam bharathidasasn 450திராவிடத்தின் மீதான அடுக்கடுக்கான கருத்தாடல்கள், வாதம், எதிர்வாதம் போன்றவைகள் எங்கும் பரவலாக நம் காதுகளில் விழுகின்றன. அதனுடன் திராவிடம் சாதித்தது என்ன? என்ற வினாவும் அண்மைக் காலங்களில் தமிழகத்தில் ஒலிக்கின்றன. திராவிடத்தை மறுவாசிப்புக்குள்ளாக்கும் போக்கும் ஆங்காங்கே தென்படுகின்றன.

திராவிடம் சாதித்தது என்ன? என்ற வினாவை எழுப்புவோர் அதன் சாதனைகள் என்ன என்பதை நன்கறிந்தே முன்வைக்கின்றனர். திராவிடச் சாதனை என்பது மேம்போக்காக வெளியே தெரிகின்ற மாற்ற மன்று. அது மக்களின் மனங்களில் உள்ளார்ந்து ஊடுருவி அழுத்தமான விளைவை ஏற்படுத்தியவையாகும். சமூக நீதியில் பிற மாநிலங்களை விடவும் தமிழகம் ஒருபடி முன்னேறி நிற்பதும் திராவிடச் சாதனையே.

இந்தியாவின் பிற மாநிலங்களில், குறிப்பாக, வட மாநிலங் களில் அடிக்கடி நிகழும் மதக் கலவரங்கள் தமிழ் மண்ணில் நிகழாததற்குத் திராவிட இயக்கச் சிந்தனை களே காரணமாகும். ஆழ வேரூன்றிய இச்சிந்தனைகள் நாளடைவில் மக்களைப் பக்குவப்படுத்தி, அவை தமிழர் களின் வாழ்வியல் நெறிமுறையாக ஒன்றிவிட்ட மையால், அதன் கெட்டித் தன்மையில் நெகிழ்ச்சி ஏற்படாமல் இருந்து வருகின்றது. இம் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்களாகச் சிலரும் அதற்கு உறுதுணை நின்றவர் களாக மிக நீண்ட பட்டியலும் தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது (திராவிட இயக்கத் தூண்கள், திராவிட இயக்க வேர்கள் என்னும் தலைப்புகளில் க. திருநாவுக்கரசு எழுதிய நூல்களைக் கண்டுகொள்க).

மிக நீண்ட அந்தப் பட்டியல் பெரும்பாலும் அரசியல் சார்ந்த தலைவர்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. அந்தத் தலைவர் தம்முடைய கொள்கைகளைத் தங்களின் பேச்சாற்றல் வழியேயும், தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்ததின் மூலமாகவும் மக்களிடையே கொண்டு சேர்த்தனர். எனினும் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் கருத்தாலும் தம்முடைய எழுத்துகளாலும் திராவிட இயக்கச் சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தனர். ஆனால் இயக்கத்தின்பால் பற்றுகொண்டு, அதனைத் தம்முடைய படைப்புகளின் வழியே முன்வைத்த படைப்பாளர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். பொதுவாக, பாவேந்தரின் பாடல்களில் தமிழ், இயற்கை, காதல், பெண் விடுதலை ஆகியவை மேலோங்கி நிற்பதைக் காணமுடியும். மேலும் பிற கூறுகளும் இவர் படைப்புகளில் உண்டு. ஆனால் முதுமுனைவர் ச.சு. இளங்கோ அவர்கள் பாவேந்தரின் படைப்புகளில் திராவிட இயக்கக் கூறுகள் எவ்வெவ் வகையிலெல்லாம் படிந்துள்ளன என்பதை உய்த் துணர்ந்து அளித்திருப்பதே திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் என்னும் அரியநூலாகும். இந்நூல் 3 இயல்களில் 37 தலைப்புகளில்  அமைந் துள்ளது.

படைப்பாளன் தேங்கி விடும் சிந்தனைக்கு உரியவனன்று. காலவோட்டத்தில் தானும் ஓடி, எதிர்வரும் இன்னல்களை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்து நகர்பவன். அந்த வகையில் பாவேந்தரிடம் சிந்தனைத் தேக்கம் துளியுமில்லை. எழுத்தின் சுதந்திரத்தை முழுமையாக அனுபவித் துள்ளார். ஆகவேதான், எதார்த்தத்தில் நின்று அவரால் படைக்க முடிந்துள்ளது. அறிவூட்டலை தம் படைப்பின் வழியே மேற்கொண்டார். அதற்குத் திராவிடச் சிந்தனை அடித்தளமாக இருந்துள்ளது என்பதை நிறுவுகிறார் இந்நூலாசிரியர். பொதுவாக, பாவேந்தரின் படைப்பு களை, அதில் மிளிரும் கருத்துகளை வியந்து பேசுவது எளிதாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இலக்கிய மேடைகள் பாவேந்தரின் கவிதைகளைத் தொடக்க மாகக் கூறிப் பேச்சைத் தொடங்குவதும் இயல்பு. ஆனால், இந்நூல் பாவேந்தரின் படைப்புகளில் தென் படுகின்ற கருத்துகளின் ஊற்றுக்கண்ணை அடையாளங் காட்ட முனைகிறது. அது இந்நூலின் தனித்துவ அடையாளமெனலாம். 

‘திராவிட இயக்கப் பின்னணியில் பாரதிதாசன்’  என்னும் முதல் தலைப்பில், திராவிட இயக்கம் உருவாவதற்கு முன், தமிழ்ச் சூழலில் என்னென்ன இயக்கங்கள் இருந்தன என்ற சுருக்கமான அறிமுகம் அளிக்கப்பட்டுள்ளது. ‘பிரம்ம சமாஜம், பிரார்த்தனை சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருட்டிண அவைÕ போன்ற இயக்கங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடப்பெற்று, அவை சமூகத்தில் விளைவித்த தாக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

திராவிட இயக்கப் பின்னணி என்னும் தலைப்பிற்கு மேலே சொல்லப்பட்ட இயக்கங்களின் வரலாறு எதற்கு? என்ற வினா இயல்பாகவே எழுகிறது. இந்த இயக்கங்களின் வரலாறு, செயல்பாடுகளை அறிந்து விட்டு, பின் திராவிட இயக்கத்தை அறியும்போதுதான் அதன் வீரியம் நமக்கு விளங்குகிறது. அதனால் ச.சு. இளங்கோ மிகுந்த நுட்பமுடன் இந்த இயக்கப் பின்னணியை முதல் பகுதியில் வழங்குகின்றார்.

இந்நூல் வெறுமனே பாவேந்தர் என்கிற பாவலனுக்கும் திராவிட இயக்கத்திற்குமான தொடர்பு களை அவரின் படைப்புகளின் வழியே சுட்டிச் செல்லும் பணியை மட்டும் செய்யவில்லை. மாறாக, திராவிட இயக்கம் இந்த மண்ணில் ஆற்றிய அளப்பரிய பணிகளைப் பட்டியலிடுகிறது. அதன் பின்னணியில் மிகத் தீவிரத் தன்மையுடன் இயங்கிய தலைவர்களைப் பட்டியலிடுகிறது. சமூக அமைப்புகளில் புரையோடிக் கிடந்த கசடுகளைத் தெளிவாக்குகிறது. இவ்வாறான புரிதல்களை ஏற்படுத்தியதன் மூலம் பாவேந்தரின் திராவிட இயக்கப் பார்வையும், அவர் எவ்வித மன உணர்வினால் உந்தப்பட்டு பாடியிருப்பார் என்கிற ஆழமான புரிதல் படிப்போரால் தானாகவே அறிந்து கொள்வதற்கு வாய்ப்பேற்படுத்துகிறது.

திராவிடத்தைத் தம் படைப்புகளில் தொடர்ந்து முன்னெடுத்து, தம்மையும் ஓர் இயக்கமாகவே வார்த்துக் கொண்டவர் பாவேந்தர் என்கிற புரிதலை உருவாக்குகிறது இந்நூல். பொதுநிலையில் பாரதிதாசன் பரம்பரை என்ற சொற்றொடர் பாரதிதாசன் கவிதைகள் குறித்துப் பேசப்படுகின்ற இலக்கிய மேடைகள் தோறும் உச்சரிக்கப்படுவது இயல்பு. அந்தக் கவிஞர் யார் யார் என்கிற தெளிவை, எந்த மேடைகளும் தெளிவாக்கு வதில்லை. ஆனால் பாவேந்தரின் கருத்துகளால் கவரப் பட்டு, உருவாக்கமடைந்த கவிஞர்களின் பட்டியலை அளித்து, கூடுதல் கவனம் பெறுகிறது இந்நூல்.

பாரதிதாசன் தாம் உண்மை என்று உணர்ந்தவற்றை ஏற்றுக்கொண்டதோடு, தம்முடைய முந்தைய முரணான கருத்துப் போக்கையும் மாற்றிக் கொண்டார். அவற்றைக் களைவதில் அவர் வீண்பிடிவாதம் கொள்ள வில்லை (ப-375-376) என்ற கருத்து பாவேந்தரின் இயல்பை நன்கு உணருவதற்கு வழியமைக்கிறது; அவர்மீது மரியாதையைக் கூட்டுகிறது.

பெரியாரியப் போராட்டம், வெற்றி என்பது சமூக மேம்பாட்டை உள்ளடக்கியது. சமுதாயத்திற்காகச் சிந்திப்பது போராடுவது என்கிற உள்ளடக்கத்தை நன்கு உணர்ந்து படைப்புகளில் வார்த்துக் கொடுத்தவர் பாவேந்தர். பாவேந்தரின் படைப்பு முறைகளை, கருத்து களை மேம்போக்காகக் காட்டாமல், ஒவ்வொன்றி னுள்ளும் ஆழ்ந்து சென்று எடுத்துரைப்பதில் மிகத் தீவிரத் தன்மையுடன் செயல்பட்டுள்ளார் இந்நூலாசிரியர். சான்றாக, பெண்ணுரிமை என்னும் தலைப்பில் தமிழகப் பெண்களின் நிலை, பெண்ணின் பெருமை, பெண் கல்வி, சொத்துரிமை, குழந்தை மனம், பொருந்தா மணம், கைம்பெண் மறுமணம், மணக்கொடை எதிர்ப்பு, பாரதிதாசனின் பெண் பாத்திரங்கள், கற்பு பற்றிய கருதுகோள், மணவிலக்கு (ப - 202 - 228) என்று பாவேந்தரின் படைப்புகளை முழுதுற ஆய்ந்து தம் கருத்துகளை ஆழமாக வைக்கிறார் நூலாசிரியர்.

பாவேந்தரின் படிநிலை வளர்ச்சியை ஆத்திக நிலை, தேசிய நிலை, சமுதாயச் சீர்திருத்த - இறை மறுப்பு நிலை, தனித்தமிழ் நிலை என்கிற நிலைகளில் வரிசைப்படுத்துகிறார் நூலாசிரியர். Ôஓர் அமாவாசை, ஆடிக் கிருத்திகை எவற்றையும் விடமாட்டார். ஈரத் துணியுடன் நோன்பு இருப்பார். தான் மட்டும் நோன்பு மேற்கொள்ளும் முறைகளில் கட்டுப்பாட்டோடு இருப்பதல்லாமல் தன் குடும்பத்தாரையும் இருக்கச் செய்வார். பிள்ளையார் பண்டிகைக்கு மண் எடுத்து வந்து தானே பிள்ளையார் செய்வார்’ என்று பாவேந்தரின் இறை நம்பிக்கை நிலையை அவருடைய புதல்வர் மன்னர் மன்னனின் அனுபவ மொழியைக் கொண்டு சான்று களாகப் பதிவு செய்துள்ளார். ச.சு. இளங்கோ (ப-327) இந்நூலின் சிறப்புகளில் ஒன்றாக, அதன் தரவுகளைக் குறிப்பிடலாம். பாவேந்தரின் படைப்புகளின் வழியேயும், வரலாற்றுத் தரவுகளின் வழியேயும் தம்முடைய கருத்தை ஆணித்தரமாக நிறுவிக் கொண்டே செல்கிறார் ச.சு. இளங்கோ.

பாவேந்தருக்குத் திராவிட இயக்கத்தின்பால் நாட்டமும் அதன் கொள்கைகளில் ஈர்ப்பும் ஏற்படு வதற்கு முன்பு, தீவிர இறை நம்பிக்கையாளராக இருந்த மையை, அவருடைய படைப்புகளின் வழியே விளக்கி உள்ளார் ச.சு. இளங்கோ. பாவேந்தரின் பாத்துறை மாற்றத்திற்கு கவிஞர் பாரதியே காரணம் என்ற வழமையான, சான்றுகளற்ற கருத்துகளுக்குச் சரியான எதிர்வினையை அளிக்கிறது இந்நூல். பாவேந்தரின் பாத்துறை மாற்றம் எவ்வகையிலும் கவிஞர் பாரதி காரணமில்லை என்பதை சுப்பிரமணியர் துதியமுது என்ற படைப்பின் வழி நிரூபித்துக் காட்டுகிறார் ச.சு.இளங்கோ.

கடவுள் ஈடுபாட்டினால் பிறமொழிச் சொற்கள் கலந்துவிட்டன என்பதுடன், அக்காலத்தே அவர்க்கு மொழித் தூய்மையைப் பேண வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதிருந்தது என்று, பாவேந்தரின் மொழி ஆளுகையை விமரிசனப் போக்குடன் அணுகுகிறார் நூலாசிரியர் (ப-332). பாவேந்தர் மீது தனக்குப் பற்று இருக்கிறது என்பதற்காக வானளாவ அவரைப் புகழாமல் நடுநிலைமையோடு ஆய்ந்து, அவரின் எதிரெதிர் நிலை களையும் சீரோடு அளித்து, தன்னுடைய ஆய்வுக்கு நேர்மையானவராக விளங்குகிறார் ச.சு. இளங்கோ.

பாவேந்தரின் சிந்தனைகளை எளிதாகப் புலப் படுத்துவதில் இந்நூல் சிறந்து விளங்குகிறது. மேலும், பாவேந்தரின் படைப்புகளில் படிந்துள்ள முரண்களை சான்றுடன் விளக்கி, தாம் கொண்ட கொள்கைக்குப் பாவேந்தர் உண்மையுடன் நடந்துகொண்டதைப் போன்று, இந்நூலாசிரியர் தம்முடைய ஆய்வுக்கு உண்மையுடன் நடந்துள்ளார் என்பதற்கு, இந்நூலின் ஒவ்வொரு எழுத்துகளும் சாட்சிகளாகின்றன.

திராவிட இயக்கமும்  பாவேந்தர் பாரதிதாசனும்

ச.சு.இளங்கோ

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

விலை -  315/-

Pin It