இந்தியாவோடு நம்மை (தமிழ்நாட்டை) இணைத்து சட்டத்தால் கட்டி விட்டதால் நாம் பூரண சுதந்திரம் கேட்கக் கூடாது என்பது தேசக் கட்டளையா என்று கேட்கிறேன்.

நான் (தமிழ்நாடு) பூரண சுதந்திரம் பெறக் கூடாது என்பதற்கு வடநாட்டானா அதிகாரி?

இது அடிமைநாடா? சுதந்திர நாடா?

ஒரு நாடு சுதந்திரம் பெற வேண்டுமா? வேண்டாமா? ஒரு மொழி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு வேறு நாட்டான்களா அதிகாரிகளாய் இருப்பது? இது சொந்த நாட்டானுக்கு எவ்வளவு அவமானம்!

“எனக்கு இந்த காட்டாட்சி வேண்டாம்.”

“எனக்கு இந்தி மொழி வேண்டாம்” என்றால் இதுசட்ட விரோதம் என்று பதிலளித்தால் இது அடிமை நாடா? சுதந்திர நாடா?

எனது சுதந்திரத்தை மறுக்க அன்னியனுக்கு என்ன அதிகாரம்?

ஒரு ஊரில் ஒரு பகுத்தறிவுவாதி (அடங்காப் பிடாரி) இருந்தான். அவன் மீது நம்பிக்கைக்காரர்களுக்கு வெறுப்பு. அவனுக்கு ஒரு நாள் ஒரு மயக்கம் வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். அங்குள்ள டாக்டரைக் கொண்டு அந்த மயக்கமாய்க் கிடந்தவனை செத்துப் போய்விட்டான் என்று சொல்லிவிடு. நாங்கள் மூட்டைக் கட்டிக் கொண்டு போய்ப் புதைத்து விடுகிறோம் என்று சொல்லி டாக்டரைக் கொண்டு மயக்கமாய்க் கிடக்கிறவனை இவன் செத்துப் போய்விட்டான் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.

உடனே ஆஸ்பத்திரி ஆட்கள் இவனை ஒரு கோணிப் பைக்குள் திணிக்கத் தலையைத் தூக்கி பைக்குள் திணித்தார்கள். அதற்குள் மயக்கக் காரனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது. உடனே தன் தலையை தூக்கினவர்களைப் பார்த்து, “என்னை என்னச் செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அந்த ஆட்கள், “நீ செத்துப் போய் விட்டாய். உன்னைப் புதைப்பதற்காகத் தூக்குகிறோம்” என்றார்கள். அதற்கு மயக்கம் போட்டுக் கிடந்தவன் இதைக் கேட்டவுடன் தடபுடலாய், “யார் சொன்னான் நான் செத்துப் போய்விட்டே னென்று? நான் உயிரோடு இருக்கிறேன்! என்னை இப்படிச் சொல்கிறிர்களே! இது என்னடா அக்கிரமம்!” என்றான். அதற்கு அந்த ஆட்கள் “நீ செத்து விட்டாய் என்று டாக்டர் சொல்லிவிட்டார். நீ யார் சாகவில்லை என்பதற்கு? நீ என்ன டாக்டரா? ஒரு மனிதன் செத்தானா இல்லையா என்பதற்கு டாக்டருக்குத்தான் உரிமை உண்டு. அ வர் படித்தவர், நீ யார் அதை மறுக்க?” என்று சொல்லி சாக்குப் பையை அவன் தலையில் போட்டார்கள். உடனே அந்த மயக்கக்காரன் தன் மடியிலிருந்த கத்தியை எடுத்து ஆளுக்கு இரண்டு குத்துக் குத்தினான். ஆட்கள் ஓடி விட்டார்கள். அவன் வீட்டிற்கு சுகமே திரும்பி வந்தான் என்கிற ஒரு கதை உண்டு.

அதுபோல் “எனக்கு சுதந்திரம் வேண்டுமென்றால் சட்டத்திற்கு விரோதம் எனக்கு இந்தி வேண்டா மென்றால் அது சட்டத்திற்கு விரோதம்” என்பதாக சட்டத்தைக் காட்டிக் கொண்டே எத்தனை நாளைக்குப் பிற நாடுகளை அடிமையாக்கிக் கொண்டு பிற மொழிகளைப் புகுத்திக் கொண்டு ஆதிக்கம் செய்யலாம் என்று வடவர்களும் அவர்கள் கூலிகளும் காத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மொழிப் பிரச்சினை நமக்கு நல்ல வாய்ப்பு என்றுதான் கருதுகிறேன்.

இதிலிருந்துதான் பூரண சுயேச்சை தோன்ற வாய்ப்பு ஏற்படும்.

எப்படிப்பட்ட சட்டத்திற்கும் அதன் மதிப்பிற்கும் எல்லை உண்டு.

- பெரியார்

Pin It