"மாவோயிஸ்டுகள் இவ்வளவு பேர்கள் காவல் துறையினரிடம் சரண் அடைந்தனர்" "நக்சலைட்டுகள் அவ்வளவு பேர்கள் அரசு அதிகாரிகளிடம் சரண் அடைந்தனர்" என்று ஊடகங்களில் செய்திகள் வெளி வருவதைப் பார்த்து இருக்கலாம். ஆனால் சட்டிஸ்கர் மாநிலம், நாராயண்பூர் பகுதியில் உள்ள ஃபரஸ்கவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த மிச்சே வட்டா என்ற 37 வயது காவலர் தன் மனைவி மஞ்சுவுடன் சென்று குடுல் பகுதியைச் சேர்ந்த மக்கள் அரசாங்கத்திடம், அதாவது மாவோயிஸ்டுகளிடம் 29.3.2015 அன்று சரண் அடைந்தார். காவல் துறையினர் அவரைக் காண வில்லையே என்று தேடிய போது 5.4.2015 அன்று இவ்விவரம் தெரிய வந்துள்ளது.

மிச்சே வட்டா 2005 ஆம் ஆண்டில் காவல் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்குப் பத்து ஆண்டுகளில் இரண்டு பதவி உயர்வுகள் கிடைத்து உள்ளன. மக்களிடம் மாவோயிஸ்டுகளின் பெயர் கெட வேண்டும் என்பதற்காகவும், மக்கள் மாவோயிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்காவிட்டால் அவர்களுடைய கதி இதுதான் என்று அச்சுறுத்துவதற்காகவும் அவருடைய பணிக் காலத்தில் போலியான எதிர்ச் சண்டையில் பல அப்பாவி மக்களைக் கொலை செய்யப் பணிக்கப்பட்டு இருக்கிறார். 2007 ஆம் ஆண்டில் அவரது அக்கா மகன் ரைனுவும் அவரது நண்பர் சமலுவும் இது போன்ற போலி எதிர் சண்டையில் கொல்லப்பட்டனர். மேலும் அவரது தம்பி கரியா வட்டா ககடஜோர் காவல் துறை முகாமில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த மிச்சே வட்டா, தனக்கு இடப்படும் ஆணைகளுக்குக் காரணம் கேட்க ஆரம்பித்தார். இதனால் கோபம் அடைந்த உயர் அதிகாரிகள் மிச்சே வட்டாவின் மனைவியைத் தொந்தரவு செய்வதில் ஈடுபட்டனர். இதைக் கண்டு மனம் உடைந்து போன மிச்சே வட்டாவும், அவரது மனைவியும் நேராக மாவோயிஸ்டுகளிடம் சென்று, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விவரித்து, இது வரை ஆதிக்கவாதிகளுக்குச் சேவை செய்து கொண்டு இருந்ததை மாற்றி, இனி ஒடுக்கப்படும் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகக் கூறி அவர்களிடம் சரண் அடைந்தனர்.

மிச்சே வட்டா என்ற அந்தக் காவலரின் மன உளைச்சல் உண்மை என்பதை வேத் பால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அடைந்த விவரங்களை 18.4.2015 அன்று வெளியிட்டதில் இருந்து தெரிகிறது. இந்திய அரசின், உள் துறை அமைச்சகத்தில் இருந்து அவர் பெற்ற தகவலின்படி, இந்திய அரசுக்கும் நக்சலைட்டுகளுக்கும் நடக்கும் போரில் கடந்த இருபது ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டு உள்ளனர். அவர்களில் 61 பேர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிப் பொது மக்கள்; 23 பேர்கள் மாவோயிஸ்டுகள்; 16 பேர்கள் காவல் துறையினர்.

நக்சலைட்டுகளை ஒடுக்குகிறேம் என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசு காவல் துறையினரைக் காவு கொடுப்பது மட்டும் அல்லாமல், அப்பாவிப் பொதுமக்களையும் அனாவசியமாகக் கொன்று, தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறது என்று புரட்சிகர எழுத்தாளர் வரவர ராவ் 18.4.2015 அன்று ஹைதரா பாத்தில் தெரிவித்தார். இந்திய அரசின் இயலாமையே நக்சலைட்டுகளின் வெற்றிக்கு ஒரு ஆரம்பம் என்றும் அவர் கூறினார். மேலும் சட்டிஸ்கர், ஒரிசா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் நக்சலைட்டுகளின் கீழ் இயங்கும் மக்கள் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுரண்டலுக்கு ஆட்படாமல் வாழ்கின்றனர் என்றும், காலப்போக்கில் தங்கள் இயக்கம் நாடு முழு மைக்கும் பரவி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

நடந்த செய்திகளைக் கூறுவதில் நக்சலைட்டுகள் உண்மையையே கூறுகின்றனர். ஆனால் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றி பற்றிக் கூறுகை யில், இந்திய நாட்டின் நிலைமையை, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்க வலிமையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவறு புரிகின்றனர்.

இந்திய நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நக்சலைட்டுகளின் இயக்கத்தால் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 க்கும் குறைவாகவே இருக்கும். கடந்த பல ஆண்டுகளாக இவர்களுடைய வளர்ச்சி ஊக்கப்படும்படியாக இல்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.

1940களில் தெலங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம், அன்றைய வலுவில்லாத இந்திய அரசினாலேயே அடக்க முடிந்தது. இன்று தனது வலிமையை இந்திய அரசு பல மடங்கு பெருக்கி உள்ள நிலைமையில், அதே போல் சின்னஞ்சிறு பகுதிகளில் மட்டும் இயக்கத்தை வளர்த்து எப்படி வெற்றி அடைய முடியும்?

மேலும் இன்னொரு படிப்பினையையும் மனதில் கொள்ளுவது மிகவும் அவசியம். விடுதலை இயக்கத்தை ஈழத் தமிழர்கள் மிக வலிமையாகவே வளர்த்து எடுத்தார்கள். இந்தியாவில் உள்ள எந்த விடுதலை இயக்கமும் ஒப்பிடவே முடியாத அளவிற்கு மிக வலிமையாகவே வளர்த்து எடுத்து இருந்தார்கள். சிங்கள அரசை வென்று, ஈழப் பகுதியில் வெற்றிகரமாக அரசை நடத்திக் கெண்டும் இருந்தார்கள். சிங்கள் அரசு ஒன்றும் செய்ய முடியாமல் ஒதுங்கி நின்றே இருந்தது. ஆனால் பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு தலையிட்ட பிறகு நிலைமை மாறியது.

அந்நிய மண்ணிலேயே தங்கள் வலிமையை நிலைநாட்டிய பார்ப்பன அதிகார வர்க்கம், இந்தியாவில் மிக மிக எளிதாகத் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளும் என்று புரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

அதனால் தான் தந்தை பெரியார் ஈழத் தந்தை செல்வாவிடம் "நாமே இங்கு பார்ப்பன அரசுக்கு அடிமையாக இருக்கிறோம். ஒரு அடிமை இன் னொரு அடிமைக்கு எப்படி அய்யா உதவ முடியும்?" என்று கேட்டார்.

அந்த தர்க்க நியாயம் இந்திய மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு அதிகமாகவே பொருந்தும். இந்திய மக்களில் 80 க்கும் அதிமானவர்கள், ஈழப் பிரச்சினையில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாகவே இருந்தார்கள். (இப்பொழுதும் இருக்கிறார்கள்) ஆனால் வெற்றி பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கே கிடைத்தது.

இதே நிலைமை தான் இந்திய மக்களின் விடுதலை இயக்கங்களுக்கும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நம் மக்கள் விடுதலை இயக்கங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான முன் நிபந்தனை, இந்திய அதிகார மையத்தில் பார்ப்பனர் களின் வலிமையை முற்றாக ஒழிப்பது ஒன்றே ஆகும்.

பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தை எப்படி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்? அதிகார மையங்களில் நிரம்பி வழியும் பார்ப்பனர்கள், (பெரியார், அம்பேத்கர் போன்றோருடைய போராட்டங்களின் பயனாக) அதிகார மையங்களில் நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைச் செயல்பட விடாமல் தடுக்கிறார்கள். அனைத்து அரசியல் வாதிகளும் ஊழல் செய்யும் நிலையில், ஒடுக்கப்பட்ட வகுப்பு அரசியல்வாதிகளை மட்டும் பழி வாங்கி ஒடுக்கி வைத்து, அவர்கள் தங்கள் வகுப்பு நலன்களை முன்னெடுப்பதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு செய்து, தங்களை மீறி யாரும் போய் விடாதபடி பார்த்துக் கொண்டு, தங்கள் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

அதிகார மையங்களில் அவர்கள் பெரும் அளவில் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?

மக்களில் அனைத்துப் பிரிவினரிலும் உயர்ந்த அறிவுத் திறன் முதல் குறைந்த அறிவுத் திறன் வரை உடையவர்கள் உள்ளனர். இது மாற்ற முடியாத இயற்கை நியதி. ஆனால் பொதுப் போட்டி முறையில் இது பிரதி பலிப்பதே இல்லை. அதிகாரம் படைத்த வேலைகளுக்குப் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள். மற்ற கீழ் நிலை வேலைகளுக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். அப்படி என்றால் பொதுப் போட்டி முறையில் கொடூரமான சூது உள்ளடங்கி இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா?

இக்கொடூரமான சூதை ஒழித்துக் கட்டி, உண்மையில் திறமை உடையவர்கள் உயர்நிலைகளிலும், திறமைக் குறைவானோர் அடுத்த நிலைகளிலும் தேர்ந்து எடுக்கப்படுவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும்.

அது தான் விகிதாச்சாரப் பங்கீட்டு முறை. இம்முறை யில் அரசுத் துறை, தனியார் துறை, பெட்ரோல், எரிவாயு, சமையல் எண்ணெய், உரம் போன்ற முகவர் பணி ஆகிய சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தி லும், அனைத்து நிலைகளிலும், முற்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர். மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அவரவர் விகிதத்திற்கு ஏற்ப, பங்கிட்டுக் கொடுத்து விட்டால், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைசாலிகள் உயர் நிலைப் பணிகளிலும், அனைத்து வகுப்பிலும் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைப் பணிகளிலும் இருப்பர்.

அந்நிலையில் இப்போது நடப்பது போல, பார்ப்பனர்கள் மட்டும் ஒன்று கூடிக் கமுக்கமாகப் பேசி அவர்களுடைய நலன்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், அதிகாரம் படைத்த பதவிகளில் பார்ப்பனர்களின் சூதை முறியடிக்கக் கூடிய வலிமை உள்ள அளவிற்குப் போதுமான எண்ணிக்கையில் இருந்தால், அப்பொழுது இந்திய அரசின் முடிவுகளே கூட இப்போது இருப்பது போல் இருக்க முடியாது. அந்நிலையில் அதிகார வர்க்கத்திலேயே கூட மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவாகப் பிளவுகள் உண்டாகலாம். அதாவது ஆதிக்க வர்க்கத்தின் வலிமை குறையும்.

அது மக்கள் விடுதலை இயக்கங்களை வெற்றிப் பாதையில் கால் பதிக்க வைக்கும். ஆகவே நாம் விகிதாச்சாரப் பங்கீட்டுக்காகப் போராடுவது முதன்மை யான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அவ்வாறு போராடாமல் இப்போது செல்லும் பாதையில் மட்டுமே தொடர்ந்து சென்றால், அது நமது செயல் வீரர்களைக் காவு கொடுப்பதில் கொண்டு போய் முடியும்.

Pin It