மத்தியிலே தொல்லியலின் அறிஞர் நல்ல
மாண்புடைய அமர்நாத்து இராம்கி ருட்ணன்
முத்தாய்ப்பாய் வைகைநதிக் கரையின் ஓரம்
முகப்புள்ள கீழடியில் ஆய்வு செய்து
இத்தரையில் தமிழினந்தான் மூத்தார் என்றும்
ஏற்றமிகு பண்பாட்டில் வாழ்ந்தார் என்றும்
முத்திரையைத் தான்பதித்தார் ஆத லாலே
மூத்தகுடி உலகத்தில் தமிழர் என்போம்!
கீழடியில் தான்தொடங்கி கடலின் ஈறாய்
கரையோரக் கிராமங்கள் ஆய்வு செய்து
கீழடியைத் தேர்ந்தெடுத்துத் தோண்டும் போது
கல்மணிகள் சுட்டசெங்கல் பானை ஓடு
அழகான உறைகிணறு ஈட்டி அம்பு
அங்குள்ள குளியலறை தாயக் கட்டை
கீழடியில் ஆயிரமாய் பொருள்கி டைக்க
காலத்தின் மூத்தகுடி தமிழர் என்போம்!
பழங்கால ஆலமரம் தேனூர் தன்னில்
புயல்மழையில் சாய்ந்துவிட வேரின் பக்கம்
குழந்தைகளின் விளையாட்டில் மண்ணில் ஆன
கலயந்தான் உடைந்துவிட தங்கக் காசு
புழக்கத்தில் வெளியில்வர அரசி டந்தான்
பொதுமக்கள் ஒப்படைத்தார்! மேலும் நல்ல
பழங்காலப் பொன்நகைகள் கிடைத்த தாலே
பண்பாட்டில் மூத்தகுடி தமிழர் என்போம்!
நதிஓரம் கிடைத்துள்ள தங்கக் காசில்
நற்றமிழில் கோதையெனும் பெயரைக் கண்டு
மதிப்பீடு செய்ததிலே தமிழர் பண்பு
மூவாயிரம் ஆண்டின் முன் இருக்கும் என்றார்
பதிந்துள்ள கருப்போடு சிவப்பு வண்ணம்
பானையதும் நெசவிரும்பு தொழில்க ளாலும்
அதிகளவு தமிழ் எழுத்துத் தெரிவ தாலும்
அறிவார்ந்த மூத்தகுடி தமிழர் என்போம்!
செல்வவளம் நகர்வணிகம் மதுரை என்றும்
சிலம்போடு பரிபாடல் மதுரைக் காஞ்சி
சொல்வளத்து இலக்கியங்கள் சொன்ன தற்கே
சான்றாகப் பலபொருள்கள் கிடைத்த தாங்கே!
தொல்லியலின் துறைமேலும் ஆய்வு செய்ய
தொன்மைபுகழ் கிராமங்கள் தேர்வு செய்து
உள்ளார்கள் என்கின்ற செய்தி யாலும்
உலகத்தில் மூத்தகுடி தமிழர் என்போம்!
- கவிஞர் முத்தரசன், பெரம்பலூர்