subavee agitation

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கிய மூன்றாம் கட்ட அகழாய்வை, மழையைக் காரணம் காட்டி, மீண்டும் மூடும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதனைக் கண்டித்தும், ஆய்வுப் பணி தொடர வேண்டும் என்று வலியுறுத்தியும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில், 16.09.2017 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரையில், கீழடியிலேயே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் சுப. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், திமுக மாவட்டத் துணைச்செயலாளர் சேங்கை மாறன், திராவிடர் கழகச் சட்டப்பிரிவுச் செயலாளர் கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கண்ணன், இந்திய மார்ஸ்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு அணியின் மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி, மீஞ்சூர் பாஸ்கர், தி.இ.த, பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர், மாநிலக் கூடுதல் அமைப்புச் செயலாளர் புலேந்திரன், மதுரை மாவட்டப் பொறுப்பாளர்கள் ஜெயபால் சண்முகம், ஜெயம்பெருமாள், அமர்நாத், சரவணன், நாகலட்சுமி, தம்பி பிரபு மற்றும் திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, முகவை மாவட்டப் பேரவைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கீழடியைச் சேர்ந்த வாசு, ராஜமூர்த்தி ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தமிழர்களின் தொன்மையான வரலாற்றைக் கீழடியில் பார்க்க முடிந்தது. 2022 ஆண்டுகளுக்கு முன்னால் உறை கிணறுகளைத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதும், செங்கல் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர் என்பதும் மூன்றாம் கட்ட ஆய்வில் கிடைத்துள்ள வியத்தகு செய்திகளாக உள்ளன. எனினும், 110 ஏக்கரில் நடைபெறவேண்டிய ஆய்வு அங்கு வெறும் அரை ஏக்கரில்தான் நடந்து கொண்டுள்ளது.அதனையும் கூட மறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு!

இது புதிதன்று. ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளும் இப்படித்தான் 11 ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கின்றன. ஆய்வறிஞர் ராகவன் கொடுத்த மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ள அறிக்கையை இன்னும் மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. அப்பணியை விரைவுபடுத்த முயன்ற மகேஸ்வரி என்னும் அதிகாரி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருள்களோ, சிந்து சமவெளிக்கும் முந்தியனவாக உள்ளன.

தமிழர்களின் வரலாறு தொன்மையானது, அவர்கள் இந்தியாவின் மூத்த குடிமக்களாக வாழ்ந்துள்ளனர், சமயச் சார்பற்றவர்களாக இருந்துள்ளனர் என்னும் செய்திகள் எல்லாம் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைத் தேடுகின்றனர். இருக்கின்ற கீழடி ஆய்வை மூடுகின்றனர். இதுதான் இன்றையக் காவி அரசின் போக்காக உள்ளது. எத்தனை நாளைக்குத் தான் பஞ்சைப் போட்டு அவர்களால் நெருப்பை மறைக்க முடியும்?         

Pin It