வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது நேற்றா ? இன்றா?
காஞ்சீபுரம் மகாநாடு நடந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. மகாநாட் டின் சம்பவங்களும் பழைய கதை ஆகிவிட்டன. ஆனால் அம்மகாநாட்டின் சம்பவங்களால் ஒவ்வொரு நிமிஷமும் புதிய எண்ணங்களே தோன்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு காங்கிரஸ் ராஜீய நாடகத்தில் பிராமணரல்லாதவர்களின் சார்பாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடு, கலியாணசுந்திர முதலியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய இம்மூவர்களின் வேஷமும், விளம்பரங்களும்தான் அடிக்கடி விசேஷமாய்த் தோன்றும். இம்மூவர்கள்தான் காங்கிரஸில் பிராமணரல்லாதாருக்கு உள்ள பற்றுதலுக்கும் காங்கிரஸை பிராமணரல்லாதார் ஆமோதிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள்.
தென்னிந்திய நல உரிமை கூட்டுறவு சங்கம்
அதோடு மாத்திரமல்லாமல், காங்கிரஸ் “ பிராமணராஜ்யம் ” ஸ்தாபிக்கத்தகுந்த சாதனமென்றும் சுய ஆட்சி என்பது - பிராமண ஆக்ஷிதானென்றும் கருதிய பெரியோர்களான டாக்டர் டி.எம்.நாயர், ஸர்.பி. தியாகராய செட்டியார் போன்ற தேசாபிமானமும், அநுபவமும் வாய்ந்த பல பெரியோர்களால் சொல்லி, காங்கிரஸை ஒதுக்கி ‘தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்’ என்பதாக ஓர் சங்கத்தைக் கண்டு அதன்மூலமாய் பிராமணரல்லாதார் நன்மைக்கென ஜஸ்டிஸ், திராவிடன் என்கிற இரண்டு பத்திரிகைகளையும் தோற்றி, தீவிர பிரசாரங்களைச் செய்து, அதுகாலையில் பிராமணர்கள் வயப்பட்டுக்கிடந்த பெருவாரியான பல அதிகாரங்களையும் பதவிகளையும் பிராமணரல்லாதார் தங்கள் உரிமைக்குத் தகுந்த அளவு அடைய வேண்டும் எனக் கருதி பிரசாரமும் தொடங்கினார்கள்.
சென்னை மாகாண சங்கம்
அச்சமயத்தில் சங்கமும், பிரசாரங்களும் தென்னிந்திய மக்கள் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்றும், ஏதோ சிலர் அரசாங்கத்தின் வயப்பட்டு அவர்கள் தூண்டுகோலால் நடைபெறுகிற சங்கமென்றும், இதில் பிராமணரல்லாதார் கலந்துக்கொள்ளக்கூடாது என்றும் தென்னிந்திய பிராமணரல்லாத மக்களுக்கு நன்மை செய்யவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்வ உரிமை அளிக்கவும் சென்னை மாகாணச் சங்கம் என்பதாக ஒர் சங்கத்தை தோற்றியிருக்கிறோம்; அதில் பிராமணர்கள் யாரும் கலப்பில்லை. அதன் தத்துவமே காங்கிரஸ் மூலமாகச் சுயராஜ்யம் பெறுவதும், பிராமண ரல்லாதாருக்கு வகுப்புவாரிப்பிரதிநிதித்வம் பெறுவதும்தான் முக்கியமானது என்றும் அதன் அக்கிராசனாதிபதி திவான்பகதூர் பி. கேசவப் பிள்ளை யாகவும், உப அக்கிராசனாதிபதி ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலியோராகவும், காரியதரிசி
ஸ்ரீமான் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு முதலியோராகவும் இதற்குப் பிரசார பத்திரிகைகள் “இந்தியன் பேட்ரியாட்” என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் “தேசபக்தன்” என்கிற தமிழ்ப் பத்திரிகையையும் இவற்றிற்கு திவான் பகதூர் சி.கருணாகரமேனன், திரு . வி. கலியாணசுந்திர முதலியார் ஆகியவர்கள் முறையே பத்திராசிரியர்களாகவும், இருந்து நடந்துவரப்பட்டதோடு, இதன் பலனால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு, பிராமணரல்லாத பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமற் செய்ததுடன், காங்கிரஸ்தான் தேச விடுதலைக்குச் சாதனமென்றும், சென்னை மாகாணச்சங்கம்தான் பிராமணரல்லாதாரின் நன்மையைக் கருதக்கூடிய தென்றும் சென்னை மாகாணத்திலுள்ள பிராமணரல்லாத மேற்கண்ட முக்கியஸ்தர்கள்தான் தென்னாட்டுப் பிராமணரல்லாதார் பிரதிநிதிகளென்றும் சன்னது கிடைத்ததாய்விட்டது.
வகுப்புவாரி பிரதிநிதித்வம்
இதோடு மாத்திரமல்லாமல், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தாரும், சென்னை மாகாணச் சங்கத்தாரும் போட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்வ கூச்சல்களினால் கிறிஸ்தவர், மகமதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ - இந்தியர் முதலிய வகுப்பாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வமும், விவசாயிகள், லேவாதிக்காரர், இந்திய வியாபாரிகள், ஐரோப்பிய வியாபாரிகள் முதலிய தொழிலாளிகளுக்கு தொழில்வாரி பிரதிநிதித்வமும், தேர்தல்களில் கொடுக்கப்பட்ட தோடல்லாமல், பிராமணரல்லாதாருக்கென பல ஸ்தானங்களையும் ஒதுக்கி வைக்கப்பட அரசாங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காங்கிரஸில் வகுப்புவாரி பிரதிநிதித்வம்
இது இப்படி இருக்க, ராஜீய சபைகளான காங்கிரஸ் முதலிய சபைகளிலும் மகமதியர், கிறிஸ்துவர் முதலியோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கொடுக்க வேண்டும் என்று அவர்களோடு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது. இதுமாத்திரமேயல்லாமல் காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் உதாரணமாக எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், மகமதியர்களுக்கு இத்தனை ஸ்தானம், கிறிஸ்துவர்களுக்கு இத்தனை ஸ்தானம், தீண்டா தாருக்கு இத்தனை ஸ்தானம், இவை நீக்கிய மற்றவர்களுக்கு இத்தனை ஸ்தானம் என மாகாணவாரியாக ஒதுக்கி வைக்கப்பட்டு - அந்தப்படி இப்பொழுது காங்கிரஸிலும் அமுலில் நடந்து வருகிறது. இவ்வளவிருந்தும் மேலும் மேலும் இவை போதாதென்றும் இன்னும் சில ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டு மென்றும், ராஜீய காங்கிரசி லும், கான்பரஸ்களிலும் கிளர்ச்சிகளும் முயற்சிகளும் செய்து கொண்டே வரப்பட்டிருக்கிறது.
காக்கிநாடா காங்கிரஸ்
உதாரணமாக, காக்கிநாடா காங்கிரஸில் ஸ்ரீமான் தாஸ் அவர்களால் கொண்டுவரப்பட்டு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரால் ஆமோதிக்கப்பட்ட கல்கத்தா பேக்டினாலும் ( அது தோற்றதிற்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் ரகசியம். ) டாக்டர் அன்சாரி, லாலா லஜபதிராய் முதலியோர்களை இந்து - முஸ்ஸீம் ஒற்றுமைக்கு வழி காண ஒரு ஏற்பாடு கண்டுபிடிக்கும்படி காக்கினாடா காங்கிரசில் ஏற்படுத்திய கமிட்டியினாலும், அதன் குறிப்புகளினாலும் நன்றாய் விளங்கும்.
இன்னமும் தமிழ்நாட்டில் நடந்த மாகாண கான்பரன்ஸ்களின் போதெல்லாம் நடந்த பிராமணரல்லாத தனி கூட்டங்களாலும் நன்றாய் விளக்கலாம். அதாவது:-
25- வது ராஜீய மாகாண மகாநாடு
1919 - ம் வருடத்தில் திருச்சியில் நடைபெற்ற 25 - வது ராஜீய மாகாண கான்பரசின் போது அதே கொட்டகையில் ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியாரின் அக்கிராசனத்தின் கீழ் இதைப்பற்றிப் பேசி, ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்கத்தை நடத்த வேண்டுமென்றும், அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டு அது போலவே தீர்மானமும் நிறைவேறியும் இருக்கிறது.
26 - வது ராஜீய மாகாண மகாநாடு
1920 - ம் வருடம் திருநெல்வேலியில் நடந்த 26-வது ராஜீய மாகாண கான்பரஸின் போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில் ஸ்ரீமான் ஈ.வி.இராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி “ சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகத்திலும் ஜனசங்கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் ” என்கிற தீர்மானத்தைக் காலஞ் சென்ற ஸ்ரீமான் சோமசுந்தரம்பிள்ளை, ஸ்ரீமான்கள் வி.ஓ.சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை மற்றும் திருநெல்வேலி ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களிலுள்ள சில வக்கீல்களும் ஆகச் சேர்ந்து உடனே விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய
அத்தீர்மானத்தை - ஸ்ரீமான் ஈ.வி. இராம சாமி நாயக்கர் பிரேரேபிக்க, ஸ்ரீமான்கள் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் ஆமோதிக்க, காலஞ்சென்ற ஸ்ரீமான் எஸ்.கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாச்சாரம் ( ஞநசஉநவேயபந) என்கிற வார்த்தைக்குப் பதிலாக ‘போதுமான’ என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த ‘அடிகுவேட்லி’ (ஹனநளூரயவநடல) என்கின்ற பதத்தை போட்டுக்கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபனை கொண்டு வந்தார். இந்த ‘அடிகுவேட்லி’ என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் அம்மகாநாட்டிற்கு அக்கிராசனாதிபதியாயிருந்த இதே ஸ்ரீமான் எஸ்.ஸ்ரீனிவாசயங்காரவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தம் தான். ஆனால் ‘பெர்சண்டேஜ்’ என்பதைவிட ‘அடிகுவேட்லி’ என்பது நல்ல வார்த்தை யென்று சொல்லித் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார். இதுசமயம் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் அக்கூட்டத்தில் ஆஜராகித்தான் இருந்தார்கள்.
அதோடு “ ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப் பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும், செய்முறையும், தமிழ் கல்விக்கும் இருக்கவேண்டுமென்று ” ஒரு தீர்மானம், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு, ஸ்ரீமான் வி.ஓ.சிதம்பரம்பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் விஷயாலோசனைக் கமிட்டிக்கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு ‘அடிகுவேட்லி’ என்பதற்கும் ‘பர்சண்டேஜ்’ என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, அவர்கள் ‘அடிகுவேட்லி’ என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது ‘யோக்கியதைக்கு தகுந்த’ என்கிற பொருள்கூடக் கொள்ளலாம் என்றும், ‘பர்சண்டேஜ்’ என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன்னார்கள்.
பிறகு மகாநாட்டில் இத்தீர்மானம் வரும்போது, ‘பெர்சண்டேஜ்’ என்கிற வார்த்தையையே போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீமான்கள் நாயக்கரும், தண்டபாணி பிள்ளையும் அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்காரிடம் சொன்னார்கள். அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டார். கடைசியாக மகாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்கிராசனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். ஸ்ரீமான் தண்டபாணிபிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்வ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்கிராசனரைக் கூட்டத்தில் கேட்டார். அக்கிராசனர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமாதலால் அவற்றை ஒழுங்குத் தவறானது என்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லிவிட்டார். உடனே ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை எழுந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்டதன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத்தவறு என்று கேட்டார். அப்போது அங்கிருந்த பிராமணர்கள் ஸ்ரீமான் பிள்ளையை உட்காரும்படிக் கூச்சல் போட்டு அடக்கிவிட்டார்கள். கடைசியாக முடிவுரையில் ஸ்ரீமான் அய்யங்கார் காஞ்சி மகாநாட்டில் ஸ்ரீமான் முதலியாரைக் கொண்டு சமாதானம் சொல்லச் சொன்னது போல் வருத்தப்படுவதாகப் பொய்வேஷம் போட்டு மறைத்துவிட்டார்.
27 - வது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் 1921 - ம் ´ தஞ்சையில் நடந்த 27 - வது தமிழ் மாகாண மகாநாட்டில் கோயம்புத்தூர் ஜில்லா பிரதிநிதிகள் கொட்டகையில் ஸ்ரீமான் சர்க்கரை செட்டியார் அக்கிராசனத்தில் தமிழ்நாடு பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசி ஸ்ரீமான்கள் சென்னை சிங்காரவேலு செட்டியார், கல்யாணசுந்தர முதலியார், சர்க்கரை செட்டியார், வரதராஜுலு நாயுடு, ராமசாமி நாய்க்கர் ஆகியவர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று நியமித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்திற்கு வேண்டிய வேலை செய்யவும், ஜஸ்டிஸ் கட்சிக்குப் போட்டியாய் ஆரம்பித்த சென்னை மாகாண மகாநாட்டைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
28 - வது ராஜீய மாகாண மகாநாடு
1922-ம்´ திருப்பூரில் கூடிய 28-வது மாகாண மகாநாட்டிலும் நாடார்கள் முதலியோர்க்கு ஆலயப் பிரவேஷம் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு விரோதமான சாஸ்திரங்களையும், பழைய ஆசார வழக்கங்களையும் மாற்ற வேண்டும் என்றும் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு, விஷயாலோசனைக் கூட்டத்தில் தீர்மானமானதை வெளி மகாநாட்டில் பிரேரேபிக்க முடியாதபடி பல பிராமணர்கள் செய்தும், கடைசியாக பெரிய தகராறின் பேரில் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்திர முதலியார் பிரேரேபிக்க, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆமோதிக்க அதின் பேரில் ஸ்ரீமான்கள் எஸ்.சத்தியமூர்த்தி, மதுரை ஏ.வைத்திய நாதய்யர், கும்பகோணம் பந்துலுவய்யர் முதலியோர் ஆக்ஷபித்து கூச்சல்களையும், கலகத்தையும் உண்டாக்கி எப்படியோ அத்தீர்மானத்தை அப்படியே ஓட்டுக்கு விடாமல் அதன் ஜீவநாடியை எடுத்துவிட்டு ஒரு சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதுசமயம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு மதில் மேல் பூனை போலவே நடந்து கொண்டார் என்கிற பழியும் அவருக்கு வந்தது.
மதுரை - இராமனாதபுரம் மகாநாடு
1923 - ம் வருஷத்திய மதுரை - இராமநாதபுரம் மகாநாட்டிலும், பிராமணர் - பிராமணரல்லாதார் தகரார் ஏற்பட்டது. ஸ்ரீமான் சோமசுந்தர பாரதியார் இதில் சிக்கிக்கொண்டு வெகு பாடுபட்டார்.
1923 - ம் வருஷத்தில் திருச்சியில் டாக்டர் ராஜன் வீட்டில் கூட்டிய மாகாண காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாய் ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை அடுத்த மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாம் என்று ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய்த் தள்ளி வைத்துவிட்டார்.
29- வது ராஜீய மாகாண மாநாடு
1923 - ம் ´த்தில் சேலத்தில் கூடிய 29 -வது தமிழ் மாகாண மகாநாட்டு விஷயாலோசனைக் கமிட்டியில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அதுசமயம் இல்லாவிட்டாலும், அவருக்காக அவர் நண்பர்கள் ஸ்ரீமான்கள் தண்டபாணி பிள்ளையோ அல்லது பவானிசிங்கோ இதே தீர்மானத்தைப் பிரேரேபித்த போது, ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் இது சமயம் ஒத்துழையாமையே போய்விடும் போல் இருக்கிறது. டெல்லி மகாநாடு தீர்ந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அதை நிறுத்தச் செய்து விட்டார்கள்.
30 - வது ராஜீய மாகாண மகாநாடு
பின்னர் கூடிய 1924 - ம் வருடத்திய திருவண்ணாமலையில் கூடிய 30 -வது தமிழ் மாகாண மகாநாட்டில் அக்கிராசனம் வகித்த ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனப் பிரசங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி விஷேஷமாய் சொல்லப்பட்டுமிருக்கிறது.
பெல்காம் காங்கிரஸ்
பெல்காமில் கூடிய ராஜீய காங்கிரஸின் போதும் பிராமணரல்லாதாருக்கெனத் தனியாக ஓர் மகாநாட்டைக் கூட்டி வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தைப் பற்றி பேசியதோடு, ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும் தீர்மானம் செய்திருக்கிறது. அதே சமயம், மகாத்மாவினிடமும் இதைப்பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதோடு ஸ்ரீமான்கள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், பி. வரதராஜுலு நாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலியவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித் வத்தைப் பற்றிச் சொல்லியுமிருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் யோசித்து தக்கது செய்வதாய் சொல்லியுமிருக்கிறார்.
தஞ்சை தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு
இவ்வருடம் தஞ்சையில் ஸ்ரீமான் ஆதிநாராயண செட்டியார் உட்பட பிரதிநிதிகளாயிருந்த தேசீய பிராமணரல்லாதார் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இன்னும் எத்தனையோ விஷயங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ சரித்திரத்தைப் பற்றியும், தலைவர்களென்று சொல்லப்படுவோரின் தந்திரம், சூழ்ச்சி, குட்டிக்கரணம், குலத்தைக் கெடுக்கும் கோடாரிக்காம்புத்தன்மை முதலியவற்றைப் பற்றியும் விரிவாய் எடுத்துச் சொல்ல அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறோம். அல்லாமலும் பிராமணரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த உண்மைத் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அடுத்தாற்போல் எழுதலாமென்றிருக்கிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 06.12.1925)