பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டி, நீண்டநெடிய மக்கள் கோரிக்கை இப்போது நடை முறைக்கு வந்திருக்கிறது. நாம் கோரிய தடுப்பணைகள் பலவாகினும் இப்போது பாலாற்றின் கடைநிலைப் பகுதியான வாயலூர், வள்ளிபுரத்தில் தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட உள்ளன. திருமுக்கூடல், பெரும் பாக்கம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களில், அறிவித்தபடி தடுப்பணைகள் கட்டப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மக்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியாகும், பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட முதன் முதலில் கோரிக்கை வைத்துத் தன் வாழ்நாளெல்லாம் குரலெழுப்பிய தோழர் அரங்க. சானகிராமன் அவர்களின் பங்களிப்பு இதில் முதன்மை யானதாகும்.     

kanchiamudhan 600திராவிடர் இயக்கத்தின் தொடக்காலத் தூண்களாய் இருந்த பெரிய காஞ்சியில் திரு.அரங்கசாமி அவர்களும், சின்ன காஞ்சியில் திரு. அ.க.தங்கவேலரும் இன்னும் பலரும் அமைப்பை வளர்த்தனர். அப்படிப்பட்ட சுயமரியாதைக் குடும்பத்தில் அரங்கசாமி அவர்களுக்கு மகனாய்ப் பிறந்து, தொடக்க முதலே திராவிடர் கழகத்தில் வளர்ந்து, அக்கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், பின் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி யின் மாநில விவசாய அணி தலைவராகச் செயலாற்றியவர் முதுபெரும் தோழர் ஐயா அரங்க.சானகிராமன் அவர்கள்.

உழவர் நலன், சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழர் நலன், ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட ஆதரவு என்பதோடல்லாமல், பாலாற்று உரிமைக்காக்கவும், பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்கவும் நெடிய போராட்டங்களைக் கண்டவர். பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் தலைமை வழிகாட்டியாகவும் இருந்து, பல போராட்டங்களில் பங்கேற்றவர் ஐயா அரங்க சானகிராமன் அவர்கள்.     

1968 ஆம் ஆண்டு அண்ணா தமிழக முதல மைச்சராக இருந்த போது பாலாற்றில் தடுப்புச்சுவர்கள் கோரி முதன் முதலாவதாக விண்ணப்பம் தந்தவர் ஐயா சானகிராமன், வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினராக இருந்த அவர், அரசின் உழவர் குறைதீர் நாள் கூட்டத்தில் பல ஆண்டுகளாக முறையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் எனப் பலருக்கும் தன்வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பல விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழக முதல்வர்கள், பொதுப்பணித் துறை அமைச்சர்களையும் நேரில் சந்தித்துத் தடுப்பணை கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இவர் வைத்த கோரிக்கைகளுக்குப் பொதுப் பணித்துறை பாலாற்றில் தடுப்புச் சுவர் கட்ட திட்ட மதிப்பீடுகள் அரசிற்கு அனுப்பி உள்ளதாக பல்லாண்டுகளாக தகவல் அளித்ததோடு, சரி. உதாரணமாக: 2001 இல் பெரும்பாக்கம் கிராமத்தில் 75.00 இலட்சத்திலும், குருவி மலை கிராமத்தில் 145.00 இலட்சத்திலும், பழைய சீவரம் கிராமத்தில் 225.00 இலட்சத்திலும், செங்கற்பட்டு நகரத்தில் 225.00 இலட்சத்திலும், 2008 இல் திருக்கழுகுன்றம் வட்டம் வாயலூர் கிராமத்தில் 80.00 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அரசால் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும்;

2013 இல் பாலூர் அருகே 2,070 இலட்சத்திலும், ஆலப்பாக்கம் அருகே 1,450 இலட்சத்திலும் தடுப்ப ணைகள் கட்ட திட்டமதிப்பீடு அரசிற்கு அனுப்பி உள்ள தாகவும், நல்லாத்தூரில் தடுப்பணைகள் கட்ட ஆய்வுகள் மேற் கொண்டுள்ளதாவும் பொதுப்பணித்துறை ஐயா அரங்க சானகிராமன் அவர்களுக்குப் பல கடிதங்களை அரசு அனுப்பி உள்ளது.

2014 இல் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் சார்பில் பல தகவல்களை நான் கோரிய போது, காஞ்சிபுரம் வட்டத்தில் பெரும்பாக்கத்திலும், பழையசீவரம் பினாயூர் பகுதியிலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட உத்தேசிக் கப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பியது.

2015 இல் பாலாற்றில் பெரு வெள்ளம் வந்து  உழவருக்கும் பொதுமக்களுக்கும் நிலைத்த பயன் தராமல் கடலில் போய்க் கலந்தது.

2005இல் ஆந்திராவில் முதல்வராக இருந்த இராசசேகர், பாலாற்றில் கணேசபுரத்தில் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு விரோதமாக பெரிய அணை ஒன்றைக் கட்ட முயன்ற போது, தமிழகத்தில் பாலாறு குறித்த விழிப்புணர்வு அதிகமானது. அப்போது மா.பெ.பொ.க உள்ளிட்டுப் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் தொடங்கப்பட்டுப் பாலாற்றைக் காக்கும் பல போராட்டங்களை நடத்தியது.  இதில் மிக ஆர்வமாகக் கலந்து கொண்டு இயங்கினார் ஐயா அரங்க சானகிராமன் அவர்கள்.

அதுவரை ஆட்சியர்களிடம் மனுக்களில் கோரிய பாலாற்றில் தடுப்புச்சுவர் இயக்கம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுப் பாலாற்றில் தடுப்பணை கோரிக்கையாக முகிழ்ந்து மக்கள் பங்கேற்கும் போராட்ட இயக்கமாக மாற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு தன்னார்வ இயக்கங்கள், விவாசாயச் சங்கங்கள் இக்கோரிக்கையைக் கையிலெடுத்துப் போராட முன்வந்தனர். ஆயினும் பொதுப்பணித் துறையோ, தமிழக அரசோ பாலாற்றில் தடுப்பணைகள் அமைக்காமல் திட்ட மதிப்பு, திட்ட அறிக்கை வெளியிட்டுப் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டாமல் காலம் கடத்தி வந்தது. இரயில் நீர் என்ற பெயரில் தொடர்வண்டித் துறை பாலாற்றில் தண்ணீர் எடுத்து விற்க நீர் செறியூட்டும் தரைமட்டத் தடுப்புச்சுவர் ஒன்றைப் பாலூரில் கட்டப்பட்டது. ஆனால் உழவர்களின், பொதுமக்களின் பாலாற்றில் தடுப்பணை கோரிக்கையையும், அனைத்து இயக்கங்களின் போராட்டத்தை அரசும் பொதுப்பணித்துறையும் அலட்சியப் படுத்தித் தடுப்பணை கோரிக்கையைக் கிடப்பில் போட்டிருந்தனர்.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 இல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காகப் புதுச்சேரி வரை பயணம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் மற்றும் உழவர்கள் அமைப்புகள் புதுப் பாக்கத்தில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்தோம். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும், அண்ணா காலம் முதல் இந்நாள்வரை கிடப்பில் உள்ள இப் பிரச்சினையை விளக்கிக் கூறினோம். நெருக்கடியான நிலையில் புதியதாக முதல்வர் பொறுப்பேற்றிருந்த அவரும் உரிய கவனம் செலுத்தி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட ஆவனசெய்வதாக அறிவித்தார்.       

அதன் பின் ஆகஸ்டு 30இல் வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், பாலாற்றில் மதுராந்தம் வட்டம் ஈசூர் வள்ளிபுரத்திலும், வாலாசாபாத் வட்டம் வெங்குடி மற்றும் உள்ளாவூர், திருக்கழுகுன்றம் வட்டம் வாயலூர், செங்கற்பட்டு வட்டம் பழவேரி, மற்றும் பாலூர், காஞ்சிபுரம் வட்டம் வெங்கடாபுரம் ஆகிய ஏழு இடங்களில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் மீண்டும் இதை அறிவித்தார். ஆனாலும் அவ்வாண்டின் நிதி நிலை அறிக்கையில் தடுப்பணைகள் கட்ட உரிய நிதி ஒதுக்கவில்லை.      

2019 இல் வரலாறு காணாத வறட்சியால் பனை, தென்னை உள்ளிட்ட மரங்கள் காய்ந்து போனதாலும், சென்னைக்கு நீர் தரும் ஏரிகள் வற்றி, வரலாறு காணத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், உழவர்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு இயக்கங்களின் தொடர் கோரிக்கைகளாலும்  பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு அறிவிப்புகள் வெளியிட்டது. பாலாறு கடலில் கலக்கும் வாயலூரில் கல்பாக்கம் அணுவுலை தரும் நிதிப் பங்களிப்புடன் ஒரு அணையும், ஈசூர் வள்ளிபுரத்தில் ஒரு தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.  இவ்வணைகள் வலிமையற்று இருப்பதைச் சுட்டிக் காட்ட வலிவுபடுத்தும் பணியை மேற் கொள்ளப்படுகிறது.  மேலும் அறிவித்த 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.       

ஆற்றில் ஏற்படும் வெள்ள நீரைத்தேக்கப் பாலாற்றில் தடுப்பணை கட்டக்கோரி 50 ஆண்டுகளாகப் போராடி வந்த ஐயா அரங்க சானகிராமன் அவர்களின் கோரிக்கை, பாலாற்றில் தடுப்பணை குறித்து அவர் ஊன்றிய வித்து முளைத்து வரத் தொடங்கிவிட்டது. அவர் மறைவிற்குப் பின் அவரின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. அவரின் உழைப்பிற்கும் பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டியக்கம் உள்ளிட பல்வேறு அமைப்புகளுக்கும், உழவர்களுக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும்.

பாலாறு, கர்நாடக மாநிலம், நந்தி மலையில் உற்பத்தியாகி, ஆந்திரம் குப்பம் வழியாக வாணியம்பாடி, அருகே தமிழகத்தில் நுழைந்து, மாமல்லபுரம் அருகே உள்ள வாயலூர் அருகே வங்கக் கடலில் கலப்பதை நாம் அனைவரும் அறிவோம். பாலாறு பன்மாநில ஆறாக விளங்குவதால் கர்நாடகம், ஆந்திரம் தங்கள் பகுதியில் ஓடும் பாலாற்றைத் தடுத்து சட்டவிரோதமாக அணைகள் கட்டுவதால், அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது தமிழக அரசு.

மேலும், ஆற்றில் வரைமுறை இன்றி மணல் அள்ளப்பட்டுள்ளதால், பாலாறு பாலைவனமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தோல்கழிவு, ஊர்க் கழிவுகள், ஆலைக்கழிவுகளால் சீரழிந்து வரும் பாலாற்றைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாக உள்ளது.

இந்நிலையில் பாலாற்றைக் காக்க, தடுப்பணைகள் கட்ட தன் வாழ்நாளெல்லாம் போராடிய பெரியவர் மறைந்த அரங்க சானகிராமன் அவர்களின் உழைப்பை நினைவு கூர்வோம். அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம். ஒன்றுபட்டு பாலாற்றைக் காப்போம் அனைவரும் வாரீர்.!

Pin It