விடுதலைப் போராட்ட காலத்திலும், சுதந்திர இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகளின் மீது பல்வேறு சதி வழக்குகள் தொடரப்பட்டன.

Thiyagi Velayutham book1948-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரம், உழைக்கும் வர்க்கத்திற்கான சுதந்திரமல்ல. இது கை மாற்றப்பட்ட சுதந்திரம். உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி தெலுங்கானா மாதிரி அரசாங்க அமைப்பு களை ஏற்படுத்துவது அதன் மூலம் முதலாளித்துவ நேரு அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கல்கத்தா காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 1948-51 காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட சதி வழக்குகள் கம்யூனிஸ்டுகளின் மீது தொடரப்பட்டது. அவற்றில் ஒன்று நெல்லை கம்யூனிஸ்டு சதி வழக்கு.

இவ்வழக்கில் 97 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 92 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களின் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஒருவர் சிறையிலேயே உயிர் நீத்ததியாகி வேலாயுதம். இச்சதி வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களில் நால்வரே உயிரோடு உள்ளனர். அவர்கள் தோழர் நல்லகண்ணு, ஐ. மாயாண்டி பாரதி, நூலாசிரியர் ஆர்.எஸ். ஜேக்கப், பலவேசம் ஆகியோர்.

இந்நூலின், முதற்பதிப்பு 56 ஆண்டுகளுக்கு முன் 1957-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பின் விற்று வரவுத் தொகை தியாகி வேலாயுதத்தின் பிள்ளைகளுக்குத் தோழர் நல்ல கண்ணு மூலம் வழங்கப்பட்டதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

மறு பதிப்பிற்காக தியாகி வேலாயுதம் நூல் கேட்டு ஜனசக்தியில் விளம்பரம் செய்து கிடைக்கப்பெறாமல், தோழர்கள் மத்தியில் இத்தியாக வரலாறு சென்றடைய வேண்டும் என்ற உந்துதலில் மிகுந்த முயற்சிக்குப் பிறகு தேடி எடுக்கப்பட்ட மிகப் பழமையான நூலைச் செப்பம் செய்து இந்நூல் எழுதப்பட்டதாக இரண்டாம் பதிப்பிற்கான வரலாற்று உரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

இச்சிறுநூல் இந்திய உழைக்கும் வர்க்க விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் எண்ணிறந்த இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளான, தம் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகி வேலாயுதம் போன்றவர்கள் வரலாற்றின் பக்கங்களில் இறந்து விடக்கூடாது என்ற ஆதங்கத் துடன் படைக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டு தோழர்கள் அனுபவித்த சிறைக் கொடு மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணிறந்த துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் சிறைச்சாலையைக் கல்விச்சாலையாக மாற்றிய கம்யூனிஸ்டுகளின் மாண்பும், சிறையிலும் சுய பரிசோதனை செய்து கொள்ளும் கம்யூனிஸ ஒழுக்கமும், சிறையில் தோழர்களுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் மூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. உட்புண்கள் சீழ்பிடிக்காதவாறு அவ்வப்போது உடனுக்குடன் சுய விமர்சனங்கள் மூலம் சரிசெய்து கொள்வது கம்யூனிஸக் கோட் பாடு என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ஒவ்வொரு கம்யூனிஸ்டு மனதில் பதிக்க வேண்டிய செய்தி.

இத்தியாக வரலாற்றில் உள்ளத்தை உருக்கும் நிகழ்வுகளில் ஒன்று. ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட தோழர் வேலாயுதத்தைப் பார்க்க அவரது மனைவி பாப்பு அம்மாள் வருகிறார். மனைவிக்கு என்ன சொல்வது? இரண்டு பிள்ளைகளுக்கு எந்த ஆதாரத்தைக் காட்டி ஆறுதல் கூறுவது என்று எண்ணிக் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு மூத்த மகள் சரசுவை அணைத்துக் கொள்கிறார் வேலாயுதம்.

அவர் நினைத்தது போல் பாப்பு அம்மாள் அழவில்லை. “நான் பீடி சுற்றியாவது பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொள்வேன். நீங்கள் சந்தோஷமாயிருங்கள்” என்று கூறுகிறார். ஆறுதல் சொல்ல வந்த தோழர்கள் வாயடைத்து நிற்கின்றனர். நூலைப்படிக்கும் நம் நெஞ்சம் கனக்கிறது. கண்களில் நீர் மல்குகிறது. பாரதி கனவு கண்ட பாரதமாதா இவ்வீரத்தாய்.

இறக்கும் தருவாயில் தாம்பரம் மருத்துவ மனைக்கு அனுப்பப்படும் தியாகி வேலாயுதம் 1955 அக்டோபர் 26-ஆம் நாள் வாளி, வாளியாக ரத்தம் கக்கி உயிர் துறக்கிறார். இவர் இறந்து ஆறாவது மாதத்தில் அவரது மனைவி தனது இரு குழந்தைகளையும் விட்டு விட்டு உயிர் துறக்கிறார். சோகம் கப்பிய வரலாறு.

தோழர் வேலாயுதம் கக்கிய ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் நாஜி தூக்கு மேடையிலிருந்து பூசிக் சொன்ன கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொல்லுவதாக ஆசிரியர் பதிவு செய்கிறார்.

“நான் மகிழ்ச்சிக்காக வாழ்ந்தேன். மகிழ்ச்சிக்காக சாகிறேன். என் சமாதியில் துக்க தேவதையை நிறுத்துவது கொடுமையாகும். தியாகிகள் சிறைக் கொடுமைகளையும் மரணத்தையும் நாட்டுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர். தியாகிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

விதைக்கப் பட்டவர்களின் வேர்களைப் பற்றிக்கொண்டு, அக்கொள்கைகளின் சாரத்தை உட்கொண்டு, ஒரு புதிய தலைமுறை உருவாக வேண்டும் என்ற ஆதங்கத்துடன் படைக்கப்பட்ட நூல். இளம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் படிப்பதன் மூலம் தங்களது உணர்வு மட்டத்தை மேம்படுத்திக்கொள்ளவும், உழைக்கும் வர்க்கப் பண்பை வளர்த்துக் கொள்ளவும் இந்நூல் துணை செய்யும்.

தியாகி வேலாயுதம்

வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை : ` 40.00

Pin It