உவமைப் பயன்பாட்டில் பேசுவோர் (கூற்று), அறிவு (தோற்றம்), நோக்கம் (நிலைக்களம்), பேசு வோரிடமும் கேட்போரிடமும் தோன்றும் மெய்ப் பாடுகள், மொழி நடை மாறுபாடுகள் (உள்ளுறை உவமம், நிரனிறை) ஆகிய கூறுகள் புதைந்துள்ளன. உவமை பயன்படுத்தி ஒருவரை/ ஒரு பொருளை பெருமைப்படுத்தி / சிறுமைப்படுத்திப் பேசும்போது மெய்ப்பாடு தோன்றும் என்பதைத் தொல்காப்பியம் உவமவியலில் ஒரு சூத்திரத்தில் (19) குறிப்பிட்டு உள்ளதால் உவமப் பயன்பாட்டில் மெய்ப்பாடும் புதைந்துள்ள கருத்து எடுத்துக்கொள்ளப்பட்டு ஆராயப் படுகிறது. ஆனால் அவை தமிழ் ஆய்வில் சரியான கவனம் பெறவில்லை (சண்முகம், 2018).

தமிழில் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபாகக் கருதப்பட்டு ‘இதனின் இற்று இது’ என்ற தொடரியல் வாய்பாட்டில் அமையும் என்று கூறியுள்ளது (வேற்றுமையியல். 16). அடுத்த சூத்திரத்தில் ‘இன்’ உருபு கொண்டு முடியும் சொற்களைத் தொகுத்துக் கூறியுள்ளதே தவிர பொதுமைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் சேனாவரையர் பொரு (ஒத்தது) என்பது உறழ்பொரு, உவமப் பொரு என்று இரண்டு வகைப் படுத்தியுள்ளார். தெய்வச்சிலையார் ‘பொருவும் மிகுதலும் குறைதலும் ஒத்தலும் என்று மூன்று வகைப்படும்’ என்று கூறியுள்ளார். எனவே உவமையில் ஒப்பு, உறழ் என்ற இரண்டு கருத்துகள் அமைந்துள்ளன என்பது தெளிவாகிறது.

ஆங்கிலத்தில் பெயரடைச் சொற்களில் (adjective) இயல்பு (positive), ஒப்பு (comparative), மீ உறழ்வு (superlative) என்று மூன்று இலக்கண நோக்கில் வேறு படுத்தப்படுவது அறியத் தகுந்தது. உவமையில் மீ உறழ்வு என்பதை மூன்றாவது நிலையைக் கொள்ளலாம். தமிழில் உரையாசிரியர்கள் கூறியபடி ‘இன்’ உருபு ஒப்பு, உறழ்வு என்ற இரண்டு பொருள்களிலும் ‘இனும்‘ என்பது மீ உறழ்வும் பொருளிலும் அமைந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

‘ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்/ பேரறி வாளன் திரு’ (குறள். 215=பேரறிவாளனுடைய செல்வம் குடிக்கிற நீர் உடைய ஏரி நீர் நிறைந்திருப்பது போன்றது) என்பது ஒப்பு உவமை ஆகும். ‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து/ மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ (குறள்.68,=தன்னைவிட தன்குழந்தைகள் அறிவுடையாக இருப்பது இந்த உலகத்தில் எல்லோருக்கும் இனியது) என்பது உறழ்வு உவமை ஆகும். இன் உருபோடு உம் விகுதி சேர்த்து உறழ் பொருளும் மீ உறழ் பொருளும் உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் / சிறுகை அளாவிய கூழ்’ (குறள். 64= தன் குழந்தைகள் கையால் தொட்ட உணவு அமிழ்தத்தை விட மிகவும் இனியது) ‘ஆற்ற இனிது’ என்பது மீ உறழ்வு உவமை ஆகும். காரணம் அமிழ்தே இனிமையில் மிக உயர்ந்தது. அதனால் அமிழ்தத்தோடு ஒப்பிட்டது மீ உறழ்வு என்று கொள்ளப்படுகிறது. ‘யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்/ யாரினும் யாரினும் என்று’ என்ற குறளில் (1314) முதல் ‘யாரினும்’ உறழ் உவமையாகவும் ‘யாரினும் யாரினும்’ என்ற அடுக்குத் தொடர் மீ உறழ்வாகவும் கொள்ள வைக்கிறது.

மேலும் தமிழில் சொல் உருபுகளாக ஒப்ப, போல, அன்ன, நிகர்ப்ப, ஆங்கு முதலியவைகளோடு ஊங்கு, வெல்ல, வியக்க முதலியவை காணப்படுவது மீ உறழ்வு உவமைகளாகக் கருதலாம்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில் லார்க்கு/ இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (குறள்.247). இங்கு ‘ஆங்கு’ என்பது உவமச் சொல் உருபாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சேய்மைச் சுட்டு அடிப்படையாகப் பிறந்தது. அதன் அடிப்படையில் ‘ஊங்கு’ என்பதும் உவமச் சொல் உருபாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. அது, உது என்ற மிகச் சேய்மைச் சுட்டு அடியாகப் பிறந்தது. எனவே ஊங்கு என்பதை மீ உறழ் உவமை சொல்லுருபாகக் கொள்ளலாம். ‘அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை/ மறத்தலின் ஊங்கு இல்லை கேடு’ (32). என்பது மீ உறழ்வு உவமையாகக் கருதலாம்.

குயில் பாட்டில் ‘கந்தை போல் வேகமுறத் தாவுகையில்’ (102, கட்டுத்தறியை அறுத்துப் பாயும் குதிரை போல்’, பொன் போல் குரலும், புதிய மின்வெட்டு போல் வார்த்தைகளும்’ (152) போன்றவை ஒப்புப் பொருளும்; ‘வானரர் சாதிக்கு மாந்தர் நிகர் ஆவாரோ’ (96), வேகமுறப் பாய்வதிலே / வானரர் போல் ஆவாரோ’ (100/1), ‘சாதிக் குயில்களைப் போல் / இல்லாமல்... எல்லார் மொழியும் விளங்குவதேன்’ (246) ஆகியவை உறழ்வுப் பொருளும்; ‘வானரர் போற் சாதியன்று மண்ணுலகில் மீதுளதோ’ (104), ஓதிப் புகழ்வார் உவமையன்று காண்பாரோ’ (138), ‘நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை ஒப்புளதோ’ (141), ‘பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதி உண்டோ’ (154), ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ (194) ஆகியவை மீ உறழ்வுப் பொருளும் உணர்த்துகின்றன.

உறழ்வு, மீ உறழ்வுப் பொருள்கள் தொடரியல் அமைப்பாலும் உறுதி பெறுவது புலனாகிறது. வினா வாக்கியம் வரும் போது உறழ்வுப் பொருளும்; இடப்பொருள் (ஊர், நாடு உலகம்) + வினா வினைமுற்று குறிப்பிட்டுச் சொல்லும்போது மீ உறழ்வுப் பொருளும் புலப்படுத்தப்படுகின்றன.

இதன் அடிப்படையில் பாரதியின் குயில்பாட்டில் அமைந்துள்ள உவமைகளின் உருபுகள், அவைகளின் வகைகள், அங்குப் புதைந்துள்ள மெய்ப்பாடு ஆகியவை இங்கு விளக்கப்படுகின்றன.

2) குயில் பாட்டில் உவம உருபுகள்

குயில் பாட்டில் -இன்/ இனும் உருபு காணப்பட வில்லை, மாறாக ஒத்த/ ஒப்பு, நிகர்/ நிகர்த்த, போல/ போல், இணை, ஆ/ ஆம்/ ஆக, என, ஆகிய சொல்லுருபுகளே உவம உருபுகளாக அமைந்து; ஒப்பு, உறழ், மீ உறழ்வு ஆகிய மூன்று பொருளிலும் காணப்படு கின்றன. மேலும் சில உவமைசார் புதிய மொழி நடைகளும் குயில்பாட்டில் அமைந்துள்ளன.

சொல்லுருபுகளில் ஆ/ ஆம்/ ஆக, என, ஆகிய இரண்டு தவிர அவை ஒப்புப்பொருளை உணர்த்தும் சொற்கள் என்பது வெளிப்படை. ஆ/ ஆம், என, ஆகிய இரண்டும் உவமை உருபுகளாக இப்பொழுது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன (பார்க்க, சீனிவாசன், 1978: 272, 278).

2.1.ஆ~ஆக~ஆம்

‘நான்குநாள் பத்துயுக மாக்கழிப்பேன்‘ (64) இங்குப் ‘பத்து ஊழிகளாக’ என்று நேர்ப்பொருளில் சிவமணி (2008:23) கொண்டுள்ளார். ஆனால் நான்குநாளை பத்துயுகம் போலக் கழிப்பேன் என்றும் கொள்ளலாம். மெய்ப்பாடு = மருட்கை

சங்க இலக்கியத்தில் ஆக/ ஆகிய என என்ற இரண்டும் உவம உருபாக பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சீனிவாசன் (1973:273) எடுத்துக்காட்டியுள்ளார். ‘முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக/ நகுமே தோழி’ (குறுந்தொகை 126. 3-5) என்பதற்கு உ. வே.சா. (1937 : 280) ‘தொகை முகையாகலின் பல் வரிசையை ஒத்தன’ என்று பொருள் எழுதியுள்ளதும் அறியத் தகுந்தது.

அந்த முறையில் ‘நான்குநாள் பத்துயுக மாக்கழிப் பேன்’ (64) என்பதை நான்குநாள் பத்துயுகம் போலக் கழிப்பேன் என்று பொருள் கொண்டு உவம உருபாகக் கருதலாம்.

ஆம்

‘மோகனமாம் சோதி’ (2, இன்பம் போன்ற ஒளி), தோற்றம் = மெய், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = பெருமிதம்

உள்ளமாம் வீணை (57,உள்ளம் போன்ற வீணை) தோற்றம் = பயன், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = பெருமிதம்

மன்மதனாம் பொய்த் தேவே (82,மன்மதனாகிய பொய்க் கடவுள்) குயில்

(குயில் பற்றிய வருணனை),

மானுடராம் பேய்கள் (168), ‘புல்லாக என்னைப் புறக்கணித்து’ (239) என்பவைகளை மானுடர் போன்ற பேய்கள் என்றும் புல் போன்று புறக்கணித்து என்றும் பொருள் கொள்ளலாம். தோற்றம் = உரு, நிலைக்களன் = வலி (?). மெய்ப்பாடு = மருட்கை (வியப்பு). எனவே ‘ஆம்’ என்பதை உவம உருபாகக் கொள்ளலாம்.

ஆக

 ‘காமனே மாடாகக் காட்சி தரும் மூர்த்தியே/பூமியிலே மாடு போற் பொற்புடைய சாதியுண்டோ’ (154), ‘புல்லாக எண்ணி’ (239) ஆகிய இடங்களில் ஆக உவம உருபாகக் கொள்ளலாம்.

2.2. என/ என்று

என, என், என்று ஆகியவையும் உவம உருபுகளாகக் கருதிச் சீனிவாசன், (1973:66) சங்க இலக்கியத்திலிருந்து உதாரணம் கொடுத்துள்ளார்.

‘என’ என்பது ‘மாவென மடலும் ஊர்ப’ (குறுந் தொகை 17.1) ‘மடல் மாவை ஒத்தது என்று கருதி ஊர்வார்கள்‘ என்று பொருள் கொள்வதால் அது ஒரு வகையில் உவமை உருபாகக் கருதப்படுகிறது.

உண்மையில் அவை ‘என்று கூறும்படி’ என்று நேர்ப் பொருள் பெற்றாலும் அப்படிக் கூறுவதற்குக் காரணம் அவைகளிடையே ஒப்புமையே. அதாவது ‘ஒத்தது என்று கருதிக் கூறும்படி’ என்ற கருத்து புதைந்துள்ளதால் உவமையாகக் கொள்ளப்படுகிறது.

2.2.1.என

1) ஒரு பொம்மையெனக் காலிரண்டும் கடுகவும் (75) (ஒரு பொம்மை போல இரண்டு காலும் விரைந்து கொண்டு செலுத்தவும் தோற்றம் = தொழில், நிலைக் களன் = சிறப்பு மெய்ப்பாடு = இளிவரல் (வருத்தம்).

2) ‘தெய்வமென நீருதவி செய்த பின்னர்’ (169) (தெய்வம் போல நீர் உதவி செய்த பின்பு (சிவமணி பொழிப்புரை. ப.43) = தோற்றம் = தொழில், நிலைக்களன் = சிறப்பு மெய்ப்பாடு = மருட்கை ( ஆக்கம்).

3) ‘அவ்வுருவம்/ சோதிக் கடலிலே தோன்றும் கரும்புள்ளியெனக் காணுதலும்’ (215) (கரும் புள்ளி என்று சொல்லும்படி காணுதல்). இங்குக் கரும்புள்ளியை ஒத்தது என்று கருதுதல் என்னும் உவமை கருத்து தொக்கி நிற்கிறது என்று கொள்ளலாம்.

தோற்றம் = மெய் (வடிவம்), நிலைக்களன்= நலன், மெய்ப்பாடு=இளிவரல் (வருத்தம்)

4) ‘அவ்வுருவம்/ சோதிக் கடலிலே தோன்றும் கரும்புள்ளியெனக் காணுதலும்’ (215) தோற்றம்= உரு, கிழக்கு, மெய்ப்பாடு =மருட்கை

2.2.2. என்று

1) ‘வலிமிகுந்த மாந்தர்தமை/ மேனியுறும் காளை யென்று மேம்பாடுறப் புகழ்வர்’ (155) (‘மாந்தர்களும் தங்களுக்குள் உடல் வலிமை மிக்கவரைக் காளை என்று மேன்மையாகப் பாராட்டுவார்கள்’ என்பது சிவமணி (மேலது.ப.39) பொழிப்புரை.

இங்குக் காளை ஒத்தல் என்று பாராட்டுதல் என்று பொருள் கொள்ள இடம் இருப்பதால் உவமை கருத்து தொக்கி நிற்கிறது என்று கொள்ளலாம். தோற்றம்= மெய் (வடிவம்), நிலைக்களன் = காதல், மெய்ப்பாடு =மருட்கை (பெருமை).

2.3. இடைச்சொல் உவம உருபு ஏற்றல்

முன்/முன்னை, பண்டு ஆகிய இடைச்சொற்கள் கால ஆகுபெயராய் அப்போது நடந்த தொழிலைக் குறிப்பதால் அது தொழில் உவமையாக அமையும். அதனால் அவைகளும் உவம உருபுச் சொற்களை ஏற்று வந்துள்ளன.

2.3.1. முன் போல் ~ முன்னைப்போல்

முன் போல்

‘காலிரண்டு முன்போலே/ சோலைக் கிழத்திட’ (146). ‘காலிரண்டும் முன்பு சோலைக்கு இழுத்தது போல, இப்பொழுது சோலைக்கு இழுத்திட’ (நான் சொந்த உணர்வுஇல்லாமலே சோலையினில் வந்து நின்று). தோற்றம் = தொழில், நிலைக்களன் = இளிவரல் (வருத்தம்).

‘முன்போல் மறைந்துநின்றேன்‘ (152) தொழில் உவமை.

முன்னைப்போல்

‘முன்னைப் போற் கொம்பு முளைகளிலே வந்தொலிக்க’ (199). பொருண்மையியல் நோக்கில் முன்போல என்பது முன்செய்தது போல என்று பொருள் படும். கால ஆகுபெயராய் முன்பு நடந்த தொழிலைக் குறிக்கும். அதனால் ஒரு தொழில்பெயர் புதை நிலையில் அமைந்துள்ளது முன்போல் மறைந்துநின்றேன் < முன் மறைந்தது நின்றது போல் மறைந்துநின்றேன் என்று பொருள்படும். தோற்றம் = தொழில், நிலைக்களன் = நலன், மெய்ப்பாடு = மருட்கை ( சிறுமை).

2.3.2.பண்டு போல்

‘பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப் பாட்டை ...பாடியதே’ (180)

(பண்டு பாடியது போலே .... பாடியது). தோற்றம் = தொழில், நிலைக்களன் = நலன், மெய்ப்பாடு = மருட்கை (சிறுமை).

3) உவம உருபுகள்

குயில்பாட்டில் உவம உருபுகள் சொல்லுருபுகள் அல்லது உவமக் கிளவிகளே. அவை ஒப்பு, உறழ்வு, மீ உறழ்வு என்ற மூன்று பொருளிலும் வந்துள்ளன. இரண்டு உவம உருபுகள் தொடர்ந்தும் கையாளப்பட்டுள்ளன. ‘வாலுக்குப் போவதெங்கே/ அ) ஈனமுறும் கச்சை யிதற்கு நிகராமோ?/ பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு ஆ) கந்தைபோல்/ வேகமுறத் தாவுகையில் வீசி யெழு வதற்கே/ தெய்வங் கொடுத்த இ)திருவாலைப் போலாமோ? (100-2). இங்கு நிகர், போல், என்ற இரண்டு உருபுகள் அமைந்துள்ளன.

3.1. ஒப்பு/ஒத்த

3.1.1.ஒப்புப் பொருளில்

1) ‘தூய சுடர் முத்தை ஒப்பாம் பல்லில்’ (359). தோற்றம் =மெய், நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு =மருட்கை.

3.1.2. ஒத்த

1) ‘நின்னொத்த தோழியரும் நீயும்’ (271). தோற்றம் = பயன், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = உவகை

3.1.3. மீ உறழ்வு

1) ‘நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை ஒப்புளதோ’ (141). ‘ஞாலமிசை‘ என்பது மீ உறழ்வு என்பதைப் புலப்படுத்துகிறது. தோற்றம்=மெய், நிலைக்களம் =காதல், நிலைக்களம் =புகழ்மை (பெருமிதம்), மெய்ப்பாடு= மருட்கை

3.2. போல்/ போல/ போலே

3.2.1.போல்

3.2.1.1. ஒப்புப் பொருள்

1). ‘காலை யிளம்பரிதி வீசும் கதிர்களிலே நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணி போல் மோகனமாம் சோதி பொருந்தி’ 1). உரு (வடிவம்), நிலைக்களம் = சிறப்பு மெய்ப்பாடு = மருட்கை

2). ‘துன்பக் கடலினிலே/ நல்லுறுதி கொண்டதோர் நாவாய் போல் வந்திட்டீர்’ (61). தோற்றம் = பயன், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = மருட்கை (ஆக்கம்)

3). ‘இருபதுபேய் கொண்டவன்போல் கண்ணும் முகமும் களியேறி’ (67), தோற்றம் = உரு, நிலைக்களம் = வலி, மெய்ப்பாடு = அச்சம்

4). ‘மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்/ ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்’ (98). தோற்றம் = உரு, நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = புகழ்மை (பெருமிதம்)

5). ‘வேகமுறப் பாய்வதிலே / வானரர்போ லாவரோ’ (101). தோற்றம் = தொழில், நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = புகழ்மை (பெருமிதம்)

6). ‘கள்ளினிலே/ முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே/ தாவிக் குதிப்ப துவும்’ (111). தோற்றம் = தொழில், நிலைக்களம் =காதல், மெய்ப்பாடு = புகழ்மை ( பெருமிதம்)

7). ‘முன்போல் மறைந்துநின்றேன்’ (152). தோற்றம்= தொழில், நிலைக்களம் =நலன், மெய்ப்பாடு = வருத்தம் (இளிவரல்),

8). ‘பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும் கொண்டு குயிலாங்கே கூறுவதாம்’ (153). தோற்றம் = தொழில், நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = புகழ்மை (பெருமிதம்)

9). ‘பஞ்சுப் பொதிபோற் படர்ந்ததிருவடி’ (157). தோற்றம் = உரு, நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = புகழ்மை (பெருமிதம்)

10). ‘என்னைப் போலோர் பாவியுண்டோ?’ (163). தோற்றம் = உரு, நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = அழுகை (இழிவு)

11). ‘என்போல் அபூருவமாம் காதல் கொண்டால்/தாளா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?’ (176). தோற்றம் = தொழில், நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = அழுகை (இழிவு)

12). ‘வட்ட உருளை போல் வானத்தில் அண்டங்கள்’ (188). தோற்றம் = உரு, நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை (வியப்பு)

13). ‘பறவையெலாம்/ முன்னைப் போற் கொம்பு முளைகளிலே வந்தொலிக்க’ (199).

தோற்றம் = தொழில், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை

14). ‘பண்ணிசைபோல் இன்குரலால் பாவியது கூறிடுமால்’ (228). தோற்றம் = தொழில், நிலைக்களம் = நலன். மெய்ப்பாடு = இளிவரல்

15). ‘சாதிக் குயில்களைப் போலல்லாமல்.... எல்லார் மொழியும் விளங்குவதேன்’ (246). தோற்றம் = தொழில், நிலைக்களம்= நலன், மெயப்பாடு = மருட்கை

16). ‘மானிடர் போல் சித்த நிலை வாய்த்திருக்கும் செய்தியேன்’ (247).

தோற்றம் =தொழில், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை,

17). ‘வாரி பெருந் திரைபோல் வந்த மகிழ்ச்சி’ (295), தோற்றம் =பயன், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை,

18). ‘வேந்தன்மகன் தேனில் விழும் வண்டினைப் போல்/ விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப் போல்/ ஆவலுடன் ஆரத் தழுவி’ (298 -9) தோற்றம் =தொழில், நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு =மருட்கை

19). ‘நீயும் பழமைபோல் மன்னனையே சேர்வை’ (335) தோற்றம் =தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = உவகை,

3.2.1.2. உறழ்

‘சாதி குயில்களைப் போல்/ இல்லாமல் என்றன் இயற்கை பிறிதாகி’ (245).தோற்றம் =தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு= மருட்கை

3.2.1.3. மீ உறழ்வு

1). ‘வானரர் போற் சாதியன்று மண்ணுலகில் மீதுளதோ’ (104). தோற்றம் = மெய் (வடிவம்), நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = மருட்கை

2). ‘பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதி உண்டோ’ (154) தோற்றம் = மெய் (வடிவம்), நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = மருட்கை

3) ‘தன்னை யறியேன் தனைப் போல் எருதறியேன்/ பொன்னை நிகர்த்த குரல் பொங்கி வரும் இன்ப மொன்றே/ கண்டேன்’ (183). தோற்றம் = மெய் (வடிவம்), நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = மருட்கை

4). ‘மூன்று தமிழ் நாட்டில் யாரும் நினக்கு ஓர்இணை இல்லை என்றிடவே சீருயற நின்றாய்’ (251). தோற்றம் = உரு, நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு = மருட்கை

5).‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா‘ (194), தோற்றம் = பயன், நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை.’

6). ‘நின்னை அன்றி ஓர்பெண் நிலத்தில் உண்டோ! (290) தோற்றம் = மெய் (வடிவம்), நிலைக்களம் = சிறப்பு, மெய்ப்பாடு = மருட்கை.

இங்கு மண்ணுலகு, பூமி, மூன்று தமிழ் நாடு பார் (உலகம்), நிலம் என்ற சொற்களே மீ உறழ்வாகக் கருதக் காரணம் ஆகும். மேலும் ‘ஓ’ இடைச்சொல்லும், ‘அடா’ என்ற சொல்லும் பேசுவோரின் உணர்வை மிகைப் படுத்துகின்றன.

மேலும் ‘உளதோ’, ‘உண்டோ’ என்று உடன் பாட்டிலும், ‘இல்லையடா’ என்று எதிர்மறையிலும் வியப்பு இடைச்சொற்கள் அமைந்து மீ உறழ்வு என்பதை உறுதி செய்கிறது.   

3.2.2.போல உருபு

3.2.2.1.ஒப்பு

1) ‘காலைத் துயிலெழுந்து காலிரண்டு முன்போலே/ சோலைக் கிழத்திட’ (146). தோற்றம் = தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = வருத்தம் (இளிவரல்),

2). ‘வானத் திடிபோல மாவென் றுறுமுவதும்’ (158). தோற்றம் = தொழில், நிலைக்களம் = வலி, மெய்ப்பாடு = புகழ்மை (பெருமிதம்)

3). ‘நெட்டைக் குரங்கன்அங்கு நீண்ட மரம்போல எட்டிநிற்கும் செய்தி’ (310). தோற்றம் = உரு, நிலைக்களம் = கிழக்கு, மெய்ப்பாடு =மருட்கை

3.2.3.போலே

3.2.3.1. ஒப்புப் பொருள்

1). ‘தோழியிரும் நீயும் ஒரு மாலையிலே மின்னற் கொடிகள் விளையாடுதல் போலே கூத்தாடி’ (271/2). இங்கு இரண்டு உவமைகள் தோழியிரும் நீயும் = மின்னற் கொடிகள், விளையாடுதல் = கூத்தாடுல். முன்னது உரு உவமை, பின்னது தொழில் உவமை. மெய்ப்பாடு வியப்பு

2). ‘பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப் பாட்டை ...பாடியேதே’ (180). தோற்றம் =தொழில் நிலைக்களம் = கிழக்கு (தாழ்வு) மெய்ப்பாடு =வெகுளி

3) ‘நீண்ட மரம் போலே எட்டிநிற்கும் செய்தி’ (310) தோற்றம் = தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = வியப்பு

3.2.4. நிகர்/ நிகர்த்த

1)‘ வானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிக ராவரோ’ (96). தோற்றம் = உரு, நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு =புகழ்மை (பெருமிதம்)

2) ‘பொன்னை நிகர்த்த குரல்’ (183). தோற்றம் = தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = உவகை

4) உணர்வு கலந்தவை

உவமச் சொற்கள் வேறு பொருளிலும் வந்துள்ளன. தண்டியலங்காரம் 24 வகை அமைந்துள்ளதாக விளக்கி யுள்ளது அவைகளில் பேசுவோர் உணர்வும் கலந்து உள்ளன என்று கொள்ளப்படுகிறது.

4.1. பாவனை உவமை

‘விளையாடுதல்போலே காட்டினிடையே களித்தாடி நிற்கையிலே’ (271) என்ற தொடரில் போலே என்ற உவமை வந்திருப்பது ‘விளையாடுதல் போன்ற பாவனை’ என்று பொருள்படுவதால் பாவனை உவமை என்று கொள்வது சிறப்பாக இருக்கும். ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி/விழிப்பது போலும் பிறப்பு’ என்ற குறளிலும் (339) இந்த மொழி நடை அமைந் துள்ளது. பேச்சு மொழியிலும் ‘அழுவதுபோல் பாவனை காட்டுகிறார்’ என்பது போன்ற வழக்குகள் உள்ளன. கூடுதல் மன உணர்வு அதாவது பேசுவோர் உவமை யோடு தன்னுடைய கூடுதல் மன உணர்வையும் பயன் படுத்துதல் இப்போது கண்டறியப்பட்டுள்ளது. (பார்க்க சண்முகம், 2018)

‘வேந்தன் சுடர் கோலத்தைக் கண்டே/அரசன் அரும்புதல்வன் போலும் என்றே அஞ்சி மறைந்து விட்டார்’ (277) என்பதையும் பாவனை உவமையாகக் கொள்ளலாம். உண்மையில் அவன் அரசன் மகனே. இருந்தும் குயிலித் தோழியர்க்கு அந்தச் செய்தி தெரியாது. அதனால் பாவனை உவமையாகக் கருதலாம்.

‘.. என் உள்ளத்தின்/ இச்சை உணர்ந்தன போல் ஈண்டும் பறவையெலாம்/ வேறுஎங்கே போயிருப்ப’ (78).

‘புலப்பாட்டை/ நண்ணியிங்கு கேட்க நடத்தி வந்தாய் போலும் எனை/ என்று சினம் பெருகி’ (225).

இவை உண்மையில் உவமை இல்லை. இது ஒரு வகை உணர்வு நிலையில் செயல். எனவே தொழில் நிலையில் பாவனை என்று கொள்ளலாம்.

4.2.தொழில் ஐய உவமை

‘புலப்பாட்டை/ நண்ணியிங்கு கேட்க நடத்தி வந்தாய் போலும்எனை’ (225). இங்குள்ள ஐயம் உண்மையில் வினாவாக (நடத்தி வந்தாயா?) பொருள் உணர்த்துவதால் தொழில் ஐய உவமை என்று கொள்ளலாம். பேச்சு மொழியிலும் இப்படிப்பட்ட வழக்குகள் உண்டு

தண்டியலங்காரம் ‘உவமையிலும் பொருளிலும் (உவமானத்திலும்) ஐயுற்று உரைப்பது என்று’ (32.11) ஐய உவமைஎன்று விளக்கியுள்ளது. ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை / மாதர்கொல் மாலும் என் நெஞ்சு’ என்ற குறளில் (1081) ‘கொல்’ என்பது ஐயப் பொருளை உணர்த்துவது. ஆனால் குயில்பாட்டு உதாரணம் பொருள் மாறுபட்டது. எனவே தனி வகையாகக் கருதுவது நல்லது. இதைப் புதிய வகை தொழில் உவமையாகக் கருதலாம் போலத் தோன்றுகிறது

4.3. விரிக் குறை உவமை

இலக்கண வருணனையில் ஒரு பொருளை விளக்கும் போது முழுவதும் அதற்கு உரிய சொற்களைக் குறிப்பிடாமல், சில சொற்களைக் குறிப்பிட்டுவிட்டு ஓர் உவம உருபைப் பயன்படுத்தி அதன் மேனிலைச் சொல்லைக் கூறி விளக்குதல் விரிக் குறை உவமை என்று குறிப்பிடப்படுகிறது (சண்முகம், 2018).

இங்குப் ‘போன்ற’ என்ற சொல்லுருபு இந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது

‘...ஒருகால் ஊர் வகுத்தல்/ கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே அந்த மனித உயர்வு எனலாம்’ (94. = ஒரு வேளை ஊரமைப்பு, கோயில், அரசு, குடி வகுப்பு போன்ற சில வழிகளிலே மனித குலம் உயர்ந்தது என்று சொல்லலாம்). இங்கு ‘வாயில்’ (வழி) மேனிலைச்சொல். கல்வி, போக்கு வரத்துபோன்ற இன்னும் பல வாயில்களில் மனித குலம் உயர்ந்துள்ளதால் மனித குல சாதனைகளை முழுவதும் தொகுத்துக் கூறாமல் சிலவற்றைக் கூறிப் ‘போன்ற சில வாயிலிலே’ என்று கூறியதால் விரிக் குறை உவமை என்று கொள்ளப்படுகிறது. தொல்காப்பியமும் (விளி மரபு. 37) இந்த வகை உவமையைப் பயன்படுத்தி யுள்ளது. பேச்சு மொழியிலும் இந்த வகை காணப் படுகிறது. வெண்டை, கத்தரி போன்ற காய்கள் உடலுக்கு நல்லவை.

5) தொடர்உவமை

ஒரே உவம உருபு ஒன்றுக்கு மேற்பட்டு கையாளப்பட்டுள்ளது மேலே ஒருமுகப் போக்கு உவமை என்று குறிப்பிடப்பட்டது. அது கருத்தாடலில் ஒரு உவமை உருபைத் தொடர்ந்து பயன்படுத்துதல் என்ற முறையிலும் அது உவமேயத்தின் சிறப்பை விளக்குகிறது என்ற முறையிலும் சிறப்பு உவமைத் தொடர் என்று குறிப்பிடப்படுகிறது.

1). ‘இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல்/மின்னற் சுவைதான்மெலிதாய், மிக இனிதாய் வந்து பரவுதல் போல்; வானத்து மோகினியாள்/ இந்தவுரு எய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல்;/ இன்னிசைத் தீம்பாட இசைத்திருக்கும் விந்தை’ (9- 11). தோற்றம் =தொழில், நிலைக்களன்= நலன், மெய்ப்பாடு= மருட்கை

2). ‘...கந்தைபோல்/ வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே/ தெய்வம் திரு வாலைப் போலாமோ’ (102-3). தோற்றம் =தொழில், நிலைக்களன்= நலன். நையாண்டி உணர்வு கலந்துள்ளது. மெய்ப்பாடு= மருட்கை

3). ‘தேனில் விழும் வண்டினைப் போல்/ விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப் போல் ஆவலுடன் ஆரத் தழுவி‘ (298). தோற்றம் =தொழில், நிலைக்களம் = நலன், மெய்ப்பாடு = மருட்கை.

இரண்டு உவம உருபுகள் (நிகர், போல்) இந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 ‘வாலுக்குப் போவதெங்கே/ அ) ஈனமுறும் கச்சை யிதற்கு நிகராமோ?/ பாகையிலே வாலிருக்கப் பார்த்த துண்டு ஆ) கந்தைபோல்/ வேகமுறத் தாவுகையில் வீசி யெழு வதற்கே/தெய்வங் கொடுத்த இ)திருவாலைப் போலாமோ?/சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் / வானரர்போற் சாதியன்று மண்ணுலகின் மீதுளதோ? வானரர் தம்முள்ளே மணிபோ லுமையடைந்தேன்’ (100-4). இங்கு நிகர், போல், என்ற இரண்டு உருபுகள் அமைந்துள்ளன. தோற்றம்= அ, ஆ)உரு, இ,ஈ) தொழில்; நிலைக்களம் = காதல், மெய்ப்பாடு =புகழ்மை ( பெருமிதம்)

6) புது வகை

இங்கு ‘யா’ என்ற வினா இடைச்சொல் கையாளப் பட்டுள்ளது ஒரு வகை.

‘நின்றன் அதிசயங்கள் யாவினுமே/ கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா’ (192. ‘நீ படைத்த உன்னுடைய வியப்புகள் அனைத்திலும் இசையமுதம் படைத்த செயல் மிக்க விந்தையடா’ சிவமணி உரை). இங்கு உவம உருபு இல்லா விட்டாலும் யா என்ற வினாச் சொல் பயன்பாடும் மீ உறழ்வு கருத்தை உறுதி செய்கிறது.

‘மூன்று தமிழ் நாட்டில்/ யாரும் நினக்கோர் இணை இல்லை’ (251). பேச்சு மொழியிலும் அவரை யாரோடும் ஒப்பிடமுடியாது, அவரை ஒத்தவர் யாரும் இல்லை என்பன போன்ற வழக்குகள் உவமையின் ஒரு வகையாகவே கருதவேண்டும். உலகத்தில், நாட்டில், ஊரில், வகுப்பில், வீட்டில் என்று ஒப்பின் அளவு மாறுபடலாம்.

உவமை என்ற சொல்லையும் ‘இல்லை’ என்ற எதிர்மறைச் சொல்லும் சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளது இன்னொரு வகை. இங்குத் தோற்றம் என்பது வினை, பயன், உரு, மெய் ஆகிய எல்லா நிலையிலும் அமையும். சிறப்பு என்ற நிலைக்களத்தையும் மருட்கை மெய்ப்பாட்டையும் கொண்டதாகக் கருதலாம்.

1). ‘வான் வெளியைச் சோதி கவர்ந்து சுடர் மயமாம் விந்தையினை/ ஓதிப் புகழ்வார் உவமை யன்று காண்பாரோ’ (138). இங்குக் கவர்தல் மானிடவாக்கம் ஓது (பேசுதல் விளக்குதல் உயர்வு நவிற்சி

2). ‘ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பம் அன்றோ’ (196). ஓசைதரும் = மானிடவாக்கம்

7) உவமைத் தொகை

1.பாடுவதில் ஊறிடும் தேன்வாரி(45) (தேன் போன்ற கடல்)

2. வெம்மைக் கொடுங்காதல் (79) (வெம்மை போன்ற கொடிய காதல்)

3 கோவையிதழ் பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே (299) தோற்றம்= நிறம், நிலைக்களன் = நலன் (சிறப்பு) மெய்ப்பாடு உவகை.

4. நறுங்கள் இதழ் (365) (நறிய கள் போன்ற இதழ்)

8) புதிய உவமைகள்

‘பொன் போற் குரலும் புதுமின் போல் வார்த்தைகளும்’ (152)

‘நீண்ட மரம் போலே எட்டி நிற்கும் செய்தி’ (310)

‘இப்பிறப்பில் நீயும் பழமைபோல்/ மன்னனையே சேர்வை யென்று’ (336)

9) முடிவுரை

உவமை இங்கு இலக்கிய மொழியியல் நோக்கில் ஆராயப்பட்டுள்ளது.

துணையன்கள்

1) சண்முகம், செ.வை. 2018, பொருளிலக்கணக் கோட்பாடு -தொல்காப்பியம், உவமவியல், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

2) சிவமணி,கு.2008. பாரதியின் குயில்-ஒரு நுண்ணாய்வு, திருக்குறள் பதிப்பகம், சென்னை.

3) சீனிவாசன், ரா.1973,சங்க இலக்கியத்தில் உவமைகள், அணியகம், சென்னை.

4) தொல்காப்பியம் முழுவதும் விளக்கவுரை (ச.வே.சுப்பிரமணியம்) மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

5) பாரதி பாடல்கள்- ஆய்வுப்பதிப்பு ( ப-ர். குருசாமி, ம.ரா.போ) தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். திருந்திய மூன்றாம் பதிப்பு, 2001.

Pin It