சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன், தலைவியான கோவலனும் கண்ணகியும், மதுரை வந்து வணிகம் செய்து புதுவாழ்வு தொடங்கு முகத் தான் புகாரை விட்டு வெளியேறுகின்றார்கள். வழியில் கவுந்தி அடிகள் என்னும் சமணத்துறவியின் துணையுடன் தங்கள் பயணத்தைத் தொடர் கின்றனர். வண்ணச் சீறடி மண்மகள் அறியாமல் வளர்ந்து வாழ்ந்த கண்ணகி பூம்புகாரிலிருந்து ஆறைங்காதம் (30 -காதம் சுமார் 250 கி.மீ) நடந்தே மதுரை செல்லத் துணிகிறாள். காவிரிக்கரை நெடுகிலும் இருந்த சோலைகளைக் கடந்து முதலில் உறையூரை அடைந்தனர்.
உறையூரிலிருந்து புலர்காலைப் பொழுதில் தென்திசை நோக்கி வெளியேறிய மூவரும் வழியில் மாங்காட்டு மறையோன் எனும் வேதியனை எதிர்ப்படுகின்றனர். அவனிடம் கோவலன்.
‘மாமறை முதல்வ மதுரைச் செல் நெறி
கூறு நீ’ (காடுகாண்: 58-59)
எனக் கேட்கிறான். அதற்கு விடையிறுக்கும் வகையில் கொடிய பாலை நிலத்தில் வேனிற் காலத்தில் நடந்து வரும் அவர்களைக் கண்டு மனம் கலங்கி, அவர்களிடம்,
‘கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும்’
(காடுகாண். வரி 71-73)
என் விடை கூறுகிறான். அதாவது கொடும்பை என்னும் இன்றைய கொடும்பாளூர் கோட்டையை அடைந்தால் அங்கிருந்து பிறைநுதல் அணிந்த சிவபெருமானின் கையில் உள்ள திரிசூலம் போன்ற மூன்று வழிகள் மதுரைக்குப் பிரிந்து செல்லும் என்கிறான் மாங்காட்டு மறையோன்.
இங்கு குறிப்பிடப்படும் கொடும்பை என்னும் கொடும்பாளூர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். பிற்காலச் சோழர் காலத்தில் சிற்றரச மரபினமான இருக்குவேளிர் எனும் அரசகுடியினரின் தலை நகரமாக விளங்கிய ஊர் கொடும்பாளூர். கொடும் பாளூர் மணிக்கிராமத்தார் என்னும் வணிகக் குழுவினர் நெடுங்காலமாக தமிழகம் எங்கும் ஏன் தென்கிழக்கு ஆசிய தகோபா (கலைத்தக்கோர் புகழ் தளைத்தக்கோலம்) வரை பயணித்து வணிகம் செய்த குழுவினராவர், எனவே சங்ககாலத்திலேயே இவ்வூர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊராகத் திகழ்ந்திருக்க வாய்ப்புகளுண்டு. சைவ சமயத்தின் காளாமுகப் பிரிவினர் இங்கு மடம் ஒன்று அமைத்து சமயப்பணி ஆற்றியுள்ளனர் என்பதை பிற்காலச் சோழர் கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியலாம்.
இத்தகைய கொடும்பாளூரிலிருந்து மூன்று வழிகள் மதுரைக்குச் செல்லுவதாகவும் அதன் தன்மைகளையும் மாங்குடி மறையோன் விளக்கு கிறான். வலதுபுறமாகச் செல்லும் வழியிலே சென்றால் மரா, ஓமை, உழிஞ்சி, மூங்கில், கள்ளி போன்ற பாலை நில மரங்களடர்ந்த காடுகள்
வரும், அடுத்து எயினர் குடியிருப்பைக் கடந்தால் வெண்ணெல், கரும்பு, தினை, வரகு எனும் புன் பயிர் விளையும் நிலங்களைக் காண்பீர். அதனையும் கடந்தால் வாழை, கமுகு, தெங்கு, மா, பலா போன்ற பயன்தரு கனிமரங்கள் நிறைந்த தென்னவன் (பாண்டியன்) சிறுமலையை அடையலாம் என்று கூறுகிறான்.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் உள்ள நிலப்பகுதியை நாம் இன்றைய பெருவழியோடு ஒப்பிட்டு நோக்கலாம். கொடும்பாளூரிலிருந்து மதுரைக்கு வரும்போது முதலில் விறலியர் மலை (விராலி மலை)யைக் கடக்க வேண்டும். அங்கிருந்து பாரியினுடைய பறம்புமலை இன்றைய பிரான் மலையைக் கடக்கலாம். பிரான்மலையிலிருந்து கொட்டாம்பட்டி, மணப்பாறை வழியாக திண்டுக்கல் கடந்து சிறுமலையை அடையலாம் எனத் தோன்று கிறது. இம்மலைக்கு வலப்புறமாகச் சென்றால் மதுரை நகரை அடையலாம்.
இடப்புற வழியாகச் சென்றால் வயல், சோலை, காடுகள் பல கடந்து சென்று திருமால்குன்றம் எனும் இன்றைய அழகர் கோயிலை அடையலாம். இவ்வழியை நாம் ஆராய்வோமானால் கொடும் பாளூர், விராலிமலை, பிரான்மலை, கருங்காலக் குடி, வெள்ளை நிகமம் எனும் வெள்ளரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி கடந்து அழகர் கோயிலை அடையலாம். இக்கிராமங் களின் பல ஊர்களில் சங்க காலத் தமிழ் (தமிழ்-பிராமி) கல்வெட்டுகள் கொண்ட சமணத்துறவியர் வாழ்விடங்கள் இருக்கின்றன. சமணத்துறவியான கவுந்தி அடிகள் இச்சின்னங்களையெல்லாம் அறிந்த வராகவுமிருக்கலாம். கருங்காலக்குடி, அரிட்டா பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி (அழகர்மலை) ஆகிய ஊர்களில் இன்றும் கல்வெட்டுகளுடன் கூடிய சமணர் தலங்கள் உள்ளன. எனவே இடது புற வழியில் நெடுங்காலமாக வணிகப் பெருவழியாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
வலம், இடம் போகும் இரு நெறிகளை விலக்கி இடையில் உள்ள செந்நெறியில் போனால் தேம் பொழில் சூழ் காடுகளும், ஊர்களும் கடந்து சென்றால் மதுரைப் பெருவழியைக் காணலாம் என்பான் மாங்காட்டு மறையோன். இவ்வழியை நோக்கினால் ஏற்கனவே நாம் கண்ட கருங்காலக்குடி, கீழவளவு, மேலூர், வெள்ளரிப்பட்டி, திருவாதவூர், வரிச்சியூர் வழியாக வைகை வடகரையில் உள்ள ஐயை கோட்டத்தை அடையலாம். இங்கு நாம் கண்ட திருவாதவூர் சங்கப் புலவர் கபிலர் பிறந்த ஊரும், சமணத்துறவியர் வாழ்ந்த அறவோர் பள்ளிகள் இருந்த ஊருமாகும். இதனைக் கடந்து வரிச்சியூர் அருகில் குன்னத்தூரிலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த சமணத் துறவியரின் கற்படுக்கைகளும், கல்வெட்டுகளும் காணக் கிடைக் கின்றன. இதன் வழியே சென்றுதான் கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகியோர்,
‘விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர்’.
(காடுகாண்: 214 - 216)
ஐயை கோட்டம் யாது?
நெடுந்தூரம் நடந்து வந்த கண்ணகியின் மெய்வருத்தம் நீங்கும் வகையில்,
‘ஐயை கோட்டத்து எய்யா தொரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர்.’
(வேட்டுவ வரி. 4-5)
ஐயை கோட்டத்தைக் கொற்றவை கோயில் என்று அறிஞர்கள் பலரும் பொருத்தமாகவே பொருள் கொண்டுள்ளனர். இந்தக் கொற்றவையின் பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும், அவளது (திருவிளையாடல்) செயல்களையும், எயினர் கொடுக்கும் பலிகளை ஏற்பதையும் வேட்டுவ வரியில் விரிவாகக் காணலாம். ஐயை கோயிலில் பலிபீடமும் இருந்தது என்பதை,
‘பாகம் ஆளுடையாள் பலி முன்றில்’
(வேட்டுவ வரி- உரைப்பாட்டு)
என்ற வரியால் உறுதிப்படுத்தலாம். ஐயை கோட்டத்தில் தங்கிய பின் கோவலன் கோசிக மாணியைச் சந்திக்கிறான். மாதவியின் முடங்கலைப் பெறுகிறான். பாணரோடு ஆடுகிறான். பின்னர்,
‘மாதவத்தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும் பொழில் தென்கரை எய்துகிறான்.’
(புறஞ்சேரி 179-180)
வையை என்னும் பொய்யாக் குலக்கொடியாம் நீரினைக்கடந்து தென்கரையில் சேர்கின்றனர். அவ்வாறெனின் அவர்கள் முன்னர்த் தங்கிய ஐயை கோட்டம் வைகை நதியின் வடகரையில் அமைந் திருந்தது என்பது உறுதிப்படுகிறது. ஆனால் வடகரையில் இருந்த ஐயை கோட்டம் எது என்பது நமது அடுத்த தேடலாக அமைகிறது.
‘கண்ணகியார் அடிச்சுவட்டில் என்ற ஆய்வு நூலை எழுதிய கரந்தை சி. கோவிந்தராசனார் (1991) அவர்கள், கோவலனும் கண்ணகியும் மேலூர் வந்து ஆனைமலை, திருமோகூர் வழியாகச் சென்று அதற்கும் தெற்கே மருதமுன்துறை எனும் இடத்தை அடைந்ததாகக் கூறுகிறார். அவர் திருமோகூரையே திருமாலிருஞ்சோலை என அடையாளம் காண்பது ஆய்வுக்குரியது. ஆனால் அவர் ஐயை கோட்டத்தில் தங்கினர் என்று கூறிப்போகிறாரே தவிர அது எங்கிருந்து என்பது பற்றி அறிய முயற்சிக்கவில்லை. சிலப்பதிகாரச் சிந்தனை எழுதிய ப. அருணாசலம் (1971) அவர்களும் ஐயை கோயிலைச் சுட்டுகிறார். ஆனால் அதன் அமைவிடம் பற்றி ஆராயவில்லை. சிலம்புச் செல்வம் எழுதிய மு. சுப்பிரமணியமும் (1973) இது பற்றிக் கவலைப்படவில்லை. நமது ஊகத்தின் அடிப்படையில் ஐயை கோட்டம் எங்கிருந்தது என்பதைக் காணலாம்.
‘வையையின்’ வடகரையில் அமைந்திருந்த ஐயை கோட்டம் என்னும் கொற்றவை கோயில் (அ) காளிகோயில் வரலாற்றுக் காலம் தொடங்கி இன்று வரை வழிபாட்டில் இருந்து வரும் கோயிலாக ஏன் இருக்கக் கூடாது என்பதே நமக்கு எழும் வினாவாகும். மதுரைக்கு அருகில் வையையின் வடகரையில் அமைந்து இன்று வரை பெருவாரி யான மக்களால் வழிபடப்படும் கோயில் ‘மடப் புறம் காளி’ கோயிலாகும். இன்றைய தினம் அச்சம் தரும் அளவில் மிகப்பெரிய உருவமாகச் சுதையால் செய்துவைக்கப்பட்டுள்ள உருவம் அண்மைக் காலத்தது ஆகும். ஆனால் சங்ககாலத்தில் அல்லது கண்ணகியும் கோவலனும் வந்த காலத்தில் சிறிய அளவிலான கோயிலாகச் செங்கல் தனியாக இது இருந்திருக்க வாய்ப்புண்டு.
இன்று இக்கோயில் உள்ள ஊர் மடப்புறம் என அழைக்கப்படுகிறது. இதன் எதிர்க்கரையில் (வையையின் தென்கரை) தேவாரமூவராலும் பாடப் பெற்ற திருப்பூவனநாதர் என்னும் சிவன்கோயில் அமைந்துள்ளது. பொது ஆண்டு 7ஆம் நூற்றாண்டி லேயே சிறப்புற்றிருந்த இச்சிவன் கோயில் பாடல் பெற்ற காலத்திற்கு முன்பிருந்தே இயங்கி வந்திருக் கலாம். இக்கோயிலின் மடம் ஒன்றை ஏற்படுத்தி அதனை நிருவகிக்கும் செலவுகளுக்காக விடப் பட்ட நிலமே மடப்புறம் என்பதாகும். பிற் பாண்டியர் காலத்தில் இந்நிகழ்வு நிகழ்ந்திருக் கலாம்.
ஆனால் மடப்புறமாக நிலம் விடுவதற்கு முன்பே அங்கு பல கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இன்றைய காளிகோயிலின் தென் பகுதியிலேயே ஒரு சிவன் கோயின் அமைந் துள்ளது. அதன் உள்ளாக முற்காலப் பாண்டியர் காலத்தில் 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு கன்னியர் சிற்பம் ஒரே கல்லால் வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் வாயில் முன்பாக வாயிற்காவலரைப் போன்று இரண்டு இளம் வீரர்கள் மண்டியிட்ட வண்ணம் தங்கள் தலையைத் தாமே அறுக்கும் வகையான சிலைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிலைகளின் கீழாக இரண்டு கல்வெட்டுகள் வட்டெழுத்தில் வெட்டப் பட்டுள்ளன.
‘தூங்கு தலை கொடுத்தான் சித்திர சரிதன்’
‘தூங்கு தலை கொடுத்தான் ஸ்ரீ வல்லபன்’
என இரண்டு கல்வெட்டுகளும் தற்பலி செய்து கொண்ட வீரர்களின் பெயர்களைத் தருகின்றன. இக்கல்வெட்டுகளின், சிலைகளின் காலம் பொது ஆண்டு 8-9 ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். ஐயை கோட்டத்தில் எயினர்கள் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்து பலி பீடத்தில் வைத்தனர் என்பதை,
“இட்டுத்தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலை போகாத் தொல்குடி”
(வேட்டுவவரி. 20-21)
என்னும் அடிகளால் அறியலாம். சங்ககாலத்தில் இருந்த காளிக்குத் தலைப்பலி கொடுக்கும் வழக்கம் பொது ஆண்டு 8-9ஆம் நூற்றாண்டு வரை இருந்தது என்பதற்கு மேலே காட்டிய இரண்டு வீரர்களின் உருவங்கள் சான்றாகின்றன. இதே இடத்தில் முதலாம் இராசராசசோழன் காலத்தில் மேலைக் கோயில் என்ற பெயரில் ஒரு திருமால் கோயிலும் இருந்துள்ளதை அண்மையில் மடப்புறத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றால் அறிகிறோம் (ஆவணம் இதழ் 26. பக் 81-82). இத்திருமால் கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கவும், நந்தவனம் ஒன்று அமைக்கவும் கொடுக்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இதே இடத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் செல்வாக்கிழந்துவிட்டது. இராசராசன் காலத்திலிருந்த திருமால் கோயில் இருந்த சுவடு தெரியாமல் அழிந்துவிட்டது. ஆனால் காலங் காலமாக இருந்த ஐயை கோட்டம் மட்டுமே
காளி (மடப்புறம் காளி) என்ற பெயரில் இன்றும் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகார காலத்துச் சாலினிபோல் இன்றும் பல பெண்கள் இக்கோயிலில் அருள் பெற்று ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஐயை கோட்டமும் கீழடியும்:
மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடி என்னும் சிற்றூர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதன் காரணம் மைய அரசின் தொல்லியல் துறை இங்கு கடந்த மூன்றாண்டு களாக மேற்கொண்டு வரும் அகழாய்வே ஆகும். சுமார் 100 ஏக்கர் பரப்பில் உள்ள புதைமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் மிகப் பெரிய கட்டிடப்பகுதிகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன. சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய ஒரு நகர நாகரீகம் இங்கு செழித் தோங்கியிருந்தது என ஆய்வாளர்கள் கருது கின்றனர். ஒரு சில மாதிரிகளை வேதியல் பகுப் பாய்வு செய்ததன் மூலம் அவை 2200 ஆண்டு
கட்கு முற்பட்டவை என அறுதியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐயை கோட்டம் இன்றைய மடப்புறம் காளி கோயிலே என்று அடையாளம் கண்டுள்ள நாம் கீழடியுடன் என்ன தொடர்பில் இருந்திருக்கலாம் எனவும் சிந்திக்கலாம். கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளுடன் மரப்புணை ஏறி வைகையின் தென்கரையை அடைந்தனர் எனச் சிலம்பு கூறுகிறது. இதே வைகையின் தென்கரையில் தான் கீழடி அமைந்துள்ளது. கீழடி தவிர திருப்பு வனம், மணலூர், கொந்தகை போன்ற பழமையான ஊர்களும் தென்கரையிலேயே அமைந்துள்ளன. பிற்காலக் கல்வெட்டுகளில் பேசப்படும் வெருகனூர், ஐராவணநல்லூர் (விரகனூர், ஐராவத நல்லூர்) போன்றவை மதுரைக்குக் கிழக்கே அமைந்துள்ள ஊர்களாகும். திருப்புவனம் ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற சைவத்தலம். மணலூரை அழித்ததாக எட்டாம் நூற்றாண்டின் முத்தரையர் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையனின் செந்தலைப் பாடல் கல்வெட்டுகள் அவன் மணலூர் வெற்றியைப் பாடலாகக் கூறுகின்றன.
‘ஒழுகு குருதியுடனொப்ப வோடிக்
கழுகு கொழுங் குடர் கவ்வ - விழிகட்பேய்
புண்ணநைந்துகையும்பப்போர் மணலூர் வென்றதே
மண்ணனைந்து சீர்மாறன் வாள்’
(வெண்பா 2, திருமலை நம்பி 2012)
இம்மணலூரை முத்தரையன் வெற்றிகண்ட தாகக் கூறினாலும் வரலாற்றுக் காலம் நெடுகிலும் அண்ட நாட்டுப் பெருமணலூர் வேளாண்கள் பலரும் பாண்டியர் தம் அரசவையில் அமைச்சர் களாகவும் அதிகாரிகளாகவும் பணியாற்றிப் பெருமை சேர்த்துள்ளனர்.
மணலூருக்கு மிக அணித்தாக இருந்த இன்றைய கீழடியும் கூட அன்றைய முத்தரையன் போரில் பெரும் அழிவுக்குள்ளாகியிருக்க வாய்ப்புண்டு. அதற்குப் பின்னும் கொந்தகையான குந்தி தேவிச்சதுர் வேதிமங்கலம் வீரிட்டு எழுந்துள்ளது என்பதையும் காண்கிறோம். எனவே கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஐயை கோட்டம் என்னும் இன்றைய மடப்புறம் காளிகோயில் பரப்பில் தங்கி, மறுநாள் மரப்புணையேறி அக்காலத்தில் உயிர்ப்புடன் திகழ்ந்த வைகையின் தென்கரையில் அமைந்திருந்த கீழடியில் வந்து இறங்கினர் எனக் கருதுவதில் தவறில்லை. அங்கிருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்ணகி, தன் கணவனை இழந்த பின்பு மேல்த்திசையில் செல்லுங்காலையில்.
‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசைவாயில் வறியேன் பெயர்கென’க்
கூறுகிறாள்.
மேல் திசைவாயிலில் சென்ற கண்ணகி அக் காலத்தில் உயிர்ப்போடு செயல்பட்டுக் கொண் டிருந்த பெருவழிகளில் அமைந்த சமணக் குன்று களாகிய சமணமலை (கீழக்குயில்குடி) பெருமாள் மலை, கொங்கற்புளியங்குளம், நடுமுதலைக்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி வழியாகக் கம்பம் வரை சென்றிருக்கலாம் என்பதை உய்த்துணரலாம்.
பயன்பட்ட நூல்கள்:
1. சிலப்பதிகாரம் - புலியூர்க்கேசிகன் தெளிவுரை. பாரிநிலையம் சென்னை 2009.
2. சி. கோவிந்தராசனார். கண்ணகியார் அடிச்சுவட்டில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். மதுரை 1991.
3. ப. அருணாசலம், சிலப்பதிகாரச் சிந்தனை, பாரி புத்தகப் பண்ணை, சென்னை 1985.
4. மு. சுப்பிரமணியம், சிலம்புச் செல்வம், மறைமலை அடிகள் மன்றம் புன்செய்புளியம்பட்டி 1973.
5. ஆவணம் இதழ் 26. தமிழகத் தொல்லியல் கழகம். தஞ்சாவூர் 2015
6. இரா. திருமலை நம்பி. தமிழக வரலாற்றில் முத்தரையர். தமிழ்க் கோட்டம் புதுக்கோட்டை 2012.