கவிஞர் இராஜலட்சுமியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘எனக்கான காற்று.’ நான் மிகவும் ரசித்து படித்த கவிதைத் தொகுப்பு. வழக்கமாகக் கவிதை மீது ஈடுபாடோ ஆர்வமோ இருப்பதாக நான் சொல்லிக் கொள்வதில்லை. நல்ல கவிதைகளாக இருப்பவை குறித்த ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படியான பின்புலத்தில் இராஜலட்சுமி என்ற கவிஞர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நன்கு பழக்கமாகியவர். அந்த முதல் தொகுப்பு தொட்டு வளர்ந்து வந்திருக்கிற இவரது கவிதை மரபை பெருமையோடும் மகிழ்வோடும் ரசிக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களின் கவிதைகளை நாம் ஒட்டு மொத்தமாக வாசிப்பதன் மூலம் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இயலும். என்னைப் பொறுத்தவரை இராஜலட்சுமியின் கவிதைகளில் ஆழமான நேர்மையைப் பார்க்கிறேன். போலித்தனமில்லை; கவிதைக் கென சொற்களைத் தேடி எடுத்து அடுக்கும் பான்மை யில்லை. அதைவிட முக்கியமானது கவிஞர்கள் என்பவர்கள் சில கணங்களில் தோன்றும் மிக ஆழமான உணர்வுத்தளத்தில் செயல்படக்கூடியவர்கள்.

சொற்களைக் கண்டெடுப்பதும் அதனைப் பதிவு செய்தல் என்பதும் இயல்பாக வந்துவிட்டால் அவர் கவிஞராக அறியப்படுவார். அப்படியானால் அவர் அந்த வகையான உணர்வுத்தளத்தில் செயல்படுவது என்பது அந்தரத்திலா? உணர்வுத்தளம் என்பது நாம் வாழ்கிற, நம்மைச் சுற்றியுள்ள, நாம் பார்க்கிற எல்லாவற்றின் ஊடான செயல்பாடும்தான். என்னைப் பொறுத்தவரைக் கவிஞர்கள் நம்மைச் சுற்றியிருக்கிற நிகழ்வுகளை எப்படித் தன்னுள் தன்வயமாக்கிக் கவிதையாக்கு கிறார்கள் என்பது முக்கியம்.

இராஜலட்சுமியின் கவிதைகளில் இப்படியான நிறைய விசயங்களை விவாதிக்கலாம். ஒரு விசயத்தை மட்டும் சொல்லி, அதன் தொடர்ச்சியாகக் கவிதை பற்றிய இவரின் ஆய்வு நூல், ஒரு கவிஞருக்கான தன்மையினை அதனுள் எவ்வாறு கொண்டுள்ளது என்பதைப் பார்க்கலாம். இத்தொகுப்பை நான் புரட்டிக்கொண்டு வந்தபோது காற்றை அடிப் படையாகக் கொண்டு 6 கவிதைகள் இருப்பதைக் கண்டேன்.

காலம் குறித்தும்/ காலத்தின் சிறு துளைகள் குறித்தும்/ வேர்விட்ட பிசிருகளும்/ சுமத்தலின் ஊடாகவே /நகர்கின்றன /பதியனிடப்படாத /சிலகிளைகள் /வேலியோரம் / சரிந்து கிடக்கும்/சுவாசத்தின் /சாத்தியங்கள் ஏதுமற்று /நிகழ்வின் /அடையாளம் மறுதலிப்பின் ஊடாகவே /உறைந்திருக்கும் /சொல்லாமல் /தீண்டிச் செல்லும்/இதமான காற்று.

இந்தக் காற்று எப்படி முக்கியமான பொருளாகக் கவிஞருக்குள் வந்தது என்பதுதான் முக்கியம். நாம் காற்றோடு சுற்றியிருக்கக்கூடிய சூழலையும் அதனைச் சார்ந்த விசயங்களையும் எப்படிக் கவிதையாக்குகிறார் என்ற ஒரு பண்பை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எதன் பொருட்டும்/விலகாது நெகிழ்தலற்றும் தளர்வற்றும் /இறுகிக் கிடக்கும் / வாசல்கள்/ தொடர்ந்து பயணப்படும் /எறும்பின் சாரையாய் /கூர்மையின் /எல்லா முனைகளிலும் / நுழைந்து வெளியேறும் ஈரம் /சில கள்ளிகள் மலர்கின்றன / வறட்சியினூடாக / காற்றின் /இதமான அசைவுகளில் மிதந்து செல்லும் /இருப்பு /கொய்தமலரின்/ காம்பில் /குருதி வழியும் /கான்கிரிட் கிளைகளின் /உருக்கும் வெப்பத்தில் /காகத்தின் / சிறகு பற்றும் /எங்கோ கேட்கும் /குயிலின் கதறல் /பிளவுபடும் செவிகளில் /எங்கு தொலைத்தது /காற்று /அதன் விரிந்த சிறகுகளை/ காற்றின் ஊடாக/

இவர் செய்யும் பயணம் மற்றும் இயற்கை, அது சார்ந்த பின்புலம் என்பது மிக முக்கியமானது. இயற்கைப் பொருட்களைத் தன்வயப்படுத்திக் கொண்டு கவிதை யாக்கும் மரபுதான் கவிதையின் மிக முக்கியமான மரபு. இவருடைய எல்லாக் கவிதைகளிலும் இம்மரபு ஆழமாகப் பதிந்துள்ளது. இவரின் கவிதைகளில் காற்றைப் போல நிறைய விசயங்கள் உள்ளார்ந்து சென்றிருப்பதை நான் பார்க்கின்றேன்.

அதற்கான மேலோட்டமான சான்றாக இவரின் முதற்தொகுப்பின் பெயரான எனக்கான காற்றும் அதன் தொடர்ச்சியாக நான் வாசித்துக் காட்டிய கவிதைகளையும் காற்று என்ற இயற்கைப் பொருளைத் தனதான பொருளாக மாற்றி அதன் மூலமாகக் கவிதை உலகில் பயணம் போதல், இயற்கையின் ஊடாகப் பயணித்தல் என்பதை மிக முக்கியமான நிகழ்வாக நான் கருதுகிறேன். ஏனென்று சொன்னால் மனிதர்களுக்கு முக்கியமான பொருள் இயற்கை. உலகத்தில் எல்லாவற்றையும் விட முக்கிய மானது இயற்கை மட்டுமே.

இயற்கையிலிருந்துதான் கற்க முடியும். இயற்கையோடு மனிதன் போராடிதான் வெற்றி பெற முடியும். இயற்கையை மாற்றுவதன் மூலம்தான் தனது வாழ்க்கையை அவன் நடத்த முடியும். அப்படி நடத்துகிற வாழ்க்கை நிகழ்வுகளின் ஊடாக பொருட்கள்; சார்ந்த உணர்வுகள் ஒரு நடைமுறை வாழ்க்கைக்கான உணர்வுத்தளமாக அல்லது கவிதையாக எப்படி உருப்பெறுகிறது என்பதுதான் கவிதையின் அடிப்படை. ஒரு கவிதையைக் கவிதையாக அங்கீகரிப் பதற்கான தன்மை. இந்தத் தன்மையைக் காற்றை அடிப்படையாகக் கொண்ட இராஜலட்சுமியின் கவிதைகளின் ஊடாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது.

இவருக்குள் மிக முக்கியமான கவிதைமனம் இருக்கிறது. தமிழன்பன் அவர்களின் கவிதைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும் போது அதற்கு ஒரு தலைப்பு கொடுத்தேன். ‘கவிதை பொய் சொல்லாது’ என்று. கவிதைபொய் சொல்லத் தொடங்கினால் அதைக் கண்டுபிடித்துவிடலாம். கவிதை பொய் சொல்லாமல் எப்படி இருக்கமுடியும் என்று கேட்டால் இராஜலட்சுமியின் கவிதைகளைப்போல இருக்க வேண்டும் என்று சொல்வேன். அப்படித்தான் அதை நான் புரிந்துகொள்கிறேன்.

அதை வேறு எடுத்துக் காட்டுகள் மூலம் நாம் சொல்ல முடியாது. இதைச் சொல்வதற்கு இன்னும் கூடுதலான தகுதி எனக்கு இருக்கிறது. ஏனென்று சொன்னால் ஆசிரியனாக இருந்து அவரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பும் அது சார்ந்த பயணமும் குறித்து எனக்கு ஒரு மரியாதை உண்டு. இந்த நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய குடும்பத்தைச் சார்நதவர்கள் எல்லோரும் இங்கு வந்து ஒரு விழாவாக இந்தப் பெண்ணின் கவிதையைக் கொண்டாடுவது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

ஏனென்று சொன்னால் இப்படி எழுதக்கூடிய பெண்களைச்  சமூகம் எப்படிப் பார்க்கும் என்பது சிக்கலானது. இந்தப் பெண் என்ன இப்படி கவிதை எழுதுகிறாள்; ஆழ்ந்த அமைதி யான அவரது மன நிலையும் என்னமோ இருக்கிறதோ என்று நினைக்கக்கூடிய கவிதை மொழியைப் புரிந்து கொள்ள முடியாத ஆணாதிக்கச் சமூக மரபில் இருக்கக்கூடிய உலகில், அவரது நூல் வெளியீட்டை விழாவாகக் கொண்டாடுவது வளமானது என மிகுந்த மகிழ்வோடு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். அப்போதுதான் அவர் தொடர்ந்து கவிஞராக வளரமுடியும்.

இல்லையென்றால் கவிதை செத்துப் போகும். இயற்கையைப் பற்றிய தேடல் இருக்காது. இயல்பான உண்மை இருக்காது. உணர்வு இருக்காது. உணர்விற்குள் உள்ள வேகத்தினைக் கண்டுபிடிப்பது கடினம். இப்படியான இந்தக் கவிஞர், கவிதை பற்றிய ஆராய்ச்சியாக ‘ஆக்கமும் பெண்ணாலே’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் சங்க இலக்கியப் பெண் கவிஞர்களையும் சமகால புதுக் கவிதைப் பெண் கவிஞர்களையும் பற்றியக் கட்டுரைகளைக் கொண்டது.

இந்த நூலில் சுமார் 20 கட்டுரைகள் இணைக்கப் பட்டிருந்தாலும் இரண்டு மூன்று கட்டுரைகள் தவிர்த்து பிற எல்லாக் கட்டுரைகளும் - செம்பாதியான கட்டுரைகள் சங்க இலக்கியம் பற்றியதும், பிற கட்டுரைகள் புதுக்கவிதைகள் பற்றியதுமான பதிவாக இருக்கிறது. இதில் மிகுந்த சந்தோஷம் என்னவென்று சொன்னால் நுண்ணிய உணர்வுத்தளம் கொண்ட கவிஞராக இருப்பவர், பிறருடைய கவிதைகளை அந்தத் தளத்தில் இருந்து எப்படிப் பார்க்க முடியும்? அல்லது அதை எப்படி ரசிக்க முடியும் என்பதற்கான பதிவாக இத்தொகுப்பினைப் பார்க்கிறேன்.

அதில் சங்க இலக்கியக் கவிதைகளைப் பற்றிச் சொல்லுகிற பொழுது சங்க இலக்கியக் கவிதைகள் இன்றும் உயிரோடு இருப்பது ஏன்?  இன்னும் பல நூற்றாண்டுகள் அது அழியாமல் புதுப்புதுப் பொருளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நமக்கு அது விளங்காதது என்றோ அதன் காலம் முடிந்துவிட்டது என்றோ தூக்கி போடமுடியாமல் ஏன் சங்கக் கவிதைகள் இருக்

கின்றன? இதற்கு மிக முக்கியமான காரணம், அந்தச் சங்கக் கவிதைகள் குறிப்பாகச் சங்கப் பெண் கவிஞர் களுடைய உணர்வுத்தளங்கள் மிக அழகான சொற்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் உணர்வுத் தளம் என்பது எந்தக் காலத்திற்கும் அழியாது. மனிதர் களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உணர்வுத்தளம் நீண்ட நெடுங்காலம் பயணிக்கக்கூடியது.

உணர்வுத் தளம் நிகழ்வுகளோடு எப்படி மோது கிறது? அதனால் என்ன விளைவுகளைச் செய்கிறது? என்பது ஒருபுறமிருக்க, அடிப்படையான உணர்வுகள் என்பவை மேலும் வளர்ந்து போகக்கூடிய மரபு நமக்கு இருக்கிறது. ஏறக்குறைய சங்கக் கவிதைகள் என்பவை தமிழின் தன்னுணர்ச்சிப் பாக்கள். உலகத்தில் முதன் முதல் தோன்றிய எல்லா செவ்விலக்கியக் கவிதைகளும் தன்னுணர்ச்சிப் பாக்களே. கிரேக்க, சீன, ஜப்பானிய கவிதையாக இருப்பினும் அவை அனைத்தும்  தன்னுணர்ச்சிப் பாக்களே. இவை ஏன் தன்னுணர்ச்சிப் பாக்களாகத் தோன்ற வேண்டும்? முன்னர் சொன்னதைப் போல, மனித உணர்வுதளம்தான் கவிதை. மனித உணர்வுத் தளத்தின் பெயர்தான் கவிதை. உணர்வுத்தளத்தின் மொழி என்பதுதான் இது. உணர்ச்சியைக் கவிதையாக வடிப்பது சங்க இலக்கியக் கவிதைகளின் முதன்மை மரபு. இவர் அந்த மரபில் கட்டுரைகளை விரிவாக எழுதக்கூடியவர்.

இன்றைக்கு நிகழக்கூடிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய பெண்கவிஞர். உணர்வுத் தளத்தில் நிகழ்கால அரசியலை எப்படிப் புரிந்துகொள்கிறார் என்பது முக்கியம். சங்கப்பெண் கவிஞர்கள் கவிதைகளில் கிடைக்கக்கூடிய உணர்வுத் தளத்தை இன்றைய கண்ணோட்டத்தில் இருந்து எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த வேலையையும் இராஜலட்சுமி மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இந்த நூல் என்ன பேசுகிறது என்றால், ஒட்டுமொத்தமான தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண் கவிஞர்களாக இருந்தவர்களின் பதிவுகள் கடந்த 2500 ஆண்டுகளாக எப்படிப் பயணம் செய்திருக்கிறது? என்பதை மிகச்சுருக்கமாக இவ்வாய்வு நூல் பேசுகிறது.

இந்நூலில், செம்பாதியாக இருக்கக்கூடிய சங்கக் கவிஞர்கள் பற்றிய கட்டுரைகளும் சரி, காரைக்கால் அம்மையார் பற்றி இவர் எழுதி இருக்கக்கூடிய சிறந்த கட்டுரையும் சரி அதற்குப் பிறகு புதுக்கவிஞர்களாக இருக்கக் கூடியவர்கள் பற்றி எழுதி இருக்கிற கட்டுரை களாயினும் சரி, இந்த வரலாற்றில் காரைக்கால் அம்மையார் காலம் தொடங்கி ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டு வரை ஒட்டுமொத்தமாகத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் என்பவர்கள் எங்கே போனார்கள்? ஏன் இல்லை? என்பது தமிழ் வரலாற்றில் மிக முக்கியமான கேள்வி.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆவுடையக்காள் போன்ற சில கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.  தேடித் தேடிக் கண்டுபிடித்தாலும் ஆண்டாளுக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் பெண் கவிதையே இல்லை பெண் கவிஞர்களே இல்லை. இது ஏன்? இந்த மரபை, இந்தத் தொகுப்பின் ஊடாக உரையாடலுக்கு உட்படுத்திச் சங்கப் பெண் கவிஞர்களின் தன்மையோடு தற்காலப் புதுக்கவிஞர்களைப் பல இடங்களில் இணைத்துப் பேசுகிறார்.

அப்படி இணைத்துப் பேசுகிற விசயங்கள் முக்கியமான பதிவுகளாக அமைகின்றன. உணர்வை மட்டுமே மையப்படுத்தி அதற்கேற்ப மொழியைக் கையாண்டமையாலேயே இன்றும் சங்கப்பாடல்கள் உயிர்ப்போடு இயங்குகின்றன. ‘வெற்றுச் சொற்களின் கோவையாக எழுதி உடனடி கவனத்தைக் கவர எத்தனிக்கும் படைப்புகள் மீளாய்வுக்கு உரியது மட்டுமன்று. ‘ஆபத்தானதும்கூட.’

ஆபத்து என்ற சொல் மிக முக்கியமானது. இந்தச் சொல்லில் என்ன ஆபத்து வரப்போகிறது? வெற்றுச் சொற்கள்தான் கவிதை மீதே வெறுப்பை உருவாக்கக் கூடியது. உலகத்தில் பிறந்த யாரும் கவிதை எழுதாதவர் களே இல்லை என்கிறார்கள். கவிதை எல்லோரும் எழுதுவது நல்ல விசயம்தான். ஆனால் அதன் மூலமாக ஏற்படக்கூடிய சொற்களின் மலினத் தன்மை, திருப்பித் திருப்பிச் சொல்லக்கூடிய வறட்டுத்தனம், பேசக்கூடிய மலினப்பட்ட பொருண்மை ஆகியவை அந்தக் கவிதை பற்றிய வெறுப்பு தன்மையையும் எதிர்மனநிலையையும் உருவாக்கிவிடும். இந்தத் தன்மை இல்லாமல் சங்கக் கவிதை இருக்கக்கூடிய காரணத்தைதான் இராஜ லட்சுமி சொல்லுகிறார்.

சங்கப் பெண் கவிஞர்கள் அரசியல் சார்ந்த அறிவும் இயக்கமும் கொண்டிருந்தமையை அவ்விலக்கியம் உணர்த்தி நிற்கிறது. இன்றைய பெண் கவிஞர்களின் கவிதைகளில் சமகால அரசியலோ அது குறித்து விமர்சனமோ இல்லாமல் இருப்பது ஆய்விற்குரியது என்று எழுதியிருக்கிறார். இது இத் தொகுப்பின் முக்கியமான விசயம் என்று நான் கருதுகிறேன். சங்கப் பெண் கவிஞர் ஒளவையாரக இருக்கட்டும்; வெள்ளி வீதியாராக இருக்கட்டும் அவருடைய உணர்வுத் தளங்களில் காணப்படக்கூடிய அரசியல்; அதன் மூலமாகப் புரிந்து கொள்ளக்கூடிய சமூகம்; குறிப்பாகச் சங்கக் கவிதை என்பது அடிப் படையில் 75 சதவீதம் அகப்பாடல்களையும், 25 சதவீதம் புறப்பாடல்களையும் கொண்டிருக்கிறது. அதிகமான அகப்பாடல்களைச் சங்க இலக்கியம் கொண்டிருப்பதன் மிக முக்கியமான காரணமே அது காதலை, பிரிவை முதன்மைப் படுத்துகிறது.

ஏன் பிரிவை அதிகமாகப் பேசுகிறது? பிரிவு தான் உணர்வுத் தளம், உணர்வுத் தளம் தான் சங்கக் கவிதை. ஆகையினால்தான் பிரிவை முதன்மைப் படுத்துகிறது. அப்படிப் பிரிவை முதன்மைப்படுத்திப் பேசுகிறபோது, அந்தப் பெண்கள், ஆண் பிரிந்து செல்லுகிற அரசியல் பற்றி பல்வேறு விதமான பதிவுகள், குறிப்பாகப் பரத்தையர் வீட்டுக்குச் செல்லக்கூடிய ஆண்மகனை அன்றைய பெண் கவிஞர் எப்படிப் பார்த்தார் என்று நிறைய பதிவுகளைக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் அவனை எருமையைப் போன்று பார்த்தாள். எருமை மாடு என்று சொன்னாள்.

சங்கக் கவிதைகளில் பரத்தையர் வீட்டுக்குச் சென்ற ஆணை எருமையாகச் சித்திரிக்கும் பண்பும் - சித்திரிக்கும் பொழுது ஒரு பெண் அவனைவிட்டுக் கொடுக்காமல் தன்னுடையவனாக வைத்துக்கொண்டு பேசும் மரபும், தன்னுடன் இருக்கக்கூடிய சொந்தம் என்ற உணர்வுத் தளத்தைக் கொண்டு பேசக்கூடிய விமர்சன மரபாகும். இப்படி வெள்ளிவீதியின் பாடல்கள் கோபத்தையும் ஆழத்தையும் எரிச்சலையும் வெளிப் படுத்துபவையாக இருக்கின்றன. இவற்றை யெல்லாம் இராஜலட்சுமி விரித்துச் சொல்லுகிறார். சங்க இலக்கியங்களில் உள்ள அரசியல் பின்புலத்தை இன்றைய கவிதைகளில் காணமுடியவில்லை என அவர் சொல்லுகின்ற காரணத்தை முழுவதுமாக மறுப்பதற் கில்லை. இப்போது கவிதைப் புத்தகம் போடுவது எளிதாக இருக்கிறது. அதன் விற்பனை குறைவு என்பது எதார்த்தம்; அதைப் பற்றி யாரும் கவலைப்படு வதில்லை. எல்லோரும் அச்சடிக்கிறார்கள். அச்சடிப் பதற்கு முன் அச்சடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்துக் கவலை கொள்கிறார்களா? முறையாகச் சென்றடைகிறதா என்பது பற்றிய எண்ணம் இன்றி, அச்சு போடுகிற மனநிலைமை அவர்களைக் கவிஞர் களாக வரித்துக் கொள்ளும் தன்முனைப்பாக அமைகிறது.

இவர் சங்கக்கவிதை எழுதும் கவிஞர்களையும் சமகாலப் பெண் கவிஞர்களையும் நிறைய ஒப்பிட்டுப் பேசி இருக்கின்றார். குறிப்பாக இப்புத்தகத்தில் சங்கக் கவிதையில் இருக்கக்கூடிய சொற்களையும் தற்கால  கவிதையில் இருக்கக்கூடிய சொற்களையும் அடிப்படை யாகக் கொண்டு நல்ல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் ஒரு சொல், உணர்வுத்தளத்தில் எந்த இடத்தைப் பெறுகிறது என்பதைப் பதிவு செய்துள்ளார். இவருடைய கவிமனம், கவிதை மீது கொண்டிருக்கக்கூடிய ஈடுபாடு, சங்கக் கவிதைகளை இவர் எப்படிப் புரிந்துகொள்ளுகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ளச்செய்கிறது.

இக்காலக் கவிதைகளை எப்படி உள்வாங்குகிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த மரபு மிக அவசியம். அந்தப் பண்போடு இவர் இருப்பதால்தான் கவிதை எழுது வதையே தனக்கான அரசியலாகக் கருதுகிறார். ‘உன்னையே நீ எழுது; உன் உடம்பின் குரல்களுக்குச் செவி சாய்;அப்பொழுது தான் வகுத்து முடியாத உன் நனவிலி மனத்திலிருந்து மூல வளங்கள் எல்லாம் பொங்கிப் புறப்பட்டு வெளி வரும்’ என்ற பஞ்சாங்கத்தின் மேற்கோளைத் தனது நிலைப்பாட்டிற்கு ஏதுவாகக் காட்டுகிறார். இந்த மேற்கோள் இன்றைய பெண்ணியக் கோட்பாடு பேசக்கூடியவர்கள் மத்தியில் மிக முக்கிய மான கோட்பாடு.

சொந்த உணர்வும் சொந்த நிகழ்வும் சொந்த வாழ்வும் பெண்ணுக்கு அரசியல். றிமீக்ஷீsஷீஸீணீறீ என்பது றிஷீறீவீtவீநீs. றிமீக்ஷீsஷீஸீணீறீ ஆக வாழக்கூடிய வாழ்முறை என்பதே அவர்களுக்கு மிக முக்கியமான  அரசியலாக இருக்கிறது. பெண்கள் உடுத்துகிற உடை, நடக்கிற நடை, சிரிக்கிற சிரிப்பு, பேசுகிற முறை இவை எல்லாவற்றையுமே சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நமக்குத் தெரியும். இப்படியான சமூகத்தில் ஒரு பெண் எப்படி இருக்க முடியும்? எப்படியாக இருக்கவேண்டும்? எப்படி இருக்கிறாள்? இதற்கான வலி என்ன? வலி பற்றி பேசுவது தான் பெண்ணிய அரசியல் என்கிறோம். பெண்ணிய அரசியல் மிக முக்கியமானது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ்க்கவிதை அந்தக் கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக் கிறது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் எப்போதும் இல்லாத இந்த வளம் மிக முக்கியமான வளம். சங்க காலத்திற்குப் பிறகு 20ஆம் நூற்றாண்டின் இறுதி 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் மிக அதிகமான கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்படி கவிஞர்கள் ஏன் உருவாகிறார்கள்? அப்படி உருவான கவிஞர்களில் ஒருவராக இராஜலட்சுமி இருக்கிறார் என்பதும் எனக்கு மிக முக்கியமான விசயமாகப் படுகிறது. இதைப் போலவே இந்தத் தொகுப்பில் ஜீமீக்ஷீsஷீஸீணீறீ என்னும் அரசியல் பேசக்கூடிய நவீன புதுக்கவிஞர்கள் சிலரை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் பல இடங்களில் விமர்சனத்துக்கு ஆட்படுத்துகிறார்.

உடல் பற்றிப் பேசுவது அதிர்ச்சி வைத்தியமாக இருக்கவேண்டுமா அல்லது உடல் என்ற அரசியலைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டுமா என்ற கேள்வியைப் பல இடங்களில் எழுப்புகிறார். ஏனென்று சொன்னால் ஒரு ஆணாக இருந்து பெண்ணின் கவிதையை வாசிக்கிற நான், ஆண் மனதோடுதான் இருக்கமுடியும். அவர்கள் பயன்படுத்துகிற சொற்களைக் குறிப்பாக அவர்களுடைய உடல் சார்ந்து பயன் படுத்துகிற சொற்களை, நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்பது மிக முக்கியமானது.

ஆனால் பெண் அவருடைய தளத்தில் இருந்து தன் உடல் சார்ந்து சொற்களைப் பயன்படுத்துகிற முறைமைக்கும் வாசிக்கிற ஒரு ஆண் அந்த சொற்களை உள்வாங்குகிற தன்மைக்கும் சமூகத்தில் இருக்கக்கூடிய ஆணாதிக்க மரபு மிக முக்கியப் பங்களிப்பு செய்கிறது. அப்படி யானால் பெண் கவிஞர்கள் எல்லோரும் தங்கள் உடலை எழுதுவது என்பதில் எப்படியான சொல்லாட்சியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்கு இராஜலட்சுமி பதில் சொல்லுகிறார்.

வெறும் அதிர்ச்சியாகச் செய்வதில் பொருள் இல்லை. மாறாக அதன் அரசியல் வெளிப்படும்படி அமையும் போது, மிக முக்கியமான கவிதையாக வெளிப்படுகிறது என்று சொல்லுகிறார். இராஜலட்சுமி இயற்கை மரபை உள்வாங்கி, இயற்கை மரபில் இருக்கக்கூடிய நிகழ்வு களை உணர்வுத்தளத்தில் பொய்மை இல்லாது நேர்மை யாக, உணர்வைப் பொய்யாகக் காட்டாமல் அதற்கான சொற்களைத் தேடி மிகவும் ஆழமாகவும் அமைதி யாகவும் கவிதை எழுதும் மரபிற்குச் சொந்தக்காரராக இருக்கிறார். கவிதைகளைப் பற்றிய விமர்சனத்தையும், அந்த மரபில் செய்து கொண்டிருக்கிற தன்மையையும் பெரிதும் பாராட்டி மகிழ்கிறேன்.

குறிப்பு:

‘எனக்கான காற்று’ (2004) ‘நீயும் நானும் நாமும்’ (2011) ஆகிய கவிதைத் தொகுதிகளை கவிஞர் ஏ.இராஜலட்சுமி வெளியிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறையில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றவர். தற்போது புதுச்சேரி பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கவிதைகள் குறித்த இவரது விமர்சன நூலான ‘ஆக்கமும் பெண்ணாலே - பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

Pin It