Nejil-Pathithulak 350கற்பனையில் நீந்திக் கதையைப் பிடிப்பதை விட நடைமுறை வாழ்க்கையில் நடந்தும் தடுக்கி விழுந்தும் விழ வைக்கப்பட்டதுமான அனுபவங் களை வைத்து இலக்கியம் படைப்பது என்பது எல்லோருக்கும் கிட்டுவதில்லை.  தொடக்க காலத்தில் பெரும்பாலான படைப்பாளர்களின் படைப்புகளில் கற்பனைதான் விஞ்சி நிற்கும்.

எவ்வளவுதான் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மற்றவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதினாலும் பாதிக்கப்பட்டவரே எழுதும் போதுதான் உண்மையான வலியை உணர முடியும்.  அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ஒருவர்தான் ஈழ எழுத்தாளர் தெணியான் (இயற் பெயர்: நடேசு).  கல்வி நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றிய படைப்பாளர் தெணியான் சாதியத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராக எழுதுகோலைப் பிடித்தவர்.  இடதுசாரிச் சிந்தனையால்தான் வேறுபாடு களைக் களைய முடியும் என்று நம்பியவர்.

மற்றவர்கள் தம் குலத்தைத் தெரிந்துகொண்டு கீழ்த்தரமாக மதிப்பார்களே என்று அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை.  மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தம்முடைய புனைபெயரைத் தாம் பிறந்த இனம் சார்பாகவே வைத்துக்கொண்டார்.

காலங்காலமாகவே ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை.  அவற்றை எடுத்துச் சொல்லவும் ஆளே இல்லை.  வருடம் முழுவதும் உழைத்துக் கால்வயிற்றை நிரப்புவதே அவர்களுக்குப் பெரும்பாடாக இருந்தது.  மழைக்குக் கூடப் பள்ளிக்கூடங்களில் சென்று ஒதுங்க வாய்ப்பில்லை.

சோவியத்துப் புரட்சிக்குப் பிறகு உலகெங்கிலும் மக்களிடையே குறிப்பாக உழைக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது.  அதற்குப் பொதுவுடைமைச் சிந்தனையும் முன்னின்றது என்பது மிகையாகாது.

அப்படிப்பட்ட சிந்தனைகள் வளர்ச்சி பெற்ற காலத்தில் கிளைத்தெழுந்த படைப்பாளர்களுள் ஒருவர்தான் தெணியான்.  பல சிறுகதைகளையும் புதினங்களையும் படைத்துள்ள தெணியான் தம்முடைய இலக்கிய அனுபவங்களைப் ‘பூச்சியம் பூச்சியமல்ல’ என்னும் நூலில் பதிவு செய் துள்ளார்.  இந்நூலின் முன்னுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்து அவருக்கு மட்டுமன்று; அவரைப் போன்று ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த படைப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்து வதாகும்.

“பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்க் கையில் வந்து கிட்டாத சமுக அனுபவங் களை எனது வாழ்வில் நான் பெற்றிருக் கின்றேன்.  எனக்கும், என் போன்ற ஒடுக்கப் பட்ட சமூகங்களில் பிறந்த எழுத்தாளர் களுக்கும் இத்தகைய அனுபவங்கள் கிட்டு வது புதுமையானவை அல்ல.  சமூக ஒடுக்கு முறைகளுக்கு ஆனான அனுபவங்கள், அந்த ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து நின்று பெற்ற அனுபவங்கள், அவற்றுக்கு எதிராகப் போராடிப் பெற்ற அனுபவங்கள் என எங்களுக்கு மாத்திரம் தனித்துவமாகப் பல உண்டு.”

(பூச்சியம் பூச்சியமல்ல பக். III - IV)

வாழ்க்கையின் அனுபவங்களையே படைப்பு களாக ஆக்கித் தந்துள்ள தெணியானின் இலக்கியக்களம் பரந்துபட்டது.  கருந்தரங்குகளிலும் பட்டி மன்றங்களிலும் கலந்து கொண்டு தம் கருத்துகளை எடுத்து முழங்கியுள்ளார்.  மரபு வழிச் சிந்தனை யாளர்களையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் தெணியானின் கருத்துகள் இருந்தன.

தொடர் வாசிப்பு, இலக்கிய ஆர்வலர்களின் சந்திப்பு, இடதுசாரிச் சிந்தனைகள் படைப்பாளர் தெணியானின் அறிவை விசாலப்படுத்தின.  டேனியல், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தெணியான், பேராசிரியர் கார்த்தி கேசு சிவத்தம்பி அவர்களுடன் கொண்டிருந்த பழக்கத்தை ‘நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி’ என்னும் நூலில் மிகவும் ஆழமாகவே பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் பல மரபு சார்ந்த அறிஞர்களும் முற்போக்கு ஆய்வாளர்களும் இருந்தாலும் அவர் களுள் பேராசிரியர் க.கைலாசபதியும் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் குறிப்பிடத்தக்கவர்கள்.  அவர் களுடைய ஆய்வு அணுகுமுறை தமிழ் ஆய்வாளர்கள் அனைவரையும் கவர்ந்தவையாகும்.  ஒரே கருத்தை வெளிப்படுத்தும் முறையும் எடுத்துச் சொல்லும் முறையும் ஆய்வாளர்களுக்குள் வேறுபடும்.  அவ் வகையான வேறுபாட்டிற்கு ஆய்வியல் அணுகு முறையே காரணமாகும்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், இடைக் கால இலக்கியம், இக்கால இலக்கியம் என எதனை எடுத்துக் கொண்டாலும் பேராசிரியர் கா.சிவத் தம்பியின் பார்வை வேறுபட்டு இருப்பதுடன் அந்த வழியில் மற்றவர்களையும் பார்க்கத் தூண்டும் வகையில் அவருடைய ஆய்வு இருக்கும்.

அப்படிப்பட்ட பேராசிரியரைச் சிக்கெனப் பிடித்துக்கொண்ட படைப்பாளர் தெணியான்.  வாழ்நாள் முழுவதும் அவருடனான அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.  பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வின் ஆழத்தை அறிந்த வர்கள் பலர் இருக்கின்றார்கள்.  ஆனால் அவருடைய தனிப்பட்ட குணம், குடும்ப உறவு பொது வாழ்வு எனப் பலர் அறிந்திராத செய்திகளை ‘நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத் தம்பி’ என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

தனிப்பட்ட குணம்

முற்போக்குச் சிந்தனைகளைத் தெரிந்து வைத்திருப்பது வேறு.  அதே சிந்தனையில் வாழ்வது வேறு.  அறிவியல் கருத்துகளை அறிந்து கொண்டு அவை தொடர்பான மூடப்பழக்க வழக்கங்களை நம்புவதைப் போலத்தான்.  ஆனால் பேராசிரியர் கா.சிவத்தம்பி தம்முடைய முற் போக்குச் சிந்தனைக்கு மாறுபட்டு எப்போதுமே நடந்ததில்லை  என்பதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் நினைவு கூர்கின்றார்.

ஒருமுறை பேராசிரியர் கா.சிவத்தம்பியைச் சந்திக்கத் தெணியான் சென்றபோது முன்னரே இருவர் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  எப்போதும் தெணியான் உள்ளே சென்ற பிறகே வாருங்கோ வாருங்கோ என வரவேற்கும் பேரா சிரியர் அன்று கொஞ்சம் வித்தியாசமாகத் தெணி யானை வெளியில் பார்த்தவுடனேயே எழுந்து நின்று தெணி வாருங்கே... வாருங்கோ என்கிறார்.  பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தவர்களின் நிலையைப் பார்த்த தெணியான் பின்வருமாறு எழுதுகின்றார்.

“அவர்கள் இருவரையும் அவதானிக்கின்றேன்..  இருவரும் கல்லாகச் சமைந்துபோய் இருக்கின்றார்கள்.  இருவர் முகங்களிலும் அசடு வழிகிறது.  அவர்கள் இருவரும் என்னிலும் வயது மூத்தவர்கள்.  யாழ்ப் பாணச் சமுதாயத்தின் உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள்.  இரு வரும் நான் யார் என்பதை நன்றாக அறிந்த வர்கள்.” (பக். 16-17)

பேராசிரியர் கா.சிவத்தம்பி எப்போதும் யார் வந்தாலும் எழுந்து நின்று வரவேற்கும் இயல்பான குணம் உடையவர்.  அனைவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை வந்திருப்பவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே தெணியானுக்கு அப்படி ஒரு வரவேற்பை அளித்துள்ளார்.  வந்த வர்கள் போகும்போது இவரிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.

தெணியான் ஆசிரியராகப் பணிபுரிகின்றார்; ஈழத்தில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர். அவருக்கே இந்த நிலை என்றால் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  இந்த வேறு பாடு நிறம், சாதி எனப் பல நிலைகளில் வெளிப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

பேராசிரியர் கா.சிவத்தம்பியிடம் பலர் கருத்துக் கேட்க வருவார்கள்.  அப்படிக் கேட்ட சிலர் அக்கருத்தைத் தங்கள் கருத்தாகவே கொண்டு நூல்களும் கட்டுரைகளும் எழுதிவிடுவார்கள்.  அப்படிப்பட்ட ஒருவரைச் சுட்டிக் காட்டியபோது பேராசிரியர் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

“அவன் முன்பும் இப்படித்தான் என்னோடு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டு நான் தெரிவித்த கருத்துகளைக் கேட்டுக் கொண்டு போய்த் தனது சொந்தக் கருத்துகள் போல் எழுதி விடுகிறான்.  அவனை விடுங்கோ.” பக்-99 .

இவ்வாறு பேராசிரியரின் தனிப்பட்ட மனித நேயமிக்க பல குணங்களைத் தெணியான் இந் நூலில் பதிவு செய்துள்ளார்.

2. குடும்ப உறவு

வசதி படைத்தவர்கள் ஒரு குடும்பத்தில் கூடி வாழும்போது ஆளுக்கு ஆள் தனி அறையில் இருப் பார்கள்.  புழங்குபவை தனித்தனியாக இருக்கும்; பேசிக்கொள்வதுகூட அளவோடுதான் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலை நினைவுபடுத்திப் பேராசிரியர் சிவத்தம்பி தம் குடும்பம் பற்றிச் சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பத்தில் பேராசிரியரே மூத்தவர்.  ஐந்து தங்கைகள், ஒரு தம்பி.  மணம் முடித்து வாழ்ந்த மூத்த தங்கை இறந்ததைப் பேராசிரியரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  திருமணம் ஆவதற்கு முன் தமக்குத் தாயைப் போல இருந்த தங்கையை நினைவு கூர்ந்ததைத் தெணி யான் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

“எனது குடும்பம் பெரியது.  வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த குடும்பம்.  எனது மூத்த தங்கை எனது தாயாரின் இடத்தில் இருந்து எத்தனை நாள் எனக்கு உணவு தந்திருப்பாள்... இரவு நேரங்களில் எல் லோருக்கும் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் போது சில சமயங்களில் அந்த உணவு போதாமலும் வருவதுண்டு.  அந்தப் போதாமை, உணவு பங்கிட்டுக் கொடுக்கும் தாயை அல்லது மூத்த பெண் பிள்ளையைத் தானே பாதிக்கும்.  என்னுடைய இந்தத் தங்கை எத்தனை நாட்கள் எனக்கு உணவைத் தந்துவிட்டுத் தான் பட்டினி கிடந்திருப் பாளோ!” (பக். 36-37)

தொடக்கத்திலிருந்தே அந்தப் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.  வேறு பள்ளியில் படித்த பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.  அப்படிப்பட்ட பள்ளியில் தம் மகளுக்குப் பேராசிரியரும் அவரின் துணைவி யாரும் ஓர் இடம் வாங்கிக் கொடுத்ததைத் தெணியான் பதிவு செய்துள்ளார்.

பேராசிரியருக்குப் பொது வாழ்வில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் பேராசிரியரின் துணைவி யாரே குடும்பத்தைக் கவனமாகப் பார்த்துக் கொண்டார் என்பதையும் குழந்தைகள் மீது பேராசிரியர் அளவில்லாப் பாசம் வைத்திருந்தார் என்பதையும் தெணியான் பதிவு செய்துள்ளார்.

3. பொது வாழ்வு

தனி ஈழம் அமைப்பதற்காக நடந்த போ ராட்டத்தைப் பற்றிப் படைப்பாளர் தெணியான் சில இடங்களில் பதிவு செய்துள்ளார்.  போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தில் தலைவராகப் பேராசிரியர் இருந்துள்ளார்.  போரினால் கணவன், தாய்தந்தை எனப் பலரை இழந்து வாடுவோரின் வறுமையைப் போக்க இந்தக் கழகத்தின் வழி உதவி செய்தார்கள்.

ஒரு விதவைப் பெண் நிதிஉதவி பெற விண்ணப்பித்து இருந்தார்.  அந்த பெண்ணின் கணவன் போரில் குண்டடிபட்டு இறந்துபோக, இன்னொருவரை இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார்.  கள அலுவலர் இதைக் கண்டறிந்து பேராசிரியர் கா.சிவத்தம்பியிடம் அந்தப் பெண்ணுக்கு நிதி வழங்கக் கூடாது என்கிறார்.  கொடுக்கலாம் என்பது பேராசிரியரின் எண்ணம்.

“உன்ரை சகோதரிக்குச் சீதனம் கொடுப்பது போல அந்தப் பெண்ணுக்கு அந்த நிதியைக் கொடு.  அவள் குடும்பம் அதனாலேயே வாழட்டும்.” (ப.59)

பேராசிரியர் மனிதநேயத்தின் எல்லையைத் தொட்டுவிட்டதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியலாம்.  அனைவருமே போரினால் பாதிக்கப் பட்டு வாடும்போது விதவையானவள் இன்னொரு வனின் மனைவியாகி வாழட்டுமே என்னும் முற்போக்குச் சிந்தனையும் இந்த நிகழ்ச்சியுள் தொக்கியுள்ளது.

இப்படிப் படைப்பாளர் தெணியான் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிப் பலர் அறியாத பல செய்திகளை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆய்வுப் புலமை, அதனை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதில் ஆர்வம், மானுட நேயம் எனப் பேராசிரியரைப் பற்றிய பல செய்திகள் இந்நூலில் பதிவாகி உள்ளன.

தம்மோடு மனந்திறந்து பேசிய பல செய்தி களில் மற்றவர்கள் அறியத்தக்க செய்திகள் பல வற்றைத் தெணியான் பதிவு செய்துள்ளார்.

குருசீடர் போன்ற உறவெல்லாம் இப்போது ஆசிரியர் மாணவர்களிடத்தில் இருப்பதில்லை.  படிப்பு, பணி, இடமாற்றம் என அந்த உற  வெல்லாம் இப்போது சாத்தியப்படுவதில்லை.  இந்நூலாசிரியர் பேராசிரியரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துள்ளார்.  இவர் ஓர் ஆசிரியர்- படைப்பாளர், கா.சிவத்தம்பி புலமைமிக்க பேராசிரியர்.

படைப்பாளர் தெணியான், பேராசிரியரைப் பார்க்கப் போகும்போது தயக்கத்துடன் செல்வார்.  தம்மால் அவருடைய பணி கெட்டுவிடக் கூடாது என்பது தான் நோக்கம்.  தெணி நீங்கள் எனக்குக் கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் எனப் பேராசிரியர் கூறியதைக் கேட்ட இந்நூலாசிரியர் வியந்து போய்விட்டார்.   தாம் சொல்ல வேண்டி யதைப் பேராசிரியர் கூறுகின்றாரே என்பதுதான் காரணம்.  பேராசிரியர் அப்படிச் சொன்னதற்கான காரணம் படிப்பவரையும் வியக்க வைக்கும்.

“நான் சொல்வதை எல்லாம் கேட்பதற்கும் ஓராள் வேணும். இங்கு அப்படி ஓராளும் எனக் கில்லை. நீங்கள்தான் வந்து கிடைத்திருக்கிறீர்கள்.” (ப.10)

இப்படி ‘நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி’ என்னும் நூலில் நூலாசிரியர் தெணியான் பேராசிரியரைப்பற்றிய பல செய்திகளை பதிவு செய்துள்ளார்.  பேராசிரியரை அறிந்தவர்களும் ஆய்வாளர்களும் என அனைவருமே படிக்க வேண்டிய நூல்.

துணை நின்ற நூல்கள்

கா.சிவத்தம்பி  :         

தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1994

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர் காணல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011

தெணியான்   :

 பூச்சியம் பூச்சியமல்ல; இலக்கிய அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2013.

Pin It