“செயற்கைக் கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்” என்ற நூலைப் படித்தேன்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சோம.இராமசாமி அவர்கள் எழுதியது; பாவை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
ஆசிரியர் சிறந்த புவியியல் ஆய்வாளர், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் புவியியல் பற்றிப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். இருநூறுக்கு மேலான ஆய்வுக் கட்டுரைகளையும் பத்து நூல் களையும் எழுதியிருக்கிறார் என்று தவத்திரு பொன்னம்பல அடிகளார் வாழ்த்துரையில் குறிப் பிட்டிருக்கிறார்.
செயற்கைக்கோளின் செய்திகள்
செயற்கைக்கோளை PSLV ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் ஏவப்பட்டது; 900 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. பூமியை வலம் வந்து படம் எடுத்தது. நதிகளின் பாதை மாறிய இடங்களையும், நீர்நிலைகளையும், கனிமங்களையும், பாறைகளையும், வேளாண்மை மற்றும் கடல் வளங்களையும் காட்டுகின்றன. இதன் மூலம் இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகும் பகுதிகளைக் கணிக்க முடியும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டின் நதிகளின் பாதை மாறிய நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வரைபடங்களின் மூலம் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
காவிரி நதி உருவான காலத்திலிருந்து - லட்சம் ஆண்டுகளுக்கு மேலான இடைவெளியில் மூன்று முறை பாதை மாறிய அரிய தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்; இத்தகவல்களால் தமிழ் மண்ணின் தொன்மையை அறியமுடிகிறது.
காவிரி பாதை 1 - ஓகனேக்கலிலிருந்து - காவிரிப்பட்டினம், வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம், திருவள்ளூர் வழியாகச் சென்று கடலில் கலப்பது.
பாதை 2 - மேட்டூர் - தொப்பூர், அரூர், சாத்தனூர், திருக்கோவிலூர், கடலூர் வழியாக.
பாதை 3 - மேட்டூர், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மகேந்திரபட்டினம் வழியாக,
கொள்ளிடம் வரை செல்லும் காவிரியின் இன்றைய டெல்டா பகுதிகளையும் படங்களின் வழியாக அறிய முடிகிறது.
வைகை நதியும் பரமக்குடியிலிருந்து பல பாதைகளில் மாறியதாகவும் தெரிவிக்கிறது.
அறந்தாங்கி, திருப்பத்தூர், தேவகோட்டை வரை கடல் இருந்ததாகவும், பூமி எழுந்ததால், கடல் பின்வாங்கிய அரிய தகவலும் உள்ளது.
“மனித வாழ்க்கையைப் போலவே, நதிகளின் வாழ்க்கையிலும் இளமைநிலை, பக்குவநிலை, முதுமைநிலை ஆகிய மூன்று நிலைகளிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் தாமிரபரணி நதி தனித்தன்மையானது; உருவான இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை பக்குவப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. வெள்ளப் படுகைகள் நதியின் இருமருங்கிலும் சுமார் 2.3 கிலோமீட்டர் அகலத்தில் வியாபித்திருப்பது செயற்கைக்கோளின் படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
திருவைகுண்டத்துக்கு அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் காணப்படும் முதுமக்கள் தாழிக் கலாச்சாரம் பெரும் கற்காலகட்டத்தை (2700 - 2300 ஆண்டுகளை)ச் சார்ந்ததாகும்; ஆகவே தாமிரபரணி நதியின் வயது இதை ஒத்தே இருக்கும் என்று வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
தமிழக நதிகளின் மாற்றங்களை ஆசிரியர் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறார்; வரலாற்றுப் படிப்பினைகளையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
1. புதையுண்ட ஆறுகள் இன்றும் நீரோட்டத்துடன் உள்ளன; நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் நேரத்தில், பழைய நீர்ப்பாதைகளையும் பயன்படுத்த வேண்டும்.
2. காரைக்குடி நகரில் - தேனாறு வறண்ட நதியாக இருந்தாலும் மழைக்காலங்களில் நீர் ஓடும்போது, புதையுண்ட பாதைகளில் நீர் உறிஞ்சப்பட்டு சதுப்பு நிலங்கள் புத்துயிர் பெறும். அப்பாதைகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதற்கு காரைக்குடி ஒரு எடுத்துக்காட்டு. இதுபோன்று பல நகரங்களில் இந்நிலை காணப்படுகிறது. ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள குளங்கள், நீர்வழிப் பாதைகள் ஆகியவை பற்றி தீர்க்கமாக ஆராயப்பட வேண்டும்: இவ்வுண்மை நதிகளுக்கு அருகிலுள்ள எல்லா நகரங்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் SMART CITIES எல்லா வசதிகளுடைய பெருநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தருணத்தில் நூலின் ஆசிரியரின் அறிவுரை களையும் எச்சரிக்கையாக மத்திய மாநில அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக நிறைவுரையில் “நதிகளைப் பற்றி அறிவதும் ஆய்வதும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகிறது. கனிமவளம், நீர்வளம், வேளாண்மை, நதிகளை இணைத்தல், பூமியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அசைவுகள், பூகம்பத்தைக் கணித்தல், வெள்ளம், கடந்த காலக் கடற்கரை மற்றும் அவற்றின் மாறுதல்களைக் கணித்தல் ஆகியவை பல, வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படைத் தேவையாகிறது” என்று புவியியல் ஆய்வு அறிஞர் இந்நூலின் ஆசிரியர் முனைவர் சோம - இராமசாமி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆறுகளும், குளங்களும் அழிக்கப்பட்டுவரும் இக்காலத்தில் நீராதாரங்களைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள அனைவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.