Charles Robert 350சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin-1809-1882) என்பவர் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் ஆவர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிமலர்ச்சிக் கோட்பாடு (Theory of Evolution) அதுவரை நம்பி வந்த  படைப்புப் பற்றிய கோட்பாட்டைப் புரட்டிப் போட்டது. படிமலர்ச்சிக் கோட்பாடு என்பது ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை ஆகும். டார்வின்  தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கோட்பாடு களையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.  இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்கள் பற்றி ஆராய்ந்தார். 

படிமலர்ச்சிக் கருதுகோள் (Theory of Evolution)  நீர்வாழ்வன, நிலத்தில் ஊர்வன, மேலே பறப்பன போன்ற உயிரினங்கள் தாமாகவே தோன்றின, அவை இன்றுள்ளது போல யாராலும் படைக்கப்பட வில்லை என்பதை நிறுவியது. குரங்கில் இருந்து மனிதன் மேலும் நாம் காணும் உயிரினங்களின் உருவம் தொடக்க காலத்தில் இருந்தே வரவில்லை. அவை ஒற்றைக் கலம் (single cell) உயிரியிற் தொடங்கி இடையறாத மாற்றம், படிமுறை வளர்ச்சி, மலர்ச்சி, இனப் பெருக்கம், இடப் பெருக்கம், இயற்கைத் தேர்வு (Natural Selection) நிலத்தின் தன்மை, சூழல் முதலியவற்றுக்கு ஏற்ப வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்தல் காரணமாக உருமாற்றம் அடைந்து வந்துள்ளன.

இன்று நாம் காணும், மரம், செடி, கொடிகள் கடலில் இருந்து கரையில் விழுந்த சிறு சாதாளையின் படிமலர்ச்சி ஆகும். மனிதனை எடுத்துக் கொண்டால் அவன் “முழுசாகக் கடவுளால் படைக்கப்பட வில்லை, மண்ணின் செழுமையால் ஒன்று கூடி உண்டான உயிரணுக்களின் படிமலர்ச்சியே மனிதன். அதாவது பூச்சியாய், புழுவாய், நத்தையாய், மீனாய், பறவையாய், குரங்காய் வளர்ந்து இறுதியில் அவற்றின் திருத்த உருவமாய் மனிதன் தோன்றினான் என டார்வின் படிமலர்ச்சிக் கோட்பாடு மூலம் நிறுவினார்.

மனிதன் ஊர்வன நிலையைக் கடந்து நாலு காலால் நடக்கும் குரங்கு நிலை எய்திப் பின்னர் வளைந்த முதுகை நேர் நிமிர்த்தி நாலு கால்களில் இரண்டைக் கைகளாகப் பயன்படுத்தி மீதி இரண்டு காலால் நடக்கக் கற்றுக் கொண்டு மரக் கொப்பு களுக்குப் பதில் குடிசை கட்டி சிற்சில கருவிகளைச் செய்து வாழப் பல இலட்சம் ஆண்டுகள் எடுத்தது என டார்வின் விளக்கினார்.

உலகத்தையும் அதிலுள்ள உயிர்களையும் கடவுள் படைத்தார், அரைகுறையாக அல்ல ஒவ்வொன்றையும் முழுதாகவே படைத்தார், அதே போல் ஆறறிவு படைத்த ஆணையும் பெண்ணையும் கடவுளே படைத்தார் என்றும் மதங்களும் மதவாதி களும் சொல்லி வந்த படைப்புக் கோட்பாட்டை டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு தகர்த்து எறிந்தது.

டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு உயிரினங்கள் தம் நிலை பேற்றுக்காகப் போராடுகின்றன, இறுதியில் தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கின்றன (TheStruggle for Existence of the Fittest)  எனக் கூறியது.

டார்வினது படிமலர்ச்சிக் கோட்பாடு பல அறிவியல் வாதிகளின் சிந்தனையில் பலத்த மாற்றத்தை உண்டாக்கியது. அதில் ஒருவர் விலங்கியல் அறிஞர் பிலிப் சிலேட்டர்  (Philip Sclater) ஆவர். 

1860களில் தனது கள ஆராய்ச்சியில் ஒரு புதுமையைக் கண்டார். மடகஸ்கரில் காணப்பட்ட குரங்கு இனத்தை ஒத்த இனம் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்படவில்லை.

ஆனால் அந்தக் குரங்கு இனத்தின் தொல்லுயிர் எச்சங்கள்  இந்தியா, இன்றைய பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் காணப்பட்டன.  மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படவில்லை. இந்த முரண்பாட்டின் அடிப் படையில் பிலிப் சிலேட்டர்  1864 இல் ஒரு கோட் பாட்டை முன்மொழிந்தார். 'மடகஸ்கரின் பால் குடிகள்' என்ற அவரது கட்டுரை காலாண்டுக்கு ஒரு முறை வெளிவரும் அறிவியல் ஏட்டில் (Journal of Science) இல் வெளிவந்தது. அதில் இந்தியாவில் இருந்து மடகஸ்கர் வரை  இந்திய சமுத்திரத்தில் ஒரு பெரிய கண்டம் இருந்திருக்க வேண்டும் என எழுதியிருந்தார்.  அவரால் அனுமானிக்கப்பட்ட அந்தக் கண்டத்துக்கு லெமூரியா எனப் பெயர் இட்டார். அது அறிவியல் சமூகத்தில் ஓரளவு ஒப்புதலைப் பெற்றிருந்தது.

பிலிப் சிலேட்டர் காலம் இந்தப் புவித்தட்டுக் கட்டுமானவியல் மற்றும்  கண்டங்களின் நகர்வு பற்றி யாரும் அறிந்திராத  (During his time the scientificconcepts of plate tectonics and continental drift werenot known) காலம். 

பிலிப் சிலேட்டரின் முன்மொழிவு அறிவியல் கற்பனைக் கதைகள் எழுதுவோர் மத்தியில் பிரபலமானது. அப்படியான கற்பனைக் கதைகளைப் படிக்கும் வாசகர்  மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

லெமூரியாக் கண்டம் அமானுசிய சோதிடரான மடாம் ஹெலனா பிலேவற்ஸ்கி (Madame HelenaBlavatsky) அவர்களாலும் பிரபல்யம் அடைந்தது. அவர் லெமூரியா கண்டத்தின் வரைபடத்தைக் கண்டதாகவும் சொன்னார்.

பிரமஞானி வில்லியம் ஸ்கொட் எலியட் என்பவர் 'அட்லாண்டிஸ் அண்டு லாஸ்ட் லெமுரியா தி ஸ்டோரி'  (‘The Story of Atlantis and Lost Lemuria’) என்ற நூலை வெளியிட்டார். இந்த நூலில் விரிவாக இந்தியா மற்றும் பசிபிக் கடல் தொடக்கம் ஆப்பிரிக் காவின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்கள் வரை நீண்டுள்ள லெமூரியா கண்டத்தின் புவியியலை விளக்கி எழுதியிருந்தார். ஸ்கொட் எலியட் ஒரு அறிவியலாளர் அல்லது புவியியலாளர் அல்லது  தொல்பொருள் நிபுணர் அல்லர்.

லெமூரியா என்ற எடுகோள் நிலவியல் மற்றும் புவித்தட்டுக் கட்டுமானவியல் பற்றிய நவீன புரிந்துணர்வு மூலமாக இன்று வழக்கற்றுப் போய்விட்டது. இருபதாம் நூற்றாண்டின்  தொடக்கத்தில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் லெமூரியா பற்றிய எடுகோளை  முற்றாக நிராகரித் தார்கள். இந்தியா மற்றும் அண்டார்டிகா இடையே  புவித்தட்டுக் கட்டுமானம் இருப்பது இயற்பியல் அடிப்படையில் சாத்தியமற்றது என்றார்கள். 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மடகஸ்கர் இந்தியாவோடு இணைந்திருந்த போது குரங்கின விலங்கு இருக்கவில்லை.

அதீத ஆர்வம் காரணமாகச் சில தமிழ் ஆர்வலர்கள் குமரிக் கண்டம் (லெமூரியா) தமிழர்கள் வாழ்ந்த இடம் அங்கிருந்து அவர்கள்  இன்றைய தமிழ்நாடு முதற் கொண்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந் தார்கள் என்று எழுதியும் காணொளி வாயிலாக ஒளிபரப்பியும்  வருகிறார்கள்.

குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங் கடலில் அமைந்துள்ள இந்தியாவின் தெற்கே இருந்த தாகக் கருதப்படும் ஒரு புராண கண்டத்தைக் குறிக்கிறது. இன்றைய குமரிமுனையின் தென்பகுதி காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களால் விழுங்கப்பட்டது என்பது  தமிழ் இலக்கியங்களால்  தெரிய வருகிறது.

“வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதி காரத்தில் தென்னவன் வாழ்த்தப்படுகிறான்.

பாண்டிய பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய குறிப்புகளை  இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. இதில்  தமிழகத்தை  ஆண்ட அரசர் களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோன்ற செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது.

தமிழ்மொழி அல்லது தமிழர் சிறப்பு தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது. முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என்று  நிறுவ முயற்சிப்பதில் மகிமை இல்லை.

Pin It