கிழக்கிந்தியக் கம்பெனியால் செயின்ட் ஜார்ஜ் கோட்டை 1640இல் நிறுவப்பட்டிருந்தாலும், 33 ஆண்டுகள் கழித்தே மருத்துவமனையைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இக்காலத்தில் மருத்துவ வசதியோ அல்லது மருத்துவரோ இல்லை என்று பொருள் இல்லை. 1640இல் ஃபிரான்சிகு டே தலைமையில் ஆர்மிகானி லிருந்து மதராசிற்கு வணிகம் செய்யும் பொருட்டு வந்த குழுவில் ஒரு மருத்துவரும் உடன் வந்தார். அதே ஆண்டின் கடைசியில் (1640) ஹோப்வெல் என்ற கப்பல் லண்டனிலிருந்து இங்கு வந்து சேர்ந்த பொழுது, அதில் ஒரு மருந்துப் பெட்டியும், அறுவை சிகிச்சைக்கான பொருளும் வந்திறங்கின. 1650இல் டாக்டர் எட்வர்ட் ஒயிட்டிங் (Edward Whiting) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மருத்துவராக நியமிக்கப்பட்டு வந்து சேர்ந்தார். இதன் காரணமாக அங்கிருந்த தொழிலாளர்கள் மருத்துவத்திற்கும், அறுவை சிகிச்சைக்குமான மருந்துகளையும் பொருள்களையும் கருவிகளையும் அனுப்பியதற்கு லண்டனில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினர். இருப்பினும் (1654) அங்கு மருத்துவருக்கு மருந்து பற்றாக்குறையாகவே இருந்தது. (Dawn ofModern Medicine in Madras, p. 15)

MMC 600ஏனெனில் கிறிஸ்துமஸ் காலங்களில் குளிரினால் சிப்பாய்கள், கம்பெனியாட்கள் மூன்று, நான்கு முறை நோய்களால் மிகுதியாக அவதியுற்றார்கள். ஆகவே மற்றொரு மருத்துவரை அனுப்பக் கோரினர். கோட்டையில் ஆரம்ப காலத்தில் வேலை பார்த்த மருத்துவர் (1656) டாக்டர் எட்வர்ட் ஒயிட்டிங் விடுமுறையில் தாய்நாடு திரும்பிய நிலையில், கம்பெனி மூலம் சர்ஜன் ஜெனரல் உட் ஆல் மருத்துவர்களையும், மருந்துகளையும் அளித்த நிலையில் இந்த மருத்துவ உதவி போதாக்குறை யாகவே இருந்தது என்பதை அவர்கள் கம்பெனி நிலை கொண்டிருந்த சூரத், மசூலிப் பட்டினத்தி லிருந்து வந்த கடிதங்கள் மூலம் அறிய முடிகின்றது.  ஏனெனில் சாதாரண நோய்களைத் தாண்டி கொள்ளை நோய்களால் குறிப்பாகப் பிளேக், சீதபேதி, மஞ்சள் காமாலை, ஸ்கர்வி மற்றும் மதுவினால் வரும் கேடுகளும் பிரச்சனைகளும் சற்றுக் கூடுதலாகவே இருந்தன. இதற்கான தேவையும் அதிகமாகவே இருந்தது.

இதன்பிறகு, மருத்துவப் பிரச்சனைகளைத் தீர்க்க டாக்டர் உட்-ஆல் மூன்று வகையாகச் செயல்பட்டார். 

(1) முதலாவதாகக் கம்பெனியுடன் நட்புறவு கொண்ட இந்திய அரசர்களுக்கும் சில முக்கியமான இடங்களுக்கும், படித்த பட்டம் பெற்ற தகுதி படைத்த மருத்துவர் களை நியமித்தார்.

(2) இரண்டாவதாகக் கிளைத் தொழிற்சாலைகளுக்கு அபோத்தகிரி என்ற மருத்துவர்களிடம் உதவியாளர்களாக இருந்து மருந்து தயாரித்து நோயை அறியக் கற்றவர்களை நியமித்தார்.

(3) மூன்றாவதாகச் சர்ஜன்மேட் (Surgeon’s mate) என்ற மருத்துவப் பணித் துணைவர்கள் கம்பெனி சிப்பாய்களுக்கும், சிறிய தொழிற் சாலைகளுக்கும் ஏற்படும் மருத்துவப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் நியமித்தல் என்று மூன்று வகையாகச் செயல்பட்டார்.

ஆனாலும் மருத்துவ சேவைக்கான தேவை அதிகரித்ததால் உள்நாட்டு நபர்களுக்கும், மருத்துவம் கற்பிக்கப்பட்டது.

கம்பெனியின் அரசியல் ஈடுபாடு அதிகரித்த தாலும், பல சண்டைகள் மற்ற நாட்டுக் கம்பெனி களுடன் ஏற்பட்டதாலும், மருத்துவச் சேவை பற்றாக் குறையாகவே இருந்தது. இதனைச் சரிசெய்ய லண்டனில் உள்ள கம்பெனியின் தலைமைக் கழகம் இந்தியாவில் வணிகம் செய்யும் ஒவ்வொரு இடத் திற்கும் மருந்துகளையும், அறுவை சிகிச்சைக்கான பொருள்களையும் அனுப்பி வைத்தது. இது ‘Chest of Drugs’ என அழைக்கப்பட்டது. இது பெரும்பாலும் போதுமானதாக இல்லை. மேலும் இம்மருந்துகள் லண்டனிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் வந்து, அதன் பிறகு அதிகநாட்கள் சேமித்து வைத்திருப் பதாலும், இம்மருந்துகள் வீரியமற்று செயல் இழந்து போயின.

1619இல் ரிச்சர்டு சாண்டர்ஸ் (Richard Saunders) சூரத் தொழிற்சாலைக்கு மருத்துவராக இருந்தவர். இவர் இன்னொருவரை அனுப்பி வைக்கக் கம்பெனியைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற தேவை களைப் பூர்த்தி செய்ய அல்லது இங்குள்ள தொழிற்சாலையில் பணி புரியும் மருத்துவர் இறந்தால், அதற்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப நீண்ட காலம் பிடித்தது. ஏனெனில் இதற்கான மாற்று மருத்துவர் இங்கிலாந்தி லிருந்தே வரவேண்டியதாக இருந்தது.

பொதுவாகக் கடற்பயணத்தின்பொழுது மாலுமிகள் அல்லது வணிகர்கள் நோயுற்ற நிலையில் தகுந்த மருந்து அல்லது காயம் அடைந்த பொழுது சரியான அறுவை சிகிச்சை பெறவில்லை. ஏனெனில் 15ஆம் நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் குழந்தைப் பருவத்திலேயே இருந்தது. ஆகவே, கப்பலில் மருத்துவம் அளிப்பது என்பது மருத்துவர்களுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்தது. பல சமயங்களில்  என்ன நோய் என்றே புரியாமல் தவித்தனர். நீண்ட பயணத்தின்போது குகர்வி (ஈறுகளில் இரத்த ஒழுக்குடன்  கூடிய உடல் நலிவு) அல்லது வயிற்றுப் போக்கினால் கப்பலில் இருந்த அந்நோயாளிகள் ஈக்களைப் போல் இறந்தனர். இதைவிடக் கொடுமை உள்நாட்டில் போர்க்காயங்களுக்கு அல்லது விபத்து களுக்கு இதைவிட மிக மோசமான மருத்துவமே கிடைத்தன. கடற்கரை நகரங்களில் வசித்தவர் களுக்குக் கூட அங்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் களின் அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட சோதனை செய்து பார்ப்பதை ஒத்ததாகவே இருந்தது.

பெரும்பாலான சமயங்களில் கடற் பயணத்தில் வரும் மருத்துவர் அனுபவமின்றி இருந்ததால், மருத்துவம் என்பது பெறுபவருக்கு சித்திரவதையாகவே இருந்தது. ஆகவே, காயமுற்றவர்கள் தனக்குத்தானே நொந்து கொண்டு மருத்துவம் பார்க்க முயற்சி எடுப்பது கூடக் கிடையாது.

1640இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப் பட்டது. 1657இல் மருத்துவர் ராபர்ட் கூப்பர் மதராஸ் வந்து 1663வரை பணியில் இருந்தார். 1677இல் இம்மருத்துவர்களுக்கான சம்பளம் ஆண்டுக்கு 34 பவுண்ட். அலவன்சாக 4 பகோடா, உணவிற்கும் தங்குமிடத்திற்குமான வாடகை 2 பகோடாவைக் கம்பெனி கொடுத்தது. இதுவே மதராஸ் மருத்துவ மனை ஆரம்பமாவதற்கான முதற்படியாகும்.

பல மருத்துவர்கள் இங்கிலாந்திலிருந்து மருத்துவப் பணிபுரிய வந்த நிலையில் கொள்ளை நோய்களும், பஞ்சமும் தலைவிரித்தாடிய போது, தங்கள் கம்பெனி ஐரோப்பிய வேலையாட்கள் இராணுவ வீரர்கள் உடல்நலத்தையும் உயிரையும் காப்பாற்றும் விதமாகத் தர்க்க ரீதியாக மருத்துவ மனையை அடித்தளமிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

மேலும், உள்நாட்டுப் பருவநிலையும், இடஞ் சார்ந்த பிரச்சனைகளும் இச்செயலை விரைவுபடுத்தின.

மருத்துவமனை தொடங்க முதல் முயற்சி

1664ஆம் ஆண்டு கடைசியில் (10-11-1664) கம்பெனி முகவர் சர் எட்வர்ட் வின்டர் மசூலிப் பட்டினத்திற்கு வருகை தந்தபோது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அந்த முகவருக்குக் கில்போர்ட், சாம்பு ரூக் ஆகியோர் மதராசில் ஒரு மருத்துவமனை தொடங்க கடிதம் எழுதினார்கள். இதற்கான காரணத்தை அவர்கள் குறிப்பிடும்போது, “காவற் காக்கும் கூடத்தில் அடிக்கும் உறைபனிக்காற்றில் பலருக்கு உடல்நலமின்றிப் போனதில் 4 பேர் மரணமடைந்தனர். மேலும் இதன் காரணமாக 10 நபர்கள் சராசரியாக இங்கு நோயாளியாக உள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவம் புரிய அவர்களின் ஊதியம் போதுமானதாக இல்லை. இக்காலகட்டத்தில் இவர்களுக்கு மருத்துவம் அளிக்க வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தால் அவர்களை மாமிசம், மது அண்டாது பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் எனத் தோன்றிய எண்ணமே, மருத்துவ மனை மதராசில் தோன்ற அடித்தளமிட்டது. மேலும் சர் எட்வர்ட் வின்டர் (Sir Edward Winter) இக்கால கட்டத்தில் ஒரு கிறித்தவ தேவாலயம், மருத்துவ மனை, நூலகம் ஆகியவைகளை ஏற்படுத்த எடுத்த முயற்சிக்கு முன்னோடியாக, மருத்துவத்திற்கு வீடு வாடகைக்கு அமர்த்தியதும் ஒரு காரணமாகும். (op.(op.jaggi, p.77)

வாடகை வீட்டில் மருத்துவமனை

இதனடிப்படையில் கோட்டை கட்ட காரண மானவர்களில் ஒருவரான ஆன்ட்ருகோகனுக்கு வீடு வாடகை மாதம் 2 பகோடாவிற்குக் கிடைத்தது.  இவ்வீட்டில் சராசரியாக 8லிருந்து 10 வரை உள் நோயாளிகளாகக் கோட்டைக் காவலர்கள் தங்க முடியும். இதுவே மேலை மருத்துவத்திற்கான மருத்துவமனையாக 16-11-1664 இல் தொடங்கப்பட்டது.  (Madras Government General Hospital &Medical College,p.1)

வாடகை வீட்டில் ஆரம்பித்த மருத்துவமனை 5 ஆண்டுகள் கழித்து (1679-1680) நோயாளிகள் தங்க போதுமானதாக இல்லை என்பதால் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு மருத்துவமனையை விரிவுபடுத்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்படி இரண்டு மாடிக் கட்டடம் செயின்ட் மேரி தேவாலயம் அருகில் கட்ட தீர்மானிக்கப்பட்டு, தேவாலயத்திற்கும், வெகுடிரி என்பவருக்கும் சொந்தமாகியது. இதற்கான செலவுகள் மக்களிடமிருந்து 838 பகோடாக்கள் (ரூ. 3000) நன்கொடையாகப் பெறப்பட்டு, 1680இல் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கட்டடம் பண்டகசாலையுடன் இணைந்து இருந்ததால் உடமைகள் அடிக்கடி திருட்டுப் போயின. ஆகவே ஆற்றங்கரை ஓரமாக மருத்துவ மனை கட்ட முடிவெடுக்கப்பட்டது. இது போர் வீரர்கள் குடியிருப்புக்கு வடக்குப்புறமாக இருந்தது. நோயாளிகள் அதிகரித்ததால் 1675 சர்ஜன்மேட் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. 1676இல் இவருக்குப் பெயர் இரண்டாம் சர்ஜன் எனப் பெயர் மாற்றமடைந்தது. 1690இல் சர்ஜன் வேண்டுகோளுக் கிணங்க மற்றொரு இரண்டாம் சர்ஜனும் பணியில் அமர்த்தப்பட்டார்.

இந்த இரண்டாவது மருத்துவமனையை யேல் பணிபுரிந்த சமயம் மதராஸ் கவுன்சில் முழு பணத்தையும் அதன் சொந்தக்காரர் வெஸ்ட்ரி  (vestry) க்கு கொடுத்தபின், ஆற்றங்கரையோரமாகப் புது மருத்துவ மனை கட்டப் பணிக்கப்பட்டது. இரண்டாவது மருத்துவமனையைக் காலி செய் வதற்கு முன்னரே யேல் பதவி வகித்தபோது, மருத்துவமனை 1690 கட்டப்பட்டது.  இச்சமயம் கோட்டைக்கு அருகில் உள்ள ஜேம்ஸ் வீதியில் தற்காலிகமாக  மருத்துவமனை அமைந்தது.

1690இல் புதிய இடத்தைக் கோட்டையில் கட்டிக்கொள்ள அனுமதி கொடுத்தவர் அன்றைய கவர்னர் சர் கிளக் யேல். இவர்  மதராசின் இரண்டாவது கவர்னராக (1687-1692) உழைப்பால் உயர்ந்தவர். இங்கே 2500 பகோடாவிற்கு இத்தாலிய கட்டடக் கலையுடன் ஒரு புதிய கட்டடம் கட்டப் பட்டு 1692இல் திறக்கப்பட்டது. இக்கட்டடத்தைக் கட்ட யேல் 1700 பகோடா அளித்தார். இவர் அளித்த 562 டாலர் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு யேல் பல்கலைக் கழகம் எனப் பெயரிடப்பட்டது. இங்குதான் அறிஞர் அண்ணா அமெரிக்கா சென்றபோது புகழ்பெற்ற உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு மருத்துவமனை கிரீன் ஹில் மைதானத்தையும் சேர்த்து 150 நோயாளிகள் தங்கும் அளவு 7000 பகோடாக்களுக்குக் கட்டப் பட்டது. இதற்கு அரசு 1500 பகோடாக்களை வழங்கியது. மீதி பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. இம் மருத்துவமனை கவர்னர், அமைச்சர் மற்றும் சர்ச் வார்டன் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டது. 1752 அக்டோபர் 31ஆம் தேதி புயலால் இம்மருத்துவ மனை சேதமுற்றது.

கோட்டை காவற்படை எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, இம்மருத்துவமனையில் இடம் போத வில்லை. ஆகவே 1753இல் இக்கட்டடங்களைப் போர் வீரர்களுக்கான குடியிருப்பாக மாற்றி மருத்துவமனை பெத்தநாயக்கன் பேட்டையில் போர்த்துக்கீசியர்களின் 12 வீடுகளில் மாற்றப்பட்டது. இது மதராஸ் யுனைடெட் கிளப் அருகில் 100 கஜ நீளத்தில், தற்போதுள்ள மருத்துவமனை இடத்திற்கு அருகில் அமைந்திருந்தது.  (Madras discovered, p. 337)

பிரிட்டிஷ்-பிரெஞ்சு அரசிற்கும் இடையே 1746-1759 வரை போர் நீடித்தபோது, மருத்துவமனை கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வாடகைக் கட்டடங்களில் நடைபெற்றது.  கோட்டைக்கு வெளியே சென்ற மருத்துவமனை 20 ஆண்டுகள் கழித்தே இப்பொழுது உள்ள இடத்தில் கட்டப்பட்டது.

1759இல் 9ஆவது முறையாக ஆர்மீனியன் சாலையில் உள்ள ஆர்மீனியன் தேவாலயத்திற்கு  அருகில் உள்ள கல்லறைக்குச் சமீபமாக மாற்றப் பட்டு, 13 ஆண்டுகள் ஆலயம் கட்டும் வரையில் நடைபெற்றது. ஏனெனில் இங்கு மழை காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. 1768இல் இம் மருத்துவமனை புயலால் தாக்கப்பட்டது. மேலும் இவ்விடத்தில் கல்லறை இருந்ததால் சுகாதாரக் கேடும் காணப்பட்டது. இதனைக் கண்ணுற்ற அரசு மருத்துவமனை கட்ட,  தலைமை மருத்துவரையும் அரசுப் பொறியாளரையும் புதிய இடத்தைத் தேர்ந் தெடுக்கப் பணித்தபோது, பழைய கம்பெனியில் தோட்டமாக இருந்த ஹாக் ஹில் நகருக்கு அருகிலும், மதிற்சுவருக்குள்ளும் இருந்த பகுதி மருத்துவமனைக்கு ஏற்ற காற்றோட்டமான இடம் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  (Government General Hospital & Medical College,p.4)

தலைமைப்பொறியாளர் காலினால் 600 நோயாளிகளுக்கும், 20 அலுவலர்களுக்குமான மருத்துவமனை வரைபடம் தீட்டப்பட்டது. பால்பென்பீல்ட்ரோஸ் மற்றும் ஜான் சில்வியனும் கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அளித்ததில் ஜான் சில்வியனுக்கு 42,000 பகோடாவுக்கான அனுமதி வழங்கப்பட்டது. சில்வியன் இந்தியாவிற்கு வந்தபோது, வயது 17. இவர் ஓர் எழுத்தாளர். கட்டடம் கட்ட அனுமதி பெற்ற சமயம் வயது 23.  கர்னல் கால் பொறியாளருக்குப் பிறகு, கர்னல் பட்ரிக் தாஸ் நவீன வரைபடம் தீட்டித்தந்த பிறகு, 1772இல் 300 பேருக்கான மருத்துவமனைக்கு இரண்டு கட்டட வளாகங்கள்  (blocks)  கட்டி முடிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தது. (The Beginning of Modern Medicine in Madras, p. 193).

இந்த மருத்துவமனை 1772இல் பயன்பாட்டிற்காக முதன் முறையாகத் திறக்கப்பட்டிருந்தும், தற்பொழுது மருத்துவமனை அலுவலகத்தில் உள்ள அடிக்கல்லில் 1692 என்று தவறுதலாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு கவர்னர் யேலினால் கட்டப்பட்ட மருத்துவமனையைக் குறிப்பதாகும். 1772க்கு இந்த இடத்திற்கு வருமுன் 20 ஆண்டுகள் கோட்டைக்கும் வெளியிலும் மாறி மாறி மருத்துவம் நடைபெற்றது.

அக்கால மருத்துவருக்கான ஊதியமாக பல்லக்கு அலவன்ஸ்

18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் மருத்து வர்கள் கம்பெனியின் துணைக் கம்பெனிகளுக்கு மருத்துவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்று மருத்துவருக்குச் சோதனை வைத்து தேர்ந்தெடுத்து அனுப்பினர். மருத்துவர்கள் அரசு மருத்துவமனை தவிர தனிப்பட்ட முறையிலும் கம்பெனி தொழிலாளர்களுக்கும் மற்றும் குடியிருப்போருக்கும் மருத்துவம் புரிந்தனர். இத்துடன் கம்பெனியுடன் நட்புடன் இருந்த நவாப் அரசர்களுக்கும் மற்றும் இராணுவத் தளபதிகளுக்கும் மருத்துவம் அளித்தனர். மக்களிடம் பணமும் அரசரிடம் அன்பளிப்பைப் பெற அனுமதிக்கப்பட்டனர். 1704இல் டாக்டர் பல்கிக்கு ஊதியமாக 36 பவுண்ட் அளிக்கப்பட்டது. இத்துடன் உணவுக்கு 5 பகோடா, குதிரைக்கு 50 பணம், ஒரு துபாசிக்கு 1 பகோடா, ஆயில் 11 Measure, மெழுகு 5 பவுண்ட், வேலையாட்கள் 0.12 பணம், தண்ணீர் கொண்டு வருபவர், நாவிதர் 0.10 பணம்  (Duty fellow),  ஒரு உதவியாளர் (one mate)  0.5, ஒரு உதவியாளர் (one assistant) 3 பணம் கொடுக்கப் பட்டது. மேலும் இவருக்குப் பல்லக்கு அலவன்சாக 4 பகோடாக்களும், இதுபோல சர்ஜன் மேட்களுக்கு 120 பணமும்/ஆண்டுக்குக் கொடுக்கப்பட்டது.

இதேபோல் 1749இல் ஆன்ரூ முன்றோ (Andru Munro) மருத்துவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் 36 பகோடா, உணவு 8 பகோடா, பல்லக்கு 4 பகோடா, வேலை ஆட்கள் 1 - 20 மெழுகுவர்த்தி, எண்ணெய் 1-20 (மின்சாரம், மோட்டார் வாகன வசதிகள் இல்லாத காலம்).

பதவி உயர்வு - கம்பெனி விருப்பமே!

1740இல் கம்பெனியில் மருத்துவத்துறை ஆரம்பிக்கப்பட்டு அதில் பிரிட்டிஷ் சர்ஜன் அவர்களின் உதவியாளர்களும் மற்றும் சுதேசி மருத்துவர்களும் இடம் பெற்றனர். இந்த சுதேசி மருத்துவர்களுக்கு எவ்விதப் பட்டமும் இன்றி இராணுவ மருத்துவமனையில் பணியாற்றிய நடைமுறை பயிற்சி மட்டுமே இருந்தது. இவர் களுடைய ஊதியம், பதவி உயர்வு, ஓய்வு கால ஊதியம் ஆகியவை உறுதி நிலையற்றவை. ஏனெனில் அவைகள் அனைத்தும் கம்பெனி அலுவலர்களின் விருப்பத்தைப் பொருத்தே இருந்தது. 1787இல் தான் கம்பெனி சுதேசி மருத்துவர்களுக்குப் பதவி கொடுத்து காலாட்படைச் சிப்பாய்களின் வகுப்பான ஹவில்தார்களுக்கான ஊதியம் கொடுக்கப்பட்டது.

1772இல் மருத்துவமனையில் ஐரோப்பியர், பரங்கியர், சுதேசிகளுக்கு, நவீன மருத்துவத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் பல மருத்துவ ஆலோசனைக் கூடங்களிலும், மாவட்டத் தலைமை மருத்துவ மனைகளிலும் அங்குப் பணிபுரியும் தகுதி படைத்த மருத்துவர்களுக்கு உதவியாளராக இருந்தனர். பிறகு, இம்மருத்துவமனை 1814இல் கோட்டை காக்கும் வீரர்களுக்கானது, 1820இல் மாதிரி மருத்துவமனை என இம்மருத்துவமனை கிழக்கிந்தியக் கம்பெனியினரால் அழைக்கப்பட்டது. இதன்பிறகு 1827இல் டி. மார்டிமர் இப்பள்ளிக்குச் சூப்பிரண்டெண்டென்டாகப் பதவி பெற்றார். 1842இல் இப்பள்ளி பி வடிவத்தில் கட்டி முடிக்கப் பட்டு, சுதேசிகளுக்கும் மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது. பிறகு இப்பள்ளி 1850இல் கல்லூரியாக உயர்த்தப்பட்டு நடைபெற்றது.

ஸ்டேஷன் ஹாஸ்பிடல்

1859இல் மாடியும், கட்டடத்தை ஒட்டிய பக்க அறைகளும் கட்டப்பட்டு, கிழக்குப் பகுதி கோட்டை வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இது “ஸ்டேஷன் ஹாஸ்பிடல்’’ என்று அழைக்கப்பட்டது. 1874இல் சிறப்பு நோயாளிகளை அதாவது பணம் கொடுத்து மருத்துவம் பெறுபவர்களுக்குத் தங்குமிடமும், செவிலியர்களுக்குக் கட்டடங்களும் கட்டப்பட்டன. 1884இல் மருந்தகம் தொடங்கப்பட்டது, 1897இல் குடியிருப்புகள் மேலும் கட்டப்பட்டன. 1903இல் மின்சார வசதியை மருத்துவமனை பெற்றது. இதற்கு அடுத்த ஆண்டு மின்சார வசதியால் நீராவி உதவியால் இயக்கப்பட்ட “பங்கா” நிறுத்தப்பட்டது. தண்ணீர் இறைக்க மனிதர்கள் பயன்பட்ட நிலையில் மின்சாரம் பயன்பட்டது. மின்சார விசிறிகள் 1927இல் பங்காக்களுக்குப் பதிலாக மாற்றியமைக்கப்பட்டன. நோயாளிகள் மருத்துவமனையில் குளிக்கக் குழாய் மூலமும் அறுவை அரங்கு மற்றும் குடிநீருக்கு வார்டுகளிலும் சுடுநீர் வழங்கப்பட்டன. 1913 சலவைக்கான வசதி வந்தது. (Madras Government General Hospital & Medical College, p.4-5)

மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும்? விதிமுறைகள் என்ன?

1786 நிர்வாக அமைப்புக்குப் பிறகு, வெளிப் படையான நிர்வாக முறையன்று உருவான பின்னர், மருத்துவ வசதிகள் அனைவருமே பெறத் தக்க வகையில், நாட்பட மாற்றமடைந்திருக்கிறது. இவைகளின்றி, மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை ஆகியவை வரையறை செய்யப்பட்டுள்ளன. தொடக்கக் கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இதுபற்றி வேறுபல நோக்கங்கள் இருந்தபோதிலும், பின்னர் வந்த கவர்னர்கள் அவற்றிலிருந்து மாறுபட்டவர் களாகவே தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். மருத்துவ அமைப்புகள் விரிவடைந்த காலத்தில் அவைகள் முறைப்படுத்தப்பட அவசியம் ஏற்பட்டது. ஆகவே, விதிமுறைகளை கம்பெனி நிர்வாகம் வெளியிட்டது. இது குறித்து, 1833இல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மாகாண மருத்துவத் துறை உருவாக்கிய விதிமுறைகளையும், நெறிமுறை களையும் அறிவது சரியாக இருக்கும்.

மருத்துவமனைகள் உள்ளே சுத்தமாக இருப்பதைப் போன்று வெளிப்பகுதி குண்டும் குழியுமாக இல்லாத தோடு, புல் பூண்டுகள் மண்டிக் கிடக்காதபடியும், நீர் தேங்காத அளவிலும் இருக்க வேண்டும் என்றும், காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ மனையின் வாயிற்கதவுகளும், ஜன்னல் கதவுகளும் திறந்து வைக்க வேண்டும் என்றும், நோயாளிகள் தங்குமிடத்தைப் பெருக்கி, தண்ணீர் தெளித்துத் துடைப்பதோடு, சுவற்றையும் கறைகளின்றித் துடைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மார்ச் முதல் செப்டம்பர் வரை காலை ஆறரை மணிக்கும் அக்டோபர் முதல் மார்ச் வரை ஏழரை மணிக்கும் உள் நோயாளிகளைப் பார்வையிட வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டது.

ராணுவத்தினருக்கு மட்டுமின்றி உள்ளூர் நோயாளி களுக்கும் எவ்வகையில் உணவு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயம் செய்யப்பட்டது. வகுப்புகளுக்கும் உள்ளூர் உள்நோயாளி களுக்கும் காலை ஒரு பிண்ட் டீயும், 12 அவுன்ஸ் ரொட்டியும், மதியம் ஒரு பிண்ட் சூப் 12 அவுன்ஸ் மாட்டிறைச்சி அல்லது ஆட்டிறைச்சி தவிர 4 அவுன்ஸ் சாதமும், இரவு ஒரு பிண்ட் டீ அல்லது கெட்டியான கஞ்சியும் நோயாளிக்குத் தகுந்தபடி வழங்க, நிர்ணயம் செய்யப் பட்டது. நோயாளி பயன்படுத்தும் வகையில் சூப்புக்கான பாத்திரமொன்றும், பேசினும், குவளையும், கரண்டியும் வழங்குவதோடு, இவற்றை வைத்துக் கொள்ளும் விதத்தில் கூடையன்றும், எச்சில் துப்புவதற்கேற்ற பானையன்றும் தரப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன.

மருத்துவமனையில் மது வழங்கப்பட்டது

மருத்துவமனைகளில் மரிப்போர் யாராக இருப்பினும், உற்றார் உறவினர் அருகில் இல்லாத பட்சத்தில், ஈமச்சடங்குகளை அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கேற்ப அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்ணயம் செய்திருப்பது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் எந்த வித சூதாட்டங்களிலும் ஈடுபடலாகாது என்றும் இடத்துக்குத் தக்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் இன்றைக்கும் ஏற்ற வழியாகவே இருக்கிறது. மருத்துவமனையின் வராந்தாக்களில் மட்டுமே புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதும், நோயாளிகளுக்கு ஏற்றபடி மதுபானங்கள் வழங்கப் பட்டிருப்பதும் வித்தியாசமானதாகவே உள்ளது. இவையின்றி மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் சம்பள நிர்ணயமும் இதில் அடங்கி யுள்ளன. (சென்னைப்பட்டினம், பக்,484) 1841 - 1865 வரை மருத்துவமனைக்கே இரண்டு மருத்துவர்கள் தான் பணிபுரிந்தனர். பிறகு 1899இல் நான்கு பேர்களும் 1901இல் 9 பேர்களும் பணிபுரிந்தனர்.

உள்நோயாளிப் பிரிவுகள் எல்லாரும் ஒன்று என்று இல்லை

1842இல் ஐரோப்பியர்கள், இந்தியர்கள், ராணுவத்தினர் மற்ற குடிமக்கள் ஆகியோருக்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை 185 கெஜம் நீளமும், 145 கெஜம் அகலமும் அமைந்திருந்தது என்று மெடிக்கல் போர்டின் அறிக்கை தெரிவிக்கிறது. சிப்பாய்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மற்றொரு பகுதியில் ஐரோப்பிய பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு பிரிவும், மற்றொரு பகுதி இந்தியர்களுக்குப் பொது வாகவும் இருந்தது. படிப்படியாக விரிவுபடுத்தப் பட்டு வந்த மருத்துவமனை 1899இல் ராணுவத்தினர் அல்லாத குடிமக்களுக்கான முழுமையான மருத்துவ மனையாகியது.

1935இல் மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு 678 படுக்கைகளுடன் இருந்தன. (1859-93) சில்வியன் கட்டிய இரண்டு வளாகங்களோடு 1928-1938இல் மருத்துவமனையில் மேலும் இரண்டு வளாகங்கள் கட்டப்பட்டு மருத்துவமனை விரிவாக்கப்பட்டது. இதுவே 2002 வரை நீடித்து பிறகு மீண்டும் இரண்டு பெரிய வளாகங்கள் உருவாயின.

இம்மருத்துவமனைக் கட்டடங்கள் 20ஆம் நூற்றாண்டு இறுதியில் இடிக்கப்பட்டு இரண்டு டவருடன் 1050 மில்லியன் செலவில் கட்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டடம் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் திறக்கப் பட்டது.

Pin It