உலகம் முழுவதும் கருத்துரிமையைப் பற்றிப் பேசாத நாடு இல்லை. ஆனால் எங்கும் கருத்துரிமை பறிக்கப்பட்டே வந்திருக்கிறது. உலகத்தின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாகப் பேசப்படுகிற இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு பேசுவது ஒன்றாகவும் செயல்படுவது வேறு ஒன்றாகவும் இருந்து வருகிறது.

காந்தியின் தேசமாகவும், புத்தரின் பூமியாகவும் போற்றப்படும் இந்நாட்டில் கருத்துரிமைக்காகத் தங்களையே பலியாக¢கிக் கொண்டவர்கள் ஏராளம். மற்ற நாடுகளில் சட்டத்தைக் காட்டி கைது செய்து, விசாரணை நடத்தி, மரண தண்டனை விதிப்பார்கள். ஆனால் இந்தியாவில் எந்த விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

அண்மையில் ஒரு பத்திரிகையாளர் பெண்மணி என்றும் பாராமல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட கௌரி லங்கேஷை மறக்க முடியுமா? அதற்கு முன் பேராசிரியர் கல்புர்கி இதே முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சுட்டுப் படுகொலை செய்துவிட்டுப் பறந்து விட்டனர்.

images 600சமூக முன்னேற்றத்துக்காக எழுதும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகள் கொல்லப்படுகின்றனர். இந்து மதத்தைக் காப்பதாகக் கூறிக் கொள்ளும் சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கணக்கில் குற்றவாளிகளைத் தேடுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் காவல்துறையின் உளவுப் பிரிவு, யாரையும் கைது செய்து தண்டனை பெற்றுத்தர தவறிவிட்டது.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற சிந்தனையாளர் களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டை மக்களாட்சி நாடு என்று எப்படி கூற முடியும்? கடைந்தெடுத்த சர்வாதிகார நாட்டில்தான் இப்படிப்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்.

உலகத்¢துக்கு எல்லாம் காவலனைப் போல ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா இப்போது கருத்துரிமைக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறது. "விக்கி லீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை பிரிட்டன் காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 11 அன்று கைது செய்தனர். இந்தச் செயல் கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படையினர் செய்த மனித உரிமை மீறல்கள், அமெரிக்க அரசு தொடர்பான இரகசிய ஆவணங்கள் 2010-ஆம் ஆண்டு முதன் முதலில் "விக்கி லீக்ஸ்" என்ற இணைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகப் பெரிய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவின் இராணுவ ரகசியமே வெளியானதால் அந்நாடு கலக்கமடைந்தது. இதே போல பல்வேறு நாடுகளின் ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளிவந்தன. இது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனால் "விக்கி லீக்ஸ்" இணையதள நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டது. இதன் காரணமாக, அதன் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே ஸ்வீடன் நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

அங்கும் அவருக்கு எதிராக பாலியல் வன் முறைக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வழக்கிலிருந்து தப்பிக்க பிரிட்டன் சென்றார். தலைநகர் இலண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இது நடந்தது 2012-ஆம் ஆண்டு. இதனால் அவரைக் கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அவரைக் கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி ஈகுவேடார் நாட்டிடம் பிரிட்டன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் பிரிட்டனின் கோரிக்கையை ஏற்று ஜூலியன் அசாஞ்சேவுக்கு வழங்கப்பட்ட அரசியல் பாது காப்பை அந்நாடு விலக்கிக் கொண்டது.

இதனால் இதுவரை ஈகுவேடார் தூதரகத்தில் தங்கியிருந்த அசாஞ்சேவை இலண்டன் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கைது உலகெங்கும் ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகவே வருணிக்கப்படுகிறது. சரி, யார் இந்த ஜுலியன் அசாஞ்சே?

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் 1971 ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் நாள் பிறந்தவர். மெல் போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமது பட்டப் படிப்புகளை நிறைவு செய்தவர். சில காலம் ஆஸ்திரேலியாவில் உள்ள முன்னணிப் பத்திரிகை களில் பணிபுரிந்தவர்.

பின்னர் பல நாட்டு அரசாங்கங்கள் மறைத்து வைத்திருக்கும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்காக "விக்கி லீக்ஸ்" என்ற இணைய தளத்தை 2006-ஆம் ஆண்டு தொடங்கினார். இதில் பிரபல பத்திரிகையாளர்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் பணிபுரிந்து வந்தனர்.

இந்த இணையதளத்தில் பல நாடுகளின் ஊழல்கள் வெளிவந்த போதிலும், அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் வெளியான போது "விக்கி லீக்ஸ்" மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உலகத்துக்கு மிகப் பெரிய அளவில் அறியப்படலாயினர்.

கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன என்பதை உலகத்துக்கு அறியச் செய்தவர்கள் இவர்கள்.  அரசாங்கம் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அது இரகசியமாக இருக்க வேண்டும். அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது. அதை வெளியில் தெரியும்படி செய்து விட்டால் அது தேசத் துரோகமாகி விடுகிறது.

"அரசுகள் தொடர்பான ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தியதன் மூலம் கருத்துச் சுதந்திரத்துக்கு வலுசேர்க்கும் அசாஞ்சேவை கைது செய்யலாமா? தண்டனைக்கு உட்படுத்தலாமா?" என்று சுதந்திரச் சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"செல்வாக்கு இல்லாத மக்களை அரசுகளால் உளவு பார்க்க முடிகிறது. ஆனால் செல்வாக்கு மிக்கவர்களின் நடவடிக்கைகள் மூடி மறைக்கப் படுகின்றன" என்பதுதான் அசாஞ்சே அளிக்கும் விடையும், விளக்கமும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி வல்லு நரான ஜூலியன் அசாஞ்சே "விக்கி லீக்ஸ்" இணைய தளத்தை உருவாக்க, அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு பல தவறுகளை அம்பலப்படுத்தி வந்தார்.

இதற்கிடையே ஸ்வீடனில் அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரிட்டனில் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் மனு செய்து கொள்ளப்பட்டது.

ஆனால் அவர் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2012-ஆம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். ஈக்வடார் அரசும் அவருக்கு அடைக்கலம் அளித்தது. இதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக அவர் அந்தத் தூதரகத்திலேயே வசித்து வந்தார். ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியது.

இதற்கிடையே ஈக்வடாருக்கும், ஜூலியன் அசாஞ்சேவுக்கும் மோதல் போக்கு உருவானது. தூதரக வளாகத்தில் தனக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக அசாஞ்சே குற்றம் சாட்டினார்.

இந்தச் சூழலில் அசாஞ்சேவுக்கு இதுவரை தரப்பட்ட அடைக்கலத்தை ஈக்வடார் அரசு விலக்கிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் வழக்கை ஸ்வீடன் கைவிட்ட நிலையிலும் அந்த வழக்கு தொடர்பான ஜாமீன் விதிமீறலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் பிரிட்டன் காவல்துறையினர்

அவரை இப்போது கைது செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈக்வடார் நாட்டின் அதிபர் லெனின் மொரேனோ, "ஜூலியன் அசாஞ்சேவுக்கு இலண்டன் தூதரகத்தில் அளிக்கப்பட்ட அடைக்கலத்தை நீக்கியது சரிதான்" என்று தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளை வேவு பார்க்கும் நோக்கில் 'உளவு மையம்' ஒன்றை அமைக்க அவர் முயற்சி செய்தார். ஈக்வடாரின் முந்தைய அரசுகளிடம் அனுமதி பெற்று இந்த மையத்தை அமைக்க அவர் முயன்றார். எங்கள் தூதரகத்தில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை நோட்டம் இடுவதை அனுமதிக்க முடியாது என்பது அவரது வாதம்.

அவருக்கு அடைக்கலம் தந்த இடத்தில் இருந்து கொண்டே மற்ற நாடுகளை வேவு பார்க்க அவர் முயன்றுள்ளார். நாங்கள் எடுத்த முடிவு தன்னிச்சை யானது அல்ல. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே அவருக்கு அளித்து வந்த அடைக்கலத்தை நீக்க நாங்கள் முடிவெடுத்தோம். இவ்வாறு ஈக்வடார் அதிபர் தமது பேட்டியில் கூறியுள்ளார்.

'அதே நேரத்தில் அசாஞ்சேவுக்குத் துன்புறுத்தலோ, மரண தண்டனையோ வழங்கக்கூடிய நாடுகளுக்கு அவரை நாடு கடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவருக்கு அடைக்கலம் ரத்து செய்யப் பட்டுள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரிசேபேனி, 'பிரிட்டன் சிறையில் ஜூலியன் அசாஞ்சே நல்ல முறையில் நடத்தப்படுவார். அவருக்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். அவருக்கு ஆஸ்திரேலிய தூதரகம் தேவையான உதவிகளைச் செய்யும்' என்று கூறியுள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது "விக்கி லீக்ஸ்" சில ஆவணங்களை வெளியிட்டது. அதனால் அதிபர் பதவி வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனின் தோல்விக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்பின் வெற்றிக்கும் ரஷியாவின் பின்துணையுடன் அசாஞ்சே செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தின் இரகசிய ஆவணங் களை அங்கு உளவுத் துறையில் வேலை பார்த்த செல்சி மேனிங் என்பவர் மூலம் "விக்கி லீக்ஸ்" பெற்றிருப்பதால் அசாஞ்சேவை முதல் குற்றவாளியாக்க முடியாது. மேலும் போர்க்குற்றங்கள் அத்து மீறிய அக்கிரமங்கள் என்பதால் அவற்றைப் பொது வெளியில் கசியவிட்டது தவறு என்றும் கூற முடியாது.

ஆவணங்கள் திருட்டுத்தனமாக பெறப்பட்ட தாகக் கூறப்பட்டாலும் உண்மையை வெளிக் கொணர்வதற்கான முயற்சி என்பதால் பத்திரிகைச் சுதந்திரமாகவே அதனைப் பார்க்க வேண்டும். ரஷிய உளவுத்துறையின் உதவியுடன் விக்கிலீக்சின் செயல் பாடுகளை தொடர்புபடுத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அரசாங்க பயங்கரவாதத்தை அகற்றி, வெளிப் படைத்தன்மையை ஏற்படுத்த விரும்பும் முற்போக்காளர்களுக்கு அவர் போர்க்குணமிக்க மாவீரராகவே எப்போதும் தோற்றம் அளிப்பார். அமெரிக்க வல்லரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதால் தம் மரியாதையைக் குறைத்துக் கொண்டது என்றே கூறலாம்.

Pin It