thoothatri 400இது எங்கல்ஸ் எழுதிய ஒரு சிறு நூலின் தலைப்பு.  மார்க்சியம் கற்க விரும்புபவர்களுக்கு இது மிக முக்கியமான ஒன்று.  இந்த நூலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பூயர்பா என்பவர் யார் என்பது தெரியவேண்டும்.  ஜெர் மானிய செவ்வியல் தத்துவம் என்ன என்பதும் தெரியவேண்டும்.

லுத்விக் பூயர்பா (1804-72) என்பவர் ஜெர் மனியின் பொருள் முதல்வாதத் தத்துவவாதி.  இவர் எர்லாஞ்சன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்றுக் கொடுத்தவர்.  ஹெகலின் தத்துவம், திருத் துவம் ஆகியன பற்றி விமர்சன நூல்களை எழுதி யவர், ஹெகலின் மாணவரும் கூட.  ஆனால் ஹெகலிடமிருந்து வேறுபட்டவர்.

ஜெர்மானியத் தத்துவ வரலாற்றில் கான்ட், எவுல்லிங், ஹெகல், பூயர்பா ஆகியோரது காலம் செவ்வியல் தத்துவ காலம் எனப்படுகிறது.  அதாவது நமது ஆதிசங்கரர், ராமானுஜர் போன்றவர்களது தத்துவம் தோன்றிய காலம் போன்றது அது.  இக்காலகட்டத் தத்துவத்தின் சிகரமாக, ஜெர் மனியில் ஹெகல் கருதப்பட்டார்.  ஹெகலிட மிருந்தே பாடம் கற்று, அவரை மறுத்த பூயர்பாவும் செவ்வியல் தத்துவத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்.

பூயர்பா ஹெகலை விமர்சனம் செய்து தனது தத்துவத்தினை வளர்த்தெடுத்தார்.  ஆனால் அவர் ஹெகல் உருவாக்கிய இயங்கியல் முறையைக் கண்டு கொள்ளவில்லை.  ஹெகலின் கருத்து முதல்வாதத்திலிருந்து விலகிப் பொருள்முதல்வாத விளக்கத்தினை பூயர்பா முன்வைத்தார்.

இந்தக் கண்ணோட்டத்தில் அவர் மதம் பற்றியும், சமுதாயம் பற்றியும் சிந்தித்தார்.  அவரது “கிருத்துவ மதத்தின் சாராம்சம்” என்ற நூல் பலரது கவனத்தினைக் கவர்ந்தது.  கிருத்துவத்தில் இடம் பெற்றிருந்த பல அறிவுக்குப் பொருத்தமற்ற கருத்துக்களை அவர் புறக்கணித்தார். 

கிருத்துவத்தினை மனிதனது வடிவ மாகவே கண்டார் கடவுள் பற்றியும், கிருத்து பற்றியும் கூறியவை எல்லாம் மனிதர்கள் தங்களைப் பற்றி அறிந்துகொண்டவையே ஆகும் என்று அவர் கூறினார்.  உண்மையான மதம் என்பது நாத்திகமே ஆகும். 

மனிதனது சிந்தனைகள் பற்றியது தான் மதம் என்று அவர் கூறினார்.  கடவுள் என் பவர் மனிதன் என்ற இனத்தின் சாராம்சத்தின் கற்பனையான வெளிப்பாடு ஆவார் என்று அவர் கூறினார்.  மதமானது மனிதனைத் தாழ்த்தி, கடவுளை உயர்த்தி வைக்கிறது.  இந்த நூலில் ஹெகலது அந்நியமயமாதல் என்ற கருத்தைப் பயன்படுத்தி, மனித மைய வாதத்தினை மதத்திற்குப் பொருத்திக் காட்டியுள்ளார் பூயர்பா.

இந்த நூல் வெளிவந்த பொழுது ஹெகலின் ஆதரவாளர்களாக இருந்த ஒரு பிரிவினர் இளம் ஹெகலியர்கள் ஆவர்.  இவர்களில் பெரும்பாலோர் முதலாளித்துவ புரட்சி மனோபாவம் உள்ள வர்கள்.  இவர்கள் பொருள் முதல்வாதத்தினை ஏற்றுக்கொண்டவர்கள்.  ஆனால் ஹெகலோ ஒரு கருத்து முதல்வாதி.  இந்தப் போக்கிற்கும், பொருள் முதல்வாதப் போக்கிற்கும் பெரிய முரண்பாடு இருந்தது இதனை எவ்வாறு தீர்ப்பது என்று இளம் ஹெகலியர்கள் திணறிக் கொண்டிருந்த பொழுது பூயர்பாவின் இந்த நூல் வெளிவந்தது! இந்த நூல் இந்த முரண்பாட்டிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது இது பற்றி எங்கல்ஸ் கூறுகிறார்.

“ஒரு பலத்த அடிமூலம், இது இந்த முரண் பாட்டைத் தூள் தூளாக்கியது! சுற்றி வளைத்துப் பேசாமல் பொருள் முதல்வாதத்தினை மறுபடியும் அரியாசனத்தில் அமர்த்தியது.  இயற்கையானது தத்துவத்தைச் சாராமல் உள்ளது.  இயற்கையி லிருந்து தோன்றிய மனிதர்களாகிய நாம் அதனை அடிப்படையாகக் கொண்டுதான் வளர்ந்துள்ளோம்.  மனிதனுக்கும், இயற்கைக்கும் அப்பாற்பட்டு எதுவும் இல்லை.  மதக் கற்பனைகள் படைத்துள்ள தெய்வங்கள் நமது சாராம்சத்தின் வினோதமான பிரதிபலிப்புகளே ஆவர்.  இப்பொழுது மாயை மறைந்து விட்டது.  கற்பனை அமைப்பு தகர்ந்து விட்டது.  புறந்தள்ளப்பட்டுவிட்டது.  நமது கற்பனையில் மட்டுமே உள்ள முரண்பாடு கரைந்து விட்டது.  நாங்கள் எல்லோரும் உடனடியாக பூயர்பா ஆதரவாளர்களாக மாறினோம்” (592)

இந்தச் சமயத்தில் ஹெகலியமும் சிதைந்தது. 

பூயர்பா அதனை மேலும் சிதைத்தார்.  ஆனால் ஹெகலியம் ஒரு வலுவான தத்துவம்.  அதனை எளிதில் சிதைத்துவிட முடியாது.  அதன் மூலம் கிடைத்த புதிய உள்ளடக்கத்தினைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதனை எவ்வாறு செய்தார்கள் என்பதைக் காணவேண்டும்.

II

இங்கு எங்கல்ஸ், தத்துவம் பற்றிய அடிப் படையான விளக்கத்தினை அளிக்கிறார்.  இந்த விளக்கம் தான் தத்துவத்தினைப் பொருள் முதல் வாதம், கருத்து முதல்வாதம் என்ற இரு பகுதி களாகப் பிரித்துக் காணச் செய்தது.  பல முற் போக்கான அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொண்டு, அவர்களது ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதில் முதலாவது சிந்தனை, பொருள் ஆகிய வற்றிற்கு இடையிலான உறவு அகும்.

பழங்காலத்திலிருந்தே, எண்ணங்கள் சிந்தனைகள் ஆகியன பொருளின் விளைவு அல்ல; அவை ஆன்மாவின் செயல் என்ற கருத்து இருந்தது.  இதிலிருந்து கடவுள் பற்றிய கருத்தும் தோன்றியது ஆனால், பொருளுக்கும், சிந்தனைக்குமான இந்த உறவு பற்றிய பிரச்சினையானது காட்டுமிராண்டி நிலையில் இருந்த மக்களது அறியாமையை அடிப் படையாகக் கொண்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  இது இயற்கை அடிப்படையானதா ஆன்மா அல்லது எண்ணம் அப்படையானதா என்ற கேள்வியாக உருவெடுத்தது.

இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் கொடுத்த விடை காரணமாக அவர்கள் இரு முகாம்களாகப் பிரிந்தனர்.  இயற்கைக்குப் பதிலாக ஆன்மாவை (எண்ணம்) அடிப்படையாகக் கருதியவர்கள் கருத்து முதல்வாதிகள் எனப்பட்டனர்.  இயற்கையை (பொருளை) அடிப்படையாகக் கருதியவர்கள் பொருள் முதல்வாதிகள் எனப்பட்டனர்.  இவ்வாறு எது அடிப்படையானது எது வழி நிலையானது என்பது தத்துவத்தில் உள்ள முதற் கேள்வி.  இதற்கு மற்றொரு பகுதி உண்டு.  உலகத்தைப் புரிந்து கொள்ளமுடியுமா, முடியாதா என்பது அந்தக் கேள்வி.  இது இரண்டாவது கேள்வி.  இதற்குத் தத்துவவாதிகள் இருவகையான விடையை அளித்துள்ளனர்.  கருத்துமுதல்வாதிகள் உலகினைப் புரிந்துகொள்ள முடியாது என்றனர்.  பொருள் முதல் வாதிகள் உலகினைப் புரிந்துகொள்ள முடியும் என்றனர்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் எங்கல்ஸ் பூயர்பா பற்றிய அவரது மதிப்பீட்டை முன் வைக் கிறார்.  பூயர்பாவைப் பொறுத்தமட்டிலும் அவர் முதலில் ஹெகலைப் பின்பற்றினார். பின்னர் ஹெகலின் கருத்துமுதல்வாத நிலைப்பாட்டினை உதறித் தள்ளிவிட்டுப் பொருள் முதல்வாதியாக மாறினார்.  ஹெகல் முன்வைத்த முழு முதற்கருத்து (பரமாத்மா) என்பது வினோதமான ஒன்று என்று அவர் கருதினார் “பொருள் என்பது மனதின் விளைவு அல்ல; மனது தான் பொருளின் உயர் கட்ட விளைவு” என்று பூயர்பா கூறினார்.  இது பொருள் முதல்வாதம். 

ஆனால் பூயர்பா இதற்கு மேலாகச் சொல்லவில்லை.  இதற்குக் காரணம் பூயர்பாவின் பொருள்முதல்வாதம் இயந்திர கதியானது.  அதன்படி எல்லாமே இயந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டவை ஒரே பாதையில் செல்பவை.  இதில் மாறுதல் என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  இதே கருத்துதான் வரலாற்றில் இருந்தது.

பூயர்பாவின் மற்றொரு குறைபாடு அவர் கருத்து முதல்வாதத்திலிருந்து முற்றிலுமாக விடுபட வில்லை. இது அறவியல், மதம் ஆகிய பற்றிய அவரது கருத்துக்களில் காணப்படுகிறது மதம் என்பது மனிதர்களுக்கு இடையே உறவை ஏற்படுத்துவது என்று அவர் கருதினார்.  அன்பு என்பதுதான் சிறந்த மதம் என்று அவர் கருதினார்.  மனிதனை மதத்தின் மையமாக அவர் வைத்தார்.  அறம் அல்லது ஒழுக்கம் என்பது மனிதனை மைய மாகக் கொண்டது என்று அவர் கருதினார்.  அவர் மனிதன் என்ற பொதுமை (யளெவசயஉவ) கருத்தினை உயர்த்திப் பிடித்தார்.  ஆனால் மனிதன் வாழும் வரலாற்றுச் சூழ்நிலைகளை அவர் கவனிக்கவில்லை.  அவரது மனிதன் பொதுமையான மனிதன், வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன்.

III

ஹெகலியச் சிதைவிற்குப் பின்னர் தோன்றிய தத்துவப் போக்கில் (பூயர்பா, ஸ்ட்ராய், பூரூனோ பார்) கருத்துமுதல்வாதமானது தொடர்ந்து இடம் பெற்றது.  அதனை பூயர்பாவினால் மீறமுடிய வில்லை.  ஆனால் இந்தச் சிதைவிலிருந்து மற்றொரு போக்கு தோன்றியது.

இளம் ஹெகலியக் குழுவில் இடம்பெற்ற மார்க்ஸ் தோற்றுவித்த போக்கு அது.  ஹெகல் உருவாக்கிய தத்துவத்தில் இடம்பெற்ற ஒன்று இயங்கியல் முறை ஆகும்.  இது கருத்துக்களின் போராட்டம், கருத்துகள் ஒன்றுபடுதல் என்ற முறையில் இடம்பெற்றது.  பரமாத்மா என்பது வெகு காலமாகவே இருக்கிறது.  அது தன்னை அபிவிருத்தி செய்ய மாறிக் கொண்டே இருக்கிறது.  அது தன்னிலிருந்து அந்நியமயமாகி இயற்கை என்று மாறுகிறது.  பின்னர் பல மாறுதலுக்கு உள்ளாகி மனிதனது சுய உணர்விற்குத் திரும்பு கிறது. 

இதனைக் கூர்மையாகக் கவனித்தால் கருது கோள் (வாநளளை) எதிர் கருதுகோள் (யவேi வாநளளை) கூட்டிணைப்பு (ளுலவோநளளை) என்று இயங்கியலில் மூன்று நிலைகள் இருப்பதைக் காணமுடியும்.  இதனை ஹெகல் முழுமுதற்கருத்து (பரமாத்மா) என்பதற்குப் பயன்படுத்தினார்.  மார்க்ஸ் இந்த இயங்கியல் முறையை பொருளுக்குப் பயன் படுத்தினார் இது மார்க்சின் பங்களிப்பு.  உலகினை ஒரு நிலை யான அமைப்பாகக் காணாமல், ஒரு செயல் முறை யாக மார்க்ஸ் கண்டார்.  அது மாறிக் கொண்டே இருக்கிறது.  பிற்போக்கானவை அழி கின்றன.  முற்போக்கானவை முன்னேறுகின்றன.  என்ற கருத்தை மார்க்ஸ் முன் வைத்தார்.  அவர் காலத்தில் விஞ்ஞானத்தில் இடம் பெற்ற கண்டு பிடிப்புகள் அவருக்கு உறுதுணையாக இருந்தன.

IV

இயற்கை (பொருள்) பற்றிய இக்கண்ணோட்டத் தினை மார்க்ஸ் வரலாற்றிற்குப் பயன்படுத்தினார். இயற்கைக்கும், மனிதகுல வரலாற்றிற்கும் வேறு பாடு உள்ளது.  “இயற்கையில் குருட்டுத்தனமான, சக்திகள் ஒன்றின் மீது ஒன்று செயல்புரிகின்றன.  இதன் மூலம் ஒரு பொது விதி உருவாகிறது” ஆனால் மனித சமுதாயத்தில் இது போன்று இல்லை.  இங்கு பிரக்ஞையுள்ள மனிதர்கள் செயல் புரிகிறார்கள். 

இங்குச் சில சமயங்களில் எதிர்பாராத தற்செயல் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.  எதிர்பார்ப்பது நடைபெறுவதும் இல்லை.  இதற்குக் காரணம் எண்ணற்ற தனிநபர் விருப்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாகும்.  இதன் காரணமாக வரலாற்று நிகழ்ச்சிகள் சந்தர்ப்பவசத்தினால் கட்டுப்படுத்தப் படுவது போலத் தோன்றுகிறது.  ஆனால் இதற் குள்ளாக மறைந்திருக்கும் விதிகள் செயல்படு கின்றன.  இந்த விதிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

“மனிதர்கள் அவர்களது வரலாற்றை உரு வாக்குகிறார்கள்” என்று எங்கல்ஸ் கூறுகிறார்.  இந்த வரலாற்றிற்கு உந்து விசையாக இருப்பது

எது என்ற கேள்வியை எங்கல்ஸ் கேட்டு, அதற்கு விடையும் அளிக்கிறார்.  இந்த உந்துவிசை வர்க்கப் போராட்டம் ஆகும்.  இந்த வர்க்கங்கள் பொருளா தார அடித்தளத்தைக் கொண்டவை உதாரணமாக பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும் புதிய உற்பத்தி முறையின் விளைவாகத் தோன்றியவர்கள்.

மத்திய காலத்தின் இறுதியில் தொழில் முறையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது.  பூர்ஷ் வாக்கள் புதிய உற்பத்தி சக்திகளின் பிரதிநிதி களாக விளங்கினர்.  இவர்கள் பிரபுக்களுடன் முரண்பட்டனர்.  இதன் விளைவில் நிலப்பிரபுத்துவத் தளைகள் தகர்க்கப்பட்டன.  பூர்ஷ்வா அமைப்பு உருவாயிற்று.  இந்த அமைப்பில் பாட்டாளி வர்க்கம் தோன்றியது.  இப்பொழுது வர்க்கப் போராட்டம் பாட்டாளிகளுக்கும், பூர்ஷ்வாக் களுக்கும் இடையிலான போராட்டமாக மாறியது.  இது வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு உதாரணம்.

இந்தக் கட்டத்தில் எங்கல்ஸ் அடிப்படை யான ஒரு விஷயத்தினைச் சுட்டிக்காட்டுகிறார்.  அதாவது எல்லா வர்க்கப் போராட்டங்களுக்கும் அடிப்படையாகப் பொருளாதாரம் உள்ளது என் பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.  அவர் கூறு கிறார்.  “தற்கால வரலாற்றில் எல்லா அரசியல் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  விடுதலைக்கான எல்லாப் போராட்டங்களும் (ஏனென்றால் ஒவ் வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டம் ஆகும்) இறுதியில் பொருளாதார விடுதலையில் முடிவடைகிறது.”

இதிலிருந்து எங்கல்ஸ் ஒரு முடிவிற்கு வரு கிறார்.  அரசு, சட்டம் போன்றவை பொருளாதார உறவுகளால் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அது.  “அரசு என்பது மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தும் முதல் கருத்தியல் சக்தியாகும்.” ஆனால் அரசானது முதலில் மனிதனைப் பாதுகாக்கத் தோன்றியது.  பின்னர் வர்க்க சமுதாயத்தில் அது அடக்குமுறை சக்தியாக மாறியது.  இது மேற் கொண்டு பல கருத்தியல் வடிவங்களை உருவாக்கு கிறது.  இவை பொதுச் சட்டம், தனிப்பட்ட சட்டம் என்ற வடிவங்களைப் பெறுகின்றன.

கருத்தியல் வடிவங்களில் உயர்ந்த கட்டமான மதம், தத்துவம், போன்றவை பொருளாதார அடித்தளத்திலிருந்து அதிகமாக விலகியுள்ளவை ஆகும்” இங்கு இந்தக் கருத்துக்களுக்கும் அவற்றின் இருப்பிற்கான பொருளாதாரச் சூழலுக்கும் உள்ள தொடர்பு மிகவும் சிக்கலாக உள்ளது.  இது இடையிலுள்ள பல தொடர்புகளால் மறைக்கப் பட்டுள்ளது.” இதன் காரணமாக இதற்கும் அடிப் படைக்கும் உள்ள தொடர்பினை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது.  இந்த நூலின் இறுதியில் மதம் பற்றி எங்கல்ஸ் கூறுகிறார்.   இதனை முழுவது மாகவே காணலாம்.

“(மதம்) பொருளியல் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.  அதிலிருந்து அந்நியப் பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.  அவர்களைப் பற்றியும், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல் பற்றியும் மனிதர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களில் இருந்து பழங்கால சமுதாயங்களில் மதம் தோன்றியது.  ஒரு கருத்தியல் அது தோன்றிய பிறகு, அதன் கருத்து வடிவங்களிலிருந்து மேலும் வளர்கிறது.  இக்கருத்து மேலும் வளர்க்கப்படுகிறது.  அவ்வாறு இல்லை என்றால் அது கருத்தியலாக இருக்க முடியாது... 

ஆரம்பகால இரத்த உறவு உள்ள மக்கள் குழலிற்குச் சொந்தமான மதக் கருத்துக்கள், இக் குழுக்கள் பிரிந்த பிறகு வளர்ச்சி பெறுகிறது.  இந்தப் புதிய குழலிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இது இடம் பெறுகிறது...”

இது பல மதங்களாகப் பிரிகிறது - இவ்வாறு தோன்றியது தான் பூர்வீக ஆரியவர்களது மதம்; கிருத்துவம், இஸ்லாம் போன்றவை.  இவ்வாறு உருவான மதங்களில் “பாரம்பரியத்தின் கூறுகள் உள்ளன.  இந்தப் பாரம்பரியக் கூறுகள் வலுவான பிற்போக்கு சக்தியாகவே உள்ளன.  ஆனால் இந்த மாறுதல்கள் வர்க்க உறவுகளில் இருந்து தோன்று கின்றன.  அதாவது இந்த மாறுதல்களைக் கொண்டு வரும் மக்களின் பொருளாதார உறவுகளில் இருந்து இவை தோன்றுகின்றன” (619-21)

இந்த நூலின் சாராம்சமான இரு கருத்துக்கள் பின்வருமாறு.  ஒன்று ஹெகலின் கருத்து முதல் வாதத் தத்துவம் சிதையும் பொழுது பூயர்பா அதிலிருந்து வேறுபட்டுப் பொருள்முதல்வாதத் தினை உயர்த்திப் பிடித்தார்.  ஆனால் அவரது பொருள்முதல்வாதம் இயந்திரகதியில் இருந்தது.  இதனை மார்க்ஸ் வளர்த்தெடுத்து இயங்கியல் பொருள்முதல்வாதமாக மாற்றினார். 

இது இந்த நூலின் முதல் பகுதியாகும்.  இரண்டாவது பகுதி முழுவதும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றியது.  இங்கு எங்கல்ஸ் வரலாற்iறைத் தீர் மானிப்பவை பொருளாதார உறவுகள் என்பதைத் தெளிவாகக் கூறுகிறார்.  சட்டம், மதம் போன்ற கருத்தியல் வடிவங்களில் கூட இது எவ்வாறு செயல்படுகிறது என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

Pin It