Veruvazhali 1 400ரகுதேவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வேறுவழி.  ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள், திரு நங்கைகள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு இது.  அனைத்துக் கதைகளும் வாழ்வின் வலிச்சரடுகளில் கோக்கப்பட்டுள்ளன.  புதிய களங் களுக்கு வாசகனை நடத்திச் செல்கின்றன.  தலித்துகள் இழிவுபடுத்தப்படுவதையும் புறக்கணிக்கப்படு வதையும் அம்பலப்படுத்தி, சமூக நீதி கோருகிறார் ரகுதேவன்.

இத்தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள்.  ஒவ்வொன்றும் பனிப்பொழிவைப்போல் நம் உணர்வைச் சிலிர்ப்பிக்கும் நுட்பம் கொண்டவை.  முதல் கதை ‘கலக்கம்’.  வருமானம் போதாமை யால் தான் செய்யும் மலம் அள்ளும் வேலைக்குச் செல்ல வற்புறுத்தும் தாய்க்கும், அத்தொழிலை வெறுக்கும் பட்டதாரி மகனுக்குமான மனப் போராட்டங்களைச் சித்திரிக்கிறது.

தனமணி கைம்பெண்.  வீதி கூட்டுவது, மலம் அள்ளுவது அவள் தொழில்.  கிடைக்கும் ஊதியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரி.  அவள் மகன் மண வாளன்.  காலையில் செய்தித்தாள்கள் போட்டும், கூரியர் தபால்களைச் சேர்த்தும் படித்து எம்.ஏ. பட்டதாரி ஆகிறான்.

தனமணிக்கு நோய்.  மருத்துவமனை செல்ல விடுப்புக் கேட்கிறாள்.  மேற்பார்வையாளரோ பதிலியாக மகனை அனுப்பக் கட்டாயப்படுத்து கிறார்.  வேறுவழியின்றி மணவாளன் சென்று வீதி கூட்டுகிறான்; மலத்தை வாரி சாக்கடை நீரில் கரைத்துவிடுகிறான்.  இது அவன் நெஞ்சைக் குத்துகிறது.  தாயோ வேறு வேலை கிடைக்கும் வரை அதைச் செய்ய வற்புறுத்துகிறாள். 

இந்நிலையில் அவன் விண்ணப்பித்த கல்லூரி ஒன்றி லிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு.  அவன் எஸ்.சி. என்பதால் அங்கு வேலை கிடைக்கவில்லை.  திரும்பி வந்த அவன், ரயில்வே தண்டவாளம் பராமரிக்கும் வேலையில் சேர்கிறான்.  இட ஒதுக்கீடு இருப்பினும் வேலையின்மை தலித் மக்களையும் பாதிக்கிறது என்பதை இக்கதையில் நேர்த்தியாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

அரசுப்பள்ளியில் நடக்கும் தீண்டாமையைத் தோலுரிக்கும் கதை ‘ஏளனம்’.  ஜெயராமன் ஆதி திராவிடர்.  அவர் மகன் மோகன்.  மோகனை ஆறாம் வகுப்பில் சேர்க்கச் செல்கிறார்.  முதலில் மறுத்து, அலையவிட்டுப் பின்பு சேர்த்துக் கொள் கிறார் தலைமையாசிரியை.  சாதி வெறிபிடித்த அவர், மோகனை வகுப்புக்கு வெளியே உட்கார வைக்கிறார்.  மதிய உணவை மற்ற மாணவர் களோடு உட்கார்ந்து உண்ண அவனை அனுமதிப்ப தில்லை.  சமையற்காரி பாக்கியம், மற்றவர்கள் தட்டைச் சோப்பிட்டுக் கழுவுவாள்; மோகனின் தட்டை இடக்கையால் தூக்கி அடுப்படியில் போடுவாள்.

மோகன் விடுப்பு எடுக்கும் நாட்களில் அத்தட்டில் சோறிட்டு நாய்க்கு வைப்பாள்.  வகுப் பறைகளைக் கூட்டவும் கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் அவனைப் பயன்படுத்துகின்றனர்.  இப் போக்கை ஆசிரியை மதலை கண்டிக்கிறார்.  அவரும் மேரி ஆசிரியையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்.  இருவரையும் ஆசிரியர்களுக்குரிய கழிப்பறைகளுக்குச் செல்லவிடாது காட்டுக்குத் துரத்துகின்றனர்.  இந்த அநீதிகளை இருவரும் எதிர்க்கின்றனர்.  அவர்களோடு மோகனின் தந்தையும் சேர்கிறார்.  இருப்பினும் அந்த ஒற்றைக் குரல்கள் வலுவிழந்து போகின்றன.  பள்ளிக் கூடங் களிலும் பணியிடங்களிலும் ஆதிக்கச் சாதியினரால் ஒதுக்கப்படும் தலித் மக்களின் நிலையை இக் கதையில் விவரிக்கிறார் ரகுதேவன்.

‘கொள்ளி போடும் உரிமை’ கதை பெண் ணுரிமை பேசுகிறது.  மகனின் போக்குச் சரி யில்லாததால், தன் சொத்துக்களை மனைவிக்கு எழுதிவைக்கிறார் கோவிந்தன்.  அந்தச் சொத்து, தன் சகோதரிகளுக்குப் போய்விடும் என்ற முடிவுக்கு வந்த அவர் மகன் சுந்தரம் தந்தையைக் கொல் கிறான்.  விபத்தில் கால் முடமான தாயையும் துன்புறுத்துகிறான்.  தாய்க்குப் ‘பீமல்லு’ வார ஆளில்லை. 

இரு மகள்களும் வந்து பணிவிடை செய்கின்றனர்.  சொத்தை எழுதிக் கொடுத்தால் தாயைக் கவனிப்பேன் இல்லையேல் செத்தால் கொள்ளியும் வைக்க மாட்டேன் என்பது சுந்தரத்தின் மூர்க்க நிலை.  தாய் இறக்க அவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.  மகள்கள் ஈமச்சடங்கு செய் கின்றனர்.  பெண்களும் வாரிசுதான்.  கொள்ளி போடும் உரிமை அவர்களுக்கும் உண்டு என நிறுவுகிறார் ஆசிரியர்.

தன்மானத்தோடு வாழ முயற்சிக்கும் திரு நங்கைகளின் கதை ‘நானும் ஒரு பிறப்பு’.  அன்பழகன் ஆண்மை குறைந்து பெண்மை மிகுந்து வளர்கிறான்.  அவனுக்குத் திருமணம் நிச்சயமா கிறது.  அரவாணிகளோடு அவனுக்குள்ள தொடர்பை அறிந்ததும் பெற்றோர் பதறுகின்றனர்.  ‘குடும்ப வாழ்வுக்கு நான் தகுதியற்றவன்’ என்ற கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான் அவன். 

சில மாதங்களுக்குப் பின்பு சேலம் வரும் அன்பழகன், அரவாணிகள் ஆதரவோடு ‘மயில் பேன்சி ஸ்டோர்’ தொடங்குகிறான்.  அவர்கள் கடையைப் பிச்சைக்காரர்கள் கூட எட்டிப்பார்க்கவில்லை.  தீபாவளிப்பண்டிகை.  கடையில் வியாபாரம் களைகட்டுகிறது.  இதில் திருநங்கைகள் நமக்கு நிகரானவர்கள் என்று ரகுதேவன் அறிவுறுத்துகிறார்.

சாமிக்கு வந்த சர்மசங்கடத்தைக் கற்பனை வளத்தோடு பதிவு செய்திருப்பது ‘வேண்டுதல்’ கதை.  முத்துக்கருக்கன் பெண்கள் விசயத்தில் பலவீனமானவன்.  அவனுக்கும் பெரிய தாய்க்கும் திருமணமாகி ஐந்தாறு வருடங்களாகியும் குழந்தை யில்லை.  பிற பெண்கள் மீதான அவனது மோகமே அதற்குக் காரணம்.  முத்துக்கருக்கனின் பெரியப்பா மகள் மயிலா.  இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு கணவனால் துரத்தப்பட்ட அவளை இழுத்துக் கொண்டு ஓடுகிறான் அவன்.  ஓடும்போது ‘எங்களெக் காட்டிக்குடுத்திராத’ என ஊர்ச் சாமியிடம் வேண்டினர். 

அதே சாமியிடம் பெருஞ்சீற்றத் தோடு வருகிறாள் பெரியதாய்.  ‘ஓடுன ரெண்டு பேரும் செத்தாங்கங்கர செய்தி வரோனும் இல்லன்னா அவுனெ அடிக்க வக்கிருக்கிர சீவக்கட்டைல ஒன்னெ நாலு வெதுப்பு வெதுப்புவேன்’ என மிரட்டுகிறாள் அவள்.  இரு தரப்பினரில் பெரிய தாயைப் பார்த்தே சாமிக்கு அச்சம்.  அண்ணன், தங்கை உறவைக் கொளுத்தும் கொடூரமானது காமம் எனச் சுட்டி வைக்கிறார் ரகுதேவன்.

இவைபோல் கல்லூரி ஆசிரியரின் சூழ்ச்சி களை வென்று இராணுவத்தில் சேர்ந்து போரில் காயப்பட்டு விகாரமுகத்துடன் வரும் கௌதமனின் துயரங்களைப் படம்பிடிப்பது ‘வதை’.  மூத்த பேரனின் மடியில் சாகவிரும்பும் தாத்தாவுக்காக, அண்ணனை அழைத்துவர இடையூறாக இருந்த ஊர்வலத்தைக் கலைக்க, ஏரி உடைந்தது எனப் பீதியைக் கிளப்பும் கதை ‘வேறுவழி’.  கணவனை இழந்து தாயின் பழிச்சொற்களால் ரணத்தோடு வாழ்ந்து கருணை அடிப்படையில் வேலை வாங்கும் பூரணியின் மனஉறுத்தல்களைக் கூறுவது ‘துடிப்பு’. 

வலக்கையை இழந்தாலும் இடக்கையால் எழுதிப் பழகி அரசுப்பணியில் சேரும் சென்றாயனின் விடா முயற்சியை எடுத்துரைப்பது ‘மாற்றுக்கை’.  ஆக்கிர மிக்கப்பட்ட தலித்துகள் சுடுகாட்டு நிலத்தை மீட்டுத்தரும் வீரம்மாளின் துணிச்சலைப் போற்றுவது ‘மீண்டது’.  கணவனை இழந்தும் பாய் நெசவு செய்து பிள்ளைகளைப் படிக்க வைத்து முன்னேற்றும் தாயை முன்மாதிரியாக்குவது ‘பாய்’.  சேரியின் அருகில் இருப்பதால் விலை போகாத நிலத்தை எண்ணி உயிர்விடும் அப்பாவியின் ‘வாங்கா நிலம்’.  தன்னைக் கொடுமைப்படுத்திய சித்திக்குக் கொள்ளி போடும் பெண்ணின் பெருந்தன்மை சொல்வது ‘விலை’.

இப்படி ஒவ்வொரு நகர்விலும் சாதித்திமிரின் வன்மம், குடும்பச் சிக்கல்கள், தகாத உறவுகள், சமூக அவலங்கள், கடின உழைப்பின் முக்கியத் துவம் என மானுட மேம்பாட்டுக்குத் தேவையான கருக்கனை எடுத்துக் கதையாக்கியுள்ளார் ரகு தேவன்.

கதைமாந்தர்கள் வலுவாகப் படைக்கப்பட்டு உள்ளனர்.  கதையோடு தொடர்பற்ற எந்தப் பாத்திரமும் தென்படவில்லை, உரையாடல்கள் அந்தந்த மாந்தர்களின் உணர்வைக் கொப்பளிக் கின்றன.  சான்றாக ஏளனம் கதையில் நல்லதம்பி, ‘பற நாயேங்கர, செருப்புல அடிப்பங்கர, இதெல்லாம் எங்களால செய்ய முடியாதுண்ணு நெனச்சுக்காத... 

Veruvazhli 400நாயம் பேசுனா ரண்டு கண்ணுக்கும் மூக்கு இருக்கர மாதிரிபேசு’ என்பது கதைக்கும் படிப்பவர்களுக்கும் எழுச்சி ஊட்டுகிறது.  ஒவ்வொரு கதைக்குள்ளும் மக்களிடையே புழங்கும் சொலவடைகள், பழ மொழிகள்.  அவை, ‘பொறக்கையில வந்த கூத பொங்க வச்சா போயிடுமா?’, ‘புத்தியுள்ள புள்ளெ யெப் பெக்கோணும், சத்தியுள்ள சாமியெக் கும்புடோனும்’ போல்வன.  மீண்டது கதையில்,

“கும்பப் பனை யோல

குயிலடையும் மாந்தோப்பு - இந்தக்

கும்பப் பனை சாய்ஞ்சா - இந்தக்

குயிலு போய் எங்கடையும்”

எனத் தொடங்கும் ஒப்பாரிப் பாடல் நெற்றிச் சுட்டி போல் மின்னுகிறது.  ஓரிரு கதைகளில் பாத்திரங் களின் உரையாடலையும் ஆசிரியர் நடையையும் வேறுபடுத்தியிருக்கலாம்; முடிவுகளையும் கூர்மைப் படுத்தியிருக்கலாம்.

தமிழுலகில் முத்திரை பதிக்கும் படைப்பாற்றல் நீறு பூத்த நெருப்பாய் ரகுதேவனுக்குள். சிறுகதை, புதினம் என எழுதி அவர் இலக்கிய வானின் உச்சிக்குச் செல்வார் என நம்புகிறேன்.

வேறுவழி

ரகுதேவன்

வெளியீடு:

காவ்யா

16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்,

கோடம்பாக்கம் - சென்னை - 600 024

விலை: ` 100/-

 

Pin It