அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் தேவைப்படுகின்றன. இந்த வளர்ச்சியால்தான் உலக வளர்ச்சியும், ஊர் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதுவே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் பயன்படுகிறது. இது அன்று முதல் இன்றுவரை ஒரு தொடர்கதை.

கல்வியறிவுக்கு அடையாளமாக இருப்பவை புத்தகங்கள். இது எழுதவும், படிக்கவும் உற்ற துணையாகும். அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலங்களில் கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் வளர்ந்து வந்தன. அச்சு எந்திரம் வந்ததும் அதன் வளர்ச்சி எல்லையில்லாததாக விரிந்தது.

‘நூல் பல கல்’ என்றது நீதிநூல். ‘படி படி’ அதுவே முன்னேற்றத்தின் முதற்படி என்பதும் அதனால்தான். இதற்கெல்லாம் கருவியாக இருப்பதும், அறிவின் அடையாளமாகக் காட்சி தருவதும் புத்தகங்களே!

“தோழர்களே! இது ஒரு புத்தகம் மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள். இதைத் தொடுகிறவன் இந்த நூலை எழுதிய ஆசிரியரையே தொடுகிறான்” என்று கூறினார் அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன். புத்தகங்கள் மூலமாகவே ஆசிரியர் பேசுகிறார். சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் பேசுகின்றனர்.

கவிஞர்களும், எழுத்தாளர்களும், அவர்கள் எழுதிய நூல்கள் மூலமாகவே பேசுகின்றனர். இந்தப் பேச்சு உலகம் முழுவதும் கேட்கிறது. ஆதிக்கத்தையும், அநீதியையும் எதிர்த்து மக்கள் ஆர்ப்பரித்து எழுகின்றனர். அடுத்த நொடியே அந்த மாமன்னர்களின் நெடிதுயர்ந்த மாளிகைகளும், சர்வாதிகாரிகளின் வான்முட்டிய அதிகாரங்களும் அடியோடு சரிந்தன. இப்போது அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.

உலக நாகரிகங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவன மிகச்சிறந்த இலக்கியங்களே! சுமேரிய - கால்டிய நாகரிகம், எகிப்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சிந்துவெளி, நாகரிகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது அறிவும், அதன் வழிவந்த இலக்கியங்களுமே. தமிழர்களின் பொற்காலமாகப் பேசப்படும் சங்க காலத்துக்குப் பெருமை சேர்ப்பது சங்க இலக்கியங்களே!

கிரேக்க நாகரிகத்திற்குச் சிறப்பைச் சேர்த்தவர்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் என்னும் சிந்தனையாளர்களே தவிர, முடிமன்னர்கள் அல்லர். அவர்களுக்குப் பிறகு அந்த நாடும் சிதைந்தது; அந்த நாகரிகமும் சீரழிந்தது. அறிவில் சிறந்து விளங்கிய ஏதென்ஸ் அழிந்த பிறகு டாலமி மன்னர்களால் உருவாக்கப்பட்ட அலெக்சாந்திரியா நகரத்திற்குப் பெருமையே அங்கு 7 இலட்சம் நூல்களுடன் நூலகம் விளங்கியது என்பதே.

மாவீரன் நெப்போலியன் கூறினார்: “என் வாளின் வலிமையாலும், ஹோமர் காவியத்தின் துணையாலும் இந்த உலகத்தையே வெல்வேன்...” இப்போது வாளின் வலிமை நிற்கவில்லை; ஹோமரின் காவியமே நிலைபெற்று நிற்கிறது.

18ஆம் நூற்றாண்டு பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக அமைந்த ‘புரட்சி நூற்றாண்டு’ என்று கூறுவர். அதற்குக் காரணம் எழுத்தாளர்களும், அவர்கள் படைத்த எழுச்சிமிக்க நூல்களுமே! அவை குனிந்து கிடந்தவர்களை நிமிர வைத்தது; உறங்கிக் கிடந்தவர்களை உசுப்பி விட்டது; ஆட்சியாளர்களை அலற வைத்தது.

1789 - பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தவை வால்டேர், ரூசோவின் நூல்களே! அதனால்தான் அவர்கள் ஆட்சியாளர்களால் வெறுக்கப்பட்டனர்; விரட்டப்பட்டனர்; வேட்டையாடப்பட்டனர்.

“பழமையை அழிக்கப் பிறந்தான் வால்டேர்; புதுமையைப் படைக்கப் பிறந்தான் ரூசோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். பழைய கட்டிடத்தை அடியோடு இடித்து விடுவதோடு நின்றுவிடாமல், புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப்பவும் திட்டம் தீட்டியவன் ரூசோ.

அவன் தீட்டிய நூல்கள் அக்கால ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு ஆபத்தாக இருந்தது. அவர் எழுதிய ‘எமிலி’யும், ‘சமுதாய ஒப்பந்த’மும் 1762இல் வெளியாயின.

‘எமிலி’ சமுதாயத்தின் பழைய மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடந்த கல்விமுறைக்கு பெரும் அடியாக இருந்தது. மதகுருமார்களும், மதவாதிகளும் கோபம் கொண்டனர். இதுபோன்ற புத்தகங்களை மட்டுமல்ல, அதை எழுதியவர்களையும் கூட தீயிட்டு கொளுத்த வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.

இது வெளியான 21ஆம் நாள் பாரிசிலுள்ள நீதிமன்றத்தின் முன் கொளுத்தப்பட்டது. அதன் ஆசிரியரைக் கைது செய்யும்படி பிரெஞ்சு நாடாளுமன்றம் ஆணையிட்டது. தலைமறைவாகி தப்பி ஓடினான் ரூசேர் ஒவ்வொரு நகரமும் தடையாணை பிறப்பித்து விரட்டியது.

1778 - அவன் இறந்து போனான். அதன் பிறகுதான் அவன் தேவையும், மதிப்பும் உலகம் உணர்ந்தது. அவன் இறந்து 11 ஆண்டுகள் கழித்துதான் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. அவனது உடல் குக்கிராம புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, மிகுந்த மரியாதையோடு பாரிஸ் நகரம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆபத்து எனக் கருதி தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நூல்களை அதே நாடும், மக்களும் வணங்கி ஏற்றுக்கொண்டனர்.

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரும் இதையே செய்தான். நல்ல நூல்களையும், அவற்றைத் தாங்கி நிற்கும் நூலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினான். இதன் தொடர்ச்சியாகவே இப்போதைய இலங்கையின் எதேச்சாதிகார அரசு பழைமையான யாழ்ப்பாண நூலகத்தையே எரித்து ஆனந்தக் கூத்தாடியது.

இந்தியாவிலும், தமிர்நாட்டிலும் புத்தகங்களுக்கு எதிரான போர் நடக்காமல் இல்லை. புரட்சிவீரன் பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூல் தோழர் ஜீவா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, பெரியாரால் வெளியிடப்பட்டது. அந்த நூலை ஆங்கில அரசு தடை செய்து அவரைக் கைது செய்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் புத்தகங்களும், பத்திரிகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. புலவர் குழந்தையின் இராவண காவியம், அண்ணாவின் ஆரிய மாயை முதலிய நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டன.

இவ்வாறு நூல்களுக்குத் தடை விதிக்க என்ன காரணம்? அறிவுக்கு உணவான நூல்கள் உண்மையை மக்களுக்கு உணர வைக்கிறது. அது பொய்யான கோட்டை கட்டி ஆட்சிபுரிகிறவர்களுக்கு ஆபத்தாகி விடும் என்று அஞ்சுகின்றனர்.

புத்தகங்களுக்கு தடை விதிப்பது என்பது அறிவுக்குத் தடை விதிப்பதாகும். இவ்வாறு அறிவுக்கு விதிக்கப்படும் தடை அதிக நாள் நீடித்து நிற்காது. அக்கினியை மூடி வைக்க முடியுமா? அது ஒருநாள் பற்றி எரிந்து பரவும் அல்லவா! அறிவு தரும் நூல்களும் அப்படியே.

புத்தகங்கள் என்பவை வெற்றுத்தாள்கள் அல்ல; வெடிகுண்டுகள்; எழுதப்பட்ட ஏவுகணைகள்; அறியாமையை அழிக்கும் ஆயுதங்கள், அவைகளில் மாபெரும் ஆற்றல் மறைந்து கிடக்கிறது. உண்மையைப் பேசும் புத்தகங்கள் அணுகுண்டுகளை விட ஆற்றல் மிக்கவை. அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்; ஆனால் இந்த நூல்கள் எடுக்கும் போதெல்லாம் வெடிக்கும்.

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” என்றார் ஒளவைப் பிராட்டி. நாம் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், பயனுள்ள நூல்களைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். இதிகாசங்கள் முதல் இக்கால நூல்கள் வரை படிக்க வேண்டும்.

படிக்கப் படிக்க வழிகள் தெரியும். எந்த வழியில் போவது எனத் தெரியாமல் தடுமரி நிற்பவர்களுக்கு இது ஒரு திசைகாட்டி. திசைகள் தெரிந்து விட்டால் தேடுவது கிடைத்துவிடும். இதற்கு நல்ல நூல்களைத் தேட வேண்டும்.

உலகத்தையே மாற்றியமைத்த கார்ல் மார்க்ஸ் படைத்த ‘மூலதனம்,’ மனித குல வரலாற்றைக் கூறும் ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கைவரை,’ மக்களுக்கு அகிம்சையையும் சத்தியத்தையும் அறிமுகப்படுத்திய மகாத்மாவின் ‘சத்திய சோதனை,’ ஆன்மிக உலகில் புரட்சி செய்யும் ஓஷோ, தன்னம்பிக்கைக்குத் தனிக்கொடி நாட்டிய காம்ப்மேயர் - இப்படி அறிவுப் பசிக்கு ஆயிரமாயிரம் நூல்கள்.

இந்தப் புத்தகக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும். முத்துக்கள் உடனே கிடைத்து விடுமா? சிப்பிகளே அதிகமாக இருக்கும்; கவனமாக இருக்க வேண்டும். புதிய உலகத்தைப் படைக்கும் புத்தகங்களைத் தேடிப் படிப்போம்.