படித்துப் பாருங்களேன்...

1.  குடியரசு : பெரியாரின் எழுத்தும் பேச்சும் (பெரியார் திராவிடர் கழகம், சென்னை - 41)

2. பெரியார் களஞ்சியம் குடிஅரசு: தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் எழுத்துகளும் சொற்பொழிவுகளும் (கால வரிசைப்படி) (டாக்டர் கி.வீரமணி டி.லிட்., செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்)

3.பெரியார் சிந்தனைகள், பெரியாரின் உரைகளும் எழுத்துக்களும், பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை - 5.

PeriyarKudi-Arasu 400காலனிய ஆட்சிக் காலத் தமிழ்நாட்டின் சமூக வரலாற்றை ஆராயப்புகும் எவரும் பெரியாரைப் புறக்கணித்துவிட முடியாது. ஒரு வகையில் பெரியாரின் வருகைக்கு முன், பெரியாரின் வருகைக்குப்பின் என்று பகுத்து ஆராய்வது கூடப் பொருத்தமான ஒன்றுதான்.

தன் அரசியல் வாழ்வை, தேசியவாதியாகத் தொடங்கிய பெரியார், பின் சமதர்மச் சிந்தனைக்கு ஆட்பட்டு, ‘சமதர்ம கட்சி’ என்ற இயக்கத்தை உருவாக்கி, ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, சமூக சீர்திருத்தவாதியாக நிலைத்து நின்றவர்.

காங்கிரஸ் இயக்கத்திற்குள் அவர் இருந்தபோதும்கூட சமூக சீர்திருத்தவாதியாகவே விளங்கினார்.

வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டியும், பிராமணிய மேலாண்மையை எதிர்த்தும் கோவில் நுழைவு உரிமை வேண்டியும், மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் அவர் குரல் எழுப்பிய போது காங்கிரஸ் இயக்கத்தில் தான் இருந்தார். வேறுபாடான காங்கிரஸ் காரராகவே அவர் காட்சியளித்தார்.

சுயமரியாதை இயக்கம் என்ற பெயரிலான இயக்கத்தைத் தோற்றுவித்த போதும், திராவிடர் கழகத்தை நிறுவிய போதும் மேற்கூறிய சமூக சீர்திருத்த உணர்வுகளைப் பரப்புவதிலும் செயல்படுத்துவதிலும் வடமொழி, இந்தி எதிர்ப்பிலும் தீவிரமாக முனைந்து நின்றார். தேசிய இயக்கத்தில் இருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொண்டது இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

சமூக விடுதலைக்கான அவரது போராட்டத்தை, தமது இறுதிமூச்சு வரை இடைவிடாது நடத்தினார். இதன் பொருட்டு மக்களிடம் தம் கருத்துக்களைக் கொண்டுசெல்ல அவர் பயன்படுத்திய கருத்தாயுதம் சொற்பொழிவுகள்தான். நூல்கள் என்ற வகையில்

அவர் எழுதிய நூல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவையும் கூட அளவில் சிறியவைதாம். அவர் எழுத்தாற்றல் கொண்டவர் என்பதை அவர் நடத்திய ‘குடியரசு’, ‘புரட்சி’, ‘விடுதலை’ ஆகிய இதழ் களில் அவர் எழுதிய தலையங்கங்களும், கட்டுரைகளும் சான்று பகரும்.

குறுநூல்கள் (Pamphlets) வெளியீட்டில் அவர் ஆர்வம் காட்டினார். சாதாரணமான தாளில், கவர்ச்சியற்ற மேலட்டை தாங்கிய குறுநூல்களை அவர் வெளியிட்டு வந்தார். தாம் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்களில் தமது இயக்கம் வெளியிட்ட நூல்களின் பெயர், அவற்றின் உள்ளடக்கம், விலை ஆகியனவற்றை அறிமுகப்படுத்தி அவற்றை வாங்கும்படி மக்களிடம் கூறிய பின்னரே தமது உரையைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது இயக்கத் தோழர்கள் அவர் குறிப்பிடும் நூல்களை அக்கூட்டத்தில் விற்பனை செய்வர்.

கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, சாதியழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண எதிர்ப்பு என்பன வற்றை மையமாகக்கொண்டு தான் ஆற்றிய சொற் பொழிவுகளை ஆவணமாக்குவதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே அவை அவர் நடத்திய பத்திரிக்கை களில் விரிவாக வெளிவந்தன. அதுபோல் அவரது கருத்துக்களுடன் தொடர்புடையனவற்றை சிறுகட்டுரை களாகவும், செய்திக்குறிப்புகளாகவும், தலையங்கமாகவும் எழுதி வெளியிட்டு ஆவணப்படுத்தி வந்தார்.

இவ்வாறு ஆவணப்படுத்தும் அவரது நோக்கத்திற்கு, தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருந்த எந்த இதழும் உதவாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தார். மேலே குறிப்பிட்ட அவர் நடத்திய இதழ்களே அவரது கருத்துக்களைத் தாங்கி நிற்கும் ஆவணங்களாக விளங்கின.

குடி அரசு

பெரியார் உருவாக்கி வளர்த்த இதழ்களில் குறிப்பிடத்தக்க இதழ் குடி அரசு. 1925ஆம் ஆண்டு மே இரண்டாம் நாளில் இருந்து வார இதழாக ஈரோடு நகரில் இருந்து வெளிவந்தது. இடையில் 1929இன் நடுப்பகுதியில் மட்டும் சென்னையில் இருந்து வெளியாகி, பின் 1930 இல் தொடங்கி 1949 இல் நின்று போகும் வரை ஈரோட்டில் இருந்தே வெளிவந்தது. இரண்டாம் உலகப்போரின் காரணமாக 1941, 1942 ஆண்டுகளில் குடி அரசு இதழ் வெளிவரவில்லை.

பொழுதுபோக்குத் தன்மைகொண்ட பத்திரிக்கை களில் இருந்து வேறுபட்ட பத்திரிக்கையாக விளங்கியது. இதில் வெளிவந்துள்ள கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோர் தம் குழந்தைகளுக்கு “குடி அரசு” என்று பெயரிட்டனர்.

பல முக்கிய சமூக நிகழ்வுகள் நடந்த காலத்தில் குடி அரசு இதழ் வெளிவந்துள்ளது. நீதிக்கட்சி, காங்கிரஸ் கட்சி என்பன தேர்தலில் வெற்றி பெற்று அன்றைய சென்னை மாநிலத்தில் ஆட்சி புரிந்தன. பிராமணர், பிராமணர் அல்லாதோர் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ண சமத்துவம் வேண்டல், தீண்டாமை எதிர்ப்பு, விவசாயிகள், தொழிலாளர்கள் எழுச்சி போன்ற சமூக எழுச்சிகள் நிகழ்ந்தன. இவை குறித்த அரசு ஆவணப் பதிவுகள் ஒரு பக்கம் இருக்க ‘குடி அரசு’ இதழில் பெரியார் தன் பங்கிற்கு ஆவணப்படுத்தியிருந்தார்.

இதனால் சமூக வரலாற்றாய்வாளர்களின் ஆவணத் தேடலில் “குடி அரசு” தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. சில தனி மனிதர்களிடமும், ஆய்வாளர் களுக்கான நூலகங்களுக்கும் சென்று குடிஅரசின்

பழைய இதழ்களைத் தேடிப் பிடித்து தம் ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் சமூக மாறுதலை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் படித்தறியவும், சுயமரியாதை உணர்வை மக்களிடம் ஊட்டவும் ‘குடி அரசு’ இதழ்கள் கிட்டவில்லை. இவ்வருந்தத்தக்க நிலையைப் போக்கும் வகையில் மரியாதைக்குரிய பெரியார் இயக்கவாதி களான, திரு.கி.வீரமணி, திரு.கொளத்தூர் மணி,  திரு.ஆனைமுத்து ஆகியோர் ‘குடி அரசு’ இதழ்களைக் கால வரிசையில் தொகுத்துப் பதிப்பித்துள்ளார்கள்.

இப்பதிப்புகள் பெரியாரை அவரது உரைகள், எழுத்துக்களின் வாயிலாக நமக்கு அறிமுகம் செய் கின்றன. நிகழ்காலத்தைக் கடந்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன. நம் மூதாதையர்பட்ட அவமானங்களை நாம் அறியும்படிச் செய்கின்றன. அத்துடன் சினங் கொள்ளவும் தூண்டுகின்றன.

இப்படி யெல்லாம் நடந்திருக்குமா என்று நம்மை வியப் படையச் செய்கின்றன. நமது எதிரிகள் யார் என்பதை இனங் காட்டுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரியாரின் பணி இன்றும் நமக்குத் தேவை என்பதை நாம் உணரும்படிச் செய்கின்றன.

periyar-kalagheyam 2 400‘குடி அரசு’ இதழ்களின் தொகுப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் விலையும் கூடுதலாக அமைவது தவிர்க்க இயலாத ஒன்று. அதற்காக அவற்றை வாங்குவதைத் தவிர்ப்பது நன்றன்று.

அனைத்துத் தொகுதிகளையும் வாங்க முடியாதோர் தம் ஆர்வத்திற் கேற்ப வாங்கும் வகையில் கடவுள் - மதம் - சாதி - தீண்டாமை என்ற தலைப்புகளில் ‘பெரியார் களஞ்சியம்’ என்ற பெயரில் பொருள் அடிப்படையிலான தொகுப்பு களை மரியாதைக்குரிய திரு.கி.வீரமணி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத் தக்கது.

பல தொகுதிகளாக வெளிவந்துள்ள பெரியாரின் எழுத்துக்கள், உரைகள் ஆகியனவற்றில் இருந்து சில பகுதிகளை இனிப் பார்க்கலாம். காலனி அரசின் பணிகளில் பிராமணர்களும் அவர்களை அடுத்த நிலையில் இருந்த வேளாளர்களும் மிகுதியான இடத்தைக் கைப்பற்றி இருந்தனர்.

இவ்விரு சாதியினரையும் விட எண்ணிக்கையில் அதிகமான பிற்படுத்தப்பட்ட சாதியினரும், ஒடுக்கப்பட்ட சாதி யினரும் வேலை வாய்ப்பில் உரிய பங்கின்றி இருந்தனர். இத்தகைய சமூகச் சூழலில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை வரவேற்று 26.10.1930ல் நாடார் முன்சீப்பு என்ற தலைப்பில் துணைத் தலையங்கம் ஒன்றைக் குடி அரசு இதழ் வெளியிட்டுள்ளது. அதன் தொடக்கப்பகுதி வருமாறு:

சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு.நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜிகளின் தயவினால் விருத்தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக்கொண்டார். இந்த கனவான் சுமார் ஒன்றரை வருஷத்திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர்.

இந்நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப்பட்டதன் மூலமே கிடைக்கப் பட்டதாகும். இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காரோதான் வந்திருப்பார். இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள். சப் ஜட்ஜியாகவே, ஜில்லா ஜட்ஜியாகவோ பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற் பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாடார் சமூகத்திற்கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை, சில கிறிஸ்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லிக் கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விடு கின்றார்கள்.

நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இனியாவது நாடார் மக்கள் கண் விழித்து, கிறிஸ்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களை கிறிஸ்தவர்களுக்குண்டான விகிதாசாரத்தில் பெற்றுக் கொள்ளும்படியும், தங்கள் சமூகத்தினற் குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிதம்பர நாடார் என்பவர் ராமநாதபுரம் தேவஸ் தானக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை வரவேற்று 21.12.1930இல் குடி அரசு இதழில் துணைத் தலையங்கம் எழுதியுள்ளார்.

25.10.1931 குடிஅரசு இதழில், ‘ஆதி திராவிடர் களுக்கு இந்துக்களின் துரோகம்’ என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது. தலையங்கத்தின் இறுதிப் பகுதி பின்வருமாறு முடிவடைகிறது.

“ஆதிதிராவிடர்கள் இனி இந்துக்களை நம்பு வதோ, காங்கிரசையோ, காந்தியையோ நம்பு வதோ ‘தான் சாக மருந்து குடிப்பதை’யே ஒக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம். கண்டிப் பாய் இனி ஆதிதிராவிடர்கள் அரசியலில் தனித் தொகுதி தேர்தல் முறையும், வகுப்புவாரி உத்தி யோக முறையும் இல்லாமல் இந்தியாவில் அரை நிமிஷம் கூட மனிதர்களாய் வாழ முடியாது.

ஆதலால் அவர்கள் தனித்து நின்றோ அல்லது தங்களுக்கு வேண்டிய உதவி அளிக்கக்கூடியவர் களுடன் கலந்தோ முயற்சி செய்து லட்சியத்தை அடையக் கவலை கொள்ளவேண்டியது அவசியம் என்றும் ஏமாந்துவிடக்கூடாது என்றும் தெரி வித்துக்கொள்கின்றோம்.”

‘தீண்டாதாருக்கு விமோசனம் முகமதியரைத் தழுவுவதை விட வேறு கதியில்லை’ - என்ற தலைப்பில் குடி அரசு 25.10.1931 இதழில் வெளியான கட்டுரையின் முடிவு இவ்வாறு அமைந்துள்ளது.

“ஆகவே எனதருமைச் சகோதரர்களே! தீண்டப் படாத சகோதரர்களே!! தெருவில் நடக்க, குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க - கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே!!!

நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டு மானால் ஒன்று:- இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள். இரண்டு: - முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை!! இல்லை!!!’’

23.10.1933இல் களத்தில்வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலுக்கா ஆதிதிராவிடக் கிருஸ்தவர்கள் மாநாட்டில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு 07.05.1933 குடி அரசு இதழில் விரிவாக வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதி பின்வருமாறு : -

“உங்கள் மதங்கள் எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் ‘பொறு பொறு’ ‘அவசரப்படாதே’, ‘ஆத்திரப்படாதே’ உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொறுமையோடு பொறுத்துக்கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல் லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறு மைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய், பொறுத்தார் பூமியாள்வார் என்றுதான் உபதேசிக்கும்.

இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாகக் கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன்தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்து கடவுளிடம் சன் மானம் பெற வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.

ஆகவே, செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில் பயன் பெறலாமென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத் திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள்.”

சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் பேருந்துகளில் இருந்த சாதிய அடிப்படையிலான தடை குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத்தின் தலைவராக இருந்த திரு.சவுந்தரபாண்டிய நாடார் அதை நீக்கி விடுவித்த உத்தரவு குறித்தும் 28.12.1930 இல் குடி அரசு இதழில் வெளியான செய்தி வருமாறு:

“இந்த ஜில்லாவிலுள்ள சில மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஆதி திராவிடர்களை தமது ‘பஸ் களில்’ ஏற்றிக்கொண்டு போவதில்லையென்றும் டிக்கட்டில், ‘ஆதிதிராவிடர்களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது’ என்ற நிபந்தனை ஏற்படுத்தியிருப்பதாயும் அறிகின்றோம். இவ் வழக்கம் பிரயாணிகளுக்கு இடைஞ்சல் உண்டு பண்ணத்தக்கதாகவும், மிக அக்கிரமமானதாகவும் இருக்கிறது.

periyar-aadhagal 400ஆகவே, மோட்டார் கம்பெனி முதலாளிகள் ஏதேனும் ஒரு சமூகத்தாரை பஸ்சில் ஏற்றிச் செல்ல மறுக்கவோ டிக்கட்டுகளில் மறுப்பு விதிகள் அச்சிடவோ செய்தால் அவர்களுடைய லைசன்சு முன்னறிக்கை கொடாமலே ரத்து செய்யப்படுமென இதனால் எச்சரிக்கை செய்கிறோம்.

இந்த சுற்றுக் கடிதம் கிடைத்து ஒரு வாரத்துக்குள் அந்தத் தடைவிதி நீக்கப்பட்டதா அல்லவா என்று சாம்பிள் டிக்கட்டுடன் ரிப்போர்டு செய்து கொள்ள வேண்டும்.”

இதுபோன்று சமூகம், மதம், பெண்ணடிமை சமூக சீர்திருத்தம், அரசியல், சாதி, தீண்டாமை அரசியல் தொடர்பான பெரியாரின் உரைகளும் கட்டுரைகளும் இத்தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் மா.நன்னன் “பெரியாரடங்கல்” என்ற தலைப்பில் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி பொருளடைவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் 13,763 தரவுகள் இடம் பெற்றுள்ளன. பெரியார் காலத்திய ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பிறந்த நாள் மலர்’களிலிருந்தும் இத் தரவுகளை அவர் தொகுத்துள்ளார். பெரியாரைப் பயில இந்நூலும் உறுதுணையாய் அமையும்.

இடைநிலை சாதியினரை முன்நிறுத்தி தீண்டா மைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவினரைப் பெரியார் புறக்கணித்தார் என்றும், இந்துமதத்தை மட்டுமே அவர் விமர்சனம் செய்தார் என்றும், இன்று முன்வைக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என்பதை இத்தொகுப்பை வாசிப்போர் உணர்வர்.

Pin It