உலகில் வாழும் அனைத்து வகையான உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இயல்புடையன. சுற்றுப்புறச் சூழல்கள் மனிதனுடைய வாழ்க்கைக்கும் மிக இன்றியமையாதவை. புறத்தில் உள்ள எல்லா வற்றிற்கும் எல்லாவற்றோடும் தொடர்பு உள்ளது என்பது சூழலியலின் முதல் கோட்பாடாகும். சுற்றுப்புறச் சூழல்களில் உள்ள உயிரினத்திற்கும் சமூகத்திற்குமான தொடர்பு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். உலக முழுவதும் இதுபோன்று மனித சமூகத்திற்கும் பிற உயிரினத்திற்குமான தொடர்பு காலம் காலமாகவும் தொடர் நம்பிக்கை கொண்டதாகவும் நிலவுகிறது. சான்றாகத் தமிழ்ச் சமூகத்தில் காக்கை, ஆந்தை, பல்லி ஆகியவை சகுனம் தொடர்பான நம்பிக்கை கொண்டதாக உள்ளன. இலக்கியங்களில் இவ்வகையான உயிரினம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

hen 600

இலக்கியம் மற்றும் சூழல்களையும் பிற துறைகளின் அணுகுமுறைகளால் அறிவியல் அடிப்படையில் சூழல் களை ஆய்வு செய்து தற்காலச் சூழல்களை மாற்றி அமைக்கவும் சூழலியல் திறனாய்வு வழிவகை செய்கிறது. 1990களின் மையப் பகுதியில் செரில் கிலாட்ஃபெல்டி மற்றும் ஹரால்டு ஃப்ரொம் (Cheryll Glotfelty, Harold Fromm) ஆகிய இருவரும் தொகுத்த தி எக்கோ கிரிட்டிசிசம் ரீடர் (The Ecocriticism Reader) என்னும் நூலும், லாரன்ஸ் பியூல் (Lawrence Buell) என்பவர் எழுதிய தி என்விரான்மெண்டல் இமேஜினேஷன் (The Environmental Imagination) என்னும் நூலும் சூழல் திறனாய்வு குறித்து ஆய்வு நூல்களில் முக்கியமானவை. சூழலியல் திறனாய்வு என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் வில்லியம் ரூக்கார்ட் என்பவர். இவர் 1978ஆம் ஆண்டு Literature and Ecology: An Experiment in Ecocriticism என்னும் கட்டுரையை வெளியிட்டு உள்ளார். ஆனால் அதற்குப் பிறகு இதனை யாரும் பயன்படுத்தவில்லை. 1989 ஆம் ஆண்டு Western Literature Association Meeting (WLA) இல் கல்லூரி மாணவியாக இருந்த செரில் கிலாட்ஃபெல்டியின் கட்டுரை மூலமாகக் சூழலியல் திறனாய்வு திரும்பவும் உயிர் பெற்றது.

சங்க இலக்கியத்தில் பதிவான கோழி என்னும் பறவை தொடர்பான செய்திகள் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தி, இலக்கியத்திற்கும் சூழல் பதிவுகளுக்கும் உள்ள தொடர்பும் அது எவ்வாறு சமூக தளத்தில் இனக்குழு அடையாளமாகவும், சமூக நம்பிக்கைப் பொருளாகவும், தொன்மத்திலும், சடங்குகளிலும் இடம்பெற்றுப் படிப்படியான வளர்ச்சிப்போக்குகள் அடைந்துள்ளன என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

கோழி: வேறு பெயர்கள்

சங்க இலக்கியத்தில் கோழி என்னும் சொல், ஊர்ப் பெயராகவும், புலவர் பெயராகவும், சோழ மன்னர்களின் பெயராகவும், முருகக்கடவுள் பெயராகவும், பறவையைக் குறிக்கும் பெயராகவும் வந்துள்ளது. கோழியும் அன்னமும் ஒருசார் பறவையாகும். ஆண் பறவையைக் குறிக்க சேவல் என்று சுட்டப்படுகிறது. கோழியின் வேறு பெயர்கள் நிகண்டுகளில் பதிவாகியுள்ளன. அவை சங்க இலக்கியத்திற்குப் பின் தோன்றிய இலக்கியங்களில் வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் கோழி என்னும் சொல் ஆண், பெண் இரு பாலையும் குறித்தே வந்துள்ளது. ஆண் பறவையைப் பிரித்துக் காட்டக் குடுமிக்கோழி, கூகைக்கோழி என அழைத்துள்ளனர். தலைப்பகுதியில் சிவந்த கொண்டை இதன் பாலை வேறுபடுத்திக் காட்டுவதால் செவ்+அல் சேவல் எனச் சொல்லாக்கம் பெற்றுள்ளதைச் சங்கப் பாடல்களில் வரும் சான்றுகள் சுட்டுகின்றன. நிகண்டு களிலும் சங்கப்பாடல்களிலும் காணப்படும் கோழியின் வேறு பெயர்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. (காண்க:இணைப்பு -1)

கோழியும் தமிழ்ச் சமூகமும்

சங்க இலக்கியத்தில் உறையூர் கோழி என்று சுட்டப்பட்டுள்ளது. உறையூரின் (திருச்சி) பழைய பெயராக இது இருந்திருக்கலாம்.1 பிசிராந்தையார் அன்னச் சேவலிடம் நீ சோழநாட்டை அடைவாயாயில் (கோழியில்) உள்ள உயர்நிலை மாடத்துத் தங்கிக் கோப்பெருஞ் சோழனிடம் சென்று யான் பிசிராந் தையின் அடியுறை எனக் கூறின் நின்பெடை அணியத் தக்க நன்கலன்களை நல்குவான். (புறம்.67:8-14) எனக் கூறுவதாகப் புறநானூறு சுட்டுகிறது. மருதநிலமான உறையூர் ஒரு காலத்தில் கோழி என்னும் பெயரால் வழங்கப்பட்டிருக்கலாம். அப்பகுதியில் வாழ்ந்த இனக்குழுவின் குலக்குறி2 அடையாளமாகக் கொள்ளலாம். சோழர்களையும் சோழ நாட்டையும் கோழி என்னும் பெயரால் அழைத்தற்கான குறிப்பும் சங்கப் பாடல்களில் உள்ளன. கோப்பெருஞ் சோழன் பாணர் சுற்றத்தினது பசிக்குப் பகையாய்க் கோழி யோன் என்று பிசிராந்தையார் பாடுகிறார் (புறம்.212:6-8). முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய / புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்தென் (சிலம்பு. நாடுகாண் காதை 247-248). என்னும் சிலப்பதிகார வரிகளிலும் அடியார்க்குநல்லார் உரையிலும்3 இனக்குழு அடையாளத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழலியல் திறனாய்வு இலக்கியத்தோடு பொருத்திப் பார்க்கின்ற போது ஊர், குடி போன்ற சங்க இலக்கிய மரபுகள் பல மீட்டுருவாக்க முடிகின்றன.

இரவில் வேட்டையாடும் பறவையைத் தவிரப் பிற எல்லாப் பறவை இனங்களும் விடியற்காலையில் ஓசை எழுப்புவது இயல்பு. அதிலும் குறிப்பாகக் கோழி அல்லது சேவல் வீட்டில் வளர்க்கப்பட்டதால் அது காலையில் எழுப்பும் ஒலி விடியலை மக்களுக்கு உணர்த்துவது என்னும் பொது நம்பிக்கையாக உலகம் முழுவதும் நிலவுகின்றது. பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த / நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப/ஏம இன்துயில் எழுதல் அல்லதை/வாழிய வஞ்சியும் கோழியும் போல/கோழியின் எழாதெம் பேரூர் துயிலே (பரி.தி.7:6-11) வேதமாகிய நான்மறையின் ஒலிகளைக் கேட்டு அல்லது கோழியின் ஒலிகேட்டு எழார் என்று பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரை மலரில் பிறந்தவன் பிரமன். அவனது நாவில் பிறந்தவை நான்கு வேதங்களும். அவற்றை நன்கு கேட்டு ஓதுகின்ற அந்தணர்களின் வேதக் குரல் ஒலி, அம்மதுரை மக்களை, மிகவும் இன்பமாகத் தூங்குகின்ற தூக்கத்தினின்றும் எழுப்ப, அவர்கள் எழுந்திருப்பர். இங்ஙனம் வேதவொலி கேட்டு எழுதலேயன்றி, வஞ்சி உறையூர் மக்களைப் போன்று கோழியின் குரல் கேட்டு அவர்கள் எழுதல் இல்லை’ என்பது அப்பரிபாடலின் கருத்தாகும்.

குறுந்தொகைப் பாடல் ஒன்றில் அறிவில்லாதோர் வானம் சிவக்க முல்லை மலரும் பொழுதை மாலை என்று வரையறுத்துக் கூறுகின்றனர். துணைவரைப் பிரிந்தவருக்குக் குடுமிக்கோழி (சேவல்) கூவும் விடியற்காலமே மாலைப் பொழுதாகும். (குறுந்.234) எனப் பதிவாகியுள்ளது. வளர்ப்பு விலங்காகக் கோழியை வளர்த்துள்ளனர் என்பது சங்கப் பாடல்களில் வரும் மனையுறை கோழி (அகம்.122:16), உமணரால் கட்டப் பட்ட கோழி கிடக்கும் கூடு (பெரும்.51-53) போன்ற சான்றுகளால் அறியலாம். வேதம் ஓதும் மறையவர் வீட்டில் கோழி, நாய் போன்றவற்றைச் சேர்ப்பதில்லை (பெரும்.288-301). என்னும் இயற்கைப் பதிவினைத் தொடர்ந்து, சங்க மருவிய கால அறஇலக்கியம் இதனை அறமாக வற்புறுத்தியுள்ளது. பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா (இன்னா.3:1) என்னும் இன்னா நாற்பதின் பதிவு ஒரு சமூக மாற்றம் பெற்றதைச் சுட்டுகிறது.

கோழியுடன் வளர்ப்பு விலங்காக இருந்தவை பற்றிப் பட்டினப் பாலையில் குறிப்பு உள்ளது. வீட்டின் வாயிலில் உலர்த்தப்பட்டிருக்கும் நெல்லினைத் தின்ன வரும் கோழிகளை மகளிர் தமது காதுகளில் இருக்கும் பொன்னால் ஆன அணிகளைக் கழற்றி வீசுவர். அதன் பின்னர் அக்குழை சிறுவர்கள் விளையாடும் சிறுதேர்ச் சக்கரங்களில் மாட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட வளமுடைய சோழ நாடு (பட்.22-24) குட்டிகளை யுடைய பன்றிகளுடன் பலவகையான கோழிகளும், உறை கிணறுகளும் உடைய புறச்சேரிகளில் ஆட்டுக் கிடாய்களுடன் சிவல் (கௌதாரி) விளையாடின (பட்.75-76). மனையுறை கோழி (அகம்.122:16) குறுங்கால் பேடை (குறுந்.139:1) ஆகிய சான்றுகளின் வழி வீட்டில் பெட்டைக் கோழிகளை வளர்த்துள்ளனர் என்பது சுட்டப்படுகிறது. காட்டில் உள்ள சேவல் என்னும் பதிவும் உள்ளது. சான்றாக, யாண ரூரன் றன்னொடு / வதிந்தவெம் மின்றுயி லெடுப்பி யோயே (குறுந்.107) என்னும் அடிகள் தலைவன் ஊரிலிருந்து என் இனிய துயிலை எழுப்பினாய் என்பது தலைவி தான் வாழும் பகுதியில் சேவல் இல்லை என்பதையே குறிக்கிறது. காட்டில் உள்ள கோழியின் கவர்ந்த குரலை உடைய சேவலின் புள்ளிகள் பொருந்திய கழுத்தில் நீர்த்துளி வரும்படி (குறுந்.242-4). என்னும் அடிகளும் முதுமரப் பொந்திற் கதுமென வியம்பும் / கூகைக் கோழியானாத் / தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே (புறம்.364) என்னும் அடிகளும் காட்டில் உள்ள கோழிகளையும் சங்கப் பாடல்கள் பதிவுசெய்துள்ளதைக் காட்டுகின்றன. கூகைக் கோழி என்பதற்குப் புறநானூற்று உரையில் காட்டுக் கோழி என உரை கூறப்பட்டுள்ளது. கானக்கோழி கதிர்குத்த / மனைக்கோழி தினைக் கவர (பொரு.222, 223) காட்டில் உள்ள கோழிகள் நெற்கதிரைத் தின்னவும், மருதநிலத்தின் மனையில் உள்ள கோழிகள் தினையைத் தின்னவும் எனப் பொருநராற்றுப்படையில் வருகின்றன.

சிலப்பதிகாரத்தில் வரும் கான வாரணம் (சிலம்பு.13:37) என்னும் சொல்லிற்குக் காட்டுக் கோழி என்றே அடியார்க்கு நல்லார் உரைப்பொருள் சுட்டியுள்ளது. இவை போன்ற அடிகளால் கோழிகள் காட்டிலும் வீட்டிலும் இருந்தன. இது தொடர்பாக இருவேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் மனையுறை கோழி மறனுடைச் சேவற் /போர்புரி யெருத்தம் போல என்னும் அகநானூற்றில் வரும் அடி வீட்டில் வளர்க்கப் படும் போர் செய்யக்கூடிய ஆண் கோழி அல்லது சேவல் என்னும் பதிவும் காணப்படுகின்றபடியால் சேவல் சங்க காலத்தில் வளர்ப்பு விலங்காகவும் இருந்தது என்னும் பதிவுகள் காணப்படுகின்றன. கி.பி.5,6ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் வட்டெழுத்தால் ஆன அரசலாபுரம் கல்வெட்டில்4 கோழி என்னும் சொல் பதிவாகியுள்ளது. இதில் குறிப்பாக மருதத்திணையில் வரும் கோழிகள் வீட்டுவிலங்காக இருந்துள்ளன. பிற திணைகளில் காட்டுவிலங்காகவும் வருவதை அறியமுடிகிறது. இவ்வகையான விலங்குகள் வளர்ப்பு விலங்காக மாற்றப்படுதல் ஒரு சமூக நிலை வளர்ச்சியைக் காட்டுகிறது.

கோழியின் இயல்பு

சேவற்கோழியின் தாடி தொங்குவது போன்று யாமரத்தின் கவைத்த ஒளி பொருந்திய தளிர் விளங்கும். (அகம்.187:17-15) கூரிய அலகினையும், தீப்பிழம்பு தளிர்த்தாற் போன்று அழகாகச் செறிந்த மயிரினையும் உடையது மனையுறை கோழி. அது போர் புரியும்போது அதன் கழுத்து மயிர்கள் செறிந்து காணப்படுவது போலச் செம்முருக்கின் பூங்கொத்து காணப்படுகின்றது. (அகம்.277:15-18) இவ்வகையான பதிவுகள் ஒன்றோடு ஒன்றினை ஒப்பிட்டு அடையாளப்படுத்திக் காணும் முயற்சி இலக்கிய ஆக்க நுட்பங்களாக இருந்தாலும், இந்த உயிரினங்களில் ஒன்று அழிந்தாலும் மற்றொன்றி லிருந்து மீட்டுருவாக்கிக் கொள்ளலாம். (மனையுறை கோழிக் குறுங்கால் பேடை. குறுந்.139.1) மனையில் உறையும் சிறிய கால்களை உடைய கோழியின் பேடை மாலைப்பொழுதில் காட்டுப்பூனை இனம் வரவே புகுமிடம் அறியாது ஒருங்கே கூடும் பொருட்டுத் தம் குஞ்சுகளை அழைக்கும். கோழி குக்கூ என்று கூவியது (குறுந்.157.) எனக் குறுந்தொகையில் காலைத் துயிலினை எழுப்பியதாகப் பதிவாகியுள்ளது. மணிநிற மஞ்ஞை, மணிமயில் என்னும் சொற்களாலும் கோழி அழைக்கப்பட்டுள்ளது. மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி (பரி.17-48) எனப் பரிபாடலிலும், மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம்.56-7) எனப் புறநானூற்றிலும் பதிவாகியுள்ளன. மணிநிறம் என்னும் போது கருமை என்னும் பொருளினையும் மணிமயில் என்பது சிறிய கோழி என்னும் பொருளினையும் விளக்கு வதாகவும் உள்ளன. மழை பெய்வதால் மண்ணில் நெளியும் மண்புழுவைக் காட்டுக்கோழி தன்பெடைக்கு ஊட்டும் (நற்.21:8-12) போன்ற குறிப்புக்கள் சங்கப் பாடல்களில் உள்ளன.

இலக்கியமும் சூழலியலும்

இலக்கியத்திற்கும் மனித செயல்பாடுகளுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பது போல் மனிதனோடு மிக நெருக்கமான தொடர்பு சுற்றுச்சூழலோடு அமைந் திருப்பது என்பது எதார்த்தமான பௌதிக உண்மை யாகும். உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுப் புனைவு இலக்கியப் படைப்பாக அமைந்தாலும், அந்த உணர்ச்சிகள் சுற்றுப்புறச் சூழல் பொருள்களிலிருந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.

குவியிணர்த் தோன்றி யண்பூ வன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்
கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
யாண ரூரன் றன்னொடு வதிந்த
வெம வின்றுயி லெடுப்பி யோயே (குறுந்.107)

கவிஞர்கள் தம்மைச் சார்ந்த உயிர்ப்பொருளினை இலக்கியப் படைப்புக்குள் பதிவு செய்வது இயல்பாக நிகழ்ந்தாலும் அவ்வகையான தரவுகள் ஒரு கால கட்டத்தினுடைய சூழல் உண்மைகளைச் சிறிய அளவிலேனும் வெளிப்படுத்தும். இங்கு விடியற் காலை இனிய துயிலை எழுப்புகிறது என்னும் பதிவு சங்க இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அதன்பின் தோன்றிய பிற இலக்கியங்களிலும் பதிவாகியுள்ளது. கானவாரணம் கனைக்குரல் இயம்ப (சிலம்பு.13:37) எனச் சிலப்பதிகாரத்திலும், கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் (திருவா1964:162,திருவெம்பாவை-8) பொழுது புலர்வதைக் கோழி முன்னரே அறிவிக்கும் அது கூவியவுடன் ஏனைய பறவைகள் எழுந்து ஒலிகள் எழுப்பும் எனத் திருவாசகத்திலும், கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் என முறைபற்றி அமைத்தார். குருகு- பறவைப் பொதுப்பெயர் எனத் திருவாசக உரையிலும் (திருவா.1964:454-455) குறிப்பிடப் பட்டுள்ளது. அதனைப் போல் திருப்பள்ளியெழுச்சி என்னும் பகுதியிலும் கூவின பூங்குயில், கூவின கோழி, குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம், ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து (திருவா.368, திருப்பள்ளியெழுச்சி-3) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.

மனையுறை கோழி மறனுடைச் சேவற்
போர்புரி யெருத்தம் போலக் கஞலிய
பொங்கழல் முருக்கின் ஒண்குரல் (அகம்.277.15-18)

போர்புரியும் கோழியின் கழுத்தில் உள்ள மயிர்கள் செறிந்து தீப்பிழம்புப் போல் காணப்படுவது போல் இங்குச் செம்முருக்கின் பூக்கொத்துகள் காணப்படு கின்றன என்பது அழகியல் சார்ந்த உணர்ச்சி வெளிப் பாடாக இருப்பினும் கோழி சங்க காலத்தில் என்ன நிறத்தில் இருந்தது என்பதை இன்று அறிந்து கொள்ளுதல் இயலாது. ஆயினும், இலக்கியப் பதிவான ‘செம்முருக்கின் பூவின் நிறத்தை வைத்துக் கோழியின் ஒரு வகை அல்லது அந்தப் படைப்பு வெளிப்படுத்துவது போல அந்தக் கோழியின் நிறம் சிவந்து இருந்தது என்பதை மீட்டுருவாக்கம் செய்யலாம். சங்க காலத்தில் குறிப்பிட்ட ஒருவகைக் கோழியின் நிறம் செம்முருக்கின் நிறத்தை ஒத்திருந்தது என்னும் முடிவுக்கும் வரலாம். இலக்கியமும் சுற்றுப்புறச் சூழலும் மிக நெருக்கமான தொடர்புடையவை. குறிப்பாகச் சங்க இலக்கியத்தின் கவிதை நுட்பங்கள் அது வெளிப்படுத்தும் சூழல் புனைவுகளிலே காணப்படுகின்றன. உள்ளுறை மற்றும் இறைச்சி போன்ற நுட்பங்கள் புறச்சூழல்களை மையமிட்டே இயங்குகின்றன. மனித சமூகம் தான் வாழும் சூழல் தன் வாழ்வைத் தீர்மானிப்பதால் அவற்றுடன் வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளதாலும் தன் உணர்ச்சிகளைப் புறச்சூழல்களில் உள்வாங்கிக் கொண்டவை கலை ஆக்கங்களில் இணைந்து பிரிக்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.

சங்க காலச் சமூகத்தில் கோழி என்னும் உயிரினம் பண்பாட்டுச் சூழலுக்கு மாறி வருவதை இலக்கியச் சான்றுகளின் வழி அறியமுடிகிறது. மக்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் சேவல் கூவுதல் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கோழி ஓர் இனக்குழுவின் அடையாளமாக மாறிவந்துள்ளது. சான்றாகச் சோழர் குடியைச் சுட்டலாம். அதன் பின்னர் இறைப் பொருளைக் குறிக்கும் தொன்மத்திற்குள் சென்று மறைந்துவிடுகிறது. முருகனுக்குச் சேவல் கொடியாக இருப்பதும் அதன் பொருட்டுச் சங்கப் பாடல்களில் அதனுடன் தொடர்புடைய சொற்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

சேவலங்கொடியன் (முருகு.210-211)
சேவலங்கொடியோய் (பரி.1-11)
சேவலங்கொடியோன் (குறுந்.க.வா.-5)
சேவலங்குயர்கொடி (பரி.4-38)
சேவலோங்குயர்கொடிச்செல்வ (பரி.13-41)
சேவலோங்குயர்கொடியோய் (பரி.4-37)
சேவலோய் (பரி.4.36)

இங்குச் சேவல் என்னும் சொல் முருகன் என்னும் இறைப்பொருளை உணர்த்துகிறது. பரிபாடலைத் தவிர பிற தொகை நூல்களில் வரும் முருகனைப் பற்றிய தொன்மத்தில் கோழி இல்லை. கோழி ஒரு குறிப்பிட்ட சூழலில் பழக்கப்பட்ட உயிரினம் மெல்ல மெல்லச் சமூக அடையாளங்களுக்கும் அதன் பின்னர், தொன்மக் கூறு அல்லது சடங்கியலுக்குள் சென்றது அதன் இயக்க நிலையைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் இதுபோன்ற நிலைகள் உள்ளன. தமிழர் சடங்கியலில் கோழி இடம் பெற்றுள்ளது. கோழி அறுத்தலும் கோழியை நேர்ந்து விடுதலும் சிறுதெய்வ வழிபாட்டில் மிக இன்றி யமையாத நேர்த்திக் கடனாகும். கூவும் கோழி மட்டுமே அறுப்பதற்குக் கொடுக்கப்படுகிறது. ‘ஊர்ப்புறங்களில் பொருள்களை அல்லது பணத்தைத் திருடியவனைப் பழிவாங்குவதற்குச் சிறுதெய்வக் கோயிலில் கோழி குத்துதல் என்னும் நிகழ்வு நடைபெறுகிறது. சிறு தெய்வக் கோயிலின் முன் சென்று திருடியவனின் பெயரைச்சொல்லி அவன் இந்தக் கோழியைப் போல் துடிக்கவேண்டும் எனக் கோழியைச் சூலத்தில் குத்தி வேண்டிக்கொள்கின்றனர். கழிபாடு அல்லது கழிப்புக் கழித்தல் என்னும் கிராமப்புற நம்பிக்கைக்குக் கறுப்புநிற கோழிக்குஞ்சு பயன்படுத்தப்படுகிறது4. மேலும் இரவில் முட்டையிடும் சாமக்கோழி வீட்டிற்கு ஆகாது என்றும் இன்றளவும் மக்களிடம் வழக்கில் உள்ளது. சனிக்கிழமை இறந்தோரின் பாடையில் கோழி கட்டப்படுகிறது. சமைத்த கோழிக்கறி இரவில் எடுத்துச்செல்லுவதால் பேய் பிடிக்கும் என இன்றும் ஊர்ப்புறங்களில் நம்பப் படுகின்றது. இதனை எடுத்துச் செல்லும்போது வீட்டைப் பெருக்கும் ஈர்க்குக் குச்சிகள் ஒடித்துப் போடப்படுகின்றன. கோழி தொடர்பான பலவகையான நம்பிக்கைகள் மக்களிடம் நிலவுகின்றன. நாட்டுப்புற வழக்காறுகளிலும் கோழி குறித்து இன்று பலவகைப் பொருண்மைநிலை உள்ளது. பொட்ட (பெட்டை) கோழி கூவி பொழுது விடியாது, படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால் கோழி முட்டும், கூரை ஏறி கோழி புடிக்க (பிடிக்க) தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது போன்ற நாட்டுப்புற வழக்காறுகளிலும் இதுபோன்ற நம்பிக்கைகள் வழக்கில் உள்ளன.

கோழி கூவும் நேரம் : பொழுது விடியும் நேரம் அல்லது அதிகாலையை உணர்த்துகிறது
கோழித்தூக்கம் : குறைந்த நேரம் தூங்குவது.
கோழி முட்டை : தேர்வில் பூஜ்யம் வாங்கி யதைக் குறிக்கிறது.

(தற்காலத் தமிழ் மரபுத்தொடர் 2004:153--154) போன்ற மரபுத்தொடர்களிலும் கோழி இடம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது.

தத்துவப் பாடல்களிலும் கோழி என்னும் உயிரினம் பல்வேறு பரிமாணம் எடுத்துள்ளதை அறியமுடிகிறது. பிற்காலச் சித்தர் பாடல்களில் ஒன்றான கொங்கணச் சித்தர் பாடலில் கோழிக்கு ஆறுகால் என்று சொன்னேன் (கொங்.97) என்று தத்துவப்பொருள் உணர்த்த வந்துள்ளது. சங்கப் பாடல்களில் தன்னைச் சார்ந்து நிலவும் சுற்றுப்புறச் சூழல்களை மிக நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு

1. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வடசர்க்கார்க் கோட்டங்கள் சோழர் அரசாட்சியின்கீழ் இருந்தன என்பது குறிப்பிடற்பாற்று. சோழர்களின் பழைய நாடு காவிரிக் கரையிலுள்ள செழுமை வளம் நிறைந்த தஞ்சை திருச்சிக் கோட்டப் பகுதிகளாகும். பின்னர் அவர்கள் காவிரிக்கு வடக்கேயுள்ள தமிழ்நாடு முழுவதையும் ஒரு காலத்திற் கட்டி ஆண்டு வந்தனர். அவர்களுடைய தலைநகரம் முதலில் உறையூர்ப் பதியாம். உறையூர் உறைவிடம் என்றே பொருள்படுதல் காண்க. இவ்வூருக்குக் கோழி என்னும் ஒரு பெயருண்டு. (கண்ணுசாமி பிள்ளை 1949:27)

2. Complex of ideas and practices based on the belief in kinship or mystical relationship between a group (or individual) and a natural object, such as animal or plant. The term signifying a blood relationship. A society exhibits totemism if it is divided into an apparently fixed number of clans, each of which has a specific relationship to an animate or inanimate species (totem). A totem may be a feared or respected hunted animal or an edible plant. Very commonly connected with origin myths and with instituted morality, the totem is almost always hedged about with taboos of avoidance or of strictly ritualized contact.)

3. முற்காலத்து ஓர் கோழி யானையைப் போர் தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார், புறத்தே இறகினையுடைய கோழி புறத்தே சேரிகளை யுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்கு நல்லார். (சிலப்பதிகாரம் 1953:249)

4. முகையுரு மேற்சேரி(கு) யாடிக் கருகிய கோழி (112 அரசலாபுரம் கல்வெட்டு)
கீழ்ச் சேரிக் கோழி (பொ)ற் கொற்றி (113 இந்தளூர் கல்வெட்டு)
(பொற்கொற்றி கோழி - the fighting cock), Iravatham Mahadevan, 2007:468

5.தகவல் வழங்கியவர்: இரா.அருள்மணி, பங்களாபுதூர், கோபிச்செட்டிப் பாளையம்.
குக்குடம், சேவல், வாரணம்,கோழி (திவாகரம் - 142)
குக்குடம், குருகு, வாரணம், கோழி (பிங்கலம் - 36)
கோழி, கூகை, பெண் (பெயர் அல்லன
ஆராயுங் காலை அளகு) என அறையார் (திவாகரம் -143 )
கிரவுஞ்சங் கோழிப் பறவை அளவு ஆகும் (பிங்கலம் 4:271)
கம்புள் என்ப சம்பங் கோழி (பிங்கலம் 38)
கதம்பம் கானாங் கோழி (பிங்கலம் 40)
சிரல், கவுதம், பொன்வாய்ப்புள் தித்திரி சிச்சிலிப் பேர்
கருதிய பெரும் புள்ளோடு கௌசிகம், ஊமன், கூகை
குருகு, காலாயுதம், போர்க் குக்குடம் ஆண்டலைப் புள்
பெருகு வாரணம் என்று ஐந்தும்பேசிய கோழி ஆமே. (சூடா.நிக.58)

இணைப்பு-1

நிகண்டுகளில் கோழியின் வேறு பெயர்கள் அட்டவணை

சங்க இலக்கியம்

திவாகரம்   

பிங்கலம்

சூடாமணி

கானக்கோழி (புறம்.395)

குக்குடம்

கதம்பம்கானாங் கோழி

ஊமன்

கானவாரணம் (நற்.21.8)         

கூகை

கம்புள் சம்பங்கோழி

கவுதம்

குக்குடம் (நான்மணி)

கோழி

கிரவுஞ்சம்

காலாயுதம்

குடுமிக்கோழி(குறு.234.)

சேவல்

குக்குடம்    

குக்குடம்    

குக்குடம் (பரி.19.36)

வாரணம்

குருகு

குருகு

கூகைக்கோழி(புறம்.364.12)

           

கோழி

கூகை

சிவல் (கௌதாரி) (பட்.77)       

           

வாரணம்

கௌசிகம்

நீர்க்கோழி (புறம்.395)

 

           

கோழி

நீருறைக்கோழி(ஐங்.113.)       

   

சிச்சிலி

மணிநிறமஞ்ஞை(பரி.17.48)  

   

சிரல்

மணிமயில்உயரிய(புறம்.56.7)           

   

தித்திரி

மனைக்கோழி (புறம்.395)

   

பொன்

மனையுறை கோழி(புறம்.395)           

   

வாய்ப்புள்

மனையுறைகோழி(அகம்.122:16)

   

வாரணம்

இணைப்பு - 2

கோழியுடன் இணைத்துக் கூறப்படும் உயிரினங்கள்

கோழி

ஒப்புமை

சேவற்கோழியின்  தாடி

யாஅ மரத்தின்தளிர்

அலகு

கூர்மை

கோழியின் மயிர்

தீப்பிழம்பு

கழுத்து மயிர் போர் புரியும்போது

செம்முருக்கின்

பூங்கொத்து

கோழி கூவியது

குன்று அதிர்ந்தது

கோழி பெட்டை

காட்டுப் பூனையைக் காண அஞ்சும்

கோழி கூடு

தினைகாக்கும் பரண்

நீலநிறம்

கானாங்கோழி

கோழி          

விட்டில்பூச்சி

(அப்பர் தேவாரம்)