மிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் சதக இலக்கியமும் ஒன்றாகும். சதக இலக்கியங்கள் மக்களுக்குத் தேவை யான அறக்கருத்துக்களை எடுத்து இயம்புகின்றது. வாழ்வியலின் எல்லாக் கூறுகளையும் இயன்ற அளவில் உணர்த்துவதோடு மனிதனின் அன்றாடத் தேவைகளுள் ஒன்றான உணவுப் பண்பாட்டு முறைகளை மிகுதியாகச் சுட்டிச் செல்கிறது. அகத்தூய்மையளிக்கும் அறநெறி களைக் கூறுதலோடு, புறத்தூய்மையாகிய உடல் நலம் பேணுவதற்குரிய உணவில் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை ஆகிய செய்திகளும் இச்சதக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

உணவுப் பண்பாடு

விருந்தோம்பல் தமிழரின் பழமையான பண்பாட்டு நெறிகளுள் ஒன்றாகும். தமிழர்கள் பண்டைக்காலம் முதல் விருந்தைப் போற்றி வந்திருக்கின்றனர். அவ் வகையில், விருந்தின் தன்மையை முதலில் போற்றியவர் வள்ளுவர் ஆவார். விருந்தினர்கள் அனிச்ச மலரினும் மென்மையானவர்கள் என்று வள்ளுவர் மொழிவது குறிப்பிடத்தக்கது. விருந்தோம்பல் என்பது இல்லறத் தாரின் உயர் பண்பாகச் சமூகத்தால் இனங்காணப் பட்டது.

நட்புடன் இல்லம் தேடி வந்த விருந்தினர்களுக்கு முதலில் உணவிட்டு அன்புடன் உபசரித்த பின்பு விருந்தினர் இன்னும் வருபவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து உண்பார்களேயன்றி விருந்தில்லாமல் உண்ணும் உணவை மருந்தாகவே கருதுவார்கள் என்பதை,

“...................உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரம் செய்தனுப்பி
இன்னுமெங்கே பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா
துணுஞ்சோறுமருந்துதானே”
(தண்ட.சதகம்.பா.9,ப.14)

என்ற தண்டலையார் சதகப் பாடல் எடுத்துரைக்கின்றது. இக்கருத்து,

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று”
(குறள்.82, ப.22)

விருந்தினர்கள் புறத்தே இருக்கத் தாங்கள் மட்டும் உணவை உண்ணுதல் கூடாது. உயிர் நீங்காமைக்குக் காரணமாகிய அமுதாயினும் பகிர்ந்து கொடுத்தே உண்ண வேண்டும் எனும் திருக்குறள் கருத்துடனும்,

“விருந்தில்லாச் சோறு மருந்து” எனும் பழமொழியுடனும் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.

உணவு உண்ணும் முன் செய்யவேண்டியவைகள்

உணவினை உண்ணும் முறையில் மனிதன் பல்வேறு பண்பாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்படியும் எதையும் உண்ணலாம் என்ற எண்ணத்தைக் கைவிடுதல் வேண்டும். மனிதன் உணவினை உண்ணும்பொழுது உடல் நலனுக்குத் தேர்ந்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். காய்ச்சின பால், கட்டித் தயிர், நீர் மோர், உருக்கிய நெய், வழுக்கை உடைய இளநீர் இவை போன்ற உணவினை உண்பது உடலுக்கு நலம் பயக்கும் என்பதனைக் குமரேச சதகம்,

“முற்றுதயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கையிள நீர்”
(குமரேச சதகம்.பா19, ப.26)

என்ற இப்பாடலின் மூலம் தெளிவுறுத்துகிறது.

விருந்துக்கு ஏற்ற நாட்கள்

திங்கள், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் விருந்துக்குச் சென்று உணவு உண்ண உறவு ஏற்படும்; நன்மையும் உண்டாகும், நலம் பல பெருகும். இந்த நாட்களே விருந்துக்குச் சென்று உணவு உண்ணச் சிறந்த நாள்களாகும். ஞாயிற்றுக்கிழமை விருந்து உண்ணவோ விருந்திடவோ கூடாது. அவ்வாறு செய்தால் பகை வரும். அதுபோன்றே செவ்வாய்க் கிழமையும் நலம் பயக்காது. வியாழக்கிழமை விருந்துண்டால் அதிகமான பகை உண்டாகும். எனவே, நல்ல நாளில் விருந்து உபசரித்தல் நலம் பெருகும் என்பதை அறப்பளீசுர சதகம் (பா.68, ப.77)ல் மொழிகின்றது. இது அக்கால மக்களின் பண்பாடாக இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலைகளில் உணவு உண்ணுதல்

உணவினை எல்லா இலைகளிலும் உண்ணுதல் கூடாது. அது தீயதாக அமையும். வாழை, புன்னை, புரசு, குருக்கத்தி, மா, பலா, தென்னை, பன்னீர் போன்ற இலைகளில் உணவு உண்ணலாம். அரச இலை, வனசஇலை, பாடலம் இலை, தாழை இலை, அத்தி இலை, ஆலம் இலை, எரண்டபத்திரம் இலை, சகதேவனம் இலை, முள்முருங்கை, எருக்கு ஆகிய இலைகளில் உணவு உண்ணுதல் கூடாது. மேலும் பிறர் உண்ட எச்சில் இலைகளிலும் உணவினை உண்ணக் கூடாது. இதனை,

“.................. அத்தி ஆல் எரண்டபத்திரம்
சகதேவம் முள்முருங்குச்
சாருமிவை அன்றி, வெண்பாலெருக்கு இச்சில்இலை
தனினும் உண்டிடவொணாதால்”
(அறப்.சதகம்.பா.73,ப.82)

என்ற அறப்பளீசுரசதகத்தில் உள்ள பாடல் வலியுறுத்து கின்றது.

உணவினை இறைவனுக்குப் படைத்து உண்ணல்

உணவு உண்ணும் இடத்தில் திருமெழுக்கிட்டு தூய்மை செய்து கிழக்கு முகம் நோக்கி நன்கு அமர்ந்து பரிமாறப் பெற்ற உணவின் மீதும், அதனைச் சுற்றி வலப்பக்கமாக வட்டமாகத் தரையிலும் மந்திரங்களை ஓதி நீரைத் தெளித்தல் வேண்டும். பின்னர், நெய்யிட்ட உணவினை இலையின் வலப்புறத்தில் ஐந்து பிடி வைத்து மந்திரம் சொல்லி இறைவனுக்குப் படைத்து விட்டு உண்ண வேண்டும் என்ற கருத்தினை அண்ணா மலை சதகத்தில் இடம்பெற்றுள்ள,

“புரோட்சித் துடன்வலப்பால்
வாசநற நெய்யன்ன மைந்துபிடி பலிவைத்து
மந்திர நவின்று நன்னீர்”
(அண்ணாமலை சதகம்., பா.63, ப.106)

எனும் பாடலின் மூலம் ஆசிரியர் சுட்டிக் காட்டி யுள்ளார்.

இதே கருத்தினை,

“........................ மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்ப ஊண்”
(ஆசாரம்., பா.39, ப.629)

என்று ஆசாரக்கோவைப் பாட்டில் எடுத்துரைப்பது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

உணவினை உண்ண வேண்டிய முறைகள்

எப்படி இருந்தும் உணவினை உண்ணலாம் என்பது தவறு. உணவினை முறைப்படி அமர்ந்து உண்ணுதல் வேண்டும். இலைபோடும் இடத்தை மெழுக்கிட்டுக் கிழக்கு முகமாய் இலை முன் அமர்ந்து, பரிமாறப்பெற்ற உணவின் மீது சிறிது நீர்தெளித்து, நீரை இலைப் பகுதியின் வலமாகச் சுற்றிச் சிறிதளவு நீரை வாயில் உணவாக அருந்தி மிகுதியுள்ள நீரைச் சிறு விரலின் வழியாகத் தரையில் இடவேண்டும். பின்னர் சிறிது உணவை எடுத்துப் பிற உயிர்களுக்கு இட்டு உணவை உட்கொள்ள வேண்டும். பின்னர் மிஞ்சிய நீரைச் சிறிது பெருவிரல் வழியாக விட்டு எழுதல் வேண்டும். இஃது சைவ நெறியாகும் என்பதனை அண்ணாமலை சதகத்தில் இடம்பெற்றுள்ள,

“போசனம் செயுமிடம் திருமெழுக் கிட்டுப்
பொருந்திய கிழக்கு முகமாய்ப்
பொற்பாய் இருந்திட்ட அடிசின்மேல் உதகம்”
(அண்ணாமலை சதகம், பா.63,ப.106)

எனும் பாடல் தெளிவுறுத்துகிறது. இதனுடன்

“உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து”
(ஆசாரம் பா.20, ப.622)

என்ற ஆசாரக்கோவை பாடற்கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. உணவு உண்ணும் போது கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும் என்ற செய்தியை இதன் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.

உண்டபின் செய்ய வேண்டியவை

உணவு அருந்திய பின்னர், ஆசமனம் செய்து வடக்கோ கிழக்கோ நோக்கி ஆசனத்தில் இருந்து வாதாபி ஆகிய அசுரர்களை அழியுமாறு வயிற்றைத் தடவி, அவர்களைச் சீரணம் செய்த அகத்தியரைத் தியானம் செய்து, எள் அளவு திருநீறு அருந்தியும், நெற்றியில் தரித்தும் உள்ளத்தில் தேர்ந்தும், காற்றை உள்ளே இழுத்துப் பிராணாயாமம் செய்தும், நா அசையாது மௌனமாக இருபத்தோரு முறை மந்திரத்தை மனத்திற்குள் செபித்து மகிழ்ந்திருத்தல் வேண்டும். இதுவே, இல்லறத்தார் கடைப்பிடிக்கும் நெறியாகும். இதனை அண்ணாமலை சதகத்தில் இடம் பெற்றுள்ள,

“போஜனம் செய்தபின்பு ஆசமனமும் செய்து
பொற்புடன் வடகிழக்கும்”
(அண்ணாமலை சதகம், பா.64,ப.107)

என்ற பாடலின் மூலம் அறியமுடிகின்றது.

உணவினை உண்டபின் நீர் குடித்தல், உலாவுதல் போன்றவை உடலுக்கு நலம் தருபவையாகும். இதனைக் குமரேச சதகத்தில் இடம்பெற்றுள்ள,

“................. புசித்த பின்
தாகந் தனக்கு வாங்கல்
தயையாக உண்டபின் உலாவலி வைமேலவர்
சரீரசுகம் ஆ மென்பர் காண்”
(குமரேச.சதகம்., பா.19.ப-26)

என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

மனிதர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் சிலவற்றைத் தவிர்த்தால் உடல் நலம் பயக்கும். அவர்களை நோய் அணுகாது. விலைக்கு வாங்கும் பால், ஆட்டுப்பால், காராம் பசுவின் பால், காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, கருகிய சோறு, சிறுகீரை, பீர்க்கு, அத்தி, வெண்ணிறமான உப்பு, தென்னை வெல்லம், பிண்ணாக்கு, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பெருங்காயம், கத்திரிக்காய், அகால காலத்து உணவு இவை அனைத்தையும் ஒழுக்கம் உடையவர்கள் விலக்க வேண்டும். விலக்கினால் நலம் பெருகும். இதனை அறப்பளீசுர சதகத்தில் இடம்பெற்றுள்ள,

‘கைவிலைக்குக் கொளும்பால், அசப்பால், வரும்
காராக் கறந்த வெண் பால்,
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு,
காந்திக் கரிந்த சோறு”
(அறப்.சதகம், பா.65, ப.74)

என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது.

உண்ணுவதில் ஏற்படும் குற்றங்கள்

பந்தியில் உணவை இரும்புக் கரண்டியில் பரிமாற உண்ணல், இலையில் இடப்பட்ட காய்கறியை மீண்டும் வேண்டிப் பெற்று உண்ணல், மாலையிலும், நடுஇரவிலும் தயிர்ச்சோறு உண்ணுதல், மண்பாத்திரம், தகரம், உடைந்த பாத்திரம் இவற்றில் உண்ணல், உள்ளங்கையில் பெற்று உண்ணல் நின்றுகொண்டே உண்ணுதல் போன்றவை உணவு உட்கொள்வதில் காணப்பெறும் குற்றங்களாகும் என்று அண்ணாமலை சதகம் (பா.62, ப.106)ல் இயம்புகிறது.

நோய் ஏற்படும் வழிகள்

உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். அதில் தேவையற்ற பொருள்கள் கலந் திருத்தல் கூடாது. உண்ணும் உணவில் கல், மயிர், கலந்திருப்பது, அதிக உணவு உண்பது, அதிகமாகக் கனிந்த கனி, பழைய காய்கறிகளை உண்ணுதல், உணவில் நெல்லும், உமியும் கலந்திருத்தல், உணவினை உண்டபின் நீராடல், இரவில் கள், தயிர், கீரை ஆகியன உண்ணுதல் இவை எல்லாம் கொடுமையான நோய் உண்டாக வழி ஏற்படுத்துவனவாகும். இத்தகைய உணவுகளை உண்ணுதல் கூடாது. இதனைக் குமரேச சதகம்,

“கனிபழங் கறி உண்ணலால்
நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்”
(குமரேச சதகம்.பா.30, ப.39)

என்று சுட்டிக்காட்டுகிறது.

அடிக்கடி நீர் பருகுதல், சிற்றுண்டிகள் உண்ணுதல், சிறிது உண்ணுதல், அதிகம் உண்ணுதல் முதலியவையும் நோய்க்கு இடம்தரும். இதனை,

‘........................ நீரடிக் கடி பருகல்
சாதங்கள் பல அருந்தல்
சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி
தனக்கிடம் எனப்பருகி டார்”
(அறப். சதகம், பா.73, ப.82)

என அறப்பளீசுர சதகம் எடுத்துரைக்கிறது.

முடிவுகள்

1. மனிதன் உயிர் வாழ உணவு இன்றியமையாததாகும். அவ்வாறு மனிதனின் அன்றாடத் தேவைகளுள் ஒன்றான உணவில் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றிய செய்திகளை சதக இலக்கியங்கள் எடுத்துரைக் கின்றன.

2. விருந்தோம்பல் பண்பாடு பற்றித் தண்டலையார் சதகம் மொழிகின்றது.

3. உணவினை உண்ணும் பொழுது இறைவனுக்குப் படைத்து விட்டுப் பின்னர் உண்ணல் வேண்டும் என்பது பற்றியும், உணவினை உண்ண வேண்டிய முறைகள் பற்றியும் அண்ணாமலை சதகம் வலியுறுத்துகிறது.

4. உணவில் உடல் நலனுக்கு ஏற்றவை எது என்பது பற்றியும், உண்ணும் பொழுதும், உண்டபின்பும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைப் பற்றியும் குமரேச சதகம் மொழிகின்றது.

5. விருந்துக்கு ஏற்ற நாட்கள் பற்றியும், நன்மை தரும் இலைகளில் உணவு உண்ணுதலால் நலம் பயக்கும் செய்திகளையும் அறப்பளீசுர சதகத்தின் மூலம் அறியமுடிகின்றது.

6. ஒழுக்கமுடையவர்கள் உணவில் விலக்கத்தக்கவை பற்றி அறப்பளீசுர சதகம் தெளிவுறுத்துகிறது.

7. உணவு கொள்வதில் காணப்பெறும் குற்றங்கள் பற்றிய செய்திகளை அண்ணாமலை சதகம் கூறுகிறது.

8. வியாதிக்கு மூலங்கள் பற்றியும் நோய் ஏற்படும் வழிகள் பற்றியும் குமரேச சதகமும், அறப்பளீசுர சதகமும் எடுத்துக்கூறுகிறது. மனிதனுக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கைக்குப் பஞ்சமில்லை. முறையான உணவு உண்ணும் முறையினைப் பேணுவதன் மூலம் நோயிலிருந்து விலகி வாழ்காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.

சான்று நூல்கள்

1. அண்ணாமலை சதகம், வ.த. இராமசுப்பிரமணியம், (உ.ஆ.), நல்லறப்பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு -1997.

2. அறப்பளீசுர சதகம், கதிர்முருகு, (உ.ஆ.), சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - அக்டோபர் 2009.

3. குமரேச சதகம், கதிர்முருகு, (உ.ஆ.), சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - நவம்பர் 2009.

4. தண்டலையார் சதகம், கதிர்முருகு, (உ.ஆ.), சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - அக்டோபர். 2009.

5. திருக்குறள் (பரிமேலழகரின் உரை), சாரதா பதிப்பகம், சென்னை, ஆறாம் பதிப்பு - நவம்பர், 2006.

6. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும், தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், தமிழ் நிலையம், சென்னை, புதிய பதிப்பு, அக்டோபர் - 2007.

Pin It