ponnelam 360கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இருக்கும்.

ஒரு இலக்கிய விழாவில் கலந்துகொள்வதற்காக

நான் கோழிக்கோடு சென்றிருந்ததாக நினைவு.

அந்த விழாவுக்குத் தலைமைதாங்கக்

கவிஞர் ஓ.என்.வி. குரூப்பும் வந்திருந்தார்.

காலை 8 மணி இருக்கும். நாங்கள் இருவரும்

எங்கள் அறைகளிலிருந்து இறங்கி,

சாயா சாப்பிடுவதற்காக உணவு

மண்டபத்தினுள் நுழைந்தோம்.

வெள்ளை அரைக்கைச் சட்டை அணிந்து, வேட்டியை தெக்கத்திப் பாணியில்

மடித்துக் கட்டியிருந்தார் ஓ.என்.வி.

கிட்டத்தட்ட 500 பேர் உணவு அருந்தக்கூடிய பிரம்மாண்டமான மண்டபம் அது.

முக்கால் பகுதி இருக்கைகளில் ஆண்களும் பெண்களும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், உள்ளே வந்த ஓ.என்.வி.யைக் கண்டதும் அத்தனை பேரும் அமைதியாக எழுந்து நின்றார்கள். யாரும் யாருக்கும் வணக்கம் சொல்லவில்லை.

வாழ்க சொல்லவில்லை. ஒருவித மரியாதையோடு நின்றுகொண்டிருந்தார்கள்.

ஓ.என்.வி. ஒரு நாற்காலியில் உட்கார்ந்ததும், அவர்களும் தங்கள் ஆசனங்களில் உட்கார்ந்து, சாப்பாட்டைத் தொடர்ந்தார்கள்.

பார்த்துக்கொண்டிருந்த என்னால்

ஆச்சரியத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளருக்கு

இப்படிப்பட்ட அமைதியான மரியாதை கிடைக்குமா? இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், இங்கு வைரமுத்துவையோ அல்லது அவரைப் போன்ற பிரபலமான ஒருவரையோ தமிழ் மக்கள் சூழ்ந்து, கத்தி, நசுக்கிக் கசக்கிப் பிழிந்து விடமாட்டார்களா?

மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் இவ்வளவு

வேறுபட்டப் பண்பாடுகளா?

அதன்பின் ஓ.என்.வி.யும், நானும் இணைந்து

பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறோம்.

பல கவிதை நிகழ்வுகளில் அவர் கவிதைகளை மக்கள்முன் பாடுவதை, மக்கள் அதை அள்ளி அள்ளிப் பருகுவதைப் பார்த்து நம்பமுடியாமல் திணறியிருக்கிறேன். கவிஞர் கந்தர்வன்

ஒருமுறை இப்படிச் சொன்னதாக நினைவு. “இலக்கியம் என்பது சாதாரண நேரங்களில் சூடிக்கொள்வதற்குரிய மலராக இருக்க வேண்டும். ஆனால் போர்ச்சூழல்களிலோ, எதிரிகளின்மீது

நாம் வீசுகின்ற எறிகுண்டாக அது மாறவேண்டும்.” கந்தர்வன் சொன்னது இந்தியா போன்ற வர்க்க, மற்றும் அடையாளப் பிளவுகள் தீவிரமாக

மோதுகிற ஒரு நாட்டின் கலை இலக்கிய வடிவமைப்புக்குச் சிறப்பாகப் பொருந்துகின்ற

ஒரு அருமையான விளக்கம்.

இந்த விளக்கம் கேரளத்தைப் பொறுத்தவரையில் கவிதைத் துறையின் விளக்கமாக இயல்பாகவே,

வெகு காலமாக அமைந்துள்ளது.

கேரளத்துக் கவிஞர்கள் தங்கள் பாடல்களை மேடைகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கேட்டு அனுபவிக்கும்படி உணர்ச்சியோடு பாடுகிறார்கள். அவர்கள் பாடல்கள் அகவல் இசையிலோ,

விருத்த இசையிலோ அமைகின்றன.

கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாருமே

அந்த ஓசையிலும், கருத்திலும்

மயங்கிக் கரைந்துவிடுகிறார்கள்.

தனியாக வாசித்து ரசிக்கவும்

அவை பொருத்தமானவைதான்.

தமிழ்நாட்டில் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் இந்தப் பாணியைப் பின்பற்றி வெற்றி கண்டவர்.

இப்பொழுதெல்லாம் நம் நாட்டுக் கவிதையானது தன் சமூக எழுச்சி ஆற்றலைப் பெருமளவுக்கு இழந்து, சுய வாசிப்பு இன்பத்துக்குரியதாகத் தனிமைப்பட்டுச் சுருங்கிப் போயிற்று.

தெளிவாகச் சொன்னால், பல்லாயிரக்கணக்கில் குழுமியிருக்கும் மக்கள் திரளைக் கவிதையால் சூடேற்றும் ஆற்றலைத் தமிழ்நாட்டுக்

கவிஞர்கள் பெருமளவுக்கு இழந்துவிட்டார்கள்.

ஓ.என்.வி.குரூப்பைப் பொறுத்தவரையில் இந்தப் பேராற்றலை அவர் எப்போதும் கொண்டிருந்தார். அவர் கவிதைகளைக் கேட்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். Ôபலிக் குன்றுகள்Õ என்று ஒரு கவிதை. கவிதையில் இரண்டு தோழர்கள் வயல்வெளியில் நடந்து செல்கிறார்கள்.

அவர்கள் பாதையில் ஒரு கிணறு.

Òகதிர்கள் அசைந்தாடும் வயல்களின் நடுவே

ஒரு மொட்டைக் குன்றிற்குக் குடையாய்

நிற்கும் புளிய மரமொன்று; அதன் நிழலில்

சிறகை ஒதுக்கி ஆரவாரமின்றி

அமர்ந்திருக்கும் வெள்ளைப்பறவை

போன்றதொரு குடிசை! அதன் முன்னால்   

மொண்டு குடிக்கும் சொம்பைப் போன்று ஒரு கிணறு;Ó

தோழர் சொல்லுகிறார்.

இந்தக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடித்தாள்

ஒரு சின்னஞ்சிறு தலித்துப்பெண்.

குடித்தவள் சிறகறுந்த

பறவைபோல் திகைத்து நின்றாள்.

ஏன்?

மேல்சாதிக்காரரின் கிணற்றை ஒரு தலித்துப் பெண் தொட்டு அசுத்தப்படுத்திவிட்டதற்காக

அந்த தலித் சிறுமியைக் கிணற்றுத்தூணில்

கட்டி வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து, இறுதியில் மண்ணெண்ணையை ஊற்றித்

தீயிட்டுக் கொன்றார்கள் சாதி வெறியர்கள்.

தோழா, வயல்வெளியில் கேட்கிறதே

காற்றின் ஓலம், அது எது?

அதுவா, எரியும் போது அந்த தலித் சிறுமி

அலறிய அலறலின் ஓலம்தான்!

இப்படிப்பாடும் ஆன்ம வலியுள்ள தமிழ்க் கவிஞர்கள் எத்தனை பேர்? இன்குலாப், கே.ஏ.குணசேகரன்

என விரல்விட்டு எண்ணிவிடலாம். ஓ.என்.வி.

அளவு புகழும் பெருமையும் உள்ள எவராது தமிழ்நாட்டில் இம்மாதிரி ஒரு விசயத்தை,

இம்மாதிரி வீரியத்தோடு செய்திருக்கிறார்களா? செய்யத் துணிவார்களா? இதுவும் கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள ஒரு வேறுபாடுதான்.

கவிஞர் ஓ.என்.வி. கேரளத்து இடதுசாரி

இயக்கத்தோடு வளர்ந்தவர்.

தன் உயர்விலும், தாழ்விலும் அவற்றோடு ஒட்டி நின்றவர். கல்லூரியில் பேராசிரியராய்ப் பணி செய்த காலத்திலும், திரைப்படம், நாடகத் துறைகளில்  கொடிகட்டிப் பறந்த காலத்திலும்,

எந்தக் காலத்திலும் அவர் மக்களோடு

மக்களாய் மக்கட் பணி செய்தவர்.

Òநெற்றி வேர்வையினால், நெஞ்சின் நீரால்,

உப்பான இந்த மண்ணில்

விதைச்சதும் விளைஞ்சதும்

உரிமையோடு அறுவடை செய்ய

ஒரு கை

இரு கை

ஓராயிரம் கைகள் உயரட்டும்!

இதுதான் அவர் உச்சரிக்கும் ‘மக்கள் மந்திரம்’.

Òபள்ளன ஆற்றின் தீரத்து

விளக்கு வைக்கும் யுவ கன்னிகா

பத்ம பராகக் குடீரத்தில்

மாற்றுவின் சட்டங்ஙகை...

ஒரு விப்ளவ கானம் கேட்டுÓ

என்னும் பாடல் வரிகள், அவை இசையாய் வெளிவந்த காலத்தில் அதிரவைக்காத

இதயங்கள் இல்லை. முணுமுணுக்க வைக்காத உதடுகள் இல்லை.

Ôகற்கள்Õ என்னும்

ஒரு கவிதை.

Òபாதை நெடுக - என் முன்னால்,

சிதறிக் கிடக்கின்ற கற்கள்.Ó

கவிதையின் முடிவில் கவிஞர் இப்படிக் கேட்கிறார்.

Òஇவர்களுக்கு உயிர் கொடுக்க,

பாளம் போன்னு கிடக்கும்

இக்கற்களை,

யார் சிலை வடிக்கப் போகிறார்?

யார் இருக்கிறார், இக்கற்களைக் -

கடைந்தெடுத்து அக்கினியாக்குவதற்கு?

இவற்றின் மௌனத்தை

யார் சங்கீதமாக்கப் போகிறார்கள்?

சிவ - சக்திகளே!

இந்தக் கற்களில்

வந்து ஆடுங்கள்!

இக்கற்களிலிருந்து

அழுது அழுது பிறக்கட்டும்

வலிமையான புதுப்பிறவிகள்!Ó

இந்தப் பாடலை சற்றுக் கூர்ந்து கேளுங்கள். பாரதியின் ‘கல்லை வைரமணியாக்கல்’

எனத் தொடங்கும் அடுக்கடுக்கான

அமுத வரிகள் கேட்கவில்லையா?

தாகூரும் இதைத்தானே பாடினார்?

சங்கப் புலவர்களும் இதைத் தானே பாடினர்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓ.என்.வி.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் பதவியை மாற்றிக் கொடுக்கும் விழாவில்

அவர் ஒரு நீண்ட கவிதையை வாசித்தார்,

அல்ல அல்ல பாடினார். அந்தக் கவிதை மலையாளத்தில் இருந்தது. கூடியிருந்த அனைவரும் இந்தி பேசுபவர்கள். ஆனால், அந்தப் பாடலின் இசையும், தொனியும், உணர்வும், கூடியிருந்த அனை வரையும் மயக்கிவிட்டது. பாடல் முடிந்தும் அவர் களுடைய ஆரவாரம் அடங்க வெகுநேரம் ஆகிவிட்டது.

எனக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப் பட்டதைக் கொண்டாடும் வகையில் திருவனந்த புரத்தில் யுவ கலாசாகிதியினர் நடத்திய பாராட்டு விழாவில் தமிழ் மலையாளம் உறவுபற்றியும், சமய நல்லிணக்கம் பற்றியும் அவர் சொன்ன கருத்துக்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்தின.

என் அன்னை அழகிய நாயகி அம்மாள் எழுதி “கவலை” என்னும் நூலை வெளியிட்ட பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, நாகர்கோவில் டி.வி.டி பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த வெளியீட்டு விழாவில் ஓ.என்.வி. என் அம்மாவைப் பற்றியும், அவர் நூலைப்பற்றியும் ஆற்றிய பேருரை மறக்க முடியாதது.

ஓ.என்.வி.யின் எல்லா செயல்பாடுகளின் மையம் எது?

மாவு பூத்தது - மாம்பூ

மாதுளம் பூத்தது - மாதுளம்பூ!

வானத்தில் பூத்தது - நட்சத்திரம்!

மனத்தில் பூத்தது - அன்பு!

அன்பு - அன்பு - அன்பு!

இந்த அன்புதான் கவிஞர் ஓ.என்.வி.யின் எல்லாச் செயல்பாடுகளின் மையம். அதுதான் ஆயிரம் இதழுள்ள விரிந்த மலராக, அவரைச் சுற்றிக் கவிதைகளாகவும், பேச்சுக்களாகவும் படர்ந்து நிற்கின்றது.

சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது என இந்தியாவின் சிறப்பான விருதுகள் பலவற்றையும் பெற்றுப் புகழ்பட வாழ்ந்த கவிஞர் ஓ.என்.வி. மரணத்திலும் கொண்டாடப்பட்டார்.

கேரளச் சட்டமன்றம் அவர் புகழைப் போற்றி, உயரியவகையில் அஞ்சலி செலுத்தியது. ஓ.என்.வி.க்கு நிகரான எல்லாச் சிறப்பையும் பெற்ற தமிழ்நாட்டுச் சிறுகதைச் சிகரம் ஜெயகாந்தன் மறைந்தபோது Ôதமிழக அரசும் சட்ட மன்றமும்Õ அவரைக் கண்டுகொள்ளவில்லையே! எழுத்தாளர்கள் மனதில் அக்குறை முள்ளாய் குத்துகிறதே!

அன்பை உயிர்நிலையாகக் கொண்ட ஓ.என்.வி. குரூப், அன்பின் வெளிப்பாடாக என்றும் எங்கும் விரிந்து விளங்குவார்.

Pin It