கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக விரிந்திடும் வரலாறு என்பது, நுண்ணரசியல் பின்புலமுடையது. ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மனிதர்கள் இப்படியெல்லாம் இருந்தனர் எனச் சித்திரிக்கப் படுகிற விவரணையில் , தனி மனிதர்களின் செயல்பாடுகள், பல்வேறு நிலைகளில் இயங்குகின்றன. சமூகத் தேவையின் பொருட்டு வரலாறு தேர்ந்தெடுத்து உருவாக்குகிற மாபெரும் ஆளுமைகள், தனிச்சிறப்பு மிக்கவர்கள். இன்னொரு நிலையில் சமூக வரலாற்றில் பாத்திரமாக உருவாகி, ஒரு காலகட்டத்தின் செயல்பாடுகள்மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆளுமைகள், ஒரு கட்டத்தில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக மாறுகின்றனர். வரலாற்றுத் தேவையினால் கட்டமைக்கப்படும் நாயகர்கள், வேறுபட்ட தளங்களில் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் சூழலில், தனிமனிதனாகச் செய்கிற சாதனைகள், காலங்கடந்த சிறப்பினை முன்னிறுத்துகின்றன.

kalaingar ennum manitharஇரண்டாயிரமாண்டு வரலாற்றுச் சிறப்புடைய தமிழர் வரலாற்றில், கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஏற்படுத்தப்பட்ட டில்லி சுல்தான்களின் ஆட்சியைத் தொடர்ந்து தெலுங்கர், மராட்டியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என வேற்று மொழியினரின் ஆட்சியதிகாரம் தமிழ்நாட்டில் நிலவியது. ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக வைதிக சநாதன மதம், சம்ஸ்கிருத மொழியின் ஆதிக்கத்துடன் போராடிக்கொண்டிருந்த தமிழ் மொழியானது தெலுங்கு, மராட்டி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கத்தையும் எதிர்கொண்டது. தமிழை முன்வைத்து நடைபெறுகிற அரசியல், ஒருவகையில் தமிழர் பண்பாட்டு அடையாள அரசியலாகும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தமிழ் மொழி எதிர்கொண்டிருக்கிற சவால்கள் ஏராளம். தமிழை முன்னிறுத்தித் தமிழக அரசியலிலும் கலைத்துறையிலும் அடியெடுத்து வைத்த கலைஞர் என அழைக்கப்படுகிற மு.கருணாநிதியின் அரசியல் செயல்பாடுகள், தனித்துவமானவை. பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தமிழக வரலாற்றுப் போக்குகளைக் கேள்விக்குள்ளாக்கிய கலைஞரின் பன்முக ஆற்றல்கள், அவரை வரலாற்றை உருவாக்குகிறவராக மாற்றியமைத்தன. அதேவேளையில் தமிழக வரலாறு, சூழலின் தேவை காரணமாகக் கலைஞர் என்ற தனிமனிதரை உருவாக்கி, முன்னிலைப்படுத்தியது. வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு அடையாளமாகக் கலைஞரின் பன்முக ஆளுமைத்திறன் விளங்குகிறது. கலைஞருடன் பல்லாண்டு காலம் பத்திரிகையாளராக நெருங்கிப் பழகிய மூத்த பத்திரிகையாளர் மணா தொகுத்துள்ள ‘கலைஞர் என்னும் மனிதர்’ புத்தகம், கடந்த காலத்தின் வரலாறாக விரிந்துள்ளது. கலைஞருடன் மணாவின் நேர்காணல்கள், கலைஞர் பற்றிய மணாவின் கட்டுரைகள் புத்தகத்தில் முதன்மை இடம் வகிக்கின்றன. அத்துடன் பேராசிரியர் க. அன்பழகன், கனிமொழி, நடிகர் சிவக்குமார், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், ராசி அழகப்பன், சிற்பி கணபதி ஸ்தபதி, அமைச்சர் தஙகம் தென்னரசு, செல்வி, பவா செல்லதுரை, சுப.வீரபாண்டியன், கே.எஸ். ராதாகிருஷ்ணன், சோலை, உதய் பாடலிங்கம் போன்ற ஆளுமைகளின் கலைஞருடனான அனுபவம் சார்ந்த கட்டுரைகளும் நேர்காணல்களும் நூலில் இடம் பெற்றுள்ளன.

கலைஞர் ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்பொழுதும் பத்திரிகையாளர்கள் மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாவகமாகப் பதில் சொல்லும் ஆற்றல் காரணமாகக் கலைஞருக்குச் சின்னக்குத்தூசி போன்ற பத்திரிகையாளர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல், மாதந்தோறும் தனியாக மன்கி பாத் என்று தனக்குள்ளாகப் புலம்புகிற பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது, கலைஞரின் பத்திரிகையாளர் சந்திப்புகள் ஒப்பீடு அற்றவை. ஜனநாயக நாட்டின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களின் பணிகள், மகத்தானவை. மக்கள் மீது ஒடுக்குமுறையுடன் மக்கள் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுகிற ஜனநாயக அரசு குறித்துக் கேள்விகள் கேட்டு, விமர்சிக்கிற ஆற்றல் ஊடகங்களுக்கு இருக்கிறது. அரசாங்கத்தை நெறிப்படுத்துகிற பணியைப் பத்திரிகைகள் மூலம் செய்கிற பத்திரிகையாளர்களின் பணி, காத்திரமானது. வெறுமனே பிழைப்புவாதமாகச் செயல்படுகிற பத்திரிகையாளர்களிடம் இருந்து விலகி, சமூக அக்கறையுடன் செயல்படுகிற பத்திரிகையாளர்களில் ஒருவரான மணா, தனித்து விளங்குகிறார்.

மணா, தமிழ்நாட்டின் பல்வேறுபட்ட அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகினாலும் தன்னுடைய தனித்துவத்தை இழந்திடாமல் சிறுமை கண்டு பொங்குகிற இயல்புடன் சமூகப் பிரச்சினைகளை நேர்மையுடன் எழுத்தில் பதிவாக்கியுள்ளார். கலைஞருடனான மணாவின் நேர்காணல்கள் அன்றாடம் காற்றில் கரைந்துபோகிற பத்திரிகைச் செய்திகள் அல்ல. கலைஞர் மறைந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் கலைஞரின் பதில்கள், சமூக ஆவணமாக விளங்குவதை அவதானிக்க முடிகிறது. கலைஞர் என்றொரு ஆளுமையை மனிதராக அவதானித்து மணா தொகுத்துள்ள நூல், தமிழக வரலாற்றின் அழுத்தமான பதிவு.

கலைஞர், ‘நெஞ்சுக்கு நீதி’ தன்வரலாற்று நூலில் தன்னுடைய இளமைப் பருவம், அன்றைய சமூகச் சூழல் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெரிய நூல்களை வாசிப்பது எல்லோருக்கும் இயலாது. குமுதம் போன்ற வெகுஜன வாரப் பத்திரிகையில் பிரசுரமாகிற கலைஞரின் நேர்காணலை ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்தனர். அந்தவகையில் சமூகச் சீர்திருத்தவாதியான கலைஞரின் மனத்தடை இல்லாத பேச்சுகள், பொதுக் கருத்து உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த கலைஞரின் சமூக, அரசியல் பற்றிய பதிவுகள், இளைய தலைமுறையினர் அவசியம் அறிந்துகொள்ளப்பட வேண்டியவை. 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தில் முதல்வர் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு. க. ஆட்சி கலைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான திமு.க. கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர். எமர்ஜென்ஸி காலகட்டத்தில் முரசொலி பத்திரிகையில் வெளியான உடன்பிறப்புக் கடிதம் பற்றிய மணாவின் கேள்விக்குக் கலைஞரின் பதில் பின்வருமாறு:

உடன்பிறப்புக் கடிதப் பணியை எப்படிச் செய்தீர்கள்..?

"ரொம்பவே சிரமப்பட்டேன். எனது ஐந்து பக்கக் கடிதத்தில், மூன்று பக்கங்களைச் சிரச்சேதம் (சென்ஸார்) செய்து இரண்டே பக்கத்து மேட்டரைத்தான் அனுமதிப்பார்கள். அன்னையைவிட என்பால் அதிக அன்பு செலுத்தியவர் அண்ணா என்று எழுதியிருந்தேன். அந்த வரியை சென்ஸார் நீக்கிவிட்டது. அப்போது மாறனும் ஸ்டாலினும் 'மிசா' வில் கைதாகிச் சிறையிலிருந்தார்கள்.

என் மகன்கள் தமிழ், அழகிரி மற்றும் மருமகன் செல்வமும் வீட்டில் இருந்தார்கள். நீக்கப்பட்ட வார்த்தைகள் அடங்கிய கடிதத்தை இரவோடிரவாக ட்ரெடில் இயந்திரத்தில் வைத்து அழுத்தி நூற்றுக்கணக்கான பிரிண்ட்டுகள் எடுத்தோம். செய்தி 'லீக்' ஆகிவிடக் கூடாது என்பதால் வீட்டிலேயே கமுக்கமாய்ப் பணி நடந்தது. அதிகாலையில் அந்தக் கடித நோட்டீஸ்களுடன் புறப்பட்டு அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை நடந்து சென்று மொத்த நோட்டீஸையும் விநியோகித்தோம். அண்ணா சிலை அருகே ஒரு கையில் கட்சிக் கொடியும், மறுகையில் நோட்டீசுமாக நான் நிற்க, கூட்டம் கூடிவிட்டது.

'ஜனநாயகம் வாழ்க' எனும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நான் கைது செய்யப்பட்டேன். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த என்னையும் பிற தொண்டர்களையும் அப்போது சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் அமைச்சர் சி. சுப்பிரமணியம்தான் டெல்லியில் இந்திரா காந்தியிடம் பேசி விடுவித்தார்.

இதற்குப்பின் கடிதங்களை முழுமையாக வெளியிடும் உரிமை கோரி நான் கோர்ட்டுக்குப் போனேன். எனக்கு சாதகமாக ‘ஸ்டே' யும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஜனநாயகரீதியாகக் காரசாரமான பல கடிதங்களை நான் முரசொலியில் எழுத அரசியல் களம் பரபரப்பாகியது. சூட்டுப்பொறி நாலாபக்கமும் பறந்து கனல் உருவாவதற்குள் அவர்கள் நீதிமன்றத்தில் என் ‘ஸ்டே' மீது இடைக்காலத் தடை பெற்றார்கள். இதற்குப் பின் கருத்துகளை ஜாடைமாடையாகச் செருகித்தான் என்னால் எழுத முடிந்தது. அப்படி நான் எழுதியவற்றில் 'ஒரு பனை மரத்தின் கதை' எனும் சிலேடைக் கடிதம் பெரும்புகழை எனக்கு ஈட்டித் தந்தது. இதெல்லாம் எப்போது..? காமராஜர் ஒரு ஜனநாயகவாதி என்றுகூட வாய்திறந்து சொல்ல முடியாத காலகட்டத்தில்.”

இன்று கார்ப்பரேட்டுகளின் பொருளாதார ஆதிக்கம் ஒருபுறமும் ஹிந்து மதம் என்ற பெயரில் வைதிக சநாதனவாதிகளான மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் இன்னொருபுறமும் வலுவடைந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில் மீண்டும் அவசர நிலை அல்லது பாசிஸம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன. இத்தகு சூழலில் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றிட கலைஞரின் நேர்காணல்களும் எழுத்துகளும் உதவுகின்றன.

கலைஞரின் நெருங்கிய நண்பர் தென்னன், இளம் வயதுக் கலைஞர் பற்றி மணாவிடம் விவரித்த தகவல்கள், கலைஞரின் வாழ்க்கையில் முக்கியமானவை. திருவாரூர்த் தேர் நகர்ந்து வரும்போது, அந்தத் தேரின் தடித்த கயிற்றை இழுத்துவரும் குறிப்பிட்ட சமூகத்தவர்களைச் சவுக்கால் அடிக்கும்போது, அருகில் இருந்து பார்த்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது தென்னன் குரல் தடுமாறச் சொன்னார். “தம்பி.. எனக்குச் சொல்றதுக்கே கஷ்டமா இருக்குப்பா.. யாரோ தேரை இழுக்குறதுக்காகச் சிலரை சவுக்காலே அடிக்கிறாங்கன்னு கலைஞர் அந்த வயசிலேயும் நினைக்கலை... அவங்களுக்கு அடி விழும்போது, இவருக்குக் கண் கலங்கியிருக்கும்... அதைப் பத்தி அவரோட, 'நெஞ்சுக்கு நீதி' நூலில்கூட எழுதியிருப்பார். கண்ணுக்கு முன்னாடி மத்தவங்க அடிபடும்போது, அதைத் தன்னோட வலியா உணர்ற தன்மை அவர்கிட்டே இருந்துச்சு. அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததாலே அன்னைக்குப் பட்ட இழிவுகள் என்னைப் போலக் கூட இருந்தவங்களுக்குத் தெரியும். அவ்வளவு அவமானங்களை உறவினர்கள்கிட்டேயும், ஊர்க்காரங்ககிட்டேயும் சந்திச்சிருக்கார். காவல்துறையில் அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம். என்னமா அவமானப்படுத்தியிருக்காங்க தெரியுமா? அதை வெளியில் அவர் சொல்லிக்கிட்டதே இல்லை. எழுதவும் இல்லை. மாறனைத் தவிர, அவங்க சொந்தக்காரர்களுக்கு அது பத்தித் தெரியாது”.

குமுதம் இதழில் தென்னன் சொல்லிய தகவல்கள் அடங்கிய கட்டுரை பிரசுரமானவுடன் முதல்வரான கலைஞர் பத்திரிகையாளர் மணாவைத் ’தனிப்பட்ட சந்திப்பு’ என்று அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். அவர், தனது சொந்த அனுபவங்களுடன் குமரி மாவட்டத்தில் சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனுபவித்த கொடுமைகளை மணாவுடன் பகிர்ந்து கொண்டார். கலைஞரின் கொந்தளிப்பான மனநிலையுடன்கூடிய, வலியையும் மணா தனது எழுத்தில் பதிவாக்கியுள்ளார். முதல்வர் பதவியில் இருந்தபோதும் பத்திரிகையாளர் மணாவுடன் தனது சமூகம் சார்ந்த கருத்துகளைச் சொல்லிய கலைஞரின் சமூகப் பார்வை அழுத்தமானது.

கருணாநிதி எதிர்காலத்தில் கலைஞர் என்ற சொல்லால் அழைக்கப்படுவதற்கேற்ப அவருடைய இளமைப் பருவம், இசையுடன் தொடர்புடையதாக விளங்கியது. கலைஞரின் தந்தையார் முத்துவேலர் நாதஸ்வரம் வாசிப்பதில் பிரபலமாக விளங்கினார். முத்துவேலர், தனது குலத்தொழிலான நாதஸ்வரம் வாசிப்புப் பயிற்சியைத் தனது மகனான கருணாநிதிக்கு அளித்திட முயன்றார். கலைஞருக்கு நாதஸ்வர இசையின்மீது ஆர்வம் இருப்பினும், அன்றைய சமூகம், நாதஸ்வர வித்வான்களுக்குத் தந்த அவமரியாதை, அவரிடம் ஆழமான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. “நாலு பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில் சட்டை போட்டுக் கொண்டு போக முடியாது. மேல் துண்டினை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து கொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம் தெய்வீகத்தின் பெயராலும், சாதி மத சாத்திர சம்பிரதாயத்தின் பெயராலும் ஒரு சமுதாயத்தினரைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்த்துக் கிளம்பியது. அதன் காரணமாக இசைப் பயிற்சியை வெறுத்தேன்” என்று கலைஞர் குறிப்பிட்டுள்ளார். நாதஸ்வர வித்வானாகத் தமிழகமெங்கும் பிரபலமடைந்து பேரும் புகழும் அடைய வேண்டுமென்ற தந்தையாரின் மரபான கண்ணோட்டம், சிறுவனாக இருந்த கலைஞருக்கு உவப்பானதாக இல்லை. குலத்தொழில், மரபு, பாரம்பரியம் எனக் கருதாமல், கலையைச் சமூக மதிப்பீட்டின் அடிப்படையில் பத்து வயதுச் சிறுவனாக இருந்த கலைஞர் கணித்தது, இளமையில் அவருக்குள் பொதிந்திருந்த சுயமரியாதையின் வெளிப்பாடு. நாளடைவில் பெரியாரின் குடியரசு பதிப்பக வெளியீடுகளைத் தொடர்ந்து வாசிப்பவராக மாறியபோது அவர் எதிர்கொண்ட அனுபவங்கள், நடைமுறைகள் போன்றன அவருடைய அரசியல் மனோபாவத்தை உருவாக்கின.

அதிகாரத்தின் முழுமையான ஆற்றலானது, பிறப்பு அடிப்படையில் பார்ப்பனர்களாகப் பிறந்தவர்களிடம் மட்டும் குவிக்கப்படும்போது, பிற சாதியினர் அனைவரும் ஆற்றல் இல்லாதவர்களாகி விடுகிறார்கள். பார்ப்பனர், கடவுளுக்கு நெருக்கமானவர் என்ற நிலையில் சுத்தம் X அசுத்தம், மேல் X கீழ் கற்பித்து, விண்ணுலகு பற்றிய புனைவு உச்சநிலை அடையும்போது, பிற சாதியினரான ஒட்டுமொத்தத் தமிழரும் மனிதத்தன்மை இல்லாத, விலங்கு நிலையில் இருக்கின்றனர் என்று பொருளாகும். கலைஞர், வைதிக சநாதனத்தின் மீதும், குறிப்பாக வருணாசிரமத்தின் மீதும் போர் தொடுத்தபோது, அவர் முதன்மையான பாசாங்குக்காரரும் கொடுங்கோலருமாகிய கடவுள்மீதும் போர்ப் பிரகடனம் செய்தார். மத அடிப்படைவாதத்துடன் உறவை முறித்துக்கொள்ளாமல், அற்பவாதமான வாழ்க்கையுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துக் கொள்ள முடியாது. கலைஞர் மதத்துடன் தனது உறவைத் துல்லியமாக முறித்திட்டார். எனவேதான் பின்னர் அவர் திமுகவின் தலைவராக இருந்தபோதும், முதல்வராகப் பணியாற்றியபோதும் கடவுள் நம்பிக்கையைக் கேலிக்குள்ளாக்கினார். அவர், இறுதிவரையிலும் கடவுள் விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ராமர் பாலம் குறித்த விவாதம் நடைபெறுகையில், கடவுளாகக் கருதப்படுகிற ‘ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்ற கலைஞரின் கேள்வியில் பொதிந்திருந்த பகடி, நுட்பமானது. வடநாட்டைச் சார்ந்த பொறுக்கிச் சாமியார் ஒருவன், கலைஞரின் தலையைச் சீவ வேண்டுமெனச் சொல்லி அவருடைய தலைக்கு விலை வைத்தபோது ‘என் தலையை நானே சீவி நீண்ட நாளாச்சு’ என்று கேலி செய்தது தற்செயலானது அல்ல.

அன்றைய காலகட்டத்தில் கலைஞர் திராவிட இன வாதம் பேசுகிறார் எனக் காங்கிரஸ் இயக்கத்தினரும் இடதுசாரிகளும் கருதினர். இந்திய நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளான இன்றைய சூழலில், உலகமயமாக்கல் காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்க அரசியல், ஆதிக்கம் செலுத்துகிறது. எங்கும் நுகர்பொருள் பண்பாட்டின் ஆதிக்கம் வலுவடையும் நிலையில், மரபான எல்லாவிதமான அடையாளங்களும் அழித்தொழிக்கப் படுகின்றன. தமிழ் போன்ற இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான மொழியின் தனித்துவத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழ், தமிழர் குறித்துப் பேசியும் எழுதியும் ஆக்கமான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்ட கலைஞரின் செயல்கள், தமிழர் வரலாற்றில் முக்கியமானவை.

மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று குற்றம் சுமத்திய அ.இ.திமு.க. அரசு, ஸ்டாலின், கலைஞர் உள்ளிட்ட பலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அப்பொழுது பிரபலமான வார இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய மணாவுக்கு ஸ்டாலின் தந்த நேர்காணல், அவருடைய அரசியல் பார்வையின் வெளிப்பாடு. கலைஞரின் மகன் ஸ்டாலின் என்ற சலுகை எதுவுமில்லாத அவருடைய அரசியல் செயல்பாடுகள்தான் அவரை இன்று முதல்வராக்கியுள்ளன. அதற்கான பின்புலம், மணாவுக்கு ஸ்டாலின் அளித்த நேர்காணலில் அடங்கியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை கலைஞரைக் கைது செய்த இரவில் நடந்த சம்பவங்களின் சாட்சியாக மணா பதிவு செய்துள்ள தகவல்கள், வரலாற்று ஆவணங்கள். பத்திரிகையாளர் என்ற ஹோதாவில் இருந்து விலகிய மணா, கலைஞரும் முரசொலி மாறனும் கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் அன்றிரவில் எதிர்கொண்ட வலியையும் துயரத்தையும் வேதனையுடன் பதிவாக்கியுள்ளார். கனிமொழியின் கலைஞர் பற்றிய கட்டுரை உயிரோட்டமான பதிவு. இறுதி நாட்களில் கலைஞர் குறித்து அவருடைய மகள் செல்வியின் நினைவுகள் உருக்கமானவை. தொகுப்பில் இடம் பெற்றுள்ள எழுத்துகள் ஒவ்வொன்றும் கலைஞர் என்னும் மனிதர் பற்றிய கோட்டோவியங்களாக ஒளிர்கின்றன.

கலைஞரின் அறிவு, தமிழர் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிய முயன்ற வேளையில், அவருடைய இதயம் துயரப்படுகிறவர்களுக்காகக் குருதியைச் சிந்தியது; அதற்கான தீர்வுகளை அரசியலிலும் கலை இலக்கியத்தின் வழியாகவும் கண்டறிய முயன்றது. "எழுத்தாளன், தன்னுடைய எழுத்தை ஒரு கருவியாக நினைப்பதில்லை. அது குறிக்கோளாக இருக்கிறது. அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் மிகக்குறைந்த அளவிலேயே ஒரு கருவியாக இருப்பதால், அவசியம் ஏற்படுகிறபோது. அவன் அதனுடைய இருத்தலுக்காகத் தன்னுடைய இருத்தலைத் தியாகம் செய்கிறான்” என்ற காரல் மார்க்ஸின் சொற்கள், கலைஞருக்குப் பொருந்துகின்றன. தமிழர் வாழ்க்கையின் தேவைகள் காரணமாகத் தமிழ்நாட்டு வரலாறு, கலைஞர் என்ற மனிதரை உருவாக்கிய வேளையில், அவர் தனிமனிதராக வரலாற்றை மாற்றியமைத்ததும் காத்திரமாக நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ள மணாவின் முயற்சி, காத்திரமானது.

எழுபதுகளில் பிளிட்ஸ், இல்லஸ்டிரேட் வீக்லி, தி மிர்ரர், கரண்ட்ஸ், மதர் இந்தியா, இந்தியா டுடே, தி வீக் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தனர். பிரிட்டிஷ் நந்தி, குஷ்வந்த் சிங், கரஞ்சியா, பாபுராவ் படேல் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். தமிழைப் பொறுத்தவரையில் அயோத்திதாச பண்டிதர், பாரதியார், திரு.வி.க. பெரியார், ம. சிங்காரவேலர், ஜீவா, சிஎன்.அண்ணாதுரை தொடங்கி பத்திரிகை ஆசிரியர்கள் தமிழ்ச் சமூக மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அந்த வரிசையில் பத்திரிகைகளின் சமூகத் தேவையைப் புரிந்துகொண்டு செயல்படுகிற மூத்த பத்திரிகையாளரான மணாவின் சமரசமற்ற செயல்பாடுகளின் விளைவுதான் ’கலைஞர் என்னும் மனிதர்’ புத்தகமாகியுள்ளது. அழகிய அச்சமைப்பில் வண்ணப் படங்களுடன் பளபளப்பான தாளில் அச்சேற்றியுள்ள பரிதி பதிப்பகத்தின் பதிப்பு முயற்சி, ’கலைஞர் என்னும் மனிதர்’ புத்தக ஆக்கத்தைச் செழுமைப்படுத்தியுள்ளது.

கலைஞர் என்னும் மனிதர் (கட்டுரை)
மணா
பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை.
பக்கம்: 352 | விலை: ரூ. 500/-
தொடர்புக்கு: 7200693200

- ந.முருகேச பாண்டியன்

 

Pin It