விதை ஒன்று விருட்சமாகி நிற்கிறது. ஒரு திருமண மண்டபத்தில் வெறும் 75 புத்தக அரங்குகளுடன் ஆரம்பமாகி இன்று பிரமாண்ட மைதானத்தில் 230க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் பரிணாம வளர்ச்சியும் எழுச்சியும் பிரமிக்கத்தக்கது. அறிவுச் செல்வமானது பரவலாகி எல்லா தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்கிற மக்கள் சிந்தனைப் பேரவையின் சீரிய சிந்தனையில் தட்டிய சிறு பொறி, இன்று ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.

erorde book fair 2019மக்கள் சிந்தனைப் பேரவையால் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கிய ஈரோடு புத்தகத் திருவிழா மக்களின் ஆதரவோடும் நல்லாசியோடும் இவ்வாண்டு 15ம் ஆண்டில் கம்பீரத்துடன் கால் பதித்தது. இவ்வாண்டு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற்ற இந்த ’ஈரோடு புத்தகத் திருவிழா - 2019’ தனது வழக்கமான அருமை பெருமைகளுடன் 12 நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.

முன்னணி தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்கள் இங்கு புத்தக அரங்குகளை அமைத்திருந்தனர். ஆன்மிகம், அரசியல், தத்துவம், வரலாறு என்று இங்கு இடம் பெறாத புத்தக வகைகளே இல்லை எனலாம். அதே போல் பாகவதத்தில் இருந்து போட்டித் தேர்வுகள் ஆங்கில நூல்கள் வரை அனேகமாக எல்லா துறை புத்தகங்களும் வரிசை கட்டி நின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்காட்சிக்கு வருகை தந்தனர். உள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாரை சாரையாக வந்திருந்தனர். இந்த புத்தகத் திருவிழா அவர்களுக்கு வெறும் கண்காட்சியாக அல்லாமல் பொது அறிவுக் களஞ்சியத்தை போதிக்கும் ஒரு வகுப்பறையாகவும் அமைந்தது என்றால் அது மிகையாகாது.

இவ்வாண்டின் அதாவது 15ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவை சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் உரையாற்றுகையில், ”புத்தக வாசிப்பில் ருசி பார்த்தவர்கள் பெரும் பாக்யசாலிகள்” என வர்ணித்தார். ”நாம் எத்தகைய அறவாழ்வு வாழவேண்டும் என்பதை, புத்தகங்களில் இருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். புத்தகங்களை வாசிக்க, வாசிக்க நாம் வளர்கிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா நீங்கலாக உலகம் முழுவதிலும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாற்றல், பண்பாடு, கலாச்சார உணர்வுகளை இங்குள்ளோருக்கு பரிச்சயம் செய்யும் வகையில் இப்புத்தகத் திருவிழாவில் ‘உலகத் தமிழர் படைப்பரங்கம்’ என்ற தனி புத்தக அரங்குஆண்டுதோறும் அமைக்கப்படுகிறது. இவ்வாண்டு இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவாக அவர் பெயரில் இந்த சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உலகத் தமிழர்ப் படைப்பரங்கை மலேசிய நாட்டு எம்.பியும் அந்நாட்டு முன்னாள் அமைச்சர்

டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்” நல்ல புத்தகங்கள், சமுதாயத்தை மாற்றியமைக்கக்கூடியவை. நல்ல சமுதாயத்தை புத்தகங்கள் படைக்கும். நல்ல சிந்தனை உருவாகும். நல்ல சிந்தனை பிறந்தால் நல்ல செயல்கள் பிறக்கும். நல்ல செயல்களின் விளைவாக நல்ல தலைமுறை உருவாகும். நல்ல தலைமுறை இருந்தால் நல்ல தலைவர்கள் உருவாவார்கள். நல்ல தலைவர்களால் சமுதாயத்திற்கு ஒரு சரித்திரம் படைக்கப்படும். நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டிய கடமை படைப்பாளிகள் கைகளில் தான் உள்ளது. அடுத்த தலைமுறையை வழிநடத்த எழுத்தாளர்கள் எழுதுங்கள்” என கேட்டுக் கொண்டார்.

ஈரோடு புத்தகத் திருவிழா வெறும் புத்தகங்களின் கண்காட்சியாக - விற்பனைக் கேந்திரமாக மட்டுமில்லாமல் சிந்தனையை சீர்மைப்படுத்தும் தலமாகவும் விளங்குகிறது. இக்கண்காட்சி வளாகத்திற்குள்ளேயே சிந்தனை அரங்கம் அமைக்கப்பட்டு தினசரி மாலைவேளையில், முற்போக்கு சிந்தனைகளை கொண்ட சினிமாக் கலைஞர்கள் முதல் எழுத்துலகு, நீதித்துறை, கல்வி, அறிவியல், பத்திரிகைத் துறை உள்ளிட்ட பல துறை ஆளுமைகளின் சொற்பொழிவுகளை இங்கு கேட்டு மகிழலாம். அந்த வரிசையில் இவ்வாண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ஒடிசா மாநில அரசின் தலைமை ஆலோசகரும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.குறிஞ்சிவேந்தன், பிரபல சொற்பொழிவாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தினமணி நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன், இந்து தமிழ் திசை நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் மற்றும் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால், சென்னை தமிழ் மையம் இயக்குனர் ஜெகத்கஸ்பர், திரைப்பட நடிகர் பொன்வண்ணன், நடிகை ரோகிணி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

ஈரோடு புத்தகத் திருவிழா வரலாற்றில் முதன்முறையாக இவ்வாண்டு ‘பாரதி யார்?’ என்ற தலைப்பில் இயல் இசை நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடைபெற்றது. இந்நாடக நிகழ்வுக்கு நடிகர் சிவக்குமார் தலைமை வகித்தார். அதே போல், பேராசிரியர் சாலமன் பாப்பையா நடுவராக இருந்த பட்டிமன்றமும் நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் 8ம் தேதி மகளிர் எழுச்சி தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல், நீதித்துறை, மருத்துவம், கலை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த பெண் ஆளுமைகள் 15 பேர் விழா மேடையில் சிறப்பிக்கப்பட்டனர். அவர்களில், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.கே. வாசுகி, சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர் சாந்தி துரைசாமி, பவானி நதிகூட்டமைப்பின் தலைவர் டாக்டர் என்.எஸ்.சத்தியசுந்தரி, ஈரோடு, கலைமகள் கல்வி நிலையத்தின் செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.மங்களவதி உள்ளிட்டோர் அடங்குவர்.

தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களான ஒய்.சுப்பராயலு, கே.ராஜன், செ.இராசு ஆகியோருக்கு 9ம் தேதி மேடையிலும்; உலக சதுரங்கப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற ஈரோடு மாணவர் பி. இனியன் என்பவருக்கு 12ல் மேடையிலும் முன்னதாக. மொழிபெயர்ப்பு பணிக்காக பேராசிரியர் நா.தர்மராஜனுக்கு ஆக.3ம் தேதி மேடையிலும் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

இப்புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும், 40 வயதுக்குட்பட்ட இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான புதிய அறிவியல் கண்டுபிடிப்பொன்றை தேர்ந்தெடுத்து அதன் விஞ்ஞானிக்கு ரூ.ஒருலட்சம் ரொக்கப்பரிசு உள்ளடக்கிய ‘அறிவியல்மேதை ஜி.டி.நாயுடு விருது’ என்ற விருது வழங்கப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு கோவையை சேர்ந்த முனைவர் செல்வராஜ் பாஸ்கர் என்பவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

நிறைவு விழா ஆக.13ல் நடைபெற்றது. பெங்களூரு இஸ்ரோ முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி ஆர்.எம்.வாசகம் கலந்து கொண்டு நிறைவு விழா சிறப்புரையாற்றினார்.

மாநிலம் முழுவதிலும் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் இப்புத்தகத் திருவிழாவை காண வருவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பெருமிதத்துடன் தெரிவித்தார். மாவட்டம், மண்டலம் என்று தொடங்கி இன்று மாநிலம் தழுவிய ஈர்ப்பாக தனது பரப்பை விஸ்தரித்து வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவானது தேசிய அளவுக்கு கவரும் கேந்திரமாக விரிவடைய வேண்டுமென்பது புத்தக வாசிப்பு பிரியர்களின் அவா என்றால் அது மிகையில்லை.

Pin It