இந்தியாவில் ஐந்து ரூபாய்க்குப் பயணச்சீட்டு எடுக்காமல் போனால், அந்த நிமிடத்திலே அபராதம்; ஐந்நூறு ரூபாய் இலஞ்சம் வாங்கினால், அதே நாளில் சிறைத் தண்டனை; ஆனால், கணக்குக் கருவியே திணறுகிற அளவுக்கு இலட்சம், கோடிகளில் - இலட்சமோ, கோடியோ அல்ல - இலட்சம் ஓ கோடி களில் கொள்ளையடித்தால் அதனைத் திருட்டு என்று சொல்வதில்லை; ஒப்பந்தம், ஒதுக்கீடு, சிக்கினால் முறைகேடு; பிறகு நாடு முழுவதும் நாற்றமெடுத்த பிறகுதான் ஊழல் என்ற சொல்லே எதிர்த் தரப் பினரால் அல்லது ஊடகத்தாரால் பயன்படுத்தப் படும். இது இன்றைய இந்தியாவின் வழக்கமாகி விட்டது. சென்ற ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று அறியப் பட்டு, காங்கிரசும் தி.மு.க.வும் உலக அளவில் இகழப் பெற்றன. இந்த உலக இகழ்ச்சிபெற்ற சாதனையை இந்த ஆண்டு வீழ்த்தியிருக்கிறது - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல்.

இது யாரோ எவரோ, போகிற போக்கில் சொன்ன எதேச்சைத் தகவல் அல்ல; நடுவண் அரசின் கணக்கு தணிக்கைத் துறையின் (Office of the Controller and Auditor-General) அதிகாரபூர்வமான அறிக்கையாகும். அதன் விளைவாக, பாரதிய ஜனதா கட்சி குரல் எழுப்பி, பாராளுமன்றமே இரண்டு அவைகளிலுமாக முடக்கப்பட்டது. இந்த முறைகேடு பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித் துறை மந்திரியாகப் பதவி வகித்தபோது நடந் துள்ளதால், அவர் இப்போது பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலேயே தனது எதிர்ப்புப் பணியை அரங் கேற்றியது.

உடனே, “நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆகவே, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகத் தேவை இல்லை. பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்” என்று தனது அறுபதாண்டு காலப் புகழ்பெற்ற வசனத்தை எடுத்துவைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இதனைப் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ள வில்லை.

இதற்கு அடுத்த கட்டமாக, ‘கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையே தவறானது’ என்று மன் மோகன் சிங் மறுத்துள்ளார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடை யவர்கள் பிரதமர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டு மல்லர்; பிரதான குற்றவாளிகள்: ஒதுக்கீடு பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்களே என்ற அடிப்படையில் மத்திய புலனாய்வுத் துறை ஆறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி யுள்ளது.

இந்த ஊழல்களெல்லாம் சட்டப்படியான ஒப்பந்தம், ஒதுக்கீடு என்ற வழியே தொடங்கப் பட்டு, பின்னர் கண்டறியப்பட்ட பிறகு, விசாரணை என்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது ஒரு புற மிருக்கட்டும். காங்கிரசைச் சார்ந்த மன்மோகன் சிங் இவ்வாறு ஊழலில் தொடர்பு கொண்டிருப்ப தாகக் குற்றம் சாட்டும் மத்திய கணக்கு-தணிக்கைத் துறைக்கு இப்போதுதான் இந்த விவகாரம் தெரிந்ததா? கணக்கு-தணிக்கைத் துறை வெளிப்படுத்திய பிறகு தான் பா.ஜ.கட்சிக்கு இந்தத் தகவல் தெரிய வந்ததா? என்ற கேள்விகளும் இயல்பாக எழுகின்றன. மேலும், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரைச் சில நாட்கள் முடக்கினால் இந்த ஊழல் விவகாரத்தைச் சரியான முறையில் தீர்த்துவிட முடியும் என்றும் பா.ஜ.க. நம்புகிறதா? அது மட்டும்தான் பா.ஜ.க.வின் நோக்கமா?

எப்படியாயினும், கார்ப்பரேட் முதலாளிகள் சிலர் மக்கள் பணத்தைச் சுருட்டுவதற்கு, இந்திய அரசியல்வாதிகள் சிலரும், அதிகாரிகளும் துணை போகின்றனர்; அதற்கான கூலியைப் பெறுகின்றனர்.

இந்திய மக்கள் விழிப்புணர்வு பெறட்டும். அந்த விழிப்புணர்வில்தான் அப்பாவிப் பொது மக்களின் தலைமுறையினர் மட்டுமின்றி - இதோ, இந்தக் கொள்ளைக்காரர்களின் அடுத்தடுத்த தலைமுறை யினரின் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.

Pin It