மூன்று கவிதைத்தொகுப்புகளை முன்வைத்து

நெடுங்காலமாகவே நம் தமிழ்க்கவிதையில் அகம், புறம் என்ற இரு அரை வட்டங்கள் சேர்ந்ததே வாழ்க்கை என்னும் முழுவட்டம் என்ற தெளிவும் புரிதலும் அவற்றின் அடிப்படையிலான பகுப்பு களும் இருந்துவந்திருக்கின்றன. ஆனால், வருந்தத் தக்க அளவில், பரிசோதனை முயற்சிகளோடு எழுதப் பட்ட நவீன கவிதைகளில் வெளிப்படும் சமூக அக்கறை, சமூகப் பிரக்ஞை, மனிதநேயம் குறித்த விரிவான ஆய்வலசல்கள் மேற்கொள்ளப்படா மலேயே ‘நவீன தமிழ்க்கவிதைகள் சமூகம்சாராத அழகியலை மட்டுமே கருப்பொருள்களாகக் கொண் டிருக்கின்றன, சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்து வதில்லை’ என்ற குற்றச்சாட்டு தொடர்ந்த ரீதியில் முன்வைக்கப்பட்டுவந்தது. இதன் மறுபக்கமாய், சமூகப்பிரச்சினைகளைப் பேசினாலே அது ‘பிரச் சாரக் கவிதை’ என்பதாக, அத்தகைய கவிதைகளி லுள்ள அழகியல், கவித்துவ அம்சங்கள் கணக்கி லெடுத்துக் கொள்ளப்படாமல் புறமொதுக்கப் படுவதும் நடந்தது. எனில், இருவகைக் கவிதைப் போக்குகளிலும் கைத்தட்டலுக்காய் மேலாதிக்கத் திற்காய், மேம்போக்காய் இயங்கியவர்கள், இயங்கு கிறவர்கள் உண்டு; அர்ப்பணிப்பு மனோபாவத் துடன் இயங்குகிறவர்கள் உண்டு என்ற உண்மையே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

நவீன கவிதைகளின் சிறப்பம்சங்கள் திறந்த முனைக் கவிதையாக்கமாய், பல்வேறு வாசகப் பிரதிகளுக்கு வழிவகுப்பதாய், வார்த்தைகளை அவற்றின் வழக்கமான, ‘அரைத்த மாவுப் பிர யோகங்களிலிருந்து விடுவித்து, சாதாரண வார்த் தைக்கும் அசாதாரண தொனியும், பொருளும் தந்து வீர்யம் மிக்கதாக்கிப் பயன்படுத்துவது; மொழியை, அர்த்தத்தை அவற்றின் ஒற்றைப் பரிமாண, முடிந்த முடிவான தன்மையிலிருந்து விடுவித்து ஒரு கவிதையின் அர்த்தம் ஒவ்வொரு வாசகரின் அளவிலும் விரிவடைவதாக, நீட்சிபெறுவதாகச் செய்தல்; சொல்லப்பட்ட வார்த்தைகளில் அளவு; சொல்லப்படாத வார்த்தைகளையும், வரியிடை வரிகளையும், மௌனங்களையும் கவிதையின் இரண்டறக் கலந்த அம்சமாகப் பாவித்து கவிதை யெழுதுதல்; அகம், புறம் என்று தனித்தனியாக இல்லாமல் அகத்தில் புறமும், புறத்தில் அகமும் இரண்டறக் கலந்திருத்தல். ‘வாசகரை எப்படி ஒற்றைப் பரிமாணத்திற்குள் அடக்கி விட முடியும்? அதேபோல், கவிமனதை ‘இதைத்தான் எழுத வேண்டும் என்று எவ்வாறு ஒரு சட்டகத்திற்குள் அடைத்துவிடமுடியும்?’ இவையே நவீன கவிதை இயக்கம் முன்வைக்கும் தலையாய கேள்விகள்.

நவீன தமிழ்க்கவிதைப்பரப்பில் இயங்கிவந்தவர் களை உரிய அங்கீகாரத்தோடு நடத்தி நவீன கவிதை களில் விரவியுள்ளதாகச்சொல்லப்படும் புரியா மையைப் புரியக்கூடியதாக்க, நவீன தமிழ்க்கவிஞர் ஒரு கவிதையை எழுதுவதில் என்னென்ன போக்குகள், அம்சங்கள் பிரதானமாகக் கைக்கொள்ளப்படுகின்றன, வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன போன்ற விவரங் களை அகல்விரிவாகப்பேச மேடையமைத்துத் தரப் படுவது அரிதாகவே நடந்தது.

இன்று நிலைமை மேம்பட்டிருக்கிறது. எனில், இன்னமும் நவீன தமிழ்க் கவிதை நூல்களைப் பிர சுரிக்க பெரும்பாலான பதிப்பகங்கள் முன்வருவ தில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்த மூன்று கவிதைத் தொகுப்புகளை நேர்த்தியான அச்சாக்கமும் வடி வமைப்புமாக வெளியிட்டிருக்கும் பாங்கு குறிப்பிடத் தக்கது.

1. இரவெல்லாம் விழித்திருந்த நிலா - எழுதியவர்: தேவதேவன்:

தேவதேவன் தற்காலத் தமிழ்க்கவிதையுலகில் நன்கு அறிமுகமான கவிஞர். ஆரவாரமில்லாமல் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்க் கவிதை வெளியில் இயங்கிவருபவர். இவருடைய கவிதைகள் அதிராத குரலில் அழுத்தமாக ‘வாழ்வு குறித்த விசாரணைகளை’ பகிர்ந்துகொள்பவை. இயற்கையை ஆசானாகப் பாவிக்கும் இவருடைய கவிதைகள் சூழல் மாசு, இயற்கை வளங்கள் அழிக்கப் படுவதன் விளைவுகள், அவற்றின் பல்வேறு பரி மாணங்கள், மனித வாழ்வின் புதிர்த்தன்மை, அன்பே மனிதவாழ்வின் மெய்யான ஆதாரம் என பல்வேறு கருப்பொருள்களை கவிதைக்கேயுரிய அழகியல் கெடாமல் முன் வைப்பவை.

devadevan_450இரவெல்லாம் விழித்திருந்த நிலா என்ற தலைப்பிட்ட இக்கவிதைநூலில் இடம்பெறும் அத்தனை கவிதைகளுமே குறைந்தபட்ச நான்கு வரிகளிலும் அதிகபட்சமாக 10 வரிகளுக்கு மிகா மலும் அமைந்திருப்பவை.

விழியாய் விரிந்த விசும்பில்
ஒலித்தது
அண்டமனைத்தையும்
அகப்படுத்தியிருந்த ஒரு வலை’.

- இந்தக் கவிதையை ‘எதுவுமே புரியவில்லை’ என்று கூறிவிடலாகுமா? அல்லது, ‘எல்லாம் புரிந்துவிட்டது’ என்று சொல்லிவிடத்தான் முடியுமா?

‘வலை எப்படி ஒலிக்கும்?’ என்ற கேள்வியின் துணையோடு கவிதைக்குள் நுழைய வழியுண்டு!

ரொம்பவும் நெருக்கமானவர்கள்தாம்
சுவரின் ஈரமும்
புத்தக அலமாரியின்
மரத் தட்டுகளும்
புத்தகங்களின் தாள்களும்
கரையான்களும்
புத்தகங்களின் சாரமும்.

மேலோட்டமான வாசிப்பில் இது வழக்க மான ஆன்மீகவாதமாகப் புரிபடலாம். ஆனால், ‘உள்ளது’ என்ற சொல் அடைப்புக்குறிக்குள் தரப் பட்டிருக்கிறது. உள்+அது? ‘அப்பொழுது’ என்ற வார்த்தையும் அடைப்புக்குறிக்குள். அப்பொழுது + எப்பொழுதும்? நான் உள்ளவரை நம்முள் இருக்கும் மனமே, அதன் எண்ணமே, செயல்வடிவமே தெய்வம். வாழும் நாளில் நம் சிந்தனை, சொல், செயல்- அவையே நம்மைக் கடவுளராக்குகின்றன. ...இன்னும் நிறைய அர்த்தங்களை இழைபிரிக்க இந்தக் குறுங்கவிதையில் இடமிருக்கிறது!

ஒரு கனவு
சரியான உயரத்தில் ஒரு பறவை
சிறகுகள் விரித்தபடி
அவ்வப்போது கொள்ளும்
சின்னச் சின்ன சிறகடிப்புகள் மாத்ரமே
கொண்டு.

இந்தக் கவிதையின் பாடுபொருள் பறவையா? அதன் பறத்தலா? அதற்கான வெளியா? ஸசரியான உயரத்தில் சிறகுகள் விரித்தபடியிருக்கும்போது தான் பறத்தல் சாத்தியமாகிறது பறவைக்கு. அப் பொழுதுதான் பறவையும், நம் பார்வைக்குள் சரிவரப் பிடிபடுகிறது.] காயங்களற்ற குழந்தைப் பருவத்தை, மதிப்பழிக்கப்படாத மனிதனை, எல் லோருக்கும் வாழ்க்கை சரியாக அமைய வேண்டும், எல்லோரும் சுதந்திர மனிதர்களாக வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கையை - இன்னும் ஏராள மான எண்ணப் பின்னல்களை மனதிற்குள் கோத்துக் கொண்டே போகிறது கவிதை!

2. கவிஞர் கண்மணிராசாவின் லட்சுமிக்குட்டி:

“குழந்தைகள் வைத்திருக்கும் எந்தவித ஏற்றத் தாழ்வுமற்ற, எந்தவித அநீதியுமற்ற அந்தப் பொன் னுலகை உருவாக்கி அவர்களுக்காய் விட்டுச் செல் வதே நம் வேலை எனத் தோன்றுகிறது. அதற்காய் எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம், வாருங்கள்! ஏனெனில், உங்கள் வீதிகளிலும் விளையாடிக் கொண்டிருக்கலாம் லட்சுமிக்குட்டி”, என்று நூலின் ஆரம்பத்தில் கவிஞர் கண்மணி ராசா வெளிப்படுத்தும் ஆதங்கமும் நம்பிக்கையும் அவருடைய கவிதைகளின் ஆதாரவேர்களாக விளங்குகின்றன.

kanmanirasa_450செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
நல்ல கவிதை

என்று கவிதை குறித்த தனது பார்வையை மூவரி களில் தெளிவாக முன்வைக்கிறார் கவிஞர். அதற் கேற்ப-

பசி வந்த போது
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது....
பசி வந்த போது
என் அப்பாவிடம் நெல் இருந்தது....

- என்று, கொஞ்சங்கொஞ்சமாக, காலங்காலமாக எளிய மனிதர்கள், குறிப்பாக விவசாயிகள் ஸநேரிடை யான அளவிலும், குறியீட்டளவிலும்] சுரண்டப் படுவதை உள்ளம் தைக்கப் பட்டியலிட்டவாறு நகர்ந்து -

இனி
பசிவரும்போது
என் மகனிடம் இருக்கும்
ஆயுதம்

- என்று முடிகிறது. இந்தக் கவிதை நேரக்கூடிய நடப்புண்மை குறித்து எச்சரிக்கை விடுக்கிறதா? அநீதியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் நியாயம் கிடைக்கும் என்று எடுத்துரைக் கிறதா? ஆயுதப் போராட்டத்தில் நேரும் அழிவுகள் குறித்து கவனப்படுத்துகிறதா? எல்லாம்தான்! ஏன், இன்னும் கூட!

ஆளில்லாத
ஊஞ்சலில் ஏறி
அமர்ந்துகொண்டு
தள்ளிவிட யாருமில்லாமல்
தவித்துப்போகும்
காற்று

என்ற நயமார்ந்த கவிதையில் கவிஞர் கையில் காற்றும் இன்னொரு லட்சுமிக் குட்டியாகி விடுகிறது!

‘வலி’ என்ற கவிதையில் ‘சாணிப்பால் ஊற்றி சவுக்கால் அடித்தான் /என் பூட்டனை உன் பூட்டான் என்று தொடங்கி

‘பறைக்கு ஏதுக்கடா படிப்பு என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்!
சர்க்காரு வேலையெல்லாம் உங்க
 சாதிக்குத்தானே
உங்களுக்கென்னப்பா...? என
சாமர்த்தியமாகப் பேசுகிறாய் நீ!
ஒன்று செய்!
உன்னையறியாத ஊரில் போய்
உன்னைப் பறையனென்று
சொல்!
அப்போது புரியும்
என் வலி!

என்று முடியும்போது காலங்காலமாக தாழ்த்தப் பட்ட மக்களாக சமூகத்தின் ஒரு பிரிவினர் மதிப் பழிக்கப்பட்டு வந்த அவமானகரமான வரலாறு வாசகர் கண்முன்னே விரிந்து அவர்களை வெட்கப் பட, வேதனைப்பட வைக்கிறது. கூடவே, சாதீயம்சார் ஏற்றத்தாழ்வுகள் எத்தனைக்கெத்தனை உண்மையோ அதேயளவு உண்மை வர்க்கரீதியான, பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் என்ற, நம் மூதாதை யர்களின் தொடர்ச்சியே நம் வாழ்க்கை என்பது எத்தனைக்கெத்தனை உண்மையோ அதேயளவு உண்மை என் வாழ்க்கை என்னோடு தொடங்கி என்னோடு முடிந்துபோவது’ என்பதும் என்ற ‘தனிமனித இருத்தலியல் நெருக்கடி’ குறித்தும் எண்ணா மலிருக்க முடியவில்லை.

‘ஆகவே....’ என்ற கவிதையும்

- ஏர் இழுத்து / எருமையோடு / மல்லுக் கட்ட / நாங்கள்....!
தேர் இழுத்து / தெருவில் / பவுசு காட்ட / நீங்களா....? / சர்த்தான் மக்கா... / இட ஒதுக்கீடு போல / இதுக்கும் வேணும் / வட ஒதுக்கீடு

என்று சாதீயத்தின் அபத்தத்தை, அராஜகத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

“நகரத்து வீதிகளில் / நடந்து / நடந்து / மகிழ்கிறான்... / சேரியிலிருந்து வந்தவன் / செருப்பணிந்த / கால்களோடு”

- என்ற கவிதை கிராமத்தில் செருப்பணிந்து நடக்க முடியாக் கொடுமை நகரத்தின் மற்ற அழுக்குகளை யெல்லாம் மறக்கடிக்கச் செய்துவிடுவதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

லட்சுமிக்குட்டியில் இடம்பெறும் கவிதைகள் எல்லாமே கவிஞரின் சமூகப்பிரக்ஞைக்கும், சொல் லாளுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.

ஆண்டாளுக்கும்
இருக்கும்
பெருமாளிடம் சொல்லக்கூடாத
அந்தரங்கம்

என்ற கவிதை ஒருவகையில் அருமையான பெண்ணியக் கவிதை!

வா
ஏகலைவா...
அம்பையும்
வில்லையும்
அவர்களிடமே
எறிந்துவிட்டு வா...!
கணினி இயக்க
கட்டைவிரல்
தேவையில்லை

என்ற அற்புதக் கவிதை புராணகாலத்தையும் அதன் ஏற்றத் தாழ்வுகளையும் நவீனகாலத்தோடு, அதன் அளப்பரிய சாத்தியப்பாடுகளுடன், அத்தனை நுட்பமாக ஒப்புநோக்குகிறது!

என்றேனும் என்ற தலைப்பிட்ட கவிதை வாழ்க்கை குறித்த கவிஞரின் நம்பிக்கையை எடுத்துக் காட்டி மனதை நெகிழச்செய்கிறது. இவ்வாறு நெகிழ வைக்கும், சிந்திக்கவைக்கும் கவிதைகள் இத் தொகுப்பில் கணிசமாகவே இடம்பெற்றுள்ளன.

ஒரு தேர்ந்த கவிதாவாசகராகத் தன்னை வெளிப் படுத்திக்கொண்டுள்ளார் இந்நூலுக்கு விரிவான அணிந்துரை எழுதியுள்ள திரு.இரா.காமராசு. கவிதை களுடனான நம் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் படியான கையடக்க நூல் வடிவம் இந்தக் கவிதைத் தொகுப்பின் கூடுதல் சிறப்பு.

‘ஈழப்பிஞ்சு’ என்ற கவிதை போரும், வன் முறையும், குழந்தைகளிடம் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பை அழுத்தமாக எடுத்துரைக்கிறது. குழந்தைப் பருவம் வானத்துப் பறவையிடம் வரம் கேட்பது. அப்படி கொக்கிடம் முத்துப்போடச் சொல்லி மற்ற குழந்தைகள் வரம் கேட்க, / ‘வேண்டாம், அது குண்டுபோடும்’ என்றலறியபடி / குழியைத் தேடி ஓடியது / அந்த / ஈழப்பிஞ்சு’ / என்று முடிகிறது கவிதை.

‘விதவிதமாய்
மலர்களை
சூடிக்கொள்கிறாய்...!
என்னை வீழ்த்த
உன் வியர்வை வாசம் போதும்
என்பதறியாமல்

- என்ற கவிதையில் காதலும், காமமும், கலவியும் அங்கலாவண்ய வர்ணணைகள் ஏதுமின்றி எத்தனை நயமாகப் பேசப்பட்டிருக்கிறது!

இந்தக் கவிதையின் நீட்சியாய் ‘கவிதையாவது’ என்ற தலைப்பிட்ட கவிதை ‘பகலெல்லாம் / பாரவண்டி இழுத்த களைப்பில் / நானும் தீப் பெட்டி ஆபீசில் / தீயாய் பறந்த களைப்பில் / நீயும் / கண்ணயர்ந்து உறங்குகையில் / கவிதை யாவது...? / கழுதையாவது....? என்ற கேள்விகளை எழுப்பி வாசிப்போர் மனங்களை பாரமாக்குகிறது.

‘கருவாச்சி’ என்ற தலைப்பிட்ட கவிதை நாட்டுப்புறப்பாடல் பாணியில் அமைந்துள்ளது. அதில் இடம்பெறும் ‘ஒரு சொட்டு சூரியனா / உன்னோட மூக்குத்தி’ போன்ற உவமான உவ மேயங்கள் / கவிஞரின் மொழியாளுமையைப் புலப் படுத்துவதோடு நம் மண்ணில் மொழியாளுமை இயல்பாக கைகூடும் நடப்புண்மையையும் புலப் படுத்துகின்றன.

3. ஏழுவால் நட்சத்திரம் - எழுதியவர்: ஜெ.பிரான்சிஸ் கிருபா

தலைப்பு தொடங்கி தொகுப்பு முழுவதும் தான் கவிதைப்பொருளாக எடுத்துக் கொண்ட விஷயங்கள் மூலமும், அவற்றை எடுத்துரைக்க வார்தைகளைத் தேர்வுசெய்த விதத்தாலும், கை யாண்ட விதத்தாலும் தன்னை தமிழின் குறிப்பிடத் தக்க நவீனத்துவக் கவிஞராக நிறுவிக்கொண்டே போகிறார் கவிஞர் பிரான்சிஸ் கிருபா! தமிழின் சிறுபத்திரிகைகள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகியிருக்கின்றன; வெளியாகி வருகின்றன. நவீன தமிழ்க் கவிதை வெளியில் கணிச மான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பவை இவருடைய கவிதைகள்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் பவளப் பழி என்ற கவிதை ஒருவகையில் தேவதேவனின் கடவுள் கவிதையின் நீட்சி எனக் கூறத்தக்கது.

fransis_kruba_450அவரை சிலுவையில் அறைந்தார்கள் என்று
பொய் சொல்கிறார்கள்
அவர்தான் அவரைச் சிலுவையில் அறைந்து
 கொண்டார்’

என்று கவிதையைத் தொடங்குபவர் ஒவ்வொன் றாக ‘அவர்கள் செய்யவில்லை அவரேதான் செய்தது’, என்று பட்டியலிட்டபடி முன்னேறி இறுதியில்,

‘நம்பத் தயங்குகிறவர்கள்
நான் பொய்சொன்னேன் என்று கருதினால்
பதில் சொல்லுங்கள்
அவரை அவர்களா உயிர்த்தெழச்
செய்தார்கள்?

என்ற கேள்வியோடு கவிதையை முடிக்கையில் கவிதையின் பாடுபொருள் முன்னிலைப்படுத்துவது இறைவனையல்ல, மனிதனையே என்ற ஓர் அர்த்தப் பரிமாணமும் நம் முன் விரிகிறது. இதை இன்னும் சற்று விரித்துப் பார்த்தால் மனிதனின் வீழ்ச்சியும் இயேசுவைக்குறியீடாகப் பார்க்காமல் இயேசுவாகவே பார்த்தாலும்கூட மானுட நலனுக்காக தன் வீழ்ச்சி யையும் அவரே கட்டமைத்துக்கொண்டார் என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, ‘அவர்-அவர்கள் என்ற இருதரப்புகள் உண்டா என்ன? எல்லாம் ஒன்றே. ஒவ்வொருவருக்குள்ளும் இந்த இரண்டு தரப்புகளும் உள்ளன’ என்றவாறு பலப்பலவாய், இழையிழையாய்ப் பொருள்பெயர்த்துக்கொண்டே போகலாம்.

-இந்த இருதரப்புகள், இருபாதைகள் போன்றவை தொடர்பான தெளிவின்மையை வாழ்க்கை பற்றிய விசாரணையின் ஒரு கூர்-அவதானிப்பாக கவிஞர் பல கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். எடுத்துக் காட்டாக,

ஒரு பாம்பு ஊர்ந்துசெல்கிறது
புற்றை நோக்கியா
புற்றை விட்டா
உறுதிசெய்ய முடியவில்லை
பாம்பு
போய்க்கொண்டிருக்கிறது

மேற்கண்டவை தொகுப்பில் பக்கம் 53இல் இடம்பெறும் பாம்பு போய்க் கொண்டிருக்கிறது என்ற தலைப்பிட்ட கவிதையின் சில வரிகள். இதில், பாம்பைக் கொண்டு கவி உணர்த்த விரும்பும் வாழ்க்கைப் பரிமாணம் எது? பாம்பு என்பது பல விஷயங்களுக்குக் குறியீடாக அமைவது. ஃப்ராய்டின் ‘கனவுப் பாம்பு’, சிவன்தலைப் பாம்பு, பாம்புப் பண்ணையிலுள்ள பாம்பு, ஊருக்குள் ஓடிவந்து விட்ட பாம்பு, மண்ணுளிப்பாம்பு, குண்டாந் தடியால் அடிபடும் பாம்பு, நீர்ப்பாம்பு, கீரியின் அண்மையிலான பாம்பு, புதுமைப் பித்தனின் கயிற்றரவுப் பாம்பு...

சில விஷயங்களை நவீன கவிஞர்கள் என்னென்ன வழிகளில் நேரிடையான அர்த்தத்திலும், குறி யீட்டளவிலும் தங்கள் கவிதைகளில் கையாண்டு வருகிறார்கள் என்பது குறித்த அகல்விரிவான ஆய்வலசல்களும் நம்மிடையே வரிவடிவில் அதிகம் இல்லை. எடுத்துக்காட்டாக, ‘கிளி’ என்ற சொல் என்னவெல்லாம் பொருளுணர்த்த கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பல்வேறு கவிதைகளை முன்வைத்து அலசியாராயலாம். அதே போல், மழை, மரணம், வானம் குழந்தை போன்ற சொற்கள் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு பரிமாணங்களை, அர்த்தங்களை ஆய்ந்து பார்த்துத் தொகுப்பாக்கிப் பிரசுரிக்கலாம். ஒரு கவிதையை எப்படி உருவாக்கினார், ஏன் அவ்வாறு உருவாக்கினார், வார்த்தைகளை எவ்வாறு தேர்ந் தெடுத்துக் கொண்டார், என கவிஞர்களிடம் கட்டுரை வாங்கி தொகுப்பாக்கலாம். இவை யெல்லாம் நவீன தமிழ்க்கவிதையை நாம் அதிகத் தெளிவோடு உள்வாங்கிக்கொள்ள உதவும்.

பிரான்சிஸ் கிருபாவின் மொழியாளுமை அற்புதமானது. அதற்கு இத்தொகுப்பில் ஏராள மான கவிதைகளை, கவிதை வரிகளை ஆதாரங் காட்ட முடியும். எடுத்துக்காட்டாக, பக்கம் 47இல் இடம்பெற்றுள்ள கடந்து செல்லுதல் என்ற கவிதையில் இடம்பெறும்

‘உயிர் நனைந்த பாதசாரி
வழி கடந்து பெருகக் கூடாமல்
மருவி பெருகி மார்கழியானான்
சூடித்தந்த சுடர்க்கொடியின் பார்வை
முகிழ்த்தது

என்ற வரிகள். பரிசுத்த ஆவி என்ற கவிதை ஸபகம்27], பாயுமொளி நீ எனக்கு ஸபக்கம் 1], பிம்பத்தின் பிணம் ஸபக்கம் 3] என்று சுட்டிக்காட்டிக் கொண்டே போகலாம்.

துயர் என்ற தலைப்பிட்ட கவிதை இது:

இரவின் இமையிடுக்கில்
சூடாகச் சிவந்து வழிந்த
ஒரு கண்ணீர்த்துளியாக
காலையில் சூரியன் எழவில்லை.
மாலையில் ஏன் அப்படி நிகழ்ந்தது?
மலையேறும் வீரனைப்போல்
கன்ன முகடேறி முன்னேறி
கண்ணுக்குள் ஒளியும்
எப்படி எல்லோரையும் மன்னிக்கிறது
என்னைத் தவிர.

மாலையில் என்ன நிகழ்ந்தது என்பது கவிதை யில் நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. அது தேவையில்லை. ஆனால், நெருப்புச்சூரியன் ஒரு கண்ணீர்த் துளியாக வழிந்தது என்பதே துயரின் தீவிரத்தைக் குறிப்புணர்த்திவிடுகிறது. தவிர, கண்ணீரின் இயல்பு கீழ்நோக்கி வழிதல். ஆனால், இங்கோ ஒரு கண்ணீர்த்துளி-அது சூரியனோ, இன்னொன்றோ-மேலேறிச் சென்று கண்ணுக்குள் ஒளிந்துகொள்கிறது. ஸமற்றவர்கள் பார்க்கலாகா தென்றா?] ஆனாலும், அது கோழையாக அல்ல, மலையேறும் வீரனைப்போல முகடேறுகிறது. சிந்தாமல் எல்லோரையும் மன்னித்த கண்ணீர்த் துளி தன்னைவிட்டு நீங்கிச் செல்லாததால் துயரி லிருந்து தனக்கு நிவாரணமளிக்காத அளவில் தன்னை மட்டும் தண்டிக்கிறது என்கிறாரோ கவிதை சொல்லி? துயருற்றிருக்கும் இரவு இருளைக் குறிக்கிறதா? கண்ணீர்த்துளி வழிந்துவிடாமலிருப்பதால் மனதின் வலி குறைந்துவிடாத நிலையைத்தான் ‘சூரியன் எழவில்லை’ என்ற சொற்பிரயோகம் குறிக்கிறதா? துயருற்ற இந்த மனநிலையை உணர்த்த இத்தனை விவரிப்புகள் தேவையா என்ற கேள்விக்கு, இத்தகைய விவரிப்புகள், இத்தனை விவரிப்புகள் இல்லாத நிலையில் துயரின் அடர்வை இவ்வாறு இத்தனை துல்லியமாக உணர்ந்துகொள்ள வழியுண்டா என்ற எதிர்க் கேள்வியையே பதிலாகத் தரவேண்டியுள்ளது. மேலே தரப்பட்டுள்ள அர்த்தங்கள் ஒரு வாசிப்பில் எனக்குக் கிடைத்தவை. வாசிக்க வாசிக்க... இன்னும் ஏராளமான அர்த்தசாத்தியப்பாடுகள் உருவாகிக் கொண்டே வரும்! இந்தத் தன்மையை பிரான்சிஸ் கிருபாவின் பெருவாரியான கவிதைகளில் காண முடிகிறது. நேரிடையான, எனில், தாக்கம் குன்றாத கவிதைகளையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது. எ.கா: தள்ளுவண்டிக் கோவில்காரன்

மனதில் இனமறியாததும், இனமறிந்ததுமான வலியை, ஆனந்தத்தை, கலவரத்தை, கனிவை ஆகச் சிறந்த வகையில் கவிதையில் பதிவு செய்வதற்கான மொழியை, நடையை, தொனியைத் தேடிய வண்ணமேயிருக்கிறது இக்கவி மனம்.

இந்தத் தொகுப்பிற்கு சக-கவிஞர் யூமா வாசுகி எழுதியுள்ள முன்னுரையில் “கவிதையின் இயற்கைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து மாற்றாக பிரபஞ்சம் உதிரமாக ஓடும் உள்ளுடல் சூட்சுமத்தைப் பெற்றிருக்கிறார் கிருபா: என் நண்பன்!” என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். நல்ல கவிதைத் தொகுப்புகள் நம் எல்லோருக்குமான, எந்நாளுக்கு மான நண்பர்கள் என்ற உண்மை இந்த மூன்று கவிதைத்தொகுப்புகளால் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது!

***

இரவெல்லாம் விழித்திருந்த நிலா
எழுதியவர்: தேவதேவன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
விலை: ரூ.30.00

லட்சுமிக்குட்டி
எழுதியவர்: கண்மணிராசா
வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
விலை: ரூ.40.00

ஏழுவால் நட்சத்திரம்
எழுதியவர்: ஜெ.பிரான்சிஸ் கிருபா
வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்
விலை: ரூ.80.00

Pin It