மரணம் என்ற மர்மப் புதிரை, விடுபடவியலா அச்சவுணர்வைப்பற்றி எழுதாத கவிஞர்களே இருக்கவியலாது எனலாம். பலர் எழுதியுள்ள ஒரு - கருப்பொருள் என்னும்போது ஒப்புநோக்கல் தவிர்க்கவியலாது. ‘மரணத்தின் நேர்காணல்’ என்ற தலைப்பே ஒரு வரிக் கவிதை. “என்னை எல்லா வகையிலும் இயக்குவது, சோர்வை, களைப்பை அகற்றுவது மரணம் என்ற சொல்தான்”, என்று தன்னுரையில் குறிப்பிடுகிறார் கவிஞர். அ.ஜ.இஷாக்.

தொகுப்பிலுள்ள கவிதைகளில் மிகுதியானவை மரணத்தைப் பல கோணங்களிலிருந்து துருவிப் பார்ப்பவை என்றாலும் மரணம் தவிர்க்க வேறு சில கருப்பொருள்கள் இடம்பெற்றிருக்கும் கவிதை களும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மரணம் குறித்த கவிதைகளில் ‘கழுகின் இரையைப் போல்/நம்மைக் கொத்திப் போக/காத்திருக்கிறது.../மரணம் சூழ்ந்த வாழ்க்கை / கால அவகாசமில்லாமல் / தேர்வெழுத அனுமதிக் கிறாய்/எப்பொழுது விடைத்தாள்களை/வாங்கு வாயோ.../லேசான பதற்றம்/தொற்றிக் கொள்கிறது’ போன்ற அடர்செறிவான, உருவகமும், குறியீடு களும் நிறைந்த கவிதைகளும் உண்டு.

‘பறந்துகொண்டேயிரு/மரணத்தின் மடியில்/விழும்வரை’ போன்ற ‘படித்துப் படித்து அலுத்துவிட்ட’ வரிகளும் உண்டு.

மரணம் தவிர்த்த மற்ற கவிதைகளிலும் இந்த இரண்டு வகைக் கவிதைகளையும் காணமுடிகிறது.

எடுத்துக்காட்டாக, பூமியிலிருந்தபடியே/வானத்தை/அப்படியே/படமெடுக்கிறது.../கலங்காத நீர்நிலை-கலங்கி நின்றால்/உன் கண்ணிலும்/சிலந்தி கூடு/கட்டிவிடும் போன்ற கவித்துவம் மிக்க வரிகளும், விவரிப்புகளும் இடம் பெற்றிருக்கும் கவிதைகளும் உண்டு.

பல் இல்லாவிட்டாலென்ன.../கண்களே கூட/சிரிக்கும் பார்./இது காதலின் அதிசயம்- என்று சலிப்பூட்டும் வரிகளும் உண்டு.

சமூகப் பிரக்ஞை மிக்க கவிதைகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பக்.50, பக்.51, பக்.56, பக்.58, பக்.62, என கணிசமான எண்ணிக்கையில் கவிதை களைச் சுட்ட முடியும். எனில், அவையாவுமே ஒரேயளவான கவித்துவம் கொண்டவை என்று சொல்ல முடியாது. முயன்றால் கவிஞரால் அந்தக் கவித்துவத்தையும், தனித்துவத்தையும் எட்டிவிட முடியும். கவிஞர் வெண்ணிலாவின் அணிந்துரை நூலிற்குச் சிறப்பு சேர்க்கிறது.

மரணத்தின் நேர்காணல்

கவிஞர் அ.ஜ.இஷாக்

வெளியீடு : அகநி வெளியீடு

விலை : ரூ.40.00

Pin It