பேரா.கே.ஏ.நீலகண்டசாஸ்திரி அவர்கள் தென்னிந்திய கீழ் எல்லையினை விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சியுடன் முடிக்கிறார். இப்புள்ளியிலிருந்து தென்னிந்திய வரலாற்றின் இரண்டாம் பாகம் தொடங்கப்படவேண்டும். இக்கட்டம் வரலாற்றின் இன்னொரு வகையான உற்பத்திமுறைக்கு இட்டுச்செல்கிறது. இதில் ஐரோப்பியர்களும் பங்கு கொள்ளும் உலகமயமாதல் நிகழ்கிறது. இவர்கள் இங்கு இதனையே தாவு தளமாகக் கொண்டு அகன்ற இந்தியா வையும் தம் துப்பாக்கிக் கைகளுக்குள் கொண்டுவருவது சாத்தியமாயிற்று. இவ்வுலகமயமாதலில் தென்னிந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் கூலிகளாகப் புலம் பெயர்ந்தனர். இதனை மையமாகக் கொண்டு இப்பாகத்தினை எழுத வேண்டும்.

இதற்கான மூலச்சான்றுகள் அரபிக், பாரசீகம் போன்ற மத்திய கிழக்காசிய மொழிகளிலும், ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், போர்ச்சுக்கீஸ், லத்தின் போன்ற மேற்கு ஐரோப்பிய மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், துளு, உருது, மராட்டி போன்ற இந்திய மொழிகளிலும், கூடுதலாக சமஸ்கிருதம், சிங்களம், மலாய், தாய், பர்மிய மொழிகளிலும் உள்ளன. இவை கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப்பட்டயங்கள், அலுவலகச் சுவடிகள் போன்ற வடிவங்களில் உள்ளன. இவற்றை வகைப்படுத்தி ஓர் அறிஞர் குழுவே எழுதுதல் வேண்டும்/ இயலும்.

கி.பி.1400 தொடக்கம் தென் இந்தியாவில் வேறெப் போதைவிடவும் மக்களின் புலப்பெயர்வு அடிக்கடி நிகழ்ந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறு அமைந்த இடப்பெயர்வில் பல கலப்பினங்கள் உருவாயின. கிறித்து சகாப்தத்தினை ஒட்டி தென் இந்தியாவின் தென்மேற்குப் பகுதியின் கொச்சி, திருவாங்கூர் போன்ற இடங்களில் யூத இனக்கலப்பு உருவாயினும் அரபிய வணிகர்களின் வருகையால் மலபாரில் உருவான இனக்கலப்பு பெரும் சமூக, அரசியல் போக்குகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையின் ஊர்களில் போர்ச்சுகீசியர் பரவருடன் இணைந்து புதுக்கலப்பினை உருவாக்கினர். மரக்காயர் என்ற புது இனமும் உருவானது. இவற்றுக்கெல்லாம் காரணம் வணிகமே.

உள் நாட்டுப்பகுதியிலும் பல கலப்பினங்கள் உருவாயின; புலப்பெயர்வுகளும் நிகழ்ந்தன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பல இனக்குழுக்கள் நகர்ந்தன. இப்போக்கிலும் கலப்பினங்கள் தோன்றின. இனக் குழுக்கள் இடையே நடந்த சண்டைகள், போட்டிகள், தொழில்நுட்ப வளர்ச்சி, ஆட்சியாளர்களின் கொடுமை களே இதற்குக் காரணமாயின. இஸ்லாமிய அரசர்கள் பெண் கேட்டதால் “தொட்டியன்கள்” தப்பித்து தெற்கில் நகர்ந்ததாகவும் தொட்டியன்கள் கப்பிலியன் இனத்துப் பெண்களைத் துன்புறுத்தியதாகவும் குறிப்புகள் உண்டு.

சாதி, பிறப்பின் அடிப்படையிலானது. ஒருவர் ஒரு சாதியில் பிறந்து விட்டால் வேறு சாதியினராக மாற முடியாது என்று சொல்வாரும் உண்டு. அதிலும் பார்ப்பன‌ராக மாறவேமுடியாது என்று சொல்வாரும் உண்டு. ஆனால், வரலாறு வேறு மாதிரியான பாடங்களைக் கொண்டுள்ளது. மேற்சொன்ன காலகட்டத்தில்தான் சிவாலி பார்ப்பன‌ர்கள் என்ற புதுமக்கள் கூட்டம் உருவாக்கப்பட்டது. சமூகப்படிநிலையில் பல இனக் குழுக்கள் பார்ப்பன‌ர்களை உயர்வாக மதிக்காமல் புறக்கணிக்கும் போக்கு இக்காலகட்டத்தில் மிகுதியாக இருந்தது. உள் நிலத்து இனக்குழுக்களிடையே உருவான புத்தினங்கள் தவிர முகமதியர்-உள்ளூர் இனத்திற்கும், ஐரோப்பியர்-உள்ளூர் இனத்திற்கும் கலப்பினங்கள் உருவாயின.

ஒரியப் பெண்களுக்கும் முகமதியர்களான பட்டானியர்களுக்கும் பிறந்தவர்களே அருவர் என்ற இனத்தினர். மலாய் பகுதியிலிருந்து ஆங்கிலேயர்களால் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட சீனர்கள் தமிழ்ப் பறையர் இனத்தினருடன் இணைந்து சீனத்தமிழ் இனத்தினை உருவாக்கினர். முகமதியர் படையெடுப்போடு தெற்கு நோக்கி வந்த சம்பர் பந்தர் என்ற குடிசை போடும் இனத்தின் ஒரு பகுதியினர் மீண்டும் வடக்கிற்குத் திரும்பவே இல்லை. தீயர் பெண்களும், படகர் பெண்களும் ஐரோப்பியருடன் விரும்பி வாழ்ந்துள்ளனர். நெல்லூர் மாவட்டத்தின் தம்பலர் என்ற பார்ப்பன‌ர் பிற மாவட்டங்களில் சூத்திரர் என்று கருதப்பட்டனர். நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பாத பழங்குடி இன மக்கள் உதவியுடனேயே ஐரோப்பியர் தங்கள் அதிகாரத்தினை இங்கு நிலைநிறுத்தினர்; நாகரிக வாழ்க்கைக்குத் திரும்பிய இனக்குழுக்களுடனேயே மோதியுள்ளனர்.

ஐரோப்பியர் வருகையை ஒட்டிப் போர்த்துறை, கப்பல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பெருமளவிலான மாற்றங்கள் தென்னகத்தில் நிகழ்ந்தன. கடல்சார் வரலாறு அன்றைய நிலையில் ஓர் உலகமயமாதலை நிகழ்த்தி யுள்ளது. முத்தெடுக்கும் தொழில் தென்னகத்துப் பொது மக்களிடமிருந்தும், அரசர்களிடமிருந்தும், ஐரோப்பியரின் கைகளுக்கு மாறிவிட்டது. மிஷினரிமார்களின் துணை யோடு கணிசமான மக்கள் மதம் மாற்றப்பட்டிருந்தனர். இதற்கு வேறு வேறு காரணங்களும் உண்டு. இவர்கள் அறிமுகப்படுத்திய அச்சுத் தொழில்நுட்பம் பிற துறை களில் சில உன்னதங்களை நிகழ்த்தியது. ஆட்சியியல், அலுவல் நடவடிக்கைகள் ஆவணங்களாயின. கல்விக் கூடங்கள் புதுவகைத் தலைமுறையினை உருவாக்கின. ஆனால், அது அதிகாரவர்க்கமானது.

ஐரோப்பியத் தொழில் நுட்பம் உள்நாட்டினரை அடிமையாக்கியது. அவர்கள் மலைக்குடியினரின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களுக்குச் சொந்தமான மூலவளமான காடுகளை அழித்துப் பணப்பயிர்களான காபி, தேயிலை, ரப்பர், புகையிலை போன்றவற்றை அறிமுகப்படுத்தினர். மலைகளுக்குச் சொந்தமான மலைக்குடியினர் நிரந்தரமான மலையடிமையாயினர்; எதிர்த்தவர் குற்றப்பரம்பரை எனப்பட்டனர். இந்தியாவின் இயற்கைச்செல்வங்களை அள்ளிச் செல்லவே ஆங்கிலேயர் காடுகளை அழித்து இந்தியாவெங்கும் வலைப்பின்னலாய் இருப்புப் பாதையினை அமைத்தனர். இதனாலேயே இரும்புத்தடம் ஒரு துறைமுகத்தில் தொடங்கி மறுதுறைமுகத்தில் முடிவடையும் படியாக இடப்பட்டுள்ளது. இந்தியாவின் கனிமவளங்கள் இப்படித்தான் கொள்ளையடிக்கப்பட்டன.

கி.பி. 1700 முதல் 1800 வரை ஒரு மாதிரியான சமூக அமைப்பும், 1800 முதல் 1900 வரை வேறு மாதிரியான சமூக அமைப்பும், 1900 முதல் பிறிதொரு சமூக அமைப்பும் தென்னகத்தில் உருவானது. மேற்சொன்னவற்றுள் முதல் கால கட்டத்தில் தென்னிந்தியா முழுமைக்கும் இனம், மொழி, சமயம், வேறுபாடியின்றி ஆங்கிலேயரின் ஒடுக்குதலுக்கு எதிராக மக்கள் திரண்டனர். வெற்றியும் கண்டனர்; தோல்வியும் கண்டனர். இப்போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்வதிலும் இனம், மொழி, சமயம் பாராது தென்னிந்தியர்கள் துரோகச்செயல்களிலும் ஈடுபட்டனர். இது தென்னிந்திய மக்களின் மனோ நிலையைப் புரிந்துகொள்ளும் ஒரு கீற்று. தோழமையும், துரோகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இயங்கிவருகின்றன. நவாப்புகளும், நாயக்கர்களும் எப்படி மாறி மாறிக் காலைவாரிக்கொண்டார்கள். மராட்டியர்கள் எவ்வாறு இடையில் புகுந்து கொண்டார்கள். இச்சூழலில் சமயங்களுக்குச் சொந்தமான மடங்கள் எவ்வித எதிர்ப் பினையும் வெளிப்படுத்தாமல் இயங்கி வந்தன. சமய மடங்கள் ஐரோப்பியர்களுடன் எவ்வித அணுகுமுறையினைக் கொண்டிருந்தன.

இரண்டாம் காலகட்டத்தில் சில இனங்கள் தங்களை உயர் இனமாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் தேவை என்ன? இரண்டாம் காலகட்டத்தில் உலகமயமாதல் மிகுதியாக நிகழ்ந்துள்ளது. மிஷினரிமார்களின் வருகையும், ஆங்கிலேய சிவில் அதிகாரிகளின் இயக்கமும் இதனை உருவாக்கியது. அவர்கள் தொகுத்தளித்த தென்னிந்திய வரலாற்று ஆவணங்கள் சிறந்த மூலச் சான்றுகளாக உள்ளன. மேற்கத்திய பாணியிலான ஆட்சிமுறையும், சட்டவரையறை, நீதிமன்ற இயக்கம் போன்றன புதியவாழ்விற்குத் தென்னிந்தியரைத் திருப்பின. உள்ளூர் ஆட்சி நிர்வாகம், கலெக்டர்களின் ஆட்சிமுறை போன்றன ஆட்சித்துறையில் சில மாற்றங்களைக் கொணர்ந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட பிறகு தென்னிந் தியர்கள் படடியெட உவைணைநn என்ற அளவிற்கு மாறிவிட்டனர். அவர்கள் இயங்கும் புழங்கு தளம் இன்றைய புழங்கு தளத்தினைவிட பாரிய அளவில் பெரியது. பிரிட்டனின் பிரஜை என்ற நிலையில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட எந்த நிலப்பகுதியிலும் வாழலாம் என்ற நிலை உருவாகி விட்டது. தென்னிந்தியாவிலிருந்து இருவித மக்கள் கூட்டத்தினர் பிரிட்டனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி களுக்குச் சென்றுள்ளனர். நாட்டுக்கோட்டைச் செட்டி யார்கள் பணம் திரட்டும் பொருட்டு பர்மா போன்ற இடங்களுக்குச் சென்றனர்; இன்னொரு மக்கள் திரள் உழைக்கும் கூட்டத்தார். இவர்கள் பிழைப்புத்தேடி மலேயா, மொரிசியஸ், இலங்கை, தென் அமெரிக்கா போன்ற நிலப்பிரதேசங்களுக்குக் கூலிகளாகச் சென்றனர். மூன்றாவதாக பிரிட்டனின் இந்தியப் படையில் இணைந்த வர்கள். இவர்கள், போர்வீரர்களாக மேற்கத்திய நாடு களுக்குச் சென்றனர். இக்காலகட்டம் முழுக்க கலகமும், போராட்டமும் ஒடுக்குதலும் தொடர்ந்த வண்ணம் இருக்க மடாதிபதிகளும், கோயில் குருமார்களும் எப்படிக் குந்திக்கொண்டு தின்றார்கள்? தெரியவில்லை. பல பழங்குடிகள் நகர வாழ்வை நோக்கி நகரும் காலம் இதுதான்.

மிஷினரிமார்கள் தமிழகத்தில் கணிசமான அளவிற்குத் தமிழ்ச் சமூகத்தினை மதம் மாற்றுகையில் இருபெரும் சமூகங்கள் திரளினராக இணைந்தனர். சாணார், நாடார், பரவர், பறையர் சமூகங்கள் இதற்கு முதன்மை இலக்காயின. இவர்கள் உடல் உழைப்பினை மூலதனமாகக் கொண்ட தமிழ்ச் சமூகத்தினர். ஆனால், பிறமொழி பேசும் உழைக்கும் சமூகத்தினரான ஒட்டர்கள், போர்த் தொழிலையும் பயிர்த்தொழிலையும் செய்துவந்த கம்பளத்து நாயக்கர்கள் ஏன் கிறித்தவராக மாறிக்கொள்ள வில்லை? தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர்கள் ஏன் கிறித்தவராக மாறவில்லை? இதற்கான மனோநிலை என்ன? இதுமட்டுமல்ல, தமிழகத்தில் கிறித்தவ மராட்டியர்களோ கிறித்தவ சௌராட்டிரர்களோ இல்லை.

1800-1900 காலகட்டத்தில் மக்களின் மனோநிலை ஒரு கூசயளேவைiடியேட நிலையில் இருந்துள்ளது. செல்வந்தர்களின் பிள்ளைகள் ஐரோப்பியக் கல்விநிலையங்களில் பயின்றனர். ஐரோப்பிய பாணியிலான நடை, உடை, பாவனைகளுக்கு மாறிக்கொண்டனர். ஐரோப்பிய உணவு வகையான காபி, தேநீர், புகைத்தல் போன்றவற்றுக்கு மாறிக் கொண்டனர். இவற்றையெல்லாம் கடைப்பிடித்த ஆண்கள், பெண்களை ஐரோப்பிய பாணியில் மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வில்லை. ஐரோப்பியர் ஒரு புறம் தேவதாசிமுறையை ஒழிக்கவேண்டும் எனக்கூவிக்கொண்டே இன்னொருபுறம் அவர்களோடு குலவினர். பவானியில் ஒரு தேவதாசி குழுவினர் பொருள் தெரியாத பிரிட்டனின் நாட்டுப் பண்ணிற்காக அபிநயம் பிடித்துப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர் என்ற குறிப்பு உண்டு. இக்கால கட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் தென்னிந்தியர்கள் ஐரோப்பியப் படையில் இணைந்தனர். ஐரோப்பியப் படையினர் அதிக அளவில் இந்தியப் பெண்களை மணந்ததாலேயே யூரேசிய இனம் உருவானது. இக்கால கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இருப்புப் பாதைகள் தான் அடுத்த நூற்றாண்டில் காந்தியின் தேசியப் பயணத்திற்குத் தோதாக அமைந்தது.

1900-2000 வரையிலான காலகட்டத்திற்குத் தனியொரு பாகம் ஒதுக்கப்பட வேண்டும். முதல் காலகட்டத்தின் முதல் பாதியில் ஐரோப்பியருடன் வணிகவுறவுகொண்டு அடுத்த பாதியில் முழுமூச்சாக ஆத்திரத்துடன் எதிர்த்தனர். இரண்டாம் காலகட்டத்தில் ஐரோப்பியருடன் ஒருங் கிணைந்தும் ஒதுங்கியும் செயல்பட்டனர். மூன்றாம் காலகட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்பாக அரும்பிய உணர்வு விடுதலைப்போராட்டமாக வீறுகண்டபோது இந்திய தேசியம் கொஞ்சம் இந்து தேசியமாகவும் உருப்பெற்றது. இதில் இஸ்லாமியர்கள் அக்கறை காட்டிய அளவிற்கு கிறித்தவர்கள் அக்கறை காட்டவில்லை. தொடக்கத்தில் ஐரோப்பியர்களுக்கு எதிரான உரிமைப் போராட்டத் தினைத் தொடங்கிவைத்த பழங்குடியினர் பின்னாட்களில் ஏன் தணிந்தனர்? பழங்குடி இனத்தலைவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்க தேசிய இயக்கம் ஏன் தவறியது? விடுதலைப் போருக்கான முந்தைய காலகட்டங்களில் வெவ்வேறு இனக்குழுக்களிடையே கலப்பு நிகழ்ந்ததைப் போல விடுதலைப்போராட்டகாலத்தில் ஏன் நிகழவில்லை? விடுதலைப் போராட்டத் தலைவர்கள் ஏன் தங்களைச் சாதிய அடையாளப்படுத்திக் கொண்டனர். தென் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே தேசியத் தலைவர்கள் சாதிவாலினை வெட்டிக்கொண்டனர். காமராஜ் நாடார் என்று அறியப்படவில்லை, சிதம்பரம் பிள்ளை என்று அறியப்படவில்லை. ஆனால், விடுதலைக்குப் பிறகு அவர்களுக்குத் தொண்டர்கள் வர்ணம் பூசினர். சாதியப் பெயர்களோடு அறியப்பட்ட பிற தென்னாட்டுத் தலைவர்கள் விடுதலைக்குப் பிறகு மக்கள் தலைவராகவே அறியப்பட்டனர். இதுதான் தென்னிந்திய மக்களிடையேயான உளவியல் சிக்கல்.

ஒரு மசாலா சினிமாவை ஒரு குறிப்பிட்ட தென்னிந்திய மொழியில் தயாரித்துப் பிற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெற்றியடைந்துவிடலாம். ஒரு நல்ல விமர்சன நூலினை இதுபோல் மொழி பெயர்த்து விற்பனை வெற்றியினை அடைய முடியாது. இந்தியாவின் அனைத்து மொழி களிலும் எழுதப்பட்ட ராமாயணத்தில் இராமன் சீதையினைத் தீயிட்டான். ஆனால், இராமனைப் பெரியார் மட்டும்தான் தீயிட்டார். திராவிட இனங்களுக்கான கழகக்கொள்கைகள் தமிழர்களுக்கு மட்டுமெனச் சுருங்கிப்போனது. வரலாற்று ஆசிரியர்களும்கூட தென்னிந்திய வரலாறு என்ற ஆய்வினைத் தமிழகத்து எல்லைகளோடு சுருக்கிக் கொண்டனர். ஆனால், பிற திராவிட இனத்தினர் இல்லாமல் தமிழர் இல்லை. இவர்கள் இல்லாமல் அவர்களும் இல்லை. ஒரே மாதிரியான புவியியல் அமைப்பும், உணவு, உடை, பழக்க வழக்கங்களும், வழிபாட்டு முறைகளும், கோயில் கட்டடக்கலைக் கூறுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தென்னிந்திய வரலாற்றினை எழுதும் அறிஞர் குழுவினர் தம் தாய்மொழி தவிர பிற தென்னிந்திய மொழிகளையும் அறிந்தவராக இருத்தல் வேண்டும். பழங்குடி இனத்தினைச் சேர்ந்த

ஒரு அறிஞரும் இதில் இடம் பெற வேண்டும். இவற்றுடன் வரலாற்று உணர்வு கொண்ட மருத்துவர், பொறியியல் வல்லுநர் போன்றோரும் பங்கு பெறவேண்டும். தென்னிந் தியாவின் வரலாற்றுச்சான்றுகள் ஐரோப்பிய மொழி களிலும் கிடைப்பதால் ஐரோப்பிய அறிஞர்களுடனும் இணைந்து தென்னிந்திய வரலாறு இரண்டாம் பாகத்தினை எழுதும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

சென்ற நூற்றாண்டு முழுக்க இந்திய வரலாற்றில் தென்னிந்தியர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர். 1947 பிரிவினையின்போதும், 1962, 1966, 1973 எல்லைப் போர்களின் போதும் 1992 பாபர் மசூதி சிக்கலின்போதும் 1984 சீக்கியர் படுகொலையின்போதும் குஜராத்தில் அண்மையில் நடந்த வெறியாட்டத்தின்போதும் தென்னிந்தியர் அமைதிகாத்தனர். விக்ரம் சாராபாய் முதல் மயில்சாமி அண்ணாத்துரை வரை விண்வெளித்துறையில் தென்னிந்தியரே தலைமைத் தளகர்த்தர் ஆவர். மாறாக, படைத்துறையில் அவ்விடங்களைப் பெரும்பாலும் வடவரே பற்றிக்கொள்கின்றனர். கனரகப் பொருள் உற்பத்தியில் வடவர் முன்னணியில் இருக்க கணினித் துறையிலும் மென்பொருள் உற்பத்தியிலும் தென்னவரே முன்னணி வகிக்கின்றனர். கவலைக்கிடமாக தென்னிந்திய வரலாற்றாசிரியர்களை மார்க்சிய சிந்தனைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை; இலக்கிய ஆசிரியர்கள் இத்துறையில் ஆற்றிய பணியினைவிட வரலாற்று ஆசிரியர்கள் சாதித்தது குறைவே. இச்சிந்தனையின் பின்னணியில் வரலாறு எழுதுவதில் தென்னிந்தியர்கள் வீறு கொள்ளவேண்டும்.

Pin It