எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக அமையும் குறுந்தொகை முப்பொருள்களால் கட்டமைக்கப்பட்ட இலக்கியம், இலக்கியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றும் சிறப்பாக அமைந்து, இலக்கியத்தின் செறிவான கட்டமைப்புக்கு உதவுகின்றன. முப்பொருள்களில் உரிப்பொருள் திணையின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டுவதாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளும் முறையே புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் பொருட்களைக் கொண்டு அமைகின்றன. இக்கட்டுரை குறுந்தொகை நெய்தல் திணையில் இடம்பெறும் உரிப்பொருளை ஆராய்கிறது.

உரிப்பொருள்

திணைக்குரிய ஒழுக்கத்தை எடுத்துக் கூறுவது உரிப்பொருள். உரிப்பொருள்கள் திணைக்கு உயிர்நாடியாக அமைபவை. ஒரு பாடலில் முதல், கருப்பொருள்கள் மயங்கி வரலாம். ஆனால், உரிப்பொருள் மயங்குதல் கூடாது. "உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே" (தொல்.பொருள்.நூ.959) என்பது தொல்காப்பிய நூற்பாவாகும்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங்காலை திணைக் குரிப்பொருளே (தொல்.பொருள்.நூ.960)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அகத்திணை இயலில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் மற்றும் இவற்றின் நிமித்தங்கள் உரிப்பொருள்களாகக் குறிப்பிடப்படுகின்றது. தமிழண்ணல் உரிப் பொருளின் இன்றியமையாமையினைப் பின்வருமாறு குறிப்பிடுவர்.

உரிப்பொருள் என்பதே பாடலின் அடிக்கருத்து ஆகும். மூன்று பொருளும் அமையும் பாடல்களும் உண்டு முதற்பொருளின்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும் மட்டுமே அமையும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் பெரும்பான்மை எனலாம். கருப்பொருளும் இல்லாமல் உரிப்பொருள் மட்டுமே அமையும் பாடல்களும் பல உள. முதலும் கருவும் இன்றிப் பாடல் அமையலாம். உரிப்பொருளின்றிப் பாடல் அமையாது. (தமிழண்ணல் சங்க இலக்கிய ஒப்பீடு ப.38)

குறுந்தொகை நெய்தல்திணைப் பாடல்களில் அமையும் உரிப்பொருள்களை அவற்றின் துறைகளின் அடிப்படையில் உற்றுநோக்கும் போது இலக்கிய நுட்பங்கள் வெளிப்படுகின்றன.

இரங்கலும் அதன் நிமித்தமும்

நெய்தல் திணையின் உரிப்பொருளாக இரங்கலும் அதன் நிமித்தமும் கொள்ளப்படுகின்றன. இருத்தல் என்னும் உணர்வு நீண்ட நேரம் நிச்சயமற்ற காத்திருத்தலின் வாயிலாக இரங்கல் உணர்வாக மாற்றமடைகிறது. மிகுதியான துன்பத்தை வெளிப்படுத்தும் இரங்கல் உணர்வு பாடல்களில் வெளிப்படுகின்றது. இலக்கண நூலார் நெய்தல் திணைக்குப் பெரும்பொழுது கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனிற்காலம் ஆகிய ஆறு காலங்களையும் சிறுபொழுதில் ஒன்றான எற்பாட்டையும் குறிப்பிடுவர். எற்பாடு என்பது சூரியன் மறைவதற்கு ஆயத்தமாகும் நேரம் ஆகும். எல்+பாடு = எற்பாடு. நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல் என்பதற்கு மு.கோவிந்தராசன் தரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது.

கடலும் கடல் சார்ந்த இடமும் கொண்டு விளங்குவதால் நெய்தல் மீன்வளம் நிறைந்த பகுதியாகும். மீன்பிடிக்கக் கடலில் கட்டுமரம் ஏறிச் செல்வதே பெரும்பாலும் நெய்தல் நிலத்தார் தொழில் ஆதலின், அவர் குறித்த பொழுது வராத நிலையில் தலைவியர் கடலையே வெறித்துப் பார்த்து இரங்கலும், இரங்கல் நிமித்தமாக எழும் பேச்சுகளும் இந்நிலத்துக்குரிய ஒழுக்கமாகும். (மு.கோவிந்தராசன், இலக்கண, இலக்கிய நுழைவாயில் ப.122)

இக்கருத்து நிச்சயமற்ற காத்திருத்தலின் காரணமாகவே இரங்கல் உரிப்பொருள் தோன்றுவதை உணர்த்துகிறது.

தலைவியின் மனத்தில் கடல்வழிப் பிரிவு மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முல்லை நிலத்தில் நிலவுகின்ற இருத்தல் போன்று அல்லாமல் நெய்தல் நிலத்தில் இருத்தல் என்பது நிச்சயமற்ற இருத்தல் ஆக தோற்றம் கொள்கிறது. கடலில் தொலைவுக்குச் சென்ற தலைவன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பில் இருப்பாள். கடற்கரைச் சார்ந்த சூழ்நிலைகளை எல்லாம் உய்த்து உணரும் தலைவி தலைவன் வராத நிலையில் மிகுந்த துன்பம் கொள்கிறாள். கடற்கரையிலுள்ள கானல் சோலைகள், அன்றில் பறவைகள் மற்றும் மாலை நேரச் சூழல் முதலியவற்றை எல்லாம் கண்டு தன்னுடைய துன்பத்தைப் பதிவு செய்கின்றாள்.

இரங்கல் உணர்வின் வெளிப்பாடு

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு நெய்தல் நிலச் சூழல் மிகுதியான துன்பத்தைத் தோற்றுவிக்கின்றது. கடல் பயணமாகச் சென்றவன் எப்போது மீண்டு வருவான் என்பதை அவளுடைய மனம் சிந்திக்கிறது. நெய்தல் நிலத்தில் உள்ள கருப்பொருள்களின் அடிப்படையில் நெய்தல் நில ஒழுக்கமான இரங்கலும் அதன் நிமித்தமும் வெளிப்படுகின்றன. சிறிது நேரம் கூடத் தலைவனைப் பிரிந்து இருக்கும் எண்ணம் இல்லாதவள் தலைவி. ஆனால், வாழ்க்கைச் சூழல் இருவரையும் பிரித்து வைப்பதில் வெற்றி பெறுகிறது. பொருளின் பொருட்டோ வேறு பணிகளின் பொருட்டோ மற்றும் பரத்தையின் பொருட்டோ தலைவன் பிரிந்திருக்கும் போது தலைவி மிகுதியான துயரம் கொள்கிறாள். பரத்தையர் பிரிவில் துயரம் கொண்ட போதும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறாள். பரத்தையின் வழிப் பிரிந்த தலைவன் மீண்டு வரும்போது அவனால் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் விலகிப் போகின்றன. இந்நிலையிலும் அவனை ஏற்றுக் கொண்டு மனதிலிருந்த மிகுதியான துன்பம் அன்பாக வெளிப்படுகிறது. மேலும் இப்பிறவி முடிந்து மறுபிறவி வந்தாலும் நீயே என் கணவனாக வேண்டும் என்று தலைவி பேசுவதைக் காண முடிகிறது.

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயா கியர்என் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.(குறுந்.49)

என்னும் அடிகளில் காணமுடிகிறது. மேலும் வள்ளுவரின் குறட்பாவிலும் இத்தகையச் செய்தியைக் காணமுடிகிறது. இப்பிறப்பில் பிரியமாட்டோம் என்றதும் மறுப்பிறப்பில் பிரிவுண்டா என்று தலைவி அழுதாள். இதனை,

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள். (குறள்.1315)

என்னும் குறட்பா மூலம் அறியலாம். தலைவனின் நினைவால் அனுபவிக்கக்கூடிய துன்பத்தை வெளிப்படுத்தும் முறைமையில் இரங்கல் உணர்வு இயற்கை சார்ந்த சூழ்நிலையில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. தன்னுடைய துன்பத்தை மற்றொரு பொருள்மீது சாற்றி அப்பொருளும் துன்பப் படுவதாகத் தலைவி தன்னுடைய சிந்தனைகளை மடை மாற்றம் செய்வதையும் காண முடிகிறது.

யார்அனங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன

மீன்ஆர் குருகின் காளல்அம் பெருத்துறை

வெள்ளீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே (குறுந்.163)

என்னும் அம்மூவனார் பாடலில் தலைவி, தன்னுடைய துன்பத்தை கடலும் அனுபவிக்கிறது; என கடல்மீது தன்னுடைய சிந்தனைகளை ஏற்றிக் கூறுவதைக் காணமுடிகிறது, கடலைப்பார்த்து என்னைப்போல நீயும் உறங்காமல் இருக்கின்றாயே? யாரால் வருத்த முற்றாய் என்று தலைவி கேட்பது அவள் மனத்தில் உள்ள இரக்க உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது. மேலும்,

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோநின் துணை (குறள்.1222)

என்னும் குறட்பாவில் தலைவி பொழுதுகண்டு இரங்கி மாலையைப் பார்த்து மயங்கும் மாலையே! நீயும் வருந்துகின்றாய். என் தலைவன் போல் உன் தலைவனும் கொடியவன்? என்று கேட்பது இரக்க உணர்வை வெளிப்படுத்துகிறது. குறுந்தொகையில் கடற்கரை சார்ந்த சூழலில் இருக்கக்கூடிய கருப்பொருள்களை மையமிட்டு வெளிப்படும் சிந்தனை இரங்கலையும், அதற்கான சூழலையும் தோற்றுவிக்கிறது.

குறியிடமும் காரணங்களும்

தலைவன் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு முதலான நிலைகளில் தலைவியை சந்திந்த பின்பு பிரிந்து செல்வான் அப்பிரிவைத் தாங்க இயலாமல் தலைவி துன்பம் அடைவாள். அவளுடைய துன்பத்தை நீக்கும் பொருட்டு தலைவனுடைய பண்பு நலன்களை நன்றாக ஆராய்ந்த பின்பு தோழி குறி இடங்களில் இருவரும் சந்திப்பதற்கு உதவுவாள். குறியை இரவுக்குறி, பகற்குறி என இரண்டு வகைப்படுத்துவர். தலைவியின் துயரம் தலைவனை சந்திக்காத காரணத்தால் மிகுந்து செயலற்ற நிலைக்கு உள்ளாக்குவதைப் பாடல்கள் எடுத்துக் கூறியுள்ளன. தனித்து இருக்கும் இந்நிலையில் தன்னுடைய துன்பத்தைப் பொறுக்க இயலாமல் என்னுடைய மனநிலையை அவனுக்கு தூதாகச் சென்று கூறுபவரைப் பெற்றால் நலம் விளையும் என்று தலைவி சிந்திப்பதைக் காணமுடிகிறது. தன்னுடைய மன விருப்பத்தைக் கூறும்போது அதனை நிறைவேற்றி வைப்பவர்கள் இல்லையே என்னும் இரங்கல் உணர்வு வெளிப்படுகிறது. இக்கருத்தை,

சேயாறு சென்று துனைபரி அசாவாது

உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல (குறுந்.269:1-2)

என்னும் கல்லாடனார் பாடல் தெளிவுபடுத்துகிறது. இதே மனநிலை தலைவனுக்கும் உண்டு என்பதை பின்வரும் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

குணகடற் திரையது பறைதபு நாரை

திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை

அயிரை ஆர்இரைக்கு அணவந் தாஅங்குச்

சேயள் அரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.                                                                            (குறுந்.128)

என்னும் பரணர் பாடிய பாடலில் கிழக்குக் கடற்கரையில் உள்ள வயது முதிர்ந்த நாரை, மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டித் துறைமுகத்தில் பல்கிக் கிடைக்கும் அயிரை மீனை உண்ணுவதற்கு ஆசைப்பட்டதைப் போன்று, நீயும் பெறுவதற்கு அரிதான அவளை நினைத்தாய் என்று கூறுவதன் மூலம், தலைவனுக்கும் தலைவியைச் சந்திக்க இயலாத சூழ்நிலையில் இரங்கல் உணர்வு வெளிப்படும் என்பதைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. பிரிவில் தனித்திருக்கும்போது தலைவன், தலைவி இருவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை நிலவுவதைக் காண முடிகிறது. காணமுடியாத தவிப்பையும் அதனால் விளைந்த துயரத்தையும் இரங்கலாக உணர முடிகிறது.

முதற்பொருள் கருப்பொருள் வழி இரங்கல்

பாடல்களில் முதற்பொருள் மற்றும் கருப்பொருள்களின் வழியும் தலைவன் தலைவியின் இரங்கல் உணர்வு வெளிப்படுவதைக் காணமுடிகிறது.மாலை வேளையில் நிகழும் அன்றாட நிகழ்வுகள் தலைவியின் மனத்தில் துன்பத்தைத் தோற்றுவிக்கின்றன. அஃறிணை உயிர்கள் ஒன்றாக வாழ்வதையும், அவை இன்புற்று இருப்பதையும் காணும் தோறும் தலைவிக்குத் துன்பம் விளைகிறது. பொழுதும், பொழுது சார்ந்த கருப்பொருள்களும் இரங்கல் உணர்வை மிகுவிப்பதற்குக் காரணமாகின்றன. மாலை வானத்தில் சூரியன் மறையும் இச்சூழலில் இரை தேடச் சென்ற பறவைகள் தம்முடைய குஞ்சுகளுக்கு, அவற்றின் வாயில் திணிப்பதாகச் சிறிய அளவிலான இரையை எடுத்துக்கொண்டு ஆணும் பெண்ணுமாகக் கூட்டை நோக்கி வருகின்றன. அவற்றைத் தலைவி காண்கின்றாள். இவ்வாறான வாழ்க்கையை நாம் வாழ இயலவில்லையே என்னும் துன்பம் அவளுக்குள் மிகுகிறது. தலைவனை மணம் செய்துகொண்டு குழந்தை பெற்று அமைதியாக வாழ்கின்ற நாள் எந்த நாளோ என்று அவளுடைய மனம் இரங்குவதைக் காணமுடிகிறது. இக்கருத்தை,

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து

அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை

இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த

பிள்ளை உள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமால் செலவே. (குறுந்.92)

என்னும் குறுந்தொகைப் பாடலில் காணலாம். பொழுதுகண்டு இரங்கல் பொதுவான நிலையில் முல்லைத்திணைக்கும் நெய்தல் திணைக்கும் பொருந்தும். தலைவன் தலைவி. இருவரும் ஒன்றாக இருந்த சூழலை மனத்திற்குள் நினைக்கும் தலைவி மாலைக் காலம் வந்தபோது மாலைக் காலம் மட்டும் என்னை துன்புறுத்துவதற்காக வரவில்லை. மாலையோடு சேர்த்து இரவும் வருகிறது என்று கூறுவதனால் அவளுடைய துன்பம் வெளிப்படுவதைக், காண முடிகிறது. இதை,

வெண்மணல் விரிந்த வித்தை கானல்

தண்ணந் துறைவன் தணவா ஊங்கே

வால்இழை மகளிர் விழவுஅணிக் கூட்டும்

மாலையோ அறிவேன் மன்னே மாலை

நிலம்பரந் தன்ன புன்கணொடு

புலம்புஉடைத்து ஆகுதல் அறியேன் யானே. (குறுந்.386)

என்னும் வெள்ளிவீதியார் பாடல் குறிப்பிடுகிறது. நெய்தல் திணைப் பாடல்களில் காலம், கருப்பொருள் என்னும் நிலைகளில் உணர்வுகள் ஆழமான நிலையில் வெளிப்படுகின்றன.

தனிமைத் துன்பம்

தலைவி தலைவனின் பிரிவால் தனித்திருக்கும்போது, தன்னைச் சார்ந்து நிலவும் சூழல்களை ஒப்புநோக்கித் தலைவி துன்புறுவதைக் காணமுடிகிறது. தன்னுடன் இருந்து தன்னுடைய துன்பத்தை நீக்கி இன்பம் தர வேண்டிய தலைவன், பிரிந்து இருப்பது தலைவிக்கு மிகுதியான ஆற்றாமையைத் தோற்றுவிக்கின்றது. தலைவன் கடமையின் பொருட்டாகப் பிரிந்திருந்தாலும் தலைவிக்கு அப்பிரிவு துன்பத்தைத் தருகிறது. தோழியிடம் தலைவி தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் ஒன்று தலைவன் இல்லாத சூழ்நிலையைக் காட்டுவதோடு தலைவியின் துன்பத்தையும் விவரிக்கிறது. இதை கீழ்க்கண்ட பாடல் மூலம் அறியலாம்.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி

அமைந்தற்கு அமைந்தநம் காதலர்

அமைவுஇலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. (குறுந்.4)

தலைவன் பிரிந்து இருக்கும் சூழலில் தலைவி அவன் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதை எண்ணிப்பார்க்கின்றாள். மேலும் கண்ணீர் வடிக்கும் சூழல் உருவான போது அதனைத் தடுத்து நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியவன் இப்போது பிரிவால் துன்புறும் ஆழ்நிலையில் அருகில் இல்லாமல் அழ வைக்கின்றானே என்னும் இரங்கல் உணர்வைத் தோற்றுவிப்பதாக அமைகிறது.

தலைவன் பிரிந்த காரணத்தால் கண்கள் தூக்கத்தைத் துறந்து துன்பறும் நிலையினைத் தலைவியின் கூற்றால் அறியமுடிகிறது. இதனை,

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்இதழ் உண்கள் பாடுஒல் லாவே (குறுந் 5)

என்னும் குறுந்தொகை அடிகள் உணர்த்தும், ஊரெல்லாம் உறங்க நான் மட்டும் உறக்கமின்றித் தனிமையில் தவிக்கின்றேன் என்று தன்னுடைய மன நிலையைத் தலைவி வெளிப்படுத்தும் முறையை,

நள்ளென் றன்றே யாமம் சொல்அவிந்து

இனிதுஅடங் கினரே மாக்கள் முனிவுஇன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. (குறுந்.6)

என்னும் பதுமனார் பாடல் வாயிலாக வெளிப்படுகிறது. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு தனிமை மிகுதியான துயரம் தருவதைப் பாடல்கள் இரங்கல் உணர்வாக இனம் காட்டியுள்ளன.

மன உணர்வு

நெய்தல் உரிப்பொருள் நிகழ்வுக்கு மன வெளிப்பாடு மிக முக்கியமான காரணமாகும். தலைவனின் பிரிவால் துன்புறும் தலைவி அவனோடு இருந்த நாட்களை எண்ணி மகிழும் அதேவேளை அவன் இல்லாத நாட்களில் துயரமே வடிவாக இருப்பதைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் விரும்புவது தலைவியின் இல்லத்தாருக்குத் தெரிந்ததும் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறாள். தலைவனைச் சந்திக்க இயலாத சூழலில் அவளது மன வேதனை அதிகமாகிறது. தலைவனைப் பிரியும் சூழல் வாழ்க்கையில் ஏற்பட்டால் அப்போதே என் உயிரும் நீங்கிவிட வேண்டும் என்று தோழியிடம் குறிப்பிடுகிறாள். அதற்கு, ஒன்றை ஒன்று பிரிந்து வாழும் இயல்பில்லாத மகன்றில் பறவைகளின் அன்புறு வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறாள். இக்கருத்தை.

பூஇடைப் படினும் யாண்டுகழிந் தன்ன

நீருறை மகன்றின் புணர்ச்சி போலப்

பிரிவரிதாகிய தண்டாக் காமமொடு

உடனுயிர் போகுக தில்ல கடன்அறிந்து

இருவேம் ஆகிய உலகத்து

ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே.                                          (குறுந்.57)

என்னும் சிறைக்குடி ஆந்தையார் பாடல் உணர்த்துகிறது.

சந்திப்பின் பின் பிரிதல்

களவுக் காலத்தில் தலைவன் தலைவியைச் சந்தித்துத் தன்னுடைய அன்பை வெளிப்படுத்திப் பிரிந்து சென்ற பின் அவளுடைய நிலைமை இரங்கத்தக்கதாகிறது. தலைவனை வீட்டுத் தனியே வாழக்கூடாது என்னும் மனப்பான்மை உடைய தலைவி திருமணத்திற்கு முன்பு அவனைப் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கிறாள். தலைவனின் பிரிவு ஒரு புறமும் இயற்கைச் சூழல் ஒருபுறமும் அவளை வாட்டம் கொள்ளச் செய்கின்றன. தலைவனின் நினைவால் துன்புறும் தலைவி இயற்கையால் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறாள். கடற்கரைச் சூழல்களும் அங்கு இருக்கும் இயற்கைக் காட்சிகளும் தலைவிக்குத் துன்பம் தருபவை. அத்துடன் வாடைக் காற்றும் துன்பம் கொள்ளச் செய்வதை நெய்தல் திணைப் பாடல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. ஊரில் உள்ள மக்கள் அலர் தூற்றுகின்றனர், அத்தோடு வாடைக் காற்றும் கடுமையான துன்பத்தைத் தருகிறது என்பதால் உயிர் வாழ்தல் அரிதாகும் எனத் தலைவி தன்னுடைய நிலையை வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது. இதனை,

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்

பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்

கையற வந்த தைவரல் ஊதையொடு

இன்னா உறையுட்டு ஆகும்

சில்நாட்டு அம்மஇச் சிறுநல் ஊரே. (குறுந்.55)

என்னும் நெய்தற் கார்க்கியரின் பாடல் உணர்த்தும். தலைவன் இல்லாத் தனிமை தலைவிக்கு அவன் நீங்கியபின்பே துன்பம் தருவதாக அமைகிறது. தலைவனுடன் இருந்தபோது இருந்த என் அழகு அவள் நீங்கியபின் நீங்கியது என்று தலைவி வருத்தம் கொள்வதைக் காணமுடிகிறது.

முட்கால் இறவின் முடங்குபுறப் பெருங்கிளை

புணரி இருதிரை தரூஉம் துறைவன்

புணரிய இருந்த ஞான்றும்

இன்னது மன்னோ நல்நுதற் கவினே. (குறுந்.109)

என்னும் குறுந்தொகைப்பாடல் மேற்கண்ட கருத்தினை புலப்படுத்தும். கடல்வழியாகச் சென்ற தன் தலைவன் வராத நிலையில் தலைவியின் துன்பம் பெருகுகிறது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தலைவனின் உறவினர்களின் படகுகள் மீண்டு வந்துவிட்டன. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லையே என்னும் மனநிலை தலைவியின் தனிமையை அறிவிக்கிறது. தலைவன் இல்லாத மாலைவேளையில் மிகுகின்ற துன்பத்தால் மாலைக்காலச் சூழல்களை எடுத்துக்காட்டி இரங்குவதையும் அறியமுடிகிறது. மழை, வாடைக்காற்று இரண்டும் பிரிவில் தனித்திருப்பவர்களைத் துன்புறுத்தும் இயல்பை உடையது என்பதை,

யாதுசெய் வாம்கொல் தோழி நோதக

நீர்எதிர் கருவிய கார்எதிர் கிளைமழை           

ஊதையம் குளிரொடு பேதுற்று மயங்கிய

கூதிர் உருவின் கூற்றம்

காதலர்ப் பிரிந்த எற்குறித்து வருமே. (குறுந்.197)

என்னும் குறுந்தொகைப் பாடல் எடுத்துக் காட்டுகிறது. களவுக்காலச் சந்திப்புகள் இருவருக்கும் இன்பம் தருபவை. எனினும் களவில் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் இன்பம் இல்லை. பிரிவும் இருவரின் இடையே துன்பத்தையே விளைவிக்கின்றது.

வரைவு கடாதல்

தலைவன் களவில் கிடைக்கும் இன்பம் பெரிதென்று நினைப்பவன். திருமணத்திற்குக் காலம் கடத்தும் சூழலில் தலைவியின் பொருட்டாகத் தோழி தலைவனை வரைவு கடாதல் உண்டு. வரைவு கடாதல் என்றால் திருமணத்திற்கு வற்புறுத்தல் என்பது பொருள். தலைவி, தன்நிலையினைத் தோழிக்கு எடுத்துக் கூறிய நிலையிலும் வரைவு கடாதல் இடம்பெறும். தலைவன் தலைவி இருவரும் கொண்ட அன்பு அலராக வெளிப்பட்ட நிலையில், தலைவி தன் களவு, கற்பில் முடிதல் வேண்டும் என எண்ணுவாள். அதனை, தோழிக்கு எடுத்துரைக்கும் நுட்பத்தால் அறிய இயலும்.

‘நான் மட்டும் தனித்திருக்கிறேன். என் பெண்மை நலன் கடற்கரைச்சோலையில் உள்ளது. அலர் ஊர் எங்கும் பரவுகிறது" என்று தலைவி வெளிப்படுத்தும் மனநிலை இனியும் வரைவைத் தள்ளிப் போட இயலாது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. தலைவன் பிரிந்து சென்ற காரணத்தால் தலைவியின் துயரம் மிகுகிறது. பிரிவால் உடல் வாடுகிறது. அதனால், அவன் தலைவியை விரைந்து மணம் செய்துகொள்ள வேண்டும். என்னும் குறிப்பினைத் தோழி வரைவு கடாதலாக வெளிப்படுத்துவதை,

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்

பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு

கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்

கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்

வாராது அமையினும் அமைக

சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே.         (குறுந்-117)

என்னும் குறுந்தொகைப் பாடல் எடுத்துக் காட்டுகிறது.

முடிவுரை

குறுந்தொகை நெய்தல் திணையில் தலைவனின் நினைவால் துன்புறும் தலைவி தன் துன்பத்திற்கான காரணங்களையும், உடல் வேறுபாட்டிற்கான காரணங்களையும் தனிமைத் துன்பத்திற்கான காரணங்களையும் எடுத்துரைக்கும் முறை, நெய்தல் திணையின் உரிப்பொருளான இரங்கல், மற்றும் அதற்கான சூழலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நெய்தல் நிலத்திற்கு உரிய ஒழுக்கம் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் ஆகும். நெய்தல் நிலத்தில் தலைவன் பிரியும் கடல் வழிப் பிரிவு நிச்சயமற்ற காத்திருத்தலாக அமைவதன் காரணமாக தலைவிக்கு மிகுதியான துயரம் ஏற்படுகிறது.கடற்கரைச் சூழலில் உள்ள இயற்கையைக் கண்டு அவற்றின் மீது தன்னுடைய எண்ணங்களை எல்லாம் வெளிப்படுத்தும் பாங்கில் உரிப்பொருள் வெளிப்படுகிறது.

- அ.தமயந்தி, முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை.

Pin It