Tamil Nadu Assemblyநூற்றாண்டு தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு . இந்திய ஜனநாயக தூண்களில் முதன்மையான ஜனநாயகம் என்றால் அது தமிழக சட்டமன்றம் என்றே சொல்லலாம். பல முன்னோடி சட்டங்களை இயற்றி சமதர்ம சமூகத்தை உருவாக்க வழிவகை செய்து கொடுத்திருக்கிறது.

 1921ல், சமூகப் படிநிலையிலான இட ஒதுக்கீட்டு ஆணையை நீதிக்கட்சி பிறப்பித்தலில் இருந்து பெண்களுக்கு வாக்குரிமை, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு, பெண் குழந்தைகளை காக்க சிறப்பு சட்டம் கொண்டு வந்தது என பெண்களுக்கு என்றே பல முன்னோடி திட்டங்களை உருவாக்கிய பெருமை கொண்டது தமிழக சட்டமன்றம்.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய 1967 ஆம் வருடத்திய அண்ணா கொண்டு வந்த தீர்மானம் - சட்டம் இயற்றல், சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களை சட்டபூர்வமாக்கியது, நிலச் சீர்திருத்த சட்டம், மாநில சுயாட்சித் தீர்மானம், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அமைப்பு சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என பல உன்னதமான சட்டங்கள் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை, வாய்மையே வெல்லும் எனும் தமிழ்மொழி அரசு முத்திரை, திரு க்குறள் வாசிப்பு -பொருள் உரைப்புடன் சபை தொடக்கம், மே- 1 தொழிலாளர் தினம் அரசு விடுமுறை அறிவிப்பு உள்ளிட்டவைகள், சட்டமன்ற சிறப்பு செயல்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

இதுவரை முதலமைச்சராக இருந்த சுப்பராயலு ரெட்டியார், பி.டி.ராஜன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 21 தலைவர்களும் நாட்டுக்குத் தொண்டாற்றும் வகையில் நல்ல பல சட்டங்களை திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது, நூற்றாண்டு பெருமைக்குரிய இந்த தமிழக சட்டமன்றத்தில்தான்.

தென்னிந்தியர் நலச் சங்கம் ஆன நீதிக் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, கோபால மேனன், என்.கிருஷ்ணாராவ், எஸ்.செல்ல பாண்டியன், சி.பாஆதித்தனார், கே.ஏ.மதியழகன் முனு ஆதி, க.ராஜாராம், பி.ஹெச்.பாண்டியன், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், கே.காளிமுத்து வி.தனபால் உள்ளிட்ட 18 சபாநாயகர்கள் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி ஜனநாயக கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இந்த சட்டமன்ற பேரவையை அலங்கரித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் ஓரளவேனும் நிறைவேற்றப்பட்டுள்ளன எனச் சொன்னால் அத ற்கு இந்த மாநிலங்களின் சட்டமன்றங்களுக் கெல் லாம் தாயாகத் திகழ்ந்த, சென்னை மாகாண சட்ட மன்றமும், அவ்அவையில் நடந்த கூர்மையான, அறிவுப்பூர்வமான விவாதங்களும், அதனடிப் படை யில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுமே காரணங் களாகும் என்பதை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்திய சீர்திருத்தச் சட்டங்கள்

1639ல், பிரிட்டிஷார் தமிழகத்தின் வழி ஆட்சி அதிகாரத்திற்கு வந்திட்டார்கள். சட்டம் இயற்றுதல், நிர்வாகம் மற்றும் நீதி வழங்கல் என அனைத்தும் அவர்கள் தன்னிச்சையாகவே நிறைவேற்றி வந்தார்கள். அதற்கு அடுத்த 60 ஆண்டுகளுக்கு பின்னரே 1799இல் ஏற்படுத்தப்பட்ட ஆளுநர் நிர்வாக சபை பொறுப்பில் அவற்றை இணைத்திட்டனர்.

சட்டசபை என்ற அமைப்பு, பின்னாளில் 1833ல் ஏற்படுத்தப்பட்ட "பட்டய சட்டத்தின்" வழி செயல் படுத்தப்பட்டது. ஆளுநர் ஜெனரல் நிர்வாக சபையில் சட்டம் இயற்ற வழிவகை செய்யப்பட்டது. 1861ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய சட்ட மன்றங்கள் சட்டமே சட்டமன்றங்களின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

மிண்டோ - மார்லி சீர்திருத்தங்களின்படி 1909ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டு, மறைமுக தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர்; பின்னர் கொண்டுவரப்பட்ட மாண்டேகு - செம்ஸ் போர்டு சீர்திருத்தங்களின்படி 1919 இல் இந்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டு, வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை என்ற அடிப்படையில், முதன்முதலில் தேர்தல் நடைபெற சட்டம் வழிவகை செய்தது.

இப்படியாக இந்தியாவில் கட்சி ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது . இச்சட்டத்தின்படி இந்தியாவின் முதல் தேர்தல் 1920ல் நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. 98 இடங்களில் 63 இடங்களை வென்ற நீதிக்கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக சுப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார்.

1921 -1947 வரையிலான சட்ட மன்ற செயல்பாடுகள் 1921 முதல் 1926 வரை யில் பனகல் அரசர் இராம ராய நிங்கர் நீதிக்கட்சியின் சார்பில் இரண்டாவது முதல் அமைச்சராக செயல்பட்டார். இந்த காலகட்டத் தில்தான் சமூக நிலைப்படியில் இட ஒதுக்கீடு ஆணைகள் கொண்டுவரப்பட்டன.1926ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை; ஆகவே பி.சுப்புராயன் என்னும் சுயச்சை உறுப்பினரே முதலமைச் சராக. 1930 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். ஐந்து பெண் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். 5 தலித் உறுப்பினர்களைஆளுனர் நியமனம் செய்திட்டார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

1930 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி பெரும் பான்மை பெற்றதால் அதன் சார்பில் பி.முனுசாமி நாயுடு 1932 வரையிலும், அவரைத் தொடர்ந்து பொப்பிலி ராஜா என்கிற ராமகிருஷ்ண ரங்காராவ் 1937 வரையிலும் மாகாண முதலமைச்சராக இருந்து வழி நடத்தினர்.

1935 இல் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937ல் அமலாக்கப்பட்ட சட்டத்தின்படி மாகாண சட்ட மன்றம் இரு அங்கமாக, மேலவை கீழவையாக மாற்றப்பட்டு செயல்பட ஆரம்பித்தது.

மாநில சுயாட்சியின் போது கூட்டப்பட்ட 1937 மற்றும் 1946 ஆகிய ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியின் ராஜகோபாலாச்சாரி 1937 முதல் 1939 முடிய முதலமைச்சராக பதவியேற்று வழிநடத்தினார்.

 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதாலும், அதில் இந்தியர்களை கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவை போரில் ஈடுபடுத்தி யதாலும், ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதை அடுத்து, 1946 முதல் செய்யப்பட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தங்குத்திரி பிரகாசம் முதலமைச்சராக பதவியேற்று 1947 வரை செயல்பட்டார்.

கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பும் பங்களிப்பும்

சென்னை மாகாண சட்டமன்றமாக இருந்த போதும் பிற்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் ஆக மாறிய போதும், இதில் உறுப்பினராகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் குறித்து எண்ணிட் பெருமை கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பி.இராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், எம்.கல்யாண சுந்தரம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் தொடங்கி, இன்று வரையிலும் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் பாட்டாளி விவசாய மக்களின் பிரச்சனைகளை, உணர்வு களை, தேவைகளை, குறைகளை அழுத்தமான முறையில் எடுத்துரைத்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

1925ல் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், அதனை வழிநடத்திய தலைவர்களும், இந்திய நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களில் ஒருபுறமும், இந்திய மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்காக மறுபுறமும், பிரிட்டிஷ் அரசின் பல அடக்கு முறைகளை சந்தித்தும், மனம் தளராமல் அர்ப் பணிப்புடன் தங்களின் வீரம் செறிந்த செயல்பாடு களை மேல் எடுத்துள்ளார்கள். அளப்பரிய பல தியாகங்களை செய்து மக்கள் மத்தியில் வீறு கொண்ட இயக்கமாக வளர்த்தெடுத்திருந்தார்கள்.

நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயகம், 1950 களின் இந்திய அரசியல் அமைப்பு சட்ட நடைமுறைகளால் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ள நிலையில், நாடாளு மன்றத்தில் சட்டமன்றத்தில் மக்கள் நலன் காக்கும் தங்களது மகத்தான பணியில் ஒரு போராட்ட அரங் கமாகவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்சி திட்டத்தின் அடிப்படையில்,1952 முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்ற சட்டமன்ற ஜனநாயக நடைமுறைகளில் பங்களித்திட்டனர் கம்யூனிஸ்டுகள்.

இந்தியாவில் பாட்டாளிவர்க்க அதிகாரத்தை நிறு வும் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கிய பயணத்தில், நாடாளுமன்ற சட்டமன்ற கட்டமைப்பு களையும் பொருத்தமான முறையில் பயன்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையில், இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்நாள் வரை பயன் படுத்திக் கொண்டு வருகிறது.

இந்திய நாடாளுமன்ற சட்ட மன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும், கம்யூனிஸ்ட் இயக்க இடதுசாரிகள் எழுப்பிய போராடுகிற, எண்ணற்ற பிரச்சனைகள் பின்னாட்களில் மக்களின் ஆதரவைப் பெற்று ஆளும் அரசுக்கு நிர்ப்பந்தம் ஆக மாறி, புதிய சட்டங்களாக சட்டத்திருத்தங்களாக நிறைவேற்றப்பட்ட வரலாற்று போக்குகள் நடந்தேறியுள்ளன.

1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த தமிழக சட்டமன்ற காங்கிரஸ்,அவர்களுக்கு பின்னால் 1967 பிறகு மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிக்கிற ஒரு நல்ல அரசாக, தமிழக அரசு செயல்படத் தொடங்கியது எனச் சொன்னால் அதற்கு இதுகாறும் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகள் நடத்திய எழுச்சி மிகுந்த போராட்ட நடவடிக்கைகளே காரணமாக இருந்திருக்கிறது.

1952 பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், பின்னாட்களில் தொடர்ந்து (2016 ஆம் ஆண்டு 15வது சட்டமன்றம் நீங்கலாக) 16 சட்டமன்றங்களில் சிறு அளவிலேனும் பங்கேற்ற கம்யூனிஸ்டுகளால், ஆளும் அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே தொடர்வது, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்தி லும் கம்யூனிஸ்டுகள் அமைத்த அடித்தளத்தில் தான் என்பதை சட்டமன்ற நூற்றாண்டின்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

1947 முதல் 1962 வரையிலான சுதந்திர இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பும் பங்களிப்பும்

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் மாநிலத்தின் தலைவரானார் . ஆனால் அவரிடமிருந்த சட்டமியற்றும் அதிகாரம் நீக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரங்கள் மறைந்தன; என்றாலும் இந்திய அரசு சட்டம் 1935ன்படி உருவான மாகாண சட்டமன்றங்கள் தொடர்ந்து செயல்பட அதிகாரம் வழங்கியது. அதன்படி 1947 முதல் ஆயிரத்து 1949 வரை, காங்கிரஸ் கட்சியின் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், 1952 வரை பிஎஸ் குமாரசாமி ராஜா வும் முதலமைச்சராக இருந்து செயல்பட்டனர்.

ஜனவரி 26, 1950 ல் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது .இந்தியா குடியரசாகியதால் தன்னாட்சி மாநிலங்களும், இறையாண்மை கொண்ட சட்டமன்றங்களும் உருவாக்கம் கொள்ள வழிகாட்டியாக அமைந்தது.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வயதுவந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 375 தொகுதியைக் கொண்ட சென்னை, ஆந்திரா, கர்நாடகா,கேரளா பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. தமிழகத்தில் 13 இடங்களிலும், ஆந்திராவில் 42 இடங்களிலும், மலபாரில் 8 இடங்களிலும் ஆக 63 இடங்களை பெற்றது . ஆளும் கூட்டணிக் கட்சிக் கான பெரும்பான்மை பெற்றிருந்தாலும், காங் கிரஸ் கட்சியின் ராஜகோபாலாச்சாரியாரின் அரசியல் சதி வேலைகளால் பின்னுக்குத் தள்ள ப்பட்டு, பிரதான எதிர்க்கட்சியாக முதல் சட்டமன்ற த்தில் கம்யூனிஸ்ட் கட்சி செயலாற்றியது.

சிறைக்குள் இருந்த பி.ராமமூர்த்தி தலைமறைவாக இருந்த மணலி சி. கந்தசாமி உள்ளிட்டோருடன் ப.ஜீவானந்தம், ஏ.கே. சுப்பையா, எஸ்.வடிவேலு, வெங்கடேச சோழகர், பி.மதனகோபால், அர்த்தனாரி, எஸ்.இராமலிங்கம், என். கே.பழனிச்சாமி, எம்.கல்யாணசுந்தரம் ஆகிய 13 பேர் மகத்தான வெற்றி பெற்று, சட்ட மன்றத்தின் அளப்பரிய செயல்பாடுகளால் போற்றப்பட்டனர்.

மக்களவையிலும் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான எதிர்க்கட்சி ஆகியது. அதன் தலைவராக ஏ.கே.கோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முதல் தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக தகுதி பெற்றது. தமிழகத்திலிருந்து ரயில்வே தொழிற் சங்கத்தின் கே அனந்த நம்பியார் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1953 அக்டோபர் 1ல், ஆந்திர மாநிலம் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது. தியாகி சங்கரலிங்கனாரின் உண்ணா விரதப் போராட்டம்-உயிர்ப்பலி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களால் 1956 நவம்பர் 1ல், தமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகளின் தமிழ்மொழிப் பயன்பாடு

1952 க்கு முன்பு வரை ஆங்கிலத்திலேயே உரை யாடிய மன்ற உறுப்பினர்கள், 1952 லிருந்து தமிழக சட்டமன்ற கம்யூனிஸ்டு உறுப்பினர்களால் தமிழில் பேசத் தொடங்கினர். தமிழக சட்டமன்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி. இராமமூர்த்தி 1953 ஆம் ஆண்டு வரவு செலவு பட்ஜெட் கூட்டத்தில் தமிழிலேயே பேசினார். பொருளாதார விஷயங்களை தமிழில் விளக்க முடி யாது என்ற கருத்தை எல்லாம் கம்யூனிஸ்டுகள் உடைத்தெறிந்தனர்.

அரசாங்க மொழி குறித்த விவாதத்திலும்,தமிழ் நாடு பெயர் மாற்ற தீர்மானத்தின் போதும், கம்யூ னிஸ்ட் தலைவர். ப.ஜீவானந்தம் ஆவேசமாக தமிழிலேயே உரையாற்றினார்.

"நான் தமிழன்; என்னுடைய மொழியே இந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். உயர்நீதிமன்றத்திலும், கல்விக் கூடத்திலும் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான்" என பேசினார்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகள்

கம்யூனிஸ்டுகளின் சட்டமன்ற நடவடிக்கைகளால், தமிழ்மொழி மாகாணத்தின் ஆட்சிமொழியாக்கியது காங்கிரஸ் அரசு . இதனை வரவேற்ற கம்யூனிஸ்ட் கட்சி, அடுத்ததாக நமது மாகாணத்துக்கு "தமிழ் நாடு" என பெயர் சூட்ட வேண்டுமென்று போராடியது.

"இன்று தமிழ் மொழி ஆட்சி மொழியாயிருப்பது உந்தித் தள்ளும் நம்மை, தமிழ்நாடு எனத் திருப்பெயர் பெறுவதற்கும் முன்னிறுத்துகிறது. வரப்போகும் சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" என்ற பெயர் மாற்றம் நிச்சயமாக வரும்" என தமிழ்நாடு தீர்மானத்தை முன்மொழிந்து ஜீவா முழங்கினார்.

தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்ய 1967 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை நீக்கி, திராவிட ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டியதாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாடு பெயர் மாற்றம் சாத்தியமாயிற்று.

இப் பெயர் மாற்றத்திற்காக சட்டமன்றத்தில் ஜீவாவும், நாடாளுமன்றத்தில் பி.ராமமூர்த்தியும், பூபேஷ் குப்தாவும் குரல் உயர்த்திப் பேசி, பெயர் மாற்றத்தைப் பெற்றுத் தர வேண்டியிருந்தது என்பது தான் மறக்க முடியாத வரலாற்று உண்மை.

ஆக 70 ஆண்டுகளுக்கு முன்னமே, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் தான்.

தமிழக தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் கம்யூனிஸ்டுகள்

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடி வந்த நேரத்திலேயே, தமிழகத்தின் கம்யூனிஸ்ட் இயக்கம் மாநிலத்தின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் ஆக வழி வகைகளை முன்வைத்துப் போராடியது.

தமிழகத்தின் இரு கண்களாக விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையையும், சேலம் இரும்பு உருக்காலையையும் ஜெர்மனி நாட்டின் உதவியை பெற்றுத் தந்து, அதனை வெற்றிகரமாக செயல்பட வைத்த பெருமை கம்யூனிஸ்டு இயக்கத்தையே சாரும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்:

நிறைவேற்த்தில் கம்யூனிஸ்டுகள் 1957ல், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் அரசிடம் கோரிக்கை வைத்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை, அதன்வழி தண்ணீர்ப் பயன்பாட்டை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களே.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பங்களிப்பில் கம்யூனிஸ்டுகள்

தமிழகத்தின் வற்றாத இயற்கைச் செல்வங்களை, கனிம வளங்களை, முறையாக பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராடி வந்தனர். தமிழகத்துக்கு அணு மின் நிலையம், சேது சமுத்திர திட்டம், தூத்துக்குடி துறைமுகத் திட்டம், பேச்சிப்பாறை -பெருஞ்சாணி, சிறுவாணி, மோர்தானா அணைத் திட்டங்கள், தமிழக நதிக்கரையோர எண்ணை வளப்பயன் பாட்டு நடவடிக்கைகள் போன்ற பலவற்றை எல்லாம் சாத்தியமாக்கிட முன்னின்றவர்கள் கம்யூ னிஸ்ட் இயக்க்கத்தினரே என்பதை எல்லாம் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு வரலாறோடு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆளும் கட்சி ஆதரவு - எதிர்க்கட்சி நிலைபாடுகளில் கம்யூனிஸ்டுகள்

சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஆளும் கட்சி அத்துமீறல்களை இடித்துரைத்து, சரியான வழிமுறையில் வழிநடத்துவதில், ஆளும் கட்சி ஆதரவுடனும், எதிர்க்கட்சி நிலைப்பாட்டுடனும் இடதுசாரி ஜனநாயக கட்சிகள் பங்கேற்று பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன .

பெரும் விவாதங்கள், சொல்லாடல்கள், கண்டன உரைகள், எதிர்ப்பு உணர்வை வெளிக்காட்டி சபை வெளியேற்றம் என எத்தனையோ வகையான நடைமுறைகளால் தமிழக சட்டமன்ற ஜனநாயக கடமையை நிறைவேற்றி, அதன் மரபுகளை பாதுகாத்து வந்திருப்பதில், சட்டமன்ற பங்கேற்பும் பங்களிப்பும் செய்திட்ட கம்யூனிஸ்ட் இடதுசாரிகள் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

இதுவரையிலான 16 சட்டமன்றங்களிலும் கடந்த 70 ஆண்டுகளாக பங்கேற்று சட்டமன்ற ஜனநாயக கடமைக்கு பங்களிப்பு செய்திட்ட திருச்சி எம். கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி, கோவில்பட்டி அழகிரிசாமி, மன்னை மு. அம்பிகாபதி, பி.உத்தரா பதி, திருவாரூர் எம். செல்லமுத்து, என். பழனிவேல் தூத்துக்குடி எம். அப்பாதுரை, திருப்பூர் கே.சுப்பு ராயன், திருத்துறைப்பூண்டி ஜி.பழனிசாமி, கே.உலகநாதன், மன்னார்குடி வை.சிவபுண்ணியம், நன்னிலம் பி.பத்மாவதி சிவகங்கை கே.குண சேகரன், தளி டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மற்றும் ஏ.பாலசுப்பிரமணியன், என்.வரதராஜன், மதுரை கே.பி.ஜானகி அம்மாள், என். சங்கரய்யா, நெல்லிக்குப்பம் சி.கோவிந்தராஜன், திருச்சி வி.கே. கோதண்டராமன், கோவை கே.ரமணி, திருப்பூர் சி.கோவிந்த சாமி, மதுரை என். நன்மாறன் சென்னை வி.பி.சிந்தன், டபுள்யூ. ஆர்.வரதராஜன், பாப்பா உமாநாத், திண்டுக்கல் பாலபாரதி, நாகை மாலி, குமரி ஜே.ஹேமச்சந் திரன், டி.மணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சிறப்பான பங்களிப்பு செய்து, நூற்றாண்டு சட்டமன்ற அவை யை பெருமைப்படுத்தி இருக்கின்றனர்.

"எதிர்க்கட்சியினர் எப்போதும் வாய் திறந்து கருத்துரைப்பவர்களாகவே இருப்பர்; ஆளும் கட்சி­யினர் எப்போதும் தங்களின் காதுகளைத் திறந்து வைத்து கேட்டுக்கொண்டிருப்பவராகவே இருக்கவேண்டும்" என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரையை தனது விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜி. பழனிச்சாமி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி பேசியிருக்கிறார்.

"நேற்றைய எதிர்க்கட்சி, இன்றைய ஆளும்கட்சி இன்றைய ஆளும்கட்சி நாளைய எதிர்க்கட்சி" என்பதை நினைவில் கொண்டு அரசியல் கட்சிகள் காய்த்தல் உவத்தலின்றி சரிசமமான ஜனநாயக செயல்பாடுகளால் மக்கள் மன்றங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதையே இந்த நேரத்தில் உயர்த்திப் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது.

- இசைக்கும் மணி

Pin It