கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாராயணத்தேவன்பட்டி எனது கிராமம். அத்துடன் மா-லெ அரசியலை எனக்கு அறிமுகம் செய்த ஊரும் கூட... 

அதிமுக கட்சியின் செல்வாக்கான முன்னாள் தலைவர் அய்யா தங்கவேல், அவரின் மகன் தங்க.முருகன், மருமகள் கலையரசி முருகன் பின்பு பதவியை பரிமாறிக் கொள்வதான மறைமுக ஒப்பந்தத்தில் திமுக ஆதரவாளர்களும் தலைவராக வலம் வந்த ஊர் நாராயணத்தேவன் பட்டி - தேனி மாவட்டம்.

அரசியல் விளையாட்டில் இப்போது பிரபலமாக இருக்கும் முன்னாள் MLA, முன்னாள் MP அண்ணன் தங்க.தமிழ்ச்செல்வனின் ஊரும் அதுவே.

இவரின் தந்தை தான் முன்னாள் தலைவர் அய்யா தங்கவேல், அண்ணன் தங்க.முருகன், அண்ணி கலையரசி முருகன்.

மா-லெ அமைப்பின் ஆதரவாளர்களின் கூட்டத்திலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட போகிறார். வெளிப்படையாக ஆதரவு தருவதாக சொல்லாவிட்டாலும் விவிமு அமைப்பின் தாக்கம் அந்தக் கிராமத்தில் உண்டு.

தென்மாவட்ட சாதிக் கலவரத்தின் போது விவிமு அமைப்பின் ஆதிக்க சாதியைச் சேர்ந்த தோழர்களும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர்களும் இரவில் அவ்வூரில் தாழ்த்தப்பட்ட மக்களின் பகுதியில் விடியும் வரை பாதுகாப்புக்கு நின்றார்கள்.

வார வட்டி ஒழிப்பு இயக்கம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்த இயக்கம், தேர்தல் புறக்கணிப்பு இயக்கம், சாதி - தீண்டாமை ஒழிப்பு இயக்கம், பன்னாட்டு மான்சாண்டோ விதைக்கம்பெனி எதிர்த்த போராட்டம், அனுபவ் தேக்கு பண்ணைக்கெதிரான போராட்டம் என்று பிசியான காலம் அது....

*தேர்தல் பாதை திருடர் பாதை ..!
நக்சல்பாரி பாதையே நமது பாதை..!!

மக்கள் கமிட்டி அமைப்போம்..!
தெருவில் தீர்ப்பு சொல்லுவோம்..!!"

என்ற சுவரெழுத்து மின்னியதும் விவிமு அமைப்பை தடை செய்ய ஆதிக்க சாதிக்காரர்களின் / அரசியல்வாதிகளின் கோபம் ஊர் புறக்கணிப்பாக மாறியது.... (வருடம் 2000)

பின்பு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு RDO, தாசில்தார், DSP +++ அதிகாரிகள் தலைமையில் சமாதானம் எட்டப்பட்டு விவிமு அமைப்பை தடை செய்ய முடியாது என்ற தீர்ப்பு அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

விவிமு அமைப்பின் தோழர்கள் இப்போது மக்கள் அதிகாரத்தில் செயல்பட்டாலும், அவர்களின் பங்களிப்பு நிச்சயம் கிராம நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன். முடியாவிட்டால் அதையே எதிர் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தலாம்.

ஒன்றியம், மாவட்டம் என்பது கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகள் கட்சி சின்னத்தில் போட்டுயிடுவது. அதனை பின்பு பார்த்துக் கொள்ளலாம்.

முதலில் கிராமங்களைக் கைப்பற்றுதல், பின்பு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்துதல், அதன் மூலம் புரட்சிகர அமைப்பை பரந்துபட்ட மக்களிடம் நெருக்கமாக கொண்டு செல்லுதல் என விரிவுபடுத்தலாம்.

ஊர்புராணம் போதுமென்று நினைக்கிறேன்.

கீழே உள்ள பதிவு தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்களுடையது.

நாம் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட விரும்புகிறோம். ஏன்?

**********************************
‘ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!!’ எனும் முழக்கத்தை ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரம் செய்தபோது அவற்றில் எமது பங்களிப்பும் இருந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

அந்த முழக்கம் ஒரு இயக்கம் சார்ந்த முழக்கம் மட்டுமல்ல. அது நாம் அறிவார்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு உண்மையான விளக்கம் தரக்கூடிய முழக்கமுமாகும். அந்த விளக்கம் இப்போதும் பொருந்தக் கூடியதே! இருப்பினும் அந்தப் பொருத்தத்தை விளக்கக்கூடிய இடம் இதுவல்ல.

சில காலங்களே ஆட்சியில் இருக்கப் போகிறவர்கள்கூட, ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரான செயலை அதே அரசியலமைப்பைத் திருத்தம் செய்து சாதிக்கிறார்கள் என்பதைக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் மூலமாக நிரூபித்துள்ள நிலையில், அரசியலமைப்பை முட்டுக் கொடுக்க நாம் முயற்சித்தால் அதைவிடக் கேவலமான செயல் ஏதுமிருக்க முடியுமா? முடியாது. இதனால், ‘ஓட்டுப் போடு! புரட்சி செய்’ என்கிற மடத்தனமான நிலைப்பாடு ஏதும் நமக்கில்லை.

‘ஓட்டுப் போடாதவன் செத்ததற்குச் சமம்’;
‘ஓட்டுப் போடுவது ஜனநாயக உரிமை’;
‘ஓட்டுப் போடுவது குடிமகனின் கடமை’, .... இது போன்ற வழக்கமான, அண்டப்புளுகு முழக்கங்களையெல்லாம் நாம் எப்போதும் நம்பக் கூடியவர்களல்ல.

‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்பதில் இப்போதும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. காரணம், அப்பாதை போய்ச் சேர்வது திருடர் குகைக்கு என்பது இன்னும் மாறாததால்!

பிறகு ஏன் ‘ஓட்டுப் போடாதே’ எனும் முடிவை நாம் பரிசீலிக்க வேண்டும்? ஆம், பரிசீலிக்கத்தான் வேண்டும். ஏனெனில் சூழ்நிலைகள் அம்முடிவைப் பரிசீலிக்க நம்மைத் தூண்டி விடுகின்றன. இச்சூழ்நிலைகள் எமது சொந்தச் சூழ்நிலைகளே! ஆயினும், இந்தச் சூழ்நிலைகள் உள்ளாட்சியைத் தாண்டி சட்டமன்றத்திற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ இருக்கவே முடியாது என்பதில் நாம் உறுதியாகவே இருக்கிறோம்.

இதற்கு முன்னரும் ஒரு நெருக்கடியான நேரத்தில் (அது சில விசமிகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான நெருக்கடி என்பதை அறியாததால்) நாம் உள்ளாட்சியில் ஓட்டுப் போட்டிருக்கிறோம். ஆனால், அது தவறான செயல் மட்டுமல்ல, முட்டாள்தனமான செயல் என்பதையும் விரைவிலேயே உணர்ந்தோம். சில அயோக்கிய சுயநலவாதிகளின் பொது நல வேசத்தில் நாமும் ஏமாற்றப்பட்டோம் என்பதைத் தவிர வேறு எதையும் இங்கே சொல்வதற்கு இயலாமல் தலை குனிகிறோம்.

இப்போதைய ஓட்டுப் போட வேண்டும் எனும் நமது முடிவிற்கு எமது சொந்தத் தொகுதியின் தனிப்பட்ட பலவகையான நிலவரங்களும் காரணங்களாக உள்ளன. இருந்த போதிலும் அதை நாம் இங்கு விளக்கப் போவதில்லை.

ஆயினும் ஒரே ஒரு மகிழ்ச்சியான காரணத்தை மறைக்க முடியாது. அது எதுவென்றால், முதன்முறையாக எமது ஊராட்சி மன்றத் தொகுதி ‘ரிசர்வ்’ தொகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது என்பதுதான். நாம் நமது முடிவைப் பரிசீலனை செய்யத் தூண்டிய மகிழ்ச்சியான முதல் அம்சமும் இதுவே!

ஊருக்கு நன்மை செய்ய; மக்களின் குறை தீர்க்க; லஞ்சம், ஊழல், மோசடி இல்லாமல் நிர்வாகத்தை நடத்த; உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய; புதிய தேசம் அமைக்க; நாட்டிலேயே சிறந்த உள்ளாட்சியாக அமைந்திட; பழமையை விரட்டிப் புதிய புரட்சி செய்திட,” போன்ற 'கோமாளி கலாம்' டைப் கனவுத் திட்டப் பிரச்சாரங்கள் மற்றும்,

”உங்கள் வீட்டுப் பிள்ளை; கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர்; பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; ஏழைப் பங்காளர்; அகண்ட பாரதத்தை அமைக்க விருப்பவர்; பிரதமர், முதலமைச்சர்களின் கரத்தை வலுப்படுத்துபவர்; செத்துப்போன மற்றும் சாகாத(திருட)வர்களின் ஆசி பெற்றவர்; எளிமையானவர்; நல்லவர்; யோக்கியர்”, போன்ற

அண்ட சாராசரமெங்கும் அள்ளிவிடுகின்ற ஆகாசப் புளுகுப் பிரசாரப் பருப்புகளெல்லாம் நம்மிடம் எக்காலத்திலும் வேகாது.

நம்மைப் பொருத்தவரை, ”உள்ளாட்சிப் பதவிகள் என்பதே கட்சிகளின் உள்ளூர்க் குட்டித் தலை-களும் தளபதி-களும் பொறுக்கித் தின்பதற்கான சந்தர்ப்பத்தினைத் தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாய்ப்புகள்தான்”. இதில் எந்த மாற்றமும் இல்லை.

நாம் இம்முறை நான்கு ஓட்டுகள் போட வேண்டும். 1. மன்ற வார்டு உறுப்பினர், 2. மன்றத் தலைவர், 3. ஒன்றிய உறுப்பினர், 4. மாவட்ட உறுப்பினர், இதில் 1, 2 ஆகியவை கட்சிகள் சாராதது. 3, 4 கட்சிகள் சார்ந்தது. 1, 2 இல் மட்டுமே நாம் இம்முறை ஓட்டுப் போட விரும்புகிறோம்.

ஒன்றி(1)ற்கான வேட்பாளரைத் தேர்வு செய்ய மிக எளிதான வழியைக் கையாளவிருக்கிறோம். சிரமமேதுமில்லை.

இரண்டி(2)ற்கான வேட்பாளர் தேர்வு மிகவும் கஷ்டமானதே. இருப்பினும் நீண்ட நேர பரிசீலனைக்குப் பிறகு அதற்கான தேர்வும் முடிந்து விட்டது. இத்துடன் முடித்துக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால், மூன்றி(3)லும் நாம் பங்கேற்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

முதன்முதலாக மனித குல விரோதமான அக்கட்சி ஊருக்குள் நுழைவதோடலல்லாமல் தன் சின்னத்தையும் மலரவிட முயல்கிறது. அதை எதிர்ப்பது நமது இயல்பாக உள்ளது. சாதியோ, மதமோ, இனமோ ஃபாஸிஸ்ட் (Facist) களை நாம் எப்படி ஆதரிக்க முடியும்?. அந்த வகையில் மூன்றிலும் நாம் வேட்பாளரைத் தேர்வு செய்தே தீர வேண்டியிருக்கிறது.

மன்னிக்கவும் 4இல் சுத்தமாக வாய்ப்பில்லை.

“ஓட்டுக்குக் காசு கொடுப்பதும் வாங்குவதும் தவறு” என்கிறார்கள் சிலர். சரிதான், அதற்காக, “காசு கொடுக்காததனால் மட்டுமே ஓட்டுக் கேட்பதும் வாங்குவதும் சரியானது” என்பது சரியானதாகி விடாது.

அவ்வாறான எண்ணமெல்லாம் நமக்குக் கிடையாது.

முழுக்க முதலாளித்துவ நாட்டிற்கான தேர்தல் முறையினை இங்கு புகுத்தி ஓட்டுப் போடச் சொன்னால் அதில் குழறுபடிகளையும் மோசடிகளையும் செய்யாமல் யோக்கியமாக நடத்துவார்கள் என எண்ணுவதற்கு நாம் மூடர்களா என்ன?

ஓட்டு வாங்குதல் போலவே ஓட்டுப் புறக்கணித்தலும் அரசியலில் ஒரு நிலைப்பாடுதான். அது அரசியலுக்கு எதிரானதல்ல.

“நாடு கெட்டு விட்டது; தேசியர்களும் திராவிடர்களும் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்” என மேடை தோறும் கதறிக் கொண்டு ஓட்டுக் கேட்டால் மட்டும் “நாம் யோக்கியர்” ஆகிவிட முடியாது.

“அரசியலை அறியாதவனால் அரசியலில் சொந்த நிலைப்பாடு எதுவும் எடுக்க முடியாது.”

இன்று சர்வதேச அளவில் இயக்கங்களின் பின்னைடைவுகள் குறித்த பரிசீலனைகள் தொடங்கியுள்ள பொழுதில், ‘ஆளில்லா ஊரில் இலுப்பைப்பூவே சக்கரை’ எனக் கதறுபவர்களின் சத்தம் ஓங்கியுள்ள நிலையில், நம்மால் முடிந்த எதிர்வினையை நாம் ஆற்ற வேண்டியது அவசியமென்றே கருதுகிறோம்.

இவர்கள் விரைவில் தேர்தலில் போய் விழுவார்கள் என ஆரூடம் சொன்னவர்கள் அவர்களை முந்திக் கொண்டுபோய் விழுந்துவிட்ட நிலையில்; அவர்களோ மறைமுகமாக விழுவதையே தற்காப்பாகக் கருதிவிட்ட நிலையில், நாம் இதைச் செய்கிறோம்.

புரட்சிகளுக்கான அலை எழுப்ப ஆளில்லாதபோது சீர்திருத்தங்களிலாவது பங்கேற்போம் என்பதுதான் நமது இப்போதைய மனநிலை. அதைப் பிறருக்குத் தெரிய வைக்கும் முகமாகவே அறிவித்துவிட்டு இம்முறை ஓட்டுப் போட எண்ணுகிறோம். வேறொன்றுமில்லை.

அரசியல் பலருக்குத் தொழில். சிலருக்குப் பொழுதுபோக்கு. வெகு சிலருக்குத்தான் கடமை. நாம் அந்த வெகு சிலரில் உள்ளதால் இப்போது மட்டும் இம்முடிவினை ஏற்கிறோம். இது இறுதியானதல்ல!! 

- குருசாமி மயில்வாகனன் - சிவகங்கை,

தருமர் -திருப்பூர்.