sivajiஎங்கள் ஊர் கேரளத்தில் இருந்த சமயம். ஒரு சிவராத்திரி இரவு, மதுசூதனப் பெருமாள் கோவில் வடகிழக்கு மூலையில் இருந்த நடராஜன் சன்னதி மண்டபத்தில் குஞ்சும் குறுமானுமாக நிறையபேர் கூடியிருந்தோம். நான்கு யாமங்களிலும் பூஜை; நிவேதனம் உண்டு. இதற்காகவே, கூடும் குழந்தைகள் கூட்டம் இரண்டாம் யாமத்தில் பாதிக்கூட்டம் போய்விடும்.

இரண்டாம் யாம ஆரம்பத்தில் சின்னக்குட்டி எங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாள். பஞ்சகல்யாணிக் குதிரையில் ராஜா திருடனைப் பிடிக்கப் போன கதை மட்டும் மனதில் பதிந்தது. சாரங்கதாரா கதையை விரிவாகச் சொன்னதாலோ வருணனையுடன் சொன்னதாலோ அப்போது அது மனதில் பதியவில்லை.

எண்பதுகளின் ஆரம்பத்தில் தேவர்குளம் ஊரில், சின்னக்குட்டியைச் சந்தித்தபோது, சாரங்கதாரா நாடகத்தில் நடித்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திச் சொன்னாள். அப்போது அவளுக்கு 90 வயதுக்கு மேல் இருக்கலாம். நான் தேவதாசி ஒழிப்பிற்குப் (1930) பிறகு அவள் எப்படி நடிக்கப்போனாள் என்ற எண்ணத்துடன் மேலும் பேசியபோது ஒரு விஷயம் புரிந்தது.

தேவதாசி ஒழிப்பிற்குப் பிறகும், அவர்கள் கோவில் கலைநிகழ்ச்சிகளிலும் சடங்குகளிலும் பங்கு கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உபரிச் சம்பளம் கொடுத்துக் கோவில் நிர்வாகம் அழைத்திருக்கிறது. 40களின் இறுதி வரை இந்த நிலை நீடித்திருக்கிறது. திருவிதாங்கூரின் இந்தச் செயல்பாடுகளை கே.கே.பிள்ளை மட்டும் சொல்லி இருக்கிறார்.

தமிழகத்தின் நிலை வேறு, இன்னும் தேவதாசிச் சடங்குகள் தொடருகின்ற ஊர்கள் உண்டு. திருவள்ளூர் மாவட்டத்திலும், திருச்சி விராலிமலையிலும் தேவதாசிகள் சடங்குகளுடன் தொடர்புபடுத்தப் பட்டவர்களாகவே வாழ்கிறார்கள். 2017இல் நான் நடத்திய பேட்டியில் அறிந்தேன். தேவர்குளத்தில் (திருநெல்வேலி மாட்டவம்) நான் சின்னக்குட்டியைப் பேட்டி காண்பதற்காகப் போனபோது சாரங்கதாரா நாடகத்தைப் பற்றிப் பேச்சு வாக்கில் கேட்டேன். அந்தக் கேள்வியும் கே.கே.பிள்ளையின் சுசீந்திரம் புத்தகம் வழி உருவானது தான்.

டாக்டர் கே.கே.பிள்ளையின் பி.எச்.டி. ஆய்வேடான சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் என்ற நூல் 1953இல் வந்தாலும் இதற்குரிய தகவல்களை 1943க்கு முன்பே திரட்டியிருக்கிறார். அப்போதே இக்கோவிலில் சாரங்கதாரா நாடகம் நடத்தப்பட்ட தகவல்களை விரிவாகச் சேகரித்திருக்கிறார். ஆனால் அவற்றை முழுதும் நூலில் கொடுக்கவில்லை

மாசி மாத சிவராத்திரி விழாவில் இரவு இரண்டாம் ஜாமப் பூசைக்குப் பின்னர் சாரங்கதாரா நாடகம் ஆரம்பமாகும். அப்போது சுசீந்திரம் ஊர் தெற்கு ரத வீதியில் நாயக்கர் கொட்டாரம் அருகே உள்ள பேரம்பலம் கோவிலில் நாடகம் நடந்தது என்கிறார் கே.கே.பிள்ளை (1953, றி.234.),

இந்த நாடகத்தில் 40களில் பங்குவகித்த சின்னக்குட்டி என்னிடம் தாணுமாலயன் கோவில் நாடக சாலையில் இந்த நாடகத்தை நடத்தினதாகக் கூறினாள். அந்த நாடகத்தின் சில நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லிவிட்டு, என்ன பாவம் செய்தாலும் தாணுமாலயன் காப்பாற்றுவான் என்பது இதன் ஐதீகம் என்றாள்.

சாரங்கதாரா நாடகம் திருவிதாங்கூரில் உள்ள பிற கோவில்களில் நடக்கவில்லை. இங்கு மட்டும் ஏன் நடந்தது. இக்கோவிலில் வழிபடுபவர்க்கு எல்லா பாவமும் போகும் என்பது நம்பிக்கை. இந்திரனே தன் பாவத்தைத் தீர்த்த தலம். நம்பூதிரியின் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்கிய ஸ்மார்த்தவிசாரமும், பிரத்யாயனமும் இங்கேதான் நடந்தன. இதனால்தான் கொடிய பாவம் செய்த ஒருத்தியின் கதை இங்கு நாடகமாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.

சாரங்கதாரா கதை தெலுங்கு யட்சகானம் வழி தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆந்திராவில் இக்கதை 16ஆம் நூற்றாண்டிற்கு முன்பே வழக்கில் இருந்தது. ‘துவிபத பாகவதம்’ என்னும் தெலுங்கு நூலில் இந்தக்கதை பற்றிய குறிப்பு முதலில் வருகிறது என்கின்றனர். இது கி.பி. 1547ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கதை. இதை பிற தெலுங்குக் கவிஞர்களும் மேற்கோளாகக் காட்டுகின்றனர்.

சாரங்கதாரன் கதையில் குறிப்பிடப்படும் இடங்கள் ஆந்திரத்தின் தென்பகுதியில் உள்ளவை என்கின்றனர். இந்த நாடகத்தில் வரும் இராஜமகேந்திர புரம் இன்றைய இராஜமுந்திரியைக் குறிப்பிடும். இதன் பழைய தலைநகர் வேங்கி. சோழப் பேரரசன் முதல் ராஜராஜன் மண உறவு கொண்டிருந்த இடம். சாரங்கதாரா நாடகத்தில் வரும் நிகழ்ச்சிகள் தொடர்பான இடங்கள் இராஜமுந்திரியில் உள்ளன என்கின்றனர். தமிழகச் சாரங்கதாரன் கதை வடிவத்தில் ஒன்று முதல் ராஜேந்திரன் என்ற பெயரைக் குறிப்பிடுகிறது.

சாரங்கதாரன் கதையின் பொதுவான கதை கீழ்வருமாறு:

இராச மகேந்திரபுரம் என்ற நாட்டின் அரசன் இராசநரேந்திரன் ஆவான். இவனது மூத்த மனைவி ரத்தினாங்கி. இவளது ஒரே மகன் சாரங்கதாரன். சாரங்கதாரன் வாலிப பிராயத்தை அடையும் சமயத்தில், அவனது அம்மா ரத்தினாங்கி இறந்து விடுகிறாள். அரசன் கொஞ்சநாள் சோகத்தில் இருந்தான். அமைச்சர்களின் வற்புறுத்தலால் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டான். அவளது பெயர்தான் சித்திராங்கி.

அரசனுக்குத் திருமணமாகி ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். அரசர் வேட்டைக்குப் போகவேண்டிய சூழ்நிலை வந்தது. போனான். அரண்மனையில் சாரங்கதாரன் இருந்தான். சித்திராங்கி தனியாக ஒரு மாளிகையில் இருந்தாள். ஒரு நாள் மாலை நேரம். சாரங்கதாரனின் புறா பறந்து சித்திராங்கியின் மாளிகையின் முன்புறச் சோலையில் விழுந்தது. சாரங்கதாரன் அதை எடுக்கப் போனான். தோழன் தடுத்தான். விபரீதம் வரும் வேண்டாம் என்றான். இளவரசன் கேட்கவில்லை. சித்திதானே எனச் சொல்லிவிட்டு அவள் மாளிகைக்குள் நுழைகிறான்.

சித்திக்கு மகன்மீது கொள்ளை ஆசை; அவனை எப்படியும் அனுபவிக்க நினைக்கிறாள். அதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது மாட்டிக்கொண்டான். அவள் அவனை ஏமாற்றி மாளிகைக்குள் அழைத்துச் சென்றாள். தன் ஆசையை வெளிப்படுத்தினாள்.

அவன், “அய்யோ அம்மா அல்லவா நீ” என்கிறான். அவளோ உன்னை நானா பெற்றேன் எனக்கூறி அவனை இறுக்கி அணைத்தாள். அவன் திமிறினான். அவளைத் தள்ளிவிட்டு ஓடினான். அவள் அவனைப் பிடித்தாள். அவனது மேலங்கி அவளது கையிலகப்பட்டது.

அவன் ஓடிவிட்டான். அவளுக்கு ஆவேசம். அவனைப் பழிவாங்கத் திட்டமிட்டாள். அரசன் வேட்டை முடித்து திரும்பி வரும் வரை காத்திருந்தாள். அரசனிடம் சாரங்கதாரன் தன்னை கட்டாயப்படுத்தி புணர்ந்துவிட்டதாகச் சொல்லுகிறாள். அதற்குச் சாட்சியாக அவனது மேல் அங்கியைக் காட்டுகிறாள்.

அரசன் அவள் சொன்னதை நம்புகிறான். அவள் சொன்ன விதம் அப்படி. சாரங்கதாரனை விசாரிக்கிறான் அவன் மறுக்கிறான். தோழன் அங்கு நடந்ததைச் சொல்லுகிறான். அமைச்சன் சாரங்கனுக்குச் சார்பாய் பேசினான். அரசன் கேட்கவில்லை. சாரங்கதானுக்கு இடது காலையும் வலது கையையும் வெட்டிவிடுமாறு ஆணையிடுகிறான். காவலர் சாரங்கதாரனை காட்டுக்கு அழைத்துச் சென்று தண்டனையை நிறைவேற்றுகின்றனர்.

சித்தர் ஒருவரின் தயவால் தன் உடல் ஊனம் நீங்கப் பெறுகிறான், சாரங்கதாரன். இந்த விஷயம் அரசனுக்குத் தெரிந்தது. அது உண்மையா என அறிய மகனைத் தேடிப் போகும்போது அசரீரி கேட்கிறது. சித்திராங்கதையே குற்றவாளி என அறிவித்தது. அரசன் மறுபடியும் விசாரணை செய்தான். அதில் சித்திராங்கதைதான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அவள் உடனே தண்டிக்கப்பட்டாள்.

மறுபடியும் காட்டுக்குச் சென்று மகனை திருப்பி அழைக்கிறான். சாரங்கதாரன் வர மறுத்துவிடுகிறான். தன் தோழனை அரசனாக முடிசூடக் கேட்கிறான். அரசன் அப்படியே செய்தான். பிறகு துறவு பூண்டு கானகம் சென்றான்.

இது சாரங்கதாரன் அம்மானை கூறும் பொதுவான கதை. வாசாப் நாடகத்திலும் இந்தக் கதையே வருகிறது. இக்கதையின் மாறுபட்ட வேறு வடிவங்கள் தமிழகத்தில் உண்டு. இவை தெலுங்கு மூலத்திலிருந்து வேறுபட்டது என்கின்றனர்.

சாரங்கதாரன் வேங்கி நாட்டு அரசன் ராஜராஜ நரேந்திரனின் மகன். பேரழகன். இவனுக்கு அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சனிடம் சொல்லுகிறான். அமைச்சன் சாரங்கதாரனின் ஓவியத்தை வரைந்து தூதர்கள் வழி அனுப்புகிறான். சித்திராங்கி அந்த ஓவியத்தைப் பார்த்து ஆசைப்படுகிறாள். அவளது ஓவியத்தை தூதர்களிடம் அனுப்புகிறாள்.

சித்திராங்கியின் ஓவியத்தைப் பார்த்த அரசனுக்கு அவள் மேல் ஆசை வருகிறது. அவளை அடைய விரும்புகிறான். ஒரு சூழ்ச்சிக்கார அமைச்சன் அதற்கு வழி சொல்லுகிறான். சாரங்கதாரனின் பெயர் பொரித்த உடைவானை சித்திராங்கிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மாலையிடச் செய்து அவளை அழைத்து வரவேண்டும் என்கிறான். அவன் திட்டப்படி எல்லாம் நடக்கிறது. சித்திராங்கி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுகிறாள். ஒருநாள் அரசன் வேட்டைக்குச் சென்றபோது சித்திராங்கி, சாரங்கதாரனைத் தன் மாளிகைக்கு அழைக்கிறாள். மீதிக்கதை முன்பு கூறியது போன்றதே.

சாரங்கதாரன் கதை ஆந்திராவிலிருந்து வந்த காலத்தைத் துல்லியமாகக் கூறமுடியாவிட்டாலும் இது பெரும்பாலும் 17ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் வந்திருக்கலாம். ஆந்திராவிலிருந்து 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆந்திரர்கள் கலை, இலக்கியம் வாய்மொழிக் கதைகள் என பல பண்பாட்டுக் கூறுகள் குடிபெயர்ந்துள்ளன. இந்தப் பட்டியலில் தெனாலிராமன் கதை, நல்லதங்காள் கதை, இரண்டும் பலருக்கும் தெரிந்தவை, நல்லதங்காள் கதை தமிழ் மண்ணுடன் வேரூன்றி விட்டது. இக்கதைக்கு அம்மானை, கூத்து, சினிமா, ரிக்கார்டு வடிவங்கள் மட்டுமல்ல; வழிபாடு சடங்கு ரீதியான நிகழ்வுகளும் இன்றும் உண்டு.

சாரங்கதாரா கதை யட்சகான வடிவில்தான் முதலில் வந்திருக்கிறது. பின்னர் அம்மானை, வாசாப் நாடகம், கூத்து, திரைப்படம் என வேறு வடிவங்களைப் படிப்படியாகப் பெற்றிருக்கிறது.

யட்சகானம் என்ற நாடக வகை ஆந்திரர் தமிழிற்குக் கொடுத்த கொடை. யட்சகானம் ஆந்திராவில் தோன்றியதற்கான ஒரு கதை உண்டு. இது வட இந்திய மரபிலிருந்து ஆந்திராவிற்கு வந்தது. நேபாளத்தில் கந்தர்வர்கள் என்னும் இனத்தினர் இருந்தனர். இவர்கள் சுவர்க்க உலகிலிருந்து நேபாளத்துக்கு வந்தவர்கள் என்பது அவர்களின் தொன்மம். இவர்களை பிரம்மா நேரடியாகப் படைத்தாராம். இவர்களில் சிலர் கடவுளிடம் தங்களை இரட்சிக்குமாறு வேண்டினர். இவர்கள் யட்சர் எனப்பட்டனர். இவர் தங்களைப் பட்சிக்க வேண்டும் எனக் கேட்டனர். இவர்கள் பட்சர் (அரக்கர்) எனப்பட்டனர்.

யட்சகர் எனப்பட்ட கந்தவர்கள் பாடிய பாடல்கள் யட்சகானம் ஆயிற்று, சமஸ்கிருத மரபிலிருந்து தெலுங்குக்கு வந்த யட்சகானம் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வந்திருக்கலாம் என்பர். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தெலுங்கில் நூற்றுக் கணக்கில் யட்ச கானங்கள் இருந்தன. இங்கிருந்து கன்னடம் சென்றது கி.பி. 15ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என்கிறார்கள்.

தமிழக அரசு ஓலைச்சுவடி நூலகத்தில் ஆறு தமிழ் யட்சகான ஏடுகள் உள்ளன. இவை வல்லாளராஜ யட்ச கானம், சிறுத்தொண்டர் யட்ச கானம், நீலியட்ச கானம், நரசிங்க விஜய யட்ச கானம், தேரூந்த யட்சகானம், சாரங்கதாரன் யட்சகானம் ஆகியன. மேலும் இருக்கலாம்.

சாரங்கதாரன் யட்சகான முதல் ஓலையில் ராமசிங்கு படிக்கிற சாரங்கதார யட்ச கானம் என உள்ளது. இது 174 பாடல்களும் 95 வசனப் பகுதிகளையும் உடையது. இது அச்சில் வந்ததாகத் தெரியவில்லை.

சாரங்கதார அம்மானை சித்திராங்க மாலை என்னும் பெயரில் வந்திருக்கிறது (1906), அதன் பதிப்பாசிரியர் ஏகாம்பரநாத முதலியார். இதன் இன்னொரு பதிப்பை சென்னை சூளை துளசிங்க முதலியார் வெளியிட்டிருக்கிறார்.

சென்னை அரசு ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்தில் சாரங்கதாரா வாசகப்பா உள்ளது. இதை எழுதிய சிங்காரவேலு முதலியார் வேறு வாசகப்பா நூற்களும் வெளியிட்டுள்ளார். 1909இல் அச்சில் வந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தேவசகாயம் பிள்ளை வாசகப்பா நூலின் அட்டையில் (யாழ்ப்பாணம் 1908) சாரங்கதாரா வாசகப்பா ஒன்றின் விளம்பரம் உள்ளது.

வாசாப் நாடக வடிவில், சித்திராங்கி கதை நெருப்பில் சாடுவதான முடிவு உள்ளது. இக்கதைப்படி சாரங்கதாரன் அரசனாகிறான்.

சுசீந்திரம் கோவிலில் நடத்தப்பட்ட சாரங்கதாரா நாடகம் யட்சகான வடிவிலிருந்து உருவானது. இதன் ஓலைப்பிரதி வட்டப்பள்ளி மடம் நூலகத்தில் உள்ளது. இது பாட்டு வசனம் கதைப் பாடல்கள் என அமைந்தது, இந்த நாடகத்தில் கதை சொல்லும் முறையில் மாற்றம் உண்டு. முடிவு வித்தியாசமானது. சித்திராங்கி தன் மகன் சாரங்கதாரனை விரும்பிய பாவத்தைத் தீர்க்க சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு வருகிறாள். வழிபடுகிறாள். பாவம் தீர்ந்து திரும்புகிறாள் என முடிகிறது.

தமிழகத்தில் உள்ள வேறு வடிவ நாடகங்கள் தெலுங்கு சாரங்கதாராவைப் பிரதி செய்தவை. ஆந்திர நாடகத்தின் பிதாமகர் என அழைக்கப்படும் தர்மாவரம் கிருஷ்ணமாச்சாரியார் எழுதிய விசார சாரங்கதாரா நாடகம் சென்னையில் 1891இல் நடிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த நாடகத்தின் கதையை தெலுங்கு அறிந்த தஞ்சை தேவதாசிகள் பிரதி செய்திருக்கின்றனர்.

தெலுங்கு நாடகப் பிதாமகரான கிருஷ்ணமாச்சாரியாரை பம்மல் சம்பந்த முதலியார் சந்தித்திருக்கிறார் (1891), அவர் நடத்திய தெலுங்கு சாரங்கதாரா நாடகத்தைப் பார்த்திருக்கிறார். இதன் அடிப்படையில் சம்பந்த முதலியார் (1879-1964) சாரங்கதாரா என்ற நாடகத்தை எழுதினார் (1912). இது அந்தக் காலத்தில் 198 முறை மேடை ஏறி இருக்கிறது.

சாரங்கதாரா இசை நாடகம் ஒன்று அச்சில் வந்திருக்கிறது. சென்னையில் 1908இல் வெளியானது. இது முழுக்கவும் பாடல் வடிவானது. இதில் அடதாளம், கைதாளம், திரிபுடை எனத் தாளவகைகள் காட்டப்பட்டுள்ளன. இதில் கதைத் தன்மை குறைவு.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பேராசிரியராக இருந்த இராமானுஜம், திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீநிவாசனிடமிருந்து பெற்ற நாடகப் பிரதி ஒன்றை என்னிடம் தந்தார். அது மதுரை - ஸ்பெஷல் நாடகக் கம்பெனிக்காரர் நடத்திய நாடகத்தின் பிரதி. இதில் இடையிடையே பாடல்கள் உள்ளன.

சாரங்கதாரன் திரைப்படம் இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டாலும் முதலில் இந்தி மொழிப் படமே வந்தது.(1936). இது படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தின் முடிவு சோகமாய் இருந்ததே இதன் தோல்விக்குக் காரணம் என்பதை அறிந்து, தமிழ்ப் படத்தின் முடிவை மாற்றினர்.

1938இல் சுப முடிவுடன் வந்த சாரங்கதாரன் நாடகம் முழு வெற்றி அடைந்தது. இதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.டி. சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். தயாரிப்பு முருகன் டாக்கீஸ். மொத்தம் 41 பாடல்கள். எழுதியவர் பாபநாசம் சிவன். சிவபெருமான் கிருபை வேண்டும், அவதாரம் செய்தறியேன், ஞானகுமாரி நடன சிங்காரி என்னும் பாடல்கள் அப்போது பிரபலமாகப் பேசப்பட்டன.

இந்தப் பாடல்கள் “நவீன சாரங்கதாரா பாட்டுப் புஸ்தகம்” என்னும் தலைப்பில் இலங்கை சிலோன் பிரிண்டர்ஸ் (பார்கர் வீதி கொழும்பு) வழியாக வந்தது. இந்த சினிமாவின் விளம்பரமே சாரங்கதாரன் உயிர்பெற்று அரசாளும் காட்சியுடன் சுபமாக சினிமா முடிகிறது என இருந்தது.

1958இல் ஒரு சாரங்கதாரா சினிமா வந்தது. இதன் இயக்குநர் வி.எஸ்.ராகவன். சிவாஜி, எம்.என் நம்பியார், பி.பானுமதி, ராஜசுலோசனா போன்றோர் நடித்தது. கதை வசனம் எஸ்.டி.சுந்தரம் இசை ஜி.ராமநாதன், பாடல்கள் மருதகாசி, மாரிமுத்தா பிள்ளை, பாடியவர்கள் டி.எம்.எஸ், சீர்காழி. இந்த சினிமாவில் குமாரி கமலாவின் நடனக்காட்சி உண்டு. இந்தப் படத்தில் புகழ்பெற்ற பாடல் ‘வசந்தமுல்லை போலே வந்து’ என்பது, இப்போதும் கேட்கப்படுவது.

சாரங்கதாரா கிராமபோன் ரிகார்டு, ஸ்பெஷல் நாடகக் கதையைத் தழுவியிருந்தது.

- அ.கா. பெருமாள்

Pin It