‘அப்பன்’ எழுத்தாளர் அழகுநிலா தன் தந்தையின் நினைவுப் பகிர்வாக எழுதியுள்ள பதிவுகளின் தொகுப்பு. தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் செண்டாங்காடு எனும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவர் பஞ்சாட்சரம். ‘என்னப்பன் ஆடிய ஆட்டத்தின் சில அசைவுகள்’ எனக் குறிப்பிடும் அழகுநிலா, “எனக்குள் பஞ்சாய் வெடித்த ஆண்மையின் அடிவேராயிருந்த அப்பாவும் அப்பாவிற்குள் அழகாய் மலர்ந்த பெண்மையின் நுனிக்கிளையாயிலிருந்த நானும் சந்தித்துக் கொண்ட தருணங்களை உங்கள் முன் வைக்கிறேன்” என என்னுரையில் சொல்வது இந்நூலின் போக்கை உணர்த்தும்.
அழகுநிலா தன் அரை நூற்றாண்டு வாழ்வில் முதல் செம்பாதியை இதில் பதிவு செய்கிறார். நினைவு தெரியத் தொடங்கிய ஐந்திலிருந்து இருபத்தைந்து வயது வரையான இருபதாண்டுகளை எல்லையாக்கி, அப்பா எனும் அரூபப்புள்ளி தொடங்கி அய்யன் வீரனாகக் காட்சியாவது வரையான நடைச்சித்திரமாக இப்படைப்பு அமைகிறது.
தனிப்பட்ட ஒருவரின் வாழ்வனுபவங்கள் என்பதற்கு மேலாக தமிழ்ச்சமூக அசைவியக்கத்தின் சில தெறிப்புகளை இதில் அடையாளம் காணலாம். நிலவுடமைப் பண்பாட்டின் தேய்வு, கூட்டுக்குடும்ப முறையின் சிதைவும், தனிக்குடும்ப முறையின் நிலைப்பும், முதல் தலைமுறையாக கல்வியறிவு பெற்று வேளாண்மையிலிருந்து குமாஸ்தா வாழ்முறைக்கு மாறுதல், கிராமங்களிலிருந்து அருகிலிருக்கும் சிறு நகரங்களுக்கு இடம்பெயர்தல், கணவன் - மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சூழலமைவுஞ் என இதைத் தொகுத்துக் கொள்ள முடியும். LPG எனப்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் வேரூன்றியதும் இக்காலத்தேதான்.
இப்பின்புலத்தில் இப்பிரதியை வாசிக்க இயலும். வேளாண் சிறுகுடியில் பிறந்த பஞ்சாட்சரம் இயல்பாக உருவாகும் விதம் நூலில் சிதறிக் கிடக்கிறது. அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குவது குழந்தை இயல்பூக்கம். அதில் ஏமாற்றம் வரும்போது நெறிபிறழ் நடத்தைகள் தோன்றும். பஞ்சாட்சரமும் அப்படித்தான். பிள்ளை வயது பசியில் தொடங்கி அடங்காப் பசி கொண்டவராக, பசி தாங்காதவராக வளர்கிறார்.
பிறர் சுட்டுமளவுக்கு புத்திசாலியாக, படிப்பாளியாக இருக்கிறார். குடும்பச் சூழல் அவருக்கு எஸ். எஸ்.எல்.சி.யோடு படிப்பைத் தடை செய்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. அவரின் விருப்பத்துக்கு மாறான இந்தச் செயல் அவரின் ஆழ்மன வடுவாகிவிடுகிறது. பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்து லஞ்ச லாவண்யங்கள் பெருகிய பணிநிலை வெறுத்து, மின்வாரியப் பணிக்குச் செல்கிறார். சிறிய வயதில் சம்பாத்யம், கட்டற்ற மனநிலை, கூட்டாளிகள் ஆகியவற்றால் குடியும், கும்மாளமும், குஸ்தியுமாக இளமை வாழ்வு அமைந்து விடுகிறது. பிறர் அஞ்சும், ஒதுக்கும் நிலை உருவாகி ‘தனியனாக’ வலம் வருகிறார்.
முப்பது வயதுக்குப் பிறகு அருகில் உள்ள கிராமமான புலவன் காட்டில் தமிழரசி என்பவரை மணம் செய்து கொள்கிறார். இவரை விட அதிகம் படித்தவர். ஆசிரியராக வேலை பார்ப்பவர். அமைதியான அருங்குணங்கள் கொண்டவர். தமிழரசியும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். முதல் தலைமுறையாகப் படித்து வேலைக்குச் சென்றவர்தான். ஊரே வேடிக்கை பார்க்கத் தயாராகும் சூழலில், தமிழரசியின் கட்டுக்குள் படிப்படியாக பஞ்சாட்சரம் வருகிறார். ஆண் எவ்வளவு முரடாக இருந்தாலும் ஆற்றுப்படுத்தும் இறையாகப் பெண் திகழ்கிறாள்.
பெருமளவு குடியிலிருந்து விடுதலை ஆகிறார். வேண்டாத நபர்களிடமிருந்து விலகுகிறார். ஓர் ஆணும் இரு பெண்ணுமாக மூன்று பிள்ளைகளுக்கு ‘அப்பன்’ ஆகிறார். ‘குடும்பம்’ என்கின்ற அமைப்பு எவ்வளவுதான் சிக்கலானதாக, வன்மம் நிறைந்ததாக, ஜனநாயகமற்றதாக இருந்தாலும், ‘பஞ்சாட்சரம்’ போன்றவர்களை கரை சேர்க்கும் தோனியாகவும் திகழ்கிறது என்பதை இந்நூல் கவனப்படுத்துகிறது.
இப்படி உருவான அப்பாவின் மூத்த மகள்தான் அழகுநிலா. அப்பா அவரை ‘அழகப்பா’ என்றுதான் அழைக்கிறார். தான் பெறாத கல்வியைத் தன்பிள்ளைகள் பெற வேண்டும் எனத் துடிக்கிறார். மூன்று பேரையும் உயர் தொழில்நுட்பக் கல்வி வரை படிக்க வைக்கிறார். குழந்தைகளின் வெளியை அங்கீகரிக்கிறார். படிப்பை விட பண்பு பெரியது, நடத்தை முக்கியம் எனக்கருதி நடந்து கொள்கிறார். கனிவும் கண்டிப்பும் மிக்கவராக இருக்கிறார். அதே வேளை அவரின் முன்கோபம், சண்டைக்கோழித்தனம், கெட்ட வார்த்தை பேசுதல், பிடிவாதக் குணம் ஆகிவற்றோடே வாழ்கிறார். இவற்றைக் கண்டு கேட்டு அனுபவித்து ‘வளர்ந்த’ நிலா இப்பதிவுகளின் வழி உயிரோட்டம் தருகிறார்.
குழந்தைகளின் சமூகமய ஆளுமை (சூப்பர் ஈகோ) உருவாக்கத்தில் பெற்றோரின் பங்கு பெரிது. பச்சிளம் குழந்தைகளின் முன்மாதிரிகள் அவர்கள். அதிலும் தந்தைகள் தான் நாயகத்தன்மைப் படைத்தவர்கள். (இதிலும் ஆண் மையத்துக்குப் பங்குண்டு). நிலா ‘அன்னம்’ போல பாலை உறிஞ்சி வளர்ந்த விதம் இதில் விரவிக் கிடக்கிறது.
முதன் முதலாய் இரயிலைப் பார்ப்பது, முதல் முறை சென்னைக்குச் செல்வது, முதல் முறையாக பணியில் சேர்வது, அப்பாவிடம் காதலைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்துவது (வழக்கமாக காதல் கடிதங்கள் தான் உண்டு. இங்கே காதலை அறிவிக்க கடிதம் பயன்படுகிறது) எனப் பலவும் நிகழ்வுகளின் விவரிப்பாக அமைகிறது.
சமயச்சார்பு அதிகம் ஒட்டாத பகுதி தஞ்சை வட்டாரம். திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்க பாதிப்புகள் அதிகம். நாட்டார் தெய்வ வழிபாடு, ஈடுபாடு பரவலானது. தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்டோர் சாமியான ‘வீரன்’, இப்பகுதியில் இடைநிலைச் சாதியினரின் குலசாமி. இது தனித்த ஆய்வுக்குரியது. ஆனால் ‘சாதி’ நீக்கமற நிறைந்திருக்கும். சாதிப்பகை, மோதல், இழிவு குறைவு. ஆனால் சாதி உணர்வு உண்டு. இச்சூழலில் அழகுநிலா முதல் முதலாக ‘சாதி’ என்பதை அப்பன் வழியாக அரிய நேர்கிறது. இது அதிர்ச்சியாகவும் அமைகிறது. இள வயதின் நேர்மையினால் அவர் எழுப்பும் வினாவும், அப்பாவின் தர்க்கமற்ற பதிலும், ஆத்திரமும் அவரைப் பாதிக்கின்றன. அளவு கடந்து நேசித்த அப்பா மீதும், நிகழ் சமூகம் மீதான விமரிசனமும் கோபமும் நிலாவுக்கு ஏற்படுகிறது. இது மனதளவில் வெடிப்பையும் தருகிறது. இந்தப் பதிவுதான் வளர்ச்சியின், மாற்றத்தின், நவீனத்தின் குறியீடு. மிக அழகான இடம். ஆசிரியரின் கருத்துத் தெளிவின் வெளிப்பாடு.
குடும்பத்தில் இருவரும் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுகின்றனர். அப்பாவை விட அம்மாவுக்கு படிப்பும், சம்பளமும் கூடுதல். ஆனால் வழக்கமான குடும்பப் பெண்கள் போலவே எல்லா வீட்டு வேலைகளையும் செய்து, குழந்தைகளையும் பராமரித்து, ஆசிரியர் வேலையும் செய்கிறார். என்றாலும் அவரின் முழுச் சித்திரமும் அரூபமாகவே உள்ளது. இது அப்பா பற்றிய நூல் என்பதால் மட்டுமல்ல, இது தமிழக இந்தியக் குடும்பங்களின், பெண்களின் கதி. இதையும் இந்நூல் மறைமுகமாக உணர்த்துகிறது.
பஞ்சாட்சரம் திராவிட இயக்க அரசியல் சார்புடையவர், தொழிற்சங்கத்தில் இருந்தவர், உடற்பயிற்சி வீரர், விளையாட்டு வீரரும் கூட. இசைப்பிரியர், திருக்குறளில் ஈடுபாடு உள்ளவர், மேடைப் பேச்சாளர், தன் முயற்சியால் ஆங்கிலம் கற்றவர். கடைசி காலத்தில் கூட காரோட்டவும், கணினிப் பழகவும் முயற்சிக்கிறார். இது சென்ற தலைமுறையின் எச்சம். விடாமுயற்சி, அயரா உழைப்பு, தன்னை நிலை நிறுத்தும் உக்கிரம் ஆகியன முதல் தலைமுறையாக மேலெழுவோரின் அடையாளம். இதை இந்நூல் முழுவதும் காணலாம்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அப்பாவை பல இடங்களில் குணக்குன்றாகக் காட்டுகிறார். தன் மாமனாரோடு பேசாமல் இருக்கிறார். திடீரென அவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொள்கிற செய்தி வருகிறது. பஞ்சு கதறி அழுகிறார். யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டிய கொட்டகைக்குச் சென்று தொங்கும் அறுபட்ட கயிற்றின் முன் முழங்காலிட்டு மன்னிப்புக் கோருவது இதிகாசத் தன்மை கொண்டது.
சிலம்பம், வெடக்கோழி, விரால் மீன், ஒரு மரத்துக் கள்ளுஞ் தஞ்சை மிராசுகளின் குறியீடு. பளிங்கு விளையாட்டு வட்டார வாழ்வின் விளைச்சல். இவையெல்லாம் நூலில் பதிவாகும் விதம் சிறப்பு.
இது அழகுநிலாவின் அப்பாவைப் பற்றியது. என்றாலும் படிக்கும் ஒவ்வொருவரின் அப்பாக்களும் நினைவில் வருவார்கள். இது இந்நூலின் வெற்றி.
இளம் பிராயத்து நினைவுகளை அழகாகச் சொல்லி விடுகிறார் ஆசிரியர். குழு குருதி குடித்த குலசாமி, பெயர் பொறித்த பித்தன், காணாச்சினத்தன், கட்காதல் கொண்டோன் என்றெல்லாம் தலைப்பிடுவதும், ‘கம்முனாட்டி பய மவளே’ என்றெல்லாம் வட்டார வழக்கைக் கையாள்வதும் சிறப்பு.
இது தன்வரலாறா, வாழ்க்கை வரலாறா, நினைவுத்தடமா என்று கேள்விகள் எழலாம். எல்லாமும் தான். அழகு நிலா கவிதை, கதை, கட்டுரை, குழந்தை இலக்கியம் எனப் பல தளங்களிலும் பயணிப்பவர். சிங்கப்பூரில் வாழ்ந்து வருபவர். இலக்கியத்துக்கான சிங்கப்பூர் அரசின் விருதுகளைப் பெற்றவர். இது புனைவு போல அமைந்த அபுனைவு. அற்புதமான நடைச் சித்திரம். நிகழ்வாழ்வின் எளிய முன்வைப்பு.
அப்பன்,
அழகு நிலா, நூல்வனம் - 2023
- இரா.காமராசு, பேராசிரியர், தலைவர் நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்