ஒரு தடயவியல் துறை மருத்துவரின் நினைவுகள்
மருத்துவர் உம்மதத்தன். B.(2021)
DEAD MEN TELL TALES. THE MEMOIR OF A POLICE SURGEON | Dr.B.UMADATHAN (2021)
Translated from the Malayalam By Priya k.Nair | HarperCollins Publishers, India
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
ஒருவரின் முக அமைப்பானது அவரது முக எலும்புகளின் அமைப்பை ஒத்திருக்கும் என்ற உண்மையை மருத்துவ அறிவியல் நிறுவியுள்ளது. இதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தும் தொழில் முறையானது மேலடுக்க ஒளிப்படம் (Photographic Superimposition) என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய கொலை நிகழ்ந்த காலத்தில் ஹைதராபாத் நகரில் உள்ள மத்திய சோதனைச் சாலைதான் இதற்கான தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டிருந்தது.கொலையுண்டவரின் மண்டை ஓட்டை ஹைதராபாத்துக்கு அனுப்ப புலன் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் கோவிந்தன் விரும்பவில்லை. ஆய்வின் முடிவு கிடைப்பதற்குக் காலம் எடுக்கும் என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். எனவே, உம்மதத்தனையே இப்பணியை மேற்கொள்ளும்படிக் கூறினார். "போட்டோ கிராபி சூப்பர் இம்போசிசன்”என்ற சொல்லை மட்டுமே உம்மதத்தன் கேள்விப்பட்டிருந்தார். ஆனால், இத் தொழில்நுட்பத்தை அவர் ஒருபோதும் மேற்கொண்டதில்லை. ஆனால், இதைக் குறித்து ஏராளமான நூல்களையும் ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகளையும் அவர் படித்திருந்தார். மேலும், இம்முயற்சிக்குத் துணைபுரிய எடின்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் கிளைஸ்டர் என்பவரும் ஜேம்ஸ் கூப்பர் பிராஷ் என்பவரும் இணைந்து எழுதிய “ரக்ஸ்டன் வழக்கின் மருத்துவ-சட்டவியல் அம்சங்கள்” ( Medico-legal Aspects Of the Ruxton Case) என்ற நூலையும் தேடி எடுத்துப் படித்தார். இது இவரது பணிக்கு மிகவும் உதவும் தன்மை கொண்டதாய் அமைந்தது. மேலும், ஒளிப்படக் கலையையும் அதன் தொழில் நுட்பத்தையும் இவர் அறிந்திருந்தமையால் இப்பணியை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.இருப்பினும் சில கருவிகளின் போதாமை இருந்தது.
கொலையுண்ட இராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து அவரது ஒளிப்படம் ஒன்று அவருக்குக் கிடைத்தது. அது கிளியனூரில் உள்ள ஒளிப்பட நிலையத்தில் எடுக்கப்பட்டதென்பதால் அதன் நெகட்டிவை அவரால் பெறமுடிந்தது. இவரும் ஜாரஜ் பால் என்ற இவரது துறை சார்ந்த மற்றொரு மருத்துவரும் இணைந்து சில தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு கொலையுண்டவரின் அச்சு அசலான முகத்தை வெளிப்படுத்தும் ஒளிப்படத்தை உருவாக்கினர். இது இவர்களது பணியின் முதற்கட்டம்.
அடுத்து, கொலையுண்டவரின் மண்டை ஓட்டின் ஒளிப்படத்தைப் பல்வேறு கோணங்களில் எடுப்பது. இம் முயற்சியில் மண்டை ஓட்டை நிறுத்திவைக்க ஒரு தாங்கி (ஸ்டாண்ட்) தேவைப்பட்டது. இது கிடைக்காத நிலையில் அதன் வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதன் துணையுடன் தாசன் என்ற நண்பரின் உதவியால் தாங்கி ஒன்றை உருவாக்கினார்கள்.அதில் மண்டை ஓட்டை வைத்துப் படமெடுத்தனர். பின்னர் முகத்தின் ஒளிப்படத்தையும் மண்டை ஓட்டின் ஒளிப்படத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்த்தனர். மானுடவியல் அடிப்படையில் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்த போது முக எலும்புகளும் ஒளிப்படமும் ஒத்திருந்தன. எனவே, சாணக்குழியில் கிடைத்த மண்டை ஓடு இராதாகிருஷ்ணனுடைய மண்டை ஓடுதான் என்பது உறுதியாயிற்று.
சில மாதங்கள் கழித்து இக் கொலை வழக்கு வஞ்சியூர் அமர்வு நீதிமன்றத்தில் (செசன்ஸ் கோர்ட்) விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் காவல் துறையின் சார்பில் சூழ்நிலைச் சான்றுகளே முன்வைக்கப் பட்டன. தம்பி ரவியின் ஒப்புதல் வாக்குமூலமும் துணை நின்றது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் புகழ்வாய்ந்த வழக்கறிஞரான பரமேஸ்வரன் பிள்ளை வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தில், தடய அறிவியல் துறை மருத்துவரும் காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட ஓர் எளிய முறையே மேலடுக்க ஒளிப்படம் என்று குறிப்பிட்டார். மருத்துவர் உம்மதத்தனிடம் ஏராளமான வினாக்களைத் தொடுத்தார். தடயவியல் துறையின் தலைவராக விளங்கிய மருத்துவர் கந்தசாமியையும் குறுக்கு விசாரணை செய்தார். மேலடுக்க ஒளிப்படம் எடுத்த போது ஒளிப்படக் கலைஞரின் உதவியை உம்மதத்தன் பெற்றாரா? அல்லது அவர் தனித்தெடுத்தாரா என்று கந்தசாமியிடம் கேட்டார். உம்மதத்தன் தேர்ந்த ஒளிப்படக் கலைஞர் என்று அவர் விடையளித்ததும் குறுக்கு விசாரணையை நிறுத்திக்கொண்டார்.
இச் செய்திகளுடன் வழக்கின் தீர்ப்பு என்னாயிற்று என்று கூறாமலேயே வேறு வழக்குகளில் அவர் மேற்கொண்ட மேலடுக்க முறையைக் கூறிச் சொல்கிறார். ஒருவேளை அறிவியல் சார்ந்த அவரது ஆய்வு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது போயிருக்குமோ? (அனுமானம்தான்).
அடுத்து, ஒரு கொலை நிகழ்வு குறித்தும் அதில் கொலையுண்டவர் யார் என்பதைக் கண்டறிவதில் அவரது பங்களிப்பு குறித்தும் இருபத்தி ஐந்தாவது இயலில் எழுதியுள்ள செய்திகளைக் காண்போம்.
ஒரு கார் விபத்து:
1984 ஆவது ஆண்டில் மாவேலிக்கராவுக்கும் செங்கனூருக்கும் இடையில் ஒருவர் தம் காரை ஓட்டியவாறு வந்துகொண்டிருந்தார். குன்னம் கொல்லக்கடவு பாலத்திற்கு வந்தபோது அம்பாசிடர் கார் ஒன்று சாலையில் இருந்து விலகி வயலில் கவிழ்ந்து கிடந்ததை அவர் கண்டார். உடனே தன் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த வீட்டுக் கதவைத் தட்டினார். அதில் வசித்துவந்த சுரேஷ்குமார் என்பவர் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் தாம் கண்ட காட்சியை அவரிடம் கூறினார். அவர் தன் அண்டை வீட்டில் வசிக்கும் இராதாகிருஷ்ணனை அழைத்து இதைத் தெரிவித்தார். இருவரும் ஒன்றாக அக் கார் கிடந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள். அக் காரைப் பார்த்தபோது அதன் வலதுபக்கக் கதவு திறந்திருந்தது. தீப்பற்றி எரிந்திருந்த அக்காரின் ஸ்ட்டேரிங் வீலுக்குப் பின்னால் கரிக்கட்டையாய் இருந்த உடல் ஒன்று அடையாளம் காணமுடியாத நிலையில் சாய்ந்திருந்தது.
புலனாய்வு:
இக் காட்சியை முதலில் கண்டவர்களில் ஒருவரான இராதாகிருஷ்ணன் மாவேலிக்கரைக் காவல் நிலையம் சென்று இந்நிகழ்வைத் தெரிவித்தார். அதன் பின்னர் துணைக் கண்காணிப்பாளர் அரிதாஸ் அதிகாலை மணி அளவில் அங்கு வந்து சேர்ந்தார்.
K.L.Q. 7831 என்ற அம்பாசிடர் கார் செரியநாடு ஊரைச் சேர்ந்த சுகுமாரன் குருப் என்பவருக்கு உரிமையானது என்பதும் அவர் அயல்நாடு வாழ் இந்தியர் (NRI) என்பதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் காரில் காணப்பட்ட உடல் அவருடையது என்று அப்பகுதி மக்கள் நம்பினர்.
புலனாய்வின் தொடக்கம்:
சிறிது நேரத்தில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் தடயவியல் மருத்துவரான உம்மதத்தனும் வந்துசேர்ந்தனர். அந்த இடத்திலேயே பிண அறுவைச் சோதனையை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தொடக்க நிலையில் பிரேத விசாரணை நடத்திய அரிதாஸ், பிரேத விசாரணைப் படிவத்தை உம்மதத்தனிடம் கொடுத்தார். அப்படிவத்தில் இறந்தவரின் பெயர் ‘சுகுமாரன் குருப் என்று சொல்லப்படுபவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அங்குக் கூடியிருந்த மக்கள் திரள், காரில் இருந்த பிணம் சுகுமாரன் குருப் (இனி:குருப்) என்பவரது என்று உறுதியாக நம்பிய நிலையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது, தடயவியல் மருத்துவருக்கு வியப்பையளித்தது. இது குறித்து அரிதாசிடம் கேட்டபோது, இது குறித்துப் பின்னால் கூறுவதாகக் கூறிவிட்டார். இதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்குமென்று உம்மதத்தன் அனுமானித்தார்.
விபத்து நடந்த இடத்திலேயே அமைக்கப்பட்ட கூடாரத்தில் பிண அறுவைச் சோதனையை அவர் தொடங்கினார். மிகவும் சிதைந்த நிலையில் பிணம் இருந்தது. தலைமுடி முற்றிலும் எரிந்துபோய் அது யாருடையது என்று எளிதில் கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருந்தது.
தம் பணியைத் தொடங்கும் முன்னர் கைக்கடிகாரம், மோதிரம் போன்ற உடைமைகள் எதுவும் பிணத்தில் காணப்படவில்லை என்பதைக் கவனித்தார்.அயல்நாட்டில் பணிபுரியும் ஒருவர் கைக்கடிகாரம் கூட அணியாதிருந்தது அவருக்குப் பெரும் வியப்பை அளித்தது. அதன் தோள்ப்பட்டை, கால் மூட்டுகள் நீங்கலாக உடல் முழுவதும் கரிக்கட்டையாக இருந்தது. தோளின் மீது பெட்ரோல் போன்ற ஒன்று ஊற்றப்பட்ட அடையாளம் தெரிந்தது. இறந்தவன் உயிரோடிருக்கும்போது எரிக்கப்பட்டதற்கான அடையாளம் எதுவும் உடலில் காணப்படவில்லை. இதனை அடுத்து, பிண ஆய்வை நேரில் காண்பது போன்ற உணர்வு வாசிப்பவனுக்கு ஏற்படும் வகையில் அதை விவரித்துள்ளார்.
பற்கள், எலும்புகளின் துணையால் இறந்தவனின் வயது முப்பதில் இருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கும் என்றும், அவனது உயரம் 180.செ.மீ.என்றும் அனுமானித்தார். இறுதியாக அரிதாசிடம் தாம் கண்டறிந்த உண்மைகளாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிட்டார்.
* கொலை நிகழ்வுக்குப் பின்னரே உடலுக்கு எரியூட்டப்பட்டுள்ளது.
* இறந்தவனுக்கு நஞ்சூட்டப் பட்டிருக்கலாம்.
பிண அறுவைச் சோதனை முடிந்ததும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் அரிதாஸ் ஆகிய இருவருடன் உம்மதத்தன் மாவேலிக்கரை காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு பாஸ்கர பிள்ளை (இனி:பிள்ளை)என்பவர் காத்திருந்தார்.
பாஸ்கர பிள்ளை:
இவன் குருப்பின் மனைவி சரசம்மாளின் சகோதரி தங்கமணியின் கணவன். அபுதாபியில் குருப்புக்கு எதிரிகள் உண்டென்றும் அவர்கள் குருப்பைக் கொன்றிருக்கலாம் என்றும் காவல் துறையினரிடம் முதலில் கூறியது இவன்தான். இதன் பொருட்டு இவனை விசாரணைக்கு அழைத்திருந்தனர். வேட்டி கட்டி முழுக்கைச் சட்டையுடன் காட்சி அளித்த இவன் இம் மூவரைக் கண்டதும் கூப்பிய கரங்களுடன் மூலையில் நின்றான். இவனது தோற்றம் சற்று வேறுபாடாக அரிதாசுக்குப் பட்டது. ஏனெனில் மாவேலிக்கரைப் பகுதி மக்கள் முழுக்கைச் சட்டை அணியும் பழக்கம் இல்லாதவர்கள். இது குறித்து அவர் பிள்ளையிடம் கேட்டபோது, தாம் வழக்கமாக இப்படி ஆடையணியும் பழக்கமுடையவன் என்று விடையளித்தான். சட்டையின் கையைச் சுருட்டிவிடும்படி அரிதாஸ் கூறியதும் அவ்வாறே செய்தான்.
அவனது இரண்டு முன் கைகளிலும் தீப்புண்கள் காணப்பட்டன.
அங்கிருந்த ஓர் அறைக்கு அவனை அழைத்துச் சென்று உம்மதத்தன் பரிசோதித்தார்.
அவனது முகத்தின் வலது பக்கம் வலது புருவம், பாதம் ஆகிய இடங்களில் நெருப்புக் காயம் தென்பட்டது. இது ஒரு நாளுக்கு முற்படாதது.
இனி இதற்கு மேல் மறைக்க முடியாது என்ற நிலையில்” "ஐயா நான்தான் குருப்பைக் கொன்றேன்” என்று நாடகபாணியில் ஒத்துக் கொண்டான்.
"எனக்கு ஐக்கிய அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து ‘50,000 வாங்கி ஏமாற்றிவிட்டான். அதற்குப் பழிவாங்கவே அவனைக் கொன்றேன்" என்பதாக அவனது வாக்குமூலம் அமைந்தது.
பிணம் கிடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கையுறைகளில் ஒன்றில் மயிர்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அவற்றையும் பிள்ளையிடம் இருந்து உம்மதத்தன் சேகரித்த மயிர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்த தடயவியல் துறையின் உதவி இயக்குநர், இரண்டும் ஒரே மனிதனுக்குரியவை என்ற முடிவுக்கு வந்தார். இக் கையுறைகளை செங்கனூரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் பிள்ளை வாங்கியதை அரிதாஸ் கண்டறிந்தார்.
குருப் கொலை செய்யப்பட்டதை உறுதிப் படுத்துவதாக இச்சான்றுகள் அமைந்திருந்தபோதிலும் அரிதாஸ் இதை நம்பவில்லை. இதன் பின்னர் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்று இறந்துபோனவன் குருப் அல்ல! வேறு ஓர் இளைஞன் என்று குறிப்பிட்டது. இச்செய்தி குறித்து அரிதாஸ் வியப்படையவில்லை.
ஏன் எனில் எரிந்த காரையும் உடலையும் பார்வையிட வந்த அன்றே குருப்பின் வீட்டிற்கு இரு அதிகாரிகளை அவர் அனுப்பி வைத்திருந்தார். சீருடை அணியாது சென்ற அவர்கள் கமுக்கமான முறையில் அங்கு நிகழ்வனவற்றை ஆராய்ந்தனர். அங்கு ஒருவரும் குருப்பின் மறைவிற்கு வருந்தவில்லை என்றும் கோழிக்கறி சமைக்கும் மணம் வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அன்று மாலையில் குருப்பின் வீட்டிற்கு அரிதாஸ் சென்று சோதனையிட்டபோது, கோழிக்கறியின் மிச்சத்தைக் கண்டறிந்தார். இவற்றை எல்லாம் பிண ஆய்வுக்கு முன்பே அவர் அறிந்திருந்ததால்தான் பிண ஆய்வு தொடர்பான படிவத்தில் ‘சுகுமாரன் குருப் என்று சொல்லப்படுபவர்' என்று எழுதியிருந்தார்.
எரிந்துபோன கார் தவிர குருப்பிடம் சுற்றுலா கார் ஒன்றும் இருந்தது. அபுதாபியில் இருந்து வந்து தங்கும்போதெல்லாம் குருப் இதைத்தான் பயன் படுத்துவான். குருப்பின் இக் காரைக் குறித்தும் இதன் ஓட்டுநரான பொன்னப்பன் குறித்தும் எதுவும் தெரியவில்லை. இது காவல் துறையினருக்கும் அங்குள்ள ஏனையோருக்கும் அவன் மீது ஐயப்பாட்டை ஏற்படுத்தியது.
பொன்னப்பன் வருதல்:
குருப்பின் உடல் அடக்கம் அவனது வீட்டின் தோட்டத்தில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் அந்த இடத்திற்கு குருப்பின் சுற்றுலா காரில் பொன்னப்பன் வந்து சேர்ந்தான். இக்கொலையில் அவன் மீது ஐயப்பாடு இருந்தமையால் அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு இக்கொலையில் அவனது பங்களிப்பு குறித்து வினவத் தொடங்கினர்.ஆலப்புழையில் இருந்து அக்காரை வாடகைக்கு எடுத்தவர்கள் அலுவா என்ற ஊருக்குப் போனதாகவும் மாவேலிக்கரையைச் சென்றடைந்தபோது குருப்பின் மரணச் செய்தியை அறிந்து திரும்பி வந்ததாகவும் கூறினான். ஆனால் ஒருவரும் இதை நம்பவில்லை.
குருப்பின் தாய்மாமா பொன்னப்பனைத் தன் வீட்டிற்கு வரவழைத்து விசாரித்தார். குருப்புடன் ஆலப்புழையில் இருந்து காரில் செரியநாடு சென்றதாகவும் தான் ஓட்டிவந்த கார் இளைஞன் ஒருவன் மீது மோதி அவன் இறந்து போனதாகவும் அந்த உடல்தான் காரில் வைத்து எரிக்கப்பட்டதாகவும் பொன்னப்பன் கூறினான். குருப்பின் தாய்மாமாவின் மகன் காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் அவர் அரிதாசின் நண்பராகவும் இருந்தார். இக் காரணங்களால் இவ்வுண்மையை மறைக்க அவர் விரும்பவில்லை.எனவே, பொன்னப்பன் கூறிய செய்தியை அவர் அரிதாசிடம் கூறிவிட்டார். ஆனால் அரிதாஸ் இதை நம்பவில்லை. ஏனெனில், பொன்னப்பனின் கூற்று பிள்ளையின் கூற்றுடன் முரண்பட்டிருந்தது. இருவரது கூற்றுக்களும் பொய்யானவை என்பதே அவரது கருத்தாக இருந்தது. சாலை விபத்தில் ஒருவர் இறந்து போனால் குறிப்பாக அதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் எவரும் இல்லாத நிலையில் ஓட்டுநர் அதைக் காவல் துறைக்குத் தெரிவிப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை.
சாலை விபத்தில் இறந்தவரது உடலில் காணப்படும் வழக்கமான காயங்கள் எதுவும் உம்மதத்தன் மேற்கொண்ட பிண ஆய்வுச் சோதனையில் தென்படவில்லை. இதனால் அவரும் இதை நம்பவில்லை. ஆனால், யாரோ ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது பிணம் எரிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. கொலை செய்யப்பட்டவன் யார்? அவனைக் கொன்றது யார்? இக் கேள்விகளுக்கு விடைதேட வேண்டியிருந்தது. அரிதாசின் தேடல் குருப்பை மையமாகக் கொண்டமைந்தது.
குருப்பைத் தேடி:
ஆலப்புழையில் உள்ள உயரிய தங்கும் விடுதி ஒன்றில் பொன்னப்பன் அறை எடுத்துத் தங்கியிருந்தமை அவருக்குத் தெரிந்திருந்தது. கிரிஸ்டி என்ற உதவி ஆய்வாளரிடம் குருப்பின் ஒளிப்படத்தைக் கொடுத்து அவரை அங்கு அனுப்பினார். அவரும் அங்கு சென்று குருப்பின் ஒளிப்படத்தைக் காட்டி விடுதியின் பணியாளர்களிடம் விசாரித்தார். படத்தில் உள்ளவன் அங்கு தங்கியிருந்து அன்று காலையில்தான் அறையைக் காலி செய்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரியவந்தது. விடுதியின் பதிவேட்டில்’ வேணுகோபால் ‘ஆலப்புழை’ என்ற பொய்யான பெயர் பதிவாகி இருந்தது. உதவி ஆய்வாளர் அப்பதிவேட்டைக் கைப்பற்றி மாவேலிக்கரை வந்தார்.
குருப் தன் வீட்டினருக்கு எழுதிய கடிதங்களில் காணப்பட்ட எழுத்துக்களுடன் பதிவேட்டில் காணப்பட்ட எழுத்துக்கள் ஒத்திருப்பது தொடக்க நிலை ஆய்வில் கண்டறியப்பட்டது.
இவ்உண்மை தடயவியல் நிபுணர்களால் பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
புனைவை மிஞ்சிய உண்மை:
உயிரோடு உலவிவந்த குருப்பைக் கண்டறிய முடியாததற்காக அரிதாஸ் சோர்ந்துவிடவில்லை. குருப்பின் சகாவான பிள்ளையின் மீது தன் பார்வையைச் செலுத்தினார்! விளைவு? அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் கிடைத்தது. அது பேராசையும் குரூரமும் கலந்து வெளிப்படும் ஒரு புனை கதைக்கு இணையான ஒன்றாகும். இதன் தொடக்கம் 1984 சனவரி 6ஆவது நாளாக அமைந்தது. இந்த நாளில்தான் குருப் அபுதாபியில் இருந்து விடுமுறையில் கேரளத்திற்குத் திரும்பினான்.அவனை வரவேற்று செங்கனூருக்கு அழைத்துச் செல்வதற்காகப் பிள்ளையும் பொன்னப்பனும் காருடன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவனுடன் சாவக்காடு ஊரைச் சேர்ந்த சாகு என்பவனும் வந்திறங்கினான். ஆக மொத்தம் நால்வரடங்கிய அணி ஒன்று உருவாகிவிட்டது. இந் நால்வர் அணி ஒன்றுகூடி திட்டம் ஒன்றைத் தீட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டது. அத் திட்டம் குறித்தும் அதைச் செயல்படுத்தியமை குறித்தும் ஒப்புதல் வாக்குமூலமாக அரிதாசிடம் பிள்ளை கூறிய செய்திகளின் சுருக்கம் வருமாறு:
ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கு அபுதாபியில் குருப் ஆயுள் காப்பீடு செய்திருந்தான். அவன் இறந்துபோனதாக உறுதிப்படுத்தினால் அந்தத் தொகை கிடைக்கும். அதில் அம்மூவருக்கும் பங்கு தருவதாக குருப் வாக்களித்தான். விபத்து ஒன்றில் அவன் மரணமடைந்தால் மேலும் அதிகத் தொகை கிடைக்கும். இதன் பொருட்டு குருப் இறந்தது போன்ற ஒரு நாடகத்தை நடத்த நால்வரும் திட்டமிட்டனர். கலந்துரையாடினர். இறுதியாக அவர்கள் எடுத்த முடிவு இதுதான். பிணம் ஒன்றை குருப்பின் காரின் முன் இருக்கையில் ஸ்டீயரிங் வீலிற்கு முன்பாக அமரவைத்து காருக்கு நெருப்பு வைத்துவிடவேண்டும். கார் விபத்தில் குருப் இறந்து போனதாக நம்புவதற்கு இது துணை புரியும். பின்னர் ஆயுள் காப்பீட்டுத் தொகையையும் விபத்திற்கான இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.
இத் திட்டத்திற்கு அடிப்படைத் தேவையாக குருப்பின் உடல் தோற்றத்துடன் பொருந்தி வரக்கூடிய பிணம் ஒன்று தேவைப்பட்டது. இதன் பொருட்டு ஆலப்புழை மருத்துவக்கல்லூரி உடற்கூறியல் துறையின் சோதனைக் கூட உதவியாளரைச் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், பிணக்கூறு அறுவையின் போது ஃபார்மலின் திரவத்தில் பாதுகாக்கப்பட்ட பிணம் என்பது கண்டறியப்பட்டுவிடும் என்பதால் அத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். ஆலப்புழையில் உள்ள ‘வலிய சுடுகாடு’
(வலிய-பெரிய) என்ற தோட்டத்தில் இருந்து பொருத்தமான பிணம் ஒன்றைப் பெற முயற்சி செய்தார்கள். ஆனால், அதன் பாதுகாவலர் இச் சதியில் சேர விரும்வில்லை.இறுதியில் குருப்பின் உடல் வாகுக்குப் பொருத்தமான ஒருவரைக் கண்டுபிடித்து அவரைக் கொலை செய்து அப்பிணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.
ஒரு பலி ஆடு:
இம் முடிவை நிறைவேற்றப் பலியாடு ஒன்றைத் தேடத் தொடங்கினர். 21 சனவரி 1984 அன்று ஹரிபாட்டிற்கும் ஆலப்புழைக்கும் இடையே பலமுறை அலைந்தனர். அன்று நள்ளிரவில் கருவட்டா ஊரில் உள்ள ஹரி திரை அரங்கின் முன்பு ஓர் இளைஞன் இவர்களிடம் சிக்கினான். பொன்னப்பன் காரை ஓட்டி வந்தான். குருப் இவர்களுக்காக ஆலப்புழையில் காத்திருந்தான். ஒரு புட்டியில் மதுவும் மற்றொரு புட்டியில் ஈதரும் காரில் இருந்தன. சோதனைச் சாலையில் பணிபுரிந்த மாது என்பவன் அங்கிருந்து ஈதரைக் கொண்டு வந்திருந்தான். நெடுஞ்சாலையில் பயணத்தைத் தொடர வேண்டிய கார் அதை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்ததும் அந்த இளைஞன் பிள்ளையிடம் ஏதோ கேட்கத் தொடங்கினான். உடனே வலுக் கட்டாயமாக அவனது வாயில் மதுவையும் ஈதரையும் பிள்ளை ஊற்றினான். மயக்கநிலை அடைந்த அந்த இளைஞனின் கழுத்தைத் துண்டால் இறுக்கிக் கொன்றான். பின், செரிய நாட்டில் உள்ள பிள்ளையின் வீட்டிற்குக் கார் சென்றது. மற்றொரு காரில் குருப் அங்கு வந்து சேர்ந்தான்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடலைக் குளியல் அறைக்குத் தூக்கிச்சென்றனர்.அவனுடைய ஆடைகளைக் களைந்துவிட்டு முகத்திலும் தலையிலும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். பிறகு, அந்த உடலை மாவேலிக் கரைக்கு அம்பாசிடர் காரில் எடுத்துச்சென்றனர். குன்னம் பகுதிக்கு வந்த உடன் காரில் இருந்து இறங்கி அந்த இளைஞனின் உடலுடன் வயலை நோக்கி அக்காரைத் தள்ளினர். பின், வயலுக்குள் இறங்கி அப்பிணத்தை ஸ்டீரிங் வீலுக்கு முன்பு அமர்ந்த நிலையில் வைத்தனர். பின்னர் தம்முடன் வந்திருந்த லிட்டர் பெட்ரோலை அக்காரின் மீது தெளித்து நெருப்பு வைத்தனர். அப்போதுதான் பிள்ளைக்குத் தீக்காயம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவன் யார் என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் கொலையுண்டவன் குருப்பைப்போல உயரமானவன் என்பது மட்டும்தான்.
பிள்ளையின் வாக்கு மூலம் மூன்று உண்மைகளை வெளிப்படுத்தியது. முதலாவது, காரில் இருந்த பிணம் குருப்பினுடையதல்ல. இரண்டாவது, அப்பிணம் விபத்தில் இறந்தவனின் பிணமல்ல. கொலை செய்யப் பட்டவனின் பிணம். மூன்றாவதாக இக் கொலை குருப், பாஸ்கரபிள்ளை, பொன்னப்பன், சாகு என்ற நால்வரின் கூட்டுச் சதியால் நிகழ்ந்ததாகும்.
பலியாடைக் கண்டறிதல்:
அடுத்ததாக நால்வர் அணியால் கொலை செய்யப் பட்டவன் யார்? எனபதைக் கண்டறியும் பணி தொடங்கியது. அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் எதுவும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளனவா என்று ஆராயத் தொடங்கினர்.ஹரிபட் காவல் நிலையத்தில் தாமஸ் என்பவர் தன் தம்பி சாக்கோ என்பவர் காணாமல் போனதாகப் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. சாக்கோவின் மனைவியை விசாரித்தபோது, அவர் சென்ற நாள் 21சனவரி என்பதும், சென்ற திரை அரங்கத்தின் பெயர் ஹரி திரையரங்கம் என்பதும் தெரியவந்தது.இது பிள்ளையின் வாக்குமூலத்துடன் ஒத்திருந்தது.சாக்கோவின் உயரம் ஆறு அடி ஆகும். தாங்கள் கொலை செய்த இளைஞன் குருப்பைப் போல் உயரமானவன் என்று பிள்ளை குறிப்பிட்டது அரிதாசுக்கு நினைவுக்கு வந்தது. எனவே குருப்பின் பிணம் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பிணத்தைத் தோண்டி எடுத்து ஆராய அவர் முடிவுசெய்தார். அத்துடன் அபுதாபியில் இருந்து குருப்புடன் வந்தவரைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், அவனைக் குறித்த தெளிவான செய்திகள் எதையும் பிள்ளை தன் வாக்குமூலத்தில் குறிப்பிடவில்லை. குருப்பின் நண்பன் என்பதும் அவனது பெயர் சாகு என்பதும் மட்டுமே பிள்ளைக்குத் தெரிந்திருந்தது.
சாகு:
ஆறாம் நாளன்று குருப்பும் அவரது நண்பர் சாகுவும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கியதாகத் தன் வாக்குமூலத்தில் பிள்ளை குறிப்பிட்டிருந்தார். எனவே, தன் குழுவுடன் அரிதாஸ் விமானநிலையம் சென்று அங்கு வந்து இறங்கியோரின் பெயர்ப் பட்டியலை ஆராய்ந்தார். அத்துடன் குருப்பின் பெயருடன்கூடிய நுழைவு இசைச் சீட்டையும் (Disembarkation card) அவனது கையெழுத்துடன் கூடிய மற்றொரு சீட்டையும் கண்டறிந்தார். அது, சாகு என்பவனுக்கு உரியது. சாவக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த அவன் அதிகம் படிக்காதவன் எனபதால் குருப் அந்த அட்டையைப் பூர்த்தி செய்திருந்தான். அந்த அட்டையில் இருந்து அவனது முகவரியைக் கண்டறிந்தனர். மாவேலிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தேவாசியா, சாவக்காடு சென்று சாகுவின் வீட்டைக் கண்டறிந்தார். சாக்கோவின் கொலையில் தன்னுடைய பங்களிப்பு எதுவும் கிடையாது என்று முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொன்டான்.
மண்டை ஓடு ஆய்வு:
கொலையுண்டவன் சாக்கோதான் என்பதைக் கண்டறிய பிள்ளை, சாகு ஆகிய இருவரின் வாக்கு மூலங்கள் உதவின. ஆனால், நீதிமன்றத்தில் இவ் உண்மையை அறிவியல் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்டவனின் உயரம் எடை என்பன தொடக்கநிலை ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. சாக்கோவின் சிறிய அளவிலான ஒளிப்படம் ஒன்று காவல் துறையினரிடம் இருந்தது. அதன் துணையுடன் மேலடுக்க ஒளிப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இதற்கு சாக்கோவின் மண்டை ஓடு தேவை என்பதால், குருப்பின் வீட்டில் புதைக்கப் பட்டிருந்த சாக்கோவின் பிணத்தை செங்கனூர் வருவாய்த்துறை அதிகாரியின் முன்னிலையில் தோண்டி எடுத்தனர். மண்டை ஓடும் வலது பாதத்தின் எலும்புகளும் முழுமையாக எரிந்துவிடவில்லை என்பதால் அவற்றை உம்மதத்தன் சேகரித்துக் கொண்டார்.
மண்டை ஓட்டின் மேல்பகுதி காணப் படாமையால் ஒளிப்படம் எடுப்பது சிரமமாக இருந்தது. தாடைஎலும்பின் அடிப்பகுதி முழுமையாக எரிந்துபோனமையால் நிறைவான முறையில் மேலடுக்க ஒளிப்படத்தை எடுக்க முடியவில்லை.ஆனால் எஞ்சிய பகுதிகள் பொருந்தி வந்தன.
அடுத்து, பாதப் பகுதியை அதன் எலும்புகளின் துணையுடன் மறு சீரமைப்பு செய்யும் கடினமான பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் இம் முறையை “பக் ரஸ்டன் வழக்கு“ என்ற வழக்கில் பயன்படுத்தி இருந்தார்கள்.ஆனால், அங்கு அவ்வழக்கில் பிணத்தின் பாதம் சிதைவடையாமல் இருந்தது. ஆனால் இங்கு இவ்வழக்கில் பாதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சதையின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதை முடிவு செய்யவேண்டி இருந்தது.
ஒரு சாதனை:
இதை மேற்கொள்ள உடற்கூறு இயல்துறை சார்ந்த உன்னிதன் என்ற மருத்துவரின் துணையைப் பெற்றுக்கொண்டார். இருவரும் இணைந்து முதலில் பதிமூன்று பிணங்களின் பாதங்களை ஆராய்ந்தனர்.இதன் அடிப்படையில் அவற்றின் திசுக்களின் தடிமன் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தனர். திசுக்களின் தடிமனுக்கு ஏற்ப சாக்கோ பிணத்தின் பாத எலும்புகளில் ஞெகிழியால் (பிளாஸ்ட்டிக்கால்)ஆன சேறு பூசப்பட்டது. அவரது இரண்டு இணைக் காலணிகளுக்குள் இவர்கள் உருவாக்கிய பாதம் நுழைக்கப்பட்டபோது அது சரியாகப் பொருந்தி வந்தது.
இதுவரை மண்டை ஓட்டைப் பயன்படுத்தி இறந்தவனின் முகம் சீரமைக்கப்பட்டு, வந்தது.இப்போது, இறந்தவனின் பாதம் சீரமைக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் முதல் நிகழ்வாகும். இது குறித்து அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை இந்தியக் காவல் துறையின் 24ஆவது அறிவியல் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொன்னப்பன் கைதாதல்:
பிள்ளை, சாக்கோ இருவரையம் கைது செய்திருந்த காவல் துறை, 12 பிப்ரவரியில் பொன்னப்பனைக் கைது செய்தது. 13ஆவது நாளன்று அவனிடம் மருத்துவ ஆய்வை உம்மதத்தன் மேற்கொண்டார். அவனுடைய தலையிலும் நெற்றிப் பகுதியிலும் முன் கையிலும் தீக்காயங்கள் இருந்தன. தலை, புருவ முடிகள் பொசுங்கி இருந்தன. சாகுவும் பிள்ளையும் கைதாகி வாக்குமூலம் கொடுத்ததை அறிந்தவுடன் அவனும் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
குருப் எங்கே?
இந்த வழக்கில் காவல் துறையின் அடுத்த தேடலாக இத்திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட குருப்பைக் கண்டுபிடிப்பது அமைந்தது. இந்நிகழ்வை அடுத்து அவன் பூட்டான் சென்று அவனது உறவினரான மருந்தாளுநர் வீட்டில் தங்கி இருந்ததாகச் சொல்லப்பட்டது. இடையில் செரியநாடு வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்ததை அறிந்து காவல் துறையினர் சென்றபோது அவன் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று விட்டான். இறுதியில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். அவனது சொத்துக்கள் அரசால் கைப்பற்றப்பட்டன.
வழக்கும் தீர்ப்பும்:
அமர்வு நீதிமன்றம் ஒன்றில் சாக்கோ கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றமேற்பு சாட்சியாக (அப்ரூவர்) சாகு மாறிவிட்டான், 76ஆவது சாட்சியாக உம்மதத்தன் விசாரிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் பிள்ளையின் மீது உடல் சோதனை நடத்துவதற்கு எழுத்து வடிவிலான இசைவை அவர் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. நீதி மன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. இறுதியாக பிள்ளை, பொன்னப்பன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். கொலை செய்யப்பட்டவன் சாக்கோதான் என்பது ஐயத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்படவில்லை என்ற வாதம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீட்டில் வைக்கப்பட்டது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டவனின் அடையாளம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்று நீதிமன்றம் கருதியது. ஒருவனைக் கொல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படுவதே கொலை என்று இந்தியக் குற்றவியல் சட்டம் கூறுகிறது. எனவே கொலை செய்யப்பட்டவனின் அடையாளத்தை உறுதிப் படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. குற்றம் சாட்டப்பட்டவன் கொலையைச் செய்துள்ளான் என்பது உறுதியானால் போதுமானது என்பதால் மேல் முறையீடு உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
முடிவுரையாக:
இறுதியாக, நால்வர் அணியின் தலைவன் போன்று விளங்கிய குருப் குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் அவரது மனித நேய உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன. நல்ல ஊதியம் பெறும் பணியில் இருந்த குருப் தன் பேராசையால் தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்துக் கொண்டான் என்று வருந்துகிறார். ஆலப்புழையில் அவன் கட்டிக் கொண்டிருந்த புதிய வீடு பாதியளவிலேயே நின்று போனதையும் அது பேராசையின் நினைவுச் சின்னமாக விளங்குவதையும் கூறி இக் கட்டுரையை முடிக்கிறார்.
நன்றியுரை: காவல் துறை தொடர்பான கலைச் சொல்லாக்கத்திற்குத் துணை நின்ற திரு.தில்லைநாயகத்திற்கும் (மேனாள் துணைக் கண்காணிப்பாளர், தமிழ்நாடு காவல் துறை) சட்டக் கலைச் சொற்கள் ஆக்கத்தில் துணை நின்ற வழக்கறிஞர் திரு.இலிங்கத்திற்கும் நன்றி.
- ஆ.சிவசுப்பிரமணியன்