படித்துப் பாருங்களேன்...

ராதிகா சேஷன் (2015) பதினேழாவது நூற்றாண்டிலும் பதினெட்டாவது நூற்றாண்டின் தொடக்கம் வரையிலுமான காலத்திலும் சோழமண்டலக் கடற்கரையின் வாணிபமும் அரசியலும்

Radhika Seshan (2015) Trade and Politics on the Coromandel Coast in the Seventeenth and Early Eighteenth Centuries. Primus Books, Delhi 110 009

இந்திய வரலாற்று ஆய்வில் மன்னர் ஆட்சிக் கால நிருவாக அமைப்புகள், வருவாய் அமைப்புகள், அரசமைப்பு என்பன குறித்த ஆய்வுகள் நிகழ்ந்த அளவுக்கு, கடல்சார் வரலாற்று ஆய்வு நிகழவில்லை. நிகழ்ந்த ஒன்றிரண்டு ஆய்வுகளும்கூட கடல்சார் வாணிபம், இவ்வாணிபத்திற்கான கடல் பாதைகள் என்பனவற்றிற்கே முக்கியத்துவம் தந்துள்ளன. கடல்சார் வாணிபத்துடன் தொடர்புடைய கப்பல் தொழில் நுட்பம், கடற்பயண முறை, கப்பல் கட்டும் தொழில் நுட்பம் என்பன தொடர்பான ஆய்வுகள் அதிக அளவில் நிகழவில்லை. இவற்றுக்கான தரவுகள் போதிய அளவில் கிடைக்காமையும் இதற்குக் காரணம் எனலாம்.

radhika seshan book 255மற்றொரு பக்கம் கடல்சார் வரலாற்றுடன் தொடர்புடைய கடல் வாணிபம், வங்கித் தொழில், நாணய முறை என்பன குறித்த சான்றுகள் கிட்டிய போதிலும், இவற்றை மையமாகக் கொண்ட ஆய்வுகள் நிகழவில்லை.

புவியியல், பண்பாடு, மொழி என்பனவற்றுள் பல வேறுபாடுகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் வட்டார வரலாறு என்ற வரலாற்று வகைமையானது பொருத்தமானது என்பதுடன் அவசியமான ஒன்றும் ஆகும். இவ்வகையில் தென்னிந்தியாவானது தனக்கெனத் தனித்த வரலாற்றுத் தொன்மையையும் சான்றுகளையும் கொண்டுள்ளது.

குறிப்பாக, மத்திய காலத் தென்னிந்தியாவானது சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு ஆகிய இரு பேரரசுகளின் ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இப்பேரரசுகளின் ஆட்சியில் கடல்சார் வாணிபம் குறிப்பிடத் தகுந்த அளவு நிகழ்ந்துள்ளது.

சங்க காலம் தொடங்கி, விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம் வரையிலான காலத்தில் சோழ மண்டலக் கடற்கரையில் கடல்சார் வாணிபம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்ததுடன், மாறுதல்களும் ஏற்பட்டு வந்தது. இச்சோழ மண்டலக் கடற்கரையே இந்நூலின் ஆய்வுக் களமாக அமைந்துள்ளது.

இப்பகுதியின் பொருளாதாரம் குறித்த ஆய்வாகவன்றி, 17ஆம் நூற்றாண்டில், இப்பகுதியில் ஐரோப்பியர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூல் ஆராய்கிறது. இச்செய்திகள் அடங்கிய முன்னுரையுடன் இந்நூல் தொடங்குகிறது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியரான ராதிகா சேஷன் மராத்திய மாநிலத்தின் புனே நகரில் உள்ள சாவித்திரி பாய் புலே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக உள்ளார். ஐதராபாத் பல்கலைக் கழகத்திற்கும் பணிவிடுப்பில் சென்று வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வகுப்பு வாதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குடைய கட்டுரைகளையும் கடல்சார் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ளாது வன்முறையால், அதை ஒடுக்கும் போக்கை இந்துத்துவ அமைப்பினர் மேற்கொள்வது அனைவரும் அறிந்த ஒன்றுதான். பத்ரியில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் ரஷீத் மீதான தாக்குதல் போன்றவற்றைக் கண்டித்து, ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், கே.என்.பணிக்கர் உள்ளிட்ட 53 வரலாற்றறிஞர்கள், கூட்டறிக்கை ஒன்றை 2015 அக்டோபரில் வெளியிட்டனர். இவ் அறிக்கையில் கையெழுத்திட்டோர்களில் இவரும் ஒருவர். இங்கு அறிமுகமாகும் இந்நூல் இவரின் முனைவர் பட்ட ஆய்வேடு ஆகும்.

தமிழர்களின் கடல்சார் வாணிபம்

17ஆம் நூற்றாண்டுக் காலத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் இதற்கான பின்புலமாக, இதற்கு முந்தைய காலத்தைய கடல் வாணிபத்தை இந்நூலின் முதல் இயல் ஆராய்கின்றது. தென்கிழக்கு ஆசியா, செங்கடல் பகுதிகளில் தமிழர்கள் நிகழ்த்திய கடல் வாணிபத்தையும் எட்டாம் நூற்றாண்டுக்கும், 16ஆவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயங்கிய ஐந்நூற்றுவர், வலஞ்சியர், நானாதேசி, மணிக்கிராமம், அஞ்சுவண்ணம் என்ற வாணிகக் குழுக்கள் குறித்தும் இவ்வியல் ஆராய்கின்றது. ஐந்நூற்றுவர் என்ற பெயரைத் தாங்கிய வாணிபக் குழு தொடக்கத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வணிகர்களைக் கொண்டிருந்தது. பின்னர்

500 என்ற எண்ணிக்கை அளவைத் தாண்டி பல்வேறு சாதிக் குழுக்களையும் சமயக் குழுக்களையும் வட்டாரக் குழுக்களையும் தம்முள் இணைத்துக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆயினும் 500 என்ற அடையாளம் தொடர்ந் துள்ளது என்ற மீரா ஆபிரஹாமின் கருத்தை நூலாசிரியர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேற்கூறிய வாணிபக் குழுக்கள் குறித்தும், கைகோளர் என்ற பெயரிலான நெசவாளர்களின் வாணிபச் செயல்பாடுகள் மற்றும் மகாநாடு என்ற பெயரிலான அமைப்பு குறித்தும், நகரம் என்ற அமைப்பு குறித்தும் சில செய்திகள் இவ்வியலில் இடம் பெற்றுள்ளன.

வாணிபத்தில் ஈடுபட்டு நெசவாளர்களாகவும் வணிகர்களாகவும் ஒருசேர விளங்கியவர்கள் செட்டி என்ற பட்டத்தைப் பெற்றிருந்தனர். “சாலிய நகரத்தார்” என்ற பெயரில் கல்வெட்டுக்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன. “சீலைச் செட்டி” என்ற பெயரும் (சீலை - துணி) வழக்கில் இருந்துள்ளது. நெசவுத் தறிகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குடியேறி தம் தொழிலை மேற்கொள்ள ஊக்கம் அளிக்கும் வகையில் வரிச்சலுகை வழங்கப் பட்டு உள்ளது.

பத்துத் தறிகளைக் கொண்டிருந்த நெசவாளர்களிட மிருந்து ஒன்பது தறிகளுக்கு மட்டுமே வரி வாங்கி, ஒரு தறிக்கு வரி நீக்கம் செய்துள்ளனர். வணிகர்களாகவும் நெசவாளர்கள் விளங்கியமை குறித்து 16ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வாணிபத்தின் வளர்ச்சியை மட்டுமின்றி, வாணிபத்தில் நெசவாளர்களின் பங்களிப்பையும் இக்கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அரிசி, மிளகு, நறுமணப் பொருட்கள் எனச் சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் நின்றுவிடாமல் துணி என்ற உற்பத்திப் பொருளை மையமாகக் கொண்டு தமிழர்களின் ஏற்றுமதி வாணிபம் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத் தகுந்தது.

போர்ச்சுக்கீசியர்

இத்தகைய வாணிபப் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் கடற்கரைகளில் முதன் முதலாக நுழைந்த காலனியவாதிகள் போர்ச்சுக்கீசியர் ஆவர். இவர்கள் தொடக்கத்தில் மிளகு வாணிபத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் இவர்கள் துணி வணிகத்திலும் ஈடுபடலாயினர். அத்துடன் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்திற்கு சோழ மண்டலக் கடற்கரையில் சில நகரங்களில் தம் அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியதுடன் தாம் சார்ந்திருந்த கத்தோலிக்கக் கிறித்தவத்தையும் அறிமுகப்படுத்தினர். வணிகர்களாக முதலில் அறிமுகமான இவர்கள் இப்பகுதியின் கப்பற் போக்குவரத்தைத் தம் ஏகபோக உரிமையாக ஆக்கிக் கொண்டனர். இதற்கு அவர்கள் கையாண்ட முக்கிய வழிமுறை கர்தாஸ் (நீணீக்ஷீtணீக்ஷ்மீs) என்ற அனுமதிச் சீட்டு வழங்குதல் ஆகும். இம்முறையின்படி போர்ச்சுக்கீசியர் களிடம் கட்டணம் கட்டி கர்தாஸ் பெற்ற கப்பல்கள் தான் ஆசியாவின் கடற்பகுதிகளில் பயணிக்க அனுமதிக்கப் படும். ஆசியப் பகுதியின் கடல்வழிப் பாதையும் போர்ச்சுக்கீசியரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி இருத்தலின் குறியீடாக கர்தாஸ் அமைந்தது. கடலில் செல்லும் எந்தக் கப்பலையும் நிறுத்தி, கர்தாஸைக் காட்டும்படிக் கேட்கும் உரிமையை அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள். கர்தாஸ் இல்லாத கப்பல்கள் சட்டவிரோதமான வாணிபப் பரிவர்த்தனையில் ஈடுபட்டவை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகின. இதற்காகக் கப்பலும் அது சுமந்து வந்த சரக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

போர்ச்சுக்கீசியர் நடைமுறைப்படுத்திய அனுமதிச் சீட்டு முறையைப் பின்னர் ஏனைய ஐரோப்பியர்களும் பின்பற்றிய நிலையில், இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது என்ற நிலைக்கு இந்திய வணிகர்கள் ஆளானார்கள். அனுமதிச் சீட்டின் வாயிலாக ஆசியக் கடலில் ஆதிக்கம் செலுத்தினாலும் மேற்குக் கடற்கரையின் கோவா, கிழக்குக் கடற்கரையின் சாந்தோம், நாகப்பட்டினம், தூத்துக்குடி என குறிப்பிட்ட சில நகரங்களைத் தவிர, பரவலாகக் கடற்கரை மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் அரசியல் ஆதிக்கத்தை அவர்கள் நிலைநிறுத்தவில்லை. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர்கள் வருகையால் கோவா நீங்கலாக ஏனைய பகுதிகளை இவர்களின் செல்வாக்கு முற்றிலும் மறைத்தது.

இதனால் தனிப்பட்ட முறையில் வணிகர்களாகவும், ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னர் அவர்களின் படைவீரர்களாகவும் வாழவேண்டிய நிலைக்கு போர்ச்சுக்கீசியர்களில் ஒரு பகுதியினர் ஆளாயினர்.

டச்சுக்காரர்கள்

போர்ச்சுக்கீசியர்களை அடுத்து சோழ மண்டலக் கடற்கரையில் காலூன்றிய ஐரோப்பியராக டச்சுக் காரர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில் போர்ச்சுக்கீசியர்கள் சற்று வலுவாக நிலைபெற்றிருந்த நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய ஊர்களைத் தம் படைபலத்தால் 1658இல் கைப்பற்றி, அவர்களை வெளியேற்றி, அவர்களது கடல் ஆதிக்கத்தை அழித்தனர்.

பின்னர் மதுரை நாயக்க மன்னரின் உறவை நாடினர். தமக்கெனச் சில சலுகைகளையும் அவரிடம் வேண்டினர். அதன்படி முத்துக்குளித்தல் உரிமை, முற்றிலும் டச்சு வணிக நிறுவனத்திற்கே வழங்கப்பட வேண்டும், இதற்காகத் தாம் பெறும் ஆதாயத்தில் இரண்டு விழுக்காட்டைச் சுங்கக் கட்டணமாக நாயக்க மன்னருக்கு வழங்குவர், நாயக்க மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வேறு எந்த ஐரோப்பியர்களும் வாணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது, டச்சுக் கப்பல்களில் மட்டுமே மிளகை ஏற்றிவர வேண்டும், அரிசிக் கொள்முதலில் டச்சுக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் கோட்டை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கவேண்டும் போன்ற சலுகை களை வழங்க நாயக்க மன்னர் மறுத்தார்.

நாயக்கர் ஆட்சி பலம் குன்றத் தொடங்கிய போது 17ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாணிப ஏகபோக உரிமை, டச்சுக்காரர்களுக்கு மதுரை நாயக்கரால் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் சேதுபதியின் எதிர்ப்பை அடக்க, டச்சுக்காரர்களின் உதவி அவருக்குத் தேவைப்பட்டதும், இந்த அனுமதிக்கான காரணங்களில் ஒன்றாகும்.

1676இல் தஞ்சை மன்னனான ஏகோஜியுடன் டச்சுக்காரர்கள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டனர். இக்காலத்தில் பழவேற்காட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த டச்சுக்காரர்கள் நாகப்பட்டினத்தை மையமாகக் கொள்ளத் தொடங்கினர். இங்கு இருந்தவாறு, தூத்துக்குடியையும் ஸ்ரீலங்காவையும் கட்டுப்படுத்துவது எளிது என அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம் ஆகும்.

ஏகோஜியுடன் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஏற்றுமதி-இறக்குமதி வரியில் 50 விழுக்காடு மட்டுமே ஏகோஜியிடம் வழங்கினால் போதும். டச்சு நாட்டு நாணயங்களை அச்சிட நாகப்பட்டினத்தில் நாணயச் சாலை ஒன்றை நிறுவவும் அனுமதி பெற்றனர். 1674இல் தஞ்சை மன்னரால் டச்சுக்காரர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட காரைக்காலும் திருமலைராயன் பட்டினமும் ஏகோஜியிடம் திரும்ப ஒப்படைக்கப் பட்டது. 17ஆம் நூற்றாண்டுக் காலத்தில், ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரரைவிட டச்சு நாட்டினரின் வாணிபச் செயல்பாடு பெரிய அளவில் நிகழ்ந்தது. போர்ச்சுக்கீசியர் அறிமுகப்படுத்திய கர்தாஸ் முறையை அவர்களைவிடத் திறமையாகக் கையாண்டனர். சரக்குகளுடன் வந்த வாணிபக் கப்பல்களை மறு ஏற்றுமதிக்காகத் தம் நாட்டு துறைமுகங்களுக்கு அனுப்பலாயினர். இவர்களைப் பின்பற்றி பிற ஐரோப்பிய நிறுவனங்களும் கர்தாஸ் வழங்கலாயின. இதைப் பெற்றுக்கொண்ட கப்பலின் பாதுகாப்பைவிட, இது யாரால் வழங்கப்பட்டது என்பது முக்கியத்துவம் பெறலாயிற்று. இதனால் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் வழிமுறையாக ஆசியக் கப்பல் உரிமையாளர்கள், அனைத்து ஐரோப்பிய நிறுவனங்களிடமிருந்தும் கர்தாஸை பெற்றுக் கொள்ளலாயினர்.

ஆங்கிலேயர்

போர்ச்சுக்கீசியரையும் டச்சுக்காரரையும் அடுத்து வந்த ஆங்கிலேயர் இவ்விரு நாட்டினரையும்விட பரந்த நிலப்பரப்பில் தம் வாணிபத்தை நிகழ்த்தியதுடன் பின்னர் தம் காலனிய ஆட்சியையும் நிலைநிறுத்திக் கொண்டனர். 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதியில் வலுவாக நிலைகொள்ளத் தொடங்கிய இவர்கள் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலைத்திருந்தமை பரவலாக அறியப்பட்ட செய்திதான்.

உள்நாட்டில் இவர்கள் நடத்திய போர்கள், ஆட்சியை விரிவுபடுத்தியமை, அறிமுகம் செய்த புதிய ஆட்சி முறைகள், அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் குறித்து விரிவான செய்திகளை அறிந்துகொண்ட அளவுக்கு இவர்களது வாணிபச் செயல்பாடுகளை நாம் அறிந்துகொள்ளவில்லை.

இவர்களது ஆட்சி அதிகாரத்தின் தொடக்கப் புள்ளியாக அமைவது இவர்கள் மேற்கொண்ட வாணிகச் செயல்பாடுகள்தான். 18ஆவது நூற்றாண்டில் (1787இல்), பிலிப் ஃபிரான்சிஸ் என்ற ஆங்கிலேயர் இந்தியப் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றும்போது,

பண்டகச் சாலைகளிலிருந்து கோட்டைகள்

கோட்டைகளிலிருந்து அரண்கள்

அரண்களிலிருந்து அரண் காவல்படை

அரண் காவல்படையிலிருந்து இராணுவம்

என்று குறிப்பிட்டுவிட்டு, இந்தியாவில் சண்டை யிடுவது என்பது தவிர்க்க முடியாதது என்பதையும் கூறியுள்ளார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையில் தொடங்கி, ஆங்கிலக் காலனியாக இந்தியா மாறியது வரையிலான வரலாற்று நிகழ்வுகளை மேற்கூறிய கூற்றின் துணையுடன் அவதானிக்கலாம். பிலிப் ஃபிரான்சிஸின் இக்கூற்றிற்குச் சான்றாக, சென்னையில் அவர்கள் உருவாக்கிய புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாறு அமைகிறது.

துபாஷிகளையும் வாணிபத் தரகர்களையும் நியமித்து அவர்களின் துணையுடன் பொருளாதாரச் சுரண்டலை மேற்கொண்டனர். உள்நாட்டு ஆட்சி யாளர்களின் முரண்பாடுகளில் தலையிட்டு அவர் களுக்குப் படை உதவி செய்து தம் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர்.

சோழ மண்டலக் கரையின் வாணிபத்தில் தொடங்கி, அரசு அதிகாரம் வரை ஐரோப்பியக் காலனியம் வளர்ச்சி பெற்றதை இந்நூல் விளக்குகிறது. அத்துடன் இவர்கள் உருவாக்கிய நாணயச் சாலை, இவர்களுடன் தொடர்புகொண்டிருந்த இந்திய வணிகர்கள், நெசவாளர்கள் குறித்தும் சில செய்திகளைக் குறிப்பிடுகிறது.

நாணயச் சாலை

தமிழ்நாட்டின் ஆட்சி எல்லைக்குள் அனுமதி பெற்று, பிற நாட்டு நாணயங்களை அச்சிடும் முறை மன்னராட்சிக் காலத்திலேயே அறிமுகம் ஆகிவிட்டது. ரோமானியர் தம் நாட்டு நாணயங்களை இங்கு அச்சிட்டதாகச் செய்தி உண்டு. இம்முறை ஐரோப்பியர் களாலும் பின்பற்றப்பட்டுள்ளது.

டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மன்னர்களின் அனுமதி பெற்று, தம் நாட்டு நாணயங்களை இங்கு அச்சிட்டுள்ளனர். சென்னை நகரில் ஆங்கிலேயர்கள் நாணயச் சாலை ஒன்றை நிறுவியுள்ளனர். இதைக் கோமுட்டிச் செட்டி ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டில் அச்சிட்ட “பகோடா” என்ற நாணயம், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அச்சடித்த நாணயத்தைவிட சிறப்பாக அமைந்திருந்ததுடன், பரவலாக ஏற்றுக்கொள்ளவும் பட்டது.

தமிழ் வணிகர்கள்

ஐரோப்பியக் காலனியவாதிகளின் வருகைக்கு முன்னர், இந்தியாவில் செயல்பட்டு வந்த வணிகக் குழுக்கள் நானாதேசி, பரதேசி, சுவதேசி என மூன்று வகையினர் ஆவர். இந்தியாவிற்குள்ளும் இந்தியாவிற்கு வெளியிலும் செயல்பட்டு வந்த குழுக்கள் நானாதேசி எனப்பட்டன. இந்தியரல்லாது இந்தியாவில் செயல் பட்ட பிற நாட்டு வணிகர்களைக் கொண்ட குழுக்கள் பரதேசி எனப்பட்டன. ஏற்றுமதி வாணிபத்தில் மட்டுமே ஈடுபட்ட குழுக்களும் இப்பெயரால் அழைக்கப்பட்டன. உள்நாட்டு வாணிபத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்த குழுக்கள் சுவதேசி எனப் பெயர் பெற்றன.

17ஆவது நூற்றாண்டில் வேறுவகையான வணிகக் குழுக்கள் தோன்றின. முதலாவது பிரிவு வணிகர்கள் கப்பல் உரிமையாளர்களாகவும் இருந்தனர். ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்குக் கப்பல்களில் சரக்குகளைக் கொண்டு சென்றனர். கப்பல்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு இவர்களின் வளம் மதிப்பிடப்பட்டது.

உள்நாட்டுப் பகுதிகளுடன் தொடர்பு கொண்டு, அங்கிருந்து பொருட்களைச் சேகரித்து ஏற்றுமதி செய் பவர்கள் ஒரு பிரிவினராகவும், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை உள்நாட்டுப் பகுதிக்குள் விநியோகம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட வணிகர்கள் மற்றொரு வணிகப் பிரிவினராகவும் அமைந்தனர்.

இவர்களை அடுத்து வேற்று மொழி அறிந்து, “துபாஷ்” என்ற பதவியில் இருந்து கொண்டு வாணிபம் செய்த துபாஷிகள் காலனிய வருகையினால் ஏற்பட்ட புதிய பிரிவினர் ஆகு ஆவர். சரக்குகளைக் கொள்முதல் செய்வதிலும் விற்பனை செய்வதிலும் ஏஜென்ட்கள் என்ற பெயரில் இடைத்தரகர்களும் உருவாயினர்.

தென்னிந்தியாவில் செட்டிகள் என்போர் வணிகர்களாக விளங்கினர். இவர்களில் ‘பேரிச் செட்டி’, ‘கோமுட்டிச் செட்டி’ என்ற இரு பிரிவுகள் இருந்தனர். பேரிச் செட்டிகள் தெலுங்கு பேசுவோர். கோமுட்டிச் செட்டிகள் தமிழ் பேசுவோர்.

கோமுட்டிச் செட்டிகளைச் சென்னை மாநிலத்தின் மிகப் பெரிய வணிகச் சாதி என்று தர்ஸ்டன் என்ற ஆங்கிலேயர் குறிப்பிடுகிறார். இவர்களுள் பெரும் பாலோர் துணி வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டி யார்கள் “ஐந்நூற்றுவர்” என்ற பழைய தமிழ் வாணிகக் குழுவின் மரபினர் என்ற கருத்து உண்டு. மொத்த வாணிபம், வட்டித் தொழில், தரகு என்பனவற்றில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். ஐரோப்பிய ஆவணங்களில் இவர்கள் குறித்தப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

தொடக்கத்தில் வேளாண்மைத் தொழிலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் கைவினைஞர்களும் வணிகர்களும் தோன்றி வளர்ந்த பின்னர், இவர்களை உட்படுத்தி வலங்கை, இடங்கை என்ற பெயரில் இரு பிரிவுகள் தோன்றின. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் பல்வேறு சாதியினர் இடம் பெற்றனர். ஆனால் வணிகர்களும் நெசவாளர்களும் வலங்கை, இடங்கை என்ற இரு பிரிவிலும் இடம் பெற்றிருந்தனர்.

நெசவாளர்கள்

ஐரோப்பாவில் இந்தியத் துணிகளின் தேவை அதிகரித்தமையால், இந்தியாவில் செயல்பட்ட ஐரோப்பிய வாணிபக் கழகங்கள் துணிகளைக் கொள்முதல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டின. தம் தேவையை நிறைவுசெய்ய இரு வழிமுறைகளை மேற்கொண்டனர். முதலாவது வழிமுறையாகத் தாம் உருவாக்கிய பண்டகச் சாலை அல்லது கோட்டைக்குள் நெசவாளர்களைக் குடியமர்த்தினர். அங்கிருந்தபடியே நெசவு செய்யச் செய்தனர். தம் வீடுகளுக்குள்ளும் மரத்தடிகளிலும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்த நெசவாளர்கள் ஐரோப்பிய பட்டறைத் தொழில் முறை போன்ற ஒரு முறைக்குள் கொண்டுவரப்பட்டனர். இரண்டாவது வழிமுறையாகத் தரகர்களை நியமித்து அவர்கள் வாயிலாக நெசவாளர்களிடம் துணிகளைக் கொள்முதல் செய்தனர்.

நெசவுக்குத் தேவையான பொருட்களை வாங்கு வதற்காக நெசவாளர்களுக்கு முன்பணம் வழங்கப் பட்டது. இப்பணமானது நெசவாளர்களிடம் கம்பெனியால் நேரடியாக வழங்கப்படவில்லை. துணிகளைக் கொள்முதல் செய்து தரும் வணிகர்கள் மூலமாகவே வழங்கப்பட்டது. தேவையான அளவில் துணியைத் தருவதாக, நெசவாளர்களிடம் உறுதி மொழியைப் பெற்ற பின்னரே, இப்பணத்தை வழங்கினர். சில நேரங்களில் முன்பணம் வாங்கிய நெசவாளர்கள் இடம்பெயர்ந்து சென்றதும் நிகழ்ந்துள்ளது. இந் நிகழ்வுகளில் கம்பெனியிடமிருந்து முன்பணம் வாங்கிய வணிகர்களே, இதற்குப் பொறுப்பாளி ஆக்கப்பட்டனர்.

துணிகளுக்குச் சாயமேற்றும் சாலியர் என்போருக்கும் இவ்வாறே முன்பணம் வழங்கப்பட்டது. நெய்த துணிகள், சாயம் தோய்த்த துணிகள் கம்பெனியின் பண்டகச் சாலையில் சேர்ப்பிக்கப்பட்டன. அங்கு அதன் தரத்தைச் சோதித்து முன்பணம் போக எஞ்சிய தொகை வழங்கப்பட்டது. தரம் சரியில்லை என்றால் தொகை குறைவாக வழங்கப்பட்டது. தரமான துணிகளும்கூட தரமற்ற துணிகளாக மதிப்பிடப்பட்டன என்று நெசவாளர்கள் அடிக்கடி குறை கூறினார்கள்.

பிற செய்திகள்

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும் அதன் தொடர்ச்சியாக ‘வெள்ளையர் நகரம்’, ‘கருப்பர் நகரம்’ என்ற பகுதிகளும் உருவானமை, கோல்கொண்டா சுல்தான், சிவாஜி ஆகியோருடனான காலனிய வாதிகளின் உறவும் முரண்பாடும், மல்லையா செட்டி, அவரது சகோதரர் சின்னையா ஆகியோரின் வாணிபச் செயல்பாடுகள் என்பன குறித்த செய்திகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், டேனிசியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்ற நான்கு காலனியாளர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரே நூலில் கூற முற்பட்டமையால், பரந்துபட்ட நிலை யிலேயே இந்நூல் அமைந்துள்ளது. துணி வாணிபம், அடிமை வாணிபம், கிறிஸ்தவப் பரப்பல், துணி வாணிபத்துடன் தொடர்புடைய சாயம் தோய்த்தல், துணிகளை வெளுத்தல் என்பன தொடர்பான நிகழ்வு களைத் தனித்தனியாகவும் விரிவாகவும் கூற இடமுண்டு. என்றாலும் காலனியவாதிகள் மேற்கொண்ட கடல்சார் வாணிபத்தை மேலும் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்நூல் தூண்டுகிறது.

Pin It