பேராசிரியர் ஹாப்கின்ஸ் சொல்கிறார், 'புத்தரைப்போல நாத்திகராக வாழ்ந்தவரும் இல்லை; கடவுள் போல மதிக்கப்பட்டவரும் இல்லை’

புத்தரைப் பற்றியும் அவர்தன் கோட்பாடாகிய பவுத்தத்தைப் பற்றியும் பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் பவுத்தத்தை ஒரே நேர் கோட்டில் பார்க்கவில்லை.

புத்தரை மனிதன் என்றும், பகவான் என்றும், அவர் ஒரு நாத்திகர் என்றும், ஆத்திகர் என்றும்; பவுத்தத்தை நெறி என்றும், மதம் என்றும், அது ஒரு விரக்தித் தத்துவம் என்றும், தன் சமகால அரசர்கள், வணிகர்களைப் புத்தர் தன் கோட்பாடுகளுக்காக சமரசம் செய்து கொண்டவர் என்றும் பவுத்த ஆய்வாளர்கள் பவுத்தத்தையும் புத்தரையும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறார்கள்.

இன்று புத்தர் பிறந்து 2574 ஆண்டுகள் ஆகின்றன. அவர் மறைந்து 2494 ஆண்டுகள் ஆகின்றன. இந்நீண்ட இடைவெளியைக் கடந்தும் பவுத்தம் வாழ்கிறது. ஆனால் அதற்குள் புத்தரையும், அவர் சொன்ன கோட்பாடுகளையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை.

கி.பி.629 முதல் 645 வரை 16 ஆண்டுகள் இந்தியாவில் சுற்றித்திரிந்து பல அரிய பவுத்த செய்திகளைச் சேகரித்தச் சீனப் பயணி யுவான் சுவாங், தன் சி-யூ-கி என்ற நூலில் “புத்தர் ஏற்படுத்திய தத்துவங்களை அவருக்குப் பின் வாழ்ந்தவர்கள் அவரவர் மனதுக்கு ஏற்பத் திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொண்டதனாலும், புத்தர் மறைந்து பலநூறு ஆண்டுகள் ஆனதினாலும். இப்பொழுது நிலவும் பவுத்தம் சரியானதா அலலது கலப்புக் கொள்கையா என்பதை அவரவர் கடைப்பிடிக்கும் கொள்கையைப் பொறுத்தே அமைகிறது “என்று கூறுகிறார்.

இதிலிருந்து மூல பவுத்தம் புத்தருக்குப் பின் கருத்து அடிப்படையில் மாற்றப்பட்டோ அல்லது திருத்தப்பட்டோ இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டு இருக்க முடியும்?

மகதப் பேரரசன் பிம்பிசாரன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த புத்தர், அக்காலத்தில், அந்நாட்டில் பேசப்பட்ட பாலி மொழியில் தான் தன் கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். வேறு மொழியில் அல்ல.

அவர் மறைந்து 200 ஆண்டுகள் அல்லது அதற்குப் பின், சமற்கிருத மொழியில் பவுத்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. பாலி மொழியில் பேசப்பட்ட மூல பவுத்தமும்; பின்னாளில் சமற்கிருத மொழியில் பேசப்பட்ட பவுத்தமும் ஒன்றல்ல, வேறு வேறு.

முன்னது தேரவாதம், திராவிடப் பவுத்தம். பின்னது மகாயானம், ஆரிய வாதம்.

கி.மு.29 முதல் 17 வரை 29 ஆண்டுகள் இலங்கைத் தீவை ஆடசி செய்த வட்ட காமினி அபயன் காலத்தில், அதுவரை எழுத்துருவம் பெறாத பவுத்த கோட்பாடுகள் எழுத்து வடிவில் ஆக்கப்பெற்றது. அதைத் திரிபிடகம் என்பார்கள். இது பாலி மொழியில் எழுதப்பெற்றது என்பர். சமற்கிருத மொழியிலும் பவுத்தம் எழுத்துருவாக்கம் பெற்றது.

தேரவாத பாலிமொழி பவுத்த நூல்களையும், மகாயான சமற்கிருத நூல்களையும் இந்திய அளவில் யாரும் நேரிடையாக முழுமையாக மொழிபெயர்த் துத் தந்ததாகத் தெரியவில்லை.

அதேசமயம் பாலி மொழி நூல்களையும், செய்திகளையும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தந்தார்கள் பேராசிரியர் டி.டபிள்யூ. ரைஸ் டேவிட்சும், அவருடைய துணைவி திருமதி ரைஸ் டேவிட்சும். அவர்கள் வெளியிட்ட பவுத்த இந்தியா - பவுத்தம் - தேரகாதை - தேரிகாதை ஆகிய நூல்கள் இதற்குச் சான்று. இவை முழுமையாக பவுத்தத்தை நிறைவு செய்யவில்லை.

பேராசிரியர் வின்சென்ட் பாஸ்போல் நேபாளத்தில் இருந்த மகாயான நூல்களை வெளியிட்டதோடு, லத்தீன் மொழியில் திரிபிடகத்தின் ஒரு நூலான தம்மபதத்தையும் வெளியிட்டார். அவரைப் போலவே சமற்கிருத மகாயான சில நூல்களை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் பேராசிரியர் சில்வெய்ன் லெவி.

கோஸ்மா-டி-கோரோஸ் என்பவர் திபெத்தில் கிடைத்த பவுத்த நூல்களை வெளியிட்டார்.

புத்த ஜாதக் கதைகளை 6 தொகுதிகளாக வெளியிட்ட ஃபர்னோப் என்பவர் சுத்த நிபாதம் என்ற திரிபிடகத்தின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

சத்தம்மம்-ஜாதக மாலை ஆகிய நூல்களைப் பேராசிரியர் கெர்ன் வெளியிட்டுள்ளார். பாதி மொக்கம்-சுள்ள வக்கம் ஆகிய நூல்களை ரைஸ் டேவிட்சுடன் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஹர்மன், விநய பிடகத்தை முழுமையாகவே வெளியிட் டுள்ளார். மார்க்ஸ் முல்லர், பி.எச். ஹட்சன், ஃபீல், செர்பட்ஸ்கி, எச்.எஸ். ஆல்காட், மார்க்ஸ் வாலேசர், வில்லியம் கெய்கர், இ. நியூமன், எப்.எல். உட்வர்ட் போன்ற ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தக்கன.

வட இந்தியாவில் தர்மானந்த கோசாமி, தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, அரி பிரசாத் சாஸ்திரி, சரத் சந்திரதாஸ், விதுசேகர் சாஸ்திரி, ராகுல் சாங்கிருத்தி யாயன் போன்ற பவுத்த ஆய்வா ளர்கள் பவுத்தம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் அயோத்தி தாசப் பண்டிதர், மயிலை சீனிவேங்கடசாமி, இலங்கை சிவபாத சுந்தரம், பேராசிரியர் நா. வானமாமலை, உ.வே. சாமிநாதர், ஆனந்த குமாரசாமி, ப. ராமஸ்வாமி போன்ற ஆய்வாளர் கள் பவுத்தத்தை பேசியிருக்கிறார்கள்.

இவர்களின் நூல்களை, ஆய்வுகளைக் கவனமாகப் பார்க் கும்போது தேரவாதத்தையும் மகாயான பவுத் தத்தையும் தெளிவாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. தேரவாதமும், மகாயானமும் இரண்டறக் கலந்து காணப்படுவதால், புத்தரின் மூல பவுத்தம் எது என்று தெரிந்து கொள்ள முடியாத நிலை நிலவுகிறது. ஆகவே புத்தரையும் அவரின் நேர் பவுத்தமும் அடையாளம் காண முடியாத நிலையில் இன்றைய பவுத்தம் நிலவுகிறது என்பதைப் பார்க்கலாம்.

மகாயானம் தேரவாதத்தின் வளர்ச்சி நிலை என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

பண்டிதர் ஜவகர்லால் நேரு தன் மகள் இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில் (11.04.1932) வடக்கின் மகாயானமும், தெற்கில் தேரவாதமும் வெற்றிபெறாத நிலையில், இவை இரண்டையும் இந்துமதம் தன்னுள் ஈர்த்துக் கொண்டதாக எழுதி இருக்கிறார்.

உ.வே. சாமிநாதர் ஒருபடி மேலே ஏறி புத்தரை ஓர் இந்து என்றும், இந்து மதத்தில் இருந்தே பவுத்தம் தோன்றியது என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் பவுத்தத்தை மிகச்சரியாக ஆய்வு செய்துள்ள பேரறிஞர் அம்பேத்கர், புத்தரின் வாழ்க்கையை அவரின் கோட்பாடுகளைத் தெளிவாகவும், முரண்பாடு இல்லாமலும் முழுமையாக எடுத்துச் சொல்வது இன்று மிகவும் கடினமாக இருக்கிறது என்கிறார்.

அதே சமயம் பவுத்தத்தை வெறும் விவாதப் பொருளாக மட்டும் பார்க்காமல், அதனைச் சரியான பார்வைக்கும் கொண்டுவரப் பெரிதும் முயன்றவர் அம்பேத்கர்.

எடுத்துக்காட்டாக புத்தர் துறவு கொண்டதற்குச் சொல்லப்படும் காரணமும், அடிப்படைக் காரணமும் புத்தர் சொன்ன துன்பம் பற்றியது என்றால் அது உண்மையில் புத்தர் சொன்னதா, இல்லையா? அது விரக்தியைப் பகர்வதால் மனித வாழ்வியல் நம்பிக்கையைத் தகர்க்காதா?

கடவுள், ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு இவைகளில் புத்தரின் கருத்து என்ன? நடைமுறையில் சொல்லப்படுவது என்ன? புத்தரின் போதனை தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்டதா அல்லது சமுதாய சிந்தனையா? இப்படிப் பல்வேறு வினாக்களை முன்னிறுத்தி பவுத்தத்தை தெளிவாகக் காண முயற்சிக்கிறார் அம்பேத்கர். புத்தரைப் பற்றியும், அவரின் போதனைகளைப் பற்றியும் எந்த ஒரு குதர்க்கமும் இல்லை. ஆனாலும் குழப்பம் இருக்கிறது என்கிறார் அவர்.

“இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும், பவுத்தத்தைப் புரிந்து கொள்ளும் பாதையை தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியம் அல்லவா? இப்பிரச்சி னைகளின் மீது என்ன தெளிவைப் பெறமுடியும் என்று யோசிக்க வேண்டிய நேரமல் லவா இது? என் வினாக்கள் விழிப்புறச் செய்து, இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு அவர்களின் பங்களிப்பைச் செய்யத் தூண்டும் என்று நான் நம்புகிறேன்"- மாமேதை அம்பேத்கரின் இந்த நம்பிக்கையை, நம் நம்பிக்கையாக நாமும் ஏற்று பவுத்தத்தை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அப்படி உட்படுத்தினால் புத்தர் மீதும், பவுத்தத்தின் மீதும் படர்ந்திருக்கும் ஆரிய மாயை நீங்கும்!

தேரவாத பவுத்தம் மீண்டும் வெளிவரும்.

அதுவே பகுத்தறிவு சுயசிந்தனைக்குரிய திராவிட பவுத்தம்!

Pin It