தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீனத் தொழில்நுட்ப அரங்கத்தின் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஆட்குறைப்பைச் செய்து வருகின்றன. முகநூலை நடத்தும் ‘மெட்டா’ - 11 ஆயிரம் பேர், அமேசான் - 18 ஆயிரம் பேர், கூகுள் - 12 ஆயிரம் பேர், மைக்ரோ சாஃப்ட் - 10 ஆயிரம், டெல் 6650, ஐபிஎம் 3900, டுவிட்டர் 3700... என கடந்த சில மாதங்களில் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளன. இந்தியாவிலும் பெரிய எண்ணிக்கையில் வேலை இழப்பு நடந்து கொண்டிருக்கிறது. சேவைத்துறை எனும் மூன்றாம் அரங்கில் ஏற்படும் இந்த விபரீதங்கள் வேளாண்துறை மற்றும் தொழில்துறை நெருக்கடிக்கான முன்னறிவிப்புகள் எனலாம்.
1932-ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வெடித்த ‘பெருவீழ்ச்சி’ (Great Recession) எனும் பொருளாதார நெருக்கடி, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் வெளியே பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. 2008-ம் ஆண்டு நேர்ந்த ‘பெருமந்தம்’ (Great Recession) என்பது கூட இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை அதிகம் பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
ஆனால் தொடர்ந்து நடந்த உலகமயமும் அதனோடு நடந்த தாராளமயம், தனியார்மயம் ஆகியவையும் இணைந்து, இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளும் எதிர்வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க இயலாத நிலைமையை உருவாக்கியுள்ளன.
மீண்டும் மீண்டும் தவிர்க்கவியலாது திரும்பிவரும் இந்த நெருக்கடிகளில் சாமானிய உழைக்கும் மக்கள்தாம் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாவார்கள் என்பதே வரலாறு. குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வருவதாக, ஆனால் முன்பைக் காட்டிலும் அடிக்கடி வருவதாக, முன்பைக் காட்டிலும் உலகின் அதிகப் பரப்பை, அதிக நாடுகளை, அதிக மக்களை பாதித்து துயரத்திற்கு உள்ளாக்குவதாக, மேலும் மேலும் ஆழமான பொருளாதார வீழ்ச்சியை உருவாக்குவதாக, மேலும் மேலும் அதிக காலம் நீடித்திருப்பதாக இந்த நெருக்கடிகள் உருவாகி வருகின்றன.
பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரமோ அவர்களது வாங்கும் சக்தியோ உயராது செல்வம் செல்வத்தோடு சில இடங்களில் குவிகின்றன. பணம் தூங்கும் பழக்கம் கொண்டதல்ல (Money Cannot Sleep) என்பதால் இப்படிக் குவியும் பணம் முதலீடு செய்யப்பட வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தி சரக்குகளை உற்பத்தி செய்து விற்று லாபம் சம்பாதிக்கும் வழிகள் இல்லாது போவதால், வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் சரக்குகளை உற்பத்தி செய்து விற்று லாபம் சம்பாதிப்பதற்குப் பதிலாக உற்பத்தி நிறுவனங்களை வாங்கி விற்பது உள்ளிட்ட ஊகவணிகங்களிலும் ஏனைய பெரும் ஊழல்களில் ஈடுபடுகின்றன. உழைக்கும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இவற்றில் வைத்திருக்கும் சேமிப்புகளும் உழைக்கும் வயது தாண்டிய இறுதிகால வாழ்க்கைக்கு இருக்கும் வாழ்வாதாரங்களும் ஆவியாய்ப் போகும் கொடுமைகளும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.
ஆனாலும் இவை ஏன் ஏற்படுகின்றன? எவ்வாறு நீங்குகின்றன? பொருளாதாரம் மீள முடியாத சீர்குலைவிற்கு உள்ளாகுமா? ஆகுமென்றால் இவற்றுக்கான தீர்வு என்ன? என்பவை இவற்றைக் கூர்ந்து கவனிக்கும் யாருக்கும் வரக் கூடிய, வர வேண்டிய வினாக்கள்தாம். இந்த வினாக்களுக்கு மையநீரோட்ட பொருளாதார வல்லுனர்கள், நோபல் பரிசு வென்ற மேதைகள் உலகின் மிக முன்னேறிய நாடுகளின் பொருளாதார நிர்வாகிகள், பொருளாதார மாடல்களை உருவாக்கும் கணிதப் புலிகள், கல்விப்புல பேராசிரியர்கள், உச்சாணிக் கல்வி வளாக (Ivy Leaugue)) பாடத்திட்ட வகுப்பாளர்கள் முதலிய யாரிடமும் பகுத்தறிவுக்குப் பொருந்தும் விளக்கமோ விடையோ இல்லை. இதனால்தான் போப்பாண்டவர் முதற்கொண்டு முதலீட்டு வங்கிகளின் முகவர்கள் வரை அனைவரும், இறந்து 140 ஆண்டுகள் ஆன ஒருவரையும், முதல் பதிப்பு கண்டு 156 ஆண்டுகள் ஆன ஒரு நூலையும் நோக்கி வருகின்றனர்.
அவர் 'கார்ல் மார்க்ஸ்', அந்த நூல் 'மூலதனம்' எனத் தமிழில் கூறப்படும் தாஸ் கேபிடல், மார்க்ஸ் அதை எழுதியபோது அவரது பிறந்த நாடான ஜெர்மனியிலேயே முதலாளித்துவ உற்பத்தி முறை முழுமையாகக் காலூன்றியிருக்கவில்லை. இங்கிலாந்து, ஹாலந்து, பிரான்ஸ் தவிர ஐரோப்பாவிலேயே முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறை எனும் பெருங்கடலின் சிறு தீவுகளாகவே முதலாளித்துவ நிறுவனங்கள் இருந்தன. இன்றைக்கு இந்தியாவில் கூட கத்தரிக்காய் முதல் கல்வி, மருத்துவம் வரை எல்லாம் முதலாளித்துவச் சரக்காக மாறியுள்ளன. மார்க்சும், மூலதனம் நூலும் அவர் வாழ்ந்த காலத்தைவிட, பதிப்பகம் கண்ட காலத்தை விட இன்றைக்குத்தான் பொருத்தப்பாடு அதிகம் எனும் விதமாக உலகம் மாறியுள்ளது.
மூலதனம் நூல் என்.சி.பி.ஹெச் பதிப்பாகத் தமிழில் வெளிவந்து அடுத்த மாதம் (ஏப்ரல் 1998 - ஏப்ரல் 2023) 25 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. நூலின் 6-வது பதிப்பு தற்போது விற்பனையில் உள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் உலகின் பல பகுதிகளைப் போல மூலதனம் நூல் வாசிப்பு வட்டங்கள் உருவாகி பரவி வருகின்றன. நாம் வாழும் காலத்தின் இருண்ட பொழுதுகளில் பயணம் செய்ய வேண்டிய பாதை அறிய உதவும் ஒளி விளக்கை இன்னும் பரவலான வாசிப்பிற்கு எடுத்துச் செல்வது, தற்காலிக நிவாரணங்களும், உடனடி முன்னெடுப்புகளும் முழுமையான விடுதலையின் திசைவழியில் அமைவதை உறுதி செய்யும். நவீன சமகால அரசியல் பொருளாதார சமூகவியல் சிந்தனைகள் குறித்து வந்துள்ள நூல்களை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் தேவையான அடித்தளத்தை உருவாக்கும். ஆம் இன்றியமையாததுதான் என்றாலும் அடித்தளம்தான்; அதன்மீது நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம், ஏனென்றால் மார்க்ஸ் கூறியது போல நமது பணி மாற்றத்தைக் கொணர்வது!
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு