சோமநாதர் - வரலாற்றின் பல குரல்கள்

ரொமிலா தாப்பர்

தமிழில்: கமலாலயன்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098.

தொலைபேசி எண்: 044 - 26359906

ரூ. 300/-

romila thappar on somanathar templeஇந்தியா ஒரு துணைக்கண்டம் என்பது உலகம் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மை. ஒருமையில் பன்மையையும், பன்மையில் ஒருமையையும் இனம் காணும் கண்ணோட்டம் உடையது இந்திய நாடு.

தனித்தன்மை நிறைந்த இந்திய வரலாற்றின் வளர்ச்சிப் போக்கை இனம் காணப் பல விதமான கண்ணோட்டங்களை முன்வைப்பது நடைமுறை. அதன் அடிப்படையிலேயே இந்தியாவின் வரலாற்றை அணுகி ஆய்வு செய்து வருவது வரலாற்றாசிரியர்களின் வழக்கம்.

அதைப்பற்றிய அறிதல்களையும் புரிதல் களையும் மாறுபட்ட வகைகளில் முன்வைத்து வடிவமைத்து ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து கருத்தை வெளிப்படுத்துவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. அதனால் ஆய்வுக்குரிய முடிவுகள் மாறுபட்டும், முரண்பட்டும் நிறுவப்படுகின்றன. அந்த வகையான வேறுபாடுகளை முழுவதுமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு விருப்பு வெறுப் பில்லாத விதத்தில் ஆய்வு செய்து முடிவுகளை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் செயல் படும் போது அவை அடிப்படைவாதத் தர்க்கங் களுக்கு இட்டுச் சென்று எதிர்விளைவை நிகழ்த்தும்.

வரலாறு என்பது இதுவரை கல்வெட்டு, சிற்பம், கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழித் தகவல்கள், சித்தாந்தம், தத்துவம், அரசியல் ஆவணங்கள், மதக்கோட்பாடுகள், இதிகாசங்கள் ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது சிலவற்றின் அடிப்படையில் ஆய்வு களை மேற்கொண்டு முடிவுகளைக் கண்டறிவது உலகின் நடைமுறையாக உள்ளது.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியா நிலவளமும், நீர்வளமும், மனித வளமும், இயற்கை வளமும் நிறைந்த ஒரு நாடு.

காலந்தோறும் இந்த வளங்களை நுகர்வதற் காகவும், கொண்டு செல்லுவதற்கும் அரேபிய ஆசிய ஐரோப்பிய அரசுகள் தொடர்ந்து படை யெடுப்புக்களை நிகழ்த்தி வந்திருக்கின்றன என்பது ஒரு பொது உண்மை. இந்திய வாழ்க்கையோடு இணைந்து வாழ்ந்து வளம் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து படையெடுப்புக்களை நிகழ்த்தி வந்த பிற நாட்டவர்கள் இந்தியாவில் தங்களது மதங்களை நிறுவுவதில் முதன்மையான ஈடுபாடு காட்டி வந்தனர். இதனால் இந்திய மதங்களுக்கும் மேற்கத்திய மதங்களுக்கும் இடையில் மக்கள் சிக்கித் தவித்திருக்கிறார்கள் என்பதும் ஒரு முடிவு.

தொடக்கத்தில் கிரேக்க ரோமானிய அரசுகள் இந்தியாவின் மீது படையெடுத்தன என்பது ஒரு வரலாற்று உண்மை.

அதைத் தொடர்ந்து, பிற்காலத்தில் அராபியர் களின் வருகை நிகழ்கிறது. தொடர்ந்து ஆசிய ஐரோப்பிய அரசுகளின் வருகையும் நிகழ்கின்றது.

அரேபிய ஆசிய ஐரோப்பிய அரசுகளின் முனைப்புக்களால் இந்தியாவுக்கு உலக நாடு களுடன் தொடர்பு கொள்ளுவது விரிவடைந்தது. மக்களின் சமூக அரசியல், பொருளாதாரக் கல்வி, கலாச்சாரப் பண்பாட்டு நிலைமைகளில் தொடர்ச்சி யான மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா நவீன உலகத்துடன் இணைந்து வளரவேண்டிய வரலாற்றுத் தேவைகளுக்கு உள்ளானது.

இதைத்தான் “சோமநாதர் வரலாற்றில் பல குரல்கள்” என்ற தனது வரலாற்று ஆய்வு நூலின் வழியாக வெளிப்படுத்துகிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர். தன்னுடைய ஆய்வுகளுக்கு ஏராளமான நுல்களைக் கண்டறிந்து அவைகளுக் கிடையில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை இனம் கண்டு வகைப்படுத்தி இந்தியாவின் தனித் தன்மைகளைத் தகுந்த தரவுகளோடு விளக்கி முடிவுகளை நிறுவுகிறார்.

ஆய்வு நூலின் தொடக்கத்திலேயே இவரது அடிப்படையான நோக்கத்தை இவர் தெளிவு படுத்துவது இந்த நூலை வாசிக்கும் விருப்பத்தை ஊக்குவிக்கிறது.

“கஜினி முகமது சோமநாதர் ஆலயத்தின் மீது 1026 ம் ஆண்டில் படையெடுத்தான். கோயிலின் செல்வத்தை கொள்ளையிட்டு விக்கிரகத்தை உடைத்தான். கொள்ளையடித்தவர் கொள்ளை யடிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு சாராரின் அணுகு முறைகளையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தும் விதத்தைக் குறிப்பதாகவும், அந்தக் கணத்திலிருந்தே பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவரிடம் பகையுணர்வைத் தூண்டுவதாகவும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது என்பதே இதிலிருந்து பெறப்படும் கருத்து. இந்த நிகழ்வின் மகிழ்ச்சியற்ற தொடர்பின் விளைவு களை ஆராய வேண்டும் என நான் தீர்மானித்தேன். இந்த நிகழ்வு எதையேனும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது எனும் பட்சத்தில், அப்படி எதை இது தெளிவுபடுத்துகிறது, இந்த நிகழ்வு எந்த வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்வின் உள்ளடக்கம் குறித்த புரிதல் ஒருவேளை மாற்றப் பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் அவ்வாறு ஆய்வதன் மூலம் இனம் கண்டு கொள்ள அவற்றின் அடிச்சுவடுகளைத் தொடர முடிவு செய்தேன். இதையும் பிற நிகழ்வுகளையும் பதிவு செய்து சித்தரிப்பதன் மூலம் மேற்கண்ட வரலாறு எழுதி யதிலும் இந்த நிகழ்வின் ஞாபகங்களாகக் கருதப் படுபவை எவையோ அவற்றின் பிற்காலக் கட்ட மைப்பும் கூட எனது ஆர்வத்திற்குரியவைகளே.”

தொடர்ந்து இவர் இதை மேலும் தெளிவு படுத்தும் வகையில் இதன் நோக்கத்தைப் புலப் படுத்துகிறார்.!

“இந்த ஆய்வின் நோக்கம் இது: ஒரு நிகழ் விற்கும் அதைச் சூழ்ந்து வளர்ந்தெழும் வரலா றெழுதியலுக்கும் இடையில் ஊடுபாவாக இழை யோடும் உறவைத் துருவி விசாரிப்பது இந்த விசாரணையை, அந்நிகழ்வைப் பற்றிய விவரிப்புக் களை ஒரு வரலாற்றுச் சூழலில் வைப்பதன் மூலம் மேற்கொள்வது.”

மேலும், இவரது ஆய்வின் நோக்கத்தைப் புலப்படுத்தும் விதத்தில் தெளிவான புரிதல்களை நிகழ்த்துகிறார்.

“நான் பரந்துபட்ட ஆறு மூலத் தரவுகளைப் பற்றி விவாதிக்கப் போகிறேன். எண்ணிக்கையில் அதிகமாகவும், இன்று வரை மேலாதிக்கம் செலுத்தி வருகிறவையாகவும் நிலை பெற்றுள்ள முதல் தொகுதி: பாரசீக மொழியில் பெரும்பான்மை யாகவும் அராபிய மொழியில் குறைவாகவும் உள்ள பல கதையாடல்களும், குறிப்பேடுகளும் அடங்கியவை. துருக்கிய பாரசீக அரசியல் பின்னணியில் பெரும்பாலும் எழுதப்பட்டவை. முதலில் கஜ்னாவித் அரசாளுகைக்குட்பட்ட பகுதியில் பரவியிருந்த கலாச்சாரப் பின்னணியில் அமைந்தவை, பிந்தைய காலப்பகுதியில் வட இந்தியப் பகுதியில் பரவியிருந்த கலாச்சாரப் பின்னணியில் எழுதப்பட்டவை. சோமநாதர் ஆலயத்திலும் அதன் வளாகத்திலும் பிரதானமாக சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சாசனங்கள், சமணர் வாழ்க்கை வரலாறுகளும் குறிப்பேடு களும்; ராஜபுத்திர அரசவையிலிருந்து பெறப் பட்ட காவியங்கள். பெரும்பாலும் வாய்மொழி மரபில் வெகுமக்கள் மட்டத்தில் முகமதுவின் கருத்துப்படிமம்; பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பொதுச் சபையில் நடைபெற்ற விவாதத்தின் மூலம் அந்நாட்டின் குறுக்கீடு. இறுதியாக அந்நிகழ்வைப் பற்றி இந்தியத் தேசியவாத மீள் கட்டமைப்பு. சாத்தியமான அனைத்து மூலத் தரவுகளையும் இப்பட்டியலினுள் கொண்டுவருவது எனது நோக்கமல்ல, மாறாக நான் உருவாக்கவிருக்கும் மதிப்பீட்டின் வகைப் பாட்டில் கவனத்திற் கொண்டு பரிசீலிக்க வேண்டிய அத்தியாவசியமான வெவ்வேறுபட்ட தரவுகளைச் சுட்டிக் காட்டுவதுதான்.”

இவரது இந்த முயற்சிகளை நிறைவேற்றுவது தான் இவரது செயல்பாடு என்பதை இந்த ஆய்வு நூல் உறுதிப்படுத்துகிறது.

தனது ஆய்வுக்கு இவர், முகமது ஹபீப் எழுதிய “சுல்தான் கஜினி முகமது - ஓர் ஆய்வு (1927) என்ற நூலையும் கே.எம். முன்ஷியின்” “சோமநாதா அழிவற்ற ஓர் ஆலயம்” (1951) என்ற நூலையும் அடிப்படை ஆதாரங்களாகத் தெரிவு செய்துள்ளார்.

இவர் சோமநாதர் ஆலயத்தையும் அதைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும் இப்படி காட்சிப்படுத்துகிறார்: “சோமநாதர் ஆலயம் அமைந்துள்ள இடம் சவுராஷ்டிரப் பகுதியில் முந்தைய காலத்தில் பிரபாஷ பட்டினம் என்ற பெயரில் இருந்த மிக நன்கு அறியப்பட்ட தீர்த்தம் அல்லது புனித யாத்திரைத் தலமாகும். அது மூன்று நதிகளின் சங்கமப் பகுதியுடன் சேர்ந்து அருகில் அமைந்திருந்ததுடன் வேரவால் துறை முகத்திற்கு அடுத்தாற்போல் அமைந்துள்ளது. இப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுவது என்னவெனில் கி.மு. மூன்றாயிர மாவது ஆண்டைச் சேர்ந்த தொன்மை மிக்க சிறிய வேளாண்மைச் சமூகங்களின் குடியிருப்புக்கள் அமைந்திருந்தன என்பதையே.”

மேலும் “பிரபாஷாவின் தீர்த்தத்துடன் சோம நாதாவின் மூலத் திருவுருவை இணைக்கும் ஒரு தொன்மைக் கதை அவசியத் தேவையாய் இருந் திருக்கிறது. அக்கதை மகாபாரதத்திலும் புராணப் பிரதிகளிலும் விவரிக்கப்படுகிறது.

அதை நிறுவுவதன் நோக்கமாக அதன் சாராம்சத்தை இந்த ஆய்வு நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்ந்து அராபியர்கள் ஆசியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் இந்த ஆலயத்துடன் கொண்டிருந்த தொடர்பு களையும் அவற்றின் விளைவுகளையும் தகுந்த ஆவணங்களோடு விளக்குகிறார். அத்துடன் சமணர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் கொண் டிருந்த தொடர்புகளைப் பற்றியும் விளக்குகிறார்.

இது வெறுமனே நிகழ்வுகளின் தொடர்ச்சி களையோ விளைவுகளின் பட்டியல்களையோ மட்டும் விளக்கவில்லை. அவற்றிற்கிடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் வெளிப்படை யாகப் புலப்படுத்துகின்றன.

முகம்மதியர் அதற்குப்பின் ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து வந்த இஸ்லாம் மதமும் கிறிஸ்துவ மதமும் எவ்வாறு இந்திய மக்களிடையே பரவியது என்பதையும் இவர் தகுந்த முறையில் ஆவணப்படுத்துகிறார்.

காலந்தோறும் சோமநாதர் கோயில் இடிக்கப் பட்ட சூழல்களையும் அது மறுஉருவாக்கம் செய்யப்பட்ட சூழல்களையும் விளக்குவதன் வாயிலாக இந்து முஸ்லிம் போர்களின் விளைவு களை அடையாளப்படுத்துகிறார்.

“சோமநாதர்” என்ற தனது ஆய்வு நூலில் அந்நியர்களின் தொடர்ச்சியான வருகைகளையும் அவற்றின் விளைவுகளையும் வாசிப்புக்கு உகந்த விதத்தில் சுவைபடச் சித்தரிக்கிறார் இவர். ஒரு வரலாற்று ஆய்வு நூல் எந்த வகையிலெல்லாம் கருத்துக்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதிக் கின்றன என்பதையும் இதன் வாயிலாக உணர முடிகிறது. இயங்கியல் முறையில் இந்திய வரலாறு வளர்ச்சியடைந்த முறைகளைத் துல்லியமாகவும் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல் முன்வைத்து விளக்கி முடிவுகளை நிறுவுகிறார்.

கோயில்கள் இடிக்கப்படுவது குறித்துத் தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்துகிறார்:

“கோயில்கள் தாக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசியல் ஆதிக்கத்தினை நிறுவுதல் மரபுரிமையை சட்டபூர்வமாக்குதல் பொருளாதாரப் பயன்களை அடைதல், மத வேறுபாடுகளை வெளிப்படுத்துதல், கோயில்களின் மீதான துருக்கியத் தாக்குதல்கள். இக்காரணங் களின் பின்னணியில் வைத்து ஆராய்தல் பயன் தரும். நவீன காலங்களில் கோயில் தகர்ப்பு நினைவை உருவாக்கும் போது முஸ்லிம் ஆட்சியாளர்கள் அழித்த கோயில்கள் மட்டுமே நினைவுபடுத்தப் படுகின்றன. இந்து ஆட்சியாளர்கள் இடித்த கோயில்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இந்த அம்சம் விளக்கப்படுவதில்லை. ராஜ தரங்கிணி போன்ற நூல்கள் பரவலாக வாசிக்கவும் மேற் கோள் காட்டவும் படுகின்றன. ஆனால், சங்கர வர்மா, ஹர்ஷ தேவரைப் பற்றிய கல்ஹணருடைய குறிப்புக்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. நினைவுகள் என்பது விழுமியங்களற்றதல்ல. கடந்த கால வரலாற்றில் எவை நினைவில் கொள்ளப்பட வேண்டும் என்பதில் மற்ற அம்சங்களுடன் வரலா றெழுதலின் அடையாளமும் பிரதிபலிக்கப்படுகிறது”.

“கோயில் தாக்குதலுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து இஸ்லாமியர்களின் வருகைக்கு முன்னரே தொடங்கியது ஆகும். ஆனால் மதப்போரிலும் செல்வத்தையும் அதிகாரத்தையும் பெறுவதற்கு உதவும்போதும் கோயில்களைத் தாக்குவது என்பது அதிகரிக்கிறது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் தாங்கள் தாக்க வேண்டிய கோயில்களைத் தேர்ந் தெடுப்பதில் கொள்ளை அல்லாமல் பிற காரணங் களும் இருந்ததென வாதிக்கப்படுகிறது. சிலை யுடைப்பு, அரசதிகாரத்திற்கான போட்டி, புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து கோயில்களைத் தேர்ந்தெடுத்தல் போன்றவை அக்காரணங்களில் சில.”

கடைசியில் இவர் தனது பொதுப் பார் வையை இந்த வகையில் புலப்படுத்துகிறார்:

“சோமநாதாவின் மீது முகமது மேற்கொண்ட படையெடுப்பு நிகழ்வு, இரு பிரிவுப் பிளவு எதையும் உண்டாக்கிவிடவில்லை என்பதை விளக்கு வதற்கு முயன்றிருக்கிறேன் வெளிப்படையாகவும் மறைபொருளாகவும் மாறுபட்ட பிரதிநிதித் துவங்கள் உள்ளன. இந்த நிகழ்விலும் இந்திய வரலாற்றில் நடந்தேறிய இதைப் போன்ற மற்ற நிகழ்வுகளிலும் இத்தகைய பிரதிநிதித்துவங்களை நாம் ஆழமாக ஆய்வோமானால், இதுவரையிலும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வந்த அக்கறை களைக் கடந்து பல விஷயங்கள் நமது பார்வையில் படலாம். இவற்றை மதிப்பீடு செய்தால் இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய இன்னும் துல்லியமான கூடுதல் நுண்ணுணர்வு கொண்ட அகத் தெளிவை அந்த மதிப்பீடு நமக்கு வழங்கக்கூடும்.”

ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் கடுமையான உழைப் புடனும் மிகுந்த தெளிவுடனும் வடிவமைக்கப் பட்ட இந்தப் புதிய வரலாறு இன்றைய சூழலில் எல்லோருடைய கவனத்திற்கும் உள்ளாக வேண்டிய ஒன்று.

பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லமை பெற்ற நாடுகளை நெடுங்காலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து ஆண்டுவருவதை உணர்வதற்கு இந்த ஆய்வு நூல் மிகவும் பயன் படக்கூடும்.

சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் சுமார் முப்பது இலட்சம் பேர் கொல்லப் பட்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மதக் கலவரங்களைத் தூண்டி விடுவதற்கு மாறாக மத நல்லிணக்கத்தை வளர்ப்பது இந்தியாவில் எளிது.

காரணம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இனம், நிறம், மதம், கலை, கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கை முறைகளில் வேறுபட்டு வரலாற்றில் தொடர்ந்து அமைதியாக இயங்கி வந்த இந்தியா வையும் அதன் மக்களையும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கான வழிவகைகளைத் தூண்டக் கூடிய ஒரு சிறந்த ஆய்வு நூலாக வெளிப்பட்டிருக்கிறது.

தெளிவான, இலகுவான, எளிமையான தமிழில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

வரலாற்றை முழுமையாக இனம்கண்டு விருப்பு வெறுப்பு உணர்வு எதுவும் இல்லாமல் பொதுத் தன்மையுடைய பார்வையில் ரொமிலா தாப்பர் இந்த வரலாற்று ஆய்வு நூலை வடிவமைத் திருக்கிறார். இது காலத்தின் தேவையை அடிப் படையாகக் கொண்ட ஒரு வெளிப்பாடு.